Sep 30, 2011

சவால் சிறுகதை


காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். எப்படியாவது இன்று காலைக்குள் எழுதிவிடவேண்டும். அப்போதுதான் மார்க்கெட்டுக்கு செல்ல முடியும். சீக்கிரம் போனால் அதிக மூட்டைகளை தூக்கி இறக்கி வைக்க முடியும். முன்பெல்லாம் அதிகாலை மார்க்கெட் போனால் நிறைய வேலைகள் இருக்கும். இப்போது எல்லாம் அதற்கும் போட்டி வந்து விட்டது. நிறைய பேர் வருவதால் அதிகம் கூலி வருவதில்லை. நாம் கொஞ்சம் அதிக கூலி கேட்டால் கிடைக்கும் வேலையும் போய்விடும். அதனால் நான் கொடுக்கும் கூலியை வாங்கிக் கொள்வதால் என்னை நிறைய கடைகாரர்களுக்கு பிடிக்கும். ஆனால் சக தொழிலாளர்களுக்கு பிடிப்பதில்லை. என்னால்தான் அவர்களுக்கும் கொஞ்சமாக கூலி கிடைக்கிறது என்பது அவர்கள் எண்ணம். 

நேற்றே ராஜாத்தி சொன்னது நினைவுக்கு வந்தது. "நாளைக்கு எப்படியாவது குழந்தையை பெரிய டாக்டரிடம் கூட்டி செல்ல வேண்டுமங்க?" குழந்தைக்கு நேற்று இரவு சரியான காய்ச்சல். இரவு ஏற்கனவே பெரிய ஆஸ்பத்திரில் வாங்கி வைத்திருந்த மருந்தை கொடுத்தோம். இப்போது கொஞ்சம் தேவலை. இன்று காலை கிடைக்கும் கூலியை வைத்துதான் டாக்டரிடம் போக வேண்டும் . பெரிய பணக்கார வீட்டில் பிறந்திருந்தால் எப்படி எல்லாமோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் என்ன பண்ணுவது? விதி.

நான் காலை ஒரு 5 மணிக்கு மார்க்கெட் போனால் வீட்டிற்கு திரும்பி வர 9 மணி ஆகிவிடும். பின் வீட்டில் இருப்பதை சாப்பிட்டுவிட்டு, மற்ற வேலைகளுக்கு செல்வது வழக்கம். மற்ற வேலைகள் என்றால் பெரிய வேலைகள் என்று அர்த்தம் இல்லை. என்ன வேலை கிடைக்கிறதோ அதை செய்வேன். என் மனைவி ராஜாத்தி பக்கத்து வீடுகளில் பாத்திரம் கழுவது, கூட்டுவது பெருக்குவது என்று வீட்டு வேலைகள் செய்கிறாள். பெரிசாக குடும்பத்திற்கு வருமானம் இல்லை என்றாலும், ஏதோ அன்றாடம் சமாளிக்க முடிகிறது.

இப்படிப்பட்ட குடும்ப சூழ்நிலைகளில் இருக்கும் நான் எதையோ எழுதி முடிக்க வேண்டும் என்று (முதல் வரியில்) சொல்வதை நீங்கள் கவனித்திருக்கலாம். ஆம். எனக்கு படிப்பில் அதிகம் ஆர்வம் உண்டு. நான் எட்டாவதுவரை படித்திருக்கிறேன். அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப சூழ்நிலையால் என்னால் படிப்பை தொடர முடியவில்லை. ஆனால், என்னால் படிக்கும் பழக்கத்தை மட்டும் நிறுத்த முடியவில்லை. கிடைக்கும் நேரங்களில் அருகே உள்ள நூலகத்திற்கு சென்றுவிடுவேன். அங்கே இருக்கும் புத்தகங்களை எல்லாம் படிப்பேன். இந்த பழக்கம் என் மனைவிக்கு பிடிப்பதில்லை. நேரத்தை வீணாக்காமல் அந்த நேரத்திலும் ஏதாவது வேலைக்கு போய் நான் சம்பாதிக்க வேண்டும் என்பது அவள் எண்ணம்.

நான் படிப்பதோடு நின்றிருந்தால் பரவாயில்லை. சில நேரங்களில் எனக்கு நிறைய எழுத தோன்றும். ஆனால் நான் எழுதி அதனால் என்ன ஆகப் போகிறது என்று எழுதாமல் இருப்பேன். இப்படித்தான் பல கதைகள் என் மனதில் தோன்று அழிந்திருக்கின்றன. எனக்கு சங்கர் என்கிற பணக்கார நண்பன் ஒருவன் உண்டு. அவன் அவ்வப்போது எனக்கு ஒரு சில உதவிகள் செய்வான். அவனும் எனக்கு நூலகத்தில்தான் அறிமுகமானான். அவன் நல்ல படிப்பாளி என்பதை அவனிடம் பழகிய சில நாட்களில் தெரிந்து கொண்டேன். 

சில சமயம் அவனிடம் நான் படித்தவைகளை, மனதில் தோன்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்வேன். மனதில் தோன்றும் கதைகளை அவனிடம் சொல்வேன். அப்போது என் மனதில் ஒரு நிம்மதி பாயும்.  அவைகளை நான் எழுத முடியாமல் தவிக்கும் சந்தர்ப்பங்களில் தூக்கமில்லாமல் நான் அலைவதுண்டு. கதைகளை எத்தனையோ முறை என் மனைவியிடம் பகிர்ந்து கொள்ள நினைத்ததுண்டு. அப்படித்தான் ஒரு நாள் இரவில் என் மனைவியிடம் அப்போது தோன்றிய ஒரு கதையை சொல்ல விரும்பி,

"யேய், ஒரு கதை சொல்ல வா?"

"தூக்கம் வருதுங்க. காலைல பெரிய வீட்டுல சீக்கிரம் வரச் சொல்லி இருக்காங்க"

"கேளேன்"

"எப்போ சொல்லி முடிப்பீங்க?"

அந்த கேள்வி என் மனதை ஆழமாக பாதித்தாலும், "சீக்கிரம் சொல்லி முடிச்சுடுவேன்" என்று கதை சொல்ல ஆரம்பித்தேன். "ம்" என்று கேட்க ஆரம்பித்தாள். என்னை அறியாமல் 20 நிமிடங்களுக்கும் மேல் சொல்லி இருப்பேன் என்று நினைக்கிறேன். கதை முடிந்தவுடன் அவளிடம் கதை எப்படி இருந்தது என்று கேட்க விரும்பி அவளை அழைத்தேன். பதில் வராமல் போகவே அவள் முகத்தின் அருகில் சென்று பார்த்தேன். அப்போதுதான் தெரிந்தது அவள் தூங்கி அதிக நேரம் ஆகிவிட்டது என்று. அன்றிலிருந்து அவளிடம் கதை சொல்வதை விட்டுவிட்டேன்.

ஆனால் நண்பன் சங்கர் அப்படி இல்லை. ஆர்வமாய் கேட்பான். அவந்தான் ஒரு நாள்," ஏம்பா குமார், இவ்வளவு நல்லா சொல்லறியே இதை எல்லாம் எழுதி ஏதாவது பத்திரிகைகளுக்கு அனுப்பலாம் இல்லை?" என்றான்.

"அதுக்கெல்லாம் எனக்கு ஏது நேரம்? அதுவும் இல்லாம எப்படி அனுப்பறது என்றெல்லாம் எனக்குத் தெரியாது?"

"என் கிட்ட குடுப்பா. நான் அனுப்பறேன்"

"ஒரு நாள் பார்ப்போம்" என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

இது நடந்து பல வாரங்கள் ஆகிவிட்டது. நேற்று நூலகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது சங்கர், "குமார், இணையத்துல ஒரு சவால் சிறுகதை போட்டினு வைச்சிருக்காங்க. 3000 ரூபாய் பரிசாம். உனக்குத்தான் நல்லா எழுத வரும்ல பேசாமா ஒரு நல்ல கதை எழுதி குடு. உன் பெயர்ல ஒரு வலைப்பூ ஆரம்பிச்சு நான் அனுப்பறேன். நிச்சயம் உனக்கு பரிசு கிடைக்கும்" என்றான்.

எனக்கு அதிகம் பரிட்சயம்  இல்லாத வலைப்பூ, இணையம் பற்றி அவன் கூறிய போது இல்லாத கவனம் அவன் கூறிய 3000ரூபாயில் அதிகம் இருந்தது. சரி எழுதிவிடலாம் என்று நினைத்து சரி என்றேன். அவனே பேப்பர் பேனா எல்லாம் வாங்கி கொடுத்தான். கூடவே ஒரு படத்தையும் கொடுத்தான். அதில் ஒருவர் கையில் செல்போன் வைத்திருந்தார். அவரின் மேஜையில் இருந்த பேப்பரில் இரண்டு வாசகங்கள் இருந்தன. அந்தப் படத்தில் இருக்கும் நிகழ்வு சிறுகதையின் ஒரு இடத்தில் சரியாக பொருந்த வேண்டுமாம்.

இரவு முழுவதும் யோசித்தேன். பல கருக்கள் வந்து போயின. முடிவில் ஒரு கருவினை தேர்ந்தெடுத்தேன். சரி காலையில் மார்க்கெட் போகுமுன் எழுதுவோம். அப்போதுதான் மனம் தெளிவாக இருக்கும் என்று நினைத்து படுத்தேன். அதனால் நான் முதல் பத்தியில் சொன்னது போல காலை 4 மணிக்கு அலாரம் வைத்து எழுந்தேன். மணி 5க்குள் முடிக்க வேண்டும். எழுத ஆரம்பித்தேன். எழுதிக்கொண்டே இருந்தேன். ஏறக்குறைய முடிக்கும் தருவாயில் இருந்தேன். அப்போது பின்னால் இருந்து ஒரு குரல்,

"ஏங்க மார்க்கெட் போகல?"

"இதோ போறேன்"

"எத்தனை மணிக்கு?"

"கொஞ்ச நேரத்துல"

"இப்போ மணி என்னன்னு நினைச்சீங்க? மணி 7 ஆகப்போகுது. பாவி மனுஷா, இன்னைக்கு நீ கொண்டு வர பணத்துலத்தான் புள்ளையை பெரிய டாக்டருகிட்ட கூட்டி போகலாம்னு நினைச்செனே? இப்படி மண்ணள்ளி போட்டுட்டியே? இப்ப நான் என்ன பண்ணறது. புள்ளை காய்ச்சலால துடிக்குதே? நானும் அசந்து தூங்கிட்டேனே?" 

அப்போதுதான் எனக்குத்தெரிந்தது. மணியை பார்க்காமல் எழுதிக்கொண்டிருந்திருக்கிறேன்.

"அப்படி என்னைய்யா பண்ணுன இவ்வளவு நேரம்?" என்றவள் என் பக்கத்தில் வந்தாள். என் கைகளில் இருந்த பேப்பரை பிடுங்கினாள். சுக்கு நூறாக கிழித்து போட்டாள். நான் செய்வதறியாது நின்றேன். என் கண்கள் கலங்கியது.

கீழே கிழிந்த பேப்பர் துண்டுகளில் இருந்த எழுத்துக்கள் என்னைப் பார்த்து சிரித்தன.

Sep 27, 2011

சேகர் அண்ணா....


நடுராத்திரி தூக்கத்தில் அந்த டெலிபோன் அழைப்பு வந்தது. தூக்க கலக்கத்தில் திவ்யாதான் போனை எடுத்து என்னிடம் கொடுத்தாள். பயத்துடன் அவளிடமிருந்த போனை வாங்கினேன். நடு இரவில் வரும் எந்த போன் அழைப்புகளும் நல்ல செய்திகளை கொண்டு வருவதில்லை. அதனால்தான் இந்த பயம். 

"ஹலோ"

"டேய் குமார், சேகர் பேசறேன். நாளைக்கு கிளம்பி ஊருக்கு வரமுடியுமா?" 

"என்ன ஆச்சுண்ணா? இந்த நேரத்துல?"

"அம்மாவுக்கு ரொம்ப முடியலைடா"

"ராத்திரித்தானே பேசினேன், நல்லா இருந்தாங்களே!"

"எங்க அம்மாவுக்குடா. நாளைக்கு கிளம்பி ஆபிஸ் லீவு போட்டு வா. வரும்போது திவ்யாவையும் அழைச்சிட்டு வா"

"சரிண்ணா"

சேகர் அண்ணா பேச்சிற்கு என்றுமே நான் மறு பேச்சு பேசியதில்லை. "என்னங்க?" என்ற திவ்யாவிடம் விசயத்தை கூறினேன். அதன் பிறகு எவ்வளவோ முயன்றும் தூக்கம் வரவில்லை. மனம் முழுவதும் சித்தியையும், சேகர் அண்ணாவையும் சுற்றி வந்தது. மனம் பல வருடங்கள் பின்னோக்கி சென்றது.

