Aug 5, 2011

ராஜன்...எனக்கு எதுல நம்பிக்கை இருக்கோ இல்லையோ விதி மேல அதிக நம்பிக்கை இருக்கு. எல்லாம் விதிப்படிதான் நடக்குமா என உங்களுக்கு சந்தேகம் வரலாம். அப்படி சந்தேகம் உங்களுக்கு இருக்குமானால் நீங்கள் இதை அவசியம் படிக்க வேண்டும்.

என் பெயர் பிரசாத். வீட்டிற்கு ஒரே ஆண் பிள்ளை. அப்பா கண்டிப்பானவர் ஆனால் அதே சமயம் அதிக செல்லமும் கொடுப்பார். அதனால் தானோ என்னவோ பாருங்கள், எனக்கு படிப்பு மட்டும் வரவே இல்லை. அப்பாவும் என்னவெல்லாமோ செய்து பார்த்தார். எங்கெல்லாமோ சேர்த்து பார்த்தார்,ம்ம். ஒன்றும் பிரோசனமில்லை. கடைசியில் யாரோ சொன்னார்கள் என்று ஒரு கிறிஸ்டியன் பள்ளியில் சேர்த்துவிட்டார். அங்கே எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுவதைப் பார்த்து மிரண்டு போய் ஒரு வாரம் பள்ளிக்கு செல்லாமல் அடம்பிடித்ததை எல்லாம் விலாவாரியாக உங்களிடம் சொல்லி போரடிக்க விரும்பவில்லை. நான் சொல்ல வந்த விசயமே வேறு. அது ராஜனைப் பற்றியது. ராஜன் எங்கள் வகுப்பில் பிரபலமானவன். 'கிராமத்தான் நன்றாக படிக்காதவன்' என்று என்னைப்பார்த்து எல்லோரும் ஒதுங்கிப் போகும்போது அவன் ஒருவன் மட்டுமே என்னிடம் நன்றாக பழக ஆரம்பித்தான். நன்றாக படிப்பான். அழகாகவேறு இருப்பான். அவனுக்கு அப்போதே நிறைய பெண்கள் நண்பர்களாய் இருந்தார்கள்.

ஆனால் அவன் காதலித்தது சுதாவை. சுதா எங்கள் பள்ளிக்கு அருகில் உள்ள பெண்கள் பள்ளியில் படித்தாள். ராஜனும், சுதாவும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாக ஒரே வகுப்பில் படித்தவர்கள். இருவரும் உயிருக்கு உயிராய் காதலித்தார்கள். அவர்களின் காதலைப்பற்றிய அனைத்தையும் என்னிடம் சொல்வான். அந்த வயதில் எனக்கோ ஒரே வெறுப்பாக இருக்கும். நமக்கோ ஒரு கேர்ள் பிரண்ட் இல்லை. இவனுக்கு நிறைய கேர்ள் பிரண்ட். அதிலும் காதலிப்பதோ ஒரு அழகு தேவதையை. அந்த மாதிரி கடுப்பாக இருந்த ஒரு நாள் மாலையில் ராஜன்,

"பிரசாந்த், இன்னைக்கு சாயந்தரம் சினிமா போகலாமா? உனக்கும் சேர்த்து டிக்கட் புக் செய்யட்டுமா?" என்றான்.

"சரி" என்றேன் நான்.

பள்ளி முடிந்ததும் தியேட்டருக்கு சென்றோம். பார்த்தால், சுதா அங்கே இருக்கிறாள். நான் அதுவரை போட்டோவில் மட்டுமே பார்த்திருக்கிறேன். முதல் முறையாக நேரில் பார்த்தேன். அவள் அழகை எப்படி வர்ணிப்பது என்று தெரியவில்லை. அவள் அழகை வர்ணிக்க ஆரம்பித்தால், நிறைய நேரம் செலவாகும். அப்புறம் என்னால் கதையை சரியாக கொண்டு சொல்ல முடியாது. அதனால் அவள் எப்படிப்பட்ட அழகு என்பதை படிக்கும் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்களேன்.. ப்ளிஸ்.

படம் ஆரம்பித்தது. முதலில் எல்லாம் சாதாரணமாகத்தான் இருந்தது. கொஞ்ச நேரம் கழித்து அருகே ஏதோ பேசுவது போல் சத்தம் கேட்டது. வேறு என்ன என்னவோ சத்தங்கள் வேறு. திரும்பி அருகில் பார்த்தால், நான் அதை எப்படி சொல்வது? நீங்களும் நான் அவர்கள் செய்ததை வர்ணிப்பேன் என்று அதிகம் எதிர்பார்க்காதீர்கள். நான் ஒரு நல்ல கதை உங்களுக்கு சொல்ல வேண்டும் என்ரு நினைக்கிறேன். செக்ஸ் கதை அல்ல. இருந்தாலும் அவர்கள் நடந்து கொண்ட விதம் ரொம்ப மோசம்.

