Oct 31, 2011

மரண தண்டனை...


குழப்பமாக விடிந்தது நீதிபதி குலசேகர பாண்டியனுக்கு. மிகுந்த பயத்துடன் எழுந்தான் சேகர். தலைவலிப்பது போல் உணர்ந்தார் குலசேகர பாண்டியன். சேகருக்கு உடல் முழுவதும் வேர்த்தது.

***********************************************

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள். 

"வேண்டாங்க, போதுங்க. குழந்தை முழிச்சிடப்போகுது"

"இன்னும் ஒரு தடவை நித்யா. ப்ளீஸ்"

"இதுக்கு மேல கேட்ககூடாது"

"சரி சரி"

"உடனே அய்யாவுக்கு கோபம் வந்துடும். இன்னும் கிட்ட வாங்க" என்ற நித்யா சேகரை நெஞ்சோடு அணைத்து அவன் கன்னத்திலும், நெத்தியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

"போதுமா! பேசாம தூங்குங்க"

"ரொம்ப தேங்க்ஸ்டா" 

"எதுக்கு?" என்று கேட்டுக்கொண்டே நைட்டிக்கு மாற ஆரம்பித்தாள்.

"எல்லாத்துக்கும்தான்" என்றவன் அவளை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

இது தினமும் அவர்களுக்குள் நடப்பதுதான். எல்லாம் முடிந்ததும், நித்யாவின் முத்தமும் அணைப்பும் இல்லாமல் சேகரால் தூங்க முடியாது. இவன் கெஞ்சுவதும், அவள் மறுப்பதும்..... அன்றாட நிகழ்வு.

சேகர் நித்யாவை துரத்தி துரத்தி காதலித்தான். முதலில் நித்யா சேகரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கும் நடப்பதுதான். நித்யா பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள். சேகர் பரம ஏழை. எப்படியோ அவளை துரத்தி துரத்தி ஒரு வழியாக நித்யாவிற்கும் பிடிக்கும்படி செய்துவிட்டான். நித்யாவின் அப்பா அவர்கள் காதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. முதலில் சேகரை மிரட்டிப்பார்த்தார். பின் அவனை பணத்தால் வாங்க பார்த்தார். முடியாமல் போகவே ஆளை வைத்து அடித்தும் பார்த்தார். அதுவும் முடியாமல் போகவே நித்யாவை அவசர அவசரமாக வேறு ஒரு சொந்தக்கார பையனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்.

சேகரால் தடுக்க முடியவில்லை. அவ்வளவுதான் என்று நினைத்திருந்த வேளையில் நித்யா வீட்டைவிட்டு ஓடி சேகர் வீட்டுக்கு வந்துவிட்டாள். இரவோடு இரவாக சேகர் பக்கத்து ஊரில் உள்ள கோயிலில் நித்யாவை திருமணம் செய்து கொண்டான்.

ஊரில் இருந்தால் பிரச்சனை என்று சென்னைக்கு ஓடி வந்துவிட்டான். ஐந்து வரும் ஓடிவிட்டது. ஒரு குழந்தையும் ஆகிவிட்டது.

***********************************************

குலசேகர பாண்டியன் பொதுவாக எதற்கும் கவலை படாதவர். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் அப்பா ஒரு பெரிய பண்ணையார். அவர்கள் பரம்பரையிலேயே அதிகம் படித்தவர் இவர் ஒருவர்தான். அப்பாவின் எதிர்ப்புகளை மீறி சட்டம் படித்தவர். பின் படிப்படியாக முன்னேறியவர். அகில இந்தியா அளவில் நடந்த நீதிபதிகள் தேர்வில் முதல் ரேங்க் எடுத்தவர். பலவருட கடின உழைப்புக்கு பிறகு இப்போது உச்ச நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். இவரின் தீர்ப்பு எப்போதுமே சரியாக இருக்கும் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர். மிகுந்த மரியாதையுடன் அனைத்து சட்ட வல்லுனர்களும் இவரை பார்ப்பார்கள். இவரின் தீர்ப்பை பல சமயங்களில் மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவு வழக்கின் தீவிரத்தை உணர்ந்து தீர்ப்பு கொடுப்பவர்.

"என்னப்பா? தீவிர சிந்தனை. இந்தாங்க காபி" என்று காபி நீட்டிய மகள் கீர்த்தியை உற்று நோக்கினார். மனம் லேசானது. அதே சமயம் கொஞ்சம் வருத்தமும் ஏற்பட்டது. 

"ஒண்ணும் இல்லைமா"

கீர்த்தி சென்றவுடன் மீண்டும் சிந்திக்கலானார்.

***********************************************

சென்ற வருடத்தில் ஒரு நாள்.

"நித்யாஆஆஆஆஆஅ" என்ற அலறல் அந்த தெருவையே கிடுகிடுக்க வைத்தது. பக்கத்து வீட்டில் இருந்தவர் அவசர அவரமாக ஓடினார். வீட்டின் கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் நித்யா. கையில் கத்தியுடன் சேகர். ஓரத்தில் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. 

''என்ன ஆச்சு?" அவர் கேட்க கேட்க மயங்கி விழுந்தான் சேகர். அவர்தான் போலிஸுக்கு தகவல் சொல்லி அனுப்பினார். போலிஸ் வந்து பாடியை கைப்பற்றி போஸ்மார்ட்டம் செய்து இது ஒரு கொலை என்று முடிவு செய்தது. நித்யாவின் அப்பா ஒரு படையுடன் வந்தார். போலிஸ் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சேகரை அவரின் ஆட்கள் அடித்து உதைத்தனர். சேகர் ஒன்றுமே பேசவில்லை.

இரண்டு நாட்களுக்கு பின் சேகர் வாயை திறந்தான். போலிஸின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலையே சொன்னான்.

