Dec 31, 2012

நீ தானே என் பொன் வசந்தம்!சென்ற வெள்ளிகிழமை இரவு. நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ஏதோ ஒரு பேச்சு வரும்போது, “ஆமாம். உங்களைப்பற்றி தெரியாதா? நீங்கள் சின்ன வயதில் செய்தவைகள் எல்லாம் எனக்கும் தெரியும். ரொம்ப யோக்கியன் மாதிரி பேசாதீங்க”

இப்படி பேசிய என் மனைவியின் முகத்தை மிகவும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன். “என்ன சொல்லுகிறாள் இவள்? பொத்தாம் பொதுவாக சின்ன வயதில் என்றால் என்ன அர்த்தம்? என்ன தெரியும் இவளுக்கு? எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும்? யார் சொல்லி இருப்பார்கள் இவளுக்கு?’

குழப்பத்துடன் அதே சமயம் மிகவும் ஜாக்கிரதையுடன் அவள் முகத்தை நேராக பார்க்க தைரியம் இல்லாமல் கீழே பார்த்துக்கொண்டே கேட்டேன், “யார் சொன்னாங்க? என்ன சொன்னாங்க?”

“எல்லாம் உங்க அக்காக்கள் பேசிட்டாங்க”

“என்ன பேசிகிட்டாங்க?”

“ஏதோ ஒரு பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்து பிரச்சனையாகி...ஜீப்புல ஸ்கூலுக்கு தினமும் போய்...”

அப்போழுதுதான் எனக்கு ஓரளவு நிம்மதி வந்தது. நான் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன். நல்ல வேளை எல்லாம் விசயங்களும் தெரியவில்லை. ஏதோ சின்ன ஒரு விசயம் மட்டும் அவளுக்கு தெரிந்திருக்கிறது. இப்பொழுது நினைத்தால் இது சின்ன விசயம்தான். ஆனால் அந்த வயதில்.... நினைவு சற்று பின்னோக்கி சென்றது.

நான் பத்தாவது படிக்கும் போது நடந்த சம்பவம் இது. நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது பெண்களைப் பற்றிய பேச்சு வந்தது. எல்லோரும் அவர்களுக்கு பிடிக்கும் பெண்களைப் பற்றி சொல்ல, நானும் என் பங்குக்கு என் தெருவில் வசிக்கும் ஒர் பெண்ணை அதுவும் வயதில் மிகவும் சின்ன பெண்ணைப் பற்றி சொல்ல...அனைவருக்கும் ஆச்சர்யம். தவறாக சொன்னதாக நினைவில்லை. ஆனால் அழகான பெண். எனக்குப் பிடித்த பெண் என்று சொன்ன நினைவிருக்கிறது.

அதன் பின் நடந்த சம்பவங்கள் தான் என் வாழ்வில் மறக்க முடியாதவை. அப்போழுது அங்கே இருந்த நணபர்களில் ஒருவன் அந்த பெண்ணின் அண்ணனிடம் சொல்ல, அது மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு அண்ணன் என்றாலே பிரச்சனை. மொத்தமாக எட்டு அண்ணன்கள் (கஸின்களையும் சேர்த்து) என்றால் நினைத்துப் பாருங்கள். பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, தூக்கம் இல்லாமல், குடும்பத்தில் அனைவரிடமும் திட்டு வாங்கி,  அப்பா என்னை சித்தப்பா வீட்டில் தங்க வைத்து, என்னுடைய தரப்பு வாதத்தை யாரும் கேட்க விரும்பாமல், நான் தப்பு பண்ணியதாக அவர்களே முடிவெடுத்து அதனால் என் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, பின் ஒரு மாதம் கழித்து பெரியவர்களை எல்லாம் வைத்து பஞ்சாயத்து நடந்து, சமாதானம் ஆகி... மிகப் பெரிய நாவல் எழுதும் அளவிற்கு விசயம் இருக்கிறது. நிச்சயம் இதை ஒரு நாவலாக எழுதுவேன்.

சிறிது நேரத்திற்கு பிறகு பழைய நினைவுகளில் இருந்து விலகி, மேலே சொன்ன விசயங்களை மட்டும் சொல்லி “நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் அந்த அந்த வயதில் ஏற்படும் சாதாரண விசயம்தான்” என்று சொல்லி என்னை மிகவும் யோக்கியனாக காட்டிக்கொண்டு ஒரு மாதிரி சமாளித்து பேச்சை வேறு திசைக்கு திருப்ப முயன்றேன்.

அப்பொழுது மகனும் மகளும் நாங்கள் இருந்த அறைக்கு வந்தார்கள்.

“அப்பா, நாளைக்கு சினிமா போகிறோம் தானே”

“போலாம்ண்டா”

“என்ன படம்?”

“ரெண்டு படங்கள்தான் ஓடுது. ஒண்ணு கும்கி இன்னொன்று நீதானே என் பொன் வசந்தம்”

“அப்பா கும்கி போலாம்” பையன்

“இல்லப்பா நீ தானே என் பொன் வசந்தம் போலாம்” பெண்

“அப்பா கும்கிலதான் பாட்டு எல்லாம் நல்லா இருக்கு”

இங்கே ஒரு இடைச்செறுகல்: நான் கல்லூரி முடிக்கும் வரை அப்பாவுக்கு தெரிந்து தனியாக சினிமா போனதில்லை. கல்லூரி காலத்தில் அப்பாவுக்கு தெரியாமல் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு சினிமா போன அனுபவம் நிறைய உண்டு. பள்ளி கல்லூரி காலங்களில் நான் சினிமா போக வேண்டும் என்று சொன்னால் அப்பா அவர் ஆபிஸிலிருந்து ஒரு ஹெட் கிளர்க்கை லீவு கொடுத்து ஜீப்புடன் வீட்டிற்கு அனுப்புவார். நான் அவருடன் தான் படம் செல்ல வேண்டும். படம் முடிந்து இரவு சாப்பாடு வாங்கி கொடுத்து பின் என்னை வீட்டிற்கு வந்து விட்டுவிட்டு அவர் வீட்டிற்கு திருச்சி செல்வார். அதும் நல்ல படங்களாக பார்த்துதான் கூட்டி செல்வார்.


பையன் கும்கியைப் பற்றி சொன்னவுடன் உடனே பெண்,
“அப்பா நீ தா எ பொ வ போலாம்பா”

“ஏண்டா?”

“அருமையான லவ் ஸ்டோரிப்பா. மிஸ் பண்ணாதிங்கப்பா”

எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. சந்தோசப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? 13 வயதில் இருக்கும் என் பெண் ‘அருமையான லவ் ஸ்டோரிப்பா’ என்கிறாள். மனைவி கோபப்பட்டாலும் நான் கோபப்படவில்லை. ஒரு வழியாக பேச்சை மாற்ற விரும்பினேன்.
பின் பிள்ளைகள் இருவரும் சீட்டு குலுக்கி போட்டார்கள். கும்கி என்று வந்தது. பையன் அடைந்த சந்தோசத்திற்கு அளவே இல்லை. என் பெண் முகம் மிகவும் வாடிவிட்டது. என்ன செய்ய யாருக்கு சப்போர்ட் செய்ய? புரியவில்லை.

சனிக்கிழமை காலை வந்ததும் பெண் மெதுவாக என்னிடம் வந்தாள், “அப்பா ப்ளீஸ்ப்பா. நீ தா எ பொ வ போலாம்பா”

“நோப்பா. என்னால ஒண்ணும் செய்ய முடியாது. இது நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. வேணும்னா நீ தம்பிட்ட பேசிப்பாரு”

தியேட்டருக்கு சென்றோம். பையன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.

“அப்பா, அக்கா ரொம்ப ஆசைப்படறா. பேசாம அவ சொன்ன படத்துக்கே போகலாம்”

நான் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல்தான் படத்திற்கு போனேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை. ஏற்கனவே முதல் நாள் இரவு என் மனைவி கேட்ட கேள்வி, அதனால் ஏற்பட்ட பழைய நினைவுகள்..மூன்று மணி நேரம் நான் இந்த உலகத்திலேயே இல்லை. மொத்தத்தில் சொல்வெதென்றால்,

“நீ தானே என் பொன் வசந்தம். அட்டகாசம். 2012ன் உச்சக்கட்ட கொண்டாட்டம்”

படம் பார்க்கும் போது கண்களில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். மனைவி பார்த்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். மூன்று மணி நேர என் அமைதி அவர்களுக்கு எதையோ உணர்த்தி இருக்கிறது.

மகள் கேட்டாள், “நான் சொன்னேன்ல டாடி அருமையான காதல் கதைனு”
சிரித்தேன்.

மனைவி அருகில் வந்து மெதுவாக மிக மெதுவாக கேட்டாள்,

“என்ன பழைய நினைவுகள் எல்லாம் வந்துடுச்சா”

“இல்லை” என்று பொய் சொன்னேன்.Dec 14, 2012

சும்மா!


நிறைய எழுத ஆசை இருந்தும் முன்பு போல் எழுத முடியவில்லை. நேரம் இல்லை என்று பொய் சொல்ல விரும்பவில்லை. நேரம் இருந்தும் முன்பு போல் எழுத முடியாமல் இருப்பதற்குக் காரணம் ஒரு வித வெறுப்பு என்றே நினைக்கிறேன். அந்த வெறுப்பு யார் மேலும் இல்லை. என் மேலேயே எனக்கு ஏற்பட்டுவிட்டது. யோசித்துப் பார்த்தால் சில சமயம் எரிச்சலும் கோபமும் வருகிறது. என்னால் நிறையக் கதைகளைப் படைக்க முடியும். ஆனால் தடுப்பது எது? தனிமை.. தனிமை என்பதைத் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்? கிட்டத்தட்ட 15 வருடங்களாகச் சொர்க்கமாகத் தெரிந்த மலேசியா இப்போது வேறு மாதிரி தெரிகிறது. மலேசியா அப்படியேதான் உள்ளது. என் பார்வையில்தான் கோளாறு. எதிலும் நாட்டமில்லை. காரணம் தனிமை. 

குடும்பத்தை விட்டு, மனைவியைப் பிரிந்து, பிள்ளைகளைப் பிரிந்து இப்படித் தனியாகப் புலம்புவது தேவையா? என என்னையே பலமுறை கேட்டுக்கொள்கிறேன். இருந்தும் இந்தத் தனிமையில் இருந்து விடுபட முடியாமல் தவிக்கிறேன். காரணம் பணம், பதவி..? எல்லோரும் சொல்வது என்ன? இந்தியா போனால் இந்தச் சம்பளம் கிடைக்காது. இந்தப் பதவி கிடைக்காது...இத்யாதி இத்யாதி. இங்கே பணமும் பதவியும் முக்கியமா இல்லை நிம்மதி முக்கியமா? பணமும் பதவியும் முக்கியம் என்றால் புலம்பி பயன் இல்லை. நிம்மதிதான் முக்கியம் என்றால் எது நிம்மதி? குழப்பமே மிஞ்சுகிறது. 

இததனைக்கும் கடந்த 5 மாதங்களில் மூன்று முறை இந்தியா சென்று வந்துவிட்டேன். அடுத்த வாரம் அவர்கள் விடுமுறைக்காக இங்கே வருகிறார்கள். இருந்தும் ஒரு ஏக்கத்துடனேயே இருப்பது ஏன்? கல்யாணம் ஆன முதல் மூன்று மாதங்களில் கூட இப்படி இருந்ததில்லை நான். ஆனால் ஒரு நல்ல விசயம் நடந்திருக்கிறது. என்ன என்றால் என் மனைவியின் மேல் நான் வைத்திருக்கும் அன்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த அன்பில் கட்டுண்டு மனம் வேறு எந்தக் கெட்ட செயலுக்கும் செல்லாமல் இருக்கிறது. 

ஆனால் இந்தப் புலம்பலுக்கும் எழுதாமல் இருப்பதற்கும் என்ன காரணம்? ஏதோ இருக்கிறது. ஆனால் என்ன என்று புரியவில்லை. நண்பர் கேபிள் என்னைத் தொடர்ந்து எழுத சொல்லி ஊக்கப்படுத்தி வருகிறார். ஒரு முறை யுவகிருஷ்ணா, "உலக்ஸ், எழுதுவது எல்லோராலும் முடியாது. சில பேரால்தான் முடியும். அதனால் தொடர்ந்து எழுதுங்கள்" எனக் கூறினார். 