**********************

சேகர் அண்ணா. என் சித்தப்பா மகன். என்னைவிட 10 வயது பெரியவர். ஊரில் எங்கள் குடும்பம் மிகவும் மரியாதைக்குறிய குடும்பம். அப்பா ரொம்ப செல்வாக்கானவர். ஊரில் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு கிடையாது. எங்கள் குடும்பமும் சித்தப்பா குடும்பமும் ஒரே வீட்டில்தான் வசித்தோம். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து எனக்கு எல்லாமே சேகர் அண்ணாதான். நான் அப்பா அம்மாவிடம் இருந்ததைவிட அண்ணாவிடம் இருந்ததுதான் அதிகம். என் மேல் அவ்வளவு பாசம். என்னை முதலில் பள்ளிக்கு அழைத்து சென்றது, எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தது, விளையாட்டு சொல்லிக் கொடுத்தது, பருவ வயதில் ஒரு தோழனாக எல்லாமுமாய் இருந்தது எல்லாம் என் அண்ணன் தான்.

எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. அப்போது எனக்கு 5 வயது இருக்கும் என்று நினைக்கிறேன். வீட்டில் எல்லோரும் ஒரே அழுகை. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நிறைய பேர் வந்திருந்தார்கள். சித்தி செத்துவிட்டதாக பேசிக்கொண்டார்கள். எனக்கு அப்போது அவ்வளவு விவரம் தெரியாது. சேகர் அண்ணன் அன்று ரொம்ப நேரம் அழுதது. எனக்கு இன்றும் சித்தி முகம் நினைவில் இல்லை. சரியாக ஒரு வருடத்தில் என் சித்தப்பாவுக்கு இன்னொரு திருமணம் நடந்தது. ஆரம்பத்தில் சித்தி எல்லோரிடமும் பாசமாகத்தான் இருந்தார்கள். போகப்போக அவர்களின் சுயரூபம் தெரிய ஆரம்பித்தது. சித்தப்பாவுடன் எப்போதும் சண்டை போட்டார்கள். எதற்கு என்று எனக்கு அப்போது புரியவில்லை. சண்டை அதிகமாக இருந்த ஒரு நாளில் அப்பா சித்தப்பாவை கூப்பிட்டு, "ஏண்டா உன் வீட்டுக்காரி ஆசைப்பட்டா தனியா வேணா போயிடுறியா?" என்று கேட்டார். ஆனால் சித்தப்பாவோ பதில் சொல்லாமல் அழ ஆரம்பித்தார். "உங்களை விட்டு எங்கும் போக மாட்டேன்" என்று சித்தப்பா சொல்லிக்கொண்டே அழுதது எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது. அப்பா முன் சித்தப்பா உட்கார மாட்டார். முகம் பார்த்து பேச மாட்டார். அவ்வளவு அடக்கம். எனக்கு எப்படி சேகர் அண்ணாவோ அது போல் சித்தப்பாவுக்கு அப்பா. சித்திக்கு அடுத்த வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

எங்கள் வீட்டின் பின்னால் மிகப்பெரிய தோட்டம் இருக்கிறது. நிறைய தென்னை மரங்கள், மாமரங்கள், கொய்யா மரங்கள் இருக்கும். நிறைய காய்கறிகளும் பயிரிட்டிருப்பார்கள். அவைகளுக்கு எல்லாம் தண்ணீர் ஊற்றுவதற்காக ஒரு மோட்டாரும் உண்டு. மோட்டாருக்கு பக்கத்திலேயே ஒரு ஷெட் இருக்கும். அதன் சாவி எப்போதும் முன் வீட்டில் இருக்கும். எங்கள் தோட்டத்தில் வேலை செய்ய ஆட்கள் இருந்தார்கள். அன்று சனிக்கிழமை. அண்ணன் மோட்டர் செட்டுல குளிக்கலாம் என்று கூப்பிட்டதால் அவருடன் தோட்டத்திற்கு சென்றேன். சாவியைத் தேடினோம். வைத்த இடத்தில் இல்லை. சரி, யாராவது எடுத்து போயிருக்கலாம் என்று நினைத்து மோட்டார் ஷெட்டிற்கு சென்றோம். அண்ணன் தான் கதவை திறந்தது. நான் வெளியில் நின்றிருந்தேன். உள்ளே இருந்து தோட்ட வேலை செய்யும் முனியன் வேகமாக அரைகுறை உடையுடன் ஓடினான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. கொஞ்ச நேரத்தில் ஷெட்டிலிருந்து இருந்து சித்தி கலைந்த உடையுடன் வெளியே வந்தார்கள். அண்ணன் அவர்களைப் பார்த்து முறைத்து காறி துப்பியது. அன்றுதான் அண்ணனின் கோபமான முகத்தை பார்த்தேன். ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை. சித்தியிடம் ஏதோ தவறு இருக்கிறது என்றுமட்டும் எனக்கு தெரிந்தது. ஆனால் என்ன தவறு என்று அப்போது தெரியவில்லை. அதன் பிறகு முனியனை நான் ஊரிலேயே பார்க்கவில்லை.

அந்த விசயத்திற்கு பிறகு சித்தியின் போக்கே மாறிவிட்டது. அண்ணனை எதற்கு எடுத்தாலும் திட்டினார்கள். ரொம்ப கொடுமை படுத்தினார்கள். சரியாக சாப்பாடு போடவில்லை. என் அம்மாதான் அடிக்கடி அண்ணனை கூப்பிட்டு சாப்பாடு போட்டு கவனித்துக்கொண்டார்கள். ஆனால் அன்று பார்த்த அந்த விசயத்தைப் பற்றி அண்ணன் யாரிடமும் சொன்னதாக தெரியவில்லை. சித்தி எவ்வளவு கொடுமை படுத்தினாலும் அண்ணன் சித்தியை பத்தி யாரிடமும் ஒரு குறையும் சொன்னதில்லை. வருடங்கள் ஓடியது. ஆனால் சித்தியின் குணம் மட்டும் மாறவே இல்லை. 

என் வாழ்க்கையில் அண்ணன் ஒரு ஹீரோவாக நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இன்னொரு சம்பவம் நடந்தது. அண்ணாவுக்கு தங்கை என்றால் உயிர். தங்கையும் அண்ணனின் மேலும் என் மேலும் பாசமாக இருப்பாள். சித்திக்கு அப்படியே மாறாக இருந்தாள். அவள் எங்களிடம் இப்படி பாசமாக இருப்பது சித்திக்கு பிடிக்கவே பிடிக்காது. தங்கைக்கோ சித்தியை துளியும் பிடிக்காது. ஒரு நாள் நடு இரவு. அண்ணன் என்னை எழுப்பி பின் வீட்டிற்கு அழைத்து சென்றது. அங்கே ஏதோ சத்தம். பார்த்தால், தங்கையும், எதிர்வீட்டு பையனும் வீட்டை விட்டு செல்ல தயாராக இருந்தார்கள். உடனே அவர்களை அண்ணனும் நானும் கையும் களவுமாக பிடித்தோம். யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் அழைத்து வந்தோம். அண்ணன் தான் இருவரிடமும் ஒரு மணி நேரம் பேசி அட்வைஸ் செய்தார்கள். அந்த பையனை யாருக்கும் தெரியாமல் வீட்டிற்கு அனுப்பி, அழுத தங்கையை அரவணைத்து புத்திமதி சொல்லி வீட்டிற்குள் கூட்டி வந்தோம். அப்போது எங்களை கடந்து ஒரு உருவம் வீட்டினுள் சென்றது. பார்த்தால் சித்தி. ஒரு நன்றி சொல்ல வேண்டுமே? ஹீம்.. 

அண்ணன் எப்படியோ அப்பாவிடமும் சித்தப்பாவிடமும் பேசி சம்மதம் வாங்கி தங்கை கல்யாணத்தை ஜாம் ஜாம் என்று நடத்தி வைத்ததார்கள். ஆனாலும் சித்தி அண்ணனை கேவலமாகத்தான் நடத்தினார்கள்.

அண்ணன் ஒரு பெண்ணை காதலித்த விசயம் எனக்கு லேட்டாகத்தான் தெரிந்தது. ஒரு நாள் என்னை அண்ணன் பக்கத்து ஊருக்கு கூட்டிப்போனது. அங்கே உள்ள கோவிலில் ஒரு இடத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது,

"சாரிங்க, ரொம்ப லேட்டாயிடுச்சு" என்ற குரல் கேட்டு திரும்பினேன். பார்த்தால் ஒரு அழகான பெண். அண்ணன் உடனே, "டேய் குமார், இதாண்டா உனக்கு அண்ணியாகப்போற கலா" என்று அறிமுகம் செய்து வைத்தார்கள். பின் கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு வீட்டீற்கு சென்றோம். சேகர் அண்ணன் எல்லா வகையிலும் சிறந்து இருந்தவர். ஸ்போர்ட்ஸ், படிப்பு என்று. ஆனால் வீட்டில் சித்தியின் கொடுமையினால் எப்போதும் சோகமாக இருப்பது போல எனக்குத் தோன்றும். ஆனால் அண்ணியை அறிமுகப் படுத்திய அன்று முதல் முறையாக அதன் முகத்தில் சந்தோசத்தை பார்த்தேன். மெதுவாக வீட்டிற்கு அண்ணன் விசயம் தெரிந்தது. முதலில் சித்தி குய்யோ முய்யோ என்று குதித்தார்கள். அப்பாத்தான் சமாதானப்படுத்தினார்கள். 

அப்பாவின் ஏற்பாட்டினால் பெண் பார்க்க ஏற்பாடு ஆனது. பெண் வீடு ஒரு ஏழைக்குடும்பம். எங்கள் அளவு வசதி இல்லாத குடும்பம். அடுத்த வேளை சாப்பாட்டிற்கே வழி இல்லாத குடும்பம். சித்தியின் ஊர்தான் அண்ணியின் ஊரும். எல்லாம் பேசி முடித்து கல்யாணம் நிச்சயம் ஆனது. ஆனால் சித்தி மட்டும் கோபத்துடனே அலைந்து கொண்டிருந்தது தெரிந்தது. பத்திரிக்கை எல்லாம் அடித்த பின், அவர்கள் வீட்டிற்கு சென்று பத்திரிக்கை காண்பித்து விட்டு வரும்படி அப்பா கூறினார். அதனால் அவர்கள் வீட்டிற்கு நானும் அண்ணனும் சென்றோம். பார்த்தால் வீட்டில் யாரும் இல்லை. பக்கத்து வீட்டில் விசாரித்தோம், "நேத்து உங்க சித்தியும் அவங்க அண்ணன்களும் வந்தாங்க. என்ன நடந்ததுனு தெரியலை. நைட்டே வீட காலி பண்ணிட்டு போயிட்டாங்க"

அண்ணன் அழுததோ இல்லையோ நான் நிறைய அழுதேன். வீட்டில் நாந்தான் விசயத்தை கூறினேன். எல்லோரும் மிகுந்த வருத்ததில் இருந்தார்கள். சித்தியின் முகம் மட்டும் மிகவும் சந்தோசமாக இருப்பது தெரிந்தது. அன்று பேசாமல் இருக்க ஆரம்பித்த அண்ணன் அதன் பிறகு யாரிடமும் பேசுவதை தவிர்த்தது. எவ்வளவோ எடுத்து சொல்லியும் கல்யாணம் செய்து கொள்ள மறுத்தது. என்னால் அண்ணனை அந்த கோலத்தில் பார்க்க முடியவில்லை.

இந்த விசயம் நடப்பதற்கு முன்னால் ஒரு முறை நான் அண்ணனிடம் கேட்டேன், "ஏண்ணே, நீ சித்தியை பத்தி அப்பாட்ட சொல்ல வேண்டியதுதானே"

"என்ன சொல்லச் சொல்றே?"

"எல்லாத்தையும்"

"எல்லாத்தையும்னா?"

"எல்லாத்தையும்தான்...பல வருசத்து முன்னாடி மோட்டார் ஷெட்....."

"டேய் ஒண்ணு புரிஞ்சுக்க. சித்தி பண்ணது தப்புதான். ஆனால் அவ்வளவு சின்ன பொண்ண ஒரு பெரிய மனுசன் கல்யாணம் பண்ணது மட்டும் சரியா? தப்பு என் அப்பா பேர்லடா?"

