Mar 23, 2012

ஆனந்த விகடனுக்கு நன்றி!


இந்த சந்தோசத்தை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியவில்லை. அப்படிப்பட்ட உணர்ச்சியில் இருக்கிறேன். இந்த வார ஆனந்த விகடன் "என் விகடனில்" திருச்சி எடிஷனில் என்னுடைய வலைப்பூவின் அறிமுகம் வந்துள்ளது. நேற்று நண்பர்கள் சொல்லித்தான் தெரிந்து கொண்டேன். நண்பர் ரவிச்சந்திரன் சோமுவின் உதவியாலும், நண்பர் நந்தகுமாரின் உதவியாலும் நேற்று இரவுதான் என்னால் படிக்க முடிந்தது. ஆனந்த விகடனின் ரீச்சே தனிதான். நிறைய நண்பர்கள் தொலை பேசி வாயிலாகவும், மெயில் மூலமாகவும் விசாரிக்கிறார்கள். வெளி நாட்டில் வசிக்கும் லால்குடியை சேர்ந்த நண்பர்கள் ஆன்லைனில் ஆனந்த விகடனைப் படித்து விட்டு என்னை வாழ்த்துகிறார்கள். என்னைக் கொண்டாடுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது.நான் ஏழாவது படிக்கும் போதுதான் ஆனந்தவிகடன் எனக்கு அறிமுகமானது என்று நினைக்கிறேன். முதலில் அப்பாவுக்குத் தெரியாமல் படிக்க ஆரம்பித்தேன். பின் கல்லூரி படிக்கையில்தான் சுதந்திரமாக படிக்க முடிந்தது. அப்பா அனைத்து புத்தகங்களும் வாங்குவார். நாங்கள் கதைகளைப் படித்து படிப்பில் கோட்டை விட்டுவிடக்கூடாது என்பதற்காக சிறுவயதில் எங்களை பாடப் புத்தகங்களைத் தவிர மற்ற புத்தகங்களை படிக்க விடமாட்டார். ஆனால் நாங்கள் எப்படியாவது அப்பாவுக்குத் தெரியாமல் படித்துவிடுவோம். கல்லூரி படிக்கையில் யார் முதலில் ஆனந்த விகடனை படிப்பது என்பதில் பயங்கர போட்டி இருக்கும். என் மாமா ஒருவர்  வீட்டிற்கு வந்தால் அவர் கிளம்பும் போது ஆனந்த விகனை எடுத்து சென்றுவிடுவார். அப்போதுதான் புத்தகம் வந்திருக்கும். ஆனாலும் எடுத்து சென்றுவிடுவார்.வெகு நாட்கள் கழித்துதான் இந்த விசயத்தை நான் கண்டு பிடித்தேன். அதிலிருந்து நான் என்ன செய்வேன் என்றால், மாமா வந்தவுடனே ஆனந்த விகடனை எடுத்து மறைத்து வைத்துவிடுவேன். அவர் கேட்டால் புத்தகம் இன்னும் வரவில்லை என்று சொல்லி விடுவேன். அத்தனை வெறி எல்லோருக்குமே ஆனந்தவிகடனின் மேல் இருக்கும். அப்படிப்பட்ட பத்திரிகையில் நம் எழுத்து வராதா? என்று ஏங்கிய காலங்கள் உண்டு. அதன் காரணமாக 1985களில் நிறைய துணுக்குகள், கேள்விகள் எழுதி அனைத்து பத்திரிகைகளுக்கும் அனுப்பினேன். அப்போது என் எழுத்துக்கள் ஆனந்த விகடனிலும் வந்ததுண்டு. பின் நிறைய கதைகள் எழுதி அனுப்பினேன். எல்லாமே திரும்பி வந்துவிட்டது. பின் நான் எழுதுவதை நிறுத்திவிட்டேன்.