நிறையப் படித்தால்தான் எழுத முடியும் என்று எல்லோரும் சொல்வதுண்டு. நிறையப் படித்துக்கொண்டிருந்தேன். இப்போது அதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. என் நுலகத்தில் நான் படிக்காமல் வைத்திருக்கும் புத்தகங்கள் எண்ணிக்கை முப்பதுக்கு மேல் இருக்கும். முன்பு எல்லாம் அவ்வளவு வேகமாகப் படிக்கும் நான் இப்போது முடியாமல் தவிக்கிறேன். திரு எஸ் ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" புத்தகத்தைக் கையில் எடுத்து பத்து நாள் ஆகிறது. இன்னும் முடிக்க முடியவில்லை. அதே போல் பா ராகவனின் "9/11" பாதியில் நிற்கிறது. இரண்டு ஆங்கிலப் புத்தகங்கள் பாதியில் நிற்கிறது. 

சரி நல்ல புத்தகங்கள்தான் படிக்க முடிவதில்லை. சரி அந்த மாதிரி கதைகளாவது படிக்கலாம் என்று இணையத்தில் தேடி படிக்க ஆரம்பித்தால், அதுவும் பிடிக்கவில்லை. உடனே எனக்கு ஒருவித சந்தேகமும் பயமும் வந்துவிட்டது. வேறு ஏதாவது கோளாறு ஆகிவிட்டதா எனக்கு! ஆனால் அந்த மாதிரி பிரச்சனைகள் எல்லாம் இல்லை என்பதை விடியற்காலையில் உணர்கிறேன். 

சரி வேறு என்ன பிரச்சனை? என்ன ஆச்சு எனக்கு? ஏன் என்னால் எதிலும் சரியாகக் கவனம் செலுத்த முடியவில்லை. நானும் தினமும் யோசித்துக்கொண்டே இருக்கிறேன். குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் தனிமைதான் என உள்மனம் சொல்கிறது. இது தான் சரியான காரணமா? தெரியவில்லை. 

ஆனால் ஒரே ஒரு ஆறுதல் கல்கியில் என் கதைகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறன. ஆனந்த விகடனில் எவ்வளவோ முயன்றும் என்னால் ஒரு கதைக்கு மேல் கொண்டு வர முடியவில்லை. ஆனந்த விகடனின் தரத்திற்கு என்னால கதை எழுத முடியவில்லை என்பதுதான் காரணமாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன். வேறு பத்திரிகைகளுக்கு மெயிலில் கதைகளை அனுப்ப முடியுமா? என்று தெரியவில்லை. 

என்னால் நிறையக் கதைகளையும் படைப்புகளையும் படைக்க முடியும். ஆனால் படைப்பாளி சந்தோசமாக இருந்தால்தானே படைப்புகள் வர முடியும்? என்னால் எழுத முடியாமல் இருப்பதற்கு நான் சந்தோசம் இல்லாமல் இருப்பதுதான் காரணமா? சந்தோசம் என்றால் என்ன? பணமா? பதவியா? என்ன அது? 

தெரியாமல் தவிக்கிறேன். சரி, இதை எல்லாம் ஏன் இங்கு எழுதுகிறேன். இவைகள் எல்லாம் நான் தினமும் என்னையே நான் கேட்டுக்கொள்ளும் கேள்விகள். அந்தக் கேள்விகளை, சிந்தனைகளை உங்கள் முன் வைக்கிறேன். 

ஒரு தேர்ந்த மனநல டாக்டர் போல நினைத்து என்னுடைய பிரச்சனையை அலசி நான் ஒரு நல்ல எழுத்தாளராக உதவுங்களேன்! 

நானும் மிகப் பெரிய எழுத்தாளராகி, இப்பொழுதைவிடக் கோடி கோடியாகச் சம்பாரிக்க வேணாமா? 


Nov 26, 2012

இப்படியும்.....இந்த முறை தீபாவளி விடுமுறை முடிந்து அதிகாலை வீட்டை விட்டு கொஞ்சம் கவலை கொஞ்சம் சந்தோசத்துடன் கிளம்பினேன். எப்படியாவது இன்னும் ஆறு மாதத்தில் தமிழ்நாட்டிற்கு வந்துவிடமாட்டோமா? என்ற ஆசை ஒவ்வொரு முறையும் வரும். இந்த முறை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. வீட்டை விட்டு கிளம்பும் அந்த நொடி மிகவும் வேதனையானது. யார் முகத்தையும் பார்க்க விரும்புவதில்லை. ஏனென்றால் லேசாக என்  விழிகளின் ஓரத்தில் ஒரு துளி நீர் வர ஆரம்பித்தால் பின் பிரச்சனைதான். நல்ல வேளை அந்த நேரத்தில் திருச்சிக்குச் செல்லும் நண்பன் வந்து சேர்ந்தான். அவனுடன் காரில் செல்கையில் ஓரளவு மனம் லேசாக ஆரம்பித்தது. காலை 6.40க்கு எல்லாம் ஏர்போர்ட்டை அடைந்துவிட்டோம். அங்கே டோக்கன் வாங்கும் நபரிடம் என் டிரைவர், "வெறும் டிராப் தாம்பா" என்றார். "சரி, சரி மூன்று நிமிசத்திற்குள் சென்றுவிட வேண்டும்" என்ற நிபந்தனையில் காரை அனுமதித்தான். 

அதற்குள் லக்கேஜை எடுத்துவிட்டு, நண்பனுக்குப் 'பை' சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். அங்கே இருந்தவர்கள் "கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்" என்று கூறவே அருகில் உள்ள சேரில் அமர்ந்தேன். பக்கத்தில் பார்த்தேன். மூன்று அழகான இளம் பெண்கள். மிக அழகாக... பார்த்துக்கொண்டே இருக்க ஆசை. ஆனால் மனைவியின் முகம் நினைவில் வரவே கஷ்டப்பட்டுப் பார்வையைத் திருப்பிக்கொண்டேன். பின் எல்லோரையும் அனுமதிக்கவே வரிசைக்குச் சென்றேன். அதிர்ஷ்டமா? அருகிலேயே அந்தப் பெண்களும். மூவருமே காலையில் பூத்த மலர்கள் போல. அவர்களைப் பார்த்தால் தவறான எண்ணம் வராது. ஆனால் பார்க்கத்தூண்டும் அழகு. பின் டிக்கெட் செக்கிங்,லக்கேஜ் ஸ்கேனிங் முடிந்து போர்டிங் பாஸ் வாங்கி, இமிக்ரேஷன், கஸ்டம்ஸ் முடிந்து மெட்டர் டிடெக்டர் வழியாக உள்ளே நுழைந்து, ஸ்கேனிங் முடிந்து லேப்டாப், பர்ஸ் மற்றும் டிபன் வரும் வரை வெயிட் செய்து பின் அனைத்தையும் சரி பார்த்து அங்கே இருந்த இருக்கையில் அமர்ந்த பின் மணியைப் பார்த்தேன். காலை 7.25. விமானம் கிளம்ப இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. 

சரி சாப்பிட்டு விடலாம் என்று நினைத்து வீட்டில் கட்டிக்கொடுத்த இட்லி, மிளகாய் பொடி, தக்காளி சட்னியை சாப்பிட்டு முடித்தேன். இது போல மறுபடியும் சாப்பிட இன்னும் இரண்டு மாதம் ஆகலாம் என்ற நினைப்பு வேறு வந்து தொல்லைப் படுத்தியதால், நான்கு இட்லியை மலேசியா சென்று சாப்பிடலாம் என்று தனியே எடுத்து வைத்தேன். பின் அனைவருக்கும் போன் செய்ய ஆரம்பித்தேன், அம்மாவில் ஆரம்பித்து, மனைவி, மாமியார், மாமனார், அக்காக்கள், அத்தை, நண்பர்கள் அனைவருக்கும் போன் செய்து முடித்து மணியைப் பார்த்தேன். மணி 8.45. பின் சிறிது நேரம் தனியாக மிகத்தனியாக அமர்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். பலவிதமான சிந்தனைகள். "சே, என்ன வாழ்க்கை இது? பணத்திற்காக இப்படி அலைந்து கொண்டு..இன்னும் எவ்வளவு பணம் வேண்டும்...?" யோசனையை தடுத்து நிறுத்தியது அப்போது வந்த அறிவிபு. ஆம், சரியாக 8.55க்கு மலேசியாவில் இருந்து வந்த விமானம், நான் மலேசியா செல்ல இருக்கும் விமானம் தரை இறங்கியது. உடனே மனைவிக்குப் போன் செய்து "விமானம் வந்துவிட்டது. நான் மலேசியா சென்ற பின் போன் செய்கிறேன்" என்று சொல்லி முடிக்கும் முன், 

"உட்கார்ந்து பேசுங்க. ஏன் நடந்துகிட்டே பேசறீங்க" என்ற குரல் கேட்டு திரும்பினேன். மலேசியாவில் நான் தங்கி இருக்கும் இடத்தில் உள்ள கோவிலின் குருக்கள் அங்கே நின்று கொண்டிருந்தார். மனைவியையும், குழந்தையும் அழைத்துச் செல்ல வந்ததாகவும் கூறினார். நல்ல பழக்கம் என்பதால் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகே ஒருவர் வந்தார். நாலு முழ வேட்டி கட்டி இருந்தார், வேட்டியின் உள்ளே போட்டிருந்த பட்டாப்பட்டி டிரவுசர் தெரிந்தது. கதர் சட்டை அணிந்திருந்தார், நெற்றியில் நாமம் அணிந்திருந்தார். தோளில் பை மாட்டி இருந்தார். அந்த இடத்திற்குச் சற்றும் பொருத்தமில்லாத உடை. ஆனால் மிகத் தெளிவான முகம். முகத்தில் ஒரு பிரகாசம் தெரிந்தது. 

என்னைப் பார்த்து, "மலேசியா போறீங்களா?" என்றார். அவர் அப்படிக் கேட்டதும் எனக்குக் கோபம் வரவில்லை. இந்த நேரத்தில் சிறு வயதில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. தியேட்டரில் ஒரு படத்தின் இடைவேளை தருணத்தில் என்னைப் பார்த்த நண்பன் ஒருவன், "என்ன உலக்ஸ் சினிமாவுக்கு வந்தியா?" என்றான். நான் உடனே, "இல்லை முடிவெட்ட வந்தேன்" எனப் பதில் கூறினேன். ஏனோ அப்படி அவரிடம் பதில் சொல்ல என் மனதிற்குத் தோன்றவில்லை. 

"ஆமாம் சார்" என்றேன். அவ்வளவுதான் அடுத்தப் பத்து நிமிடங்கள் தொடர்ந்து அவர்தான் பேசினார். 

"நான் பெரிய சர்ஜன். MD, FRCS - எல்லாத்துலயும் Rank Holder. மலேசியால முதல் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிச்சதே என் அண்ணாதான். எனக்குப் பல மொழிகள் தெரியும். சமஸ்கிரிதத்துல நான் பெரிய ஆள். நல்ல பாடகன் நான். அதுமட்டும் இல்லை, நான் ஒரு பெரிய எழுத்தாளர். நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கேன். இப்போ கூட அம்மாவைப் பத்தி ஒரு புத்தகம் எழுதி இருக்கேன். ஆமாம் ஏன் சார் அந்தப் புத்தகத்தைக் கஸ்டம்ஸ் அதிகாரி காமிக்கச் சொல்றான்" 

"நான் கூட ஒரு எழுத்......." சொல்ல நினைத்து வேண்டாம் என்று விட்டுவிட்டேன். அவரே தொடர்ந்தார், "நான் நிறையப் படித்தவன். இன்னும் படித்துக்கொண்டிருக்கிறேன். அண்ணாமலை யுனிவர்சிட்டில....." 

நான் உடனே இடை மறித்து, "உங்க கிளினிக் எங்க இருக்கு சார்?" 

"கிளினிக்கா? எனக்கா? அதெல்லாம் ஒன்றும் கிடையாது" 

"ஏன்" 

"இப்பவெல்லாம் எவன் சார் நல்ல மெடிசன் தயாரிக்கிறான். நல்ல மாத்திரை ஆறு டாலர். அதே மாத்திரைய மதுரைல அறுபது பைசாக்குத் தயாரிக்கிறான் சார். எல்லாம் ப்ராடு. எவனும் இந்த நாட்டுல உண்மையாயில்லை" 

"சார், நீங்க மலேசியன் இந்தியனா அல்லது இந்தியன் இந்தியனா?" 

மிகவும் கோபமாகிவிட்ட அவர், "Be Indian, Buy Indian and Behave like a Indian" என்றார்.