"எப்படிண்ணே உன்னால இப்படி பேச முடியுது?"

"குமார், நல்லா யோசிச்சு பார், அதுக்கு அப்புறம் சித்தி ஏதாவது தப்பு பண்ணாங்களா? இல்லைல. நம்ம குடும்பத்துக்கு ஏத்தா மாதிரிதானே இருக்காங்க. என்ன ஒண்ணு என்னை அவங்களுக்கு பிடிக்கலை. அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"

"என்னமோ போண்ணேன்"

இந்த மாதிரி யாரால் பேச முடியும். அன்றே சொல்லி இருந்தால் அண்ணனின் வாழ்க்கை நன்றாக இருந்திருக்கும். ஆனால் என்ன செய்ய? அண்ணன் யாரிடமும் பேசாமல் இருப்பது குடும்பத்தில் எல்லோருக்குமே வேதனை அளித்தது. அண்ணனை வற்புறுத்தி எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கடைசிவரை கல்யாணமே செய்துகொள்ள்வில்லை. எனக்கும் அண்ணந்தான் பெண் பார்த்து திருமணத்தை நடத்தி வைத்து அழகு பார்த்தது. ஆனாலும் அண்ணன் யாரிடமும் ஒரு வார்த்தை பேசுவதில்லை.

**********************

"என்னங்க தூங்கலையா?" என்ற திவ்யாவின் குரல் கேட்டவுடன் தான் பழைய நினைவுகளிலிருந்து திரும்பினேன். முதலில் கோபமாக வந்தது. அப்படி அண்ணனை கொடுமை செய்த சித்தியை போய் பார்க்க வேண்டுமா? என்று. ஆனால் என்ன செய்வது? அண்ணனுக்காக போக வேண்டியதுதான்.

ஆபிஸ் போகும் முன் முதலில் ராக்போர்ர்டில் டிக்கெட் புக் செய்தேன். நல்ல வேலை டிக்கெட் இருந்தது. எல்லா வேலைகளும் முடிந்து வீட்டிற்கு வர ஆறு மணி ஆனது. தேவையானவைகளை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேசன் செல்ல 8 மணி ஆனது. ஒரு வழியாக ராக் போர்ட்டில் ஏறி அமர்ந்ததும் மீண்டும் அண்ணனை பற்றி யோசிக்க ஆரம்பித்தது மனது. அப்படியே தூங்கிப்போனோம்.

வீடு முழுக்க உறவுக்கார கும்பல். டாக்டர் 10 மணிக்கு வந்தார். சித்தியை முழுவதும் செக் செய்தார். பெரியவர்களை கூப்பிட்டார். "இன்னும் ஒரு மணி நேரம் உயிரோடு இருந்தால் பெரிய விசயம். பார்க்க வேண்டியவர்கள் போய் பாருங்கள்" என்றார். எல்லோரும் சென்றார்கள். நான் அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தேன். அண்ணன் முகத்தில் ஒரு ரியாக்ஷனும் இல்லை.

கடைசியில் எல்லோரும் அண்ணனை கூப்பிட்டார்கள். மிகுந்த தயக்கத்துடன் நானும் அண்ணனுடன் சித்தியை பார்க்க போனேன். பல நாட்கள் பேசாமல் இருந்த அண்ணன் சித்தியை பார்த்து,

"அம்மா" என்று மெல்லிய குரலில் கூப்பிட்டது. மூன்று நாட்களாக கண்கள் திறக்காமல் இருந்த சித்தி கண்களைத் திறந்து, சத்தமாக அண்ணன் கைகளை பிடித்துக்கோண்டு,

"சேகர்" என்று அழ ஆரம்பித்தார்கள். நான் அண்ணனை பார்த்தேன். முகத்தில் எப்போதும் போல் எந்த ரியாக்ஷனும் இல்லை. 
மொத்த உறவுக்கார கும்பலும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள். 'தன் வாழ்நாள் முழுவதும் கொடுமை படுத்திவிட்டு இப்போது அழுகின்றார்களே' என்று.

ஆனால் சித்தி ஏன் அழுதார்கள் என்று எனக்கும் அண்ணனுக்கும் மட்டுமே தெரியும்.

**********************

Sep 21, 2011

மிக்ஸர் - 21.09.2011


மங்காத்தா படம் பார்க்க வேண்டும் என்று இரண்டு மாதமாக ஆசைப்பட்டேன். படம் ரிலீஸான அடுத்த நாள் திருச்சியை விட்டு கிளம்பியதால், உடனே பார்க்க முடியவில்லை. சரி, மலேசியாவில் பார்த்துக்கொள்ளலாம் என வந்துவிட்டேன். அதற்குள் எல்லோரும் படம் சூப்பர் என்று புகழ்ந்து தள்ளவே, போன சனிக்கிழமை படம் பார்க்க முடிவு செய்து, வியாழக்கிழமை ஆன் லைனில் பார்த்தால் படம் இல்லை. சரி 15 நாளில் எடுத்துவிட்டார்கள் போல என நினைத்து விட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை இன்னொருமுறை செக் செய்து பார்க்கலாம் என்று பார்த்தால் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. உடனே டிக்கட் புக் செய்து கிரெடிட் கார்ட் மூலம் பணமும் செலுத்தும்போதுதான் என் பெண் கூறினாள், "டாடி படம் 18+னு போட்டுருக்கு"  நல்ல வேளை பணம் செலுத்தவில்லை. 18+ படம் என்றால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. அதனால் என்னால் படத்தை இன்னும் பார்க்க முடியவில்லை. 18+ போடும் அளவிற்கு அவ்வளவு வயலண்டாகவா படம் இருக்கிறது?

*******************************************************

கோலாலம்பூரில் ஒரு டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு விநாயகர் கோயில் வழியாக டாக்ஸி சென்றது. காரை ஓட்டி வந்தவர் ஒரு சைனிஷ் டிரைவர். நான்,

"இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்று நானும் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். ஆனால், நேரம் இல்லாததால் என்னால் வர முடியவில்லை' என்றேன். 

உடனே அவர், "தயவு செய்து நேரம் இல்லை என்ற காரணத்தை சொல்லாதீர்கள். நேரத்தை நீங்கள்தான் உருவாக்கி கொள்ள வேண்டும். என்ன ஒரு 30 நிமிடம் பிடிக்குமா நீங்கள் உங்கள் ஹோட்டலில் இருந்து இங்கு வர" என்றார். அவர் சொல்வது உண்மை என்பதால் நான் வாயை திறக்கவில்லை. 

அன்று சரியான டிராபிக். டாக்ஸி அந்த கோவில் அருகே கிட்டத்தட்ட 1 மணி நேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இறங்கி வெளியே போய் சாமி கும்பிட முடியாது. காரணம் எங்கும் கார்கள். உடனே அந்த டிரைவர், "பார்த்தீர்களா! நீங்கள் உங்கள் இறைவனை கும்பிட நேரம் இல்லை என்று சொன்னீர்கள். அவனோ உங்களை 1 மணி நேரம் நிற்க வைத்து அவனையும் வழிபடவிடாமல் உங்களை தண்டித்துவிட்டான்" என்றார்.

உடனே நான், "நாந்தான் தப்பு செய்தேன், எனக்கு தண்டனை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? நீங்களும்தானே டிராபிக்கில் இருக்கின்றீர்கள்" என்றேன்.

"அப்படி ஒன்றும் இல்லையே! எனக்கு உங்கள் இறைவன் நல்லதுதான் செய்கிறான். எப்போதும் 7 வெள்ளி வாங்கும் தூரத்துக்கு இப்போது நீங்கள் 25 வெள்ளிகள் தரப்போகிறீர்கள்" என்றார்.

உண்மைதான். 10 நிமிடத்தில் ஹோட்டலை அடைய வேண்டிய இடத்தை 2 மணி நேரம் கழித்து அடைந்து 25 வெள்ளி அவருக்கு கொடுத்தேன்.

*******************************************************

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மக்கள் உண்ணாவிரதம் இருப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இதே போராட்டத்தை அவர்கள் அந்த திட்டம் ஆரம்பிக்கும் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போது இத்தனை கோடிகள் செலவழித்த பின் அணுமின் நிலையத்தை மூடுவார்களா என்பது சந்தேகம்தான். எல்லா நாடுகளும் இப்போது அணுமின் நிலையங்களை மூடி வருகின்றன. அமெரிக்கா 1970களிலேயே மூடிவிட்டது. நண்பர் ஒருவர் நம் இந்தியாவில் உள்ள அணுமின்நிலையங்களைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும், ஒரு வேளை ஜப்பானில் ஏற்பட்ட விபத்து போல் இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை படங்களுடன் அனுப்பி இருந்தார். அதை படித்த அன்று தூக்கமே வரவில்லை. அப்படி என்றால் என்ன ஆகும்? என்று புரிந்துகொள்ளுங்கள்.

*******************************************************

எமிலி என்ற ஒரு சிறுமி ஒரு உலகசாதனை செய்திருக்கிறாள். என்ன தெரியுமா? ஒரு மாதத்தில் அதிக பட்ச குறிஞ்செய்தி அனுப்பி உலக சாதனை செய்திருக்கிறாளாம். எவ்வளவு தெரியுமா? 35,460தாம். ஏற்கனவே இருந்த உலகசாதனை பதினாலாயிரத்து சொச்சமாம். அவள் தூங்கும் நேரம் போக கணக்கு போட்டு பார்த்ததில் ஒரு மணி நேரத்துக்கு 74 குறுஞ்செய்தி வீதம் அனுப்பியுள்ளாராம். நாமாக இருந்தால் என்ன செய்வோம்? மகளின் போனை பிடுங்கி குப்பையில் எறிவோம், ஆனால், அவர் அப்பா என்ன பண்ணிரார் தெரியுமா? எதோ ஒரு உலக சாதனை புரிந்தால் போதும் என்று புது கைபேசி வாங்கி கொடுத்தாராம். எப்படிப் பட்ட அப்பா பாருங்க!

*******************************************************

நண்பர்கள் அதிகமாக பேஸ்புக், டிவிட்டர், பஸ் என்று போய்விட்டதால், நாமும் போய்தான் பார்க்கலாமே என்று முதலில் பேஸ்புக், டிவிட்டர் அக்கவுண்ட்களை துவக்கினேன். ஒரு மாதம் அதில் ஒரு பார்வையாளராக இருந்து கவனித்து வந்தேன். நேற்று இரவுதான் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. உள்ளே போனால் அதற்கு அடிமையாகிவிடுவோம் என்ற உண்மை எனக்குத் தெரிய ஒரு மாதம் ஆகியிருக்கிறது. நல்ல வேளை ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்டேன். நமக்கு வலைப்பூ ஒன்று போதுங்க, நிறைய படிக்கலாம். நினைக்கும் போது எழுதலாம். என்ன சொல்றீங்க? நான் சொல்வது சரிதானே?

*******************************************************

ஏற்கனவே இரண்டு குறுநாவல்கள் எழுதி இருந்தாலும், ஒரு பெரிய நாவல் எழுதலாம் என்று நினைத்து இரண்டு பாகம் எழுதினேன். ஒரு பாகம் எழுதி முடிக்க குறைந்தது 2 மணி நேரம் ஆகிறது. ஆனால், மக்கள் அந்த அளவுக்கு ஆதரவு தரவில்லை என நினைக்கிறேன். அதனால் அந்த நாவலை டிராப் செய்துவிடலாமா? என நினைக்கிறேன். கீழே அதன் லிங்கை தருகிறேன். படிக்காதவர்கள் படித்துவிட்டு, தொடரலாமா? வேண்டாமா? என்று பின்னூட்டதில் சொல்லுங்கள்:

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 2

*******************************************************

Sep 19, 2011

அமுதா...