"சார் நான் என் பொண்ணுக்கு சளி மருந்து வாங்க கடைக்கு போயிருந்தேன். நான் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது நித்யா படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இருந்தாள். அவளின் நெஞ்சில் கத்தி குத்தி இருந்தது. உயிர் லேசாக இருந்தது. அதனால் அவளை பிழைக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் கத்தியை உருவினேன். பின் சிறிது நேரத்தில் அவள் மூச்சு நின்றுவிட்டது. சத்தியமாக நான் அவளை கொலை செய்யவில்லை" என்றவன் ஓஓஓஓஒ என கதறி அழ ஆரம்பித்து விட்டான்.

***********************************************

கீர்த்திக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு குழந்தை இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. நேற்றுக்கூட ஒரு டாக்டரிடம் கூட்டிச் சென்றிருந்தார். அவர் சொன்னது............ சிந்தனையில் இருந்து விடுபட்டவர்,

"கமலா" என்று மனைவியை அழைத்தார். 

''என்னங்க?"

"சாயந்திரம் ரெடியா இருங்க. கோவிலுக்கு போயிட்டு வரலாம்"

என்றவர் குளிப்பதற்காக பாத்ரூமை நோக்கி சென்றார்.

***********************************************

சாட்சியங்கள், சூழ்நிலைகள் எல்லாம் சேகருக்கு எதிராகவே அமைந்தன. அதோடு நித்யாவின் அப்பாவின் பணம் வேறு விளையாடியது. அதனால் சேகருக்கு கோர்ட்டில் சேகர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதித்தார்கள். அவனின் நண்பர்கள் தயவால் கேஸ் ஹை கோர்ட்டுக்கு போனது. நித்யாவின் அப்பா பணத்தை தண்ணீராக செலவழித்தார். அங்கும் சேகருக்கு மரண தண்டனை உறுதி செய்யப் பட்டது.

இதோ இன்று சேகருக்கு உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு.

***********************************************

கோர்ட் ஆரம்பித்தது. நீதிபதி குல சேகரப பாண்டியன் கோர்ட்டில் நுழைய ஆரம்பித்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். சேகர் அழைத்து வரப்பட்டு கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டான். சேகர் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டான். எதிரே நித்யாவின் அப்பா அவரின் ஆட்களுடன் ஒரு விதமான கோபத்துடன் உட்கார்ந்து இருந்தார்.

வக்கில்கள் எல்லோரும் சேகருக்கு தூக்குத்தண்டனை உறுதி என்று பேசிக்கொண்டார்கள். இறுதிக்கட்ட விசாரணை முடிந்ததால், அரசு தரப்பு வக்கில் அவர் தரப்பு வாதத்தை முடித்துக்கொண்டு சேகருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்ய சொல்லி நீதிபதியிடம் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கோர்ட் ஒரு முப்பது நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் கோர்ட் ஆரம்பித்தவுடன், நீதிபதி குலசேகர பாண்டியன் தன் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்,

"சாட்சியங்களும், விவாதங்களையும் வைத்து பார்க்கையில் சேகர்தான் அவர் மனைவி நித்யாவை கொலை செய்தார் என்று தோன்றினாலும், போலிஸ் பல விசயங்களில் அதை நிரூபிக்க தவறி விட்டது. எடுத்துக்காட்டாக..............

அதனால் Benefit of Dubtஐ சேகருக்கு அளித்து, அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கிறேன்"

தீர்ப்பைக் கேட்ட கோர்ட் சலசத்தது. அனைத்து கோர்ட்டுகளிலும் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு அப்படியே மாற்றாக இந்த தீர்ப்பு அமைந்தது விவாத்துக்குள்ளானது. ஆனாலும் அந்த தீர்ப்பு நீதிபதி குலசேகர பாண்டியனால் கொடுக்கப்பட்டதால், அதில் நியாயம் இருக்கலாம் என்று அனைவருக்கும் தோன்றியது.

***********************************************

நேற்று மாலை. கீர்த்தியை ஸ்பலிஸ்டிடம் கூட்டிச்சென்றார் நீதிபதி குலசேகர பாண்டியன். பல பரிசோதனைக்கு பிறகு, "இன்னும் ஒரே ஒரு டிரீட்மெண்ட் தான் பாக்கி அதையும் செய்துவிடலாமா?"

"என்ன டாக்டர் இது? இன்னும் எத்தனை ஊசிகள், மாத்திரைகள்? எப்படி என் பெண் தாங்குவாள்?"

"என்ன பண்றது சார். இது எல்லாம் நம் கையிலா இருக்கு. ஒரு உயிர் உண்டாவது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை சார். அதுவும் இல்லாம ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது இந்த மாதிரி சமயங்களில்தான் நம்மலால உணர முடியுது இல்லை சார்"

***********************************************

Oct 30, 2011

பாக்யராஜ், ரதி, இளையராஜா, மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி


எனக்கு பாக்யராஜ் என்றால் அவ்வளவு பிரியம். சிறு வயதில் அவருடைய அனைத்து படங்களையும் பல முறை பார்த்து ரசித்திருக்கின்றேன். இந்தியாவிலேயே அவர் அளவு ஸ்கிரின் ப்ளேயில் கொடிக்கட்டி பறந்தவர் யாரும் இல்லை எனலாம். அவருடைய படங்களின் பாடல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் பாரதிராஜாவுடன் இருந்த சமயங்களில் வந்த படங்கள் அற்புதமானவை எனலாம். கொஞ்சம் கொஞ்சமாக இப்போது நம்மை புதுப்பாடல்கள் ஆக்கிரமித்து விட்டன. என்னதான் A R ரகுமான் ஆஸ்கார் அவார்ட் வாங்கி இந்தியாவை பெருமை படுத்தி இருந்தாலும், என்னால் இன்னமும் இளையராஜாவை விட்டு வெளியே வர முடியவில்லை.