அதற்குள் விமானத்தில் ஏறுவதற்கான அழைப்பு வந்தது. நான் விமானத்தின் முன் பகுதியில் சீட் வாங்கி இருந்தாலும், முதலில் கடைசி இருக்கை பயணிகளை ஏற்றிவிட்டுத்தான் மற்றவர்களை அனுப்புவார்கள். அந்த சமயத்தில் என் கையைப் பிடித்து இழுத்த குருக்கள், 

"வாங்க போகலாம். அந்த ஆள பார்த்தா ஏதோ டுபாக்கூர் போலத் தெரியுது" 

"இல்லைங்க. பார்க்க தெளிவா இருக்காரு" 

"அப்ப தெளிவான டுபாக்கூரா இருப்பாரு" 

அவரை விட்டு விலகி வேறு வரிசைக்குச் சென்றோம். விமானத்தில் ஏறி என் இருக்கையில் அமர்ந்த பின் அவரைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தேன். இரவு முழுவதும் சரியாகத் தூங்காத காரணத்தால் அடுத்த அரை மணி நேரத்தில் தூங்கிவிட்டேன். சரியாக இந்திய நேரம் 1.20க்கு கோலாலம்பூர் வந்து சேர்ந்தது விமானம். இமிகிரேஷன் முடிந்து, லக்கேஜ் எடுத்துக்கொண்டு கிரீன் சேனல் வழியாகச் சென்று கொண்டிருந்தேன். 

அங்கே ஸ்கேனிங் செக்ஷனில் உள்ள ஆபிசர் ஒருவரிடம், 

" "நான் பெரிய சர்ஜன். MD, FRCS - Rank Holder. மலேசியால முதல் முதல் தமிழ் பள்ளி ஆரம்பிச்சதே என் அண்ணாதான். எனக்குப் பல மொழிகள் தெரியும். சமஸ்கிரிதத்துல நான் பெரிய ஆள். நல்ல பாடகன் நான். அதுமட்டும் இல்லை, நான் ஒரு பெரிய எழுத்தாளர். நிறையப் புத்தகங்கள் எழுதி இருக்கேன்........" 

பேச்சுக்குரல் காதில் விழுந்தது. 

அவரைப் பற்றி நினைத்து நினைத்து இன்னும் குழம்பிக்கொண்டிருக்கிறேன். 


Nov 23, 2012

மிக்ஸர் - 23.11.2012


இந்த வருட தீபாவளி பல வருடங்களுக்குப் பிறகு நண்பர்களுடன் உறவினர்களுடன் கொண்டாடினேன். சந்தோசமாகக் கழிந்தது. இந்த வருடம் தீபாவளி நிகழ்ச்சி எதையுமே டிவியில் பார்க்கவில்லை. நண்பர்களுடன் சீட்டு விளையாண்டது மறக்க முடியாத அனுபவம். இதை எல்லாம் விட அதிகச் சந்தோசப்படும் ஒரு விசயமும் நடந்தது. தீபாவளி கல்கி சிறப்பிதழில் என்னுடைய கதை "விமானத்தில் ஒரு இரவு" பிரசுரமாகி இருந்தது. கதையைப் பிரசுரித்த கல்கி நிறுவனத்திற்கும், தேர்வு செய்த நண்பர் அமிர்தம் சூர்யாவிற்கும் நன்றி! //அந்த தொலைபேசி அழைப்பு வந்தபோது நான் ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். காலையில்தான் எங்கள் ஊரிலிருந்து 5 மணிக்குக் காரில் கிளம்பி அறு மணிக்கு அடுத்த டவுணில் உள்ள ஏர்போர்ட்டை அடைந்து அவசர அவசரமாக முதல் விமானத்தைப் பிடித்துக் கோலாலம்பூர் வந்து, டாக்ஸியில் சென்றால் நேரம் ஆகும் என்று அங்கிருந்து KLIA Express Train பிடித்துக் காலை 9 மணிக்கு அந்த மீட்டிங் ஹாலை அடைந்து, காலை உணவு சாப்பிடாமல், பசியுடன் அமர்ந்து இருந்தபோதுதான் அந்த அழைப்பு வந்தது........// 


மேலும் படிக்க: http://www.kalkionline.com/kalki/2012/nov/18112012/kalki_home.php******************************************************************************** 

சூப்பர் சிங்கர் ஜூனியரில் முன்பு ஜெயித்த அல்கா அஜித்தின் தீவிரமான ரசிகன் நான். அவர் பாடிய அனைத்து பாடல்களையும் தேடிப்பிடித்துக் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். என்ன ஒரு குரல் வளம். அதுவும் சத்ய பிரகாசுடன் அவர் பாடிய "உதயா உதயா" பாடலை தினமும் யுடியூபில் பார்க்கிறேன். கேட்கிறேன். எனக்கு என்னமோ ஒரிஜினல் பாடலை விட இவர்கள் பாடியிருப்பது மிகவும் நன்றாக இருப்பது போல் தெரிகிறது. முடிந்தால் நீங்களும் கேட்டுப்பாருங்களேன்:

அல்கா அஜித்


******************************************************************************** 

"செருப்பால அடிப்பேன்" அப்படினு சொல்லி நீங்க கேள்வி பட்டுருப்பீங்க. ஆனா நேர்ல பார்த்துருக்க மாட்டீங்க இல்லையா? ஏன்னா எல்லோரும் கோபத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை. அவ்வளவு சாதாரணமாகச் செருப்பால் அடிக்க வேண்டும் என்று யாருக்கும் தோன்றாது. ஆனால், நேற்று நடந்த இந்த சம்பவம் என் எண்ணத்தை மாற்றிவிட்டது.

எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில ஒரு வயதான கிழவி இருக்கிறது. பார்த்தால் வயதான தோற்றம் தெரியாது. ஏன் என்றால் எப்போதும் வயதுக்கு ஏற்ற உடை அணியாமல் நைட்டியில்தான் இருக்கும். தீடிரென நேற்று இரவு பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். "என்ன நாம் தமிழ் நாட்டிலா இருக்கிறோம்?" என்று ஒரு கணம் யோசித்துவிட்டு எங்கள் வீட்டு கதவை திறந்து பார்த்தால் அந்தக் கிழவி அவருடைய பேரனை செருப்பால் ஓங்கி ஓங்கி அடித்துக்கொண்டு இருந்தது. அதுவும் வீட்டின் வெளியே கார் பார்க்கிங் ஏரியாவில்.  எனக்கு ஒரே கோபம். என்ன செய்வதென்று தெரியவில்லை. நல்ல வளர்ந்த பையன் அவன். அவனோ அடியை வாங்கிக்கொண்டு அப்படியே அவனின் பைக்கில் அமர்ந்திருக்கிறான். ஒரு பத்து நிமிடம் தொடர்ந்து அவனை அடித்தது. என் கண்கள் எல்லாம் கலங்கிவிட்டது. ஏன் அவ்வளவு அரக்கத்தனம் அந்த கிழவிக்கு என்று எனக்கு புரியவில்லை.

செருப்பால் அடிக்கும் அளவிற்கு அவன் அப்படி என்ன தப்புச் செய்தான் என இன்னும் யோசித்துக்கொண்டிருக்கிறேன். 


******************************************************************************** 

சென்ற திங்கள் இரவு கோலாலம்பூர் புக்கிட் பிண்டாங் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தேன். அப்போது ஒரு வயதான தம்பதியர் என்னை நிறுத்தி, அவர்கள் பர்ஸை யாரோ தொலைத்துவிட்டதாகவும், சாப்பிட பணம் இல்லை என்றும் கொடுத்து உதவுமாறும் கெஞ்சி கேட்டனர். உடனே மனமிறங்கிய நான் அவர்கள் சாப்பிடுவதற்கும், வீடு செல்வதற்கும் பணம் கொடுத்து விட்டு என் வாக்கிங்கை தொடர்ந்தேன். ஒரு 40 நிமிட நடைப் பயிற்சிக்குப் பின் ஹோட்டலை நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தேன். அப்போது யாரோ, "கால் இருக்கா இல்லையா உங்களுக்கு?" என்று சத்தமாகக் கேட்பது காதில் விழுந்தது. யாரென்று திரும்பி பார்த்தால் அதே தம்பதியினர் இன்னொருவரிடம் பணம் கேட்டு, அவர்கள் திட்டிக்கொண்டிருந்தனர். கடுப்புடன் அவர்களைப் பார்க்க, அவர்களோ என்னைத் தெரியாதது போல் நடந்து சென்றனர். இந்த மாதிரி ஆட்களை என்ன செய்வது? 

******************************************************************************** 
செஃப் ஜேக்கப்பை எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் பிடிக்கும். அவருடைய மறைவு என்னால் நம்பவே முடியவில்லை. அவ்வளவு ஹேண்ட்சம்மான பர்சனாலிட்டி கொண்டவர் அவர். எனக்கு என்ன வருத்தம் என்றால், அவரின் சமையல் நிகழ்ச்சியை "ஆஹா என்ன ருசியில்" பார்க்கும் போது நான் இப்படிக் கமெண்ட் அடிப்பதுண்டு: 

"என்னப்பா இது இவ்வளவு எண்ணையை ஊத்துறார். இவர் சொல்றா மாதிரி சமைச்சா ஹார்ட் அட்டாக் வந்து போக வேண்டியதுதான்"

ஆனால் அவரே ஹார்ட் அட்டாக்கில் போவார் என நான் நினைக்கவில்லை.

அவர் திருமணம் ஆகாதவர் என்பதுதான் ஓரளவு ஆறுதலான விசயம்!!! 

******************************************************************************** 

இவ்வளவு நாட்கள் எழுதாமல் இருந்துவிட்டு இப்போது ஏன் எழுதுகிறேன் என்கின்றீர்களா? ப்ளாக் வைத்துக்கொண்டு எழுதாமலும் இருக்கக் கூடாதாமே? 

******************************************************************************** 

Sep 24, 2012

அவசியம் வீட்டுக்கு வாங்கண்ணே!


இந்த முறை திருச்சி செல்லும் போது எங்கள் ஊரில் இருந்து கோலாலம்பூருக்குப் பஸ்ஸில் சென்றேன். நடு இரவு கோலாலம்பூரை அடைந்தேன். அங்கிருந்து கே எல் சென்ட்ரல் சென்று பின் பஸ்ஸில் விமான நிலையம் செல்வதாக ஏற்பாடு. சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்குப் பஸ்ஸில் செல்ல ஏற்கனவே பதிவு செய்து விட்டதால் வேறு வழியில்லை. நடு இரவானாலும் முதல் பஸ்ஸிற்காகக் காத்திருக்க வேண்டிய சூழல். நான் சொல்ல சொல்ல டாக்ஸி டிரைவர் கேட்காமல் ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு விட்டார். கேட்டால், "இப்போது எல்லாம் மாறிவிட்டது. பஸ் இங்குதான் வரும்" என்று கூறிச் சென்றுவிட்டார். அங்கே இருந்த ஒரு ஹோட்டல் நண்பரிடம் கேட்டால், "இல்லை சார். அவர் சொன்னது தவறு. நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து உள்ளே செல்லுங்கள்" என்றார். ரோட்டிலோ யாரும் இல்லை. தனியாக நடந்து உள்ளே சென்றேன். அங்கு யாரும் இல்லை. பின் இன்னும் கொஞ்ச தூரம் நடந்ததில் ஒரு இடத்தில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார். அந்த நேரத்தில் தனியாக.... அவரிடம் கேட்டதில், "பஸ் இங்கே நிறகாது. நீங்கள் வெளியே சென்று நில்லுங்கள்" என்றார். ஒரே குழப்பத்தில் இருக்கையில், இரண்டு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியதில் ஒருவர் திருச்சிக்கும் மற்றவர் சென்னைக்கும் செல்வது தெரிந்தது. அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருக்க மீண்டும் அலைய விருப்பம் இல்லாததாலும், முதல் பஸ் மூன்று மணிக்கு என்பதாலும் அங்கேயே இருக்க முடிவு செய்தோம்.

அப்போது மணி நள்ளிரவு 1. இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. என்ன செய்ய? அப்போது மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். திருச்சி செல்லும் நபர் ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்ததாகக் கூறினார். பின் பேச்சு மெல்ல நீண்டது.

"எத்தனை வருசமா மலேசியால இருக்கீங்க?"

"ஆறு வருசமா"

"எவ்வளவு சம்பளம்?"

"1200 வெள்ளி"

"இந்த அளவு சம்பளம் இந்தியால வாங்க முடியாது?"

"வாங்கலாம்தான். ஆனா நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன்"

"ஒரு நாளைக்கு எத்தனை மணி நேர வேலை?"

"12 மணி நேரம்"

கேட்க வேதனையாகிவிட்டது.

"திருமணம் ஆகிவிட்டதா?"

"ஆயிடுச்சு சார்"

"கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் தனியாக வசிக்கின்றீர்கள்"

"ஆறு வருடமாக"

"இது வரை எத்தனை முறை திருச்சி சென்றிருக்கின்றீர்கள்?"