என்னால் அதிக நேரம் அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. எழுந்து வெளியே சென்று விட்டேன். ஒரு அரை மணி நேரம் சென்று வந்து பார்த்தால்..... அவர்கள் மாறவே இல்லை. பொறாமையுடன் படத்தை பார்த்து முடித்தேன். படம் முடிந்து வெளியே வரும்போது பார்த்தால், அவ்வளவு சாந்தமாக வருகிறார்கள் இருவரும். அதில், "எப்படி மாப்பிள படம்னு" கேள்வி வேற...

இப்படியாக அவர்கள் காதல் வளர்ந்தது.  அவனைப் பற்றி இப்படி சொன்னாலும் எனக்கு ராஜனை ரொம்ப பிடிக்கும். அவனைப் பார்த்துதான் எப்படி உடை அணிவது என்று கற்றுக்கொண்டேன். அவனின் ஆங்கில அறிவு மிகவும் அபாரமானது. அவனைப் பேச சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பேன். ஆனால் அவனுக்கு தமிழில்தான் பதில் சொல்வேன். நன்றாக பாடுவான். கித்தார் வாசிப்பன். ஸ்போர்ட்ஸ் மேன் வேறு.என்னை பொறுத்தவரை அவன் எனக்கு ஒரு ஹீரோ. அவனைப்பார்த்து நிறைய பொறாமை படுவேன்.

ஒரு நாள் காலையில் தமிழ் ஐய்யா வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தார். ராஜன் மெதுவாக,

"டேய் உன்னிடம் ஒரு விசயம் சொல்ல வேண்டும். யாரிடமும் சொல்லக் கூடாது" என்றான்.

"சொல்ல மாட்டேன் சொல்லு" என்றேன்.

"நேற்று இரவு என் வீட்டில் யாரும் இல்லை. மாலையில் சுதாவை வீட்டிற்கு கூப்பிட்டேன். ஒரு வித பயத்துடந்தான் வந்தாள். பேசிக்கொண்டிருந்தோம். பிறகு சாப்பிட்டோம். அதன் பிறகு.."

"அதன் பிறகு?"

"சுதாவை..... மாப்பிள்ள" என்று விலாவாரியக சொல்ல ஆரம்பித்தான். என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. வீணாப்போனவன் ஒரு வரியில் நான் உங்களுக்கு சொன்னது போல் சொல்லலாம் இல்லை. ஒவ்வொண்ணையும் சொல்ல ஆரம்பித்து என் மனசை கெடுத்து எனக்கு தூக்கம் இல்லாம ஆக்கிட்டான்.

நான் அவன்கிட்ட சொன்னது ஒரே ஒரு விசயம்தான், "மாப்பிள்ள ஆனது ஆயிடுச்சு. சுதாவை கை விட்டுடாத. அவள நீதான் கல்யாணம் பண்ணிக்கனும்"

"நிச்சயம் மாப்பிள"

அதன் பிறகு அடிக்கடி ராஜன் வீட்டில் யாரும் இல்லாமல் போனார்கள். 'முடி இருக்கற மகராசி அள்ளி முடியிறா' 'பல்லு இருக்கறவன் பட்டாணி சாப்பிடறான்'  நான் எப்படி தடுக்க முடியும். எனக்கு முடியும் இல்ல, பல்லும் இல்லை.

அப்படியாக அவர்கள் காதல் வளர்ந்த போது எங்கள் பள்ளி வாழ்க்கை முடிந்தது. அவன் அதிக மார்க் வாங்கி பாஸ் செய்தான். நான் தட்டுத்தடுமாறி பாஸ் செய்தேன். அவன் நல்லக் கல்லூரியில் சேர்ந்தான். என் அப்பாவும் அதே கல்லூரியில் ஆளைப் பிடித்து எனக்கும் சீட் வாங்கி விட்டார். ஆனால் என்ன ஒண்ணு, அந்த கல்லூரியில் நன்றாக படிப்பவர்களை ஒரு வகுப்பிலும், என்னைப் போல மக்குகளை இன்னொரு வகுப்புகளிலும் போட்டார்கள்.

தினமும் சந்தித்து பேசுவோம். மூன்று வருடம் கடந்தது. நான் ஜஸ்ட் பாஸ் செய்தேன். அவன் நிறைய மார்க் வாங்கி டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்தான். 

அவன் எப்படியும் ஐ ஐ எம் MBA வோ அல்லது CA வோ படிக்கப் போவதாக சொன்னான். கல்லூரி படிப்பு முடிந்த பிறகு அவனை சந்திக்க முடியவில்லை.

அப்பாவோ "இதெல்லாம் எங்க உருப்பட போவுது என்று திட்டிக்கொண்டிருந்தார்" 

நானோ, "அப்பா எனக்கு விதியின் மேல் நம்பிக்கை இருக்கு. நான் பெரிய ஆளா வருவேன்னு மனசு சொல்லுதும்பேன்"

அவரோ, "உன் விதியை தூக்கி குப்பைல போடு" என்பார். 