ஏற்கனவே முன் எழுதியிருந்தபடி, பல வருட இடைவெளிக்கு பின் 2009 எழுத ஆரம்பித்தவுடன், ஒரு கதை எழுதி ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன். அந்தக் கதை பிரசுரமானது. ஆனால் அது முழுகதையாக வராமல் ஒரு பக்கக் கதையாக வந்தது. அன்றிலிருந்து இன்று வரை முயற்சித்துக்கொண்டிருக்கிறேன், "எப்படியாவது ஆனந்த விகடனில் ஒரு ஐந்து பக்க கதை வர வைக்க வேண்டும் என்று" நிச்சயம் என் ஆசை விரைவில் நிறைவேறும் என்று எதிர்பார்க்கிறேன். பார்ப்போம்.

நான் நினைக்கும் அளவிற்கு ஒரு கதை ஆனந்த விகடனில் வந்தவுடன், என் அடுத்த ஆசை என்னவாக இருக்கும் என்றால், எப்படியாவது ஆனந்த விகடனில் "நானும் விகடனும்" பகுதியில் நானும் எழுத வேண்டும் என்பதாகத்தான் இருக்கும். நிச்சயம் அந்த ஆசையும் ஒரு நாள் நிறைவேறும்.

"முதலில் நம்பிக்கை வைப்போம். பின் முயற்சிப்போம். அதன் பின் அதன் இலக்கை அடைவோம்"

என் கனவு நிறைவேறும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்கிற நம்பிக்கையோடு மீண்டும் ஒரு முறை என் வலைப்பூவை அறிமுகப்படுத்திய ஆனந்த விகனுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.


Mar 22, 2012

கல்கியில்…


இந்த வார 25.03.2012 தேதியிட்ட கல்கியில் என்னுடைய மூன்றாவது சிறுகதை வெளியாகி உள்ளது. மிகுந்த சந்தோசத்தில் நான் இப்போது இந்த இடுகையை எழுதுகிறேன். இந்த கதை எனக்கு மிகவும் பிடித்த கதைகளுள் ஒன்று. ஆனால், சில நண்பர்களிடமிருந்து வரும் விமர்சனங்கள் என்னை சங்கடத்துக்கு உள்ளாக்குகின்றது. இதுவரை 42 சிறுகதைகள் எழுதி இருந்தாலும் இன்னும் நான் ஆரம்ப நிலை எழுத்தாளன்தான். அதனால் என்னை மிகப் பெரிய எழுத்தாளர்களுடன் ஒப்பிட்டு பாராட்டவும் வேண்டாம், திட்டவும் வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். என்னை கொஞ்சம் வளரவிடுங்கள்!அதே போல் சில நண்பர்களும், உறவினர்களும் நான் எழுதும் எல்லாக் கதைகளையும் என்னுடைய சொந்த கதைகளாகவே பார்க்கிறார்கள். எல்லாக் கதைகளும் எப்படி சொந்த கதையாக இருக்க முடியும்? ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், எப்படி உன் வாழ்வில் இத்தனை காதல்கள் வந்தது?என்கிறார். இவர்களுக்கு எல்லாம் நான் என்ன சொல்லி புரியவைப்பது? ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக எனக்குப் புரிந்துவிட்டது. அனைவரும் என் கதைகளை படிக்கிறார்கள். அனைவரையும் என் கதைகள் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கிறது. அதுதான் என் கதைகளுக்கு கிடைக்கும் வெற்றி என்று நான் நினைக்கிறேன்.

இதோ இப்போது என் கல்லூரி தோழர் ஒருவரிடமிருந்து இப்படி ஒரு மெயில் வந்தது இந்தக் கதையைப் பற்றி:

பால் மணம் மாறா பாலகன் கோபிபெண்

பால் மனம் அறியாது பாதை மாற, அதை
லால்குடி நாதன் தகைசால் தமிழில்,. கடைக்
கால் அறை அடியில் வெளிக்கொணர்தானே!
 சொல்லவே இல்ல! யாரு அது.. எந்த காலேஜு?

