Jul 20, 2011

ஆச்சர்யமான சந்தோசம்!

இந்த அவசர உலகத்தில் ஒருவர் செய்த நல்ல செயல்களை இன்னொருவர் பாராட்டுவது என்பது அரிதான ஒரு விசயமாகிவிட்டது. பணம் பொருள் கொடுக்கும் சந்தோசத்தைவிட ஒருவர் பாராட்டினால் கிடைக்கும் சந்தோசம் அளவிட முடியாதது. என் பள்ளிக்காலங்களில் என் தமிழ் ஐய்யா, மாணவர்கள் மனப்பாட செய்யுளை சொல்லும் போது, என்ன தவறு இருந்தாலும் கண்டிக்கவே மாட்டார். ஒரு வரி சொன்னால் கூட அப்படி பாராட்டுவார். "பரவாயில்லையே அருமையா சொல்லறியே! இன்னும் மூன்றே வரிகள் தான் இருக்கு, நாளைக்கு சொல்லறியா?" என்பார். மாணவர்கள் அவருக்காகவே நன்றாக படிக்க ஆரம்பித்தார்கள்.

அலுவலகங்களில் கூட நம் கீழே வேலை பார்ப்பவர்களை அவர்கள் செய்யும் தவறுக்கு அவர்களை திட்டுவதை விட, அவர்கள் செய்த நல்லவைகளை பாராட்டி, தவறு செய்யும் போது சாந்தமாக எடுத்து சொன்னால், மிகவும் அக்கரையுடன் வேலை செய்வார்கள், இது நான் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. அதை விட்டு எப்போதும் திட்டிக்கொண்டே இருந்தோமானால், நாம் எதிர்பார்க்க்கும் அளவிற்கு அவர்களிடம் இருந்து உழைப்பை வாங்க முடியாது. 

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால்...... கீழே உள்ளதை படியுங்கள், புரியும். இது கொஞ்சம் சுய தம்பட்டமாக இருக்கலாம். இருந்தாலும் பொறுத்துக்கொள்ளுங்கள்.

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு காலை. நான் பூஜை அறையில் தியானம் செய்து கொண்டிருந்தேன். என்னுடைய அலைபேசி தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. பொதுவாக என் அலைபேசி அழைப்புகளை என் வீட்டில் உள்ளவர்கள் யாரும் எடுக்க மாட்டார்கள். அன்றும் அவர்கள் யாரும் எடுக்கவில்லை. நான் என்னதான் தியானத்தில் இருந்தாலும் அலைபேசியின் சத்தம் என் காதில் ஒலித்துக்கொண்டுதான் இருந்தது.

பூஜை அறையில் இருந்து வந்தவுடன் யாராக இருக்கும் என்று பார்த்தேன். லண்டனில் இருந்து மூன்று மிஸ்கால்கள் வந்திருந்தது. லண்டனில் எங்கள் நிறுவனத்தின் ஏஜெண்ட் நம்பரோ என்று நினைத்து பார்த்தேன். ஆனால், இது வேறு ஏதோ புது நம்பர். பொதுவாக தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால், போனை எடுக்கும் முன் பல முறை யோசிப்பேன். காரணம் நிறைய அழைப்புகள் கம்பனியின் இன்வெஸ்ட்மெண்டை பற்றியோ அல்லது உங்களுக்கு லாட்டரி விழுந்துள்ளது என்பது போன்ற அழைப்புகளாக இருக்கும். அதனால், பலத்த யோசனைக்குப் பின், "நீங்கள் யார் என்று தெரிந்து கொள்ளலாமா?" என் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

உடனே பதில் வந்தது, "உங்களுடன் பேச வேண்டும். எப்போது ஓய்வாக இருப்பீர்கள்?"

உடனே நான், "பேசலாம். நீங்கள் யார் என்று சொல்லுங்கள்?" என்று இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். பதில் இல்லை.

நானும் அலுவலகம் வந்து விட்டேன். பின்பு "Un Known Number" என்று இரண்டு அழைப்புகள் வந்தன. உடனே நான் அதே நம்பருக்கு, "நீங்கள் இப்போது அழைத்தீர்களா?" என் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.

