May 3, 2011

குறை ஒன்று உண்டு -9


அன்று எப்போதும் போல்தான் அலுவலக வேலை ஆரம்பித்தது. 10 மணி சுமாருக்கு முருகன் என் டேபிள் அருகே வந்தான், 

"ரகு, விசயம் தெரியுமா? இன்று நம் டிபார்ட்மெண்டில் ஒருவர் ஜாயிண்ட் செய்யப்போகிறார்" என்றான்.

"அப்படியா?" என்றென் எந்த ஒரு சுவாரசியமும் இல்லாமல்.

"என்னப்பா ஒரு ஆர்வமே உன்கிட்ட இல்லை. வரப்போறது யாருன்னு தெரிஞ்சா ஆச்சர்யப்படுவ?''

"யார்?" 

"ஒரு பெண்"

"அதனால் என்ன?" என்றேன்

முருகன் என்னை ஒரு முறை முறைத்துக்கொண்டு இருந்த போதுதான் அவள் உள்ளே வந்தாள். ஒரு நிமிடம் என் சப்த நாடியும் அடங்கி விட்டது. முருகன் ஒரு பெண் என்றுதான் சொன்னான். ஆனால் ஒரு அழகான பெண் என்று சொல்லாமல் விட்டுவிட்டான். அழகு என்றால், எப்படி சொல்வது? எனக்குச் சொல்லத்தெரியவில்லை. யாருடன் ஒப்பிடுவது என்றும் எனக்குத்தெரியவில்லை.

ஓரளவு உயரம். உயரத்திற்கு ஏற்ற உடல். நல்ல கலர். புஷ்டியான உடம்பு. யாரையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் உடல் அமைப்பு. மெருன் கலர் சுடிதாரில் இருந்தாள். நான் யாரையும் இவ்வளவு கூர்மையாக கவனித்தது இல்லை. என்னை அப்படி ஈர்த்துவிட்டாள். 

பெர்ஸனல் மேனஜர் அவளை ஒவ்வொருவருக்கும் அறிமுகப்படுத்திக்கொண்டே வந்தார். அவள் எல்லோரிடமும் ஒரு சிறு புன்னைகயுடன் பேசுவதை கவனித்தேன். என்ன காரணமோ தெரியவில்லை. மனம் கொஞ்சம் சந்தோசத்தில் இருப்பதை போல் உணர்ந்தேன்.

அடுத்த நாள் முதல் என் டிப்பார்ட்மெண்டே கலகலப்பாக இருந்தது. ஏனென்றால் வீணாவின் பேச்சு, அவளின் செயல்கள் அனைவரையும் கவர்ந்தன.

நான் எப்போதும் போல் கொஞ்சம் ஒதுங்கியே இருந்தேன். ஒரு நாள் மதியம் அனைவரும் லன்ச்சுக்கு சென்றிருந்தார்கள். நான் அன்று சாப்பிடவில்லை. ஏனோ சாப்பிடத் தோன்றவில்லை. சில நாட்கள் அப்படித்தான். எல்லோர் மேலும் கோபமும், வெறுப்பும் வரும். அன்றைய தினங்களில் மதியம் சாப்பிட மாட்டேன்.

நேராக என்னை நோக்கி வந்த வீணா,

"என்ன சார், சாப்பிடப் போகலையா?'' என்றாள்.

"இல்லை"

"ஏன்?''

"சும்மாதான்"

"சும்மா யாராவதும் சாப்பிடாம இருப்பாங்களா?"

"எனக்குப் பிடிக்கலை விடுங்களேன்"

"சார், ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே?"

"அது நீங்க கேட்கறத பொறுத்து இருக்கு"

"அப்போ நான் கேட்கலை"

"இல்லை பரவாயில்லை, கேளுங்க"

"கேட்டதுக்கு அப்புறம் திட்டக்கூடாது"

"இல்லை. கேளுங்க"

"ஏன் சார், எப்பவும் ஒருமாதிரி மூடியா இருக்கீங்க?"

"அது தெரிஞ்சு நீங்க என்ன செய்யப்போறீங்க?"

"பாத்திங்களா, கோபம் வருது"

"இல்லை. நான் கலகலப்பாத்தான் இருக்கேன்"

"பொய் சொல்லாதீங்க சார். உங்க முகமே எப்பவும் சோகமா இருக்கு சார். என்ன விசயம்னு என் கிட்ட சொல்லலாம்னா சொல்லுங்க. என்னால உங்களுக்கு உதவ முடியுமா? பார்க்கறேன்" என்றவளை நிமிர்ந்து பார்த்தேன். யாரிவள்? வந்த அடுத்த நாளே இவ்வளவு உரிமை எடுத்துக்கொள்கிறாள்? இவளுக்கு என்ன என் மேல் அப்படி ஒரு அக்கறை?

நான் ஏன் இவளுக்கு என்னைப் பற்றி சொல்ல வேண்டும்? என நினைத்துக்கொண்டிருந்தவன் மனதில் சடாரென வேறுவிதமான சிந்தனையும் ஓடியது. நன்றாக யோசித்துப்பார்த்தேன், சிறுவயதில் இருந்து யாராவது என்னிடம் இவ்வளவு அனுசரணையாக பேசி இருக்கிறார்களா? என்று. யாரும் இல்லை. எங்கிருந்தோ வந்த பெண் நம் மேல் இவ்வளவு அக்கரை எடுக்கிறாளே என்றபோது அவள் மேல் ஒரு பிரியம் ஏற்பட்டது.

"சொல்றேன் வீணா. ஆனால் இப்போது இல்லை" என்றேன்.

என்னை ஆச்சர்யமாக பார்த்தாள்.

- தொடரும்


No comments: