Jul 29, 2011

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1


திடீரென விழிப்பு வந்து மணியைப் பார்த்தேன். இரவு இரண்டு மணி. தூக்கம் கலைந்துவிட்டது. உடம்பெல்லாம் வலிக்க ஆரம்பித்தது. கடந்த இரண்டு வாரமாக இப்படித்தான் இருக்கிறது. அதுவும் இடுப்புக்கு கீழே அதிக வலி. பாத்ரூம் போக வேண்டும் போல இருந்தது. ஆனால் எழுந்திருக்க முடியவில்லை. எப்படியாவது போய்த்தான் ஆக வேண்டும். தள்ளிப்போட முடியாது. பின் அடி வயிறு வலிக்க ஆரம்பித்துவிடும். பக்கத்தில் திரும்பி பார்த்தேன். ஹேமாவை காணவில்லை. நான் தூங்கியதும் அவள் போயிருப்பாள். அவள் என்ன தாலிக்கட்டிய மனைவியா என்ன என் கூடவே இருப்பதற்கு? அடுத்தவனின் மனைவிதானே? இப்ப்டி யாருமற்ற அநாதையாகிப்போன என்னை நினைத்து வெறுப்புத்தான் வருகிறது. நான் செய்வது எல்லாம் தவறு என்று எனக்கு நன்றாக தெரிகிறது. தெரிந்தும் தினமும் அந்த தவறை செய்துகொண்டுதானிருக்கிறேன்.  'இது எல்லாம் தவறு' என்று எப்போது மனம் நினைக்கிறது, தெரியுமா? எல்லாம் முடிந்த பிறகுதான். ஆனால் இரவு ஆரம்பிக்கும் போது...?  

எழுந்தேன். அப்படியே மெதுவாக பாத்ரூமை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். காலில் ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று பார்த்தேன். ஹேமாவின் உள்ளாடைகளில் ஒன்று கீழே கிடந்தது. இதைக்கூட எடுத்துக் கொண்டு போக முடியாத அளவிற்கு அவளுக்கு என்ன அவசரம் இருந்திருக்கும்? காலையில் கேட்க வேண்டும். அப்படியே காலால் அதை ஒதுக்கி படுக்கையின் கீழே தள்ளிவிட்டு பாத்ரூமை நோக்கி சென்றேன். நடக்க முடியவில்லை. மனம் பதட்டப் பட ஆரம்பித்தது. என்னவோ கெடுதல் நடக்கப் போகிறது. எனக்கு என்னவோ ஆகப் போகிறது. தட்டுத்தடுமாறி உள்ளே சென்றேன். கதவை அடைக்க கூட நேரம் இல்லை. உடனே டாய்லெட்டில் யூரின் போக முயற்சித்தேன். பயங்கர வலி. எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒரு சொட்டுக்கூட வரவில்லை. இது போல் ஒரு வலியை என் ஜென்மத்தில் நான் உணர்ந்ததில்லை. போன வாரமும் இதே போல் ஒரு முறை வலி வந்தது நினைவுக்கு வந்தது. அப்போது நான் கத்திய கத்தலில் ஓடி வந்து என்னை ஆஸ்பத்திரிக்கு திவாகர்தான் கூட்டிப் போனான். என்னென்னவோ டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்தார்கள். இன்னும் ரிசல்ட் வரவில்லை. இன்று காலையில்தான் போய் வாங்க வேண்டும்.

ஒரு பக்கம் வலி உயிர் போகிறது. இன்னொரு பக்கம் இப்படிப்பட்ட சிந்தனை வருகிறது. வலி தாங்க முடியாமல் அப்படியே கீழே குனிந்தேன். பார்த்தேன். அங்கே என்ன சிகப்பா......? ஐய்யோ! என்ன இது யூரின் போகும் இடத்தில் ரத்தமா..................

***************************************************

யார் யார் பேச்சுக்குரலோ காதின் ஓரத்தில் கேட்பது போல் இருந்தது. மெல்ல கண் திறந்து பார்த்தேன். மங்கலாக எல்லாம் தெரிந்தது. நன்றாக உற்றுப்பார்த்ததில் பக்கத்தில் ஹேமா, திவாகர் எல்லாம் நிற்பது தெரிந்தது. நான் எங்கே இருக்கிறேன்? ஒரே குழப்பமான மனநிலையில் திவாகரை நோக்கி சைகையால் கேட்டேன்.

