Nov 3, 2011

என் எதிர்ப்பை இங்கே பதிவு செய்கிறேன்?


சிறு வயதில் இருந்தே என்னை செம்மை படுத்தியது புத்தகங்கள்தான். படிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களை படிக்கும் போது ஏற்படும் சுகம்.... எப்படி சொல்வது? அந்த சுகத்தை சொல்லி புரிய வைக்க முடியாது. அதை அனுபவித்தால்தான் தெரியும். பள்ளி பருவத்திலிருந்தே எப்போதும் நண்பர்களுடன் நூலகத்தில்தான் அதிக நேரம் செலவு செய்திருக்கிறேன். பின்பு எங்கள் வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் அளவிற்கு புத்தகங்களை என் சித்தப்பா பாதுகாத்து வருகிறார்.

எங்கள் ஊர் நூலகத்தை பழைய இடத்திலிருந்து புது இடத்திற்கு மாற்றினார்கள். யாருமே எதிர்க்கவில்லை. காரணம் சாதாரண இடத்திலிருந்து மிகவும் நல்ல இடத்திற்கு மாற்றினார்கள். புதிதாக ஒரு நூலகர் வந்து சேர்ந்தார். அவர் முயற்சி எடுத்து மிகவும் அருமையாக நூலகத்தை நடத்தி வருகிறார். அரசாங்கம் கொடுக்கும் பணத்தில் எல்லாம் நூலகத்தை நன்றாக பராமரிப்பது என்பது இயலாத காரியம். எங்கள் ஊரில் உள்ள அனைவரும் கொடுத்த நன்கொடையால்தான் நூலகம் மிகவும் நல்ல முறையில் இயங்கிக்கொண்டிருக்கிறது. 

இன்றும் ஊருக்கு போகும் போது எல்லாம் நூலகம் செல்லாமல் வருவதில்லை. நூலகத்தின் அருமை என் போன்ற வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்குத்தான் மிக அதிகம் தெரியும் எனலாம். ஒவ்வொரு முறை ஊருக்கு போகும் போதும் நிறைய புத்தகங்கள் வாங்கி நானும் இங்கே உள்ள வீட்டிலேயே ஒரு நூலகத்தை வைத்துள்ளேன். ஆனால் அனைத்தையும் படித்து முடித்தாகிவிட்டது. இனி அடுத்த முறை ஊருக்கு போகும் வரை காத்திருக்க வேண்டும். நானாவது ஆறு மாத்திற்கு ஒரு முறை இந்தியா செல்கிறேன். நிறைய நண்பர்கள் இரண்டு வருடத்திற்கு ஒரு முறைதான் செல்கிறார்கள். அவர்கள் நிலமையை கொஞ்சம் நினைத்து பாருங்கள்!

சமீபத்தில் எங்கள் ஊரில் உள்ள ஒரு பேங்கின் மேனேஜர் பதவி உயர்வில் பரோடா சென்றார். அங்கிருந்து சென்ற வாரம் மலேசியாவில் இருக்கும் எனக்கு போன் செய்தார். "படிக்க ஒரு புத்தகம் இல்லை. உங்கள் புத்தகங்களையே பல முறை படித்து விட்டேன்"  ஏனென்றால் அங்கே இருக்கும் நூலகத்தில் தமிழ் புத்தகங்கள் இல்லை.

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு நான் சென்றதில்லை. ஆனால் கேள்விபட்டதுண்டு. ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய நூலகம். 180 கோடி செலவில் அனைவரும் பயன்பெறும்படி அமைக்கப்பட்டுள்ளது. 

கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக அதை மாற்றுவது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. முதல்வர் நூலகத்தை மாற்றுவதற்காக சொல்லும் காரணமும் ஏற்புடையதாக இல்லை. குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவனை அமைப்பதில் எல்லோருக்கும் சந்தோசமே. அதை ஏன் நூலகம் இருக்கும் இடத்தில் அமைக்க வேண்டும்? ஏன் சென்னையில் இடமா இல்லை? புதிதாக ஒரு இடத்தை வாங்கி அங்கே கட்ட வேண்டியதுதானே?

