Sep 21, 2011

மிக்ஸர் - 21.09.2011


மங்காத்தா படம் பார்க்க வேண்டும் என்று இரண்டு மாதமாக ஆசைப்பட்டேன். படம் ரிலீஸான அடுத்த நாள் திருச்சியை விட்டு கிளம்பியதால், உடனே பார்க்க முடியவில்லை. சரி, மலேசியாவில் பார்த்துக்கொள்ளலாம் என வந்துவிட்டேன். அதற்குள் எல்லோரும் படம் சூப்பர் என்று புகழ்ந்து தள்ளவே, போன சனிக்கிழமை படம் பார்க்க முடிவு செய்து, வியாழக்கிழமை ஆன் லைனில் பார்த்தால் படம் இல்லை. சரி 15 நாளில் எடுத்துவிட்டார்கள் போல என நினைத்து விட்டுவிட்டேன். வெள்ளிக்கிழமை இன்னொருமுறை செக் செய்து பார்க்கலாம் என்று பார்த்தால் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. உடனே டிக்கட் புக் செய்து கிரெடிட் கார்ட் மூலம் பணமும் செலுத்தும்போதுதான் என் பெண் கூறினாள், "டாடி படம் 18+னு போட்டுருக்கு"  நல்ல வேளை பணம் செலுத்தவில்லை. 18+ படம் என்றால் கண்டிப்பாக குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது. அதனால் என்னால் படத்தை இன்னும் பார்க்க முடியவில்லை. 18+ போடும் அளவிற்கு அவ்வளவு வயலண்டாகவா படம் இருக்கிறது?

*******************************************************

கோலாலம்பூரில் ஒரு டாக்ஸியில் வந்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு விநாயகர் கோயில் வழியாக டாக்ஸி சென்றது. காரை ஓட்டி வந்தவர் ஒரு சைனிஷ் டிரைவர். நான்,

"இந்த கோவிலுக்கு வரவேண்டும் என்று நானும் ஒவ்வொரு முறையும் நினைக்கிறேன். ஆனால், நேரம் இல்லாததால் என்னால் வர முடியவில்லை' என்றேன். 

உடனே அவர், "தயவு செய்து நேரம் இல்லை என்ற காரணத்தை சொல்லாதீர்கள். நேரத்தை நீங்கள்தான் உருவாக்கி கொள்ள வேண்டும். என்ன ஒரு 30 நிமிடம் பிடிக்குமா நீங்கள் உங்கள் ஹோட்டலில் இருந்து இங்கு வர" என்றார். அவர் சொல்வது உண்மை என்பதால் நான் வாயை திறக்கவில்லை. 

அன்று சரியான டிராபிக். டாக்ஸி அந்த கோவில் அருகே கிட்டத்தட்ட 1 மணி நேரம் நிற்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால் இறங்கி வெளியே போய் சாமி கும்பிட முடியாது. காரணம் எங்கும் கார்கள். உடனே அந்த டிரைவர், "பார்த்தீர்களா! நீங்கள் உங்கள் இறைவனை கும்பிட நேரம் இல்லை என்று சொன்னீர்கள். அவனோ உங்களை 1 மணி நேரம் நிற்க வைத்து அவனையும் வழிபடவிடாமல் உங்களை தண்டித்துவிட்டான்" என்றார்.

உடனே நான், "நாந்தான் தப்பு செய்தேன், எனக்கு தண்டனை ஒப்புக்கொள்கிறேன். நீங்கள் என்ன தவறு செய்தீர்கள்? நீங்களும்தானே டிராபிக்கில் இருக்கின்றீர்கள்" என்றேன்.

"அப்படி ஒன்றும் இல்லையே! எனக்கு உங்கள் இறைவன் நல்லதுதான் செய்கிறான். எப்போதும் 7 வெள்ளி வாங்கும் தூரத்துக்கு இப்போது நீங்கள் 25 வெள்ளிகள் தரப்போகிறீர்கள்" என்றார்.

உண்மைதான். 10 நிமிடத்தில் ஹோட்டலை அடைய வேண்டிய இடத்தை 2 மணி நேரம் கழித்து அடைந்து 25 வெள்ளி அவருக்கு கொடுத்தேன்.

*******************************************************

கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக மக்கள் உண்ணாவிரதம் இருப்பதை ஆதரிக்கிறேன். ஆனால் இதே போராட்டத்தை அவர்கள் அந்த திட்டம் ஆரம்பிக்கும் முன்பே செய்திருக்க வேண்டும். இப்போது இத்தனை கோடிகள் செலவழித்த பின் அணுமின் நிலையத்தை மூடுவார்களா என்பது சந்தேகம்தான். எல்லா நாடுகளும் இப்போது அணுமின் நிலையங்களை மூடி வருகின்றன. அமெரிக்கா 1970களிலேயே மூடிவிட்டது. நண்பர் ஒருவர் நம் இந்தியாவில் உள்ள அணுமின்நிலையங்களைப் பற்றியும், அதன் விளைவுகளைப் பற்றியும், ஒரு வேளை ஜப்பானில் ஏற்பட்ட விபத்து போல் இந்தியாவில் ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை படங்களுடன் அனுப்பி இருந்தார். அதை படித்த அன்று தூக்கமே வரவில்லை. அப்படி என்றால் என்ன ஆகும்? என்று புரிந்துகொள்ளுங்கள்.

