Feb 28, 2012

ரேணு


"பிரிஞ்சிடலாமாங்க?" என்று கேட்ட என் ஆசை மனைவி ரேணுவை மிகவும் கவலையுடன் பார்த்தேன்.

அழகான அவள் முகம் களையிழந்து காணப்பட்டது. கண்கள் கலங்கியிருப்பது போல் இருந்தது. எனக்குப் பிடித்த நீல நிற சேலையில் இருந்தாள். தலை நிறைய மல்லிகைப்பூ. நான் ஆபிஸ் விட்டு வந்தவுடனே கவனித்தேன். அவளிடம் எப்போதும் இருக்கும் அந்த உற்சாகம் இல்லை. சாதாரணமான நாட்களில் நான் வீட்டிற்கு வந்தவுடன் ஓடி வந்து என்னை செல்லமாக கட்டி அணப்ப்பள். இன்று அந்த கொஞ்சல், துள்ளல் எல்லாம் இல்லை. நானும் ஏதோ மூட் அவுட்டில் இருக்கிறாள் போல என்று விட்டுவிட்டேன்.

குளித்து முடித்து சாப்பிட்டு முடிக்கும் வரையில் நான் ஒன்றும் அவளை கேட்கவில்லை. எதுவாக இருந்தாலும் அவளே சொல்லட்டும் என்று இருந்தேன். நான் சாப்பிட்டு முடித்து படுக்கை அறைக்குப் போய் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். ஒரு மணி நேரத்திற்கு பின் உள்ளே வந்தாள். அப்போதே அந்த வித்தியாசத்தை கவனித்தேன். படுக்கை அறைக்கு வரும் முன் சேலையை விடுவித்து நைட்டியில்தான் எப்போதும் வருவாள். இன்று சேலையுடன். அப்போதே எனக்கு 'சுருக்' என்றது.

வந்தவளை, "என்னம்மா? சாப்பிட்டியா?" என்ற போதுதான் அந்த கேள்வியைக் கேட்டாள். எனக்கு அந்த கேள்வியின் அர்த்தம் புரியவே இல்லை. என்னை விட்டு பிரியும் அளவிற்கு அவளுக்கு என்ன நடந்தது? என்ன ஆயிற்று அவளுக்கு?

ரேணு எனக்கு கிடைத்ததே ஒரு பெரிய கதை. ரேணு வேறு யாரும் அல்ல. என் நெருங்கிய நண்பன் ரமேஷின் தங்கை. சிறு வயதிலிருந்து பழக்கம். எல்லாரும் ஒன்றாகவே வளர்ந்தோம். ஒன்றாகவே படித்தோம், விளையாடினோம். எனக்கு ரேணு மேல் அப்போது எல்லாம் எந்த ஈடுபாடும் இருந்ததில்லை.

ரேணுக்கு கல்யாண வயது வந்தவுடன், வீட்டில் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார்கள். பார்க்கும் நல்ல இடங்களை எல்லாம், "வேண்டாம்" என மறுத்துக்கொண்டே இருந்தாள். யாரும் ரேணுவை வேண்டாம் என்று சொன்னதில்லை. 20 வயதுக்கே உரிய இளமையுடன் அழகாகவே இருந்தாள். ஒரு ஐந்து இடங்களை அவள் இப்படி மறுத்ததும், ஒரு நாள் ரமேஷ் அப்பா என்னைக் கூப்பிட்டு,

"டேய், ரேணு எந்த மாப்பிள்ளைய கூட்டி வந்தாலும் ஏதோ காரணம் சொல்லி வேணாம்ங்கறா. நாங்க எவ்வளவோ கேட்டும் எதுவும் சொல்ல மாட்டேங்கறா. நீ தான் அவ கிட்ட பேசி என்ன விசயம்னு சொல்லுடா. ஏதாவது லவ்வு கிவ்வுனு அசிங்கம் பண்ணிடப் போறா?"

"சரி அங்கிள். நான் பேசிப்பாக்கறேன்"

மெதுவாக ரேணுவின் அறைக்கதவை தட்டினேன். உடனே கதவைத் திறந்தவள் என்னை எதிர்பார்க்கவில்லை.

"என்ன நீங்க இங்க?" அவள் ஓரளவு பெரியவளானவுடன் என்னை எப்போதும் மரியாதையுடன்  அழைக்க ஆரம்பித்திருந்தாள்.

