Oct 31, 2011

மரண தண்டனை...


குழப்பமாக விடிந்தது நீதிபதி குலசேகர பாண்டியனுக்கு. மிகுந்த பயத்துடன் எழுந்தான் சேகர். தலைவலிப்பது போல் உணர்ந்தார் குலசேகர பாண்டியன். சேகருக்கு உடல் முழுவதும் வேர்த்தது.

***********************************************

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாள். 

"வேண்டாங்க, போதுங்க. குழந்தை முழிச்சிடப்போகுது"

"இன்னும் ஒரு தடவை நித்யா. ப்ளீஸ்"

"இதுக்கு மேல கேட்ககூடாது"

"சரி சரி"

"உடனே அய்யாவுக்கு கோபம் வந்துடும். இன்னும் கிட்ட வாங்க" என்ற நித்யா சேகரை நெஞ்சோடு அணைத்து அவன் கன்னத்திலும், நெத்தியிலும் மாறி மாறி முத்தமிட்டாள்.

"போதுமா! பேசாம தூங்குங்க"

"ரொம்ப தேங்க்ஸ்டா" 

"எதுக்கு?" என்று கேட்டுக்கொண்டே நைட்டிக்கு மாற ஆரம்பித்தாள்.

"எல்லாத்துக்கும்தான்" என்றவன் அவளை அப்படியே கட்டிப்பிடித்துக்கொண்டு தூங்க ஆரம்பித்தான்.

இது தினமும் அவர்களுக்குள் நடப்பதுதான். எல்லாம் முடிந்ததும், நித்யாவின் முத்தமும் அணைப்பும் இல்லாமல் சேகரால் தூங்க முடியாது. இவன் கெஞ்சுவதும், அவள் மறுப்பதும்..... அன்றாட நிகழ்வு.

சேகர் நித்யாவை துரத்தி துரத்தி காதலித்தான். முதலில் நித்யா சேகரை திரும்பிக்கூட பார்க்கவில்லை. எங்கும் நடப்பதுதான். நித்யா பெரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவள். சேகர் பரம ஏழை. எப்படியோ அவளை துரத்தி துரத்தி ஒரு வழியாக நித்யாவிற்கும் பிடிக்கும்படி செய்துவிட்டான். நித்யாவின் அப்பா அவர்கள் காதலுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை. முதலில் சேகரை மிரட்டிப்பார்த்தார். பின் அவனை பணத்தால் வாங்க பார்த்தார். முடியாமல் போகவே ஆளை வைத்து அடித்தும் பார்த்தார். அதுவும் முடியாமல் போகவே நித்யாவை அவசர அவசரமாக வேறு ஒரு சொந்தக்கார பையனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டார்.

சேகரால் தடுக்க முடியவில்லை. அவ்வளவுதான் என்று நினைத்திருந்த வேளையில் நித்யா வீட்டைவிட்டு ஓடி சேகர் வீட்டுக்கு வந்துவிட்டாள். இரவோடு இரவாக சேகர் பக்கத்து ஊரில் உள்ள கோயிலில் நித்யாவை திருமணம் செய்து கொண்டான்.

ஊரில் இருந்தால் பிரச்சனை என்று சென்னைக்கு ஓடி வந்துவிட்டான். ஐந்து வரும் ஓடிவிட்டது. ஒரு குழந்தையும் ஆகிவிட்டது.

***********************************************

குலசேகர பாண்டியன் பொதுவாக எதற்கும் கவலை படாதவர். மிகப்பெரிய குடும்பத்தில் பிறந்தவர். அவர் அப்பா ஒரு பெரிய பண்ணையார். அவர்கள் பரம்பரையிலேயே அதிகம் படித்தவர் இவர் ஒருவர்தான். அப்பாவின் எதிர்ப்புகளை மீறி சட்டம் படித்தவர். பின் படிப்படியாக முன்னேறியவர். அகில இந்தியா அளவில் நடந்த நீதிபதிகள் தேர்வில் முதல் ரேங்க் எடுத்தவர். பலவருட கடின உழைப்புக்கு பிறகு இப்போது உச்ச நீதி மன்றத்தில் நீதிபதியாக இருக்கிறார். இவரின் தீர்ப்பு எப்போதுமே சரியாக இருக்கும் என்று அனைவராலும் பாராட்டப்படுபவர். மிகுந்த மரியாதையுடன் அனைத்து சட்ட வல்லுனர்களும் இவரை பார்ப்பார்கள். இவரின் தீர்ப்பை பல சமயங்களில் மற்றவர்கள் உதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். அந்த அளவு வழக்கின் தீவிரத்தை உணர்ந்து தீர்ப்பு கொடுப்பவர்.