இன்னமும் என் வீட்டில், காரில் என் செவிகளை இனிமையாக்குவது இளையராஜாவின் பாடல்கள்தான். ஏறக்குறைய அனைத்து பாடல்களும் என் வசம் இருந்தாலும், இல்லாத சில பாடல்களும் அவ்வவ்ப்போது நினைவுக்கு வருகின்றன. அவைகளை தேடித்தேடி டவுண்ட்லோட் செய்கிறேன்.

ஆகஸ்டில் இந்தியா சென்ற போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது. அதிகாலை விமானம் என்பதால் வீட்டிலிருந்து இரவே கிளம்ப வேண்டி இருந்தது. அதனால் இரவில் ஒரு டாக்ஸியில் சென்றோம். நான்கு மணி நேர பயணம். டாக்ஸி ஓட்டியவர் ஒரு மலேசியர். பெயர் யாசின். கார் வீட்டை விட்டு கிளம்பியதுமே என்னை ஆச்சர்யத்தில் மூழ்கடித்துவிட்டார்.  இளையராஜாவின் அற்புதமான பழைய பாடல்கள் அடங்கிய ஆடியோ சிடியை ஆன் செய்தார். சந்தோசத்துடனும், கொஞ்சம் அதிர்ச்சியுடனும் அவரைப் பார்த்து கேட்டேன், 

"நீங்கள் எப்படி இந்த பாடல்களை எல்லாம்?"

"ஏன் கேட்கக்கூடாதா? அற்புதமான இசை அமைப்பாளர் உங்கள் இளைய ராஜா" என்றவர் சில பாடல்களை தமிழில் பாடி ஆச்சர்யப்படுத்தினார். அதுதான் இளையராஜா. ஒரு மலாய் பேசும் நபரையும் தன் இசையால் கட்டிப் போட முடியும் என்று நிரூபித்து விட்டார்.  அன்றுதான் மறந்து போன பல இளையராஜா பாடல்களை மீண்டும் கேட்டேன். அன்றைய இரவை ஒரு அற்புதமான இரவாக மாற்றி எங்களை சந்தோசத்தினால் ஆழ்த்தினார் அந்த டாக்ஸி டிரைவர்.

மலேசியாவுக்கு திரும்பி வந்தபோதும் அவரையே ஏற்போட்டுக்கு வரச்சொல்லி இருந்தேன். இந்த முறை வேன் எடுத்து வந்திருந்தார். ஆச்சர்யம் என்னவென்றால், வேனில் ஒரு டிவியும் DVD ப்ளேயரையும் எங்களுக்காக ஏற்பாடு செய்து இளையராஜா பாடல்களை எல்லாம் எங்களுக்காக பார்க்க ஏற்பாடு செய்திருந்தார். அந்த சமயத்தில் பார்த்த பாடல் இந்த பாடல். அதன் பிறகு தினமும் குறைந்தது ஐந்து முறையாவது பார்க்கிறேன், கேட்கிறேன்.

ஆடியோ மட்டும் கேட்டால், ஜானகியின் அற்புதமான தேன் கலந்த குரலையும், மலேசியா வாசுதேவனின் மயக்க வைக்கும் குரலையும், இளையராஜாவின் தேனிசையையும் கேட்டு மகிழலாம்.

வீடியோவில் பார்த்தால் என் அன்புக்குறிய பாக்யராஜின் நடையையும், ரத்தி அக்னிஹோத்திரியின் மழலையான வாயசைப்பையும் காணலாம். இதோ உங்களுக்காக அந்த பாடல்:


Oct 29, 2011

சேமிப்பு முக்கியமா? அல்லது இன்றைய சந்தோசம் முக்கியமா?


சமீபத்தில் பல யோசனைகளுக்கு பிறகு I Pad 2 வாங்கலாம் என்று கோலாலம்பூரில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் சென்றிருந்தேன். என்னுடன் ஒரு இந்திய நண்பரும் வந்திருந்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரம் அங்கு இருந்த சேல்ஸ் மேனிடம் பலவித சந்தேகங்களைக் கேட்டு, தெளிவடைந்த பிறகு வாங்கலாம் என்று முடிவெடுத்து என்ன கலர் என்று யோசித்துக்கொண்டிருந்த போது நண்பர் என்னைத் தனியே கூப்பிட்டார்.

"உலக்ஸ், I Pad 2 வாங்கித்தான் ஆக வேண்டுமா?"

"ஆம்"

"ஏன்? அதனால் என்ன பயன்?"

"சின்னதாக அடக்கமாக உள்ளது. டச் ஸ்கீரின், WIFI, 3G உள்ளது. பார்க்க அழகாக உள்ளது. நிறைய புத்தகங்கள் படிக்கலாம்"

"ஏன் இது எல்லாம் உங்கள் லேப் டாப்பில் இல்லையா?"

"இருக்கிறது. இருந்தாலும் இது தனி"

"கையில் ப்ளாக்பெரி வைத்துள்ளீர்கள். அலுவலகத்தில் டெஸ்டாப் கம்ப்யூட்டர் உள்ளது. லேப் டாப் உள்ளது. வீட்டிலும் கம்ப்யூட்டர் வைத்துள்ளீர்கள்"

"ஆமாம்"

"அப்படி என்றால் I Pad 2 எதற்கு?"

யோசிக்க ஆரம்பித்தேன். அப்போது மணி இரவு 9.30 மணி ஆகிவிட்டது. நான் வாங்கப்போவது இல்லை என்று தெரிந்தவுடன், "போடா, சாவு கிராக்கி" என்பது போல் என்னைப் பார்த்த சேல்ஸ்மேன் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார். மொத்தத்தில் என்னை வாங்கவிடாமல் யோசிக்க வைத்துவிட்டார். இதே போல் தான் என் I Phone 4 கனவு இன்னொரு நண்பரால் நிராசையாகிப்போனது. அன்று இரவு முழுவதும் என் கனவில்  I Pad 2 வே வந்து கொண்டிருந்தது.