"என்ன ரேணு, அம்மா அப்பா, ரமேஷ் எல்லாம் இப்படி கவலைப் படறாங்க. என்னாச்சு உனக்கு? ஏன் எந்த மாப்பிள்ளையும் வேண்டாம்கற?"

"ஒண்ணும் இல்லை. சும்மாத்தான்"

"சும்மாத்தான்னா புரியலை. யாரையாவது மனசுல லவ் பண்ணறியா?"

"ஏன் சொன்னா அப்பாட்ட சொல்லி கல்யாணம் பண்ணி வைச்சிடுவீங்களோ?"

"உங்க அப்பாவுக்கு காதல் கீதல்னா பிடிக்காது. ஆனால் நீ உண்மையை சொன்னால் என்னால் உங்க அப்பாவை சம்மதிக்க வைக்க முடியும்"

"பேச்சு மாற மாட்டீங்களே?"

"அப்படின்னா, யாரையாவது.... சொல்லு ரேணு"

"ஆமாம்"

"யாரு சொல்லு?"

"உங்களை மாதிரி மரமண்டை இனி பொறந்துதான் வரணும். நானும் எவ்வளவு சந்தர்ப்பங்கள்ல உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணறேன். இப்படி இருக்கீங்களே?"

என்னால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. நிச்சயமாய் ரேணுவின் மனதில் இப்படி ஒரு எண்ணம் இருக்கும் என்று ஒரு துளி கூட நினைக்கவில்லை.

'என்ன சார், பதிலையே காணோம். போங்க பண்ணி வைக்கிறேன்னு சொன்னீங்கள்ல. ரேணு என்னை தான் விருபுறானு எங்க அப்பாட்ட பேசி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க"

எனக்கு சந்தோசம்தான் என்றாலும், அவர் அப்பா என்னிடம் பேசியதை நினைத்து ஒரு பயத்துடன்தான் அவரிடம் விசயத்தைச் சொன்னேன். யாரும் எதுவும் சொல்லவில்லை. உடனே ஒத்துக்கொண்டார்கள். இரண்டு வீட்டிலும் எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்த இரண்டு மாதங்களில் எங்கள் கல்யாணம் ஜாம் ஜாம் என்று நடந்தது.

தனி பங்களா. எல்லாவற்றிக்கும் வேலை ஆட்கள். மிகவும் சந்தோசமான வாழ்க்கை. எந்த குறையும் இல்லாமல் மிகவும் நிறைவான வாழ்க்கை.

ஒரு நாள் இரவு ரேணு என்னிடம், "என்னங்க, இந்த பக்கத்து வீட்டு பொண்ண பார்த்தீங்களா? ரொம்ப கஷடப்படுதுங்க. எப்பவுமே அவங்க வீட்டுல சண்டை தாங்க"

"ஆமாம்பா. அவளோட கணவன் சாதாரண கிளர்க்கா வேலைப் பார்க்குறான். ஆனா அந்தப் பொண்ணோ அளவுக்கு மீறி ஆசைப்படுது. அப்ப பிரச்சனை வரத்தானே செய்யும். அவனால எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தானே செலவு செய்ய முடியும்"

"இருந்தாலும். நம்மை மாதிரி..." என்று ஏதோ சொல்ல வந்தவள் என்னை இருக்கி அணைத்து கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள். நானும் அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை.

அதே போல் மீண்டும் ஒரு நாள், பக்கத்து வீட்டில் ஒரே சத்தம். இவளின் புடுங்கல் தாங்காமல் என்னவென்று போய் பார்த்தேன். அந்தப் பெண்ணை அவளின் கணவன் கண்டபடி திட்டிக்கொண்டிருந்தான். ஏதோ பணப்பிரச்சனை என்று தெரிந்தது. ரேணு உடனே, "பாவங்க. கொஞ்சம் பணம் கொடுத்து உதவுங்க. ரொம்ப அந்த பொண்ணு அழுவுது. நம்ம உதவுலனா அந்த பொண்ணு அவர் கூட சேர்ந்து வாழுமான்னு தெரியலை. ரொம்ப அந்தப் பொண்ண திட்டிட்டார் போல. இப்படியா ஒரு பொண்ண திட்டுவாங்க. பிரச்சனை தீர்ந்தோன எப்படி அவர்கூட அந்த பொண்னு இளிச்சிட்டு பேசுவா. அவர் திட்டினதுதானே நினைவு வரும்"

"அது அப்படி இல்லை ரேணு'

"இப்ப பணம் கொடுத்து உதவ முடியுமா? முடியாதா?"

