Jul 29, 2011

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1


திடீரென விழிப்பு வந்து மணியைப் பார்த்தேன். இரவு இரண்டு மணி. தூக்கம் கலைந்துவிட்டது. உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. கடந்த இரண்டு வாரமாக இப்படித்தான் இருக்கிறது. அதுவும் இடுப்புக்கு கீழே அதிக வலி. பாத்ரூம் போக வேண்டும் போல இருந்தது. ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. எப்படியாவது போய்த்தான் ஆக வேண்டும். தள்ளிப்போட முடியாது. பின் அடி வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். பக்கத்தில் திரும்பி பார்த்தேன். ஹேமாவை காணவில்லை. நான் தூங்கியதும் அவள் போயிருப்பாள். அவள் என்ன தாலிக்கட்டிய மனைவியா என்ன என் கூடவே இருப்பதற்கு? அடுத்தவனின் மனைவிதானே? இப்ப்டி யாருமற்ற அநாதையாகிப்போன என்னை நினைத்து வெறுப்புத்தான் வருகிறது. நான் செய்வது எல்லாம் தவறு என்று எனக்கு நன்றாக தெரிகிறது. தெரிந்தும் தினமும் அந்த தவறை செய்துகொண்டுதானிருக்கிறேன்.  'இது எல்லாம் தவறு' என்று எப்போது மனம் நினைக்கிறது, தெரியுமா? எல்லாம் முடிந்த பிறகுதான். ஆனால் இரவு ஆரம்பிக்கும் போது...?  

எழுந்தேன். அப்படியே மெதுவாக பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். காலில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்த்தேன். ஹேமாவின் உள்ளாடைகளில் ஒன்று கீழே கிடந்தது. இதைக்கூட எடுத்துக் கொண்டு போக முடியாத அளவிற்கு அவளுக்கு என்ன அவசரம் இருந்திருக்கும்? காலையில் கேட்க வேண்டும். அப்படியே காலால் அதை ஒதுக்கி படுக்கையின் கீழே தள்ளிவிட்டு பாத்ரூமை நோக்கி சென்றேன். நடக்க முடியவில்லை. மனம் பதட்டப் பட ஆரம்பித்தது. என்னவோ கெடுதல் நடக்கப் போகிறது. எனக்கு என்னவோ ஆகப் போகிறது. தட்டுத்தடுமாறி உள்ளே சென்றேன். கதவை அடைக்க கூட நேரம் இல்லை. உடனே டாய்லெட்டில் யூரின் போக முயற்சித்தேன். பயங்கர வலி. எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு சொட்டுக்கூட வரவில்லை. இது போல் ஒரு வலியை என் ஜென்மத்தில் நான் உணர்ந்ததில்லை. போன வாரமும் இதே போல் ஒரு முறை வலி வந்தது நினைவுக்கு வந்தது. அப்போது நான் கத்திய கத்தலில் ஓடி வந்து என்னை ஆஸ்பத்திரிக்கு திவாகர்தான் கூட்டிப் போனான். என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார்கள். இன்னும் ரிசல்ட் வரவில்லை. இன்று காலையில்தான் போய் வாங்க வேண்டும்.

ஒரு பக்கம் வலி உயிர் போகிறது. இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட சிந்தனை வருகிறது. வலி தாங்க முடியாமல் அப்படியே கீழே குனிந்தேன். பார்த்தேன். அங்கே என்ன சிகப்பா......? ஐய்யோ! என்ன இது யூரின் போகும் இடத்தில் ரத்தமா..................

***************************************************

யார் யார் பேச்சுக்குரலோ காதின் ஓரத்தில் கேட்பது போல் இருந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். மங்கலாக எல்லாம் தெரிந்தது. நன்றாக உற்றுப்பார்த்ததில் பக்கத்தில் ஹேமா, திவாகர் எல்லாம் நிற்பது தெரிந்தது. நான் எங்கே இருக்கிறேன்? ஒரே குழப்பமான மனநிலையில் திவாகரை நோக்கி சைகையால் கேட்டேன்.

"கவலைப்படாத குரு. எல்லாம் சரியாகிடும். ஒண்ணும் இல்லை. நேத்து உனக்கு சாப்பாட்டு குடுக்க ஹேமா வந்தாளாமே? அப்போ என்னவோ உங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டாளாம். அதை எடுக்க வீட்டுக்கு வந்துருக்கா. அப்போ நீ பாத்ரூம்ல மயக்கமா கிடந்தியாம். நான் நைட் ஷிப்ட்ல கமபனில இருந்தேன். உடனே எனக்கு போன் பண்ணி வரச்சொன்னா.. நானும் ஹேமாவும்தான் உன்னை ஆஸ்பத்திரில சேர்த்தோம். ஏற்கனவே டாக்டர் எல்லா செக்கப்பும் பண்ணிட்டார். ஏதாவது யூரினல் இன்பெக்ஷனா இருக்கும்னு சொன்னார். நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் போய் மாத்திரை மருந்தெல்லாம் வாங்கி வரேன். அதுவரை ஹேமா இங்க இருந்து உன்னை கவனிச்சிப்பா"

நான் ஒன்றும் பேசாமல் கண்களில் நீர் வழிய என் இரண்டு கைகளால் அவனை கும்பிட்டேன். 

"சே சே என்ன குரு, இதுக்கு எல்லாம் போய் அழுதிட்டு.. நான் உன் நெருங்கிய நண்பன். நீ எனக்கு எவ்வளவு பண்ணியிருக்க, உனக்கு இந்த உதவி கூட நான் செய்யலைனா எப்படி" என்று சொல்லிவிட்டு என் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தேன். 

"எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது"

திரும்பி ஹேமாவை பார்த்தேன். நேற்று இரவு உடுத்தியிருந்தே அதே உடை. கண்கள் கொஞ்சம் கலங்கி இருந்தது போல் இருந்தது. ஆனால் முகத்தில் அதே வசீகரம். மெருன் கலர் சுடிதாரில் அந்த களைப்பிலும் தகதகவென இருந்தாள். பேச முடியாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் போது இப்படி எல்லாம் நினைக்க என்னால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். அப்படி எப்பவும் நினைத்ததன் விளைவுதானே இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறேன்.

சுற்றும் முற்றும் பார்த்த ஹேமா அந்த அறையில் யாரும் இல்லை என்றவுடன் அருகில் வந்து என் நெற்றியில் செல்லமாக முத்தமிட்டாள். அந்த முத்தத்தில் காமம் இல்லை. கருணை, அன்பு, தாய்மை அனைத்தும் கலந்த முத்தம். இன்னும் எத்தனை நாளைக்கு இது நிலைக்கும் என்ற எண்ணமே என்னை நிலை குலைய செய்தது. என் சிந்தனையை கலைக்கும் விதமாக ஹேமாதான் பேசினாள்,

"ஏம்பா அழற? அதான் நான் இருக்கேன் இல்லை. கவலைப்படாம இரு. எல்லாம் சரியாகிவிடும். நான் உன் கூடவே இருந்து பார்த்துப்பேன். கடைசிவரை பார்த்துப்பேன். என் உயிர் உள்ளவரை பார்த்துப்பேன்" என்று சொன்னவளின் கண்கள் கலங்குவதை பார்த்து அவள் கண்களை துடைக்கப்போனவன், கைகளை தூக்க தெம்பில்லாமல் அப்படியே கிடந்தேன்.

"ஆனா கஷ்டத்துலயும் ஒரு நல்லது நடந்துருக்குப்பா. நேற்று ராத்திரி நான் எவ்வளவோ தடுத்தும் நீ கேட்காம எல்லாத் துணியையும் உருவி போட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. வீட்டுக்கு போனவ, நினைப்பு வந்து உன் ரூமுக்கு வந்து எடுத்துட்டு போகலாம்னு வந்தா நீ மயங்கி கிடக்குற. நல்ல வேளை உடனே ஆஸ்பத்திரில வந்து சேர்த்து உன்னை காப்பாத்திட்டோம். அதனால் இனிமே எல்லாத்தையும் அவுக்க சொன்னா நீ கேட்காம நானே அவுத்துடுவேன்"

என்னவோ அப்போதிருந்த அந்த மனநிலையில் அவளின் பேச்சை என்னால் ரசிக்க முடியவில்லை.

மீண்டும் அங்கே வலி. யூரின் போக வேண்டும் போல இருந்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹேமாவை பார்த்தேன். அநேகமாக அவள் புரிந்து கொண்டாள் போல இருந்தது. நேராக அருகில் இருந்த பெட் பேனை எடுத்து என் டிரஸை அவிழ்த்து.. அப்படியே அதை கையில் எடுத்து...... அதில் வைத்து... கொஞ்சம் கொஞ்சமாக யூரின் வர ஆரம்பித்தது. அப்படியே ஹேமாவின் முகத்தை பார்த்தேன். என்னால் அவளின் எந்த உணர்வையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் செய்யும் வேலையிலேயே கவனமாக இருப்பது தெரிந்தது. 

