என்னுடைய வாழ்வில் இது வரை நான் சந்தித்துள்ள பலவிதமான பிரச்சனைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன். இப்பொழுது நான் இருக்கும் மனநிலையில், என் மனதில் தோன்றும் உணர்வுகளை அப்படியே பதிவு செய்து வைத்துக்கொள்ள விரும்புகிறேன். அதனால் இதையும்... வெறு வழியில்லை. படித்துவிடுங்கள்.....
ஒரு மாதத்திற்கு முன் முறைப்படி ஒப்புதல் பெற்று இந்தியா செல்ல முடிவு எடுத்து டிக்கட் புக் செய்தேன். இந்த முறை நான் திருச்சி செல்வது கீழே நான் குறிப்பிட்டுள்ள மிக முக்கியமான நிகழ்வுகளுக்காக:.
01. எங்கள் கல்லூரியில் பிகாம் இரண்டு வகுப்புகள். மொத்தம் 150 பேர் படித்தோம். அதில் ஒரு 100 பேர் வரை யாகூ குழுமத்தின் மூலம் தொடர்பில் இருக்கிறோம். ஒரு வருடத்திற்கு முன் சரியாக திட்டமிட்டு, வரும் 13 மற்றும் 14 ஆம் தேதி எல்லோரும் எங்கள் கல்லூரியில் மீட் செய்வதாக முடிவு எடுத்து, அனைத்து வேலைகளையும் செய்து விட்டோம். கிட்டத்தட்ட 70 பேர் வரை வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார்கள். பல ப்ரோக்ராம்கள் எங்கள் திட்டத்தில் உள்ளன.
02. என் அம்மா 80 வயதை தாண்டிவிட்டார். அம்மாவிற்கு மனத்தில் இருக்கும் தெம்பு உடம்பில் இல்லை. என்னால் அருகில் இருந்து கவனித்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஆறு மாதத்திற்கு ஒரு முறை சென்று சில நாட்கள் அவருடன் இருக்க ஆசை.
03. வீட்டில் ஒரு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.
04. நான் இல்லாமலேயே ஒரு வருடங்களாக என் வீடுகளை இன்சினியர் கட்டிக்கொண்டிருக்கிறார். எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும்.
05. பிள்ளைகளுக்கு ஒரு மாதம் பள்ளி விடுமுறை.
நேற்று மதியம் லக்கேஜ் எல்லாம் பேக் செய்தாகிவிட்டது. மதியம் சாப்பிட வீட்டிற்கு சென்றேன். அனைவரிடமும், "ஆபிஸ் சென்று விட்டு சில வேலைகளை முடித்துவிட்டு, சரியாக ஆறு மணிக்கு வீட்டிற்கு வருகிறேன். கிளம்பி ரெடியாக இருங்கள். டாக்ஸி வந்தவுடன் ஏர்போர்ட் செல்லலாம்" என்று சொல்லிவிட்டு வந்தேன்.
அலுவலகம் வரும் வழியிலேயே ஏகப்பட்ட போன் கால்கள். கார் ஓட்டும் போது நான் போன் பேசுவதில்லை. அதுவும் இல்லாமல் டிராபிக் வேறு. அலுவலகம் வந்தவுடம் தொடர்பு கொண்டேன்.
நான் யாரிடம் பேசினேன், அவர் என்னிடம் என்ன பேசினார் என்பதை விட்டுவிடுவோம்.
இந்த நிமிடம் விமானத்தில் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருக்க வேண்டிய நான் இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறேன். என்ன காரணம்? பணம்.
போன் வந்ததற்கும், நான் பேசியதற்கும், நான் இப்போது போகாமல் இதை எழுதிக்கொண்டிருப்பதற்கும் முக்கியமான காரணம் பணத்தேவை. முக்கியமான பணத்தேவையில் சிக்கிக்கொண்டுள்ளோம்.
எல்லா ஏற்பாடும் ஒரு வாரத்திற்கு முன்பே செய்தாகிவிட்டது. இப்போது எல்லாவற்றையும் கேன்சல் செய்தாக வேண்டும்.
டிக்கட்டை கேன்சல் செய்ய முடியவில்லை. நான்கு டிக்கட் பணம் மொத்தமும் போயிற்று.
எப்படி வீட்டிற்கு சென்று, ரெடியாக கிளம்பி இருக்கும் மனைவியிடமும், குழந்தைகளிடமும் சொல்வது என்ற குழப்பத்தில் வீட்டிற்கே செல்லாமல் கம்பனியிலேயே அதிக நேரம் இருந்தேன். வீட்டிலிருந்து தொலைப்பேசி அழைப்புகள் தொடர்ந்து வரவே வீட்டிற்கு சென்றேன். நான் எப்படி அவர்களிடம் சொன்னேன், அதற்கு அவர்கள் என்ன ரியாக்ஷன் காட்டி இருப்பார்கள் என்பதையும் உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
என்னை சுட்டுவிடுவது போல் பார்க்கிறார்கள். அவர்களை மட்டும் அனுப்பலாமா என்று யோசித்து முடிவு எடுக்கையில் வேறு சில காரணங்களால் கடைசி நேரத்தில் அனுப்ப முடியவில்லை.
எனக்கு இங்கு உள்ள பிரச்சனை தீர்ந்து நான் திரும்ப ஊருக்கு செல்ல இன்னும் ஆறு மாதம் ஆகலாம். அதுவரை என் அம்மாவிற்கு எதுவும் ஆகாமல் இருக்க வேண்டும். அவர்கள் நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும்.
சில நண்பர்கள் அடிக்கடி சொல்வதுண்டு, "உனக்கென்ன மலேசியாவில் இருக்கிறாய். நிறைய சம்பாதிக்கிறாய். சந்தோசமாய் இருக்கிறாய்" என்று.
அதில் சிறிதளவே உண்மை. நான் மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் திருச்சியில் வேலைப் பார்த்தேன். அப்போது அடைந்த சந்தோசம் அளவிடமுடியாதது.
சரி, அம்மாவை ஆறு மாதம் கழித்தோ அல்லது இடைப்பட்ட காலத்திலோ பார்த்துவிடலாம். ஆனால், பல நாடுகளிலிருந்து வரும் என் வகுப்புத் தோழர்களை இனி மற்றொரு நாளில் நான் பார்க்க முடியுமா?
இதற்கெல்லாம் என்ன காரணம்? பணம். இன்னும் நான் இங்கே ஒட்டிக்கொண்டிருப்பதற்கு என்ன காரணம்? பணம். இன்று எனக்கு இருக்கும் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? பணம்.
ஆண்கள் அழ மாட்டார்கள் என்று யார் சொன்னது. இதோ இதை எழுதிக்கொண்டிருக்கையில் என் கண்கள் கலங்குகிறதே?
அதனால் நண்பர்களே, இன்றிலிருந்து இட்லி, தோசை மற்றும் சாதம் சாப்பிடப்போவதில்லை.
எல்லாவற்றிகும் காரணமான பணத்தை சாப்பிட போகிறேன்.
அப்படியாவது புத்தி வரட்டும்.
எனக்கு!