நல்ல ஒரு மாற்றம் வேண்டும் என்றுதானே மக்கள் ஆட்சியை மாற்றினார்கள். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல், இப்படி தடாலடியான முடிவுகள் எடுப்பது சரியா? 

எங்கள் ஊர் நூலகத்தில் புரவலர் சான்றிதழ் பெற்றவன் என்ற முறையிலும், ஒரு சிறிய எழுத்தாளன் என்ற முறையிலும் மற்றும் ஒரு நல்ல வாசகன் என்ற முறையிலும் என் எதிர்ப்பையும், வருத்தத்தையும், கண்டனங்களையும் இங்கே பதிவு செய்கிறேன்.


6 comments:

VANJOOR said...

அன்புடையீர்,

அடியிற்க‌ண்ட‌ சுட்டியை சொடுக்கி ஸ்தம்பிக்க செய்யும் விடியோக்கள் காணுங்கள். விவரிக்க வார்த்தைகள் இல்லை.


//// ** அகிலமெங்கும் சீரிய(ஸான) ஒரே செயல். அரிதான விடியோக்கள். காண‌த்த‌வ‌றாதீர்க‌ள். எங்கேயும்! ஒவ்வொரு விநாடியும் !! எச்சூழ்நிலையிலும்!!! அகிலம் முழுவதிலும்!!!! “ மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், மலையிலும், சோலையிலும், பாலைவனத்திலும், மழையிலும், பனியிலும், வெயிலிலும், ஊணத்திலும், நலத்திலும், பாதையிலும், வீதியிலும், வீட்டிலும், படிக்கட்டுகளிலும், பிர‌யாண‌த்திலும், சண்டையிலும், சமாதான‌த்திலும், சிறையிலும், சுக‌போக‌த்திலும், ந‌ட்பிலும், ப‌கையிலும், வசந்தங்களிலும், பேரிடர்களிலும்…… /////


.

iniyavan said...

அன்பின் vanjoor,

என் இடுகைக்கும் உங்கள் பின்னூட்டத்திற்கும் என்னங்க சம்பந்தம்?

Unknown said...

பொறுப்புள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் கண்டிக்க வேண்டும்.ஜெ.திருந்த வேண்டும்.

iniyavan said...

//ரா.செழியன். said...
பொறுப்புள்ள ஒவ்வொரு தமிழ்நாட்டு குடிமகனும் கண்டிக்க வேண்டும்.ஜெ.திருந்த வேண்டும்//

வருகைக்கு நன்றி ரா செழியன்.

BalHanuman said...

தினமணி தன்னுடைய தலையங்கத்தில் இவ்வாறு எழுதியிருக்கிறது ( சில பகுதிகள் இங்கே )

"கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டுவது என்ற முடிவு உள்நோக்கம் உடையது என்று நம்புவதற்கு இடமுண்டு. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவர் தேர்ந்தெடுத்துப் பூஜை போட்டிருந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்டித் தான் கட்டிய தலைமைச் செயலகத்தைச் செயலிழக்க வைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அந்த இடத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைக் கட்டினார் என்கிறார்கள். இருக்கலாம். அதற்காக? நூலகம் கட்டி முடிக்கப்பட்டு, பயன்பாட்டுக்கும் வந்த பிறகு, சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை இன்னொரு கட்டடத்துக்கு இடம் மாற்றி, நூலகத்துக்காகக் கட்டப்பட்ட அமைப்பை மருத்துவமனையாக மாற்றுவது என்பது, நமது இளைஞர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால், "ரொம்ப ஓவர்!'"