ஒரு தாய் போல் என்னை கவனிக்கும் இவளையா போய் நேற்று.... நினைக்கும் போதே என் மேல் வெறுப்பு வந்தது. ஆனால் இதற்கு நான் மட்டும் காரணமில்லையே?

யாரோ வருவது போல இருந்தது. மெல்ல எட்டிப் பார்த்தேன். திவாகர்தான் மருந்தோடு வந்து கொண்டிருந்தான். என்னால் தான் அவனுக்கு எவ்வளவு கஷ்டம்?

"என்ன குரு இப்ப பரவாயில்லையா?''

"ம்ம்" என்று தலையாட்டினேன்.

அப்போது ஒரு சிறு சலசலப்பு கேட்டது. உள்ளே டாக்டர் வந்து கொண்டிருந்தார், கூடவே இரண்டு நர்ஸ்கள். இரண்டு இளம் டாக்டர்கள். அங்கு உள்ள ஷீட்டை பார்த்தார்கள். என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். திடீரேன டாக்டர் கேட்டார்,

"இங்க யாரு இவரை சேர்த்தது?"

"நான் தான்" என்றான் திவாகர்.

"நீங்க இவருக்கு என்ன வேணும்?"

"பிரண்ட் டாக்டர்"

"நீங்கம்மா"

"நானும் இவரின் தோழிதான் டாக்டர்"

"இவங்க உறவினர்கள் யாரும் வரலியா?"

"இல்லை டாக்டர்"

"ஒண்ணும் இல்லை, மேற்கொண்டு என்ன மாத்திரை கொடுக்கலாம்னு பேசணும்.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"

"திவாகர்"

"நீங்க என் கூட வாங்க. நீங்க இந்த மருந்தெல்லாம் உடனே குடுங்கம்மா" என்று ஹேமாவிடம் சொல்லிவிட்டு திவாகரை கூட்டிக்கொண்டு போகும் டாக்டரை கவலையுடன் பார்த்தேன்.

****************************************

யாரோ அழும் சத்தம் கேட்டது. லேசாக முழிப்பு வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன். ஹேமா அழுது கொண்டிருந்தாள்.

"உண்மையாகவா, உண்மையாகவா?" என்று திவாகரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"ஆமாம்"

"அப்படி என்ன வியாதி?"

"அதை எப்படி சொல்வேன்"

"சொல்லுங்க"

"கேன்ஸர்"

"அய்யோ அப்படியா? என்ன கேன்ஸர்? எங்க?"

"உன்கிட்ட சொல்ல முடியாத, பெண்கள் யாருட்டயும் சொல்ல முடியாத இடத்துல"

- தொடரும்

Jul 25, 2011

மிக்ஸர் - 25.07.2011


சினிமா விமர்சனங்கள் படிப்பதை ஒரு வழியாக நிறுத்திவிட்டேன். அதனால் ஒரு நல்ல படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சினிமா விமர்சனங்கள் படித்தால், இரண்டு விதமான பாதிப்புகள் ஏற்படுகின்றது. ஒன்று கதை முன்பே தெரிந்து விடுகிறது. இரண்டாவது எழுதும் எல்லாருமே ஏதாவது படத்தில் குறை சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் முன்பெல்லாம் பல படங்களை பார்க்காமல் தவிர்த்திருக்கிறேன். ஆனால் இப்போது எனக்கு என்ன படம் பிடிக்கிறதோ அதை பார்க்கும் மனநிலைக்கு வந்துவிட்டேன். 

அந்த வகையில் நான் தற்போது பார்த்த படம் "தெய்வத் திருமகள்" எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போனதால் என்னால் படத்தை நன்றாக ரசிக்க முடிந்தது. விக்ரமின் நடிப்பு அற்புதம். அதைவிட குழந்தை சாராவின் நடிப்பு அட்டகாசம். நீண்ட நாட்கள் கழித்து ஒவ்வொரு காட்சியையும் ரசித்துப் பார்த்தேன். எவ்வளவோ முயன்றும் கடைசியில் என்னால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் ஆறாக பெருகி வருகிறது. திரும்பி பார்க்கிறேன், என் குடும்பம் மட்டும் அல்ல. மொத்த தியேட்டரும் அழுகிறது. சில படங்கள் பார்த்தால் அதனுடைய பாதிப்பு ஒரு இரண்டு நாட்கள் இருக்கும். என்னால் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் மீண்டு வரமுடியவில்லை.