"ஒரே ஒரு முறை இரண்டு வருடங்களுக்கு முன்பு"

"குழந்தை?"

"ஒரே ஒரு குழந்தை. பிறந்து ஒண்ணரை வருடமாகிறது. இன்னும் பார்க்கவில்லை"

அவர் இதை என்னிடம் சொல்லும் போதே அவர்கள் கண்கள் கலங்குவதைப் பார்த்தேன். என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்? திருமணமாகி மனைவியை ஒரே மாதத்தில் தனியே விட்டு விட்டு வந்து..பின் போய், கர்ப்பமாக்கிவிட்டு வந்து, பிள்ளையைக்கூடப் போய் பார்க்காத வாழ்க்கை. இது தேவையா? பின் அவருக்குப் பலவிதமான அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தேன். அவர் அப்போது தலையாட்டினாலும், பின் என் அறிவுரைப்படி நடப்பாரா? என்பது சந்தேகமே!

இன்னொரு நண்பர் மெட்ராஸை சேர்ந்தவர். அவரும் இவரின் ரகமே. ஒன்பது வருடங்களாக ஒரு சீனரிடம் ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்பில் வேலை செய்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சென்னை செல்கிறாராம். அவரிடமும் அதே கேள்விகளைக் கேட்டேன். அவரோ ஒரே வரியில்...

"நம்ம நாட்டுல எவண்ணே நல்ல வேலை தரான்"

பின் எனக்குப் பேச பிடிக்கவில்லை. பின் அவரே ஆரம்பித்தார், "அப்பா படி படின்னு அடிச்சுக்கிட்டார். அப்போ அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த நிலமை எனக்கு வந்திருக்காது"

கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்.

மிகவும் பரிதாபம். இவர்கள் போல் நிறைய நண்பர்களை இங்கே சந்திக்கிறேன். யாரும் அதிகம் யோசிக்காமல் மலேசியா என்றால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்துக் கடனை வாங்கி இங்கே வந்துவிடுகிறார்கள். இங்கே இருக்கும் முதலாளிகளோ அவர்கள் வந்தவுடனே பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பின் அவர்கள் எங்கும் செல்ல முடியாது. ஏறக்குறைய கொத்தடிமை நிலைதான். முதலாளியுடன் எந்த வம்பும் செய்யச் செய்ய முடியாது. ஏனென்றால் பாஸ்போர்ட் அவர் கையில். அவ்வாறு தவித்த பலரை நாங்கள் கைக்காசு செலவு செய்து இந்தியா அனுப்பி வைத்திருக்கிறோம். வொர்க் பர்மிட் முடிந்து வேலை செய்து மாட்டினால் ஜெயில்தான். வொர்க் பர்மிட் புதுப்பிக்கக் கூட முதலாளிகள் இவர்களிடமே பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் இன்னும் தமிழ் நாட்டில் இருந்து மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

நண்பர்கள் இருவரும் அதிகம் படித்தவர்கள் இல்லை. அதனால் பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து விமானத்தில் ஏறும் வரை அனைத்து உதவிகளையும் செய்தேன். எத்தனை கிலோ லக்கேஜ் புக் செய்திருந்தாலும், அனைத்துலக விமான நிறுவனங்களின் விதிப்படி ஒரு சூட் கேஸில் 32 கிலோவுக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. மெட்ராஸ் செல்லும் நண்பரின் சூட்கேஸில் 36 கிலோ. பின் அனைத்தையும் பிரித்து, வெவ்வேறு பைகளில் வைத்து, வெயிட் சரிபார்த்து, அவர் லக்கேஜ் செல்லும்வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் திருச்சி செல்லும் நண்பருக்கு இமிகிரேஷனில் பிரச்சனை. அந்த ஆபிஸருக்கு விளக்கி சொல்லிவிட்டு, கீழ் தளத்திற்கு வந்தோம். மெட்ராஸ் விமானம் காலை 6.30க்கு. அதனால் அவரும் நானும் கீழ் தளத்திற்கு சென்றோம். பின் அவருக்கு வேண்டிய மற்ற உதவிகளைச் செய்தேன்.

என்னுடைய விசிட்டிங் கார்ட் கேட்டார். கொடுத்தேன். பார்க்க பாவமாக இருந்ததால், அவரை அழைத்துச் சென்று காலை டிபன் காபி வாங்கிக் கொடுத்தேன். மீண்டும் சில அறிவுரைகள் கூறினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். பின் அவருக்குச் செல்ல வேண்டிய கேட் நம்பரை சொல்லி நானே அவரை அழைத்துச் சென்று இடத்தைக் காண்பித்தேன். மீண்டும் நன்றி சொன்னவர்,

"மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்கண்ணே" என்று சொல்லிவிட்டு உள்ளே விறுவிறுவென்று சென்றுவிட்டார்.

கடைசிவரை அவர் வீட்டு முகவரியோ அல்லது போன் நம்பரோ கொடுக்கவே இல்லை!Sep 8, 2012

மிக்ஸர் -08.09.12


நான் பள்ளியில் படிக்கும் போது ஒரு முறை அப்பா சென்னை சென்றிருந்தார். வர சில நாட்கள் ஆகிவிட்டது. அப்பாவைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அம்மாவிடம் தினமும் நச்சரித்துக்கொண்டே இருந்தேன். அப்போது தொலைபேசி கிடையாது. அவர் அலுவல் முடிந்து வீட்டுக்கு வரும் வரை சரியாக சாப்பிடாமல், தூங்காமல் அடம் பிடித்தேன்.

நேற்று மனைவிடம் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது அவர்கள் சொன்ன விசயம் என்னை ரொம்பவே சிந்திக்க வைத்துவிட்டது. இதோ அவருக்கும் என் பிள்ளைகளுக்கும் நடந்த உரையாடல்:

"டேய், அப்பா வரப்போறாங்க. அதனால அடுத்த வாரம் அவங்க வர அன்னைக்கு ஸ்கூல் போக வேண்டாம்"

பையனும், பெண்ணும், "ஏன்?"

"அப்பா, வந்தவுடனே உங்களைப் பார்க்கணும்னு ஆசைப்படுவாங்க இல்லை"

"லீவெல்லாம் போட முடியாது"

"அப்பா பாக்கணும்னு சொல்லுவாங்கடா"

"அதான் சாயந்தரம் வருவோம்ல. அப்ப பாத்துக்குறோம்"

என் அப்பாவை நினைத்துக்கொண்டேன். ஜெனரேஷன் கேப். வேறு என்ன சொல்ல?

*****************************************************

என்னுடைய புத்தகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இப்பொழுதுதான் விற்றுக்கொண்டிருக்கின்றன என நினைக்கிறேன். நான் பொதுவாக எனக்கு வரும் கடிதங்களை நான் பிரசுரிப்பதில்லை. இந்த ஒரு முறை மட்டும். இந்த நண்பர் எழுதிய மெயில் சந்தோசம் அளித்தாலும், கடைசி வரிக்கு முதல் வரி கொஞ்சம் என்ன மிகவே அதிகம்தான். இருந்தாலும் சந்தோசம்! 

இனிய உலகநாதன்,

வணக்கம். நலம். நலம் நாடுகிறேன்.  

உங்களது "வீணையடி நீ எனக்கு" சிறுகதைத் தொகுப்பு தலைப்பு பிடித்து வாங்கினேன்.

 காட்சிகளை விவரமாக சொல்லியுள்ளீர்கள். நன்றாக உள்ளது..

சுஜாதா-வின் சீரங்கத்து தேவதை நடை போல இருந்தது.

தொடர்ந்து எழுதி வாருங்கள்.


சிநேகமாய்

முருகன் சுப்பராயன்

சென்னை

*****************************************************

நேற்றைய என் பதிவை படித்துவிட்டு அவ்வளவு கேவலமாக ஆகிவிட்டாயா? என்று கேட்ட நண்பர்களுக்காக இந்த படம். எப்படி என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். ப்ளேக்பெரி போனில் எடுத்தது. அதனால் கொஞ்சம் சின்னதாகத்தான் இருக்கும். 

*****************************************************

என் நண்பன் ஒருவன் சவுதி அரேபியாவில் வேலை செய்து கொண்டிருந்தான். பல வருடங்களுக்கு முன் அவன் விடுமுறையில் வந்த போது ஐய்வா டேப் ரெக்கார்டர் வாங்கி வந்தான். அப்போதிலிருந்து நானும் வாங்க ஆசைப்பட்டேன். ஆனால் பல காரணங்களால் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. சென்றவாரம் ஒரு வழியாக ஒரு ஹோம் தியேட்டர் வாங்கினேன். என் மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கும் என் ஹோம் தியேட்டர் இதோ!. இந்த படங்கள் ஏற்கனவே கூகிள் +லும், பேஸ்புக்கிலும் பகிர்ந்ததுதான் என்றாலும், இங்கேயும் பதிக்கிறேன்:*****************************************************

பல மாதங்களாக ஒரு பாடலும் பாடாமல் இருந்தேன். நேற்று திடீரென மூட் வரவே ஒரு பாடலை பாடிப்பார்க்க முயற்சித்தேன். இந்த பாடலின் கரோக்கி என்னிடம் இருந்தாலும், ஒரு முறை மியூஸிக் இல்லாமல் என் குரல் வளத்தை செக் செய்து கொள்ள ஆசைப்பட்டேன். பாடி முடித்து உடனே அப்லோட் செய்ய மனமில்லை. என் நண்பர் ரவி சங்கர் ஆனந்த். மிகுந்த இசை ஞானம் உள்ளவர். எப்பொழுதும் பாடலைக்கேட்டுவிட்டு சில கருத்துகள், திருத்தங்கள் சொல்வார். அவரிடம் பாடலை அனுப்பி அவரின் கருத்தைக்கேட்டேன். நன்றாகவே இருக்கிறது என்றார். அதனால் இங்கே அந்த பாடலை பதிக்கிறேன். உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.

இதோ உங்களுக்காக "நினைத்து நினைத்து பார்த்தேன்"


*****************************************************

எனக்கு மிகவும் பிடித்த ஒரு பழைய பாடல் "இது மாலை நேரத்து மயக்கம். பூமாலை போல் உடல் எனக்கும்". இந்த பாடலைப் பற்றி ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் MP3 யோடு எழுதியிருக்கிறேன். அதற்கான வீடியோ கிடைக்காமல் அலைந்து கொண்டிருந்தேன். இப்போதுதான யாரோ ஒரு புண்ணியவான் யூடுபில் அப்லோட் செய்திருக்கிறார். என்னால் அதை தரவிறக்கம் செய்ய முடியவில்லை. அதனால் அதன் லிங்கை கீழே தருகிறேன். எல் ஆர் ஈஸ்வரியின் குரலின் உள்ள வசீகரத்தைப் பாருங்கள். இந்த பாடலை அமைதியான மூடில் இரவில் கேட்டுப் பாருங்கள். சொர்க்கம்.

https://www.youtube.com/watch?v=8d_xbq3xFtE


*****************************************************Sep 7, 2012

நிஜ முகம்!

இந்தக் கட்டுரை ஒரு ஜாலியான கட்டுரையா இல்லை சீரியஸான கட்டுரையா எனக்குத் தெரியலை!

எப்போதும் சந்தோசமாக இருக்க விரும்புவதும், மனதை எப்பவுமே இளமையாக வைத்துக்கொள்வதும் மிகவும் நல்ல விசயம்தான். நான் அப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால் அந்த எண்ணம் அதிகமாகப் போய்விடக்கூடாது! சில சமயம் சில உண்மைகள் நம்மைச் சுடும். ஆனால் அந்தச் சூட்டை நாம் ஏற்றுக்கொள்வதிலை. நண்பன் ஒருவன் மிக அழகான ஒரு பெண்ணைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டான். ஊரே அந்தப் பெண்ணின் அழகைப் பார்த்துப் பொறாமை பட்டது. ஆனால் சில வருடங்களுக்குப் பின்தான் தெரிந்தது, அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே இன்னொரு பையனுடன் தொடர்பு இருப்பது! திருமணத்திற்கு முன்னே அந்தப் பெண் வேறு ஒருவனைக் காதலித்து இருக்கிறாள். ஆனால் திருமணம் செய்து கொண்டதோ இன்னொருவனை! எப்படிச் சாத்தியமாயிற்று? நண்பன் அழகானவன் அல்ல. ஆனால் மிகப்பெரிய பணக்காரன். காதலன் அழகானவன், ஆனால் ஏழை. பணத்திற்காக நண்பனை திருமணம் செய்துகொண்டிருக்கிறாள். அவள் அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. திருமணத்திற்குப் பிறகு காதலனுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டாள்.

