Dec 30, 2011

ஒரு சுய அலசல்!


பொதுவாக நான் நிறைய படிப்பது போலவே நிறைய பேசுவேன். இந்தப் பழக்கம் எப்படி எங்கே இருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. அதே சமயம் நான் ஒரு மேடைப் பேச்சாளன் கிடையாது. யார் என்னிடம் பழகினாலும் உடனே 'கலகல' என்று பேச ஆரம்பித்துவிடுவேன். இந்தப் பழக்கமே எனக்கு நிறைய நண்பர்களை கொடுத்திருக்கிறது. எதிரிகளை கொடுத்ததில்லை. ஏனென்றால் எனக்கு எதிரிகள் என்றே யாரும் கிடையாது. அனைவரும் நண்பர்களே. ஆனால், அதிகம் பேசுவதால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கிறது. அது பல சமயங்களில் மன நிம்மதியை கெடுத்துவிடுகிறது.

இந்தப் பிரச்சனை என்னுடன் பிறந்தது முதல் இருக்கிறது என்றே நினைக்கிறேன். என்னிடம் பேசுபவர்கள் மற்றவர்களிடம் அப்படியே சொன்னால் பரவாயில்லை. சில சமயம் திரித்து சொல்லிவிடுகிறார்கள். அப்படி அவர்கள் ஏதாவது கேள்விபட்டால் நேராக நம்மிடம் வந்து விசாரித்தால் நல்லது. ஆனால் யாரும் அப்படிச் செய்யாமல் மனதிற்குள்ளாகவே வைத்து நம் மேல் வெறுப்பை வளர்த்துக்கொள்கிறார்கள். எங்கள் வீட்டில் அடிக்கடி சொல்வதுண்டு, "உங்கள் ஜாதகம் நன்றாக இருப்பதால் உங்கள் பேச்சினால் எந்த பிரச்சனையும் அதிகமாக வருவதில்லை. இல்லை என்றால் நீங்கள் பேசும் பேச்சிற்கு...." உண்மைதான் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை எங்கள் பழைய முதலாளியிடம் ஒரு முறை சின்ன மனஸ்தாபம் வந்தபோது அவரிடமே சாவால் விட்டேன், 

"இதே கம்பனியில் நான் ஒரு பெரிய ஆளாக வந்து காண்பிக்கிறேன் பாருங்கள்" என்று. 

அவரோ, "நான் உன்னை அவ்வாறு வர விட மாட்டேன்" என்றார். 
"வந்து காண்பிக்கிறேன்" என்றேன்.

பிறகு யோசித்து பார்த்த போது அது எவ்வளவு பெரிய தவறு என்று தெரிகிறது. அவர் நினைத்திருந்தால் அன்றே என்னை நிறுவனத்திலிருந்து தூக்கி இருக்கலாம். ஏதோ நல்ல நேரம் என்றுதான் நினைக்கிறேன். அப்படி நடக்கவில்லை. 

ஒரு இரண்டு மணி நேரம் பேசாமல் இருப்பது என்று, ஒரே ஒரு நாள் முயற்சி செய்து பார்த்தேன், ஆகா, அருமை. அந்த இரண்டு மணி நேரமும் நான் அமைதியாக சந்தோசமாக இருந்தேன். பேசாமல் இருந்தால் எந்த பிரச்சனையும் வருவதில்லை. அதற்காக ஊமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அளவோடு பேச வேண்டும். அப்படித்தான் முடிவு எடுத்து வைத்திருந்தேன். நேற்று ஒரு நண்பருக்கு போன் செய்தேன், அரை மணி நேரப் பேச்சிற்கு பிறகுதான் தெரிந்தது, 'நான் மட்டும்தான் பேசியிருக்கேன்' என்பது. நாய் வாலை நிமித்த முடியுமா?

திருவள்ளுவர் அன்றே சொல்லி இருக்கிறார்:

"யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு"

-ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும். இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்கு காரணமாகிவிடும்.

*************************************************

இதே போல என்னிடம் இருக்கும் இன்னொரு குறை அடிக்கடி கோபப்படுவது. எத்தனையோ முயற்சிகள் செய்து கோபத்தைக் கட்டுப்படுத்தினாலும், சில சமயங்களில் கோபம் உச்சத்துக்கு சென்று விடுகிறது. திரும்ப சாதாரண நிலமைக்கு வர நீண்ட நேரம் பிடிக்கிறது. கடைசியில் யோசித்துப் பார்த்தோமானால் அந்த கோபத்தினால் அடைந்த பயன் எதுவும் இல்லை. உடல்நிலைதான் கெட்டுப்போகிறது. "கோபத்தைக் குறைத்துக்கொள்" என்று சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் அதை நடைமுறைப் படுத்துவது என்பது மிகக் கடினம்.