நான் எழுதப்போகும் இந்த விசயத்தை சிறுகதை என்று நான் வகைப்படுத்தப்போகிறேன். சிலர் இதை என் அனுபவமாக நினைக்கலாம். சிலர் இது ஏற்கனவே படித்தது போல் உள்ளது. ஒரே மாதிரி பார்மேட்டில் உள்ளது எனலாம். சிலர் எழுத வேறு விசயம் இல்லையா எனலாம். என் எழுத்தாள நண்பர், 'ஏன் எல்லாக்கதைகளிலும் நீ நுழைந்து கொள்கிறாய்' எனலாம். என் வீட்டினரோ, "யேய் இந்த கதையில் வருவது நீதானே?'' எனலாம். படிப்பவர்களுக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படி எடுத்துக்கொள்ளுங்கள். எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. மொத்தத்தில் நான் இதை எழுத வேண்டும். இது நிறைய பேரின் வாழ்க்கையில் நடந்து இருக்கலாம். இல்லை நடந்து கொண்டிருக்கலாம். இல்லை இனி நடக்கலாம். என் வாழ்க்கையில் நடந்ததா? என்று கேட்டால், நடந்திருக்கலாம்.. தெரியவில்லை. ஒரு மாதமாக மனதை விட்டு அகலாமல், வேறு எதையும் சிந்திக்கவிடாமல் செய்கிறது. இதை உங்களிடம் சொன்னால்தான் என்னால் மற்ற விசயங்களை எழுத முடியும். அதனால்......

நான் கல்லூரி படித்தபோது எனக்கு பிடித்த விசயங்கள் இரண்டு. ஒன்று அமுதா. இன்னொன்று கிரிக்கெட். நான் மூன்றாம் வருடம் படித்துக்கொண்டிருந்த போது அமுதா முதல் வருடத்தில் வந்து சேர்ந்தாள். நல்ல குடும்பப்பாங்கான அழகு என்பதோடு நிறுத்திக்கொள்வோம். அதற்கு மேல் வேண்டாம். எல்லோரும் மாடர்ன் உடைகளில் வரும்போது இவள் மட்டும் தாவணியில் வருவாள். சில நாட்கள் பாவாடை சட்டையில் வருவாள். அப்படி ஒரு நாள் அவள் பாவாடை சட்டையில் வந்த போதுதான் என் வாழ்க்கையில் புயல் அடிக்க ஆரம்பித்தது. அந்த வயதில் பார்க்கும் பெண்கள் எல்லாருமே எனக்கு பிடித்துப்போனாலும், அமுதாவைப் பார்க்கும் போது ஒரு இனம் புரியாத உணர்ச்சிகள் ஏற்பட்டது என்னவோ உண்மைதான். அதற்கு பெயர்தான் காதல் என்பது சில நாட்கள் கழித்துதான் எனக்கு புரிந்தது.

அந்த காலக்கட்டத்தில் என் கல்லூரி நண்பர்கள் அனைவருமே காதலில்தான் இருந்தோம். உங்களின் சந்தேகம் எனக்கு புரிகிறது. நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெண்களை காதலித்துக்கொண்டிருந்தார்கள். அந்த பெண்கள் எல்லாம் அவர்களை காதலித்தார்களா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. அது தெரிந்து இப்போது எனக்கு என்ன ஆகப்போகிறது? ஏன் கோபப்படுகிறேன் என்பது உங்களுக்கு போகப் போக தெரியும்.

எல்லோரையும் போல நான் என் காதலை அமுதாவிடம் உடனே சொல்லவில்லை. சொல்லி அவள் மறுத்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து சொல்லாமலேயே அவளை காதலித்துக்கொண்டிருந்தேன். அதற்கு காரணம் நிறைய. நான் இப்படி அமுதாவைப்பற்றியும், நான் அவள் மேல் கொண்ட காதலைப் பற்றியும் நிறைய பில்ட் அப் கொடுத்து எழுதுவதால் என்னை நீங்கள் ஹீரோ அளவிற்கு உயர்த்தி பார்க்க வேண்டாம். நான் மிக சாதாரணமானவன். பிரம்மன் படைக்கும் போது மிச்சம் மீதி இருந்த களி மண்ணில், 'போனாப் போகுது போ' என்று என்னை படைத்து பூமிக்கு அனுப்பி விட்டான். அந்த அளவிற்கு என்னை சுமாராக படைத்துவிட்டான். நான் நல்ல கருப்பு. நிறம்தான் கருப்பு ஆளாவது பார்க்க லட்சணமாய் இருக்கக்கூடாதா? என்றால், பார்க்க மிக சுமாராய் இருப்பேன். ஆனால் மனதளவில் நான் தான் மிக அழகு என்று நினைப்பேன். எல்லாவிதத்திலும் தன்னம்பிக்கை அதிகம் உள்ளவன்.

இப்படிப்பட்ட எனக்கு காதல் வருவது எந்தவிதத்தில் நியாயம்? ஆனால், உடம்பில் உள்ள ஹார்மோனுக்கு எல்லாம் இந்த தியரி தெரியாது அல்லவா? சரி, காதல் வந்தது. யாரிடம் வரவேண்டும்.. ஒரு அருக்காணி மேலேயோ அல்லது யாராவது அசிங்கமான எனக்கு ஈடான் பெண்ணுடன் வந்திருந்தால் நியாயம். ஆனால் தங்கச்சிலை போன்ற அமுதா மேல் அல்லவா எனக்கு காதல் வந்தது? என்ன தைரியம் எனக்கு அப்போது இருந்திருக்க வேண்டும்?

இருந்தாலும் மனதளவில் அமுதாவை உருகி உருகி காதலித்தேன். தினமும் அவள் செல்லும் பஸ்ஸில் சென்றேன். அவள் செல்லும் இடங்களுக்கு எல்லாம் சென்றேன். அவள் கோவில் சென்றால் நானும் சென்றேன். இப்படி அவளை பின்தொடர ஒரு நாள் அவள் தோழி மூலம் என்னைக் கூப்பிட்டு அனுப்பினாள். அன்று மாலையில் கோவிலில் சந்திப்பதாக ஏற்பாடு.

மனம் முழுவதும் கனவுடன், என்னிடம் இருந்த உடைகளிலேயே கொஞ்சம் சுமாரான உடையை அணிந்து கொண்டு அவளைப்பார்க்க கோவிலுக்கு சென்றேன். உள் பிரகாரத்தில் காத்து இருந்தேன். ஒவ்வொரு நொடியும் எனக்கு அவஸ்தையாக கழிந்தது. வயிற்றை வேறு என்னவோ செய்தது. அவள் ஒப்புக்கொண்டால் மொட்டையடித்துக்கொள்வதாக கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். ஒரு பதினைந்து நிமிடம் கழித்து தேர்போல அசைந்து வந்தாள். எனக்கு பிடித்த பாவாடை சட்டையில் இருந்தாள். என் அருகில் அவள் வர வர நான் பறக்க ஆரம்பித்தேன்.

அவள்தான் முதலில் பேச ஆரம்பித்தாள், "என்ன நீங்க என்னையே தினமும் பாலோ செய்யறீங்க?" சுற்றி வளைக்காமல் நேரடியாக விசயத்திற்கு வந்தாள். நான் அவள் பேசும் அழகையும் அந்த அழகிய உதடுகளின் அசைவையுமே பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஹலோ, உங்களைத்தான்? கேட்கறேன்ல"

"என்ன?"

"ஏன் என்னையே சுத்தறீங்க?"

"உன்னை மனப்பூர்வமா விரும்புறேன் அமுதா?"

"என்னது?"

"ஆமாம் அமுதா. உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படறேன்"

"சாரிங்க. எனக்கு உங்க மேல காதல் வரலை"

பூமி சுக்கு நூறாக உடைந்து கொண்டிருந்தது. அதன் இடிபாடுகளில் சிக்கி, நான் கீழே கீழே போய்க்கொண்டிருந்தேன். சுதாரித்து மீண்டும் மேலே வந்து, "என்ன காரணம்னு தெரிஞ்சுக்கலாமா?"

"உங்களுக்கும் எனக்கும் ஒத்துவராது"

"ஏன்? நாம ஒரே ஜாதி மதம்தானே?"

"மனசுக்கு பிடிக்க வேண்டாமா?"

"ஏன் நான் அசிங்கமா இருக்கேனா?"

"அது ஒரு காரணம் இல்லை"

"வேற என்ன காரணம்?"

"அழகு எனக்கு முக்கியம் இல்லை. ஆனா உங்க கலர். நான் எவ்வளவு சிகப்பா இருக்கேன். உங்களை கல்யாணம் பண்ணிட்டா நல்லவா இருக்கும். அதுவும் இல்லாம புள்ளைங்கள் எல்லாம் உங்களை மாதிரி பொறந்தா..... அதனால எனக்கு உங்களை பிடிக்கலை"

அதன் பிறகு நான் அங்கே நிற்கவில்லை. கதைகளில் சினிமாவில் வருவது போல வாழ்வதற்கு நிறமா முக்கியம் என்றெல்லாம் நான் வாதிடவில்லை. விறுவிறுவென்று அவள் முகத்தைக்கூட திரும்பி பார்க்காமல் வந்துவிட்டேன். ஒரு மூன்று மாதம் பைத்தியம் பிடித்தது போல அலைந்தேன். பின் நன்கு தெளிந்தவுடன் படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். நன்றாக மார்க் வாங்கி பாஸ் செய்தேன். கேம்பஸ் இண்டர்வியூவில் வேலை கிடைத்தது. இரண்டு வருட டிரெயினிங் பிறகு என்னை ஜப்பானுக்கு அனுப்பினார்கள். கை நிறைய சம்பளம். நடுவில் ஒரு முறை இந்தியா வரும்போது, அமுதாவிற்கு கல்யாணம் நடந்துவிட்டதென்றும், அவள் வீட்டை எதிர்த்துக்கொண்டு, வீட்டை விட்டு ஓடி ஒரு முஸ்லீமை காதலித்து கல்யாணம் செய்துகொண்டாள் என்றும் நண்பர்கள் கூறினார்கள்.

அதன்பிறகு நான் ஜப்பான் வந்துவிட்டேன். அடுத்த இரண்டு வருடத்தில் எனக்கு திருமணம் நடந்தது. மிக அழகான மனைவியை எனக்கு கொடுத்து பிரம்மன் தான் செய்த தவறை திருத்திக்கொண்டான். மூன்று அழகான (அம்மா சாயலில்) பிள்ளைகள். சந்தோசமாக வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. எனக்கு ஒரு குறையும் இல்லை. அமுதாவை கல்யாணம் செய்து கொண்டிருந்தாள் இப்படி சந்தோசத்துடன் வாழ்வேனா என எனக்கு சொல்லத்தெரியவில்லை.

சென்ற மாதம் ஒரு பிராப்பர்ட்டி வாங்குவது தொடர்பாக நான் மட்டும் இந்தியா சென்றிருந்தேன். ஒரு நாள் பேங்க் செல்ல வேண்டியிருந்தது. அப்போது பேங்க் மேனஜர் அறையில் பேசிக்கொண்டிருந்த போது, மேனேஜர் என்னைப்பார்த்து, "சார் யார் அது உங்களையே ரொம்ப நேரமாக பார்த்துக்கொண்டிருப்பது?" என்றார். நான் கண்ணாடிக் கதவின் மூலம் பார்த்து அதிர்ந்தேன். காரணம், என்னை பார்த்துக்கொண்டிருந்தது அமுதா. என்னால் நம்ப முடியவில்லை. கொஞ்சம் குண்டு. பார்க்க அயற்சியாய்.. ஆனால், முகம் மட்டும் அதே பொலிவு.

"யார் சார், உங்களுக்கு தெரிஞ்சவங்களா?"

"ஆமாம் சார், என்னோட அந்த காலத்து தோழி. என்ன விசயமா இங்க வந்திருக்காங்க?"

"ஏதோ லோன் வேணுமாம்"

"சார், எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா?"

"என்ன?" என்பது போல் என்னைப் பார்த்த மேனஜரிடம், "சார், அவங்க என்ன லோன் கேட்கறாங்களோ, அதை கொடுங்க, நான் கியாரண்டி" என்றேன்.

"சார், நீங்க சொல்லி நான் மறுக்க முடியுமா? இன்னைக்கே கொடுத்தடறேன்"

ஒரு பத்து நிமிடம் கழித்து வெளியே வந்தேன். நான் நேருக்கு நேராக பார்க்கவும், அவளால் எதுவும் சொல்ல முடியாமல் என்னையே பார்த்தாள். கண்கள் கலங்குவது போல் இருந்தது. அங்கே இருக்க பிடிக்காமல் வீட்டிற்கு வந்துவிட்டேன். ஒரு தேவதை போல் வாழ வேண்டியவள் ஒரு 25000 ரூபாய் லோனுக்கு அலைவதை நினைக்கையில் பாவமாக இருந்தது. அன்று முழுவதும் மனமே சரியில்லை.

அடுத்த நாளும் பேங்க் செல்ல வேண்டி இருந்தது. வேலை முடிந்து வெளியே வருகையில் அமுதா எனக்காக காத்திருப்பது போல் இருந்தது. என்னைப்பார்த்ததும், "ரொம்ப நன்றி" என்றாள்.

