Jun 13, 2011

மிக்ஸர் - 13.06.2011


பாபா ராம்தேவ் கடைசியில் காமடி பீஸாகிப்போனார். சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நினைத்தவர் இருக்க வேண்டியதுதானே? ஏன் ரவிசங்கர் கேட்டுக்கொண்டதும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்? ஏன்? 1000 கோடி... இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர், தன்னுடைய 1000 கோடி சொத்து எப்படி வந்தது என்று சொல்வாரா? இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இவர் யோகா செய்ய அனுமதி வாங்குவாராம். பின்பு உண்ணாவிரதம் இருப்பாராம். கேட்டால், 'உண்ணாவிரதமும் யோகாவில் ஒரு பகுதியாம்'. ஒரு பெரிய நாடு எத்தனை நாட்கள் பொறுத்து இருக்கும். அவர்களும் எவ்வளவோ பேசிப்பார்த்தார்கள். கடைசியில் டெல்லியை விட்டே அடித்து விரட்டிவிட்டார்கள். இப்போது ஹரித்வாரில் தன் ஒன்பது நாள் உண்ணாவிரத நாடகத்தை முடித்துக்கொண்டிருக்கிறார். 

ஊழலுக்கு எதிராக முதலில் உண்ணாவிரதம் இருந்த அன்னா ஹசரே மீது முதலில் ஒரு மதிப்பு இருந்தது. இப்போது போய்விட்டது. தொட்டதற்கு எல்லாம் உண்ணாவிர போராட்டம் ஆரம்பித்தால்? உண்ணாவிரதத்தின் மதிப்பே அல்லவா போய்விடுகிறது. இதில் பாஜாகா சப்போர்ட் செய்கிறது. முதலில் அவர்கள் கர்நாடகாவில் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்தட்டும், பிறகு ஊழலுக்கு எதிராக அவர்கள் போராட்டத்தில் ஈடுபடட்டும்.

இந்தியாவில் ஊழல் ஒழியே ஒரே வழிதான் உள்ளது. என்னவென்றால், இந்தியாவில் உள்ள அனைவரும் இறந்து மீண்டும் பிறந்து, முதலில் இருந்து வாழ்க்கையை ஊழல் இல்லாமல் ஆரம்பிக்க வேண்டும். அப்போதுதான் ஊழலற்ற இந்தியாவை கொண்டுவர முடியும்.

***********************************************************

ஒரு மகிழ்ச்சியான செய்தி. என்னுடைய சிறுகதை தொகுப்பான "வீணையடி நீ எனக்கு" புத்தகம் சிங்கப்பூர் நூலகத்தில் 24 பிரதிகள் வாங்கி இருக்கின்றார்களாம். சாதாரணமாக இத்தனை பிரதிகளுக்கு அவர்கள் ஆர்டர் தரமாட்டார்களாம். இந்த மகிழ்ச்சியான செய்தியினை "ழ" பதிப்பகத்தின் கே ஆர் பி செந்திலும், நண்பர் கேபிள் சங்கரும் என்னிடம் தெரிவித்தார்கள், நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. காரணம், நான் பிறந்த என் ஊரில் நிறைய நண்பர்கள் என் புத்தகங்களை பாராட்டினாலும், புத்தக கடை வைத்திருக்கும் என் நெருங்கிய நண்பர் "உன் புத்தகம் சரோஜா தேவி புத்தகம் போல் உள்ளது" என்று சொல்லி ஒதுக்கிவிட்டார். ஆனால் அதே புத்தகம் இன்று சிங்கப்பூர் நூலகத்தில் இருக்கிறது என்கிறபோது சந்தோசம் வருவது இயல்புதானே?

இதைத்தான் உள்ளூர் மாடு விலை போகாது என்பார்களோ?

************************************************************

இரண்டு தொடர்கதை முடித்துவிட்டேன். நான் எதிர்பார்த்ததை விட அதிகமான வாசகர்கள் பாராட்டி இருக்கின்றார்கள். சந்தோசமாக இருக்கிறது. உடனே யாரும் பின்னூட்டத்தில் பாராட்டுக்களை தேட வேண்டாம். நிறைய மெயில்கள், போன்கால்கள் வந்தன. நண்பர்கள் கொடுத்த உற்சாகத்தில் ஒரு துப்பறியும் கதை ஒன்று எழுதலாமா? என யோசித்துக்கொண்டிருக்கிறேன். நம்ம வலைப்பூ தானே? முயற்சி பண்ணிப் பார்த்தா என்ன தப்புன்னு தோணுது? நீங்க என்ன நினைக்கறீங்க?