அடுத்த நாள் நான் சென்ற அனைத்து மீட்டிங்களிலும் எல்லோருமே  I Pad 2 வைத்திருப்பதை நான் பார்த்தேன். அவரும் பார்த்தார். அடுத்த நாள் அலுவலகம் வந்தோம். எங்கள் அலுவலக கடை நிலை ஊழியர் முதற்கொண்டு ஏறக்குறைய அனைவரும்  I Phone 4 அல்லது உயர் ரக போன் வைத்திருக்கின்றார்கள்.

அன்று மதியம் மீண்டும் அந்த பேச்சு வந்தது. அவர் என்னிடம் மீண்டும் கேட்டார், "என்ன இது இங்கு எல்லோரும் இவ்வளவு ஆடம்பரமாக இருக்கிறார்கள்"

"ஆமாம், மலேசியாவில் அப்படித்தான்" என்றேன்.

இங்கு அனைவர் வீட்டிலும் குறைந்தது இரண்டு கார்கள் இருக்கும். பிள்ளைகள் நிறைய இருக்கும் வீட்டில் நான்கு கார்கள் இருக்கும். சொந்த வீட்டில் இருப்பார்கள். அனைத்து வசதிகளும் இருக்கும். மிகப்பெரிய எல் இ டி தொலைக்காட்சி இருக்கும்.  எல்லாமே இருக்கும்.  என் வீட்டிற்கு இரு புறம் உள்ள வீட்டிலும் நான்கு கார்கள் உள்ளது. அதில் ஒரு கார் நிச்சயம் வெளிநாட்டு காராக இருக்கும். அவர்கள் என்ன வேலை செய்கிறார்கள் என்று பார்த்தீர்களானால் மிக சாதாரண வேலையில் இருப்பார்கள். கணவன் மனைவி இருவரும் வேலை செய்வார்கள். ஆனாலும் மிக குறைந்த சம்பளத்தில்தான் வேலை செய்பவர்களாக இருப்பார்கள், பின் எப்படி இந்த ஆடம்பர வாழ்க்கை சாத்தியமானது?

காரணம் அனைத்துமே வங்கி கடன் மூலம் வாங்கிவிடுகிறார்கள். சம்பளம் வாங்கியவுடன் 85% சதவிகித சம்பளத்தை வீட்டு லோன், கார் லோன் என்று அடைக்கிறார்கள். அதே போல் அதிக இன்கிரிமெண்ட் வருகிறது என்று வைத்துக்கொள்வோம், அதையும் சேமிக்க மாட்டார்கள். அதை வைத்து வேறு ஒரு பொருளை வாங்குவார்கள். இப்படி வாழ்க்கையை மிக ஆடம்பரமாக நவீன யுகத்துடன் வாழ்கிறார்கள்.

இவ்வளவையும் நண்பரிடம் விளக்கினேன். பின் சொன்னேன், "இவர்கள் நம்மைபோல் அல்ல. அனைத்தையும் அந்த கணத்திலேயே அனுபவிக்கிறார்கள்"

அவர் உடனே, "என்ன அனுபவித்து என்ன பயன்? அனைத்தும் கடன்தானே?" என்றார்.

"இருந்தால் என்ன? இன்றைய தினத்தில் அவர்கள் சந்தோசமாக இருக்கின்றார்களா இல்லையா?"

"இருக்கலாம். இருந்தாலும் நம்மைபோல் அவர்கள் சேமித்து வைக்கவில்லையே?"

"அதனால் என்ன பயன்?"

"நாம் காலரை தூக்கிவிட்டு இருக்கலாம் நமக்கு ஒரு கடனும் இல்லை என்று"

"இங்கு அப்படி நாம் நடந்தால் யார் நம்மை பார்ப்பார்கள். மொத்த நாட்டின் மக்களே இப்படி வங்கி மூலம் கடன் வாங்கி வாழ்க்கையை அனுபவிக்கும் போது நீங்களோ நானோ அவர்களிடம் சென்று எனக்கு கடனே இல்லை என்று சொன்னால் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள்? அதனால் என்ன பயன்? நமக்கு என்ன ஏதேனும் சர்டிஃபிகெட்டா தரப்போகிறார்கள்" என்றேன்.

"உண்மைதான்" என்றவர், "இருந்தாலும் சேமிப்பு முக்கியம் இல்லையா?" என்றார்.

"அளவுக்கு அதிகமான சேமிப்பால் யாருக்கு என்ன பயன்? நாம் அனுபவிக்காமல், பணம் பேங்கில் FD யில் இருப்பதால் என்ன பயன்? ஒரு வேளை ஏதாவது ஒன்று நமக்கு ஏற்பட்டுவிட்டால், ஒரு வெளிநாட்டு கார் உபயோகிக்காமல்,   I Pad 2 வும் அனுபவிக்காமலே போய்விடுவோம் இல்லையா" என்றேன்.

அடுத்த நாள், "உலக்ஸ் அடுத்த வாரம் நாம்   I Pad 2  வாங்க வேண்டும்" என்றார்.

"ஏன் இந்த திடீர் முடிவு?"

அவர் நண்பர் சொன்ன ஒரு விசயத்தை என்னிடம் கூறினார். அவரின் நண்பரின் அப்பா தீவிர காந்தியவாதியாக இருந்திருக்கிறார். அதிகமாக செலவு செய்ய மாட்டாராம். ரெயிலில் செல்வதாக இருந்தால் கூட இரண்டாம் வகுப்பில்தான் செல்வாராம். அவருக்கு ஒரு குரு இருந்திருக்கிறார். ஆனால் அவர் எங்கு சென்றாலும் விமானத்தில்தான் செல்வாராம். மிகப்பெரிய செலவாளியாம். ஆனால் அவர் பணத்தில் அல்ல அந்த இயக்கத்தின் பணத்தினால். இவர்கள் பணம் சேமித்து அவரிடம் கொடுப்பார்களாம். அவர் செலவு செய்வாராம்.