"என்னப்பா? தீவிர சிந்தனை. இந்தாங்க காபி" என்று காபி நீட்டிய மகள் கீர்த்தியை உற்று நோக்கினார். மனம் லேசானது. அதே சமயம் கொஞ்சம் வருத்தமும் ஏற்பட்டது. 

"ஒண்ணும் இல்லைமா"

கீர்த்தி சென்றவுடன் மீண்டும் சிந்திக்கலானார்.

***********************************************

சென்ற வருடத்தில் ஒரு நாள்.

"நித்யாஆஆஆஆஆஅ" என்ற அலறல் அந்த தெருவையே கிடுகிடுக்க வைத்தது. பக்கத்து வீட்டில் இருந்தவர் அவசர அவரமாக ஓடினார். வீட்டின் கதவு திறந்துதான் இருந்தது. உள்ளே சென்று பார்த்தவருக்கு அதிர்ச்சி. படுக்கையில் ரத்த வெள்ளத்தில் நித்யா. கையில் கத்தியுடன் சேகர். ஓரத்தில் குழந்தை தூங்கிக்கொண்டு இருந்தது. 

''என்ன ஆச்சு?" அவர் கேட்க கேட்க மயங்கி விழுந்தான் சேகர். அவர்தான் போலிஸுக்கு தகவல் சொல்லி அனுப்பினார். போலிஸ் வந்து பாடியை கைப்பற்றி போஸ்மார்ட்டம் செய்து இது ஒரு கொலை என்று முடிவு செய்தது. நித்யாவின் அப்பா ஒரு படையுடன் வந்தார். போலிஸ் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே சேகரை அவரின் ஆட்கள் அடித்து உதைத்தனர். சேகர் ஒன்றுமே பேசவில்லை.

இரண்டு நாட்களுக்கு பின் சேகர் வாயை திறந்தான். போலிஸின் அனைத்துக்கேள்விகளுக்கும் ஒரே பதிலையே சொன்னான்.

"சார் நான் என் பொண்ணுக்கு சளி மருந்து வாங்க கடைக்கு போயிருந்தேன். நான் திரும்பி வீட்டிற்கு வந்து பார்த்த போது நித்யா படுக்கையில் ரத்த வெள்ளத்தில் இருந்தாள். அவளின் நெஞ்சில் கத்தி குத்தி இருந்தது. உயிர் லேசாக இருந்தது. அதனால் அவளை பிழைக்க வைக்க வேண்டும் என்ற நோக்கில் கத்தியை உருவினேன். பின் சிறிது நேரத்தில் அவள் மூச்சு நின்றுவிட்டது. சத்தியமாக நான் அவளை கொலை செய்யவில்லை" என்றவன் ஓஓஓஓஒ என கதறி அழ ஆரம்பித்து விட்டான்.

***********************************************

கீர்த்திக்கு கல்யாணம் ஆகி பத்து வருடம் ஆகிவிட்டது. இன்னும் ஒரு குழந்தை இல்லை. பார்க்காத வைத்தியம் இல்லை. நேற்றுக்கூட ஒரு டாக்டரிடம் கூட்டிச் சென்றிருந்தார். அவர் சொன்னது............ சிந்தனையில் இருந்து விடுபட்டவர்,

"கமலா" என்று மனைவியை அழைத்தார். 

''என்னங்க?"

"சாயந்திரம் ரெடியா இருங்க. கோவிலுக்கு போயிட்டு வரலாம்"

என்றவர் குளிப்பதற்காக பாத்ரூமை நோக்கி சென்றார்.

