Dec 19, 2011

அஞ்சனா!


நான் இப்படி ஒரு சிக்கலில் மாட்டுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. காரணம் அஞ்சனா என்பதா? இல்லை காதல் என்பதா?

அஞ்சனா என் அழகிய காதலி. அஞ்சனாவை நான் காதலிக்க ஆரம்பித்தது அவளின் அழகைப் பார்த்து அல்ல! அவளுக்கும் கிரிக்கெட் பிடிக்கும் என்பதால்தான். ஆம். நான் ஒரு கிரிக்கெட் ப்ளேயர். திருச்சி மாவட்டத்தின் இரண்டாவது டிவிஷன் லீகில் விளையாடிக்கொண்டிருந்தேன். எங்கள் அணியின் கேப்டன் நான். போன வருட கடைசி மேட்சில் ஜெயித்தவுடன் எங்கள் அணி முதல் டிவிஷனில் நுழைந்துவிட்டது. எங்கள் அணியில் அனைவருமே நன்றாக ஆடினோம் என்றாலும், என்னுடைய பங்கு அந்த மேட்சில் மகத்தானது. 5 விக்கெட்களும் 65 ரன்னும் எடுத்திருந்தேன்.

எனக்கு ஏகப்பட்ட பாராட்டுகள். அன்றைய மேட்சின் முடிவில்தான் நான் அஞ்சனாவைச் சந்தித்தேன். என்னுடைய ஹீரோ ஹோண்டாவை எடுக்க நகர்கையில் ஒரு குரல்,

"கன்கிராட்ஸ். அருமையான ஆடினீங்க" குரல் வந்த திசையை நோக்கினேன். ஒரு அழகானப் பெண் சுடிதாரில். 

"நன்றிங்க" என்றேன் நாணத்துடன். அவளும் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை. நானும் பேசவில்லை. உடனே வீட்டிற்கு கிளம்பிவிட்டேன். அன்று முழுவதும் அவளது அழகு என் மனக்கண் முன் வந்து சென்றது. அடுத்தவாரம் ஒரு லீக் மேட்ச் இருந்தது. மேட்சில் விளையாடுவதற்காக என் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினேன். போகும் வழியில் ஒரு காபி குடிக்க நினைத்து வசந்தபவனில் வண்டியை நிறுத்தினேன்.

ஆர்டர் செய்துவிட்டு காபிக்காக காத்திருக்கும் போது மீண்டும் அஞ்சனா. வந்தவள் என் எதிரில் உட்கார்ந்து என்னையே பார்த்தாள்.

"ஹாய்" என்றேன்.

"ஹாய்" என்றவள், "இன்னைக்கும் மேட்ச் இருக்கா?" என்றாள்.

"இருக்கு" என்றவன், அவளைப் பார்த்து "நான் ராஜ்" என்றேன்.

"தெரியும்" என்றாள்.

"நீங்கள்?"

"அஞ்சனா"

"நான் ஒண்ணு உங்களைப் பத்தி சொல்லலாமா?" என்று கேட்டு முடிப்பதற்குள்,

"நீங்க ரொம்ப அழகா இருக்கீங்கன்னு ஜொள்ளு விடாம, நானும் உங்க கூட மேட்சுக்கு வரலாமானு சொல்லுங்க?" என்றாள்.

அதற்கு மேல் அவளிடம் நான் சொல்ல வந்ததை சொல்லாமல், "ம். போகலாமே" என்றேன்.

அவளுக்கும் ஒரு காபி ஆர்டர் செய்தேன். என் முகத்தையே பார்த்துக்கொண்டு காபி குடித்துக்கொண்டிருந்தாள். நான் அவளின் காபி குடிக்கும் அழகையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

"ஹலோ! இன்னொரு நாளைக்கு உங்களுக்காக இரண்டு காபி குடிக்கிறேன். அப்போ உத்து பாத்துக்கங்க. இப்போ மேட்சுக்கு டைம் ஆச்சு போலாம் வாங்க"

கொஞ்சம் வெட்கத்துடன் பணத்தை கவுண்ட்டரில் கொடுத்துவிட்டு வண்டியைக் கிளப்பினேன். ரொம்ப நாள் பழகியவள் போல வண்டியில் இரண்டு பக்கமும் கால்களைப் போட்டு உட்கார்ந்து கொண்டாள். 

பிரேக் பிடிக்காமல் ரொம்ப ஜாக்கிரதையாக ஓட்டிக்கொண்டு அண்ணா ஸ்டேடியத்தை அடைந்தேன். அன்று என்னவோ என்னால் சரியாக விளையாட முடியவில்லை. அவள் நினைவிலே பந்துகளை எதிர்கொண்டேன். எப்படியோ அந்த மேட்சில் ஜெயித்துவிட்டோம். இருந்தாலும் எனக்கு திருப்தி இல்லை.