ஒரு தருணத்தில் அந்த குரு இறந்துவிட்டாராம். அவரை சொந்த ஊருக்கு எடுத்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். அப்போது அவரின் மனைவி சிஷ்யர்களிடம் பண உதவி கேட்டிருக்கிறார். இவர்கள் ரயிலுக்கான பணத்தை திரட்டி கொடுத்த போது அவர் மனைவி சொன்னாராம்,

"காலம் முழுவதும் விமானத்தில் சென்றவர், இப்போது மட்டும் டிரெயினில் எப்படி?" என்று சொல்லி இவர்களிடம் பணத்தை வாங்கி பிணத்தை விமானத்தில் கொண்டு சென்றாராம். இவர்கள் விதியை நினைத்து இரண்டாம் வகுப்பு ரெயிலில் சென்றார்களாம். எப்படி இருக்கிறது பாருங்கள்?

"அதனால் நீங்கள் சொல்வது சரிதான். தேவைக்கு அதிகமாக சேமித்து வைப்பதை விட வாழ்க்கையை அந்த கணத்தில் அனுபவிப்பதில் தவறில்லை" என்றார்.

சரிதானே?

Oct 28, 2011

நாங்க என்னத்தான் செய்யறது?


ஏற்கனவே தீபாவளிக்கு ஊருக்கு போக முடியாத கடுப்புல இருந்த என்னை ஒரு மலாய் நண்பர் சந்தித்தார். 

"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றார்.

"தீபாவளியை ஊர்ல கொண்டாட முடியாம போச்சு. அதான்"

"அதான் இங்க கொண்டாடறீங்க இல்லை"

"ஊருல கொண்டாட மாதிரி வருமா சார்?"

"அங்க எப்படி கொண்டாடுவீங்க?"

"அங்க வீட்டுல எல்லாரும் இருப்பாங்க. அதிகாலை எழுந்துடுவோம். எல்லோரும் எண்ணய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு, வெடிவெடித்து கொண்டாடுவோம். நண்பர்களை சந்திப்போம். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். புதிய சினிமா பார்ப்போம்"

"இங்கேயும் அதான செய்யறீங்க?"

"இங்க அப்படி இல்லை சார். இப்ப நம்ம தெருவுல பாருங்க. நாங்க மட்டும்தான் தீபாவளி கொண்டடறோம். மத்தவங்க எல்லாம் இஸ்லாமியர்கள். எங்கள் ஊரில் அப்படி அல்ல. தீபாவளி பண்டிகை என்பது நாடே கொண்டாடும் ஒரு பண்டிகை. ஊரில் எங்கு பார்த்தாலும் மக்கள் சந்தோசமாக இருப்பார்கள். மற்ற நாட்களில் பார்த்தீர்களானால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் மக்கள் அனைவரும் தங்கள் சோகங்களை மறந்துவிட்டு சந்தோசமாக இருப்பார்கள். நினைத்து பாருங்கள் ஊரே சந்தோசமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று. ஒருவர் மட்டும் சந்தோசமாக இருப்பதைவிட ஒரு ஊரே மகிழ்ச்சியாக இருப்பது என்பது எப்போதும் இல்லாதது." இப்படியாக விளக்கிச் சொன்னேன். நண்பருக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் சென்று விட்டார்.

கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு நண்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்களின் சந்தோசங்களை தொலைபேசியின் மூலம் எனக்கும் பரவ செய்து கொண்டேன். சரி, புதுப்படத்திற்காவது போகலாம் என்றால் அதில் ஒரு பிரச்சனை.

'மங்காத்தா' வந்தபோதும் அதே பிரச்சனைதான். 18+ படம். பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளைகள் இல்லாமல் படம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை. இங்கே 'ஆஸ்ட்ரோ முதல் திரை' என்று ஒரு சேனல் உள்ளது. அதில் மங்காத்தா ரிலீஸாகி 50 நாட்களுக்குள் படத்தை போட்டுவிட்டார்கள். 15 வெள்ளி கொடுத்தால், தொடர்ந்து 48 மணி நேரம் அந்த படம் வரும். அப்போது குடும்பமே பார்க்கலாம். என்னதான் சென்சார் செய்து இருந்தாலும் எல்லா வசனங்களும் அப்படியேத்தான் உள்ளன (ஒரு சில வசனங்களில் ஆடியோ கட்). 18+ என்பதற்கான அர்த்தம் என்ன? என்பது எனக்கு புரியவில்லை. வீட்டில் பிள்ளைகள் பார்க்கலாம், தியேட்டரில் பார்க்க கூடாதா?

அதே போல் இப்போது வேலாயுதம். இதுவும் 18+. பிள்ளைகள் பார்க்க முடியாது. அதனால் நாங்களும்!

சரி, ஏழாம் அறிவு பார்க்கலாம் என்றால், "டைட்டில் மட்டும் நல்லா இருக்கு, டாக்குமெண்ட்ரி மாதிரி இருக்கு, முதல் பகுதி நல்லா இருக்கு, இரண்டாம் பகுதி சரியில்லை, பாட்டு மட்டும் நல்லா இருக்கு, ஸ்ருதி டிரஸ் மட்டும்தான் நல்லா இருக்குனு" ஆளாளுக்கு விமர்சனம் எழுதிட்டாங்க. இதனால் படம் பார்க்குற ஆர்வமே போயிடுச்சு.

விமர்சனங்கள் படித்தால் ஏறக்குறைய கதையும் ஓரளவு தெரிந்துவிடுகிறது. மங்காத்தா பார்க்கும் வரை விமர்சனங்கள் படிக்காமலே இருந்தேன். அதனால்தான் என்னால் படத்தை ரசிக்க முடிந்தது.

மொத்தத்துல ஏறக்குறைய எல்லோரும் படத்தை பார்த்துடுறாங்க. அப்புறம் விமர்சனம் எழுதிடறாங்க. நம்மால விமர்சனத்தை படிச்சுட்டு பார்க்க முடியாம போயிடுது.