"மேனஜர் சொன்னார். உங்களால்தான் எனக்கு லோன் கிடைத்தது. ஒரே ஒரு முறை எங்கள் வீட்டிற்கு வந்து போக முடியுமா?" என்றாள். தயக்கத்துடன் மாலை வருவதாக ஒப்புக்கொண்டேன்.

மாலை ஒரு ஆறு மணிக்கு அமுதா வீட்டிற்கு சென்றேன். அது வீடு அல்ல. ஒரு ஹால் அவ்வளவுதான். அதிலே தடுத்து எல்லாம் இருந்தது. உடனே ஓடிப்போய் காபி வாங்கி வந்தாள். அவளின் நிலமை முழுதும் எனக்கு புரிந்தது. அவள் கணவன் ஒரு குடிகாரன் என்றும் தெரிந்தது. கிளம்புகையில் ஒரு 5 ஆயிரம் ரூபாய் கொடுத்து செலவுக்கு வைத்துக்கொள்ள சொன்னேன். வேண்டாம் என மறுத்துவிட்டாள். திடீரேன விசும்ப ஆரம்பித்தாள்,

"நான் அன்று அப்படி உங்களை....." 

அதற்கு மேல் எனக்கு அங்கே இருக்க பிடிக்காமல் "சரி நான் வருகிறேன்" என்று கிளம்ப ஆரம்பித்தேன்.

"அம்மா" என்று ஒரு 15 வயது பெண் வீட்டிற்கு உள்ளே ஓடி வந்தாள். ஒரு கணம் அந்தப் பெண்ணை உற்றுப்பார்த்தேன்.

கருப்பாக......


Sep 15, 2011

ஏன் இப்படி?


எங்கள் நிறுவனத்தின் லோன் விசயமாக ஒரு வங்கிக்கு சென்றிருந்தேன். இது நடந்து ஒரு நான்கு மாதங்கள் இருக்கும். அங்கே ஒரு மேனஜரை சந்தித்தேன். அவர் ஒரு மலேசியன். சிலரை பார்த்த உடனே பிடித்துவிடும் அல்லவா? அப்படிப்பட்ட முகம் அவருடையது. முகம் மட்டும் அல்ல. அவர் பேசும் விதம் மற்றும் அவரின் அணுகுமுறை எல்லாம் எங்களுக்கு பிடித்துவிட்டது. அது மட்டுமல்லாமல் இந்தியாவைப் பற்றி நிறைய தெரிந்தவர். திடீரேன ஒரு ஹிந்தி பாடலை பிரமாதமாக பாடினார். வீடு முழுவதும் ஹிந்தி பாடல்கள் சிடி நிறைய வைத்திருப்பதாக கூறினார். அந்த அளவுக்கு ஹிந்தி பாட்லகள் மேல் அவருக்கு வெறி. வேலையிலும் கில்லாடியானவர். அவருடன் ஒரு மூன்று நான்கு முறை சாப்பிட சென்றிருப்பேன்.

எப்போதும் ஒரு புன்னகையுடனே பேசுவார். எல்லாவிதமான சப்ஜக்ட்டும் பேசுவார். திடீரென ஒரு நாள் ஒரு போட்டாவை காண்பித்து இது யார் தெரியுமா? என்று கேட்டார். "உங்கள் பையனா?" என்றேன். "இல்லை" என்றார்.

"பின் யார் இது?" என்றேன்.

"என்னுடைய சிறு வயது போட்டோ" என்றார்.

நம்ப முடியவில்லை. ஒரு சினிமா ஹீரோ போல் இருந்தார். அப்போது அவர், "நான் காலேஜ் படிக்கும் போது எனக்கு நிறைய தோழிகள் உண்டு. எப்போதும் என்னைச் சுற்றி பெண்கள்தான்" என்று சொல்லி அவரின் மலரும் நினைவுகளை அவிழ்த்துவிட்டார். 

பொறுமையாக கேட்ட நான், "இப்போதும் அப்படித்தானா?" என்றேன்.

"இப்போது அப்படி இல்லை. என் மனைவிக்கு கட்டுப்பட்டவன். எனக்கு இரண்டு பையன்கள், ஒரு பெண். அதனால் இப்போது அதெல்லாம் தோன்றுவதில்லை. சந்தோசமாக இருக்கிறேன். எனக்கு எல்லாம் இருக்கிறது. ஆனாலும் மனதிற்குள் ஏதோ ஒரு குறை இருக்கிறது" என்று முதல் மரியாதை சிவாஜி ஸ்டைலில் சொன்னார்.

நான், "அப்படி என்ன குறை?" என்றேன்.

"தினமும் கார்டனில் நிறைய நேரம் செலவு செய்கிறேன். இரவு பப்புக்கு சென்று கரோக்கியில் பாட்டு பாடுகிறேன். நிறைய பணம் இருக்கிறது. மனைவி வீட்டை கவனித்துக்கொள்கிறார். பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள். பையனுக்கு விரைவில் கல்யாணம்"

"அப்புறம் என்னதான் சார் பிரச்சனை?"

"அதான் தெரியவில்லை"

"சார், எதுவும் இல்லை என்றால் அதை நோக்கி நம் வாழ்க்கை செல்லும். எல்லாம் இருப்பதால் உங்களை தனிமை வாட்டுகிறது என்று நினைக்கிறேன். மனைவியோடு அதிகம் வெளியே செல்லுங்கள். தனியாக இருக்காதீர்கள். நான் உங்களுக்கு யோகா சொல்லித் தருகிறேன்" என்றேன்.

"நிச்சயம் ஒரு நாள் கற்றுக்கொள்கிறேன்" என்றார்.

பிறகு சில நாட்கள் கழித்து அவர்கள் தலைமை அலுவலகம் எங்கள் லோன் பேப்பரை ரிஜெக்ட் செய்துவிட்டது. அதற்காக போன் செய்தவர் மிகவும் சோகமாக, "சார், நான் எவ்வளவோ முயற்சி செய்தேன். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் கிடைக்காமல் போய்விட்டது" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டார்.

அடுத்த வாரம் அவர் பேங்கை கடந்து செல்கையில் அவரை தொலைபேசியில் அழைத்தேன். நலம் விசாரித்துவிட்டு மதியம் சாப்பாட்டிற்கு அழைத்தேன். ரொம்பவும் தயங்கி பின் வர ஒப்புக்கொண்டார். 

"சாப்பிட வர அப்படி என்ன தயக்கம்?" என்றேன்.

"இல்லை, என்னால் உங்கள் கம்பனிக்கு லோன் வாங்கி தர முடியவில்லை. அதனால் உங்களுடன் சாப்பிட வர வெட்கமாக இருக்கிறது" என்றார்.

"சார், இப்போது உங்களை நான் அழைத்திருப்பது நண்பர் என்பதன் அடிப்படையில்" என்று சொல்லி அழைத்து சென்றேன்.

அதன் பிறகு ஒரு மாதம் கழித்து அவரை தொலைபேசியில் அழைத்தேன். சில விபரங்களை கேட்டேன். அப்போது அவரே சில வழிமுறைகளை சொல்லி, "மீண்டும் நீங்கள் எங்கள் வங்கிக்கே லோன் அப்ளை செய்யுங்களேன்" என்றார்.

"சரி" என்று சொல்லி அதற்கான வேலைகளில் இறங்கினேன். ஆகஸ்ட் மாதம் கடைசி வாரத்தில் அவசர பயணமாக திருச்சி சென்றேன். செல்லும் முன் அவரை அழைத்து பேசினேன். "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்ததும் சந்திக்கலாம்" என்றார்.

ரம்ஜான் முடிந்து மலேசியா வந்ததும் அவரை தொலை பேசியில் அழைத்தேன். எடுக்கவில்லை. உடனே ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன்.
பதில் வந்தது இப்படி, 

"My Father has passed away last week"

படித்தவுடன் மனசு சங்கடப்பட, அவரைப் பார்த்து ஆறுதல் சொல்ல பேங்கிற்கு செல்ல முயன்றேன். நண்பருக்கு 54 வயது. எப்படியும் அவர் அப்பாவுக்கு 75 வயதிற்கு மேல் இருக்கும். இருந்தாலும் அப்பா அப்பாத்தானே, அதனால் பார்த்துவிட்டு வரலாம் என்று மீண்டும் அவருக்கு 'எப்போது அவர் ஃபிரியாக இருப்பார்' என்று தெரிந்து கொள்ள போன் செய்தேன்.

எடுத்தது அவரின் பெண். அவரை கூப்பிட சொன்னேன். 

அந்த பெண் உடனே இப்படி பதில் சொன்னார்,

"My Father has passed away last week"

என் இதயம் சுக்கு நூறாகி போனது. அடுத்த வாரம் அவர் பையனுக்கு கல்யாணம்.

ஆண்டவா ஏன் இப்படி?

Sep 9, 2011

கண் ஆஸ்பத்திரி!


அம்மா ரொம்ப நாளா அவங்களோட கண்ணாடியை மாத்தணும்னு சொல்லிட்டு இருந்தாங்க. இந்த தடவை ஒரு நல்ல கண் டாக்டர்கிட்ட கூட்டிப் போய் காண்பித்து முறையாக கண்ணாடியை மாற்றிவிடலாம் என்று முடிவு செய்தேன். அப்பா காலத்தில் திருச்சியில் உள்ள ஜோசப் கண் ஆஸ்பத்திரிக்கு செல்வது வழக்கம். அங்கே டாக்டர் ராஜசேகரன் மிகவும் நன்றாக பார்ப்பார். நான் கல்லூரி முடித்திருந்த நிலையில் ஒரு நாள் என் கண்களில் பூச்சி பறப்பது போல் இருந்தது. அவரிடம்தான் சென்றேன். நன்றாக பரிசோதித்துவிட்டு ஒரு கண்ணாடியை போட்டுக்கொள்ளச் சொன்னார். -.05 சிலிண்ட்ரிக்கல் கண்ணாடி என்று நினைக்கிறேன். ஆனால் கண்ணாடி அணியாமலே வேதாத்திரி மகரிஷி கண் பயிற்சி மூலம் சரியாகிவிட்டது. பல வருடங்களாக அந்த கண்ணாடி அப்படியே என்னிடம் உபயோகப்படுத்த படாமல் இருக்கிறது. அவரிடமே அம்மாவைக் கூட்டிச் செல்லலாம் என நினைத்தேன். 

நண்பர் ஒருவர், "இப்போது திருச்சியில் மிகப்பெரிய ஐ கேர் ஆஸ்பத்திரி வந்துள்ளது. அங்கே போயேன்" என்றார். நானும் நேரமின்மை காரணத்தால் வேறு யாரிடமும் விசாரிக்காமல் அடுத்த நாளே அங்கே செல்ல முடிவெடுத்தேன். ரொம்ப கூட்டம் இருக்கும் என்று சொன்னதால் காலை 8 மணிக்கு கிளம்பி அங்கே செல்லும்போது 8.30 ஆகிவிட்டது. மிகப் பெரிய ஆஸ்பிட்டல். சுத்தமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் சீருடை அணிந்த அழகு பெண்கள். சரி, இன்று நன்றாக பொழுது போகும் என்று நினைத்து உள்ளே சென்றோம். அம்மா என்னிடம் மிகத்தெளிவாக, "கண்ணாடியை மாற்ற வேண்டி இருக்குமா என்பதை மட்டும் சரிபார்த்தால் போதும்" என்றார்கள். 

நான் வரவேற்பறையை நெருங்கும் வேலையில் மனைவி, "ஏங்க, நீங்களும் ஒரு தடவை உங்கள் கண்களை செக் செய்து கொண்டால் என்ன" என்றார்கள்.

"எனக்கென்ன?"

"இல்லை, அதிகமா படிக்கறீங்க. பொழுதுக்கும் கம்ப்யூட்டர் பார்க்கறீங்க அதான்"

"வேண்டாம்பா"

"இல்லைங்க, ரீடிங் கிளாஸ்தான் குடுப்பாங்க"

மனைவி வற்புறுத்தவே நானும் என் பெயரை பதிவு செய்தேன். இருவருக்கும் பணம் கட்டினேன். முதலில் அம்மாவை கூப்பிடாமல் என்னைக் கூப்பிட்டார்கள். அம்மாவையும், பிள்ளைகளையும் மனைவியை பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு நான் உள்ளே சென்றேன். எனக்கு பொதுவாக ஆஸ்பத்திரி, டாக்டர் என்றாலே ஒருவித அலர்ஜி. பிபி தாறுமாறாக ஏறும். என்னால் அதை சரிசெய்து கொள்ளவே முடியவில்லை. நான் சென்ற அறையில் அழகான இரண்டு பெண்கள் வரவேற்றார்கள். முதலில் ஒரு சாதனத்தில் (?) என் கண்களை பரிசோதித்தார்கள். பின் இன்னொரு எக்யூப்மெண்ட் மூலமாக...இப்படியே அங்கே ஒரு 20 நிமிடம் ஆனது. நான் எழுத்துக்களை படிக்கச் சொல்வார்கள் அவ்வளவுதான் என நினைத்தேன்.

