Jun 7, 2011

குறை ஒன்று உண்டு -20


கத்தி வாங்கியபின் முன்பு போல நல்ல சிந்தனை வரவில்லை. மனம் தெளிவாக இருந்தது. முதலில் இரண்டு இட்லி ஆர்டர் செய்தேன். நன்றாக சாப்பிட்டேன். ஒரு மசால் தோசை சாப்பிட்டேன். இது போல் சாப்பிட்டு இரண்டு வருடம் ஆகிவிட்டது. உடனே வீணா நினைவு வந்தது. அவளுக்கு மசால் தோசை என்றால் அவ்வளவு விருப்பம். அப்படி சாப்பிடுவாள். என்னை அறியாமல் என் கண்களில் தண்ணீர் வந்தது. மனதை ஒரளவு கட்டுப்படுத்திக்கொண்டேன். பின் ஒரு காபி சாப்பிட்டேன். ஹோட்டலைவிட்டு வெளியே வந்தேன்.

கொஞ்சம் தெம்பு வந்தது போல் இருந்தது. அப்படியே காலாற நடந்தேன். அருகில் உள்ள பார்க்கில் போய் சிறிது நேரம் ரெஸ்ட் எடுக்கலாம் என்று சென்றேன். இருட்டும் வரை அங்கே விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். சிறுவர்களை பார்க்கும் போது மனம் சந்தோசம் அடைந்தது. 

சிறுவர்களின் வாழ்க்கை அற்புதமானது. எந்தக் கவலையும் இல்லாத வயது. என் சிறுவயது நினைவுகள் தேவை இல்லாமல் வந்தது. என் சிறுவயது வாழ்க்கை அப்படி ஒன்றும் சந்தோசமானதாக இல்லை. என் உடன் பிறப்புகளின் உதாசீனம் மட்டுமே நினைவுக்கு வந்தது. ம்ம்ம்

பார்க் மூடும் வரை அங்கே இருந்தேன். பின் அந்த இடத்தை விட்டு கிளம்பினேன். அங்கே இருந்து ஒரு ஆட்டோவில் ராஜா வீட்டை நோக்கிப் புறப்பட்டேன். ஒரு பதினைந்து நிமிடத்தில் அவன் வீட்டை நெருங்கினேன். தெருவை கவனித்தேன், யாரும் இல்லை. அது ஒரு விஸ்தரிக்கப்பட்ட நகர். அதனால் நிறைய வீடுகள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது.

ஆட்டோ போகும் வரை காத்திருந்தேன். பின் ராஜாவின் வீட்டின் பின்புறம் சென்றேன். அங்கே இருந்த காம்பவுண்ட் சுவர் மூலம் மேலே ஏறினேன். பின் வாட்டர் பைப் மூலம் கஷ்டப்பட்டு மாடியை அடைந்தேன். அங்கே இருந்த ரூம் பெட் ரூம் போல இருந்தது. பெரிய ஜன்னல். அந்த ஜன்னல் கண்ணாடியை உடைப்பது ஒன்றும் அவ்வளவு கஷ்டமாக இல்லை. உடைந்த கண்ணாடி வழியாக கையை உள்ளே விட்டு, தாழ்ப்பாளை நீக்கினேன். கதவு திறந்தது. மெதுவாக உள்ளே நுழைந்தேன்.

வீட்டை நோட்டமிட்டேன். பெட்ரூம் அருகே ஒரு சின்ன ஹால். பெட்ரூமை உற்றுப் பார்த்தேன். அங்கே யாரோ படுத்து இருப்பது போல் தெரிந்தது. நன்றாக  கவனித்ததில் அது ராஜா என்று தெரிந்தது. அவன் மட்டுமே வீட்டில் இருப்பதால் வந்த வேளை சுலபமாக முடியப்போகிறது என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில், ஹாலில் இருந்து ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது.

இது என்னடா வம்பா போச்சு என்று கடுப்பாகி ஹால் பக்கம் பார்த்தவன், அதிர்ந்து கீழே விழுந்தேன். அங்கே சுவரில் இருந்த போட்டோவில், ராஜாவுடன் கல்யாண கோலத்தில் வீணா......

"ஆனா, அவன் வீட்டுக்கு எல்லாம் போகாதே" என்று முருகன் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.

துரோகி!