"கவலைப்படாத குரு. எல்லாம் சரியாகிடும். ஒண்ணும் இல்லை. நேத்து உனக்கு சாப்பாட்டு குடுக்க ஹேமா வந்தாளாமே? அப்போ என்னவோ உங்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டாளாம். அதை எடுக்க வீட்டுக்கு வந்துருக்கா. அப்போ நீ பாத்ரூம்ல மயக்கமா கிடந்தியாம். நான் நைட் ஷிப்ட்ல கமபனில இருந்தேன். உடனே எனக்கு போன் பண்ணி வரச்சொன்னா.. நானும் ஹேமாவும்தான் உன்னை ஆஸ்பத்திரில சேர்த்தோம். ஏற்கனவே டாக்டர் எல்லா செக்கப்பும் பண்ணிட்டார். ஏதாவது யூரினல் இன்பெக்ஷனா இருக்கும்னு சொன்னார். நீ ஒண்ணும் கவலைப்படாத. நான் போய் மாத்திரை மருந்தெல்லாம் வாங்கி வரேன். அதுவரை ஹேமா இங்க இருந்து உன்னை கவனிச்சிப்பா"

நான் ஒன்றும் பேசாமல் கண்களில் நீர் வழிய என் இரண்டு கைகளால் அவனை கும்பிட்டேன். 

"சே சே என்ன குரு, இதுக்கு எல்லாம் போய் அழுதிட்டு.. நான் உன் நெருங்கிய நண்பன். நீ எனக்கு எவ்வளவு பண்ணியிருக்க, உனக்கு இந்த உதவி கூட நான் செய்யலைனா எப்படி" என்று சொல்லிவிட்டு என் பதிலை கூட எதிர்பார்க்காமல் அங்கிருந்து கிளம்பியவனை ஆச்சர்யத்துடன் பார்த்தேன். 

"எப்படி இவனால் இப்படி இருக்க முடிகிறது"

திரும்பி ஹேமாவை பார்த்தேன். நேற்று இரவு உடுத்தியிருந்தே அதே உடை. கண்கள் கொஞ்சம் கலங்கி இருந்தது போல் இருந்தது. ஆனால் முகத்தில் அதே வசீகரம். மெருன் கலர் சுடிதாரில் அந்த களைப்பிலும் தகதகவென இருந்தாள். பேச முடியாமல் ஆஸ்பத்திரியில் படுத்திருக்கும் போது இப்படி எல்லாம் நினைக்க என்னால் மட்டுமே முடியும் என நினைக்கிறேன். அப்படி எப்பவும் நினைத்ததன் விளைவுதானே இன்று ஆஸ்பத்திரியில் படுத்திருக்கிறேன்.

சுற்றும் முற்றும் பார்த்த ஹேமா அந்த அறையில் யாரும் இல்லை என்றவுடன் அருகில் வந்து என் நெற்றியில் செல்லமாக முத்தமிட்டாள். அந்த முத்தத்தில் காமம் இல்லை. கருணை, அன்பு, தாய்மை அனைத்தும் கலந்த முத்தம். இன்னும் எத்தனை நாளைக்கு இது நிலைக்கும் என்ற எண்ணமே என்னை நிலை குலைய செய்தது. என் சிந்தனையை கலைக்கும் விதமாக ஹேமாதான் பேசினாள்,

"ஏம்பா அழற? அதான் நான் இருக்கேன் இல்லை. கவலைப்படாம இரு. எல்லாம் சரியாகிவிடும். நான் உன் கூடவே இருந்து பார்த்துப்பேன். கடைசிவரை பார்த்துப்பேன். என் உயிர் உள்ளவரை பார்த்துப்பேன்" என்று சொன்னவளின் கண்கள் கலங்குவதை பார்த்து அவள் கண்களை துடைக்கப்போனவன், கைகளை தூக்க தெம்பில்லாமல் அப்படியே கிடந்தேன்.