இன்னொரு சந்தோசமான விசயம் போன வாரம் என் வாழ்வில் நடந்தது. ஆனால் அதை பொதுவில் சொல்ல கூச்சமாக உள்ளது. மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் மெயிலில் தெரிவித்தேன். நண்பர்களின் வாழ்த்திற்கு நன்றி.

***********************************************************

'ஆடுகளம்' படம் பார்த்ததிலிருந்து எனக்கு ஒரு சந்தேகம். யாராவது விளக்கினால் நல்லது. படத்தைப் பார்த்து நான் என்ன புரிந்து கொண்டேன் என்றால், தனுஷ் குருவை மிஞ்சிய சிஷ்யனாகிவிடுகிறார். அதை குருவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மெல்ல மெல்ல அவன் வாழ்க்கையில் ஊடுறுவி அவனுக்கு தீங்குகள் விளைவிக்கிறார். இதைத் தெரியாத தனுஷ் எப்போதும் போலவே அவரிடம் பழகுகிறார். முடிவில் உண்மை தெரியும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறார். 

தனுஷுக்கு விசயம் தெரிந்தை தெரிந்து கொண்ட அவரும் அதிர்ச்சி அடைக்கிறார், கடைசியில் தனுஷ்," உன்னை என் அப்பா மாதிரி நினைச்சேண்ண, நீங்க போய் இப்படி" என்று சொல்லும் போது பக்கத்தில் கிடந்த அருவாளை எடுத்து கழுத்தில் வெட்டி செத்துப்போகிறார்.

நான் என்ன நினைத்தேன் என்றால், தனுஷுக்கு உண்மை தெரிந்தவுடன் அதிர்ச்சி அடைந்த நிலையில், 'அவன் தன்னை அப்பா ஸ்தானத்தில் வைத்திருந்திருக்கிறான், அவனுக்குப் போய் துரோகம் செய்து விட்டோமே என வருந்தி அவர் தன்னை மாய்த்துக்கொண்டார்' என்று.

ஆனால், சன் டிவியில் காலை நிகழ்ச்சி ஒன்றில் பாரதி பாஸ்கர் பேசும்போது, "இந்த சினிமாவே வன்மம் சம்பந்தப்பட்டது. தனுஷ் தன்னைவிட பெரியாளானதும், அவன் மேல் அவருக்கு வன்மம் வந்துவிட்டது. வன்மம் அதிகமாகி, சாகும்போது கூட, தன்னை கொன்றது  தனுஷ்தான் என்று எல்லோரும் நினைக்க வேண்டும் என்றுதான் அவர் அருவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டார். வன்மம் என்பது அப்படிப் பட்டது" என்றார்.

நான் புரிந்து கொண்டது சரியா? இல்லை பாரதி பாஸ்கர் சொன்னது சரியா?

தெரிந்தவர்கள் சொல்லலாம்.

***********************************************************

யாராவது என்னை வற்புறுத்தி ஏதாவது ஒரு விசயத்தை செய்ய சொன்னால் எனக்கு பிடிப்பதில்லை. எதுவுமே எனக்குத் தோன்றினால் மட்டுமே நான் செய்வது வழக்கம். வீட்டில் கோயிலுக்கு போ போ என்று கட்டாயப்படுத்தினால் போக மாட்டேன். இந்த விசயம் சரியா தவறா எனக்குத் தெரியாது. பல விசயங்களில் இது போல்தான் வாழ்ந்து வருகிறேன்.

இந்த மாதிரி குணாதிசயம் உள்ள என்னிடம், சில நண்பர்கள் அவர்கள் எழுதிய கட்டுரையின் லிங்கை தவறாமல் மெயிலில் அனுப்பி, 'தயவு செய்து படித்துவிட்டு கருத்து சொல்லுங்கள்' என்கிறார்கள். இன்னும் சில பேர் பின்னூட்டங்களில் அவர்களின் லிங்கை கொடுக்கின்றார்கள். சிலர் ஆன்லைனில் வந்து லிங்கை கொடுத்துவிட்டு ஓடிவிடுகிறார்கள்,

எனக்கு இவர்களைப் பார்க்கையில் அயர்ச்சியாக இருக்கிறது. நன்றாக இருக்கும் கட்டுரைகளை தேடிப்பார்த்து தினமும் படிக்கிறேன். எல்லோருமே அப்படித்தான். எழுத்துக்கள் நன்றாக இருக்கும் பட்சத்தில் வாசகர்கள் தேடி வந்து படிப்பார்கள். அதைவிட்டு விட்டு இப்படி கட்டாயப்படுத்தி படிக்க வைப்பதில் என்ன நியாயம் இருக்கிறது.