பின் எழுத்துக்களை படிக்கச் சொன்னார்கள். குறித்துக் கொண்ட அந்த பெண், "உங்களுக்கு பிபி இருக்கிறதா? சுகர் இருக்கிறதா?" என்று கேட்டார். "எனக்கு ஏதும் இல்லை, ஆனால் உங்களைப் பார்த்தால் பிபி வரும்போல் உள்ளது" என்றேன். சிரித்துக்கொண்டே கொஞ்ச நேரம் வெளியில் காத்திருக்கச்சொன்னார்.

பின் அடுத்த அறைக்கு அழைத்து சென்றாகள். அங்கு சில பரிசோதனை செய்தார்கள். முடிந்தவுடன் பிபி செக் செய்ய சொன்னார்கள். அவர்கள் செக் செய்ய ஆரம்பிக்கும் போதே சொன்னேன், "எனக்கு ஒரு ஃபோபியா உள்ளது. பிபி ஏறும். பயந்துவிடாதீர்கள்" என்றேன். செக் செய்த அந்த பெண், "சார், உண்மையாகவே உங்களுக்கு பிபி இல்லையா" என்றார். "ஆம்" என்ற என்னை அதிர்ச்சியுடன் பார்த்து வெளியே காத்திருக்கச்சொன்னார்.

15 நிமிடங்களுக்கு பிறகு டாக்டர் அழைப்பதாக ஒரு பெண் சொன்னார். உள்ளே சென்றேன். ஒரு லேடி டாக்டர். எல்லா ரிப்போர்ட்களையும் பார்த்தார். 

"நீங்கள் கண்ணாடி உபயோக்கிறீர்களா?"

"இல்லை, டாக்டர்"

"எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது. இப்போது நீங்கள் கண்ணாடி உபயோகிக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் 10 வருடங்கள் கழித்துக்கூட கண்ணாடி அணியலாம்"

"நன்றி டாக்டர்"

"ஆனால், இன்னொரு பரிசோதனை செய்ய வேண்டும்" என்றார். 

"சரி" என்றவுடன், பக்கத்தில் இருந்த இன்னொரு எக்யூப்மெண்டில் பரிசோதனை செய்தார்.

"நீங்கள் நைட் ஷிப்ட் பார்ப்பீர்களா?"

"இல்லை"

கொஞ்ச நேரம் பரிசோத்துவிட்டு, "எல்லாம் நார்மலாகத்தான் இருக்கிறது. ஆனால் கண்களில் பிரஷர் இருப்பது போல் தெரிகிறது. அதனால் ஒரு ஸ்கேன் செய்ய வேண்டும்"

"டாக்டர், நீங்கள் பிபியை சொல்கின்றீர்களா?"

"இல்லை அது வேறு இது வேறு"

"அவசியம் ஸ்கேன் செய்ய வேண்டுமா?"

"ஆம்"

"எங்கே?"

"இவர் கூட்டிச்செல்வார்"

அடுத்து ஒரு பெண் வந்தார். என்னை கூட்டிச்சென்றார்.

"எங்கே செல்ல வேண்டும்?" என்றேன்.

"முதலில் ரிசப்ஷன் சென்று நீங்கள் 500 ரூபாய் பணம் கட்ட வேண்டும்" என்றார்.

நொந்து போய் 500 ரூபாய் பணம் கட்டினேன். பின் ஸ்கேன் ரூமிற்கு கூட்டிச் சென்றார். நிறைய வயர்களாக இருந்தது. கண்களில் ஒரு லோஷனை ஊற்றினார். "சார், கொஞ்ச நேரத்துல மரத்து போகும்" என்றார். பின் ஒரு ஒயர் போன்ற ஒன்றை எடுத்து கண்களின் ஒவ்வொரு பகுதியையும் குத்தி குத்தி ரீடிங் பார்த்தார். அப்படியே இரண்டு கண்களிலும். எல்லாம் முடிந்தவுடன் பிரிண்ட் எடுக்க பட்டனை அழுத்தினார். பிரிண்டர் வேலை செய்யவில்லை. பின் என்னென்னவோ செய்து பார்த்தார். முடியவில்லை. பின் யாரையோ அந்த பெண் தொலைபேசியில் அழைத்தார். 10 நிமிடத்தில் வந்த பெண் சரி செய்தார். ஆனால், எல்லா ரீடிங்கும் அழிந்து போய்விட்டது. பின் மீண்டும் அந்த பரிசோதனையை ஆரம்பித்தார். எனக்கு வந்த கோபத்துக்கு அளவே இல்லாமல் போனது. மீண்டும் குத்தல் குத்தல்......

15 நிமிடம் கழித்து டாக்டர் கூப்பிட்டார். பயத்துடன் அவரை நோக்கினேன்.

"எல்லாம் நார்மலா இருக்கு. பிரஷர் எல்லாம் ஒண்ணும் இல்லை"

"தேங்க்ஸ் டாக்டர்"

"ஆனா நீங்க கண்ணாடி போட்டுக்கறது நல்லது"

"வேணாம்னு சொன்னீங்களே"

"ஆமாம். இருந்தாலும், இந்த கிளாஸ்ல படிச்சு பாருங்க. எப்படி இருக்கு"

"நல்லா இருக்கு"

"கண்ணாடி இல்லாம படிங்க, எப்படி இருக்கு"

"கண்ணாடி இல்லாமையும் நல்லாத்தான் இருக்கு"

"இருந்தாலும் போட்டுக்கங்க. நம்ம ஆப்டிக்கல்ஸ்லேயே கண்ணாடி வாங்க்கிக்கங்க"

ரீடிங் கிளாஸ் 100 ரூபாய்தானே என்று நானும் நினைத்து சரி என்றேன். 

கிளம்புமுன் கூப்பிட்டு, "வருடம் ஒரு முறை இது போல் செக் செய்து கொள்ளுங்கள்"

"டாக்டர், நான் வந்தது எங்க அம்மாவிற்காக, தெரியாமல் என் பெயரை கொடுத்து தொலைத்துவிட்டேன்" என்று கோபத்துடன் வெளியே வந்தேன்.

கண்ணாடி ஆர்டர் கொடுத்தேன். கண்ணாடி ரெடியாக மூன்று நாட்கள் ஆகும் என்றார்.

"நான் நாளை மறுநாள் மலேசியா போகிறேன் அதனால் உடனே வேண்டும்" என்றேன்.

மாலை வரச் சொன்னார்கள். மாலை சென்றேன். கண்ணாடியின் விலையை பார்த்து அதிர்ந்து போனேன். 4000 ரூபாய்.

அம்மாவிற்காக போனேன். கடைசியில் அம்மாவிற்கு கண்ணாடியை மாற்ற வேண்டாம் என்று சொல்லிவிட்டார்களாம். வேறு ஏதேதோ டெஸ்ட்கள் செய்ய சொல்லி இருக்கிறார்கள். அம்மா மிகவும் தீர்மானமாக, "நான் வந்தது கண்ணாடியை மாற்றத்தான். அது தேவையில்லை என்று சொல்லிவிட்டீர்கள். அதனால் வேறு டெஸ்ட்கள் வேண்டாம்" என்று சொல்லி தப்பித்துவிட்டார்கள்.

அம்மாவுக்கு ஆன செலவு வெறும் 60 ரூபாய். எனக்கு ஆன செலவு 4,560 ரூபாய். நண்பர்களிடம் வந்து விசயத்தை சொன்னேன். எல்லோரும் என்னை திட்டினார்கள். பின் தெரிந்து கொண்டேன், "போகும் எல்லோருக்கும் அனைத்து டெஸ்ட்களையும் செய்ய சொல்லி பயமுறுத்துகிறார்கள்" என்று.

சந்தக்கடை போல் அங்கே வேலை பார்க்கும் அத்தனை பேருக்கும் எப்படி சம்பளம் கொடுக்கிறார்கள் என்று இப்போது நன்றாக புரிந்து கொண்டேன். சரி, வாங்கிய கண்ணாடியாவது நன்றாக இருக்கிறதா? என்று பார்த்தால், என்னால் ஒரு நிமிடம் போட்டு படிக்க முடியவில்லை. கண்ணாடியை போட்டுக்கொண்டு நடந்தால் நடை தடுமாறுகிறது.

என் பழைய கண்ணாடிக்கும் ஒரு புது நண்பர் கிடைத்துவிட்டது. ஆம், நான் இப்போது வாங்கிய புதுக்கண்ணாடியும் பழைய கண்ணாடி இருக்கும் இடத்துக்கே சென்று விட்டது.

புத்தி கொள்முதல்! என்னத்த சொல்ல?
Sep 7, 2011

வீடு..


கொல்லைப் புறமாக வீட்டினுள் நுழைந்து கிணத்தடிக்கு சென்ற ராமசாமியை அவர் மனைவி ராஜம், "ஏன்னா, ஒரு வாய் காப்பி கூட குடிக்காம அப்படி எங்க அவசரமா போயிட்டு வரேள்?"

"நம்ம கோடிவீட்டு குமார் ஒரு வீடு கட்டிட்டு இருக்கானோல்லியோ"

"ஆமாண்ணா தெரியும்?"

" அடுத்த வாரத்துல கிரஹப்பிரவேசம் வைச்சுருக்கான். நேத்து ராத்திரி வீடு முழுசா மார்பிள்ஸ் போட்டுண்டு இருந்துருக்கா. திடீருனு என்ன பிரச்சனையோ தெரியலை, மார்பிள் போட்டுட்டு இருந்தவனை அங்க வந்த கொத்தனார் குத்தி கொன்னுட்டானாம். தெருவே அல்லோகலப்படுது. அதான் ஒரு நடை போய் பார்த்துட்டு வரேன்"

"என்ன கொடுமையின்னா இது. பாவம், இனி யாரு அந்த வீட்டுல குடியிருப்பா. சரி, நீங்க சீக்கிரம் குளிச்சிட்டு வாங்கோ..டிபன் எடுத்து வைக்கிறேன்"

"ஆமாம் ராஜம், சீக்கிரம் டிபன் எடுத்து வை. நானும் நம்ம பிளாட்டு வரை ஒரு நடை போயிட்டு வரேன்"

குளிக்கும் போது ராமசாமியின் நினைவுகள் சற்று பின்னோக்கி சென்றது. தான் வீடு கட்ட ஆரம்பித்ததிலிருந்து ஏற்பட்ட பிரச்சனைகளை சற்றே அசை போட்டார்.

ராமசாமி  அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஒரு சாதாரண குமாஸ்தா. அவருக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் அதில் இரண்டு பெண்கள். ஆண் பிள்ளை ஒன்றாவது வேண்டும் என்று முயற்சி செய்து கடைசியில் வெற்றியும் பெற்றுவிட்டார். ராமசாமி பிறந்ததிலிருந்து இந்த ஒண்டி குடித்தனத்தில்தான் வாடகைக்கு இருக்கிறார். ஒரு கிச்சன், ஒரு பெட்ரூம் அதுவே ஹாலும் மற்றும் ஒரு திண்ணை அவ்வளவுதான் வீடு. ஆரம்பத்தில் அவ்வளவு கஷ்டம் தெரியவில்லை. பெண் பிள்ளைகள் பெரியவர்கள் ஆக சின்ன வீட்டில் வசிக்கும் கஷ்டம் தெரிய ஆரம்பித்தது.  

ராமசாமி மிகவும் கண்டிப்பானவர். ஒருவிதமான கொள்கையுடன் வாழ்பவர். 
எதிலுமே ஒரு நேர்த்தியை எதிர்பார்ப்பவர். எல்லாமே சரியாக ரூல்ஸ் படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர். அதே போல் நடந்து காட்டுபவர். லஞ்சம் வாங்காதவர் என்று பெயரெடுத்தவர். அவருக்கு ஏற்றார் போல் மனைவி. அதிர்ந்து பேசமாட்டார். ராமசாமி என்ன சொல்கிறாரோ அதே வேதவாக்கு என்று வாழ்பவர்.

