Oct 14, 2011

மிக்ஸர் - 12.10.2011


சென்ற வாரம் கோலாலம்பூரில் நடந்த சம்பவம் இது. 61 வயதான ஒரு சைனீஷ் டாக்ஸி டிரைவர் கல்யாணம் ஆகாமலேயே வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு கல்யாணம் செய்ய ஆசை வந்துள்ளது. இந்த வயதில் யார் பெண் தருவார்கள்? உடனே ஒரு கல்யாணம் ஏற்பாடு செய்யும் அலுவலகத்துக்கு சென்று விசயத்தை சொல்லி ஒரு நல்ல பெண்ணை அறிமுகம் செய்ய கேட்டுள்ளார். அவர்கள் 18000 ரிங்கிட் பணம் கட்ட சொல்லியிருக்கிறார்கள். அவர் உடனே தன்னுடயை EPF அக்கவுண்டில் பணம் எடுத்து கட்டியுள்ளார். ஒரு அழகான வியட்நாமைச் சேர்ந்த 29 வயது பெண் அவருக்கு மனைவியானார். பின்புதான் பிரச்சனை ஆரம்பம் ஆனது. அவர் அந்த பெண்ணை 'அதற்கு' அழைத்த போது எல்லாம் அவர் மறுத்துள்ளார். இவருக்கு என்ன காரணம் என்று தெரியாமல் தவித்துள்ளார். சரி, போக போக சரியாகிவிடும் என நினைத்து அமைதி காத்து வந்துள்ளார். ஒரு நாள் இவர் மீண்டும் அழைக்கவே அருகே இருந்த மாஜாஜ் ஆயிலை எடுத்து அவர் கண்ணில் எரிந்துள்ளார். உடனே இவர் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார். இன்னொரு நாள் இவர் கெஞ்சி அவரை அழைக்க, "இனி அடிக்கடி தொந்தரவு பண்ணினால் 'அதை' கடித்து துப்பிவிடுவேன் என்று மிரட்டி இருக்கிறார். இவரும் வேறு வழியில்லாமல் அவருடம் ஏதோ ஒரு நம்பிக்கையில் வாழ்ந்துள்ளார். போன வாரத்தில் நம்ப ஹீரோ மிகவும் ஆசைப்பட்டு அந்த பெண்ணை அணைத்து கட்டிப்பிடிக்க, அந்த பெண் உடனே அவர் காதை நன்றாக கடித்து ரத்தக் களறி ஆக்கியிருக்கிறார். அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை. இவர் வலியில் ரத்தம் கொட்ட துடித்துக்கொண்டிருக்கையில், அந்த பெண் ரொம்ப கூலாக, "எனக்கு AIDS" என்று சொல்லியிருக்கிறார். இவர் பயந்து போய் முதலில் காதை கவனிக்கலாம் என்று பாத்ரூம் சென்றுவிட்டு வருவதற்குள் அந்த பெண் வீட்டைவிட்டு ஓடிவிட்டார். பாவம், 18000 ரிங்கிட்டும் போய், லட்டும் திங்கமுடியாமல் போய், இப்போது அவர் எயிட்ஸ் பயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். 

61 வருசம் பிரம்மாரியாய் இருந்தவர் அப்படியே இருக்க வேண்டியதுதானே? விதி!

*******************************************************************

மரணத்தை பற்றி பல சமயங்களில் எழுதியிருக்கிறேன். சென்ற வாரம் என் கம்பனியில் ஒருவரின் இறப்பு என்னை மிகவும் வேதனைப் படுத்திவிட்டது. அதனால்தான் எதையும் என்னால் எழுத முடியவில்லை. அதிலிருந்து மீண்டுவர வெகு நாட்கள் ஆகிவிட்டது.  நிறைய யோசிக்கவும் வைத்துவிட்டது. அவர் ஒரு செக்யூரிட்டி ஆபிஸர். வயது 54 இருக்கும். அன்பானவர். மரியாதையாக பழகக்கூடியவர். சனிக்கிழமை மாலை வரை வேலையில் இருந்தார். வேலை முடிந்து வீட்டுக்கு சென்று சாப்பிட்டு தூங்கியிருக்கிறார். இரவு இரண்டு மணிக்கு அவர் பையன் உடம்பு சரியில்லாமல் முனகவே, சத்தம் கேட்டு எழுந்தவர் அவனுக்கு ஏதோ ஆயிண்மெண்ட் தடவி விட்டு அவனை தூங்க வைத்துவிட்டு, இவரும் அருகிலேயே படுத்து தூங்கி இருக்கிறார். காலையில் அவர் மனைவி இவரை எழுப்பிவிட, அவர் எழவில்லை. தொட்டுப்பார்த்தால், தூக்கத்திலேயே இறந்றிருக்கிறார். என்னதான் அவர் இறந்துவிட்டார் என்று அனைவரும் வருத்தப்பட்டாலும், ஒரு விசயத்தை கவனித்தால் அவர் எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு வலியில்லாமல், யாருக்கும் எந்த தொந்தரவும் கொடுக்காமல் தூக்கத்திலேயே மரணிக்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும்.