இவண்
 ஹரிஹரன்

அனைவராலும்  இப்போது கவனிக்கப்படுவதால் என் பொறுப்பு அதிகமாக ஆகிவிட்டதை உணர்கிறேன். இனிமேல் இன்னும் தரமான கதைகளை எழுத வேண்டும் என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

என் கதைகளை வெளியிடும் கல்கி நிறுவனத்திற்கும் என்னை தொடர்ந்து ஊக்கப்படுத்தும் நண்பர், எழுத்தாளர், உதவி ஆசிரியர் அமிர்தம் சூர்யா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.


Mar 16, 2012

மாதொரு பாகன்
சென்ற புத்தக கண்காட்சியில் கிட்டத்தட்ட 50 புத்தகங்களுக்கு மேல் வாங்கி இருப்பேன். எந்த புத்தகத்தை முதலில் தேர்ந்தெடுத்து படிப்பது என்பதில் எப்பொழுதும் போல் ஒரு குழப்பம். முதலில் வாமு கோமுவின், "சாந்தாமணியும் இன்னப் பிற காதல் கதைகளும்" படித்தேன். பின்பு சாருவின் எக்ஸைல். பின் என்னப் படிக்கலாம் என்று யோசித்த போது மாதொரு பாகன் புத்தகம் கண்ணில் பட்டது. அதன் அட்ட்டைப்படம் என்னை ஈர்க்கவே படிக்க ஆரம்பித்தேன்.

இது எழுபது ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை. இந்த மாதிரி எழுத்து நடை எனக்கு புதிது. முதலில் சில பக்கங்கள் படிக்க மிகவும் சிரமப்பட்டேன். பின் என்ன நடந்தது என்று எனக்கு நினைவில்லை. புத்தகத்தின் உள்ளே சென்றுவிட்டேன். படித்து முடித்து ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் என்னால் நாவலின் பாதிப்பில் இருந்து உடனே வெளியே வரமுடியவில்லை. இதோ ஒரு வாரம் கழித்துதான் இந்த நாவலை பற்றி எழுதிகிறேன்.

காளி - பொன்னா என்கிற இரண்டு பாத்திரங்களை சுற்றி நகரும் கதை. குழந்தை இல்லாதவர்களின் சோகங்களை நன்கு அறிந்தவன் நான். என்னை நண்பர்கள் கல்யாணத்திற்கு முன்பு, "உனக்கெல்லாம் எங்கே குழந்தை பிறக்கப் போகிறது" என்று ஓட்டுவார்கள். காரணம் அவர்களின் "அந்த" எந்த விசயத்திலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். ஆனால் உள்ளுக்குள் எப்போதும் அந்த பயம் இருந்து கொண்டே இருக்கும். கல்யாணம் ஆன புதிதில் நான் மனைவிடம் கூறுவதுண்டு, "நமக்கு ஒரு வேளை குழந்தை பிறக்காவிட்டால் தத்து எடுத்துக்கொள்ளலாம்".

இந்த நாவலை படிக்கும் போது, காளியும், பொன்னாவும் எப்படி எல்லாம் சமுதாயத்தால் அவமானப்படுத்த படுகிறார்கள் என்பதை அறியும் போது என்னை அறியாமல் கண்களில் தண்ணீர் வந்து, உடனே பூஜை அறைக்கு சென்று எனக்கு அருமையான இரண்டு குழந்தைகளை கொடுத்த ஆண்டவனுக்கு நன்றி கூறினேன். மனைவிக்கும்தான்.