எங்களுக்கே எப்பவாவதுதான் தமிழ் படம் வரும். அதும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடும். அதையும் நாங்கள் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. 

ஏன் இப்படி புலம்பறேன் என்கின்றீர்களா? தீபாவளி ஊர்ல கொண்டாட முடியாம போச்சேங்கற எரிச்சல்தான். வேற என்ன?


Oct 25, 2011

தீபாவளி நினைவுகள்!


எல்லோருக்கும் எப்படியோ தெரியாது. எனக்கு தீபாவளி என்றால் அப்பா நினைவுதான் வருகிறது. அப்பாவை பற்றி எவ்வளவோ விசயங்கள் எழுதிவிட்டாலும் இன்னும் எழுத விசயங்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அப்போதைய சூழ்நிலையில் தீபாவளிக்கு துணி வாங்வதற்கு மிகவும் கஷ்டப்படுவோம். என்ன செய்வது? அப்பா ஏறக்குறைய 10 பேர்களுக்கு துணிகள் வாங்க வேண்டி இருக்கும். அங்கே இங்கே கடன் வாங்கி எப்படியோ தீபாவளிக்கு முன் டிரஸ் வாங்கி தந்துவிடுவார். ஆனால் அவ்வளவு சீக்கிரம் எங்களால் வாங்க முடியாது. ஊரில் உள்ள நண்பர்கள் எல்லோம் ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கிவிடுவார்கள். அதைப் பார்க்கும் போது எல்லாம் ஏக்கமாக இருக்கும். அப்பா மேலே கோபம் கோபமாக வரும்.

அதுவும் ஒரு நண்பன் வீட்டில் குடும்பமே ஒன்றாக சேர்ந்து ஜவுளிக்கடைகளுக்கு போவார்கள். நாங்கள் அந்த மாதிரி போனதாக நினைவே இல்லை. அப்பாவுக்கு இருக்கும் பணத்தை வைத்து தானே வாங்க முடியும். அப்பா கடன் வாங்காத தீபாவளி என்று ஏதாவது வந்து போனதா? என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் தீபாவளி அன்று பார்த்தால் எல்லோரும் புது துணிகளுடன் இருப்போம். ஆனால் அப்பா புது துணிகள் அணிந்து நான் பார்த்ததே இல்லை. அவருக்கு என்று என்றுமே எதையும் வாங்கிக்கொண்டதில்லை. நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு நிறைய வாங்கித் தர வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் முடியாமலேயே போய்விட்டது.

இப்போது இந்த அளவிற்கு அப்பாவைப் பற்றி நினைக்கும் நான், அன்று பண்டிகை காலங்களில் அப்பாவை இந்த அளவிற்கு பாசமாக பார்த்ததில்லை. காரணம் எப்போதும் சிடு சிடு என்றே இருப்பார். காரணம் அப்பாவுக்கு எல்லாமே சரியான நேரத்தில் நடக்க வேண்டும். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து விட்டு அனைவரையும் குளிக்க சொல்லி துரத்திக்கொண்டு இருப்பார். இப்போது போல மூன்று நான்கு பாத்ரூம் வசதிகள் அப்போது இல்லை. ஒரே பாத்ரூம்தான். அனைவரும் நேரத்திற்கு குளிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். ஒரே டென்ஷனாக இருக்கும். குளித்து முடித்து அவர் துணிகளை எடுத்துக்கொடுத்த பின் எல்லோரும் பூஜை ரூம் முன் உடனே ஆஜராக வேண்டும். நேரம் ஆனால் கன்னா பின்னா என்று கத்துவார்.

ராகு காலம் எம கண்டம் என்று அனைத்தையும் பார்ப்பார். சாமி கும்பிட்டு முடிந்தவுடன் உடனே அனைவரையும் சாப்பிட உட்காரச்சொல்வார். ஒரே நேரத்தில் எல்லோருக்கும் பரிமாற வேண்டும். 'அவனுக்கு இன்னொரு இட்லி வை. இவனுக்கு ஸ்வீட் வை' என அம்மாவை திட்டிக்கொண்டே இருப்பார். எனக்கு அவர் மேல் கோபம் கோபமாக வரும். வெடி வைக்க கிளம்பினால் பக்கத்திலேயே நிற்பார். சுதந்திரமாக வெடிக்க விட மாட்டார். அதனால் நண்பர்களுடன் வெடிக்க உடனே கிளம்பிவிடுவேன். நேரத்திற்கு சாப்பிட வரவில்லை என்றால், உடனே ஆளைவிட்டு அனுப்புவார். வீட்டிற்கு வந்தவுடன் திட்டு விழும். அம்மாவை அதிகம் திட்டுவார். அவ்வளவிற்கும் அம்மா பொறுமையாக இருப்பார்.

நான் எத்தனையோ நாட்கள் அம்மாவை கேட்டு இருக்கிறேன், "ஏம்மா, அப்பா எப்பவும் திட்டிக்கிட்டே இருக்காங்க?" என்று.

அம்மாவோ ஒரு புன்முறுவலுடன், "அவர் எப்பவும் அப்படித்தான்" என்று மட்டுமே சொல்வார்கள். எனக்கு மட்டும் அப்பா மேல் எப்பவும் கடுப்பு இருந்து கொண்டே இருக்கும். இத்தனைக்கும் அப்பா மேல் அவ்வளவு பாசம் எனக்கு. இருந்தும் பண்டிகை காலங்களில் ஏன் இப்படி சிடு சிடு என்று இருக்கிறார் என கோபமாக வரும்.

இப்படித்தான் என் இளமைக்கால தீபாவளிகள் வந்து போயின. இதோ அப்பா இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆண்டவன் தயவால் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அப்பா இல்லாத தீபாவளிகள் என்னை எந்த விதத்திலும் சந்தோசப்படுத்தவே இல்லை.