ஒவ்வொரு ஞாயிறும் நண்பர்கள் அனைவரும் சினிமா செல்வோம். சினிமா முடிந்து பீர் அடித்துவிட்டு சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு இரவு 11 மணிக்கு வருவோம். அந்த ஞாயிறு சூப்பர் ஸ்டார் ரஜினி படம் போகலாம் என்று கலையரங்கம் தியேட்டருக்குச் சென்றோம். நிறைய கும்பல், தியேட்டர் மேனேஜர் தெரிந்தவராக இருந்ததால் மிகவும் ஈசியாக டிக்கெட் வாங்கிவிட்டோம்.

உள்ளே செல்லலாம் என நினைக்கையில், "ஹாய் ராஜ்" என்று ஒரு குரல். திரும்பி பார்த்தால் அஞ்சனா அவளின் தோழிகளுடன்.

"ராஜ், டிக்கெட் கிடைக்கல. கொஞ்சம் வாங்கித் தரமுடியுமா?"

அதைவிட வேறு என்ன வேலை? நண்பர்கள் எப்படியோ மேனேஜரிடம் சொல்லி அவர்களுக்கும் டிக்கெட் வாங்கிவிட்டார்கள். உள்ளே சென்று அமர்ந்தோம். ஆச்சர்யமாக அஞ்சனா என் அருகில் வந்து அமர்ந்தாள். எனக்கு படபடப்பானது. படம் ஆரம்பித்த ஒரு பத்து நிமிடங்கள் கழித்து என் வலது கையில் அவள் கையை வைத்து இருக்கிப் பிடித்துக்கொண்டாள். எனக்கு அவள் கைகளை விலக்க வேண்டும் என்று தோன்றவில்லை. 

மெல்ல என் காதருகில் வந்து, "ஐ லவ் யூ ராஜ்" என்றாள். என் காதலை அவளுக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை. மெல்ல அவள் கன்னத்தை என் பக்கம் திருப்பி ஒரு முத்தம் கொடுத்தேன். அவள் கண்கள் கிறங்கிய நிலையில் என்னைப் பார்த்தாள்.

அதன் பிறகு தினமும் சந்தித்தோம். நிறைய பேசினோம். நிறைய படங்கள் பார்த்தோம். நிறைய முத்தங்கள் கொடுத்துக்கொண்டோம். ஒரு முறை திருச்சி மலைக் கோட்டையில் மேலே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். அப்போது திடீரென்று, "என்னை எப்போ கல்யாணம் பண்ணிப்ப ராஜ்?" என்றாள்.

"அஞ்சனா, என்னோட ஒரே குறிக்கோள் குறைந்த பட்சம் ரஞ்சிலயாவது ஆடணும். அடுத்த மாதம் நடக்கும் லீக்ல நான் நல்லா விளையாண்டா, எங்கள் டீம் ஜெயித்தால் நிச்சயம் எனக்கு சென்னை டீம்ல இடம் கிடைச்சுடும். பின் நம் கல்யாணம்தான்" என்றேன்.

சிரித்தாளே ஒழிய ஒரு பதிலும் சொல்லவில்லை.

அஞ்சனா மிகப் பெரிய தொழிலதிபரின் மகள். அவளுக்கு ஒரு அண்ணன் ஒரு தம்பி. அவள் அப்பா, அம்மா, தம்பி பெங்களுரில் இருக்கிறார்கள். இவளும் அண்ணனும் திருச்சியில் அத்தை வீட்டில் தங்கிப் படிக்கிறார்கள். ஒரே பெண் என்பதால் ஏகப்பட்ட செல்லம். ஆனால் அவள் அண்ணன் சொல்வதைத்தான் அவர் அப்பா கேட்பதாக அடிக்கடி கூறுவாள். எனக்கும் அவள் அண்ணனை சந்திக்க ஆசை. ஆனால் யார் என்று கூற மறுத்துவிட்டாள். 'சமயம் கிடைக்கும் போது சொல்கிறேன்' என்றாள்.

நானும் அந்த விசயத்தை அத்தோடு விட்டுவிட்டேன். கடுமையான வலைப் பயிற்சினை மேற்கொண்டேன். நல்ல பார்மில் நான். இதோ நாளை காலை பைனல் மேட்ச். என் தலை எழுத்தை மாற்றியமைக்கப் போகும் மேட்ச்.

மாலை அஞ்சனா போன் செய்தாள். உடனே வீட்டிற்கு வரச்சொன்னாள். சென்றேன்.

******************************

இதோ மேட்ச் முடியும் தருவாயில் இருக்கிறது. எதிர் டீம் 175 ஆல் அவுட். எங்கள் டீம் மிக நன்றாக ஆடிக்கொண்டிருந்தார்கள். 150 ரன்னுக்கு 3 விக்கெட். அப்போதுதான் நான் இறங்கினேன். என்ன நடந்தது என் டீமிற்கு என்றுத் தெரியவில்லை. ஒரு பக்கம் நான் அடித்துக்கொண்டிருக்கிறேன். மறுபக்கம் மள மளவென விக்கெட் விழுகிறது. 169 ரன்னுக்குள் 8 விக்கெட் விழுந்துவிட்டது. ஜெயித்துவிடலாம் என்று நினைக்கையில் 170 ரன் எடுக்கும் போது ரன் அவுட்டில் இன்னொரு விக்கெட் காலி.