குழந்தை பிறக்க என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறாள் பொன்னா. அதற்காக அவர் வேண்டாத தெய்வம் இல்லை. செய்யாத பிரார்த்தனைகள் இல்லை. இருந்தாலும் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. பொன்னா பிள்ளைவரம் வேண்டி அவள் வறடிக் கல்லைச் சுற்றும்போது நானும் மேலே மலை உச்சிக்கு சென்றுவிட்டேன். அவள் விழுந்துவிடக்கூடாது. என்னதான் காளி அருகில் இருந்தாலும், ஏதேனும் ஆகிவிட்டால் நம்மால் காப்பற்ற முடியாதா? என்ற பதபதைப்பு என்னுள் ஏற்பட்டது. அந்த அளவிற்கு அந்த காட்சி என்னை பாதித்துவிட்டது.

ஊரே மறுமணம் செய்ய சொன்னாலும், பொன்னாவின் மேல் உள்ள காதலால் காளி மறுக்கிறான். பொன்னாவும் காளியும் அன்னியோன்யமாக இருப்பதை பார்த்து பொறாமை வருகிறது. ஒரு முறை நான் அந்த அளவிற்கு என் மனைவியின் மேல் அன்பாக இருக்கிறேனா? என்ற சந்தேகம் எனக்குள் ஏற்பட்டது.. அப்படிப்பட்ட அன்போடு அவர்கள் வாழும்போதுதான், இரண்டு பேரின் அம்மாவும் சேர்ந்து அந்த "விசயத்தை" சொல்கிறார்கள்.

திருச்செங்கோடு கோவில் திருவிழாவின் பதினான்காவது நாள் அன்று, திருமணமாகியும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண்கள் அன்று இரவு அங்கே சென்று எந்த ஆண்களுடனும், அவர்களை சாமியாக நினைத்து உறவு கொள்ளலாம் என்றும் அதன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என்றும் ஒரு வழக்கம் இருக்கிறது என்று சொல்லி இரண்டு பேரின் அம்மாவும் பொன்னாவை அந்த திருவிழாவிற்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள் (அது எப்படி? குழந்தை பிறக்கவில்லை என்றால் ஆண்கள் மட்டுமே காரணமாக இருக்க முடியும்? - புரியவில்லை)

காளியின் அம்மா இந்த விசயத்தை காளிடம் நேரடியாக சொல்ல, மிகுந்த வேதனைக்குள்ளாகிறான் காளி. அந்த வருடம் அவன் ஊருக்கே செல்லாமல் இருந்துவிடுகிறான். அடுத்த வருடம் திருவிழா வரும்போது, எதேச்சையாக பொன்னாவிடம் சொல்கிறான்,"போன வருடம் உன் அம்மாவும் என் அம்மாவும் தனியே பேசிக்கொண்டது என்ன என்று கேட்டாயே? என்னத்தெரியுமா?" என்று சொல்லி விசயத்தை சொல்கிறான். அவளிடம் சொல்லிவிட்டு, அவள் என்ன சொல்கிறாள் என்று கவனிக்கிறான். முதலில் அவள், "இத்தனை வருடங்களாக அண்ணனும், நீங்களும் பதினான்காவது நாள் திருவிழாவுக்கு சென்றதெல்லாம் அதற்குத்தானா?" என்கிறாள். ஏதோ பதில் சொல்லி சமாளித்துவிட்டு, " உங்கம்மா எங்கமல்லாம் சொல்றாப்பல நீ சாமி மலை யேர்றனிக்கும் போறியா?" என்கிறான். 

அவள் கோபப்பட்டு முடியாது என்று சொல்வாள் என்று எதிர்பார்த்து அந்த கேள்வியை கேட்கிறான். ஆனால் அவளோ, 'இந்த கொழந்தச் சனியனிக்காக நீ போன்னு சொன்னா போறேன்" என்கிறாள். எதிர்பார்த்த பதில் வராததால் உடைந்து போகிறான். அதன் பிறகு தொண்டுப்பட்டியிலிருந்து இரவு நேரத்தில் வீட்டிற்கு சென்று அவளுக்கு தெரியாமல் அவளைப் பார்க்கிறான். லேசாக சந்தேக உணர்வெல்லம் வருகிறது. இருந்தாலும் அந்த அன்பு குறையவில்லை. 

