கடும் விலைவாசி. ஷேர் மார்க்கெட் சரிவு. பணவீக்கம். என்றும் இல்லாத அளவிற்கு ஒரு அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு ஏறக்குறைய 53 ரூபாய் ஆகிவிட்டது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடம் இருக்கிறது. ரிசர்வ் பேங்க் உடனடியாக தலையிட்டு அமெரிக்க டாலரை கையிலிருப்பில் இருந்து எடுத்து வெளியில் விட வேண்டும். அதனால் ஓரளவு இந்திய ரூபாயின் மதிப்பு உயரலாம். ஆனால், நிதியமைச்சர் பிராப் முகர்ஜியோ எதுவும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
இந்தியா ஒரு Self Sufficient Country. நாம் பெட்ரோல் மட்டுமே அதிக அளவில் இறக்குமதி செய்கிறோம். மற்ற பொருட்கள் எல்லாம் அதிகமாக ஏற்றுமதி செய்கிறோம். இப்படி இருக்கையில் எங்கிருந்து வந்தது இந்த பணவீக்கம்? தவறு எங்கோ பெரும் அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கவனிக்க வேண்டிய அரசாங்கமோ வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ஓரளவு பணம் உள்ளவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வார்கள். ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்காதா? என்ற ஏக்கத்தில்! ஆனால் இப்போது நடப்பது என்ன? ஷேர் மார்க்கெட் பாயிண்ட் அதல பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. முதலுக்கே மோசம்!
விலைவாசி உயர்வை விவாதிப்பதற்கு எதிர்கட்சிகள் ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வந்தால் ஆளும் கட்சி அதை தடுக்கிறது. தினமும் விலைவாசி உயர்வால் மக்கள் வேதனையை அனுபவிக்கிறார்கள். என்னதான் செய்வார்கள் மக்கள்? அதான் கோபம் கொண்ட ஹர்வீந்தர்சிங் என்னும் இளைஞர் மத்திய வேளாண்மைத்துறை அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் கூட்டாளியுமான சரத் பவாரை கன்னத்தில் அறைந்து தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் அறைந்தது சரியா இல்லையா என்று விவாதிப்பதை விட அவரின் கோபத்தில் உள்ள நியாயத்தை பாருங்கள்.
அவரால் முடிந்திருக்கிறது. பல பேரால் முடியவில்லை. அதுதான் உண்மை. மன்மோகன்சிங் தன் டெம்ளேட் அறிக்கையின் மூலம்
"இதுபோன்ற சம்பவங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கக்கூடாது" என்று கூறுகிறார். இது போல் எதற்கும் சரியான பதில் அளிக்க முடியாத பிரதமரைத்தான் நாம் இரண்டாம் முறையாக தேர்ந்தெடுத்திருக்கிறோம்.
முக்கியமான பொறுப்பில் உள்ள பிரணாப் முகர்ஜியோ, "இந்த நாடு எங்கே போய்க்கொண்டு இருக்கிறது?" என்று கேட்கிறார். இந்த கேள்வியை பொது மக்களாகிய நாம் அல்லவா கேட்கவேண்டும்? இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததற்கு அவர் வெட்கம் அல்லவா பட வேண்டும். எங்கே தன்னையும் இப்படி யாராவது அடித்துவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டதோ என்னவோ?
பார்லிமெண்டில் இருப்பவர்கள் யாரும் ஏழை இல்லை. அதனால் அவர்களுக்கு விலைவாசி உயர்வினால் ஏழைகள் படும் வேதனை அறிந்திருக்க நியாயமில்லை.
இது போல் சம்பவம் நடப்பதை நாமும் விரும்பவில்லை. அதே போல் எம்மைப் போல் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் இப்படிப்பட்ட காட்சியினை பார்க்கும் போதும், அதை பார்த்து வெளிநாட்டினர் அடிக்கும் கமெண்ட்டுகளை கேட்கும் போதும் அளவுக்கு அதிகமான வேதனை அடைகிறோம்.
தொலைக்காட்சியில் அந்த காட்சியை அடிக்கடி காண்பிப்பதை உடனே நிறுத்த வேண்டும். மானம் போகிறது.
முன்பு ஒரு முறை நான் அன்னா ஹசாரேவை பற்றி எழுதியபோது என் நெருங்கிய நண்பர்கள் கூட கோபித்துக்கொண்டார்கள். ஆனால் இப்போது பாருங்கள் அவர் புத்தியை காண்பித்துவிட்டார். இவரா காந்தியவாதி? மகாத்மா காந்தி ஒரு போதும் இது போன்ற சம்பவங்களை ஆதரிக்க மாட்டார்.
ஆனால் இந்த திடீர் காந்தியவாதி கேட்கும் கேள்வியை பார்த்தீர்களா? "ஒரே ஒரு முறைதான் அறைந்தாரா?" எனக் கேட்டிருக்கிறார். எவ்வளவு நக்கல், கிண்டல் பாருங்கள்?
இன்னொரு ஹர்வீந்தர்சிங் உருவாகமல் தடுப்பது அரசாங்கத்தின் கடமை. அதற்கு என்ன செய்ய வேண்டும்? உடனடியாக அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுத்து விலைவாசி உயர்வை ஓரளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும். அதுதான் இரண்டாவது முறையாக அவர்களை ஆட்சியில் அமர்த்திய மக்களுக்கு அவர்கள் செய்யும் நன்றியாகவும், உதவியாகவும் இருக்கும்.