அப்படியே படிக்க வைப்பது ஹிட்ஸுக்காக என்று நினைத்தார்களானால், அதனால் என்ன பயன்? 50 லட்சம் ஹிட்ஸோ அல்லது ஒரு கோடி ஹிட்ஸோ வாங்கிவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் ஏதேனும் ஆதாயம் உள்ளதா? ஹிட்ஸுகளை பணமாக்க முடியுமா?

அதனால் என்ன செய்ய வேண்டும்? முதலில் நண்பர்கள் நன்றாக படிக்க வேண்டும். நல்ல வேலையில் அமர வேண்டும். பொருளாதார வசதியை பெருக்கிக்கொள்ள வேண்டும். ஒரு வீடு, கார் வாங்க லட்சியம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு கல்யாணம், குழந்தைகள் என்று மேலே மேலே செல்ல முயற்சிக்க வேண்டும்.

அவ்வப்போது எழுதலாம். ஆனால், பிளாக்கை மட்டுமே நினைத்துக்கொண்டு வாழ்வை தொலைத்துவிடக்கூடாது. மன திருப்திக்காக நேரம் கிடைக்கும் போது எழுதலாம். தப்பில்லை அதை விட்டு விட்டு இளைஞர்கள் பிளாக் பக்கமே ஹிட்ஸுக்காக இருப்பதை நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. ஹிட்ஸ் எனபது ஒரு மாயை.

இங்கே நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை. பொதுவாக சொல்லி இருக்கிறேன். யாரும் தவறாக எண்ண வேண்டாம். காலையில் என்னவோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அதான்........

***********************************************************


18 comments:

bandhu said...

// சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க நினைத்தவர் இருக்க வேண்டியதுதானே? ஏன் ரவிசங்கர் கேட்டுக்கொண்டதும் உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்? ஏன்? //
simple. அனாவசியமாக சாக இஷ்டமில்லை!
//
1000 கோடி... இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர், தன்னுடைய 1000 கோடி சொத்து எப்படி வந்தது என்று சொல்வாரா?
//
ஓ! கருப்பு பணத்தை எதிர்க்க கூட ஒரு Qualification வேண்டுமா? இது போன்ற கேள்விகள் அரசியல் வாதிகளுக்கே உரியது! பதில் சொல்ல வழியில்லை என்றால் கேள்வி கேட்பவனை சந்தேகத்திற்கு உள்ளாக்குவது!
//

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் இவர் யோகா செய்ய அனுமதி வாங்குவாராம். பின்பு உண்ணாவிரதம் இருப்பாராம். கேட்டால், 'உண்ணாவிரதமும் யோகாவில் ஒரு பகுதியாம்'.
//
அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பதை ரகசியமாக செய்யவில்லை. கிட்டதட்ட ஒரு வாரம் அரசு அவருடன் அதை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பது தெரியாமலே அரசு அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியதா?
//
ஒரு பெரிய நாடு எத்தனை நாட்கள் பொறுத்து இருக்கும். அவர்களும் எவ்வளவோ பேசிப்பார்த்தார்கள். கடைசியில் டெல்லியை விட்டே அடித்து விரட்டிவிட்டார்கள். //
ஓ! கேள்வி கேட்பவரை அடித்து விரட்டியது நல்ல விஷயமா?

அது சரி! அவர் என்ன பணத்தை எனக்கு கொடுங்கள், பதவியை கொடுங்கள் என்றா போராட்டம் நடத்தினார்? கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடுவது கூட குற்றமா?

காமெடி பீஸ் அவரில்லை! ஒரு நியாயமான காரணத்திற்கு போராடும் ஒருவரை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் நாம் தான்!

Anonymous said...

1000 கோடி... இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். //
முதல்ல இவர் என்னென்ன தர்ம காரியங்கள்..செஞ்சிருக்காருன்னு கேளுங்க..தனி மனிதனுக்கு எதுக்கு இவ்வளவு சொத்து...இதனால இந்திய மக்களுக்கு ஏதாவது பலன் இருக்கா..இதை சொல்லிட்டு இந்தாளு அப்புறம் போராடட்டும்

Anonymous said...

அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பதை ரகசியமாக செய்யவில்லை. கிட்டதட்ட ஒரு வாரம் அரசு அவருடன் அதை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. //
எல்லாமே திருட்டு பயலுக..கறுப்பு பணம் வெச்சிருக்கிறதே அவங்கதானே!!

