Nov 1, 2011

கலாச்சார வேறுபாடு?


அம்மா பேசும்போது எல்லாம், " சீக்கிரம் குடும்பத்தோடு வந்து இங்கே செட்டிலாகிவிடு" என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கிறேன்.

நான் பள்ளியில் படிக்கும் போது பல பெண்களுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பெண்ணைப் பற்றி... வேண்டாம். அதை ஒரு நாவலாக எழுத எண்ணம் இருப்பதால் அதைப்பற்றி இங்கே பேச வேண்டாம். விட்டு விடுவோம், பள்ளியில் ஏற்படுவது எல்லாம் காதல் அல்ல, அது ஒரு இனக் கவர்ச்சிதான் என்று இப்போது புரிவது போல் இருக்கிறது. ஆனால், அதை காதல் என்றும் பலர் சொல்கிறார்கள். அப்போது எல்லாம் எந்த பெண்ணுடன் பேசும் போதும் ஒரு பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். யாராவது வீட்டில் போட்டுக்கொடுத்து விட்டாலோ அல்லது பேசியதை வீட்டில் உள்ளவர்கள் பார்த்துவிட்டால் என்ன ஆகும்? என்று ஒரே கவலையாக இருக்கும். உடம்பெல்லாம் நடுங்கும். பல விசயங்களை கற்பனையிலேயே நினைத்துக்கொண்டு வாழ்ந்த காலம் அது. உண்மைகள் புரிய பல வருடங்கள் காத்திருக்க வேண்டியதாகிவிட்டது.

நான் மேலே ஏன் இப்படி இரண்டு பாராக்கள் எழுதினேன் என்பதற்கு நீங்கள் இந்த கட்டுரையை முழுவதும் படிப்பது அவசியமாகிறது.

சென்ற மாதத்தில் ஒரு நாள் இங்கே உள்ள நண்பருடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு கண்சல்டன்ஸி ஏஜன்ஸி வைத்துள்ளார். பேச்சு மெல்ல அவர் குடும்பத்தை பற்றி நகர்ந்தது. பேச்சு வாக்கில் 'கல்லூரியில் படிக்கும் அவர் பெண் லண்டன் சென்றிருக்கிறார்' என்றார்.

நான் "எதற்கு?" என்றேன்.

"சும்மா சுற்றிப்பார்க்க" என்றார்.

நான் ஏதோ கல்லூரி சுற்றுலா போல என்று நினைத்து, "மாணவர்கள் அனைவரும் சென்றிருக்கின்றார்களா?" என்றேன்.

"இல்லை. அவர் பாய் பிரண்டுடன்" என்றார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. "என்னது! பாய் பிரண்டுடனா? எத்தனை நாட்கள்?" என்றேன்.

"பத்து நாட்கள்" என்றார்.

எனக்கு தலை சுற்றாத குறை. கல்யாணம் ஆகாத இளம் ஆணும் பெண்ணும் தனியாக பத்து நாட்கள், அதுவும் வேறு ஒரு நாட்டில்? 

"என்ன சார்? இது தப்பில்லையா?" என்றேன்.

"எது தப்பு?"

"கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படி சுற்றுவது?"

"என்னைப் பொருத்தவரை இது தவறில்லை. எப்படி இருந்தாலும் அவர்கள் திருமணம் செய்து கொள்ள போகிறார்கள். நான் அப்படியே தடுத்தாலும், அவர்கள் இங்கேயே எங்கோ ஒரு இடத்தில் தப்பு செய்ய வாய்ப்பிருக்கிறது இல்லையா?. அதற்கு பதில் நாமே அனுமதித்து விடலாமே" என்றார்.

என்னால் அவரின் கருத்தை ஒப்புக்கொள்ள முடியவில்லை. மேலும் அவரிடம் பேசியதிலிருந்து அவரும் இப்படி லவ் மேரஜ் செய்தவர்தான் என்று தெரிந்து கொண்டேன்.

