Oct 25, 2011

தீபாவளி நினைவுகள்!


எல்லோருக்கும் எப்படியோ தெரியாது. எனக்கு தீபாவளி என்றால் அப்பா நினைவுதான் வருகிறது. அப்பாவை பற்றி எவ்வளவோ விசயங்கள் எழுதிவிட்டாலும் இன்னும் எழுத விசயங்கள் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அப்போதைய சூழ்நிலையில் தீபாவளிக்கு துணி வாங்வதற்கு மிகவும் கஷ்டப்படுவோம். என்ன செய்வது? அப்பா ஏறக்குறைய 10 பேர்களுக்கு துணிகள் வாங்க வேண்டி இருக்கும். அங்கே இங்கே கடன் வாங்கி எப்படியோ தீபாவளிக்கு முன் டிரஸ் வாங்கி தந்துவிடுவார். ஆனால் அவ்வளவு சீக்கிரம் எங்களால் வாங்க முடியாது. ஊரில் உள்ள நண்பர்கள் எல்லோம் ஒரு மாதத்திற்கு முன்பே வாங்கிவிடுவார்கள். அதைப் பார்க்கும் போது எல்லாம் ஏக்கமாக இருக்கும். அப்பா மேலே கோபம் கோபமாக வரும்.

அதுவும் ஒரு நண்பன் வீட்டில் குடும்பமே ஒன்றாக சேர்ந்து ஜவுளிக்கடைகளுக்கு போவார்கள். நாங்கள் அந்த மாதிரி போனதாக நினைவே இல்லை. அப்பாவுக்கு இருக்கும் பணத்தை வைத்து தானே வாங்க முடியும். அப்பா கடன் வாங்காத தீபாவளி என்று ஏதாவது வந்து போனதா? என்று இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் தீபாவளி அன்று பார்த்தால் எல்லோரும் புது துணிகளுடன் இருப்போம். ஆனால் அப்பா புது துணிகள் அணிந்து நான் பார்த்ததே இல்லை. அவருக்கு என்று என்றுமே எதையும் வாங்கிக்கொண்டதில்லை. நான் சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு அவருக்கு நிறைய வாங்கித் தர வேண்டும் என்று நினைத்தேன். அதுவும் முடியாமலேயே போய்விட்டது.

இப்போது இந்த அளவிற்கு அப்பாவைப் பற்றி நினைக்கும் நான், அன்று பண்டிகை காலங்களில் அப்பாவை இந்த அளவிற்கு பாசமாக பார்த்ததில்லை. காரணம் எப்போதும் சிடு சிடு என்றே இருப்பார். காரணம் அப்பாவுக்கு எல்லாமே சரியான நேரத்தில் நடக்க வேண்டும். தீபாவளி அன்று அதிகாலையில் எழுந்து விட்டு அனைவரையும் குளிக்க சொல்லி துரத்திக்கொண்டு இருப்பார். இப்போது போல மூன்று நான்கு பாத்ரூம் வசதிகள் அப்போது இல்லை. ஒரே பாத்ரூம்தான். அனைவரும் நேரத்திற்கு குளிக்க வேண்டும் என்றால் எப்படி முடியும். ஒரே டென்ஷனாக இருக்கும். குளித்து முடித்து அவர் துணிகளை எடுத்துக்கொடுத்த பின் எல்லோரும் பூஜை ரூம் முன் உடனே ஆஜராக வேண்டும். நேரம் ஆனால் கன்னா பின்னா என்று கத்துவார்.

ராகு காலம் எம கண்டம் என்று அனைத்தையும் பார்ப்பார். சாமி கும்பிட்டு முடிந்தவுடன் உடனே அனைவரையும் சாப்பிட உட்காரச்சொல்வார். ஒரே நேரத்தில் எல்லோருக்கும் பரிமாற வேண்டும். 'அவனுக்கு இன்னொரு இட்லி வை. இவனுக்கு ஸ்வீட் வை' என அம்மாவை திட்டிக்கொண்டே இருப்பார். எனக்கு அவர் மேல் கோபம் கோபமாக வரும். வெடி வைக்க கிளம்பினால் பக்கத்திலேயே நிற்பார். சுதந்திரமாக வெடிக்க விட மாட்டார். அதனால் நண்பர்களுடன் வெடிக்க உடனே கிளம்பிவிடுவேன். நேரத்திற்கு சாப்பிட வரவில்லை என்றால், உடனே ஆளைவிட்டு அனுப்புவார். வீட்டிற்கு வந்தவுடன் திட்டு விழும். அம்மாவை அதிகம் திட்டுவார். அவ்வளவிற்கும் அம்மா பொறுமையாக இருப்பார்.

நான் எத்தனையோ நாட்கள் அம்மாவை கேட்டு இருக்கிறேன், "ஏம்மா, அப்பா எப்பவும் திட்டிக்கிட்டே இருக்காங்க?" என்று.

அம்மாவோ ஒரு புன்முறுவலுடன், "அவர் எப்பவும் அப்படித்தான்" என்று மட்டுமே சொல்வார்கள். எனக்கு மட்டும் அப்பா மேல் எப்பவும் கடுப்பு இருந்து கொண்டே இருக்கும். இத்தனைக்கும் அப்பா மேல் அவ்வளவு பாசம் எனக்கு. இருந்தும் பண்டிகை காலங்களில் ஏன் இப்படி சிடு சிடு என்று இருக்கிறார் என கோபமாக வரும்.

