புத்தகங்கள் வெளியீட்டு விழா:
தேதி : 04.01.2012
நேரம்: மாலை 6 மணி
இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்
வெளியீடு காணும் புத்தகங்கள்: 1. “தெர்மக்கோல் தேவதைகள்” - கேபிள் சங்கர்
2. "அழிக்கப் பிறந்தவன்" - யுவகிருஷ்ணா
2. "நான் கெட்டவன்" - என்.உலகநாதன்
வெளியீடு: "உ" பதிப்பகம்
வழக்கம் போல் நண்பர்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று "உ" பதிப்பகம் சார்பாக மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
விழாவைப் பற்றிய தகவல்களுக்கு நண்பர் கேபிள் சங்கரை அணுகவும்.
************************************************
சிறு வயதில் கனவு கண்டால் மிகவும் பயப்படுவேன். காரணம் என்னவென்றால், பெரும்பாலான கனவுகள் பலித்திருக்கின்றன. உறவினர் ஒருவர் அவர் கனவில் எருமை மாடு வந்ததாக கூறினார். அப்படி வந்தால் 'நாம் இறக்கப் போகிறோம்' என்று அர்த்தம் என்று சொன்னார். அவர் சொன்னபடியே சில மாதங்களில் இறந்தும் போனார். அதனால் பல இரவுகள் தூங்கப் போகும் முன் 'கனவில் எருமை மாடு வரக்கூடாது' என்று வேண்டிக்கொண்டே தூங்கி இருக்கிறேன். ஓரளவு பெரியவன் ஆனவுடன் தான் அதிலிருந்து விடுபட்டேன். பின் கனவுகளைப் பற்றி நிறைய படித்து தெரிந்து கொண்டேன். அதனால் பிரச்சனை இல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது மீண்டும் அதே கனவுப் பிரச்சனை. கடந்த சில நாட்களாக அதிகாலையில் மோசமான கனவுகள் வருகின்றன். திடுக்கிட்டு எழுந்துவிடுகிறேன். அதன் பிறகு என் தூக்கம் போய்விடுகிறது.
அதனால் கனவில் கண்டபடி நடந்துவிடுமோ? என்று பயமாக உள்ளது. சில கனவுகள் அப்படியே நடக்கக் கூடாதா? என்று ஆசையாகவும் இருக்கிறது.
************************************************
பாலகுமாரன் எழுதிய "தாயுமானவன்" நாவலை பல முறை படித்திருக்கிறேன். சில நாட்களுக்கு முன் மீண்டும் மீள் வாசிப்பு செய்தேன். இந்த நாவல் படிக்கும் போது எல்லாம் நான் வேறு உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்துவிடுகிறேன். கல்யாணத்திற்கு முன் இந்த நாவலை படித்ததற்கும், தற்போது படிப்பதற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்கிறேன். ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று இந்த நாவலை படித்தால் அறிந்து கொள்ளலாம். என்னைப் பொருத்தவரை பெண்களை மிகவும் உயர்வாக எழுதிய ஒரே எழுத்தாளர் பாலகுமாரன்தான். இதுவரை படிக்காதவர்கள், வாய்ப்பு கிடைத்தால் இந்த நாவலை உடனே வாங்கி படித்துவிடுங்கள். அதிலும் சேப்டர் 22லிருந்து 25 வரை படிக்கும் போது வேறு எதைப் பற்றியும் நினைக்காதீர்கள். அப்போதுதான் உங்களால் அதன் உள்ளே செல்ல முடியும். நான் இந்த சேப்டர்களை மட்டும் பல முறை படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு உணர்வுகள். நிறைய சமயங்களில் அழுதிருக்கிறேன். ஆனால், அது ஆனந்த கண்ணீர். மனைவியின் அருமையை அறிய அனைவரும் படிக்க வேண்டிய நாவல்.
************************************************
என் நண்பரிடம் இந்தப் புத்தக கண்காட்சியில் எனக்காக வாங்க சொன்ன புத்தகங்கள்:
01. இது ராஜபாட்டை அல்ல - நடிகர் சிவக்குமார்
02. மாதொரு பாகன் - பெருமாள் முருகன்
03. கரையாத நிழல்கள் - அசோகமித்ரன்
04. அம்மா வந்தாள் - தி ஜானகிராமன்
05. மரப்பசு - தி ஜானகிராமன்
06. மோகமுள் - தி ஜானகிராமன்
07. மெளனமே காதலாக - பாலகுமாரன்
08. திருப்பூந்துருத்தி- பாலகுமாரன்
09. பயணிகள் கவனிக்கவும்- பாலகுமாரன்
10. இரும்பு குதிரைகள்- பாலகுமாரன்
11. மெர்குரி பூக்கள்- பாலகுமாரன்
12. முன்கதை சுருக்கம் - பாலகுமாரன்
13. தலையணை பூக்கள் - பாலகுமாரன்
14. கள்ளி - வாமு கோமு
15. சாந்தாமணியும் இன்ன பிற காதல் கதைகளும் - வாமு கோமு
16. ஆதவனின் கதைகள்
17. வெட்டுப் புலி
18. ஆண்பால் பெண்பால்
19. பசித்த பொழுது - மனுஷ்ய புத்திரன்
20. கல்யாண்ஜி கவிதைகள்
21. முடியலத்துவம்- செல்வேந்திரன்
21. கோணல் பக்கங்கள் - சாரு நிவேதிதா
22. கற்றதும் பெற்றதும் - சுஜாதா
23. பதிவர்களின் அனைத்து புத்தகங்களும்
சுஜாதாவின் ஏறக்குறைய அனைத்து புத்தகங்களும் என்னிடம் இருப்பதால், இந்த லிஸ்டில் ஒரு புத்தகம் மட்டுமே இடம் பெறுகிறது. நண்பர்கள் வேறு என்னென்ன புத்தகங்கள் வாங்கலாம் என்று பரிந்துரைக்கவும்.
************************************************
அஷ்டமி, நவமி நாட்களில் எந்த நல்ல காரியங்களையும் செய்யக் கூடாது என்று சொல்கிறார்களே? அது ஏன்? என்னக் காரணம்? நான் முதலில் இதை எல்லாம் நம்பாமல்தான் இருந்தேன். ஆனால், சில சந்தர்ப்பங்களில் நான் வீட்டில் சொன்னதை கேட்காமல் நான் ஆரம்பித்த அல்லது செய்த எந்த செயலுமே அதன் குறிக்கோளை அடையவில்லை.
ஒரு முறை அஷ்டமி அன்று ஏர்போர்ட் சென்றோம். ஆனால், விமானத்தை தவறவிட்டோம். இன்னொரு முறை அஷடமி அன்று செல்ல வேண்டிய இடத்திற்கு மூன்று மணி நேரம் தாமதமாக சென்றேன்.
இன்னொரு முறை அஷ்டமி அன்று ஆரம்பித்த ஒரு செயல் மிகப் பெரிய பிரச்சனையில் கொண்டு விட்டது.
அமெரிக்காவிலோ அல்லது ஐரோப்பாவிலோ யாரும் அஷ்டமி, நவமி பார்ப்பதில்லை. அஷ்டமி நவமி அன்று விமானம் பறக்காமலா இருக்கிறது.
எனக்கு நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ, குடும்பத்தினருக்காக அவர்கள் சொல்படி நடக்க வேண்டி இருக்கிறது.
விசயம் தெரிந்தவர்கள் இதில் உள்ள உண்மையை தயவு செய்து விளக்குங்களேன்.
************************************************