ஆனாலும் இப்போது எல்லாம் இரவு 2 அல்லது 3 மணிக்கு முழிப்பு வந்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது.

*******************************************************************

பிரபல சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் பிரசாந்த் பூஷனை, காஷ்மீர் பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார் என்கிற காரணத்துக்காக அவரை மூன்று பேர் அடித்து உதைத்திருக்கிறார்கள். எந்த விதத்தில் நியாயம் இது? ஒரு ஜனநாயக நாட்டில் ஒருவருக்கு அவரின் கருத்தை சுதந்திரமாக சொல்ல உரிமையில்லையா?  ஒரு பிரபல வக்கிலுக்கே இந்த நிலமை என்றால், ஒரு சாமன்யனின் நிலை என்ன?  சரி அவரை அடித்துவிட்டார்கள். அதை செய்தியாக சொல்வதோடு விட்டுவிட வேண்டியதுதானே? திரும்ப திரும்ப அவர் அடி வாங்குவதையே தொலைக் காட்சியில் காண்பிப்பது எந்த விதத்தில் நியாயம்? 

*******************************************************************

ஒரு சின்ன விசயம் மனிதனை எந்த அளவிற்கு பயத்துக்குள்ளாக்குகிறது என்பதை காலையில் என் அனுபவத்தில் உணர்ந்தேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதிகாலை எழுந்து காய்கறிகள் வாங்க செல்வது வழக்கம். இன்றும் சென்றிருந்தேன். பல கடைகள் வரிசையாக இருக்கும். அதிகாலை என்பதால் அவ்வளவு வெளிச்சம் இல்லை. ஒரு கடையின் மூலையில் நின்று கொண்டு காலிபிளவரை எடுத்து பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த கடையின் முதலாளி ஒரு சீனப்பெண். அவள் என்னைப்பார்த்து திடீரென, "பாஸ், சினேக் சினேக்" என கத்தினாள். பாம்பு என்றால் எனக்கு பயம் அதிகம். அதனால் காலிபிளவரை அங்கேயே போட்டுவிட்டு ஒரே ஓட்டமாக ஓடி கடைக்கு வெளியே சென்றேன். எல்லோரும் என்னைப்பார்த்து சிரிசிரி என்று சிரிக்க ஆரம்பித்தார்கள். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. எதற்காக இப்படி சிரிக்கிறார்கள்? பின்புதான் எனக்கு விசயம் தெரிந்தது. அவள் என்னைக்கூப்பிட்டது எதற்கு என்றால், 'புடலங்காய் (Snake Gourd) வந்திருக்கிறது. உனக்கு வேண்டுமா' என கேட்க நினைத்து 'சினேக் சினேக்' என்று கூப்பிட்டுருக்கிறாள். நான் பாம்பு என நினைத்து பயந்து ஓடியிருக்கிறேன். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. மலேசியாவில் பாம்புகள் மிக அதிகம். 

பாம்பு இல்லை எனத் தெரிந்தும் கூட காலிபிளவர் வாங்காமலேயே வந்துவிட்டேன்.

*******************************************************************

நம் நாட்டில் எந்த ஒரு விசயத்தையும் நாம் வீட்டில் உடனே பகிர்ந்துகொள்வோம். ஆனால் இங்கே... சமீபத்தில் என் அலுவலக ஊழியர் ஒருவரை ப்ரோமோட் செய்தேன். 

அடுத்த நாள் கூப்பிட்டு, "உன் ஹஸ்பெண்டிடம் உன் சம்பள உயர்வை பற்றி சொன்னாயா?" என்றேன்.

 "இல்லை" என்றாள். 

"ஏன்?"

"என் சம்பள உயர்வை பற்றி சொன்னால் அவர் செலவுக்கு கொடுக்கும் தொகையை குறைத்துவிடுவார். அதனால் அவருக்கு தெரியாமல் நான் சேமித்து வைத்துக்கொள்வேன்" என்றாள்.

என்ன கொடுமை பாருங்கள்? மனைவி வாங்கும் சம்பளம் கணவனுக்கு தெரியாது. கணவன் வாங்கும் சம்பளம் மனைவிக்கு தெரியாது. இப்படி குடும்பம் நடத்துக்கிறார்கள். இன்னொரு விசயம் மூன்று வேளைகளிலும் இருவரும் ஹோட்டல்களில்தான் சாப்பிடுகிறார்கள். பிள்ளைகளும் அப்படியே. வாரத்திற்கு ஒரு நாள்தான் வீட்டில் சமையல். வீட்டில் எப்படி சந்தோசமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. இங்கு எல்லோருமே அப்படித்தான் இருக்கிறார்கள். மனம் விட்டு பேச அவர்களுக்கு நேரம் இருக்குமா தெரியவில்லை. ஆழ்ந்து பார்த்தோமானால் நம் இந்தியக் குடும்பங்களில் இருக்கும் over attachment இவர்களிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் வாழ்கிறார்கள். யாரும் யாரையும் சார்ந்து இருப்பதில்லை.