Anonymous said...

வன்மம் அதிகமாகி, சாகும்போது கூட, தன்னை கொன்றது தனுஷ்தான் என்று எல்லோரும் நினைக்க வேண்டும் என்றுதான் அவர் அருவாளால் கழுத்தை அறுத்துக்கொண்டார்.//
உங்களை அப்பா மாதிரி நினச்சிருந்தேன் என தனுஷ் சொன்னதும்...குழந்தை இல்லாத அந்த வாத்தியார் அந்த கேள்வியின் உக்கிரம் தாங்காமல்,தன் அல்ப புத்தியை நினைத்து...தற்கொலை செய்து கொண்டார் என்றுதான் நினைக்கிறேன்

Anonymous said...

ஹிட்ஸ் எனபது ஒரு மாயை.//
எங்க ஒரு பயலும் கேட்க மாட்டேங்கிறான்..எனக்கு பதிவு எழுதுவதால் ஆதாயம் இருக்கிறது...

shreyas said...

உலகனாதன், உங்கள் எழுத்துக்கல் மூலம் உஙகளிடம் எனக்கு இருந்த நல்ல மதிப்பு, உங்களுடைய இன்றைய
பதிவை படித்ததும் முற்றிலும் மறைந்து விட்டது.

வரதராஜலு .பூ said...

//நான் புரிந்து கொண்டது சரியா? இல்லை பாரதி பாஸ்கர் சொன்னது சரியா?//
இது சுஜாதா பாணி. இயக்குநர் நம் யூகத்திற்கே விட்டுள்ளார்.

எனது யூகம், அந்த நேரத்திலும் தனுஷை மாட்ட வைக்கவேண்டும் என்றே அவர் கழுத்தை அறுத்து கொள்வதாகவே. வன்மம் ஒன்றே காரணம்.

iniyavan said...

நண்பர் பந்துவுக்கு,

வருகைக்கு நன்றி.

//simple. அனாவசியமாக சாக இஷ்டமில்லை!//

அனாவசியமாக சாக இஷ்டம் இல்லைன்னா எதுக்காக உண்ணாவிரதம் இருக்கணும்?

//ஓ! கருப்பு பணத்தை எதிர்க்க கூட ஒரு Qualification வேண்டுமா?//

சத்தியமாக வேண்டும். முதலில் தன் முதுகில் உள்ள அழுக்கை பார்க்க முயற்சிக்க வேண்டும்.

//அவர் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் என்பது தெரியாமலே அரசு அவருடன் பேச்சு வார்த்தை நடத்தியதா?//

அப்புறம் ஏன் அவர் யோகாவுக்குன்னு பர்மிஸன் வாங்கிட்டு, உண்ணாவிரதம் இருந்தீங்கன்னு கேட்டதுக்கு, உண்ணாவிரதமும் யோகாவில் ஒரு அங்கம் என்று கூறினா?

//ஓ! கேள்வி கேட்பவரை அடித்து விரட்டியது நல்ல விஷயமா? //

அது, யார் கேட்கிறார்கள் என்பதை பொறுத்து இருக்கு.

//கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என்று போராடுவது கூட குற்றமா?//

முதலில் அவருக்கு ஆயிரம் கோடி சொத்து எப்படி வந்தது என்று சொல்ல சொல்லுங்கள்?

//காமெடி பீஸ் அவரில்லை! ஒரு நியாயமான காரணத்திற்கு போராடும் ஒருவரை சந்தேகத்திற்கு உள்ளாக்கும் நாம் தான்!//

சத்தியமாக நான் இல்லை.

iniyavan said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
1000 கோடி... இவர் ஊழலை ஒழிக்கப் போகிறாராம். //
முதல்ல இவர் என்னென்ன தர்ம காரியங்கள்..செஞ்சிருக்காருன்னு கேளுங்க..தனி மனிதனுக்கு எதுக்கு இவ்வளவு சொத்து...இதனால இந்திய மக்களுக்கு ஏதாவது பலன் இருக்கா..இதை சொல்லிட்டு இந்தாளு அப்புறம் போராடட்டும்//

சரியா சொன்னீங்க சதீஷ்.

iniyavan said...