இங்கே நம் நாடு போல இல்லை. 98 சதவிகிதம் காதல் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். பள்ளி படிக்கும்போதே எல்லோருக்கும் பாய் பிரண்டு, கேர்ள் பிரண்டு உண்டு. பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார்கள். பள்ளி படிக்கும் போதே எல்லோரும் கையில் செல் போன் வைத்திருக்கிறார்கள்.

எனக்கு தெரிந்த ஒரு குடும்பத்து வீட்டு சின்னப் பெண் தன் பாய்பிரண்டை தைரியமாக வீட்டிற்கே அழைத்து செல்வதை வியப்புடன் பார்த்திருக்கிறேன். ஒரு நாள் அந்த பெண்ணை அவள் பாய் பிரண்டுடனும், அந்த பெண்ணின் தாயாருடனும் ஒரு பொது இடத்தில் பார்த்தேன். வியந்து போனேன். இது போல் நம் நாட்டில் நடக்குமா?

நான் இந்த கலாச்சாரத்தை குறை சொல்லவில்லை. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்கிறார்கள். ஆனால், நம் நாட்டு கலாச்சாரத்தில் நாம் ஊறி இருப்பதால் என்னால் சில விசயங்களை ஜீரணிக்க முடிவதில்லை.

எனக்கு தெரிந்த இன்னொரு நண்பரின் வீட்டு பெண் பல வருடங்கள் தன் காதலனுடன் ஒரே வீட்டில் தனியாக வாழ்ந்தாள். ஆனால் சமீபத்தில் கல்யாணம் நடந்து நன்றாக குடும்பம் நடத்துகிறார்கள். உங்களுக்கு சந்தேகம் வரலாம், ஏன் அவர்கள் முன்பே கல்யாணம் செய்து கொள்ளவில்லை என்று? இங்கு பெண்கள் ஆண்கள் இருவருமே என்னதான் காதலித்தாலும், ஒரளவு வாழ்க்கையில் செட்டிலான உடன்தான் திருமணமே செய்து கொள்கிறார்கள். 

ஆனால் கல்யாணம் வரை அவர்கள் மற்ற விசயங்களை தள்ளிப்போடுவார்கள் என்று நினைத்தோமானால் நம்மை போல் ஏமாளி யாரும் இருக்க முடியாது.

எப்போதும் டிவியில் பாடல்கள் பார்க்கும்போது நான் என் இளமைக்காலங்களுக்கு சென்றுவிடுவேன். மனதளவில் இருபது வாலிபனாகவே உணர்வேன். பலவிதமான கற்பனைகளுடனும், கமெண்ட் அடித்துக்கொண்டும் பார்த்து ரசிப்பேன். இப்போது அப்படி முடிவதில்லை. காரணம் பிள்ளைகளும் என்னுடன் சேர்ந்து டிவி பார்க்கிறார்க்ள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. பயமாக இருக்கிறது.

நேற்று என் பெண் என்னிடம் கேட்டாள், "டாடி, "காமம்''னா என்ன?" 

முதலில் அதிர்ந்தாலும், அவளுக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை மட்டும் சொல்லி புரிய வைத்தேன்.

நேற்று அம்மாவிடம் பேசிய போது சொன்னேன்,

"அம்மா, அடுத்த ஜூனில் இருந்து பிள்ளைகளை திருச்சியில் படிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்"

6 comments:

dhivya said...

hi

dhivya said...

hi

iniyavan said...

dhivya said...
hi

என்ன சொல்ல வந்தீங்க திவ்யா?

இராஜராஜேஸ்வரி said...

"கலாச்சார வேறுபாடு?...?//

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

iniyavan said...

இராஜராஜேஸ்வரி said...
"கலாச்சார வேறுபாடு?...?//

அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

BalajiS said...

திருச்சி இப்போ எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்கோங்க !
உங்கள பயமுறுத்தல!

நிஜமாவே சொல்றேன்!