நண்பர்கள் சொல்கிறார்கள், 'இது ஆங்கிலப் படத்தின் அப்பட்டமான காப்பி, ஹிந்தி படத்தின் தழுவல்' என்று. இருந்துவிட்டு போகட்டுமே, அதனால் என்ன? நான் கொடுத்த காசுக்கு ஒரு நல்ல படத்தை பார்த்த திருப்தி எனக்கு கிடைத்தது. எனக்கு அது போதும். அதை விட்டுவிட்டு, விக்ரம் பேசுவது எல்லாம் 5 வயது குழந்தை போலா இருக்கிறது? என்ற ஆராய்ச்சியில் இறங்க நான் விரும்பவில்லை, 

*******************************************************

மலேசியாவில் படிக்கும் என் குழந்தைகளை இந்தியாவில் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசையில் அதற்கான முயற்சியில் இறங்கினேன். பின் இந்த வருடம் வேண்டாம் அடுத்த வருடம் சேர்த்துக்கொள்ளலாம் என நினைத்து முடிவை மாற்றிக்கொண்டேன். அதுவும் ஒரு விதத்தில் நல்லதாக போய்விட்டது. இங்கு கல்வித்தரம் அந்த அளவிற்கு இல்லை என்ற காரணத்தினால்தான் தமிழ்நாட்டில் சேர்க்க ஆசைப்பட்டேன். ஆனால் இப்போது இருக்கும் சூழலில் அங்கே கல்வியே இல்லை போலிருக்கிறதே? பள்ளி தொடங்கி இரண்டு மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த பாடமும் நடத்த ஆரம்பிக்கவில்லை. ஒவ்வொரு கோர்ட் ஆர்டருக்கும் அப்பில் செது கொண்டே இருந்தால் பிள்ளைகளின் எதிர்காலம் என்ன ஆவது? சுப்ரீம் கோர்ட் இதுதான் எங்கள் முடிவு. இதை நீங்கள் செயல்படுத்தித்தான் ஆக வேண்டும். இதற்கு எந்த அப்பீலும் பண்ண முடியாது.  அப்படி அப்பில் பண்ண ஆசைப்பட்டால் ஏதாவது டென்னிஸ் கோர்ட்டில் போய் அப்பில் செய்து கொள்ளுங்கள் என்று சொன்னால் பரவாயில்லை. 

*******************************************************

நார்வே நாட்டின் தலைநகர் ஆஸ்லோவில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலில் இடுவரை 91 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்களில் அதிகம் இளைஞர்கள். இதில் போலீஸ் உடையில் வந்த ஒரு மர்ம மனிதன் மட்டும் கிட்டத்தட்ட 70 இளைஞர்களை சுட்டு கொன்றிருக்கிறான். உயிர் பயத்தில் தப்பி ஓடி அருகில் உள்ள ரிவரில் விழுந்தவர்களைக் கூட அவன் விட்டு வைக்கவில்லை. தண்ணீரில் தப்பித்தவர்களையும் சுட்டிருக்கிறான். இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை. இந்த தீவிரவாதிகளுக்கு என்னதான் வேண்டும்? எதனால் இப்படி மனித உயிர்களை அநாவசியமாக கொல்கிறார்கள்? உலகில் எங்கு பிரச்சனை நடந்தாலும், அங்கு சென்று சமாதானத்தில் ஈடுபடும் நார்வே நாட்டிற்கு இன்று பிரச்சனை. எதை நோக்கி இந்த உலகம் போய்க்கொண்டிருக்கிறது?

*******************************************************

பாவம் மும்பைவாசிகள். எப்போழுதும் தீவிரவாதிகளின் குறி மும்பையை சுற்றியே இருக்கிறது? மீண்டும் அதே கேள்விதான், என்னதான் வேண்டும் அவர்களுக்கு? இது ஒரு புறம் இருக்க, எனக்கு வந்த ஒரு மெயிலை இங்கே தருகிறேன், படித்துப் பாருங்கள்:

Here's the statement issued by Prime Minister Dr Singh after Mumbai Blasts: 

"I strongly condemn the bomb blasts in Mumbai this evening. I have asked the Chief Minister of Maharashtra to do whatever is possible to provide relief to the injured and to the families of the deceased citizens. I have also asked Union Home Minister, Shri P Chidambaram to provide all possible expert assistance to the state government. I appeal to people of Mumbai to remain calm and show a united face."