*******************************************************

எமிலி என்ற ஒரு சிறுமி ஒரு உலகசாதனை செய்திருக்கிறாள். என்ன தெரியுமா? ஒரு மாதத்தில் அதிக பட்ச குறிஞ்செய்தி அனுப்பி உலக சாதனை செய்திருக்கிறாளாம். எவ்வளவு தெரியுமா? 35,460தாம். ஏற்கனவே இருந்த உலகசாதனை பதினாலாயிரத்து சொச்சமாம். அவள் தூங்கும் நேரம் போக கணக்கு போட்டு பார்த்ததில் ஒரு மணி நேரத்துக்கு 74 குறுஞ்செய்தி வீதம் அனுப்பியுள்ளாராம். நாமாக இருந்தால் என்ன செய்வோம்? மகளின் போனை பிடுங்கி குப்பையில் எறிவோம், ஆனால், அவர் அப்பா என்ன பண்ணிரார் தெரியுமா? எதோ ஒரு உலக சாதனை புரிந்தால் போதும் என்று புது கைபேசி வாங்கி கொடுத்தாராம். எப்படிப் பட்ட அப்பா பாருங்க!

*******************************************************

நண்பர்கள் அதிகமாக பேஸ்புக், டிவிட்டர், பஸ் என்று போய்விட்டதால், நாமும் போய்தான் பார்க்கலாமே என்று முதலில் பேஸ்புக், டிவிட்டர் அக்கவுண்ட்களை துவக்கினேன். ஒரு மாதம் அதில் ஒரு பார்வையாளராக இருந்து கவனித்து வந்தேன். நேற்று இரவுதான் ஒரு முடிவுக்கு வர முடிந்தது. உள்ளே போனால் அதற்கு அடிமையாகிவிடுவோம் என்ற உண்மை எனக்குத் தெரிய ஒரு மாதம் ஆகியிருக்கிறது. நல்ல வேளை ஆரம்பத்திலேயே சுதாரித்துக்கொண்டேன். நமக்கு வலைப்பூ ஒன்று போதுங்க, நிறைய படிக்கலாம். நினைக்கும் போது எழுதலாம். என்ன சொல்றீங்க? நான் சொல்வது சரிதானே?

*******************************************************

ஏற்கனவே இரண்டு குறுநாவல்கள் எழுதி இருந்தாலும், ஒரு பெரிய நாவல் எழுதலாம் என்று நினைத்து இரண்டு பாகம் எழுதினேன். ஒரு பாகம் எழுதி முடிக்க குறைந்தது 2 மணி நேரம் ஆகிறது. ஆனால், மக்கள் அந்த அளவுக்கு ஆதரவு தரவில்லை என நினைக்கிறேன். அதனால் அந்த நாவலை டிராப் செய்துவிடலாமா? என நினைக்கிறேன். கீழே அதன் லிங்கை தருகிறேன். படிக்காதவர்கள் படித்துவிட்டு, தொடரலாமா? வேண்டாமா? என்று பின்னூட்டதில் சொல்லுங்கள்:

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 1

முற்பகல் செய்யின்.. அத்தியாயம் 2

*******************************************************

6 comments:

காந்தி பனங்கூர் said...

//நமக்கு வலைப்பூ ஒன்று போதுங்க, நிறைய படிக்கலாம். நினைக்கும் போது எழுதலாம். என்ன சொல்றீங்க? நான் சொல்வது சரிதானே?//

ஆமாங்க வலைப்பூவே ஒரு தகவல் களஞ்சியம் தான். மிக்ஸர் அருமை. மங்காத்தா குடும்பத்துடன் பார்க்கலாம். சில இடங்களில் சென்சார் கை வச்சுட்டாங்க. அதனால் பிரச்சினையில்லைன்னு நினைக்கிறேன்.

வரதராஜலு .பூ said...

//நமக்கு வலைப்பூ ஒன்று போதுங்க, நிறைய படிக்கலாம். நினைக்கும் போது எழுதலாம். என்ன சொல்றீங்க? நான் சொல்வது சரிதானே?//

i agree with u

நல்ல மிக்ஸிங்

பரிசல்காரன் said...

டாக்ஸி - சைனீஸ் ட்ரைவர் விஷயம் டாப்!

Vadielan R said...

தொடர்ந்து வலைப்பூவும் அதில் நாவலும் எழுதுங்க ரீடரில் படிப்பவர்கள் கமெண்ட் செய்ய முடியாது அதனால் எழுதுங்கள்

iniyavan said...

//ஆமாங்க வலைப்பூவே ஒரு தகவல் களஞ்சியம் தான். மிக்ஸர் அருமை. மங்காத்தா குடும்பத்துடன் பார்க்கலாம். சில இடங்களில் சென்சார் கை வச்சுட்டாங்க. அதனால் பிரச்சினையில்லைன்னு நினைக்கிறேன்.// வருகைக்கு நன்றி காந்தி.

iniyavan said...

//i agree with u

நல்ல மிக்ஸிங்// நன்றி வரதராஜுலு சார்.