ராமசாமிக்கு அவர் தாத்தா வழியில் பூர்வீக சொத்தாக ஊருக்கு ஒதுக்கு புறத்தில் ஒரு காலி மனை இருந்தது. பல வருடங்கள் அவருக்கு அந்த மனை எங்கு இருக்கிறது என்றே தெரியாது. பக்கத்து வீட்டு கோபாலு அய்யர் ஒரு நாள், 

"ஓய், போய் உன் மனையை பாரும். எவனாவது குடிசை போட்டுடப் போறான்" என்று பயத்தை ஏற்படுத்தவே ஒரு நாள் சென்று பார்த்தார். நல்ல வேளை. யாரும் வீடு கட்ட ஆரம்பிக்கவில்லை. கோபால் அய்யர்தான் அந்த ஆசையை கிளைப்பிவிட்டார்,

"ஏன் ஓய் , அந்த மனையில ஒரு வீட்டை கட்ட வேண்டியதுதானே"

"பணத்துக்கு நான் எங்க ஓய் போறது"

"இரண்டு பொட்டப் பிள்ளைகள வைச்சிருக்கிறீர். பேசாம, கடன ஒடன வாங்கி ஒரு சின்ன குடிசையாவது கட்டப்பாரும்"

அன்றிலிருந்து ராமசாமிக்கும் வீடு கட்டும் ஆசை வர ஆரம்பித்துவிட்டது. ராஜத்திடம் விசயத்தை சொன்னார். 

"ஆமாண்ணா, அவர் சொல்றது சரிதான். எப்படியாவது சின்னதா ஒரு வீடு கட்டுவோம்'

"பணத்துக்கு எங்கடி போறது?''

"பிஎஃப்ல கொஞ்சம் பணத்தை எடுங்கோ. நான் என் நகைகள் எல்லாத்தையும் தரேன். கொஞ்சம் கடனை வாங்குங்கோ"

"எல்லாத்தையும் வீட்டுக்கே செலவழிச்சுட்டா, பொட்ட புள்ளைங்கள எப்படி கரை ஏத்தறது"

"அதெல்லாம், நடக்கற படி நடக்கும். பெருமாள் இருக்கார். அவர் பார்த்துப்பார்"

ராமசாமி அன்றிலிருந்து யோசிக்க ஆரம்பித்தார். ராஜமும் தினமும் அவரிடம் பேசிப் பேசி அவர் மனதை கரைத்தார். எல்லா சேமிப்புகளையும் எடுத்து, அங்கே இங்கே கடனை வாங்கி ஒரு வழியாக, ஒரு சுபயோக சுப தினத்தில் வீடு கட்ட பூஜை போட்டார். குறைந்த அளவே பணம் இருந்ததால் ஒரு 700 சதுர அடியில் வீடு கட்ட முடிவெடுத்தார்.

பூஜை போட்ட நாளிலிருந்து அவர் வாழ்க்கையே மாறிப்போய்விட்டது. அவர்கள் பரம்பரையிலேயே  அவருக்குத் தெரிந்து ராமசாமிதான் முதன் முதலில் சொந்த வீட்டில் குடிப்போக போகிறார்.

ஆபிஸ் விட்டதும் நேரே வீடு கட்டும் இடத்திற்கு சென்றுவிடுவார். எல்லோர் கூடவும் சேர்ந்து வேலை பார்ப்பார், கட்டிடத்திற்கு தண்ணீர் ஊற்றுவார். கொத்தனார், "அய்யரே, நீங்க எதுக்கு இந்த வேலை எல்லாம் செய்யறீங்க?. அதெல்லாம் நாங்க பார்த்துக்க மாட்டோமா?" என்று கேட்டால்,

"என் வீட்டுக்குத்தானே நான் செய்யறேன்" என்று சொல்லுவார். விடுமுறை நாட்களிலும் பிளாட்டில்தான் இருப்பார். ஏறக்குறைய ஒரு வருட வாழ்க்கையின் பெரும்பகுதியை அங்கேதான் கழித்தார். எப்போவாவது அவருடன் அவர் மனைவி ராஜமும், பெரிய பெண்ணும் வந்து வேலை பார்ப்பார்கள். மற்ற பிள்ளைகள் மணலில் விளையாடுவது வழக்கம். இருந்தாலும் ராமசாமிதான் வீடே கதி என்று கிடப்பார்.

ஒருவழியாக அவர் கனவு நினைவாகும் அந்த நாளும் வந்தது. வீட்டில் ஏறக்குறைய எல்லா வேலைகளும் முடிந்திருந்தன. சின்ன சின்ன வேலைகள்தான் பாக்கி இருந்தன. கிரஹப்பிரவேசம் முடிந்து வீட்டிற்கு குடிபோனவுடன் மற்ற வேலைகளை பார்க்கலாம் என முடிவெடுத்தார்.

"என்னங்க, எவ்வளவு நேரம் குளிப்பீங்க" என்று ராஜம் சத்தம் போட்டவுடன் தான் தான் ரொம்ப நேரமாக யோசனையில் இருந்ததே அவருக்கு தெரிந்தது. விறுவிறு என்று குளித்துவிட்டு, புது வீட்டிற்கு செல்ல ஆயத்தமானார். ஒரு முறை சென்று பார்த்துவிட்டு கிரஹப்பிரவேசத்திற்கான நாளைக் குறிக்க தீர்மானித்தார்.

அவர் புது வீட்டிற்கு கிளம்ப எததனிக்கையில், வீட்டிற்கு வெளியே ஒரே சத்தமாக இருக்கவே, ராமசாமி வெளியே வந்து பார்த்தார். வாசலில் நிறைய பேர் கோபத்துடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

வெளியூர்காரர்கள் போல இருந்தார்கள். யாரும் பார்த்த முகமாக இல்லை. இவர் என்ன ஏது என்று விசாரிக்கும் முன்பே அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் விசயத்தை ஆரம்பித்தார்.

"யோவ் அயிரே, நீ என்ன பண்ணியிருக்க தெரியுமா?"

'என்ன?' என்பது போல் பாவமாக பார்த்தார் ராமசாமி.

"உன் இடத்துல வீடு கட்டாம என் இடத்துல வீடு கட்டியிருக்க"

"இல்லையே, என் இடத்தில்தானே கட்டியிருக்கேன்" என்றார் சற்று கோபமாக. அவர் என்னதான் பதில் சொன்னாலும் அந்த செய்தி தலையில் இடி விழுந்தது போல் இருந்தது. 

சத்தம் கேட்டு வந்த கோபால் அய்யர், அவர்களை சமாதானப்படுத்த முயற்சிக்க, அதில் ஒருவர் கோபால் அய்யரிடம் பஞ்சாயத்து அப்ரூடு ப்ளேனை காண்பித்தார். ராமசாமிக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அப்படியே கீழே அமர்ந்தார்.

கோபால் அய்யர்தான், 'என்னவோய் அவா சொல்றது சரியா இருக்கும் போல இருக்கே? எதுக்கும் ஒரு நடை இடத்தை போய் பார்த்துட்டு வந்துடலாம்" என்றார்.

எல்லோரும் சேர்ந்து கிளம்பினார்கள். அங்கு சென்று சரி பார்த்த போதுதான் ராமசாமி தன் வீட்டை அடுத்த மனையில் கட்டியிருக்கும் உண்மை தெரிந்தது. ராமசாமியால் அந்த அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. குழம்பிப்போனார். எல்லோரும் கூடிப் பேசினார்கள்.

ராமசாமி கட்டிய வீட்டை தான் வைத்துக்கொள்வதாகவும், தன் இடத்தை அவர்களுக்கு எழுதித் தருவதாகவும் கூறினார். ஆனால், அவர்கள் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அவர்கள் வாங்கிய இடம் ராசி, வாஸ்து எல்லாம் பார்த்து வாங்கியதாகவும், அந்த இடத்தில் போய் ராமசாமி வீட்டை கட்டிவிட்டதாகவும் கூறி மறுத்துவிட்டனர். பிரச்சனை தீவிரமாகி கைகலப்பு ஆகும் சூழல் வரும்போல் ஆனது.

கோபால் அய்யர்தான் ராமசாமி சார்பாக அவர்களிடம் பேசினார். முடிவில்,

"நீங்கள் வேண்டுமானால் அந்த வீட்டை வாங்கிக்கொள்ளுங்கள். ராமசாமி இதுவரை செலவழித்த தொகையை அவருக்கு கொடுத்துவிடுங்கள்" என்று அவர்களிடம் பேசிப்பார்த்தார்.

முதலில் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை. 'நாங்கள் எங்கள் ஆசைக்கு ஏற்ப வீடு கட்ட நினைத்திருந்தோம். நீங்கள் கட்டிய வீடு எங்களுக்கு வேண்டாம்' என்றனர். நீண்ட யோசனைக்குப்பிறகு, வீட்டை அவர்கள் பெயருக்கு மாற்ற ஏற்படும் செலவுத் தொகையையும், பேங்கிலிருந்து டாக்குமெண்ட் வாங்க ஆகும் செலவையும், ராமசாமிதான் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், இருந்தாலும் இறுதி முடிவை காலையில் சொல்வதாக சொல்லி சென்றார்கள். ராமசாமிக்கும், கோபால் அய்யருக்கும் நன்றாகவே தெரிந்தது, அப்படியே அவர்கள் ஒப்புக்கொண்டாலும், குறைந்த விலைதான் தருவார்கள் என்று.

சித்த பிரமை பிடித்தவர் போல் வீட்டுக்கு வந்த ராமசாமியை, உள்ளுக்குள் வேதனை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாத ராஜம்,

"ஏங்க இப்படி இருக்கீங்க. அதான் பணம் கொடுக்கப்போறாங்கள்ல. நாம வேற வீட்டை கட்டிக்கொள்ளலாம்" என்று தேற்ற முயன்றார். 

ஆனால் அவரோ எதையும் கேட்கும் நிலையில் இல்லை. அப்படியே உட்கார்ந்திருந்தார். சாப்பிடக் கூப்பிட்டு பார்த்து ஓய்ந்துவிட்டார் ராஜம். சரி காலையில் சரியாகிவிடுவார் என்று நினைத்து ராஜம் தூங்க சென்றுவிட்டார்.

இரவு ஒரு பத்து மணி இருக்கும். திடீரென எழுந்தார். விறு விறு என்று தெருவில் நடந்தார். புது வீட்டை நோக்கி சென்றார். ராஜம் தூங்கிக்கொண்டு இருந்தார். 

காலையில் எழுந்த ராஜம் படுக்கையில் ராமசாமியைக் காணாமல் தேட ஆரம்பித்தார். எங்கேயும் இல்லாமல் போகவே கோபால் அய்யரை கேட்க பதட்டத்துடன் பக்கத்து வீட்டுக்கு சென்றாள்.

அப்போது பால்காரன் கோபால் அய்யரிடம், பதட்டத்துடன் ஏதோ சொல்ல, அவரும் பதறி அடித்துக்கொண்டு ஓடினார். ராஜத்துக்கு ஏதோ விபரீதம் தோன்றவே அவரும் பின்னால் ஓடினார்.

கோபால் அய்யர் ராமசாமியின் புதுவீட்டுக்கு வந்து நின்றார். ஒரே கும்பலாய் இருக்கவே, விலக்கிவிட்டு பார்த்தார். அங்கே புது வீட்டின் நடு ஹாலில் ராமசாமி...தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார்.

"என்னண்ணா.." என்று கத்திக்கொண்டே ராஜம் மாமி மயக்கம் போட்டு விழுந்தார்.

"பாவம், இனி யாரு அந்த வீட்டுல குடியிருப்பா" என்று பக்கத்தில் பேசிக்கொண்டிருப்பது ராஜம் மாமியின் காதில் லேசாக விழுந்தது. 