மிகவும் பயந்து பயந்துதான் உறவு வைத்திருக்கிறாள். ஒரு நாள் விசயம் கணவனுக்குத் தெரிந்துவிட்டது. அதன் பிறகு திருந்தினாளா? என்றால் அதுதான் இல்லை. கணவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சினிமா போல் அவளைக் கொலை செய்யத் துடிக்கவில்லை. டைவர்ஸ் செய்ய முயற்சிக்கவில்லை. காரணம் நண்பனின் காதல் மிக உண்மையானது. அவன் இன்னும் அவளைக் காதலிக்கிறான். ஆனால் அவளோ காதலுடன் உறவை வைத்திருக்கிறாள். முன்பு பயந்து பயந்து! இப்போது தைரியமாக. காரணம் கணவனுக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது என்று அப்போது பயந்து இருந்தாள். இப்போது, "அதான் அவனுக்குத் தெரிந்துவிட்டதே, இனி என்ன பயம்?" என்ற தைரியம் அவளுக்கு வந்துவிட்டது. இதில் தவறு எங்கே நிகழ்ந்தது? நண்பன் அழகை மட்டுமே பார்த்து மயங்கிவிட்டான். அழகு நிரந்தரமானது இல்லை என்ற உண்மை அவனுக்குப் புரியும் முன் எல்லாம் நிகழ்ந்துவிட்டது.

இந்த விசயத்தை இங்கே நான் கூற ஒரு காரணம் இருக்கிறது. எப்போதுமே என்னைப் பற்றி மிக உயர்வாக நினைத்து கொள்வேன். அதிகத் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வேன். சிறு வயதில் இருந்தே நிறையத் தோழிகள் இருப்பதால் என்னைப் பற்றி நான் ஹீரோ அளவுக்கு நினைத்துக்கொள்வது வழக்கம். அதற்குக் காரணம் நான் உண்மையை ஒப்புக்கொள்ளாததுதான்? என் பெண் ஒரு முறை கேட்டாள்,

"ஏன் டாடி நீங்க மட்டும் கருப்பா இருக்கீங்க? அம்மா மாதிரி இல்லை"

"கருப்பு நம்ம தேசிய நிறம்டா"

அப்போதுதான் படையப்பா பாடல் ஒலித்தது இப்படி:

"முகத்தைத் தேர்ந்தெடுக்கும், நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை நம்மிடத்தில் இல்லை"

அவள் மீண்டும் ஒரு கேள்வி கேட்டாள்,

"ஏம்பா வயித்த கொஞ்சம் குறைக்கலாம் இல்லை"

பதினைந்து வருடங்களாகத் தினமும் ஜிம் சென்றாலும் அவள் கேட்ட பின் தான் அதிகமாக வொர்க் அவுட் செய்ய ஆரம்பித்தேன். உடம்பை சரியாக வைத்துக்கொள்ள, அதிக எண்ணெய் சேர்ப்பதில்லை, அதிக உப்பு, இனிப்பு மற்றும் காரம் சேர்ப்பதில்லை. வீட்டிற்கு வந்த ஒரு நார்த் இந்தியன் நண்பர் எங்கள் வீட்டுச் சாப்பாட்டைச் சாப்பிட்டு பாராட்டிவிட்டு, நான் சாப்பிடுவதைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார்,

"ஏன் உங்களுக்கு ஏதாவது உடல் நலக் கோளாறா?"

எத்தனையோ முறை மனைவி சொல்லி கேட்காதவன் பின் உணவு முறையில் சில மாற்றங்களைக் கொண்டு வந்தேன். இந்த மாதிரி மற்ற விசயங்களில் என்னை மாற்றிக்கொண்டாலும், மனதளவில் நான் இன்னும் ஒரு இளைஞன் என்றுதான் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். அதிலிருந்து மட்டும் மாறவே முடியவில்லை. பாடல்கள் கேட்பதிலும், பார்ப்பதிலும் அதிக ஆர்வம் இருப்பதால், ஒவ்வொரு பாடல்கள் பார்க்கும் போதும் அந்தந்த பாடல்களின் ஹீரோவாக நான் மாறிவிடுவதுண்டு. ஐஸ்வர்யாவிலிருந்து இப்போது வந்திருக்கும் ஹீரோயின் வரை என்னோடு, கனவிலோ, மனதிலோ டூயட் பாடி ஆடாத நடிகைகளே இல்லை. அது சரியா தவறா எனக்குத் தெரியவில்லை. சிலர் உண்மையைச் சொல்லாமல் இருக்கலாம். நான் சொல்கிறேன் அவ்வளவுதான்.

குடும்பத்தைப் பிரிந்து கடந்த மூன்று மாதமாக முதல் முறையாகத் தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நானே சமைத்துச் சாப்பிடுகிறேன். நண்பர்கள் எல்லோரும் நான் அதிகம் இளைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா? என்று நேற்று ஜிம்மில் உடற்பயிற்சி முடிந்தவுடன் வெயிட் பார்த்தேன். ஆமாம் நான்கு கிலோ குறைந்து விட்டது. மனைவின் அருமை இப்போது தெரிகிறது. இதைப்பற்றி ஏற்கனவே நிறைய எழுதிவிட்டேன். பதினைந்து வருடங்களாகப் பலவிதமான உடற்பயிற்சி செய்து, கார்டியோ செய்து, சாப்பாட்டைக் குறைத்து, என்னவெல்லாமோ செய்து குறையாத என் வயிற்றின் அளவு மூன்றே மாதத்தில் 35 இன்ச்லிருந்து 32.5 ஆகக் குறைந்து விட்டது. உடனே என் பெண்ணிடம் சொல்ல வேண்டும். மனம் மிகவும் சந்தோசமாக ஆகிவிட்டது.

அத்துடன் நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்திருக்கலாம். நானும் இந்தப் பதிவை எழுதி இருக்க மாட்டேன். என்ன செய்வது? விதி!. நேற்று ஜிம்மில் புது டி சர்ட் கொடுத்து அளவு பார்க்க சொன்னார்கள். அப்போது என்னை அறியாமல் என் முகத்தைக் கண்ணாடியில் பார்க்க நேர்ந்துவிட்டது. ஆறடி உயரம். உடம்பு நன்றாகச் சிலிம்மாக உள்ளது. ஆனால் முகம்? என் அப்பா கொடுத்த அந்த முகம்? எங்கே? கன்னம் எல்லாம் ஒட்டிப் போய், முடி எல்லாம் அதிகம் கொட்டி.... என்னையே எனக்கு ஒரு கணம் பிடிக்கவில்லை? இந்த மூஞ்சியை வைத்துக்கொண்டா தினமும் எல்லோருடனும் டூயட் பாடிக்கொண்டிருக்கிறேன். அய்யே? உண்மை தீயாய் சுட்டது? என் மனதில் நான் கட்டி வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாய் உடைந்து விட்டது. இனி அப்படி யாரையும் நினைத்து நாம் பாடி ஆடக் கூடாது? நாம் ஹீரோ இல்லை. நிஜத்தில் ஒரு சாதாரண மனிதன் என்று நினைத்துக்கொண்டேன்.

வீட்டிற்கு வந்து சமைத்து சாப்பிட்டுவிட்டு அதே நினைவுடனே தூங்கி விட்டேன். ஆனால், கனவில்,

"காதல் அணுக்கள் உடம்பில் எததனை" என்ற எந்திரன் பாடல். ஐஸ்வர்யாராய் மிக அழகாகக் கவர்ச்சியாக நடந்து வருகிறார். எங்க நம்ம தலைவர் ரஜினி? தேடினால் காணவில்லை? அப்ப யார் கூடக் கித்தாருடன் பாடிட்டே வரது? ஓஒ நான்தானா? அது!

என்ன தீர்மானம் போட்டு என்ன பிரயோசனம்?

இந்த ஐஸ்வர்யாராயை திருத்தவே முடியாது?Aug 7, 2012

நினைச்சாலே பயமா இருக்கு!


யாருக்கு எப்ப என்ன நடக்கும்? யாருக்குத்தெரியும்? ஓரளவுதான் நாம ஜாக்கிரதையாக இருக்கலாம். அதையும் மீறி நடப்பது விதியாகத்தான் இருக்கக் கூடும். ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாத முடிவில் மலேசியாவில் நிறைய விபத்துக்கள் நடக்கும். நிறைய இளைஞர்கள் உயிர் இழப்பார்கள். அரசாங்கம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் யாரும் மெதுவாகச் செல்வதில்லை. அதுவும் மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் மிக வேகமாகச் செல்வார்கள். தினமும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ''இன்று விபத்தில் இறந்தவர்கள் இத்தனை பேர்" என்று அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். பார்க்க பார்க்க நம் மனம் துடிக்கும். இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுவும் மழைக்காலங்களில் மலேசியாவில் கார் ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். சில நேரங்களில் மழை மிக அதிகமாக இருக்கும். பகலிலேயே நம்மால் முன்னால் எதையும் பார்க்க முடியாது. அதுவும் எதிரில் கார் வந்தால் அந்தக் காரினால் அடிக்கும் தண்ணீர் நம் கார் கண்ணாடியில் பட்டு சில விநாடிகள் எதுவுமே தெரியாது. நேற்று அப்படித்தான். கடுமையான மழை. மிகவும் மெதுவாகத்தான் சென்றேன். மிகப்பெரிய பாலம் வேறு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகள் வைத்திருப்பாரள். அடித்த மழையில் அனைத்தும் நடு ரோடில். எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் முன்னால் எதுவுமே தெரியவில்லை. ஹெட் லைட்டை ஆன் செய்து ஹை பீமில் வைத்தால் கூட எதுவுமே தெரியவில்லை. நாம் எவ்வளவு கவனமாகச் சென்றாலும், பின்னாடி வருபவர் கவனமாக வரவில்லை என்றால் என்ன ஆவது? வீடு போய்ச் சேருவதற்குள் படாதபாடு.

இந்தப் பிரச்சனையையாவது ஓரளவு நம்மால் கட்டுப்படுத்த முடியும். போன வாரம் மலேசியா 'மிரி' என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை அறிந்தால், எப்படிப் பயம் வராமல் இருக்க முடியும்?

வெள்ளி இரவு 7.30 மணி. Air Asia A320 விமானம் சரவாக், மிரியில் இருந்து கோலாலம்பூர் புறப்படத் தயாராக உள்ளது. கேப்டன் எல்லாவிதமான அறிவிப்புகளையும் முடித்து விட்டு, விமானத்தை நின்ற இடத்தில் இருந்து எடுத்து ரன்வேக்கு செல்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் விமானம் புறப்படத் தயாராக இருக்கிறது. அப்பொழுது ஒரு பயணி எழுந்திருக்கிறார். உடனே எல்லாப் பயணிகளும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் விமானம் ரன்வேயில் இருக்கும் போது, அதுவும் புறப்படத் தயாராக இருக்கும் போது யாரையும் எழுந்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். விமானப் பணிப்பெண்களும் அவர்கள் இருக்கையில் சேஃப்டி பெல்ட்டுடன்தான் இருப்பார்கள். அப்போது ஒருவர் எழுந்தால் என்ன ஆகும்? விமானப் பணிபெண்கள் பதறி அடித்துக்கொண்டு எழுந்து வந்து அவரை இருக்கைக்குச் செல்ல சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் கேட்காமல் வேகமாக நடந்திருக்கிறார். சில பயணிகளும் தடுத்திருக்கிறார்கள். அப்படியும் கேட்காமல் வேகமாக நடந்து சென்று, யாரும் எதிர்பாராதவிதமாக விமானத்தின் அவசர கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்து விட்டார். எல்லோரும் செய்வது அறியாது திகைத்திருக்கிறார்கள். பின் விசயம் தெரிந்து விமானத்தை விமானி நிறுத்திவிட்டார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து மிரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். உடம்பு எல்லாம் மல்டிபிள் ஃப்ராக்சர் ஆகி, அந்த நபர் இப்போது படுத்த படுக்கையில். பின் விமானம் ஐந்து மணி நேர தாமத்துடன் கிளம்பி இருக்கிறது.