இருப்பது ஒரு ஓவர். எடுக்க வேண்டியது 6 ரன். நல்ல வேளை நான் பேட் செய்ய ஓடி வந்துவிட்டேன். இத்தனை விக்கெட்டுகளும் எடுத்தது ஆனந்த். எதிர் அணி கேப்டன். நான் எதிர்பார்த்தது போலவே கடைசி ஓவர் அவன் தான் போட வருகிறான்.

முதல் பாலில் மிடானில் ஒரு ஷாட் அடித்தேன். 2 ரன்கள். எதிரில் இருப்பவனிடம் சிங்கிள்ஸ் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.  2வது மற்றும் மூன்றாவது பால்களில் ரன்கள் ஏதும் எடுக்க முடியவில்லை. நாலாவது பாலில் ஸ்கெயர்கட்டில் இரண்டு ரன்கள். 174க்கு 9 விக்கெட். இருப்பது இரண்டு பால்கள். 5 வது பால். ரன் எடுக்க முடியவில்லை. ஒரு பால் எடுக்க வேண்டிய ரன் 2.

**********************************

அஞ்சனா போன் செய்தவுடன் அவளைச் சந்திக்க சென்றேன். ஒரே டென்ஷனாய் இருந்தாள்.

"என்ன? ஏன் ஒரு மாதிரி டல்லா இருக்க?"

"ராஜ், அப்பாட்ட பேசினேன். அவர் நம்ம காதலை ஒத்துக்கலை. அடம் பிடிக்கிறார். பெரிய தொழிலதிபர் மகன் ஒருத்தனை சொல்லி, அவனை கல்யாணம் பண்ணிக்கச் சொல்றார்"

"நீ என்ன சொன்ன?"

"முடியாதுனுட்டேன். இருந்தாலும் அவர் பிடிவாதமா இருக்கார். ஒரே ஒரு வழிதான் இருக்கு"

"என்ன அது?"

"எங்க அண்ணா சொன்னா அப்பா கேப்பார்"

"அப்போ பேசிப் பார்க்க வேண்டியதுதானே"

"அவன் ஒரு கண்டிஷன் போடறான்"

"என்ன கண்டிஷன்?"

"உனக்கு ஆனந்த் தெரியுமில்லை"

"தெரியுமே! நாளைக்கு அவன் டீம் கூடத்தானே பைனல் விளையாடப்போறோம்"

"ஆனந்த் தான் என் அண்ணன். அவனும் உன்னை மாதிரியே கிரிக்கெட் வெறியன். நம்ம காதலை அப்பாட்ட சொல்லி சம்மதம் வாங்கணும்னா நாளைக்கு நடக்கபோற மேட்ச்ல உங்க டீம் தோக்கணும்னு சொல்றான். அதனால.........................."

விறுவிறுவென்று வீட்டிற்கு வந்துவிட்டேன்.

**********************************

இன்னும் ஒரு பால்தான் இருக்கிறது. எடுக்க வேண்டிய ரன்கள் 2. ஜெயித்தால் நிச்சயம் ரஞ்சி ஆடலாம். தோற்றால் இடம் கிடைப்பது கஷ்டம். இதோ ஆனந்த் ஓடி வருகிறான்.

இப்போ நான் என்ன செய்வது? கல்யாணமா அல்லது லட்சியமா?

அந்த பாலை அடிப்பதா? வேண்டாமா?


6 comments:

dhivya said...

kaathalukaaga latchiyatha vitu kodupathaa? kaathalai vida latchiyam thaan mukiyam.

Ravisankaranand said...

நம்ம சுஜாதா சார் கூட இந்த மாதிரி டைப் கதைகளை பற்றி கற்றதும் பெற்றதும்ல எழுதியதாக நினைவு..

(அதாவது, முடிவை வாசகனிடமே குடுத்து, அவன் சிந்தனையை வளரசெய்வது - death of the writer & birth of the reader)

ராஜ் பந்தை அடித்தாரோ இல்லையோ, இந்த புதிய முயற்சியிலே உலக்ஸ் வென்றுவிட்டார்..

iniyavan said...

// dhivya said...
kaathalukaaga latchiyatha vitu kodupathaa? kaathalai vida latchiyam thaan mukiyam.//

வருகைக்கு நன்றி திவ்யா.

iniyavan said...

//Ravisankaranand said...
நம்ம சுஜாதா சார் கூட இந்த மாதிரி டைப் கதைகளை பற்றி கற்றதும் பெற்றதும்ல எழுதியதாக நினைவு..

(அதாவது, முடிவை வாசகனிடமே குடுத்து, அவன் சிந்தனையை வளரசெய்வது - death of the writer & birth of the reader)

ராஜ் பந்தை அடித்தாரோ இல்லையோ, இந்த புதிய முயற்சியிலே உலக்ஸ் வென்றுவிட்டார்..//

நன்றி ரவிஷங்கர்.

sriram said...

நல்ல முயற்சி உலக்ஸ். ஆனா முடிவையும் சொல்லியிருக்கலாம் என்பது என் கருத்து
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

சிவகுமாரன் said...

அடிச்சி விளையாடுங்க