//உங்களை அப்பா மாதிரி நினச்சிருந்தேன் என தனுஷ் சொன்னதும்...குழந்தை இல்லாத அந்த வாத்தியார் அந்த கேள்வியின் உக்கிரம் தாங்காமல்,தன் அல்ப புத்தியை நினைத்து...தற்கொலை செய்து கொண்டார் என்றுதான் நினைக்கிறேன்//

நான் நினைப்பதும் நீங்கள் நினைப்பதும் ஒன்றுதான் சதீஷ். ஆனால் மற்றவர்கள் பார்வை வேறுமாதிரி உள்ளது.

iniyavan said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
ஹிட்ஸ் எனபது ஒரு மாயை.//
எங்க ஒரு பயலும் கேட்க மாட்டேங்கிறான்..எனக்கு பதிவு எழுதுவதால் ஆதாயம் இருக்கிறது...//

உங்களுக்கு ஆதாயம் இருப்பதை நினைத்து சந்தோசப்படுகிறேன் சதிஷ்.

iniyavan said...

//shreyas said...
உலகனாதன், உங்கள் எழுத்துக்கல் மூலம் உஙகளிடம் எனக்கு இருந்த நல்ல மதிப்பு, உங்களுடைய இன்றைய
பதிவை படித்ததும் முற்றிலும் மறைந்து விட்டது.//

அப்படியா? எதனால், என்ன காரணம் என்று சொல்ல முடியுமா சார்?

iniyavan said...

வரதராஜலு .பூ said...
//நான் புரிந்து கொண்டது சரியா? இல்லை பாரதி பாஸ்கர் சொன்னது சரியா?//
//இது சுஜாதா பாணி. இயக்குநர் நம் யூகத்திற்கே விட்டுள்ளார்.

எனது யூகம், அந்த நேரத்திலும் தனுஷை மாட்ட வைக்கவேண்டும் என்றே அவர் கழுத்தை அறுத்து கொள்வதாகவே. வன்மம் ஒன்றே காரணம்.//

வருகைக்கு நன்றி வரதராஜுலு சார்.

shortfilmindia.com said...

vazthukkal

cablesankar

bandhu said...

தாங்கள் என் தளத்தில் குறிப்பிட்ட கட்டுரையை படித்தேன். வினவு தளத்தில் வருபவை மிதமிஞ்சிய வன்மத்துடன் எதிர்ப்பதாக தோன்றுகிறது. அதனால் அந்த தளத்தை ஒரு credible source ஆக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மற்றபடி, என் கருத்துக்கள் தங்களை புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்!

iniyavan said...

//bandhu said...
தாங்கள் என் தளத்தில் குறிப்பிட்ட கட்டுரையை படித்தேன். வினவு தளத்தில் வருபவை மிதமிஞ்சிய வன்மத்துடன் எதிர்ப்பதாக தோன்றுகிறது. அதனால் அந்த தளத்தை ஒரு credible source ஆக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

மற்றபடி, என் கருத்துக்கள் தங்களை புண் படுத்தியிருந்தால் மன்னித்து விடுங்கள்!//

டியர் Bandhu,

என்ன தப்பா புரிஞ்சுகிட்டீங்க. ஒரு ஆரோக்கியமான விவாதத்துக்குத்தான் அதைப் படிக்க சொன்னேனே தவிர, உங்களை தப்பாக புரிந்து கொண்டதால் அல்ல. மன்னித்துக்கொள்ளுங்கள் என்பதெல்லாம் பெரிய வார்த்தை தலைவரே! உங்கள் கருத்தை நீங்கள் சொன்னீர்கள், இதில் என்ன தவறு இருக்கிறது? நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தை எப்போதும் கூறலாம். நான் எழுதுவது சரி என்று நான் மட்டும்தான் கூற முடியும். எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும் என்று எப்பவுமே நான் நினைக்க மாட்டேன். இப்போது பாருங்கள். உங்கள் பின்னூட்டத்தால் நம்மிடையே ஒரு நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. தங்கள் வருகைக்கு மீண்டும் என் நன்றி.

bandhu said...

புரிதலுக்கு நன்றி. My stand on the issue is clear. ஊழலுக்கும் / கருப்பு பணத்திற்கும் எதிரே யார் போராடினாலும் நான் ஆதரிக்கிறேன்!

iniyavan said...

//bandhu said...
புரிதலுக்கு நன்றி. My stand on the issue is clear. ஊழலுக்கும் / கருப்பு பணத்திற்கும் எதிரே யார் போராடினாலும் நான் ஆதரிக்கிறேன்!// My stand on this issue also very clear.ஊழலுக்கும் / கருப்பு பணத்திற்கும் எதிரே ஊழல் செய்யாதவர் போராடினால் மட்டுமே நான் ஆதரிக்கிறேன்