இதற்கு மேல் பிரச்சனை வேண்டாம் என்று அவர்கள் வீட்டிற்கு சென்று பணம் கொடுத்துவிட்டு வந்தேன். இது நடந்த அடுத்த நாள், "ஏங்க இங்க பாருங்களேன்" என்று என் ரூமிற்கு ஓடி வந்தாள் ரேணு.

"என்னம்மா?"

"அங்க பாருங்க. நேத்து எவ்வளவு அந்த ஆள் திட்டினான். கொஞ்சம் கூட சொரணை இல்லாம எப்படி அவன் கூட உரசிட்டு போறா பாருங்க"

நான் மெல்ல சிரித்துக்கொண்டேன். பதில் சொல்ல நினைத்தாலும், சொல்லவில்லை. இந்த நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள் இரவுதான் ரேணு அந்தக் கேள்வியை என்னிடம் கேட்டாள்,

"பேசாம, நாம பிரிஞ்சிடலாமாங்க?"

"ஏண்டா இப்படி ஒரு கேள்வி கேட்கற. உனக்கு நான் என்ன குறை வைச்சேன். ஏதாவது நீ கேட்டு இல்லைனு சொல்லி இருக்கேனா? உன்னை எதுக்காச்சும் திட்டி இருக்கேனா?"

ரேணு நிதானமாக, "பிரச்சனையே அதாங்க. என்னை இப்படி தூக்கி வைச்சு கொஞ்சரது எனக்கு பிடிக்கலைங்க. காதல்ல பிரச்சனை வரும்னு நினைச்சேன். அதுவும் நல்லபடியா முடிஞ்சுது. கல்யாணம் ஆகி ஒரு வருசமாகப் போகுது. இன்னும் குழந்தை இல்லை. அதுக்கும் ஒண்ணும் சொல்ல மாட்டேங்கறீங்க. நான் ஏதாவது கோபப்பட்டாக் கூட என்னை திருப்பி திட்ட மாட்டேங்கறீங்க. எப்பவும் நீங்க என்னை திட்டறதோ கடிஞ்சு பேசறதோ இல்லை. பக்கத்து வீட்டுல பாருங்க தினமும் சண்டை போட்டுக்கறாங்க. ஆனா அதுக்கு அப்புறம் ஜாலியா சிரிச்சிட்டே வெளியே போறாங்க. அதான் வாழ்க்கை. ஊடல் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? எனக்கு பிடிக்கலைங்க. அதனாலதான், நான் என்ன கேட்கறேன்னா......

அவள் சொல்லிக்கொண்டே போகப் போக எனக்கு தலைச் சுற்றி மயக்கம் வருவது போல் இருந்தது.

Feb 16, 2012

எதை எழுதுவது?


கடந்த 31 நாட்கள் இந்தியாவில் இருந்துவிட்டு நேற்று தான் மலேசியா வந்தேன். போனது என்னவோ ஒரு முக்கியமான நிகழ்விற்கும், பிள்ளைகளை நல்ல பள்ளியில் சேர்ப்பதற்கும்தான். ஆனால், என்னுடைய அனைத்து விடுமுறை நாட்களும் அலுவலக வேலையிலேயே போய்விட்டது. இரண்டு தடவை சென்னைக்கும், இரண்டு தடவை மும்பைக்கும், ஒரு முறை ராணிப்பேட்டைக்கும் செல்ல வேண்டியதாகிவிட்டது. அதனால் என்னால் இணையப்பக்கமே வர இயலாமல் போய் விட்டது. இணையத்தில் படிக்காமலும் எழுதாமலும் இருந்தது மனதில் ஒருவித சோர்வை கொடுத்தது. ஒருவித ஏக்கம் மனம் முழுவதும் பரவியிருந்தது.

ஆனால் ஒரு மாதத்தில் பல நண்பர்களை சந்திக்க முடிந்தது. பலவிதமான மனிதர்களை சந்திக்க முடிந்தது. புத்தக கண்காட்சிக்கு ஒரே ஒரு நாள் நண்பர் கேபிளுடன் போய் வந்தேன். கிட்டத்தட்ட 40 புத்தகங்கள் வாங்கினேன். அங்கே நண்பர் யுவ கிருஷ்ணா, அதிஷா, பாலபாரதி, ரோமியோ, குகன், வேடியப்பன், சுகுணா திவாகர், கே ஆர் பி, நேசமித்திரன் மற்றும் சில நண்பர்களை சந்தித்தேன். கேபிளின் 'தெர்மோக்கோல் தேவதைகளும்' யுவாவின் 'அழிக்கப் பிறந்தவனும்' நன்றாக விற்றுக்கொண்டிருந்ததை நேரில் பார்த்து ஒரு பதிப்பாளர் என்ற முறையில் நிறைய சந்தோசப்பட்டேன்.