அடுத்த வருட திருவிழாவின் போது பொன்னாவின் அண்ணன் அதே கேள்வியை கேட்கும் போது, "நீ உன் பொண்டாட்டியை அனுப்புவியா?" என்று கோபப்படுகிறான். 

அதன் பிறகு என்ன நடந்தது? காளி அவளை அனுப்பினானா? அவள் போனாளா?  என்பதை புத்தகத்தை வாங்கி படித்து அனுபவித்து தெரிந்து கொள்ளுங்கள். 

இவ்வளவு சீரியஸான நாவலில் நம்மை ஓரளவு ஆசுவாசப்படுத்துவது  நல்லுப்பையன் சித்தப்பா கேரக்டர்தான். அதுவும் ஒரு பஞ்சாயத்து சீனில் அவர் பேசுவதை நினைத்து நினைத்து வயிறு குலுங்க சிரித்தேன்.

ஆனால் கிளைமாக்ஸ் நெருங்குகையில் உடனே முடிவை சொல்லாமல் நிறைய கிளைக்கதைகளை சொல்லி ரொம்ப டென்ஷன் ஆக்கிவிட்டார் கதாசிரியர்.

கிளைமாக்ஸுக்கு படிப்பதற்கு முன் இப்படி ஒர் குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் பெருமாள் முருகனுக்கு அனுப்பினேன்:

"சார், தங்களின் நாவல் மாதொருபாகன் படித்துக்கொண்டிருக்கிறேன். இப்போது 30வது சேப்டரில் இருக்கிறேன். ஒரே டென்ஷனாக உள்ளது. பொன்னா திருவிழாவில் யாருடனும் செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் இப்போது ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்"

என் பிரார்த்தனை நிறைவேறியதா?  நாவலை படித்துப் பாருங்கள் தெரியும்.

புத்தகம்: மாதொருபாகன்
ஆசிரியர் : பெருமாள் முருகன் www.perumalmurugan.com
வெளியீடு : காலச்சுவடு
விலை : ரூ.140Mar 12, 2012

என்ன செய்து காப்பாற்றுவது?


நான்கு நாட்களாகவே இந்த வேதனையில் தவிக்கிறேன். 

மேலே படத்தில் உள்ள இந்த பறவைதான் அதற்கு காரணம். அது என்ன பறவை என்று எனக்குத் தெரியவில்லை. என் அலுவலகத்தில் என் அறைக்கு இடதுபுறம் உள்ள காலி இடங்களில் நிறைய மரங்கள் வைத்திருக்கிறோம். தொழிற்சாலையில் நுழைந்தவுடனே என் அலுவலகம் வந்துவிடும். எங்கள் பகுதி முழுவதும் நிறைய தொழிற்சாலைகள் இருந்தாலும் மரங்களுக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை. நாங்கள் கார்டனை பராமரிக்கவே நிறைய செலவு செய்கிறோம். குருவி போன்ற சில பறவைகள் மட்டும் அவ்வப்போது  இங்கே உள்ள மரங்களுக்கு வருவதுண்டு. மற்றபடி பெரிய பறவைகள் என்று எதையும் தொழிற்சாலை மரங்களில் காணமுடியாது.

இந்த குறிப்பிட்ட பறவை எப்படி எங்கள் அலுவலகம் பக்கம் வந்தது என்று தெரியவில்லை. அது வந்தது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை. வந்த இந்த பறவை என் அறையின் ஜன்னலுக்கு அருகே உட்கார்ந்து கொண்டது. அப்படி வந்து உட்கார்ந்து இருப்பதும் பெரியவிஷயம் இல்லைதான். ஆனால், அது என்ன செய்கிறது என்றால், "கூ க்கூ" என்று ஒரு விதமான குரலில் கத்துகிறது. அந்த குரல் என்னை கூப்பிடுவது போல் இருக்கிறது. அருகில் சென்று பார்த்தால், அதன் அலகால் கண்ணாடி கதவை கொத்துகிறது. பொதுவாக நாம் அருகில் சென்றால் எந்த பறவையும் பறந்துவிடும்தானே? ஆனால் இது பறக்காமல் என்னையே பார்க்கிறது. 