(Un Known Numberல் இருந்து வந்த அழைப்பு பாஸ்டன் ஸ்ரீராம் வீட்டு எண் என்பதை பின்பு அவரின் மெயில் மூலம் தெரிந்து கொண்டேன்)

என் குறுஞ்செய்தியை பார்த்தவுடன் அவர் என்னை அழைத்தார். தன் பெயரை அறிமுகப் படுத்திக்கொண்டார். அவருக்கு தமிழ் படிக்கத் தெரியுமாம். ஆனால், சரியாக பேச வரவில்லை. விசயம் இதுதான். அவர் லண்டனில் வசிப்பவர். சென்னை சென்று விட்டு லண்டன் வந்திருக்கிறார். சென்னையை விட்டு கிளம்பும்போது என்னுடைய இரண்டு புத்தகங்களை வாங்கியுள்ளார். லண்டன் போய் சேர்ந்தவுடன் உடனே படிக்க ஆரம்பித்தாராம். ரொம்ப பிடித்துப் போகவே உடனே பாராட்ட வேண்டும் என்று தோன்றியதாம். புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையையும் பாராட்டினார்.

பின்பு, சில அறிவுரைகளை வழங்கினார். 

"உன் வாழ்க்கையில் நடந்தவைகளையும், நீ முன்னேறிய கதைகளையும் சொல்லி இருக்கிறாய். பாராட்டுக்கள். உன்னை வளர்த்து ஆளாக்கிய இந்த சமுதாயத்திற்கும், இந்த உலகத்திற்கும் என்ன செய்திருக்கிறாய்?" என்று கேட்டார். என்னிடம் பதில் இல்லை.

உடனே விவேகானந்தரை பற்றி பேசினார். சில குறிப்புகளைக் கொடுத்தார். 

"நீ எழுதும் புத்தகங்கள் உன் காலத்திற்கு பிறகும் மற்றவர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்" என்று கூறினார்.

இப்படியாக எங்கள் பேச்சு ஒரு அரை மணி நேரம் ஓடியது. 

இதில் என்ன சந்தோசம் இருக்கிறது? என்று நீங்கள் கேட்கலாம். இருக்கிறது. நம்மை அறிந்தவர்கள், நெருங்கிய நண்பர்கள் யாரும் பாராட்ட மாட்டார்கள். ஒரே துறையை சேர்ந்தவர்களாக இருந்தாலும், யாரும் யாரையும் அவ்வளவு சுலபமாக பாராட்டுவதில்லை. அவரவர்களைப் பொருத்தவரை அவர்கள்தான் சிறந்தவர்கள். இதுதான் எல்லா இடங்களிலும் நடக்கிறது. 

ஆனால் முகம் தெரியாத யாரோ ஒருவர் அதுவும் வெளிநாட்டிலிருந்து அழைத்து நாம் எழுதிய ஒவ்வொரு கட்டுரையையும் சிலாகித்து பேசும்போது சந்தோசம் வருமா? வராதா?

இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் என்னவென்றால், என்னை அழைத்து பேசியவரின் வயது 68. 

அவர் என் புத்தகத்தைப் படித்து முடித்த போது இரவு 1 மணி. உடனே இரவு 1 மணிக்கே என்னை அழைத்து பேச முயற்சித்து, நான் எடுக்காமல் போகவே, பிறகு இரவு 2 மணிக்கு அழைத்து பேசி இருக்கிறார்.

அன்று முழுவதும் நான் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. அவரைப் போன்ற நல்ல உள்ளங்களுக்காகவாவது தொடர்ந்து ஏதாவது நல்ல விசயங்களை எழுத வேண்டும்.

ம்ம்... பார்ப்போம்!7 comments:

இராஜராஜேஸ்வரி said...

உலகை உணர வைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

சென்னைத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...

arumai.

Anonymous said...

உங்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கி படித்து விட்டு எழுதுகிறேன்.இரவு 2 மணிக்கு விமர்சனம் செய்த பெரியவரின் ரசனை வணங்க தக்கது

iniyavan said...

//இராஜராஜேஸ்வரி said...
உலகை உணர வைத்த அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்//

வருகைக்கு நன்றி மேடம்.

iniyavan said...

சென்னைத் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் said...
arumai.

நன்றி

iniyavan said...

//ஆர்.கே.சதீஷ்குமார் said...
உங்கள் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்திவிட்டது.ஆன்லைனில் ஆர்டர் கொடுத்து வாங்கி படித்து விட்டு எழுதுகிறேன்.இரவு 2 மணிக்கு விமர்சனம் செய்த பெரியவரின் ரசனை வணங்க தக்கது//

வருகைக்கும் அன்பிற்கும் நன்றி சதீஷ்

அன்புடன் அருணா said...

அட! பூங்கொத்து!