Here is the part of the statement issued by President Bush after New York attack:

“These acts of mass murder were intended to frighten our nation into chaos and retreat. But they have failed. Our country is strong. A great people has been moved to defend a great nation.
The search is underway for those who are behind these evil acts. I've directed the full resources for our intelligence and law enforcement communities to find those responsible and bring them to justice. We will make no distinction between the terrorists who committed these acts and those who harbor them.” 

*******************************************************
வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்பவர்கள், இரண்டுவிதமான பிரிவுகளில் செல்கிறார்கள். ஒன்று ஏஜெண்டுகள் மூலம். மற்றது நல்ல கம்பனிகள் மூலம் நேரடியாக வேலைக்கு செல்வது, ஏஜெண்டுகள் மூலமாக வேலைக்கு செல்பவர்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளை பல முறை கேள்விபட்டு இருப்பீர்கள். அதனால், அதை விட்டுவிடுவோம். நேரடியாக கம்பனியில் வேலை சேர்பவர்களுக்கு எந்த பிரச்சனையும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், சமீபகாலமாக ஒருவிதமான ஏமாற்று வேலைகள் நடப்பது தெரிகிறது. நல்ல கம்பனியாக இருந்தாலுமே நேர்முகத்தேர்வு இல்லாமல் உங்களுக்கு வேலைக்கான கடிதம் யாரேனும் அனுப்பினால், ஒரு முறைக்கு பல முறை யோசியுங்கள். அதில் ஏதேனும் வில்லங்கம் இருக்கலாம். நிறைய சம்பளம் கொடுப்பதாகவும், மற்ற வசதிகள் எல்லாம் கொடுப்பதாகவும் சொல்வார்கள். கலர் ஸ்கேனில் ஆர்டர் இருக்கும். நன்றாக விசாரித்துப் பார்த்தால் அந்த மாதிரி ஒரு கம்பனியே அந்த நாட்டில் இருக்காது. எல்லாமே ப்ராடு.
இதில் எப்படி அவர்கள் ஏமாற்ற முடியும் என நீங்கள் நினைக்கலாம். ஏமாற்ற முடியும். நீங்கள் ஆர்டரை ஏற்றுக்கொண்ட உடனேயே ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாஸிட் செய்ய சொல்வார்கள். மாதம் மூன்று லட்சம் சம்பளம் தருவதாக சொல்வார்கள். உங்களை 30,000 ரூபாய் டெபாஸிட் கட்ட சொல்வார்கள். வெறும் 30,000 ஆயிரம் தானே என்று கட்ட மாட்டீர்களா? என்ன?
இதே போல் பல பேரிடம் 30,000 வாங்கினால்...... அதனால் விசாரிக்காமல் எந்த வேலைக்கான ஒப்பந்தத்திலும் கையெழுத்து போடாதீர்கள்.

*******************************************************Jul 20, 2011

ஆச்சர்யமான சந்தோசம்!

இந்த அவசர உலகத்தில் ஒருவர் செய்த நல்ல செயல்களை இன்னொருவர் பாராட்டுவது என்பது அரிதான ஒரு விசயமாகிவிட்டது. பணம் பொருள் கொடுக்கும் சந்தோசத்தைவிட ஒருவர் பாராட்டினால் கிடைக்கும் சந்தோசம் அளவிட முடியாதது. என் பள்ளிக்காலங்களில் என் தமிழ் ஐய்யா, மாணவர்கள் மனப்பாட செய்யுளை சொல்லும் போது, என்ன தவறு இருந்தாலும் கண்டிக்கவே மாட்டார். ஒரு வரி சொன்னால் கூட அப்படி பாராட்டுவார். "பரவாயில்லையே அருமையா சொல்லறியே! இன்னும் மூன்றே வரிகள் தான் இருக்கு, நாளைக்கு சொல்லறியா?" என்பார். மாணவர்கள் அவருக்காகவே நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள்.

அலுவலகங்களில் கூட நம் கீழே வேலை பார்ப்பவர்களை அவர்கள் செய்யும் தவறுக்கு அவர்களை திட்டுவதை விட, அவர்கள் செய்த நல்லவைகளை பாராட்டி, தவறு செய்யும் போது சாந்தமாக எடுத்து சொன்னால், மிகவும் அக்கரையுடன் வேலை செய்வார்கள், இது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. அதை விட்டு எப்போதும் திட்டிக்கொண்டே இருந்தோமானால், நாம் எதிர்பார்க்க்கும் அளவிற்கு அவர்களிடம் இருந்து உழைப்பை வாங்க முடியாது. 