அண்ணா நூற்றாண்டு நூலகம் ஊழலின் ஒரு மிகப்பெரிய அடையாளச் சின்னம் என்பதை முதல்வருக்கு ஏன் அவரது ஆலோசகர்கள் சுட்டிக்காட்டாமல் விட்டார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து இன்னொரு தலைமைச் செயலகத்தை கட்டிவிடக்கூடாது என்பதற்காக மட்டும் அந்த நூலகம் கட்டப்படவில்லை. தனது குடும்பத்தினரும் அமைச்சர்கள் சிலரும் மக்கள் வரிப்பணத்திலிருந்து பல கோடி ரூபாய்களைச் சாப்பிட்டு ஏப்பம் விடுவதற்காகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கட்டப்பட்டது அந்த நூலகம் என்பது விவரம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

சென்னை கோட்டூர்புரத்தில் ரூ. 170 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் தொடங்கி ஏறத்தாழ ரூ. 230 கோடி ரூபாயை விழுங்கி இருக்கிறது இந்த நூலகம். சுமார் 8 ஏக்கர் நிலப்பரப்பில் 3.75 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்தக் கட்டடத்துக்கு இவ்வளவு பணம் செலவாக வேண்டிய அவசியம் என்ன?

சதுர அடிக்கு ரூ. 2,000 என்று கணக்கிட்டாலும், 3.75 லட்சம் சதுர அடி அளவில் கட்டடம் கட்ட அதிகபட்சம் ரூ. 75 கோடிதானே செலவாகி இருக்கும்? இத்தனைக்கும், இடம் இலவசம், கட்டட அனுமதி, குடிநீர் வடிகால் உள்ளிட்ட கட்டமைப்புகளுக்கு உடனடி அனுமதி, லஞ்சம் கிடையாது எனும்போது இத்தனை கோடி செலவுக்கு என்ன காரணம்?

சுமார் ஆறு லட்சம் புத்தகங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள். இதில் ஏறத்தாழ 4 லட்சம் புத்தகங்கள் பல்வேறு பல்கலைக் கழகங்கள் மற்றும் அமைப்புகள் மூலம் பெறப்பெற்றவை. தமிழ்நாட்டிலுள்ள ஒட்டுமொத்தப் பதிப்பாளர்களிடம் உள்ள அத்தனை புத்தகங்களையும் வாங்கினால்கூட ரூ. 5 கோடிக்குமேல் தேவையில்லையே... வெளிநாட்டுப் புத்தகங்களை ரூ. 5 கோடிக்குமேல் வாங்கினாலும்கூட ரூ. 10 கோடிதானே செலவாகி இருக்கும்? எல்லா செலவும் சேர்த்து அதிகபட்சம் ரூ. 100 கோடியைத் தாண்ட வாய்ப்பில்லையே, எங்கே போயிற்று மீதம் செலவாகியிருக்கும் ரூ. 130 கோடி?

உயர் நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட்டு, நூலகத்தின் பெயரால் நடந்த மோசடியை வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தால், அரசைப் பாராட்டி இருக்கலாம். அதைவிட்டுவிட்டு, மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்டு, செயல்பட்டுக் கொண்டிருக்கும் நூலகத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக்குகிறோம் என்று கிளம்பினால், மக்களின் அதிருப்தியை வலியப்போய் விலை கொடுத்து வாங்குகிறது அரசு என்றுதானே பொருள்?

நூலகத்துக்காகக் கட்டப்பட்ட இடம் நூலகமாகவே தொடரட்டும். அறிவுசார் பூங்காவில் இன்னொரு நூலகம் அமைவதாக இருந்தால் அமையட்டும், அதில் தவறொன்றுமில்லை. எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை முழுக் கவனமும் செலுத்தப்பட்டு, சர்வதேசத் தரத்தில் செயல்படட்டும். மக்கள் வரிப்பணத்தை நூலகம் என்ற பெயரில் கபளீகரம் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டிப்பதைப் பற்றியும் அரசு யோசிக்கட்டும். அதுதான் ராஜதந்திரமான முடிவாக இருக்கும்!

http://idlyvadai.blogspot.com/2011/11/blog-post_04.html

iniyavan said...

தங்களின் நீண்ட பின்னூட்டத்திற்கு நன்றி பால்ஹனுமான்.