எது எப்படியோ, ஒவ்வொரு வீட்டிலும் 5 அல்லது 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.

*******************************************************************

இப்போது நான் சொல்லப்போகும் சம்பவம்போல் நம் நாட்டிலும் நடந்தால் மிகவும் சந்தோசப்படுவேன்.

என் நண்பர் ஒருவர். வயது 41. பார்க்க மிக சுமாராக இருப்பார். அப்பா அம்மா இல்லை. அவருக்கு என்று யாரும் இல்லை. அதனால் அவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்தது. சமீபத்தில் அவர் ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.  யாரைத் தெரியுமா?

மிக அழகான அந்த பெண்ணுக்கு மூன்று குழந்தைகள். கல்யாணம் ஆகி நான்கு வருடங்கள் ஆகிறது. வயது 25 இருக்கலாம். ஒரு வருடம் முன் நடந்த சாலை விபத்தில் அவரின் கணவர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளுடன் தனித்துவிடப்பட்ட அந்த பெண்ணைத்தான் நண்பர் திருமணம் செய்துகொண்டார்.

நண்பரின் வயதையும், அவரின் உருவத்தையும் நினைத்து அந்த பெண்ணை ஒப்பிட்டு 'நண்பர் மிகவும் கொடுத்து வைத்தவர்' என்றேன். 

அதற்கு இங்கே உள்ளவர்கள், "நீங்கள் சொல்வது தவறு. அந்த பெண்தான் கொடுத்து வைத்தவர். விதவை பெண்ணுக்கு பிரம்மச்சாரி மாப்பிள்ளை அமைந்திருக்கிறது. இது மிகவும் அபூர்வம்" என்கிறார்கள்.

இதே நம்ம ஊர் என்றால்.. வேணாம் விட்டுவிடுவோம்.

*******************************************************************


12 comments:

Ravisankaranand said...

ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பதிவு படித்த திருப்தி.. அருமை

இராஜராஜேஸ்வரி said...

அவரவர்கள் வாழ்க்கையை அவரவர்கள் வாழ்கிறார்கள். யாரும் யாரையும் சார்ந்து இருப்பதில்லை.

எது எப்படியோ, ஒவ்வொரு வீட்டிலும் 5 அல்லது 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.

"மிக்ஸர் - அருமை. பாராட்டுக்கள்.

ஓஜஸ் said...

Gud one

iniyavan said...

//Ravisankaranand said...
ரொம்ப நாள் கழிச்சு ஒரு நல்ல பதிவு படித்த திருப்தி.. அருமை// நன்றி ரவி.

iniyavan said...

"மிக்ஸர் - அருமை. பாராட்டுக்கள். வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி மேடம்.

shortfilmindia.com said...

nice and interesting

sriram said...

பாத்தது, படித்தது, கடைக்குப் போனது, ஆபிஸில் நடந்தது இவற்றை வச்சே பதிவு போட்டுடறீங்க உலக்ஸ், அதுவும் சுவாரசியமா இருக்கு, எனக்க்கு கிரியேட்டிவ் மைண்ட் இல்லைன்னு அடிக்கடி சொல்றது உண்மைதான்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

காவேரிகணேஷ் said...

உலக்ஸ்,

திருப்பதியா இருக்கு படிக்க..

Thozhirkalam Channel said...

தமிழ் வலைத்தளத்திற்கான ஒரு புதிய அறிமுகம்

உங்கள் தளம் தரமானதா..?

இணையுங்கள் எங்களுடன்..

http://cpedelive.blogspot.com

iniyavan said...

//shortfilmindia.com said...
nice and interesting// நன்றி தல.

iniyavan said...

//sriram said...
பாத்தது, படித்தது, கடைக்குப் போனது, ஆபிஸில் நடந்தது இவற்றை வச்சே பதிவு போட்டுடறீங்க உலக்ஸ், அதுவும் சுவாரசியமா இருக்கு, எனக்க்கு கிரியேட்டிவ் மைண்ட் இல்லைன்னு அடிக்கடி சொல்றது உண்மைதான்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்// வருகைக்கு நன்றி ஸ்ரீராம்

iniyavan said...

காவேரிகணேஷ் said...
உலக்ஸ்,

திருப்பதியா இருக்கு படிக்க..// நன்றி கணேஷ்.