அப்பாவின் சத்தம் இல்லாத, சிடு சிடு பேச்சுகள் இல்லாத, அப்பாவின் கோபம் இல்லாத தீபாவளி என்னை எந்தவிதத்திலும் கவருவதே இல்லை. அன்று அவரிடம் புரியாத பல விசயங்கள் இன்று நான் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் போது புரிகிறது.

என்னதான் சந்தோசமாக இருப்பதாக பிள்ளைகளிடம் காட்டிக்கொண்டாலும் அன்றைய தினம் அப்பாவின் நினைவுகள் சற்று அதிகமாகவே வருகிறது. இதிலிருந்து எப்படி வெளிப்படுவது என்று எனக்குத் தெரியவே இல்லை.

அப்பா அம்மாவுடன் தீபாவளியை கொண்டாடும் நண்பர்கள் ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்துக்கொண்டாடுங்கள், அந்த தருணங்கள் வாழ்க்கையில் பொன்னானவை. எவ்வளவோ கோபதாபங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் அருகாமை நமக்கு என்றுமே தேவையாய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

சென்ற வருட தீபாவளியின் போது நான் எழுதிய இடுகையை படிக்க இங்கே செல்லுங்கள்:Oct 14, 2011

மிக்ஸர் - 12.10.2011


சென்ற வாரம் கோலாலம்பூரில் நடந்த சம்பவம் இது. 61 வயதான ஒரு சைனீஷ் டாக்ஸி டிரைவர் கல்யாணம் ஆகாமலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு கல்யாணம் செய்ய ஆசை வந்துள்ளது. இந்த வயதில் யார் பெண் தருவார்கள்? உடனே ஒரு கல்யாணம் ஏற்பாடு செய்யும் அலுவலகத்துக்கு சென்று விசயத்தை சொல்லி ஒரு நல்ல பெண்ணை அறிமுகம் செய்ய கேட்டுள்ளார். அவர்கள் 18000 ரிங்கிட் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர் உடனே தன்னுடயை EPF அக்கவுண்டில் பணம் எடுத்து கட்டியுள்ளார். ஒரு அழகான வியட்நாமைச் சேர்ந்த 29 வயது பெண் அவருக்கு மனைவியானார். பின்புதான் பிரச்சனை ஆரம்பம் ஆனது. அவர் அந்த பெண்ணை 'அதற்கு' அழைத்த போது எல்லாம் அவர் மறுத்துள்ளார். இவருக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவித்துள்ளார். சரி, போக போக சரியாகிவிடும் என நினைத்து அமைதி காத்து வந்துள்ளார். ஒரு நாள் இவர் மீண்டும் அழைக்கவே அருகே இருந்த மாஜாஜ் ஆயிலை எடுத்து அவர் கண்ணில் எரிந்துள்ளார். உடனே இவர் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார். இன்னொரு நாள் இவர் கெஞ்சி அவரை அழைக்க, "இனி அடிக்கடி தொந்தரவு பண்ணினால் 'அதை' கடித்து துப்பிவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இவரும் வேறு வழியில்லாமல் அவருடம் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்துள்ளார். போன வாரத்தில் நம்ப ஹீரோ மிகவும் ஆசைப்பட்டு அந்த பெண்ணை அணைத்து கட்டிப்பிடிக்க, அந்த பெண் உடனே அவர் காதை நன்றாக கடித்து ரத்தக் களறி ஆக்கியிருக்கிறார். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இவர் வலியில் ரத்தம் கொட்ட துடித்துக்கொண்டிருக்கையில், அந்த பெண் ரொம்ப கூலாக, "எனக்கு AIDS" என்று சொல்லியிருக்கிறார். இவர் பயந்து போய் முதலில் காதை கவனிக்கலாம் என்று பாத்ரூம் சென்றுவிட்டு வருவதற்குள் அந்த பெண் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். பாவம், 18000 ரிங்கிட்டும் போய், லட்டும் திங்கமுடியாமல் போய், இப்போது அவர் எயிட்ஸ் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

61 வருசம் பிரம்மாரியாய் இருந்தவர் அப்படியே இருக்க வேண்டியதுதானே? விதி!

*******************************************************************

மரணத்தை பற்றி பல சமயங்களில் எழுதியிருக்கிறேன். சென்ற வாரம் என் கம்பனியில் ஒருவரின் இறப்பு என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது. அதனால்தான் எதையும் என்னால் எழுத முடியவில்லை. அதிலிருந்து மீண்டுவர வெகு நாட்கள் ஆகிவிட்டது.  நிறைய யோசிக்கவும் வைத்துவிட்டது. அவர் ஒரு செக்யூரிட்டி ஆபிஸர். வயது 54 இருக்கும். அன்பானவர். மரியாதையாக பழகக்கூடியவர். சனிக்கிழமை மாலை வரை வேலையில் இருந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு சென்று சாப்பிட்டு தூங்கியிருக்கிறார். இரவு இரண்டு மணிக்கு அவர் பையன் உடம்பு சரியில்லாமல் முனகவே, சத்தம் கேட்டு எழுந்தவர் அவனுக்கு ஏதோ ஆயிண்மெண்ட் தடவி விட்டு அவனை தூங்க வைத்துவிட்டு, இவரும் அருகிலேயே படுத்து தூங்கி இருக்கிறார். காலையில் அவர் மனைவி இவரை எழுப்பிவிட, அவர் எழவில்லை. தொட்டுப்பார்த்தால், தூக்கத்திலேயே இறந்றிருக்கிறார். என்னதான் அவர் இறந்துவிட்டார் என்று அனைவரும் வருத்தப்பட்டாலும், ஒரு விசயத்தை கவனித்தால் அவர் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு வலியில்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தூக்கத்திலேயே மரணிக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆனாலும் இப்போது எல்லாம் இரவு 2 அல்லது 3 மணிக்கு முழிப்பு வந்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

*******************************************************************

பிரபல சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷனை, காஷ்மீர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார் என்கிற காரணத்துக்காக அவரை மூன்று பேர் அடித்து உதைத்திருக்கிறார்கள். எந்த விதத்தில் நியாயம் இது? ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவருக்கு அவரின் கருத்தை சுதந்திரமாக சொல்ல உரிமையில்லையா?  ஒரு பிரபல வக்கிலுக்கே இந்த நிலமை என்றால், ஒரு சாமன்யனின் நிலை என்ன?  சரி அவரை அடித்துவிட்டார்கள். அதை செய்தியாக சொல்வதோடு விட்டுவிட வேண்டியதுதானே? திரும்ப திரும்ப அவர் அடி வாங்குவதையே தொலைக் காட்சியில் காண்பிப்பது எந்த விதத்தில் நியாயம்? 