கொஞ்சம் கூட பயம் இல்லாமல் என்னையே பார்க்கிறது. என்னால் சரியான கவனத்துடன் வேலையில் ஈடுபட முடியவில்லை. முதல் நாள் நினைத்தேன், "நாளை காலை இங்கே இருக்காது. இன்று இரவு அது எங்காவது சென்று விடும்" என்று. ஆனால், அடுத்த நாள் காலை பார்த்தால் ஜம் என்று அதே இடத்தில் உட்கார்ந்து கொண்டு ராகம் பாடுகிறது. பக்கத்தில் சென்றால், கண்ணாடியில் கொத்துகிறது. அலுவலகத்தில் உள்ளவர்களை அழைத்து காண்பித்தேன். பார்த்தவர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள்.

பொதுவாக சுவற்றில் பல்லி சத்தம் கொடுத்தால், "பல்லியே உத்தரவு கொடுத்துவிட்டது" என்று சொல்வார்கள். அதே போல் ஒரு முறை நல்ல பாம்பு வீட்டில் நுழைந்து அம்பாள் படத்தின் மேல் சுற்றிக்கொண்டு நின்றது. உடனே எல்லோரும், "அம்பாளுக்கு ஏதோ குறை உள்ளது. அதான் செய்தி சொல்லி அனுப்பி இருக்கிறாள்' என்றார்கள். காகம் சத்தமிட்டால், "யாரோ விருந்தினர் வரப்போகிறார்கள் போல" என்று சொல்வார்கள், அதே போல் பூனை குறுக்கே போனால், "நல்ல சகுனம் இல்லை. இப்போ போகாதே" என்று பலவாறு சொல்வார்கள். 

அந்த வகையில் நண்பர் ஒருவர் உடனே "அந்த பறவை உனக்கு ஏதோ சேதி சொல்ல வந்திருக்கிறது" என்றார். என்ன செய்தியாயிருக்கும்? என்று ஒரே குழப்பம். ஒரு வேளை என் முன்னோர்கள் யாராவது பறவை வடிவில் வந்து எனக்கு ஏதேனும் செய்தி சொல்கிறார்களா? என்று தெரியாமல் குழம்பிப்போனேன். தொடர்ந்து நான்கு நாட்களாக ஒரே இடத்தில் இருந்து கத்திக்கொண்டிருக்கிறது. அது எப்போது எங்கே சென்று சாப்பிட்டு வருகிறது என்றும் தெரியவில்லை. ஆனால், ஒரே இடத்தில் அது இருப்பதால் ஏதோ அதில் விசயம் இருக்கிறது என்று மட்டும் என் உள் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. 

அது என்ன என்று பார்த்துவிடுவது என முடிவெடுத்து நானும் இன்னொருவரும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து மெதுவாக என் அறையின் பின்னால், ஜன்னல் இருக்கும் இடத்திற்கு அருகே சென்று பார்த்தோம். பார்த்து விட்டு அதிர்ச்சியில் உறைந்து போனோம்.

அலுவலகம் முழுவதிலும் கண்ணாடி ஜன்னல்கள் உண்டு. அதில் சன் கிளாஸ் பேப்பர் ஒட்டி இருக்கிறார்கள். பகலில் உள்ளே இருந்து வெளியில்  பார்த்தால் எல்லாம் தெரியும். ஆனால் வெளியில் இருந்து உள்ளே பார்த்தால் உள்ளே இருப்பவை எதுவும் தெரியாது. நான் அறையின் உள்ளே இருந்து பறவைக்கு அருகில் சென்று பார்த்தபோது, அது பறந்து போகாததற்கு காரணம், அதனால் என்னை பார்க்க முடியாததுதான். பின் ஏன் கண்ணாடியை கொத்துகிறது? ஏன் அந்த இடத்தை விட்டு செல்லாமல் கத்திக்கொண்டு இருக்கிறது?