விசயம் இத்தோடு முடிந்திருந்தால் இந்த விசயத்தை எழுதி இருக்க மாட்டேன். ஆனால், இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், அவன் விமானத்தை விட்டு குதிக்கும் முன் கத்தினானாம், என்ன சொல்லித்தெரியுமா? "ஐய்யோ பேய் இருக்கிறது. பேய் இந்த விமானத்தில் இருக்கிறது"

என்ன கொடுமை பாருங்கள். இப்பொழுது மலேசியா ஃபேஸ்புக் முழுவதும் இந்த விசயம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மலேசியாவில் பேய் பிசாசை நம்புவர்கள் மிக அதிகம். அவனுக்கு வயது 24தான். தனது காதலியுடன் விடுமுறையைக் கழிக்கக் கோலாலம்பூரில் இருந்து மிரி சென்றுள்ளான். என்னத்தைப் பார்த்தோனோ தெரியவில்லை? பேய் பார்த்து பயந்து கீழே விழுந்து இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறான். போலிஸ் என்ன சொல்கிறது என்றால், அவன் 'ஒரு டிரக் அடிக்ட் ஆக இருக்கலாம், ஏனென்றால் அவன் தன்னிலையிலேயே இல்லை' என்று. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்?

என் கவலை எல்லாம், 'ஒரு வேளை, விமானம் கிளம்பியதும் அவன் எமெர்ஜன்சி கேட்டை திறந்திருந்தால்..?' நினைக்கவே பயமாக இருக்கிறது.

இனி விமானம் டேக் ஆகும் முன் யாராவது எமெர்ஜன்சி கேட் முன் நடந்து போகிறார்களா? என்று நான் அடிக்கடி பார்க்கப்போவது நிச்சயம்.

எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது பாருங்கள்!


Aug 5, 2012

மரங்கள்....


வீட்டைச் சுற்றி மரங்களுடன் நல்ல ஒரு தோட்டத்தில் குடி இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அஃது ஒரு நிராசையாகவே உள்ளது. எங்கள் ஊரில் அதாவது நான் பிறந்த ஊரில் அப்படி ரம்யமான இடம் உண்டு. எங்கள் வீட்டின் பின் நிறைய மரங்கள் உள்ளது. சிறு வயதில் மாங்காய் மரங்களுக்கு நடுவில் கயிற்றுக் கட்டில் படுத்துத் தூங்கிய சுகம் இன்னும் நெஞ்சினில் பசுமையான நினைவாய் இருக்கிறது. ஆனால் அங்கே நான் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அது போல் ஒரு வீடு அமையுமா? என்பது கேள்விக்குறிதான்.

முதன் முதல் நான் ப்ளாட் வாங்கிய போது அந்த இடத்தைப் பார்த்து அவ்வளவு சந்தோசம் அடைந்தேன். காரணம் இடம் முழுவதும் மரங்கள். தேக்கு மரங்கள் வேறு இருந்தன. அந்த இடம் மட்டுமே காலி மனையாக இருந்தது. அந்த நகரம் வயலாக இருந்து பின் வீடுகளாய் இருபது வருடங்களுக்கு முன்னே மாறிப்போய் இருந்தாலும், அந்த இடம் மட்டும் காலியாகவே இருந்தது. மிகவும் பிடித்து இருந்ததால் கேட்ட பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். ஆனால் வீடு கட்டலாம் என்று முடிவு செய்தபோது, ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

காரணம் இன்ஜினியர் அனைத்து மரங்களையும் வெட்ட சொல்லிவிட்டார். மரங்களை வெட்டாமல் விட்டால் வீடு கட்ட முடியாது. என்ன செய்வது? ஓரத்தில் உள்ள மரங்களையெல்லாம் விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டச் சொன்னேன். அப்படியே வீடும் கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால், காம்பவுண்ட் கட்டும் போது மீண்டும் அதே பிரச்சனை. மரங்களை வெட்டியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. நான் சங்கடப்படுவதைப் பார்த்து என் இன்ஜினியர் நண்பர் சொன்னார், "உலக்ஸ், ஏன் கவலை படறீங்க! எத்தனை மரங்கள் வெட்டுகிறோமோ அத்தனை மரங்கள் நட்டுவிடுங்கள்" என்றார். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்.

வீடு கட்டி 9 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் என்னால் என்ன காரணத்தினாலோ மரங்களை நடமுடியாமல் போய்விட்டது. ஆனால் மனதில் ஒர் ஓரத்தில் அந்தக் கவலை இருந்து கொண்டே இருந்தது. அந்தக் கவலை இப்போது ஓரளவு குறைந்து விட்டது. சென்ற மாதம் எங்கள் கம்பனியின் வளாகத்தில் மரங்கள் நடக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. மனம் நிறைவாக இருக்கிறது. ஆனால், என்ன ஒன்று தமிழ் நாட்டில் எங்கள் பகுதியில் நடாமல் மலேசியாவில் மரங்களை நட்டிருக்கிறேன்.


எங்கு நட்டால் என்ன? மலேசியாவும் பூமியில்தானே இருக்கிறது?


Aug 4, 2012

பொண்ணு எப்படி இருக்கா?


சென்ற மாதம் முழுவதும் என்னைச் சுற்றி உள்ள நிறையப் பேருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. மிகவும் சந்தோசமான விசயம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சந்தோசம் அளவிட முடியாதது. ஆனால் சென்ற மாதம் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீட்டில் பிறந்ததெல்லாம் பெண் குழந்தைகள்தான். முதலில் பெண் குழந்தை பிறந்தால் அதிஷ்டமாம். உண்மைதான். அனுபவத்தில் சொல்கிறேன். 

குழந்தை பிறந்த பிறகு எல்லோரும் சென்று வாழ்த்திவிட்டு வருகிறோம், அதோடு நம் வேலை முடிந்துவிட்டது. ஆனால் பெற்றோர்களுக்கு ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும், இப்பொது உள்ள சூழ்நிலையில் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை குழந்தையைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. வாயில் வராத பல நோய்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவைகள் எல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதில்லை என்றாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

இப்போது எல்லாம் குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகளுக்கு உடனே மஞ்சள் காமாலை வருகிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், உடனே கவனிக்க வேண்டிய விசயம் இஃது. ஏற்கனவே இந்த விசயத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால் முதலில் கேள்விப்படும் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இங்கே பிறக்கும் ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை வருகிறது. இங்கு எல்லாம் நம் ஊர் போல் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளோடு யாரும் நிறுத்துவது இல்லை. குறைந்தது எல்லோருக்குமே நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருக்கிறது. என் டிரைவருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். இத்தனை குழந்தைகள் இருந்தாலும், நம்மைப் போல இவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நாம் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அப்படிக் கவனிப்போம். பயப்படுவோம். இவர்கள் எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படுவதில்லை. குழந்தையும் எந்தப் பிரச்சனை இல்லாமல் வளர்கிறது. அதிகம் கவனித்தோமானால் அதிகம் பிரச்சனை வருகிறது. 

யாருக்கெல்லாம் அதிகம் நார்மலாகப் பிறக்காமல் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தோமானால், அதிகம் சிசேரியனில் குழந்தை பெற்றுக்கொள்வது பணக்காரார்கள்தான். காரணம் அதிகம் கவனிக்கிறேன் பேர்வழி என்று மனைவியை அதிகச் சத்துள்ளவைகளைச் சாப்பிட வைப்பதால் குழந்தை மிக அதிக வெயிட்டுடன் வளர்கிறது. அதுவே சிசேரியனுக்குக் காரணமாகிறது. 

குழந்தை பிறந்த சில நாட்களில் நிறைய அழும். பயப்படக்கூடாது. பால் சேராமல் இருக்கலாம். சில குறிப்பிட்ட பால் பவுடரும் சேராமல் இருக்கலாம். நம் மக்கள் உடனே பயந்து கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள். இங்கே அப்படி இல்லை. பயப்படுவதில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு பயப்படுகிறோம். நான் பிறந்தது ஆஸ்பத்திரியில் அல்ல. எங்கள் கிராமத்தில் உள்ள என் வீட்டில்தான் பிறந்தேனாம். அப்போது எந்தத் தடுப்பூசியும் போட்டதாகத் தெரியவில்லை. இப்போது என்னவென்றால் பத்து வயது வரை என்னென்ன தடுப்பூசி போட வேண்டும் என்று ஒரு பெரிய நோட்டே தருகிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு நாம் நோய்க் கிருமிகளை உண்டாக்கி வைத்திருக்கிறோம். 

இயற்கைக்கு எதிராகப் போய் இப்படி அவதி பட்டுக்கொண்டிருக்கிறோம். பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரம் பார்த்து ஜாதகம் எழுதிய காலம் போய் எந்த நாளில் எந்த நட்சத்திரத்தில் குழந்தை வேண்டும் என்று முடிவு செய்து பின் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும்? 

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். குடும்பமே குதுகூலமாகச் சந்தோசமாக இருந்தது. காரணம் அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தது. எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் 'குழந்தை யார் போல் இருக்கிறாள்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். வந்திருந்த ஒருவர் சொன்னார், 

"குழந்தை அவர் அம்மா போல இருக்கிறார்" 

இன்னொருவர் சொன்னார், 

"இல்லை இல்லை பெண் குழந்தையாக இருந்தாலும் அவர் அப்பா ஜாடை இருக்கிறது" 

இன்னொருவர், 

"இல்லை அவள் பாட்டி போல இருக்கிறாள்" 

கடைசியில் என்னைப்பார்த்துக் கேட்டார்கள், 

"குழந்தை யார் போல இருக்கா? நீங்க சொல்லுங்க சார்?" 

நான் உடனே தயங்காமல் சொன்னேன், 

"குழந்தை குழந்தை போல் இருக்கிறாள்" 


Aug 3, 2012

மோசமான அனுபவம்!


சமீபத்தில் அலுவலக விசயமாகச் சிங்கப்பூர் சென்றிருந்தேன். நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். நான் வழக்கமாக ஒரே ஹோட்டலில் தான் தங்குவேன். வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் முஸ்பா ஷாப்பிங் மால் சென்று விட்டு அங்கேயே உள்ள ஏதாவது ஒர் இந்திய ஹோட்டலில் இரவு உணவு முடித்து விட்டு அங்கே சிறிது நேரம் நடப்பது வழக்கம். முஸ்தாவை ஒட்டித்தான் செராங்கூன் ரோடு உள்ளது. அந்தப் பகுதியில்தான் அனுமதிக்கப்பட்ட சிகப்பு விளக்குப் பகுதியில் உள்ளது. அந்தப் பகுதியிலும் நடந்து செல்வது வழக்கம். பெண்களிடம் செல்வதற்காக அல்ல. அங்கே பலதரப்பட்ட மக்களைப் பார்க்கலாம். யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நெருங்கி அருகில் சென்றால் அங்கே இருக்கும் தமிழ் பெண்கள் சிலர், "அண்ணே வரீங்களா?" என்பார்கள். நாம் புன்னகையுடன் ஒதுங்கி சென்றாலும் நம்மை வற்புறுத்த மாட்டார்கள்.

கதைகள் எழுத ஆரம்பித்த சமயங்களில் சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்களிடம் பேசியதுண்டு. ஆனால் ஒன்றிரண்டு அனுபவங்களைத் தவிர எதையுமே கதைகளாக நான் எழுதியதில்லை. அவ்வளவும் கண்ணீர்க்கதைகள். எந்தப் பெண்ணும் விருப்பப்ப்ட்டு அந்தத் தொழிலுக்குச் செல்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. யாரோ சொந்தக்காரர்களோ, புரோக்கரோ சில சமயம் கட்டிய கணவனே கூட அந்தப் புதைக்குழியில் அவர்களைத் தள்ளிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிங்கப்பூரில் மட்டும் என்று அல்ல. சிங்கப்பூரிலாவது அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் அவர்கள் தொழில் செய்கிறார்கள். கோலாலம்பூரில் ஜலான் மஜித் இந்தியா அருகில் நிறையத் தமிழ் பெண்களை இப்படிப் பார்க்கலாம். என்ன செய்வது ஒரு சான் வயிற்றுக்காக அவர்கள் இந்தத் தொழிலை செய்கிறார்கள்.

எதையாவது மிதித்துவிட்டாலோ அல்லது கையில் பட்டுவிட்டாலோ அருவெறுப்பு பட்டு எத்தனை முறை கைகளையும் கால்களையும் கழுவுகிறோம். ஆனால் அந்தப் பெண்களை நினைத்துப் பாருங்கள். எப்படித்தான் தினமும் இத்தனை ஆண்களை.... சரி, விசயத்து வருகிறேன். ஒரு நாள் வேலை முடிந்து வழக்கம் போல முருகன் இட்லி கடையில் சாப்பிட்டு விட்டு செராங்கூன் ரோட்டிற்குச் சென்றேன். அங்கே எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கலாம். ஆனால் நான் அன்று செய்த ஒரே தவறு, மெயின் ரோட்டில் செல்லாமல் இரண்டு தெருக்களுக்கும் நடுவில் இருக்கும் தெருவில் சென்றதுதான். அஃதாவது இரண்டு மெயின் ரோட்டின் பின் பகுதி அஃது. அங்கேயும் நிறையப் பெண்கள், ஆண்கள் உலாவுவார்கள். அங்கே சில விதமான டாய்ஸையும் நீங்கள் கடைகள் போல் உள்ள அந்த வீட்டின் பின் பகுதியில் பார்க்கலாம். அந்தப் பகுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு வீட்டின் பின் பகுதியில் இரண்டு சைனீஷ் பெண்கள் நின்று ஒர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கைகளிலும் சிகரெட். பேசிக்கொண்டிருந்த ஆண் ஒர் வெளிநாட்டு ஆண். ஈரோப்போ அல்லது அமெரிக்க ஆணோ தெரியவில்லை. அவன் அவர்களுடன் ஏதோ பேரம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இடம் நன்றாக இருட்டாக இருந்தது. அவனின் பேரத்துக்கு அவர்கள் எதிர்ப்பு காட்டுவதும் தெரிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் சென்றேன். தெருவில் வேறு யாரும் இல்லை.