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்...... கீழே உள்ளதை படியுங்கள், புரியும். இது கொஞ்சம் சுய தம்பட்டமாக இருக்கலாம். இருந்தாலும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு காலை. நான் பூஜை அறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். என்னுடைய அலைபேசி தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. பொதுவாக என் அலைபேசி அழைப்புகளை என் வீட்டில் உள்ளவர்கள் யாரும் எடுக்க மாட்டார்கள். அன்றும் அவர்கள் யாரும் எடுக்கவில்லை. நான் என்னதான் தியானத்தில் இருந்தாலும் அலைபேசியின் சத்தம் என் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது.

பூஜை அறையில் இருந்து வந்தவுடன் யாராக இருக்கும் என்று பார்த்தேன். லண்டனில் இருந்து மூன்று மிஸ்கால்கள் வந்திருந்தது. லண்டனில் எங்கள் நிறுவனத்தின் ஏஜெண்ட் நம்பரோ என்று நினைத்து பார்த்தேன். ஆனால், இது வேறு ஏதோ புது நம்பர். பொதுவாக தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால், போனை எடுக்கும் முன் பல முறை யோசிப்பேன். காரணம் நிறைய அழைப்புகள் கம்பனியின் இன்வெஸ்ட்மெண்டை பற்றியோ அல்லது உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது என்பது போன்ற அழைப்புகளாக இருக்கும். அதனால், பலத்த யோசனைக்குப் பின், "நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

உடனே பதில் வந்தது, "உங்களுடன் பேச வேண்டும். எப்போது ஓய்வாக இருப்பீர்கள்?"

உடனே நான், "பேசலாம். நீங்கள் யார் என்று சொல்லுங்கள்?" என்று இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பதில் இல்லை.

நானும் அலுவலகம் வந்து விட்டேன். பின்பு "Un Known Number" என்று இரண்டு அழைப்புகள் வந்தன. உடனே நான் அதே நம்பருக்கு, "நீங்கள் இப்போது அழைத்தீர்களா?" என் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

(Un Known Numberல் இருந்து வந்த அழைப்பு பாஸ்டன் ஸ்ரீராம் வீட்டு எண் என்பதை பின்பு அவரின் மெயில் மூலம் தெரிந்து கொண்டேன்)

என் குறுஞ்செய்தியை பார்த்தவுடன் அவர் என்னை அழைத்தார். தன் பெயரை அறிமுகப் படுத்திக்கொண்டார். அவருக்கு தமிழ் படிக்கத் தெரியுமாம். ஆனால், சரியாக பேச வரவில்லை. விசயம் இதுதான். அவர் லண்டனில் வசிப்பவர். சென்னை சென்று விட்டு லண்டன் வந்திருக்கிறார். சென்னையை விட்டு கிளம்பும்போது என்னுடைய இரண்டு புத்தகங்களை வாங்கியுள்ளார். லண்டன் போய் சேர்ந்தவுடன் உடனே படிக்க ஆரம்பித்தாராம். ரொம்ப பிடித்துப் போகவே உடனே பாராட்ட வேண்டும் என்று தோன்றியதாம். புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் பாராட்டினார்.

பின்பு, சில அறிவுரைகளை வழங்கினார். 

"உன் வாழ்க்கையில் நடந்தவைகளையும், நீ முன்னேறிய கதைகளையும் சொல்லி இருக்கிறாய். பாராட்டுக்கள். உன்னை வளர்த்து ஆளாக்கிய இந்த சமுதாயத்திற்கும், இந்த உலகத்திற்கும் என்ன செய்திருக்கிறாய்?" என்று கேட்டார். என்னிடம் பதில் இல்லை.

உடனே விவேகானந்தரை பற்றி பேசினார். சில குறிப்புகளைக் கொடுத்தார். 

"நீ எழுதும் புத்தகங்கள் உன் காலத்திற்கு பிறகும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இப்படியாக எங்கள் பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடியது. 

இதில் என்ன சந்தோசம் இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது. நம்மை அறிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் யாரும் பாராட்ட மாட்டார்கள். ஒரே துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், யாரும் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டுவதில்லை. அவரவர்களைப் பொருத்தவரை அவர்கள்தான் சிறந்தவர்கள். இதுதான் எல்லா இடங்களிலும் நடக்கிறது. 

ஆனால் முகம் தெரியாத யாரோ ஒருவர் அதுவும் வெளிநாட்டிலிருந்து அழைத்து நாம் எழுதிய ஒவ்வொரு கட்டுரையையும் சிலாகித்து பேசும்போது சந்தோசம் வருமா? வராதா?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், என்னை அழைத்து பேசியவரின் வயது 68. 