காரணம் என்னவென்றால், அது கண்ணாடிக்கு அருகில் உட்காரும் போது உள்ளே இருப்பது எதுவும் தெரியாது. ஆனால், அதன் பிம்பம் தெளிவாகத் தெரியும். அது வந்து உட்கார்ந்தவுடன் அதன் பிம்பத்தை பார்க்கிறது. பார்த்தவுடன், இன்னொரு பறவை அங்கே இருக்கிறது என்று நினைத்து சத்தம் போட்டு கூப்பிடுகிறது. அது வராமல் போகவே அதனை கொத்தி பார்க்கிறது. பல நிலைகளில் கொத்திப்பார்க்கிறது. அதற்கு துணை என்று எதுவும் அங்கே இல்லாததால், அதன் பிம்பத்தை இன்னொரு பறவையாக நினைத்து அழைத்துக்கொண்டு அங்கேயே இருக்கிறது. அதற்கு எப்படி சொல்லி புரியவைப்பது என்று தெரியவில்லை. துணை இல்லாததால், வழி தவறி வந்த அந்த பறவை அங்கேயே இருக்கிறது. என்ன செய்து அதை காப்பாற்றுவது? 

நண்பர்களே உங்களுக்கு ஏதாவது வழி தெரிந்தால் சொல்லுங்கள்?

இதோ இந்த வரியை எழுதும்போது கூட அதன் சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது.


Mar 5, 2012

350வது இடுகை: வாக்கிங், யோகா, ஜிம் பற்றி...


இந்த கட்டுரையை படிக்கும் நண்பர்களின் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.

சிறுவயதிலிருந்தே உடல் நலனில் மிகுந்த அக்கரையுடன் இருப்பவன் நான். வாக்கிங் செல்லும் பழக்கம் அப்பாவிடமிருந்து ஏற்பட்டது. வீட்டில் உள்ள சிலரின் உடல் நல கோளாறுகளாலும், சில நண்பர்களின் உடல் சார்ந்த பிரச்சனைகளாலும், என் உடலை மிகுந்த ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடிவுசெய்தேன். 1994ல் வேதாத்திரி மகரிஷியின் எளிய முறை உடற்பயிற்சி கற்றுக்கொண்டேன். அதற்கு முன்பே சித்தர்கள் யோகாசனங்கள் செய்து வந்தாலும், தினமும் வேதாத்திரி மகரிஷியின் யோகாவும், சர்வாங்காசனமும், சக்கராசனமும் செய்து வந்தேன். 1996ல் இருந்து தினமும் அதிகாலையில் 45 நிமிடம் நடக்க ஆரம்பித்தேன். எப்படி என்றால், முதலில் நடை பெயற்சி சென்றுவிட்டு வந்து பின் குளித்து முடித்தவுடன் யோகாசனமும், காயகல்பமும் செய்து வந்தேன்.

அதோடு நிற்கவில்லை. சில உறவினர்களின் மரணமும், நண்பர்களின் மரணமும் என்னை மிகுந்த யோசனைக்குள்ளாக்கியது. வாழ்க்கையை பற்றிய பயத்தை ஏற்படுத்தியது. அதனால் 2001ல் இருந்து மாலை ஒரு மணி நேரம் ஜிம் செல்ல ஆரம்பித்தேன். ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரங்கள் உடல் நலத்திற்கே செலவானது. இப்படியே கிட்டத்தட்ட 17 வருடங்களாக தொடர்ந்து செய்து வருகிறேன். 1999 மே வரை நான் தனி ஆள். ப்ரச்சனை இல்லை. ஆனால், கல்யாணம் ஆன பின் சில மாதங்கள் இந்த பழக்கங்களால் என் மனைவி கொஞ்சம் எரிச்சலான சம்பவங்களும் நடந்தன. பின் என்னைப் பற்றி புரிந்து கொண்டு என் போக்கில் விட்டு விட்டார்கள். 