நான் ஜெயிலுக்கு போனவுடன் அவனை கல்யாணம் செய்திருக்கிறாள். அதனால்தான் என்னை வந்து பார்க்கவில்லை. அப்போ என்னை காதலித்தது பொய்யா? என்னை கல்யாணம் செய்து கொள்வேன் என்று சொன்னது பொய்யா? அப்படியானால் என்னை ஜெயிலுக்கு அனுப்பியதில் இவளும் கூட்டா?

இவளை விடக்கூடாது? இவளையும் கொன்றுவிட வேண்டியதுதான். ஒரு கொலை செய்தாலும் ஒரே தண்டனைதான், இரண்டு கொலை செய்தாலும் ஒரே தண்டனைதான். மெல்ல எழுந்தேன் முதலில் இவளைக் கொல்லுவோம்.

மீண்டும் குழந்தை அழுதது.

யாரோ வருவது தெரிந்தது. வேகமாக வீணாதான் வந்தாள். அதே அழகுடன் சற்றுப் பூசினால் போல் இருந்தாள். அந்த சின்ன ஹாலில் ஒரு தொட்டில் இருந்தது. அதில் இருந்துதான் சத்தம் வந்தது. வேகமாக வந்தவள் தொட்டியில் இருந்த குழந்தை எடுத்தாள்.

நான் கத்தியுடன் அவளை நோக்கி செல்ல ஆரம்பித்தேன்.

குழந்தையை எடுத்தவள், கையில் தூக்கி தோளில் வைத்துக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தாள்,

"என் புஜ்ஜிம்மா, என் செல்ல புஜ்ஜிம்மா" 

என்னையறியாமல் என் கையில் இருந்த கத்தி கீழே விழுந்தது.

விறுவிறுவென வீட்டை விட்டு வெளியே வந்தேன். அவள் என்னக் காரணத்திற்கு வேண்டுமானாலும் ராஜாவை கல்யாணம் செய்திருக்கட்டும். அது எனக்கு இப்போ தேவையில்லை. இனி அதை நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை. இனி அவளை பழிவாங்குவதில் அர்த்தம் இருப்பதாக எனக்குப் படவில்லை. அவள் என்னைத்தவிர யாரையுமே 'புஜ்ஜிம்மா' என்று கூப்பிட்டதில்லை. அவள் குழந்தையை என்னைக் கூப்பிடுவது போல் கூப்பிட்டு கொஞ்சுகிறாள். எனக்கு அது போதும். அவளின் மனதில் இன்னும் நான் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறேன். எனக்கு அது போதும். இனி ராஜாவை பழி வாங்குவதிலும் அர்த்தம் இருப்பதாக எனக்குப் படவில்லை.

வேகமாக கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன். எங்கோ ரேடியோவில்,

"குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா" பாடல் ஒலித்தது.

ஆம். குறை ஒன்று இருந்தது, ஆனால் இப்போது இல்லை.

-முற்றும்

7 comments:

Kadir said...

நல்ல முடிவு. Keep going.

BalHanuman said...

அருமையாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

என்னுடைய ஊகம் கிட்டத்தட்ட சரியே. இருந்தாலும் சில விஷயங்களை தெரியாமல் விட்டுவிடுவதே புத்திசாலித்தனம்.

நல்ல முடிவு. குறையொன்றும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

iniyavan said...

//Kadir said...
நல்ல முடிவு. Keep going.//

வருகைக்கு நன்றி கதிர்.

iniyavan said...

//BalHanuman said...
அருமையாக முடித்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.//

நன்றி பால்ஹனுமான்.

iniyavan said...

//dondu(#11168674346665545885) said...
என்னுடைய ஊகம் கிட்டத்தட்ட சரியே. இருந்தாலும் சில விஷயங்களை தெரியாமல் விட்டுவிடுவதே புத்திசாலித்தனம்.

நல்ல முடிவு. குறையொன்றும் இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

உங்கள் தொடர் ஆதரவிற்கு நன்றி டோண்டு சார்.

Author said...

நல்ல கதை. கதையா எடுத்து சென்ற விதம் அருமை. என்றாலும் கதையா அவசரமா தொடங்கி அவசரமா முடிச்சுட்டீங்க போல தெரியுது. ஏன் அவ வீட்ல இருந்து வந்ததுமே எழுதினீங்களோ? :p