அப்போது வேறு ஆண் யாரோ எங்கிருந்தோ எதோ சொல்வது கேட்டது. யாரென்று தெரியவில்லை. இருட்டு என்பதாலும், எனக்கு அது சம்பந்தம் இல்லாத விசயம் என்பதாலும் நான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் கிட்டே நெருங்கியவுடன் அந்த ஆண் என்னை நோக்கி வந்து ஏதோ சொல்வது போல் இருந்தது. நான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடக்க நினைத்தேன். ஆனால் அவன் என் வழியை மறித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண்களோ அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றார்கள். நான் மீண்டு கடக்க நினைக்க அவன் என்னைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே என் பின்னாலே வந்தான். அவன் பேசிய ஆங்கிலத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால்,

"நீ எங்குப் போனாலும் உன்னை விட மாட்டேன். நீ தங்கி இருக்கும் இடத்துக்கும் வருவேன்"

ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஹோமோ செக்ஸ்வலாக இருப்பானோ என்ற பயம் வந்துவிட்டது. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நம் ஒழுக்கத்தை இவன் கெடுத்துவிடுவானோ என்ற பயம் கலந்த அதிர்ச்சி வந்து விட்டது. பின்னாலே வேகமாக நடந்து சென்றேன். அவனும் வேகமாக வந்தான். அதற்குள் மெயின் தெரு வந்தது. எதிரில் நிறையக் கடைகள் உள்ளன. அதில் ஒரு தமிழ் கடை வேகமாக அந்தக் கடைக்குள் நுழைந்தேன். அங்கே உள்ள தமிழ் நண்பரிடம்,

"என்னன்னு தெரியலைங்க. என் பின்னாலே வரான். எதுக்குன்னு தெரியலை. கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன். அவன் சென்றதும் சென்றுவிடுகிறேன்" என்றேன்.

ஆனால் அந்தக் கடைக்கார நண்பரோ, "தயவு செய்து கடையை விட்டு வெளியே சென்றுவிடுங்கள்" என்று என்னைத் துரத்தாத குறையாகக் கடையை விட்டு வெளியே தள்ளிவிட்டார். உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை. நானே கிட்டத்தட்ட ஆறு அடி இருப்பேன். அவன் என்னை விட உயரம். சில்வர்ஸடர் ஸ்டோலன் போன்ற உடலமைப்பை கொண்டவன் போல இருந்தான். எனக்காக வெளியே நின்று கொண்டு இருக்கிறான். கடைக்காரனோ என்னை வெளியே துரத்திவிட்டுவிட்டான். ஏதாவது ஒன்று ஆகி போலிஸ் கேஸ் ஆனால் என்ன செய்வது? அதுவும் சிங்கப்பூரில்? வருவது வரட்டும் என்று கடையை விட்டு வெளியே வந்தேன்.

திரும்பவும் என்னை நோக்கி ஆங்கிலத்தில் ஏதோ என்னைக் கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை நோக்கி,

"ஏன் என் பின்னால் வருகிறாய்? என்ன பிரச்சனை? நான் உன்னை என்ன செய்தேன்?" என்றேன்.

கோபம் அதிகமாகி என் சட்டையைப் பிடிக்க வந்தான். முக்கியமான ஆபத்துச் சமயங்களில் என் குல தெய்வத்தையும், திருப்பதி ஏழுமலையானையும் நினைத்துக்கொள்வது என் வழக்கம். அப்படி மனதில் நினைத்துக்கொண்டு மெதுவாக நானும் அவன் கையைப் பிடித்து இருக்கினேன்.

உடனே அவன், "நீ ஏன் அப்படிச் சொன்னாய்?" என்றான்.

"என்ன சொன்னேன்?" என்றேன்.

"யூ ப்ளடி ஃபக்கிங் வொயிட் ஸ்கின். யூ ...... அப்படினு சொல்லலை" என்றான்.

அந்த விநாடியில் தெய்வத்தை நினைத்துக்கொண்டு, "நான் அப்படிச் சொல்லவே இல்லையே. நான் எதற்காக உங்களை அப்படிச் சொல்ல வேண்டும்?" என்று ஆங்கிலத்தில் கூறினேன்.

உடனே என்ன நினைத்தானோ தெரியவில்லை. விறுவிறு என அங்கு இருந்த சந்து போன்ற ஒர் இடத்தை நோக்கி சென்றான். உடனே அந்தக் கடைக்கார தமிழ் நண்பர் ஓடி வந்து, "அண்ணே இங்க நிக்காதீங்க. முதல்ல வேற தெரு வழியா ஹோட்டலுக்குப் போற வழிய பாருங்க" என்று அவசரப்படுத்தினான். உடனே வேறு தெரு வழியாக ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். சென்று கொண்டிருந்த போதுதான் யோசித்துப் பார்த்தேன், "ஏன் அப்படி அவன் என்னைப் பின் தொடர்ந்தான்?" என்று.

அந்தப் பெண்களிடம் அவன் பேரம் பேசியபோது, ஏதோ வாக்குவாதம் ஆகி இருக்கிறது. அப்போது அந்த வீட்டிலோ அருகிலோ இருந்த அந்தப் பெண்களுக்கு வேண்டப்பட்ட நபர் யாரோ இவனைக் கெட்ட வார்த்தையால் ஆங்கிலத்தில் திட்டி இருக்கிறார்கள். காதில் வாங்கிய அவன் மிக அருகில் என்னைப் பார்த்ததும் நான்தான் அவனைத் திட்டினேன் என்று நினைத்து துரத்தி இருக்கிறான். என் நேரம் நன்றாக இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது சண்டையாகி இருந்தால், அதுவும், சிங்கப்பூரில். நினைக்கவே பயமாக் இருக்கிறது. ஹோட்டல் அறைக்கு வந்தும் கொஞ்ச நேரம் அந்தப் படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.

யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்ததால் மனைவியை அழைத்து நடந்ததைச் சொன்னேன். மிகவும் கோபமாகி,

"உங்களை யார் அங்கு எல்லாம் போகச்சொன்னது?"

"இல்லை கதை ஏதாவது கிடைக்கும்னு"

"அப்படி ஒண்ணும் நீங்க கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களை யாரு தனியா அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகச் சொன்னது?"

போனை வைத்துவிட்டேன்.

உண்மைதான்.

அப்படிப்பட்ட இடத்துக்கு இனி தனியாகப் போகக்கூடாது???


Aug 2, 2012

தனிமை....


"தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடலை கேட்கும் போது எல்லாம் ஆசையாக இருக்கும். நான் எப்பொழுதும் நண்பர்கள் கூடவே இருப்பவன். கூட்டுக்குடும்பத்தில் பிறந்து அதிலே வாழ்ந்தவன். அப்படிப்பட்ட எனக்குச் சில வேளைகளில் தனிமையாக இருக்க ஆசை வரும். அப்போது கற்றுக்கொண்டதுதான் தியானம் எல்லாம். பள்ளி கல்லூரி காலங்களில் எதையாவது படிக்க வேண்டும் என்றால் கூடப் பயமாக இருக்கும். அப்பா பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன். ஆனால் அந்தத் தனிமை கிடைக்காமலே இருந்தது. பின் வேலையில் சேர்ந்து அலுவலக விசயமாக ஹோட்டல்களில் தங்கும் போது கூட முதலில் தனியாக ஆசையாக இருக்கும். பின் வேலை முடிந்து ரூமுக்கு செல்ல நேரம் ஆகும். வீட்டில் பேசிவிட்டுப் படுத்தால் தூக்கம் வரும். எங்கும் செல்ல முடியாது. கோலாலம்பூர், சிங்கப்பூர் இரவு வாழ்க்கையைச் சொல்லவே வேண்டியது இல்லை. 

ஆனால் இன்றோ தனிமையில் இருக்கிறேன். இந்தத் தனிமை என்ற விசயம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போதுதான் தெரிகிறது. வீடு முழுவதும் ஆட்கள் இருந்து விட்டு இன்று அதே வீட்டில் தனியாக இருப்பது போல் உள்ள கொடுமை உலகத்தில் எதுவுமே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றால் நம் டென்ஷனை குறைக்கக் குழந்தைகளோ அல்லது பகிர்ந்து கொள்ள மனைவியோ இல்லை. சில நேரங்களில் அழுகை அழுகையாக வருகிறது. அப்படியும் மூன்று வேளையும் சமைத்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக்கொண்டு, ஜிம்முக்கு சென்று கொண்டு இருப்பதால் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக மிகக் குறைவு. அந்த ஓய்வு நேரத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

மிகப் பெரிய வீட்டில் கார் பார்க்கில் ஆரம்பித்து ஐந்து கதவுகளைப் பூட்டியும் கூட ஏன் மாடியில் ஏதோ மூலையில் இருக்கும் பெட் ரூம் கதவையும் பூட்டுகிறேன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் படுத்தால் தூங்கி விடுவேன். இப்போதோ இரவு தூக்கம் என்பது மிகக் கொடுமையான விசயம் என்று ஆகிப்போனது. தனிமையாக வாழ்பவர்கள் கம்ப்யூட்டர் நெட் கனக்ஷன் வத்திருப்பது மிகப் பெரிய தவறு என்று இப்போது அனுபவப்பூர்வமாகத் தெரிகிறது. தினமும் அதிக நேரம் கண்விழித்துக் கம்ப்யூட்டரில் மூழ்க கூடாது என்று காலையில் போடும் தீர்மானம் இரவில் மறந்து விடுகிறது. சரி அப்படி எதையாவது எழுதுகிறோமா? என்றால் அதுவும். இல்லை. கண்டதையும் படித்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு!! எனக்கே இது அசிங்கமாகவும், வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஏராளமான புத்தகங்கள் அட்டையுடன் என்னைப் பார்த்து அலமாரியில் சிரிக்கின்றன. ஏன் என்னால் முழுக் கவனத்துடன் படிக்கவோ எழுதவோ முடியவில்லை? யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. தனியாக இருக்கிறோம் என்ற உணர்வை மறைக்க, ஏதாவது ஒன்றில் ஈடுபடவேண்டும் என்ற நினைப்பில் மனம் குப்பையை நோக்கி செல்கிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் விசயம் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. 

அந்த நேரத்தில் நிறைய நல்ல விசயங்களைப் படிக்கலாம். நிறையக் கதைகள் எழுதலாம். பாட்டுப் பாடலாம், கேட்கலாம். நன்கு யோசித்து ஆராய்ந்து பார்த்தால்தான் மனம் ஒரு இடத்தில் நிற்காமல் கண்டபடி அலைபாய்வது தெரிகிறது. "நாம் யார்? சமுதாயத்தில் நம் நிலை என்ன? நமக்குப் பிள்ளைகள், மனைவி, குடும்பம் இருக்கிறது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்று சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

நேற்று வெட்டித்தனமாக நேரத்தை செலவு செய்து இரவு அதிக நேரம் முழித்து இருந்ததால் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் இல்லாமல் என்னைப் போல் இப்போது தனிமையில் இருப்பவர்கள் தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறேன். 

சென்ற சனிக்கிழமை நடந்த இன்னொரு விசயத்தையும் இங்கே பகிர்வது அவசியமாகிறது. எனக்கு அதிக நண்பர்கள் இருப்பதால் ஆரம்பக் காலங்களில் இருந்தே நிறையப் பேசுவேன். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் என் பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். என் பேச்சைத்தான் மற்றவர்கள் கேட்பார்கள். அப்படித்தான் இருந்திருக்கிறேன். இருக்கிறேன். இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அலுவகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் பேசக்கூடாது. என்ன தேவையோ அதைத்தான் பேச வேண்டும். நான் அதிகம் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என்னால் பேசாமால் இருக்க முடியாது. என்ன செய்வது? 

