Oct 28, 2011

நாங்க என்னத்தான் செய்யறது?


ஏற்கனவே தீபாவளிக்கு ஊருக்கு போக முடியாத கடுப்புல இருந்த என்னை ஒரு மலாய் நண்பர் சந்தித்தார். 

"ஏன் சார் ஒரு மாதிரி இருக்கீங்க?" என்றார்.

"தீபாவளியை ஊர்ல கொண்டாட முடியாம போச்சு. அதான்"

"அதான் இங்க கொண்டாடறீங்க இல்லை"

"ஊருல கொண்டாட மாதிரி வருமா சார்?"

"அங்க எப்படி கொண்டாடுவீங்க?"

"அங்க வீட்டுல எல்லாரும் இருப்பாங்க. அதிகாலை எழுந்துடுவோம். எல்லோரும் எண்ணய் தேய்த்து குளித்துவிட்டு, புத்தாடை உடுத்தி சாமி கும்பிட்டு, ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு, வெடிவெடித்து கொண்டாடுவோம். நண்பர்களை சந்திப்போம். உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள். புதிய சினிமா பார்ப்போம்"

"இங்கேயும் அதான செய்யறீங்க?"

"இங்க அப்படி இல்லை சார். இப்ப நம்ம தெருவுல பாருங்க. நாங்க மட்டும்தான் தீபாவளி கொண்டடறோம். மத்தவங்க எல்லாம் இஸ்லாமியர்கள். எங்கள் ஊரில் அப்படி அல்ல. தீபாவளி பண்டிகை என்பது நாடே கொண்டாடும் ஒரு பண்டிகை. ஊரில் எங்கு பார்த்தாலும் மக்கள் சந்தோசமாக இருப்பார்கள். மற்ற நாட்களில் பார்த்தீர்களானால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் மக்கள் அனைவரும் தங்கள் சோகங்களை மறந்துவிட்டு சந்தோசமாக இருப்பார்கள். நினைத்து பாருங்கள் ஊரே சந்தோசமாக இருந்தால் எப்படி இருக்கும் என்று. ஒருவர் மட்டும் சந்தோசமாக இருப்பதைவிட ஒரு ஊரே மகிழ்ச்சியாக இருப்பது என்பது எப்போதும் இல்லாதது." இப்படியாக விளக்கிச் சொன்னேன். நண்பருக்கு புரிந்ததோ இல்லையோ எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் சென்று விட்டார்.

கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு நண்பர்கள் எல்லோரிடமும் பேசி அவர்களின் சந்தோசங்களை தொலைபேசியின் மூலம் எனக்கும் பரவ செய்து கொண்டேன். சரி, புதுப்படத்திற்காவது போகலாம் என்றால் அதில் ஒரு பிரச்சனை.

'மங்காத்தா' வந்தபோதும் அதே பிரச்சனைதான். 18+ படம். பிள்ளைகளை அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளைகள் இல்லாமல் படம் பார்ப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒரு விசயம் மட்டும் புரியவில்லை. இங்கே 'ஆஸ்ட்ரோ முதல் திரை' என்று ஒரு சேனல் உள்ளது. அதில் மங்காத்தா ரிலீஸாகி 50 நாட்களுக்குள் படத்தை போட்டுவிட்டார்கள். 15 வெள்ளி கொடுத்தால், தொடர்ந்து 48 மணி நேரம் அந்த படம் வரும். அப்போது குடும்பமே பார்க்கலாம். என்னதான் சென்சார் செய்து இருந்தாலும் எல்லா வசனங்களும் அப்படியேத்தான் உள்ளன (ஒரு சில வசனங்களில் ஆடியோ கட்). 18+ என்பதற்கான அர்த்தம் என்ன? என்பது எனக்கு புரியவில்லை. வீட்டில் பிள்ளைகள் பார்க்கலாம், தியேட்டரில் பார்க்க கூடாதா?

அதே போல் இப்போது வேலாயுதம். இதுவும் 18+. பிள்ளைகள் பார்க்க முடியாது. அதனால் நாங்களும்!

சரி, ஏழாம் அறிவு பார்க்கலாம் என்றால், "டைட்டில் மட்டும் நல்லா இருக்கு, டாக்குமெண்ட்ரி மாதிரி இருக்கு, முதல் பகுதி நல்லா இருக்கு, இரண்டாம் பகுதி சரியில்லை, பாட்டு மட்டும் நல்லா இருக்கு, ஸ்ருதி டிரஸ் மட்டும்தான் நல்லா இருக்குனு" ஆளாளுக்கு விமர்சனம் எழுதிட்டாங்க. இதனால் படம் பார்க்குற ஆர்வமே போயிடுச்சு.

விமர்சனங்கள் படித்தால் ஏறக்குறைய கதையும் ஓரளவு தெரிந்துவிடுகிறது. மங்காத்தா பார்க்கும் வரை விமர்சனங்கள் படிக்காமலே இருந்தேன். அதனால்தான் என்னால் படத்தை ரசிக்க முடிந்தது.

மொத்தத்துல ஏறக்குறைய எல்லோரும் படத்தை பார்த்துடுறாங்க. அப்புறம் விமர்சனம் எழுதிடறாங்க. நம்மால விமர்சனத்தை படிச்சுட்டு பார்க்க முடியாம போயிடுது.

எங்களுக்கே எப்பவாவதுதான் தமிழ் படம் வரும். அதும் ஒரு சில நாட்கள் மட்டுமே ஓடும். அதையும் நாங்கள் பார்க்க முடியாமல் போய்விடுகிறது. 

ஏன் இப்படி புலம்பறேன் என்கின்றீர்களா? தீபாவளி ஊர்ல கொண்டாட முடியாம போச்சேங்கற எரிச்சல்தான். வேற என்ன?


3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

உள்ளூரின் அனுவபம் வேறெங்கும் வராது...


சாதாரண கொண்டாட்டம் என்றாலும் இது ஊரில் என்றால் அதன் சுகம் தனி...


தங்கள் ஏக்கம் நிறைபேருக்கு உள்ளது

iniyavan said...

Ganesh Ramani Ulaganathn avargale..ithaithan occupational hazard endru solluvargalo..Ganesh ,,alone from Egypt
21 minutes ago · Like

iniyavan said...

கவிதை வீதி... //சௌந்தர் // said...
உள்ளூரின் அனுவபம் வேறெங்கும் வராது...

சாதாரண கொண்டாட்டம் என்றாலும் இது ஊரில் என்றால் அதன் சுகம் தனி...

தங்கள் ஏக்கம் நிறைபேருக்கு உள்ளது// வருகைக்கு நன்றி சௌந்தர்.