அவர் என் புத்தகத்தைப் படித்து முடித்த போது இரவு 1 மணி. உடனே இரவு 1 மணிக்கே என்னை அழைத்து பேச முயற்சித்து, நான் எடுக்காமல் போகவே, பிறகு இரவு 2 மணிக்கு அழைத்து பேசி இருக்கிறார்.

அன்று முழுவதும் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவரைப் போன்ற நல்ல உள்ளங்களுக்காகவாவது தொடர்ந்து ஏதாவது நல்ல விசயங்களை எழுத வேண்டும்.

ம்ம்... பார்ப்போம்!Jul 11, 2011

உண்மை....

கடந்த சில நாட்களாக எதையும் எழுதவில்லை. எழுதக் கூடிய மனநிலையில் நான் இல்லை. என்னதான் ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்திருந்தாலும், வாழ்க்கையில் அவ்வப்போது சில மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. ஏகப்பட்ட கஷ்டங்கள், அவமானங்கள் எல்லாவற்றையும் கடந்துதான் இந்த நிலையில் இருக்கிறேன். இடைப்பட்ட வாழ்க்கையில் எனக்கு இழைக்கப்பட்ட துரோகங்கள், அதனால் ஏற்பட்ட வலிகள் அனைத்தையும் மறந்துவிட்டேன்.

நீங்கள் நினைக்கலாம், ஏன் உன் சொந்தப்பிரச்சனையை இங்கே எழுதுகிறாய்? என்று. எப்படி எனக்கு ஏற்படும் சந்தோசங்களை பதிவு செய்து வைத்துக்கொள்கிறேனோ அதே போல் பிரச்சனைகளையும், சோகங்களையும் பதிவு செய்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

சந்தோசமான வாழ்க்கை என்பது அவ்வளவு சுலபத்தில் யாருக்கும் அமைந்துவிடாது. ஆனால், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் நான் சந்தோசமாகவே வாழ்ந்து வந்திருக்கிறேன். வாழ்ந்து வருகிறேன். இத்தனை வருடங்கள் ஆனப் பிறகும் இன்னும் யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்பதில் எனக்கு குழப்பம் இருந்து கொண்டே இருக்கிறது.

என் வாழ்க்கையில் மிக முக்கியமானவர், என் அன்புக்குறிய ஒருவர் என்னைப் பார்த்து கேட்ட கேள்விகள், சொன்ன சொற்கள், பேசிய பேச்சுக்கள் என்னால் ஜீரணிக்க முடியாதவை. என் மனதறிந்து நான் பொய்யே சொன்னதில்லை. அதற்குறிய தேவையோ அவசியமோ எனக்கு ஏற்பட்டதில்லை. ஆனால் ஒருவர் 'நான் ஒரு பொய்யன்' என்று சொல்லிவிட்டார். அவர் சொல்வது உண்மையில்லை என்று நிரூபிப்பதற்கு என்னிடம் ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால், அதை கேட்கும் நிலையில் அவர் இல்லை. எனக்கும் நிரூப்பிக்க பிடிக்கவில்லை.

திமுக தலைவர் கலைஞர் ஒரு முறை சொன்னது நினைவிற்கு வருகிறது. ஒரு முறை ஒரு அரசியல்வாதி அவரை கண்டபடி விமர்சித்துவிட்டார். அந்த நபர் திமுகவிலிருந்து வெளியேறி வேறு கட்சிக்கு சென்றவர். நிருபர்கள் கலைஞரிடம் அவர் விமர்சித்ததை பற்றி கேட்டார்கள், அதற்கு கலைஞர் அவர்கள் இப்படி பதில் சொன்னார்,

"இன்று அவர் என்னை விமர்சிப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர் என்னுடன் இருந்தபோது என்னைப் பற்றி பேசிய நல்ல விசயங்களை பற்றி மட்டுமே நான் நினைத்து சந்தோசப்படுகிறேன்"

நானும் அப்படித்தான். அவர் இதுவரை எனக்கு செய்த நல்லவைகளை மட்டுமே நினைத்துக்கொள்கிறேன். ஆனால் அவர் உதிர்த்த சில சொற்கள் என்னை சுற்றி சுற்றி வந்து கொல்கின்றன. நாம் உயிருக்கு உயிராக ஒருவரை காதலிக்கிறோம். ஆனால் கல்யாணம் செய்து கொள்ள நினைக்கையில் ஏதாவது ஒரு காரணத்தை, அதாவது நம்மை அவமானப் படுத்தும் ஒரு காரணத்தை சொல்லி வேறு ஒருவரை கல்யாணம் செய்து கொண்டால் எப்படிப்பட்ட மன நிலையில் நாம் இருப்போம். அதே போன்ற ஒரு மனநிலையில் நான் இருக்கிறேன்.