மிகவும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். "கொஞ்ம் கொஞ்சமாக அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது" செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும், முயற்சித்துப் பார்க்க முடிவு செய்து செயலில் இறங்கினேன். இந்த நிலையில்தான் என்னையே அறியாமல் ஒரு விசயம் சென்ற சனியன்று நடந்தது. வெள்ளி இரவு மனைவியுடன் பேசிவிட்டு படுக்கும் போது இரவு மணி 10. காலை எழுந்த போது மணி 8.30. அன்று எனக்கு விடுமுறை. முதல் வாரம்தான் நண்பர்கள் வந்து சென்றார்கள். அதனால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். மூன்று வேளையும் புதிதாகச்(?) சமைத்துச் சாப்பிட்டேன். இரவு வந்தது. 10 மணிக்கு மனைவிடமிருந்து போன். அப்பொழுதுதான் அந்த விசயமே எனக்குத் தெரிந்தது. என்னவென்றால் ஏறக்குறைய 24 மணி நேரம் யாரிடமும் நான் பேசாமல் இருந்திருக்கிறேன். என்னையறியாமலேயே நடந்திருக்கிறது. நானும் யாரிடமும் பேசவில்லை. நினைத்து பார்த்தால் சந்தோசமே மிஞ்சியது. பேசினால்தான் பிரச்சனையே வருகிறது. பேசாவிட்டால் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. எனர்ஜியும் அநாவசியமாகச் செலவாவதில்லை. 

என்னிடமும்."பிடிக்காததனாலோ இல்லை விசயம் எதுவும் இல்லை என்ற காரணத்தினாலோ அன்று யாரும் என்னிடம் பேசவில்லை" என்ற விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். 

இந்தக் கட்டுரையை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருக்கிறேன். இதிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரே மருந்து தினமும் எழுதுவதுதான். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே? 


Jun 24, 2012

வானவில் பாடல் திறன் போட்டி 2012


மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் உள்ள 'வானவில்' என்கிற தமிழ் அலைவரிசை வருடா வருடம் பாட்டுப்போட்டி நடத்தி வருகிறது. 2001ல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பல நல்ல பாடகர்களை கண்டு பிடித்து மலேசியாவிற்கு அளித்துள்ளது. முதல் வருடம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் தலமை நடுவராக இருந்ததாக நினைவு. அவர் அளித்த வாக்கின்படி அப்போது முதல் பரிசு வாங்கிய பாடகிக்கு அவர் இசையமைத்த ஒரு படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடகி அப்போது மருத்துவம் படிக்கப்போவதாக சொன்னார். அதன் பிறகு அவரை எந்த மேடையிலும் பார்க்க முடியவில்லை.

இந்த வருடம் நிகழ்ச்சியின் 12 வருடம். இந்த முறை வித்தியாசமாக 11 வருடங்களில் வெற்றி பெற்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் போட்டியை நடத்தினார்கள். இந்த முறை நிரந்தர நடுவராக இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இருந்தார். மலேசியாவில் ஹரியுடன் நான் இன்னும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இங்கே மிகப் பிரபலம். ஒவ்வொருவரும் பாடி முடித்தவுடன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய மனிதர்.

பல வாரங்கள் நிகழ்ச்சி நடந்தது. பல சுற்றுகள். நேற்று இரவு ஃபைனல் நிகழ்ச்சி. நேரடி ஒளிபரப்பு. சிறப்பு விருந்தினராக பாடகர் பத்மபூஷண் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் வந்திருந்தார்கள். மற்ற நடுவர்களாக விஜய் ஜேசுதாஸ், பாடகி சுஜித்ரா மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பணியாற்றினார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. மூன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. மொத்தம் ஏழு போட்டியாளர்கள். ஆறு பாடகர்கள்  நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஃபைனலில் மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்றின் முடிவில் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டாவது சுற்றின் முடிவில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

மூன்றாவது சுற்றில் அந்த இருவரும் ஜேசுதாஸுடன் பாட வேண்டும். அதில் ஒருவர் வெற்றியாளர். மூன்று பேருக்குமே கார், விதவிதமான  பரிசுகள் மற்றும் பணம் வேறு வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார்கள்.. முதல் நிலை வெற்றியாளருக்கு மிக உயர்ந்த கார், ரொக்கம் 30,000 வெள்ளி மற்றும் சில பரிசுகள். மூன்றாவது சுற்று மிக சுவாரசியமாக இருந்தது. இறுதி சுற்றில் கணேசன் என்பவரும், ஏற்கனவே, 2002 என்று நினைக்கிறேன், முதல் பரிசு வாங்கிய அலிண்டாவும் ஜேசுதாசுடன் பாடினார்கள்.

முதலில் கணேசன், "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு" ஜேசுதாசுடன் பாடினார். அதில் ஒரு வரி வரும், "போடா எல்லாம் விட்டுத்தள்ளு 
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு". 

பாடிய கணேசன் மரியாதை நிமித்தமாக "போங்க எல்லாம் விட்டுத்தள்ளு" என்று பாடியது கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. பாடி முடித்ததும், ஜேசுதாஸ் அவரிடம் கேட்டார், "உங்கள் வயது என்ன?'

"32"

"என் வயது 72"

நம்பவே முடியவில்லை. இன்னும் இளமையாகவே உள்ளார். ஆனால் அவருடைய  அந்த அருமையான குரல் நேற்று அவரிடம் இல்லை. தான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் தான் என்றவர், எப்படி பயிற்சி செய்ய வேண்டும், எப்படி சாப்பாட்டு விசயத்தில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாக விவரித்தார்.

அடுத்து பாட வந்தவர் அலிண்டா. மிகச்சிறந்த பாடகி. நல்ல அழகி. மலேசியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இன்னேரம் அவர் இந்திய அளவில் மிகச்சிறந்த பாடகி ஆகியிருப்பார். அவர் நேற்று ஜேசுதாசுடன் இணைந்து ப்ரியா படத்தில் வரும் "என்னுயிர் நீதானே" என்ற பாடலை பாடினார். ஜேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் போதே "அதில் வரும் மலாய் மொழி வார்த்தைகள் அவ்வளவு நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் பாடியது. ஏதாவது தவறு இருந்தால் மன்னிச்சுக்கோமா?" என்று சொன்னது அவரின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டியது. சில இடத்தில் சரியாக எடுத்து பாட விட்டுவிட்டார். அலிண்டா வழக்கம் போல பின்னி எடுத்துவிட்டார்.பாடி முடித்ததும், ஜேசுதாஸ், ஜேம்ஸ் வசந்தனை பார்த்து, "ஜேம்ஸ் என் மார்க் என்ன?" என்று ஜோவியலாக கேட்டார். அதற்கு ஜேம்ஸ்,

"அந்த பாடகி அடுத்த ரவுண்ட் போறாங்க" என்று சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.

முடிவில் எல்லோரும் எதிர் பார்த்த படி மிக அதிக மதிப்பெண்கள் பெற்று அலிண்டா முதல் பரிசை வென்றார். இரவு 12 மணி வரை அனுபவித்து பார்த்தேன். அந்த மூன்றரை மணி நேர நிகழ்ச்சி அதற்குள் யுடியூபில் வந்து விட்டது. அதனுடைய லிங்கை கீழே தருகிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள். தமிழ்நாட்டில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கும் இந்த சிறிய நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள். இங்கு யாருமே பாட்டை நோட்டை வைத்துக்கொண்டு பார்த்து பாடுவதில்லை.


இந்த வீடியோவில் 50 நிமிசத்திலிருந்து ஒரு 5 நிமிடத்தை தவறாமல் பாருங்கள். முதல் சுற்றில் அலிண்டா பாடிய "நின்னைச் சரணடைந்தேன்" பாடலை கேளுங்கள். கண்கள் கலங்க நீங்கள் சொர்க்கத்தை நோக்கி செல்வது உறுதி.Jun 20, 2012

நிழலின் அருமை..."இதுக்கு பேர் சாம்பாரா?"

"என்ன இட்லி கல்லு மாதிரி இருக்கு"

"உருளைக்கிழங்கு பொறியல்ல உப்பு அதிகம்". 

"எண்ணைய் அதிகமா ஊத்தாம சமைக்கத் தெரியாதா?''

'இதெல்லாம் மனுசன் சாப்பிடுவானா?''

மேல உள்ள டயலாக் எல்லாம் கடந்த 13 வருடங்களில் தினமும் என் மனைவியிடம் நான் சொன்னவை. இது போல இன்னும் நிறைய சொல்லி இருக்கிறேன். நான் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் மோசம் என்பது தெரிந்தே வாழ்ந்து வருகிறேன். எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும். நிறைய நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, "சாப்பாட்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய்?" என்று.

உண்மைதான். ஆரம்ப காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் எத்தனை குறை சொன்னாலும் ஒரு நாளும் நான் சாப்பாட்டை வீணாக்கியதில்லை. ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டுவிடுவேன். உணவை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன்.

எல்லோரும் போல ஆரம்ப காலத்திலிருந்து அம்மாவின் சமையலையே அமிர்தமாக எண்ணி வாழ்ந்தவன். திருமணமான புதிதில் வேறுவகையான சமையலுக்கு மாற மிகவும் சிரமப் பட்டேன். பின் படிப்படியாக மனைவியின் சமையலுக்கு அடிமையாகிவிட்டேன். ஆனால் ஒரு நாள் கூட சமையல் நன்றாக இருந்தது என்று பாராட்டியதே இல்லை. இதற்கு காரணம் ஆண் என்கிற திமிரைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

இவ்வளவையும் நான் ஏன் இங்கே சொல்கிறேன். காரணம், பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக அனைவரும் இப்போது தமிழ் நாட்டில். இன்னும் சிறிது காலத்திற்கு இங்கே தனியாக இருக்க வேண்டிய சூழல். வெளியே சாப்பிடலாம் என்றால் எங்கும் நான் வெஜ் மயம். நான் எப்போதாவது சிக்கன் சாப்பிடுவதுண்டு. தினமும் சாப்பிட பிடிக்காது. அதனால் இப்போது நானே சமைக்க வேண்டிய நிலை.

நண்பர்கள் கூறிய அறிவுரையை கேளுங்கள்:

"அதெல்லாம் ரொம்ப ஈசி. அரை மணி நேரத்தில் சமைத்து விடலாம்"

"அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் எல்லாம் அவர்களாகத்தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்"

"ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக பழகிவிடும்"

"ஒரே வாரத்துல பாரு, நீ நல்ல குக் ஆயிடுவ"

நானும் இதெல்லாம் நம்பி சமைக்க ஆரம்பித்தேன். முதல் நாள் நான் வைத்த சாம்பாரை நானே சாப்பிட முடியவில்லை. ஒரே காரம். இட்லி வித்தியாசமான டிஸைனில் வந்தது. அது கூட பரவாயில்லை. ஒரே உப்பு. பின் மீண்டும் மாவு அரைத்து சேர்க்க வேண்டியதாகிவிட்டது.

இப்படித்தான் இப்போது சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். உப்பு, காரம், புளிப்பு எந்த சுவையும் இப்போது எனக்குத் தெரிவதில்லை. எல்லா சுவையும் ஒரே சுவை போல் தெரிய பழகிக் கொண்டேன். வெந்தாலும் வேகாவிட்டாலும், வேறு வழியில்லை, சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் சமைப்பது நான் அல்லவா?

இத்தனை வருடங்கள் என்னவெல்லாம் குறை சொல்லி இருப்பேன். ஒரு வார்த்தை என்னை மனைவி திருப்பி பேசியது கிடையாது. ஒரு முறையேனும் பாராட்டி இருந்தால் இந்த கஷ்டம் நான் அனுபவிக்க நேர்ந்து இருக்காது.

யாருமே அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிவதில்லை. அருகில் இல்லாத போதுதான் தெரிகிறது. அலுவலகத்தில் 10 மணி நேரம் வேலையும் பார்த்துக்கொண்டு, பின் மூன்று வேலையும் சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற கொடுமை போல் வேறு ஒன்றும் இருக்க முடியாது. சமைப்பது கூட பரவாயில்லை போல் இருக்கிறது. பின் பாத்திரங்களை கழுவது இருக்கின்றது பாருங்கள், அது போல ஒரு கஷ்டம் வேறு எதிலும் இல்லை.

எவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காக என் மனைவி இத்தனை வருடங்கள் சமைத்துப்போட்டிருப்பாள். பாராட்டாமல் விட்ட பாவி நான். அதற்காக இப்போது பாராட்ட வேண்டும் போல் உள்ளது.

"தேங்க்ஸ்டா செல்லம்"