இதைப் பற்றியும் ஏற்கனவே எங்கேயோ எழுதியிருந்ததாக நினைவு. நமக்கு யார் மீது கோபம் வரும் என்றால், "யாரிடம் கோபம் செல்லுபடியாகுமோ அவர்களிடம்தான் நாம் கோபப்படுவோம்"  நம்மை விட பலசாலியிடமோ அல்லது நம்மை திருப்பித் தாக்குபவர்களிடமோ நாம் கோபம் கொள்வதில்லை. அப்படியானால் என்ன அர்த்தம்? நம் மனதிற்கு தெரிகிறது? யாரிடம் கோபம் கொள்ள வேண்டும் யாரிடம் கோபம் கொள்ளக்கூடாது என்று? 

"தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்"

ஒருவன் தன்னைத்தானே காத்துக்கொள்ள வேண்டுமானால், சினத்தை கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

இப்படி அறிவுரை சொல்வது ரொம்ப சுலபம். ஆனால் நடைமுறை படுத்தும் போது ரொம்ப சிக்கல். சில சமயங்களில் நாம் கோபப்பட்டுத்தான் ஆக வேண்டும். சில சமயங்களில் கோபப்படுவது போல் நடிக்கவாவது செய்ய வேண்டும். இல்லையேல் பிரச்சனைதான். சில சந்தர்ப்பங்களில் கோபத்தைக் கட்டுபடுத்த வேண்டும்.

எங்கள் பகுதியில் மேம்பாலம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதனால் 15 கிலோ மீட்டர் கடக்க 35 நிமிடங்கள் ஆகிறது. முன்பு 9 நிமிடங்களில் வீட்டிலிருந்து அலுவலகத்துக்கு வருவேன். இப்போது 35 நிமிடங்கள் பழகிப் போய்விட்டது. 

நேற்று முன் தினம் அதே 15 கிலோ மீட்ட்ரைக் கடக்க, நீங்கள் நம்ப மாட்டீர்கள் மூன்று மணி நேரம் ஆனது. இன்ச் இன்ச்சாக கார் நகர்ந்தது. நல்ல பசி. காரை விட்டு எங்கும் இறங்க முடியாது. காரில் வேறு எந்த வேலையும் பார்க்க முடியாது. பாடல்கள் ஒரு ஸ்டேஜிற்கு பிறகு போர் அடிக்க ஆரம்பித்து விட்டது. மூன்று மணி நேரம் கழித்து வீட்டை அடைந்தவுடன், மனசு கடந்து அலைகிறது. யாரிடம் சண்டைப் போடலாம் என்று.  

எவ்வளவோ கட்டுப்படுத்த முயன்றாலும், அந்த மூன்று மணி நேர டிராபிக் ஜாம் பிரச்சனை மனதில் கோபமாக மாறி சண்டைப் போட ஆள் தேடுகிறது.

இந்த இரண்டு பிரச்சனைகளிலிருந்தும் அடுத்த ஆண்டிலாவது முழுமையாக வெளிவர முடியுமா என்று பார்க்க வேண்டும்.6 comments:

ஷர்புதீன் said...

அண்ணே !
உங்களை போலவே நிறைய பேசுவேன், ஆனால் மிக பிடித்த விசயத்தில் தனிமையும் ஒன்று என்ற விசித்திரம் எனக்கு உண்டு! வெளியில் நான் பழகுவதை பார்த்தால், பேசி கொண்டிருப்பதுமட்டுமே வாழ்க்கை என்பது போல் இருக்கு, ஆனால் வீட்டில் அடியேன் தனிமையில் இருக்கும் பொது, நிறைய சுய அலசல் செய்துகொள்வேன். அதன் பின் நிறைய புத்தகங்களின் துணையால் கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றையும் ரசிக்க கத்துகொண்டுவிட்டேன், அடியேன் கடைசியாக எப்பொழுது எரிச்சல் பட்டேன் என்பதே எனக்கு ஞாபகம் இல்லை! நீங்களும் கொஞ்சம் முயற்சியுங்கள் ., எல்லாம் கைகூடி வரும்,

மிக முக்கியம்,- நமக்கு என்று ஒரு பாணி இருக்கும் , அதனை மாற்ற வேண்டியதில்லை, வேண்டுமானால் மேருகேட்ட்றலாம் ! முடிந்தது விஷயம்!!

D. Chandramouli said...

More than when to speak, we should know when to remain silent. For instance, it is wise to keep 'mum' when the wife talks to us! One's maturity demands knowledge that there's nothing wrong to let the wife have the last word - not that we have to agree with her. Just listening itself will solve the problem! My own experience after decades of married life. Ha Ha!!

Rathnavel Natarajan said...

யோசிக்க வைக்கும் அருமையான பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

iniyavan said...

விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி ஷர்புதீன்

iniyavan said...

தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி சந்திர மொளலி சார்.

iniyavan said...

//Rathnavel said...
யோசிக்க வைக்கும் அருமையான பதிவு.
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.//

வருகைக்கு நன்றி. உங்களுக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகள் சார்.