பல இரவுகள் சிந்தித்து இந்த நிலைக்கான காரணம் என்ன என்று அறிந்து கொள்ள முயன்றேன். முடிவில் விடையையும் தேடிக் கண்டுபிடித்து விட்டேன். நான் எல்லோரிடமும் மிக வெளிப்படையாக பேசுபவன். எதையும் மனதில் வைத்துக்கொள்ள மாட்டேன். பட் பட் என்று மனதில் பட்டதை சொல்லிவிடுவேன். அதுவே பல சமயங்களில் பிரச்சனையில் கொண்டு வந்து விட்டுவிடுகிறது.

நாம் எல்லோருமே நல்லவர்கள் என்று நினைத்து எல்லாவற்றையும் பேசுகிறோம். ஆனால் ஒரு சிலர் நம் மேல் பொறாமை கொண்டவர்கள் சமயம் பார்த்து ஏதாவது நம்மைப் பற்றி நமக்கு வேண்டியவர்களிடம் ஏதாவது சொல்லிவிடுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் அதை உடனே விசாரிப்பதில்லை. உடனே நம் மேல் கோபம் கொள்கிறார்கள், நீங்கள் கேட்கலாம், நீங்கள் ஏன் உங்களை மாற்றிக்கொள்ளக் கூடாது? சொல்வது சுலபம். நம் இயல்பை ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் மாற்றிக்கொள்வது மிகவும் கஷ்டம்.

எனக்கு இன்னொரு பிரச்சனையும் சிறு வயதிலிருந்தே இருக்கிறது. என்னிடம் பழகும் அனைவரும் நன்றாக பழகிவிடுவார்கள். நண்பர்களில் இரண்டு பிரிவு இருந்தால், அவரிடம் நெருக்கமாக இருந்தால் இவருக்கு பிடிக்காது. இவரிடம் நெருக்கமாக இருந்தால் அவருக்கு பிடிக்காது. எனக்கோ இருவரையும் பிடிக்கும். நான் என்ன செய்ய?

ஒவ்வொரு முறை அவமானங்களை சந்திக்கும் போதுதான் நான் முன்னேறுகிறேன். அந்த வகையில் இந்த முறையும் இன்னும் நான் முன்னேறுவேன்.

"உன்னால் முடியாது. நீ இவ்வளவுதான்" என்று யாராவது சொன்னால் அதை முறியடித்து சாதித்துக்காட்டுவதுதான் என் வழக்கம். இப்போதும் அதே போல் ஒரு சந்தர்ப்பம் வந்திருக்கிறது. சாதித்துக் காட்டுவேன்.

ஆனால் வாழ்க்கையில் ஒரு விசயத்தை நன்றாக புரிந்து கொண்டேன். நாம் அதீதமாக அன்பு வைத்திருக்கும் ஒருவர், அதே போல் நம்மீதும் அன்பு வைத்திருக்கிறார் என்று நினைப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்து கொண்டேன்.

"வாழ்க்கையில் யார் மேலும் அளவுக்கு அதிகமாக அன்பு வைக்கக்கூடாது. எதன் மேலும் ரொம்ப ஈடுப்பாட்டோடு இருக்கக்கூடாது. வாழ்க்கையை அதன் போக்கில் விட்டு நியாயமாக வாழ வேண்டும்" என்பதையும் புரிந்து கொண்டேன். 

இதுவரை பொய் பேசியதில்லை. இனியும் பேசக்கூடாது என்றும் முடிவு எடுத்துவிட்டேன். 

இனி என் குடும்பத்தின் மீதும், என் மீதும் மட்டுமே அதிக அன்பு காட்ட வேண்டும் என்றும், என் குடும்பத்தின் மீதும் என் மீதும் மட்டுமே அதிக ஈடுபாடு காட்ட வேண்டும் என்றும் முடிவு செய்துவிட்டேன்.

(என் மனதில் இருந்த 15 நாள் பிரச்சனையை உங்களிடம் இறக்கிவிட்ட பிறகு நிம்மதியாக உணர்கிறேன். இனி தொடர்ந்து எழுதுவேன்)