***********************************************

சாட்சியங்கள், சூழ்நிலைகள் எல்லாம் சேகருக்கு எதிராகவே அமைந்தன. அதோடு நித்யாவின் அப்பாவின் பணம் வேறு விளையாடியது. அதனால் சேகருக்கு கோர்ட்டில் சேகர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதித்தார்கள். அவனின் நண்பர்கள் தயவால் கேஸ் ஹை கோர்ட்டுக்கு போனது. நித்யாவின் அப்பா பணத்தை தண்ணீராக செலவழித்தார். அங்கும் சேகருக்கு மரண தண்டனை உறுதி செய்யப் பட்டது.

இதோ இன்று சேகருக்கு உச்ச நீதி மன்றத்தில் தீர்ப்பு.

***********************************************

கோர்ட் ஆரம்பித்தது. நீதிபதி குல சேகரப பாண்டியன் கோர்ட்டில் நுழைய ஆரம்பித்ததும் அனைவரும் எழுந்து நின்றனர். சேகர் அழைத்து வரப்பட்டு கூண்டில் நிறுத்தி வைக்கப்பட்டான். சேகர் மிகுந்த பதட்டத்துடன் காணப்பட்டான். எதிரே நித்யாவின் அப்பா அவரின் ஆட்களுடன் ஒரு விதமான கோபத்துடன் உட்கார்ந்து இருந்தார்.

வக்கில்கள் எல்லோரும் சேகருக்கு தூக்குத்தண்டனை உறுதி என்று பேசிக்கொண்டார்கள். இறுதிக்கட்ட விசாரணை முடிந்ததால், அரசு தரப்பு வக்கில் அவர் தரப்பு வாதத்தை முடித்துக்கொண்டு சேகருக்கு தூக்குத்தண்டனையை உறுதி செய்ய சொல்லி நீதிபதியிடம் சொல்லிவிட்டு அமர்ந்தார்.

கோர்ட் ஒரு முப்பது நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. 

மீண்டும் கோர்ட் ஆரம்பித்தவுடன், நீதிபதி குலசேகர பாண்டியன் தன் தீர்ப்பை படிக்க ஆரம்பித்தார்,

"சாட்சியங்களும், விவாதங்களையும் வைத்து பார்க்கையில் சேகர்தான் அவர் மனைவி நித்யாவை கொலை செய்தார் என்று தோன்றினாலும், போலிஸ் பல விசயங்களில் அதை நிரூபிக்க தவறி விட்டது. எடுத்துக்காட்டாக..............

அதனால் Benefit of Dubtஐ சேகருக்கு அளித்து, அவருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ரத்து செய்து அவர் நிரபராதி என தீர்ப்பளிக்கிறேன்"

தீர்ப்பைக் கேட்ட கோர்ட் சலசத்தது. அனைத்து கோர்ட்டுகளிலும் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு அப்படியே மாற்றாக இந்த தீர்ப்பு அமைந்தது விவாத்துக்குள்ளானது. ஆனாலும் அந்த தீர்ப்பு நீதிபதி குலசேகர பாண்டியனால் கொடுக்கப்பட்டதால், அதில் நியாயம் இருக்கலாம் என்று அனைவருக்கும் தோன்றியது.

***********************************************

நேற்று மாலை. கீர்த்தியை ஸ்பலிஸ்டிடம் கூட்டிச்சென்றார் நீதிபதி குலசேகர பாண்டியன். பல பரிசோதனைக்கு பிறகு, "இன்னும் ஒரே ஒரு டிரீட்மெண்ட் தான் பாக்கி அதையும் செய்துவிடலாமா?"

"என்ன டாக்டர் இது? இன்னும் எத்தனை ஊசிகள், மாத்திரைகள்? எப்படி என் பெண் தாங்குவாள்?"

"என்ன பண்றது சார். இது எல்லாம் நம் கையிலா இருக்கு. ஒரு உயிர் உண்டாவது அவ்வளவு சாதாரண விசயம் இல்லை சார். அதுவும் இல்லாம ஒரு உயிரின் மதிப்பு என்ன என்பது இந்த மாதிரி சமயங்களில்தான் நம்மலால உணர முடியுது இல்லை சார்"

***********************************************