இப்படித்தான் என் இளமைக்கால தீபாவளிகள் வந்து போயின. இதோ அப்பா இறந்து 10 வருடங்கள் ஆகிவிட்டது. ஆண்டவன் தயவால் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் அப்பா இல்லாத தீபாவளிகள் என்னை எந்த விதத்திலும் சந்தோசப்படுத்தவே இல்லை.

அப்பாவின் சத்தம் இல்லாத, சிடு சிடு பேச்சுகள் இல்லாத, அப்பாவின் கோபம் இல்லாத தீபாவளி என்னை எந்தவிதத்திலும் கவருவதே இல்லை. அன்று அவரிடம் புரியாத பல விசயங்கள் இன்று நான் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் போது புரிகிறது.

என்னதான் சந்தோசமாக இருப்பதாக பிள்ளைகளிடம் காட்டிக்கொண்டாலும் அன்றைய தினம் அப்பாவின் நினைவுகள் சற்று அதிகமாகவே வருகிறது. இதிலிருந்து எப்படி வெளிப்படுவது என்று எனக்குத் தெரியவே இல்லை.

அப்பா அம்மாவுடன் தீபாவளியை கொண்டாடும் நண்பர்கள் ஒவ்வொரு வினாடியையும் அனுபவித்துக்கொண்டாடுங்கள், அந்த தருணங்கள் வாழ்க்கையில் பொன்னானவை. எவ்வளவோ கோபதாபங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களின் அருகாமை நமக்கு என்றுமே தேவையாய் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துகள்.

சென்ற வருட தீபாவளியின் போது நான் எழுதிய இடுகையை படிக்க இங்கே செல்லுங்கள்:9 comments:

D. Chandramouli said...

அப்பா இல்லாத தீபாவளிகள் என்னை எந்த விதத்திலும் சந்தோசப்படுத்தவே இல்லை.


அப்பாவின் சத்தம் இல்லாத, சிடு சிடு பேச்சுகள் இல்லாத, அப்பாவின் கோபம் இல்லாத தீபாவளி என்னை எந்தவிதத்திலும் கவருவதே இல்லை. அன்று அவரிடம் புரியாத பல விசயங்கள் இன்று நான் தகப்பன் ஸ்தானத்தில் இருக்கும் போது புரிகிறது.//

Very True. At whatever age we are in, we miss "Appa".

கோவி.கண்ணன் said...

அருமையான நினைவோடை. இருக்கிறப்ப அருமை தெரியாதும்பாங்க

Ravisankaranand said...

உலக்ஸ், இந்த வருஷம் இன்னும் நம்ம ஊர்ல இன்னும் தீபாவளி கல கட்டல, ஒரு வேட்டு சத்தமும் இன்னும் கேட்கல, வீட்ல ரவா லட்டும் குளோப் ஜாமூனும் செய்துடாங்க :)

BTW மறுபடியும் அனானி போஸ்ட் அல்லோ பண்ணிடீங்க போல??

iniyavan said...

//Very True. At whatever age we are in, we miss "Appa".// வருகைக்கு நன்றி சார்.

iniyavan said...

//கோவி.கண்ணன் said...
அருமையான நினைவோடை. இருக்கிறப்ப அருமை தெரியாதும்பாங்க// நன்றி கோவிகண்ணன். தீபாவளி வாழ்த்துகள்.

iniyavan said...

Ravisankaranand said...
உலக்ஸ், இந்த வருஷம் இன்னும் நம்ம ஊர்ல இன்னும் தீபாவளி கல கட்டல, ஒரு வேட்டு சத்தமும் இன்னும் கேட்கல, வீட்ல ரவா லட்டும் குளோப் ஜாமூனும் செய்துடாங்க :) வருகைக்கு நன்றி ரவிசங்கர்

iniyavan said...

//BTW மறுபடியும் அனானி போஸ்ட் அல்லோ பண்ணிடீங்க போல??// இல்லை இல்லை. வேற எதோ செட்டிங் மாறும்போது இதுவும் மாறிடுச்சு போல. இப்போ சரி பண்ணீட்டேன்.

swami sivasu said...

அப்பா போன பிறகு வரும் முதல் தீபாவளி இது தான். தாங்க முடியாத வெற்றிடம். அப்பா அப்பா என்று உரக்க கூப்பிட வேண்டும் போல் இருக்கு. யாரை கூப்பிடுவது ? என்று தான் தெரியவில்லை.அழுகை தான் வருகிறது - சுவாமி

iniyavan said...

swami sivasu said...
அப்பா போன பிறகு வரும் முதல் தீபாவளி இது தான். தாங்க முடியாத வெற்றிடம். அப்பா அப்பா என்று உரக்க கூப்பிட வேண்டும் போல் இருக்கு. யாரை கூப்பிடுவது ? என்று தான் தெரியவில்லை.அழுகை தான் வருகிறது - சுவாமி// உங்கள் கவலை புரிகிறது நண்பா