Dec 21, 2011

"உ" பதிப்பகம்சிறு வயதில் எல்லோரும் ஏகப்பட்ட கனவுகளுடன் வாழ்ந்திருப்போம். நானும் அப்படித்தான். அதில் ஒரு கனவு நிறைய கதைகள் எழுதி பெரிய எழுத்தாளராக வரவேண்டும் என்பது. அந்த உந்துதலில்தான் 'சலங்கை" என்ற ஒரு பத்திரிகையை ஆரம்பித்து நடத்தினோம். ஆனால் பல காரணங்களால் எங்களால் தொடர்ந்து நடத்த முடியாமல் போய்விட்டது.

அதன் பிறகு வாழ்க்கைத் திசை மாறி போய்விட்டாலும், அந்தக் கனவு மட்டும் மனதின் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டே இருந்தது. எனக்குப் பிடித்தது படிப்பதும், பேசுவதும் மற்றும் எழுதுவதும்தான். ஆனால் பார்ப்பதோ வேறு தொழில். இருந்தாலும் பிடித்தத் தொழிலையும் செய்து பார்க்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டேன்.

ஆனால் அதை செயல்படுத்துவது மிகவும் கஷ்டம் என்று புரிந்து கொண்டேன். பத்திரிகைகள் நிறைய இருந்தாலும், முன்புபோல் நிறைய சிறுகதைகள் வெளி வருவதில்லை. அப்படியே வந்தாலும் மிகப் பெரிய எழுத்தாளர்களின் படைப்புகள் மட்டுமே வெளி வருகின்றன. நம் கதைகளும் பத்திரிகைகளில் வர வேண்டும் என்று ஆசைப்பட்டு கடுமையாக உழைத்தேன். ஆனால் அதுவும் அவ்வளவு சுலபம் இல்லை என போகப் போக புரிந்தது. அந்த சமயத்தில்தான் வலைப்பூ என்னை சுவீகரித்துக்கொண்டது. நிறைய எழுத ஆரம்பித்தேன்.

என் ஆசை "ழ" பதிப்பகத்தின் மூலம் கடந்த மார்ச் மாதம் நிறைவேறியது. "சாமன்யனின் கதை" மற்றும் "வீணையடி நீ எனக்கு" என்ற என்னுடைய இரண்டு புத்தகங்களும் வெளியானது. ஓரளவிற்கு விற்கவும் செய்தது. சிலர் என்னிடம் 'இன்னும் நன்றாக எழுத வேண்டும், இவர் போல் இல்லை அவர் போல் இல்லை" என்றெல்லாம் சொன்னார்கள்.

ஒரு வகுப்பில் ஒருவர்தான் முதல் ரேங்க் எடுக்க முடியும். 50 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் எல்லோருமே முதல் ரேங்க் வாங்க முடியுமா என்ன? அதனால் மற்ற ரேங்க் எடுக்கும் மாணவர்கள் எதற்கும் லாயக்கு இல்லை என முடிவு கட்ட முடியுமா?

எல்லோருமே எடுத்தவுடன் பெரிய எழுத்தாளர் போல எழுத முடியுமா? கொஞ்சம் கொஞ்சமாகத்தான் முயற்சி செய்ய வேண்டும். அந்த முயற்சியின் விளைவாகத்தான் முதல் இரண்டு புத்தகங்கள் வெளியானது.

பின் இரண்டு குறுநாவல்களும், 11 சிறுகதைகளும் எழுதி முடித்தவுடன் என் நண்பர் L.C நந்தகுமார் படித்துவிட்டு "இதையும் ஏன் புத்தகமாக போடக்கூடாது" என்றார். மிகப்பெரிய பதிப்பகங்களை அணுகினேன். ஆனால் சரியான பதில் கிடைக்காத சமயத்தில், என் பதிவுலக குரு, கேபிள் சங்கர், "ஏன் நீங்களே ஒரு பதிப்பகம் ஆரம்பிக்க கூடாது?" என்றார்.

"நான் இருப்பது மலேசியாவில். எப்படித் தலைவரே இது சரி வரும்?" என்றேன்.

" நீங்கள் ஆரம்பியுங்கள். நான் உதவுகிறேன்" என்றார். உடனே என் நண்பரை L.C நந்தகுமாரை அணுகினேன்,

"நான் முதலீடு செய்கிறேன். நீங்கள் ஆரம்பிங்கள்" என்றார்.

இப்படி ஒரு மணி நேரத்தில் ஆரம்பித்ததுதான் "உ" பதிப்பகம்.

நண்பர்கள் யாரும் என் புத்தகங்களுக்காக மட்டும் ஆரம்பித்தது "உ" பதிப்பகம் என்று எண்ண வேண்டாம். முதலில் நண்பர் கேபிள் சங்கரின் "தெர்மோக்கோல் தேவதைகளும்" என்னுடைய "நான் கெட்டவன்" புத்தகங்களும் வெளி வருகிறது. புத்தக கண்காட்சிக்குள் வெளியிட முடிவு செய்துள்ளோம்.


போகப் போக மற்றவர்களின் படைப்புகளும் புத்தகமாக வெளி கொணர நினைத்திருக்கிறோம். பதிவுலகில் நன்றாக எழுதும் நண்பர்களுக்கே முன்னுரிமை கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

நண்பர்கள் அவர்களுடைய படைப்புகள் வெளிவர வேண்டும் என்று விரும்பினால், நண்பர் கேபிள் சங்கரையோ அல்லது என்னையோ தொடர்பு கொள்ளலாம்.

விரைவில் புத்தகங்கள் வெளியீடு பற்றிய செய்திகளோடு உங்களைத் தொடர்பு கொள்கிறோம்.

 "உ"  என்று பிள்ளையார் சுழி போட்டு பதிப்பகத்தை ஆரம்பித்திருக்கிறோம். இது மென்மேலும் வளர பதிவுலக நண்பர்களின் மேலான ஆதரவை வேண்டுகிறோம்.

12 comments:

கடல்புறா said...

நல்ல முயற்சி .... தொடர வாழ்துக்கள்.... அப்படியே ஒரு சினிமா கம்பெனியும் ஆரம்பிச்சுடுங்க...... (புண்ணியமா போகும்)ரொம்ப பேருக்கு உதவியா இருக்கும்.....!

Unknown said...

வாழ்த்துக்கள் தலைவரே...

manjoorraja said...

உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.
வெற்றியடைய வாழ்த்துகள்

ஜோதிஜி said...

வாழ்த்துக்கள்

CS. Mohan Kumar said...

வாழ்த்துகள் உலக்ஸ் !

ப்ரியமுடன் வசந்த் said...

மனமார்ந்த வாழ்த்துகள்..

முரளிகண்ணன் said...

வாழ்த்துக்கள் உலகனாதன்

Ravisankaranand said...

உங்கள் புதிய முயற்சிகள் தொடரவும், கனவுகள் மெய்படும் ஆண்டாக 2012 அமைய, வாழ்த்துக்கள்.

ILA (a) இளா said...

மென் மேலும் வளர வாழ்த்துகள்ங்க..

dhivya said...

all the best

சிவகுமாரன் said...

வாழ்த்துக்கள் . சார்.
மென்மேலும் வளர்க.

ரிஷபன் said...

அருமையான முயற்சி..
நல்வாழ்த்துகள்.