*******************************************************************

ஒரு சின்ன விசயம் மனிதனை எந்த அளவிற்கு பயத்துக்குள்ளாக்குகிறது என்பதை காலையில் என் அனுபவத்தில் உணர்ந்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை எழுந்து காய்கறிகள் வாங்க செல்வது வழக்கம். இன்றும் சென்றிருந்தேன். பல கடைகள் வரிசையாக இருக்கும். அதிகாலை என்பதால் அவ்வளவு வெளிச்சம் இல்லை. ஒரு கடையின் மூலையில் நின்று கொண்டு காலிபிளவரை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கடையின் முதலாளி ஒரு சீனப்பெண். அவள் என்னைப்பார்த்து திடீரென, "பாஸ், சினேக் சினேக்" என கத்தினாள். பாம்பு என்றால் எனக்கு பயம் அதிகம். அதனால் காலிபிளவரை அங்கேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி கடைக்கு வெளியே சென்றேன். எல்லோரும் என்னைப்பார்த்து சிரிசிரி என்று சிரிக்க ஆரம்பித்தார்கள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்படி சிரிக்கிறார்கள்? பின்புதான் எனக்கு விசயம் தெரிந்தது. அவள் என்னைக்கூப்பிட்டது எதற்கு என்றால், 'புடலங்காய் (Snake Gourd) வந்திருக்கிறது. உனக்கு வேண்டுமா' என கேட்க நினைத்து 'சினேக் சினேக்' என்று கூப்பிட்டுருக்கிறாள். நான் பாம்பு என நினைத்து பயந்து ஓடியிருக்கிறேன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலேசியாவில் பாம்புகள் மிக அதிகம். 

பாம்பு இல்லை எனத் தெரிந்தும் கூட காலிபிளவர் வாங்காமலேயே வந்துவிட்டேன்.

*******************************************************************

நம் நாட்டில் எந்த ஒரு விசயத்தையும் நாம் வீட்டில் உடனே பகிர்ந்துகொள்வோம். ஆனால் இங்கே... சமீபத்தில் என் அலுவலக ஊழியர் ஒருவரை ப்ரோமோட் செய்தேன். 

அடுத்த நாள் கூப்பிட்டு, "உன் ஹஸ்பெண்டிடம் உன் சம்பள உயர்வை பற்றி சொன்னாயா?" என்றேன்.

 "இல்லை" என்றாள். 

"ஏன்?"

"என் சம்பள உயர்வை பற்றி சொன்னால் அவர் செலவுக்கு கொடுக்கும் தொகையை குறைத்துவிடுவார். அதனால் அவருக்கு தெரியாமல் நான் சேமித்து வைத்துக்கொள்வேன்" என்றாள்.

என்ன கொடுமை பாருங்கள்? மனைவி வாங்கும் சம்பளம் கணவனுக்கு தெரியாது. கணவன் வாங்கும் சம்பளம் மனைவிக்கு தெரியாது. இப்படி குடும்பம் நடத்துக்கிறார்கள். இன்னொரு விசயம் மூன்று வேளைகளிலும் இருவரும் ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் அப்படியே. வாரத்திற்கு ஒரு நாள்தான் வீட்டில் சமையல். வீட்டில் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்கள். மனம் விட்டு பேச அவர்களுக்கு நேரம் இருக்குமா தெரியவில்லை. ஆழ்ந்து பார்த்தோமானால் நம் இந்தியக் குடும்பங்களில் இருக்கும் over attachment இவர்களிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் வாழ்கிறார்கள். யாரும் யாரையும் சார்ந்து இருப்பதில்லை.

எது எப்படியோ, ஒவ்வொரு வீட்டிலும் 5 அல்லது 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.

*******************************************************************

இப்போது நான் சொல்லப்போகும் சம்பவம்போல் நம் நாட்டிலும் நடந்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.

என் நண்பர் ஒருவர். வயது 41. பார்க்க மிக சுமாராக இருப்பார். அப்பா அம்மா இல்லை. அவருக்கு என்று யாரும் இல்லை. அதனால் அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தது. சமீபத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.  யாரைத் தெரியுமா?

மிக அழகான அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 25 இருக்கலாம். ஒரு வருடம் முன் நடந்த சாலை விபத்தில் அவரின் கணவர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட அந்த பெண்ணைத்தான் நண்பர் திருமணம் செய்துகொண்டார்.

நண்பரின் வயதையும், அவரின் உருவத்தையும் நினைத்து அந்த பெண்ணை ஒப்பிட்டு 'நண்பர் மிகவும் கொடுத்து வைத்தவர்' என்றேன். 

அதற்கு இங்கே உள்ளவர்கள், "நீங்கள் சொல்வது தவறு. அந்த பெண்தான் கொடுத்து வைத்தவர். விதவை பெண்ணுக்கு பிரம்மச்சாரி மாப்பிள்ளை அமைந்திருக்கிறது. இது மிகவும் அபூர்வம்" என்கிறார்கள்.

இதே நம்ம ஊர் என்றால்.. வேணாம் விட்டுவிடுவோம்.

*******************************************************************