"ஆனா கஷ்டத்துலயும் ஒரு நல்லது நடந்துருக்குப்பா. நேற்று ராத்திரி நான் எவ்வளவோ தடுத்தும் நீ கேட்காம எல்லாத் துணியையும் உருவி போட்டதும் ஒரு விதத்துல நல்லதா போச்சு. வீட்டுக்கு போனவ, நினைப்பு வந்து உன் ரூமுக்கு வந்து எடுத்துட்டு போகலாம்னு வந்தா நீ மயங்கி கிடக்குற. நல்ல வேளை உடனே ஆஸ்பத்திரில வந்து சேர்த்து உன்னை காப்பாத்திட்டோம். அதனால் இனிமே எல்லாத்தையும் அவுக்க சொன்னா நீ கேட்காம நானே அவுத்துடுவேன்"

என்னவோ அப்போதிருந்த அந்த மனநிலையில் அவளின் பேச்சை என்னால் ரசிக்க முடியவில்லை.

மீண்டும் அங்கே வலி. யூரின் போக வேண்டும் போல இருந்தது. என்னால் எழுந்திருக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியவில்லை. ஹேமாவை பார்த்தேன். அநேகமாக அவள் புரிந்து கொண்டாள் போல இருந்தது. நேராக அருகில் இருந்த பெட் பேனை எடுத்து என் டிரஸை அவிழ்த்து.. அப்படியே அதை கையில் எடுத்து...... அதில் வைத்து... கொஞ்சம் கொஞ்சமாக யூரின் வர ஆரம்பித்தது. அப்படியே ஹேமாவின் முகத்தை பார்த்தேன். என்னால் அவளின் எந்த உணர்வையும் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் செய்யும் வேலையிலேயே கவனமாக இருப்பது தெரிந்தது. 

ஒரு தாய் போல் என்னை கவனிக்கும் இவளையா போய் நேற்று.... நினைக்கும் போதே என் மேல் வெறுப்பு வந்தது. ஆனால் இதற்கு நான் மட்டும் காரணமில்லையே?

யாரோ வருவது போல இருந்தது. மெல்ல எட்டிப் பார்த்தேன். திவாகர்தான் மருந்தோடு வந்து கொண்டிருந்தான். என்னால் தான் அவனுக்கு எவ்வளவு கஷ்டம்?

"என்ன குரு இப்ப பரவாயில்லையா?''

"ம்ம்" என்று தலையாட்டினேன்.

அப்போது ஒரு சிறு சலசலப்பு கேட்டது. உள்ளே டாக்டர் வந்து கொண்டிருந்தார், கூடவே இரண்டு நர்ஸ்கள். இரண்டு இளம் டாக்டர்கள். அங்கு உள்ள ஷீட்டை பார்த்தார்கள். என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். திடீரேன டாக்டர் கேட்டார்,

"இங்க யாரு இவரை சேர்த்தது?"

"நான் தான்" என்றான் திவாகர்.

"நீங்க இவருக்கு என்ன வேணும்?"

"பிரண்ட் டாக்டர்"

"நீங்கம்மா"

"நானும் இவரின் தோழிதான் டாக்டர்"

"இவங்க உறவினர்கள் யாரும் வரலியா?"

"இல்லை டாக்டர்"

"ஒண்ணும் இல்லை, மேற்கொண்டு என்ன மாத்திரை கொடுக்கலாம்னு பேசணும்.. உங்க பேர் என்ன சொன்னீங்க?"

"திவாகர்"

"நீங்க என் கூட வாங்க. நீங்க இந்த மருந்தெல்லாம் உடனே குடுங்கம்மா" என்று ஹேமாவிடம் சொல்லிவிட்டு திவாகரை கூட்டிக்கொண்டு போகும் டாக்டரை கவலையுடன் பார்த்தேன்.

****************************************

யாரோ அழும் சத்தம் கேட்டது. லேசாக முழிப்பு வந்தது. கண்ணை திறந்து பார்த்தேன். ஹேமா அழுது கொண்டிருந்தாள்.

"உண்மையாகவா, உண்மையாகவா?" என்று திவாகரிடம் கேட்டுக்கொண்டிருந்தாள்.

"ஆமாம்"

"அப்படி என்ன வியாதி?"

"அதை எப்படி சொல்வேன்"

"சொல்லுங்க"

"கேன்ஸர்"

"அய்யோ அப்படியா? என்ன கேன்ஸர்? எங்க?"

"உன்கிட்ட சொல்ல முடியாத, பெண்கள் யாருட்டயும் சொல்ல முடியாத இடத்துல"

- தொடரும்

1 comment:

iniyavan said...

நண்பர்களுக்கு,

முதல் அத்தியாயத்தை படித்துவிட்டு யாரும் கோபம் கொள்ள வேண்டாம். கதை போக போக வேறு தளத்தில் பயணிக்கும்.