அப்போதுதான் ஒரு ஆர்வக்கோளாறில், டிஸ்கவரி பேலஸ் நண்பர் வேடியப்பனிடம் ஒரு கேட்க கூடாத கேள்வியைக் கேட்டேன்: 

"சார், 'நான் கெட்டவன்' எத்தனை புத்தகம் விற்றிருக்கிறது''

"இந்த கேள்விக்கு நான் உண்மையையைத்தான் சொல்ல வேண்டியிருக்கும்"

"சொல்லுங்கள்"

சொன்னார். இனி எந்த புத்தகமும் எழுத வேண்டாம் என்று முடிவெடுத்த தருணம் அது. 

கல்கி அலுவலகம் சென்றேன். நண்பர் அமிர்தம் சூர்யாவுடன் பேசிக்கொண்டிருந்தது ஒரு நல்ல சுவையான அனுபவம்.

பின் நண்பர்கள் அப்துல்லா, கேபிள், யுவ கிருஷ்ணா, அதிஷா ஆகியோருடன் ரெசிடன்ஸி டவரில் லஞ்ச் சாப்பிட்டேன். பல விசயங்களை பேசினோம். பல வித டென்ஷன்களுக்கு நடுவில் மனம் கொஞ்ச நேரம் லேசாக சந்தோசமாக இருந்தது.

இந்த ஒரு மாதத்தில் நான் சந்தித்த பல சுவையான அனுபவங்களை எழுத நினைத்திருந்தேன். ஆனால் இப்போது அந்த ஆர்வம் மிகவும் குறைந்துவிட்டது.

ஒரு நாள் எங்கள் ஊர் விநாயகர் கோவிலுக்கு சென்றிருந்தேன். பூஜையை பாதியில் நிறுத்திவிட்டு, குருக்கள் என்னிடம் ஓடி வந்தார்.

"சார் உங்கள் புத்தகம் 'வீணையடி நீ எனக்கு' படித்தேன். நீங்க நம்ம தெருவில பல வருடங்கள் குடி இருந்தது தெரியும். உங்களை நான் என்னவோ என்று நினைத்திருந்தேன். மிக உயர்ந்த இடத்தில் வைத்திருந்தேன். கதைகளை படித்ததும் உங்கள் மீது நான் வைத்திருந்த பிம்பம் சுக்கு நூறாக உடைந்துவிட்டது. அத்தனை காதல்களா உங்கள் வாழ்க்கையில்? ஒரு பெண்ணை விட்டு வைக்கவில்லையா நீங்கள்"

என்ன பதிலை நான் சொல்வது? 'என்னுரையை' அவர் சரியாக படிக்கவில்லை. கதைகளை கதைகளாக பார்க்காமல் அது அத்தனையும் என் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்கள் என்று அவர் நினைத்தாரே ஆனால் அதற்கு நான் என்ன செய்வது?

சாமி கும்பிடாமல் பாதியில் திரும்பிவிட்டேன்.

இன்னொரு நண்பர் சந்தித்தார். கதைகளைப் பற்றி மிக ஆர்வமாக பேசினார். "இது போல எழுத மிகுந்த துணிவு வேண்டும்" என்றார். கிளம்புகையில்,

"என்னைப் பற்றியோ என் வாழ்வில் நடந்தவைகளைப் பற்றியோ தயவு செய்து கதையாக எழுதிவிடாதீர்கள்" என்று சொல்லிவிட்டு ஒரு மாதிரி என்னைப் பார்த்துவிட்டு போனார்.

இவர்களை எல்லாம் நான் என்ன சொல்லி புரிய வைப்பது. என் மூன்றாவது புத்தகமான "நான் கெட்டவன்" புத்தகத்தின் சில பிரதிகளை எங்கள் ஊருக்கு கொண்டு சென்றிருந்தேன். கடைசியில் யாரிடமும் கொடுக்காமல் திரும்ப கொண்டு வந்துவிட்டேன்.

இன்னொரு முறை ஒவ்வொருவருக்கும் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க விருப்பம் இல்லை எனக்கு!