பின் அவரே என்னை அவரின் நண்பரின் கம்பனியில் சேர்த்துவிட்டார். சாதாரண கிளார்க் வேலைதான். குறைந்த சம்பளம். அப்போதுதான் கம்ப்யூட்டர் வந்த சமயம். என்னவோ எனக்கு கம்ப்யூட்டரில் அப்படி ஒரு ஆர்வம். ஒரு நாள் கம்பனியின் சாப்ட்வேரில் ஒரு பிரச்சனை. சும்மா அனுபவத்தில் நான் சொன்ன ஒரு சொல்யூஷன், ப்ரோக்ராமை சரி செய்ய உதவியது. அதைக் கேள்விப்பட்ட MD என்னை கம்ப்யூட்டர் செக்ஷ்னுக்கு மாற்றல் செய்தார். வேக வேகமாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன். அப்படியே கம்பனி செலவில் கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் படிக்க ஆரம்பித்தேன். நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். நன்றாக படித்தேன். 

ஒரு ப்ராஜக்ட் விசயமாக எங்கள் டிப்பார்ட்மெண்ட் HOD அமெரிக்கா செல்ல வேண்டும். ரொம்ப முக்கியம். நேரத்துக்கு செல்லாவிட்டால் மிகபெரிய ஆர்டர் கிடைக்காமல் போய்விடும். ஆனால் திடீரென HOD கிளம்ப வேண்டிய தினத்தன்று அவருக்கு உடம்புக்கு முடியாமல் போய்விட்டது. விதி என் வாழ்வில் விளையாட ஆரம்பித்த நாள் அது. MD என்னை போகச் சொன்னார். நானும் துணிந்து அம்மெரிக்கா சென்றேன்.

அதன் பிறகு என் வாழ்வில் நடந்த அனைத்தும் விக்ரமன் சினிமாவில் வருவது போலத்தான். எல்லாம் கிடைத்தது. அழகான மனைவி. பிள்ளைகள். சொத்து. சந்தோசப்பட்ட அப்பா. எல்லாமும் கிடைத்தது. குறை ஒன்றும் இல்லை. அவ்வவ்ப்போது பழைய வாழ்க்கை நினைவுக்கு வரும். என் ஹீரோ ராஜன் நினைவுக்கு வருவான். நிச்சயம் என் வளர்ச்சியை பார்த்து சந்தோசப் படுவான் என நினைத்துக்கொள்வேன். அப்பா பிள்ளைகளுடன் ஒரு முறை சொந்த ஊருக்கு வரச்சொல்லி வற்புறுத்தியதால், ஒரு மாத காலம் லீவ் எடுத்துக்கொண்டு திருச்சி வர முடிவெடுத்தேன்.

இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் திருச்சி ஏர்போர்ட்டில் இருப்பேன். ஒரே சந்தோசம். நீண்ட வருடங்கள் கழித்து திருச்சி வருகிறேன். சென்னையோ, டெல்லியோ அவ்வப்போது வந்துவிட்டு ஓடி விடுவேன். இந்த முறை திருச்சி. சொந்த ஊர்.

இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் முடிந்து வெளியே வந்தேன். டிரைவரைத் தேடினேன். மனைவியும், பிள்ளைகளும் ஆளுக்கு ஒரு லக்கேஜை தூக்கிக்கொண்டு செல்லாம் என நினைக்கையில் ஒரு குரல்...

"சார், நான் லக்கேஜை எடுத்து காரில் வைக்கவா?"

யார் என்று திரும்பி பார்த்தேன்..

என்னால் நம்ப முடியவில்லை. என்னை அழைத்தது என் ஹீரோ ராஜன்....

மனசு முழுவதும் வலித்து கண்கள் பொங்க, "நீங்க ரா......" முடிக்கவில்லை

"சொல்லுங்க சார் எங்க இருக்கு உங்க கார்?"

நல்ல வேளை என்னை அவனுக்கு அடையாளம் தெரியவில்லை.5 comments:

R.Ravichandran said...

Nandraga irukku.

R.Ravichandran said...

nandraga irukku

sriram said...

அன்பின் உலக்ஸ்,
கதை முடிவு வரை நல்லா இருந்தது,
ராஜனின் காதலைப் பற்றி விலாவாரியா சொல்லிட்டு அதை அப்படியே அம்போன்னு விட்டுட்டீங்க, முடிவை காதலையோ / காதலியையோ மையமா வச்சி எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

iniyavan said...

R.Ravichandran said...
Nandraga irukku. நன்றி ரவிச்சந்திரன்

iniyavan said...

//அன்பின் உலக்ஸ்,
கதை முடிவு வரை நல்லா இருந்தது,
ராஜனின் காதலைப் பற்றி விலாவாரியா சொல்லிட்டு அதை அப்படியே அம்போன்னு விட்டுட்டீங்க, முடிவை காதலையோ / காதலியையோ மையமா வச்சி எழுதியிருந்தா நல்லா இருந்திருக்கும் என்பது என் கருத்து

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்// தொடர் வாசிப்பிற்கு நன்றி ஸ்ரீராம்