Sep 5, 2011

கொஞ்சம் அதிகப்படியான அன்பு!கடந்த மாதத்தின் ஒரு நாள் மாலை தொலைப்பேசி அழைப்பு ஒன்று வந்தது. "Unknown Number" என்று இருந்தது. இருந்தாலும் அழைப்பை எடுத்தேன். பார்த்தால் ஒரே ஆச்சர்யம். என்னுடன் ஒன்பதாம் வகுப்பிலிருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்த நண்பர் ஒருவர் எப்படியோ என் நம்பரை கண்டு பிடித்து அழைத்திருக்கிறார். அதிக நேரம் பேசினோம். அவரும் எங்கள் கல்லூரி விழாவிற்கு வருவதாக இருந்தது. 25 வருடங்கள் கழித்து நிறைய பேசினோம். பின் தினமும் போனில் அழைக்க ஆரம்பித்தார். அவர் ஒரு இன்சுரன்ஸ் கம்பனியில் வேலை பார்ப்பதாக கூறினார். இரண்டு நாட்களுக்கு பிறகு ஊருக்கு வரும்போது என்னை ஒரு பாலிஸி போடும்படி கூறினார். என்னுடைய பாலிஸி ஒன்று முடிந்திருந்தது. அதைப் பற்றி சொன்னேன். பாலிஸி நம்பரைக் கேட்டார். குறுஞ்செய்தியில் அனுப்பினேன். அடுத்த நாளே, 'எவ்வளவு பணம் வரும்' என்று இன்னொரு நண்பர் மூலம் மெயில் அனுப்பினார். ஊருக்கு வந்ததும் பாலிஸியை கொடுக்கச்சொன்னார். சில காரணங்களால் என்னால் குறிப்பிட்ட தேதியில் திருச்சி செல்ல முடியவில்லை. பின் வருத்தப்பட்டு ஒரு மெயில் அனுப்பினார்.

சென்ற மாதத்தின் கடைசி வாரம் திடீரென முடிவு எடுத்து ஒரு வார பயணமாக திருச்சி சென்றேன். ஒரு வாரத்தில் ஏகப்பட்ட வேலைகள். நண்பர் எங்கள் வீட்டிற்கு தொடர்பு கொண்டு நான் இந்தியா வருகிறேனா? என்று கேட்டுள்ளார். என் அம்மாவும் நான் வரும் தேதியை சொல்லி இருக்கின்றார். இந்த விசயம் எனக்குத் தெரியாது. நான் வீட்டிற்கு சென்ற உடனேயே நண்பர் போன் செய்ததாக அம்மா கூறினார். நான் இரவு முழுவதும் தூங்காத காரணத்தால் அம்மாவிடம், நான் பிறகு அவரிடம் பேசுகிறேன் என்று சொல்லிவிட்டு தூங்க சென்றுவிட்டேன். இரவு நான் வெளியே சென்றுவிட்டேன். வீட்டிற்கு வந்ததும் நண்பர் இரண்டு முறை போன் செய்ததாக கூறினார்கள். எனக்கு ஒருவித வெறுப்பு வந்தது. அவருடைய நம்பர் வேறு என்னிடம் இல்லை. கம்ப்யூட்டரில்தான் இருக்கும். சரி, காலையில் பேசிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டேன்.

அடுத்த நாள் அதிகாலை 3 மணியிலிருந்து வேலை. காலை 8 மணிக்கு புது வீட்டில் காண்கிரீட் போட ஆரம்பித்தார்கள். நான் மொட்டை மாடியில் கம்பியின் மேல் நின்று கொண்டிருந்தேன். அப்போது என் மலேசிய செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. பொதுவாக இந்தியா வந்துவிட்டால் மலேசிய மொபைலை பயன்படுத்துவதில்லை. மெயில்கள் மட்டுமே பார்ப்பேன். காரணம், ரோமிங் சார்ஜ் மிக அதிகம். ஏதோ நினைவில் எடுத்துவிட்டேன். பார்த்தால், அந்த நண்பர் அழைக்கிறார். திருச்சியிலிருந்து மலேசிய நம்பரின் மூலம் லால்குடியில் இருக்கும் என்னிடம் பேச அழைத்திருக்கிறார். எனக்கு கடும் கோபம் வந்துவிட்டது. பிறகு பேசுகிறேன் என்று சொல்லி வைத்துவிட்டேன்.

மதியம் வீட்டிற்கு வந்தேன். அம்மா என்னிடம், "ராணிப்பேட்டை இன்சுரன்ஸ் ஆபிஸிலிருந்து அழைத்தார்கள். உன்னுடைய பாலிஸியை வாங்குவதற்காக திருச்சி ஆபிஸிலிருந்து பிரசாத் என்பவரை வீட்டிற்கு அனுப்புகிறார்களாம்" எனக்கு ஒரே குழப்பம். நான், "ஏன் எல்லோரிடமும் நான் வந்ததை சொல்கின்றீர்கள். நான் இல்லை என்று சொல்ல வேண்டியதுதானே?" என்று சத்தம் போட்டேன்.

பிறகு மதியம் இரண்டு மணிக்கு ஒரு போன் வந்தது. எடுத்தால், "சார், நான் ராணிப்பேட்டையில் இருந்து இன்சுரன்ஸ் கம்பனி பிராஞ்ச் மேனேஜர் சீனிவாச ராகவன் பேசறேன். உங்க பாலிஸி ஒண்ணு மெச்சூர் ஆகி நான்கு மாசம் ஆயிடுச்சு. உடனே பணத்தை வாங்கிக்கங்க. இல்லைன்னா எங்க ஆடிட்டிங்ல பிரச்சனை வரும். நான் எங்க திருச்சி ஆபிஸிலிருந்து பிரசாத்னு ஒருத்தர அனுப்புறேன். அவர்கிட்ட ஒரிஜினல் பாலிஸியையும், டிஸ்சார்ஜ் பார்மையும் கையெழுத்து போட்டு கொடுங்க. இரண்டு நாள்ல செக் வந்துடும்"

" எங்க வேணா பணம் வாங்க்கிக்கலாம் இல்லையா? ஏன் ராணிப்பேட்டைக்கு அனுப்ப வேண்டும்" என்றேன்.

"இல்லை சார். நீங்க ராணிப்பேட்டையில பாலிஸி எடுத்துருக்கீங்க. உங்க பைல் இங்கதான் இருக்கு. அதனால நீங்க இங்கதான் அனுப்பனும்"

"சார், யாரைப் பார்த்தாலும் பாலிஸி போடுங்கன்னு தொந்தரவு செய்யறாங்க. அதனால திருச்சி ஆபிஸிலிருந்து வரவர்கிட்ட சொல்லி அனுப்புங்க. அவர் வேற பாலிஸி போடுங்கன்னு தொந்தரவுப்பண்ணப் போறாரு"

"இல்லை சார், யாரும் அப்படி கேட்க மாட்டாங்க"

"சரி, அப்படின்னா வரச்சொல்லுங்க"

பிறகு ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் மாருதி காரில் வந்தார்.

"சார் நீங்க?"

"என் பெயர் பிரசாத். திருச்சிலே இருந்து வரேன்"

"அப்படியா. உள்ள வாங்க"

"ராணிப்பேட்டையில் இருந்து போன் பண்ணாங்களா"

"ம்ம் பண்ணாங்க"

"ரெவன்யூ ஸ்டாம்ப் ஒட்ட கோந்து இருக்குங்களா"

"இருங்க பார்க்கறேன்"

எடுத்து கொடுத்தேன். ஸ்டாம்பை ஒட்டியவர்,

"சார், இந்த பார்ம்ல ஒரு கையெழுத்து போடுங்க"

"சரி..."

"இருங்க, ஸ்டாம்ப் காயட்டும். அதுக்குள்ள உங்க ஒரிஜினல் பாலிஸியை எடுத்து வாங்க"

பாலிஸியை எடுக்க போனவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது. நான் மலேசியாவில் இருந்து லால்குடிக்கு வந்து இருப்பது எப்படி ராணிப்பேட்டையில் உள்ள இன்ஸ்யூரன்ஸ் கம்பனி பிரான்ச் மேனஜருக்குத் தெரியும்? யோசித்துக்கொண்டே, அவரிடம் பாலிஸியை கொடுக்கும் போது,

"சார், யாரோ ராணிப்பேடையில் இருந்து போன் பண்ணறாங்க. நீங்க திருச்சியில் இருந்து வந்துருக்கீங்க. நீங்க யாருன்னு எனக்குத் தெரியாது. நான் எப்படி உங்களை நம்பி ஒரிஜினல் பாலிஸியைத் தருவது?" என்று கேட்டேன்.

அதுவரை கூலிங் கிளாஸ் அணிந்திருந்தவர், கண்ணாடியை கழட்டி விட்டு, "நான் யாரென்று இப்போது பாருங்கள்" என்றார்.

என்னால் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. பிறகு அவரே தன் பெயரை கூறினார். என்னுடைய ரத்தக்கொதிப்பு எகிற ஆரம்பித்தது.

அவர் வேறு யாரும் இல்லை. நான் மலேசியாவில் இருக்கும் போது போன் பண்ணியவரும் அவர்தான். லால்குடியில் இருக்கும்போது சீனிவாச ராகவன் என்று பெயர் சொல்லி ராணிப்பேட்டையில் இருந்து பேசுவதாக சொன்னதும் அவர்தான். பிரசாத் என்று வந்தவரும் அவர்தான். 25 வருடம் ஆகிவிட்டதால் அடையாளம் தெரியவில்லை.

"ஏன் இப்படி நாடகம் ஆடினாய்?" என்று கோபத்தை கட்டுபடுத்திக்கொண்டு கேட்டேன்.

"இல்லை உன்னை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று தோணுச்சு. அதான். நீயோ போனை எடுக்கலை. அதான் ஒரு டிராமா போட்டேன்"

"25 வருடம் கழித்து பார்க்கும் முறை இதுதானா? ஒவ்வொருவரையும் பார்க்க ஒரு முறை இருக்கிறது. நானே உன்னை பார்க்கலாம் என்று இருந்தேன். ஆனால் இப்படி அல்ல. தூக்க கலக்கத்தில் லுங்கியுடன் நான் யாரையுமே பார்க்க விரும்பியதில்லை. நான் யாரைப் பார்க்க போனாலும் முறைப்படி அனுமதி வாங்கிகொண்டுதான் போவேன். இப்படி அல்ல"

"நான் பாலிஸி போட சொல்லுவேன் என்று நீ ஒதுங்குகிறாய்"

"உண்மையாக இருக்கலாம். நான் இந்தியா வரும்போது எல்லாம் எனக்கு இரண்டுவிதமான நபர்களால் தொல்லை ஏற்படுகிறது.  ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் மற்றும் LIC, SBI Unit Plan Insurance officerகள். இவர்கள் என் விடுமுறையின் பல நாட்களை சாப்பிட்டு விடுகிறார்கள். புரோக்கர்களாவது பரவாயில்லை. இந்த இன்ஸ்யூரன்ஸ் மக்கள் தரும் தொல்லை கொஞ்ச நஞ்சம் அல்ல" என்றேன்.

பிறகு மூன்று மணி நேரம் பல கதைகளை பேசிக்கொண்டு இருந்தோம். கோபம் சிறிது குறைந்தது. சரி, நம்மை அன்போடு பார்க்க வந்திருக்கிறார் என்று மனதில் உள்ள கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டேன்.

நண்பர் விடை பெறும்போது, "இந்த முறை முடியாவிட்டாலும் அடுத்த முறையாவது ஒரு பாலிஸி என்னிடம் போட்டுவிடு. நல்ல நல்ல இன்வெஸ்ட்மெண்ட் ஸ்கீம் எல்லாம் எங்களிடம் உள்ளது. அவசியம் என்னிடம் பேசு" என்றார்.

"அவசியம் அடுத்த முறை பாலிஸி போடுகிறேன்" என்றேன்.

நான் ஏற்கனவே சனியன் பிடிச்ச SBI Unit Linked  Insurance Plan போட்டு நிறைய பணம் இழந்துவிட்டேன். இனி யாரிடமும் ஏமாறுவதாய் இல்லை. அதிலும் நண்பரின் நாடகத்திற்கு பிறகு இனி எந்த இன்ஸ்யூரன்ஸிலும் பணம் போடுவதாய் இல்லை.

அவர் என்னதான் என்னைப் பார்க்க மட்டுமே அப்படி நாடகமாடியதாய் சொன்னாலும், என்னையும் என் அம்மாவையும் ஏமாற்றி அவர் என்னை சந்திக்க வந்ததை என்னால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. அவர் 25 வருடங்களுக்கு முன் என் நெருங்கிய நண்பர்தான். இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக இப்படி என்னை ஏமாற்றலாமா?

அவரும் இந்த கட்டுரையை படிப்பார் என நினைக்கிறேன். படிக்கட்டும் அப்போதுதான் என் வேதனை அவருக்குத்தெரியும். இதனால் அவரைப் பற்றி என் மனதில் கட்டி வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது.

நண்பர்களே, நீங்களே சொல்லுங்கள் அவர் என்னை சந்தித்த முறை சரியா?