இது மட்டும் இல்லை. அப்பா ஓவ்வொரு திங்கள் கிழமையும் விரதம் இருப்பார். அதாவது ஞாயிறு இரவு 8 மணிக்கு சாப்பிட்டு முடித்தார் என்றால், அடுத்த நாள் இரவு 8 மணிக்குத்தான் சாப்பிடுவார். நடுவில், காபி அல்லது ஜீஸ் குடிப்பதுண்டு. அவரால் நானும் விரதம் இருக்க ஆரம்பித்தேன். தீபாவளி, பொங்கல் திங்கள் கிழமை வந்தால் கூட எதுவும் சாப்பிட மாட்டேன். டிரிங்ஸ் பழக்கமோ அல்லது சிகரெட் பிடிக்கும் பழக்கமோ கிடையாது. நண்பர்கள் செந்தில், கவுண்டமணி ஜோக்குகளை சொல்லி கிண்டலடிப்பதுண்டு. எனக்கும் தெரியும், எந்த கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்கள் கூட சிறுவயதில் இறந்திருக்கிறார்கள் என்று. அது அவர்களின் கர்மா என்றே நான் நினைத்துக்கொள்வேன்.

ஆனால் நண்பர்கள் என்ன சொன்னாலும், நான் கடுமையாக அனைத்தையும் முறைப்படி கடை பிடித்ததால் உடல் நிலை நன்றாக இருந்தது. இருக்கிறது. ஆனால், பதவி உயர்வு வந்தவுடன் நிறைய மீட்டிங் அட்டெண்ட் செய்ய வேண்டி வந்தது. எல்லா மீட்டிங்களும் திங்கட் கிழமையே வந்தது. ஒரே நாளில் ஆறு மீட்டிங் அட்டெண்ட் செய்ய வேண்டிய சூழ்நிலைகளில், என்னால் சாப்பிடாமல் இருக்க முடியவில்லை. அதனால், இந்த திங்கள் கிழமை விரதம் சில வருடங்களுக்கு முன்னால் என்னை விட்டுச் சென்றது.

போன வருடத்தில் ஒரு நாள். நிறைய வேலை, டென்ஷன் காரணமாக வெறுப்பின் உச்சக்கட்டத்தில் இருந்தேன். வாக்கிங், யோகா செய்துவிட்டு ஆபிஸ் வந்தால், இங்கே TPM எக்ஸர்சைஸ் வேறு. இதனால் ஒரு நாள் பயங்கர யோசனை ஏற்பட்டது. எதற்காக இவ்வளவும் செய்ய வேண்டும். ஏன் வாழ்க்கையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கக்கூடாது? என்று நினைத்தேன். அதன் விளைவு காலையில் யோகாவை கட் செய்துவிட்டேன். அதற்கு முன் ஜிம்மை விடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் என்னால் விடமுடியவில்லை.

வொர்க் அவுட் செய்வதனால் ஏற்படும் அந்த உடல் வலி இல்லாமல் என்னால் தூங்க முடியவில்லை. பல வருட பழக்கம். அதனால்தான் யோகாவை விடும்படி ஆகிவிட்டது.

இவ்வளவு கஷ்டப்பட்டு அனைத்தையும் செய்ய வேண்டுமா? என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இத்தனை வருடங்களாக நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவைகள்தானே காரணம். அதுவும் இல்லாமல் தினமும் உடற்பயிற்சி செய்பவர்களால்தான் அந்த சந்தோசத்தை உணர முடியும். இத்தனை வருடங்களாக கமபனியில் MC எடுக்காத ஒரே ஆள் நான் தான். "எல்லோரும் ஒரு நாள் போகிறவர்கள்தானே?" என்ற கேள்வி எழலாம். ஆனால் போவது பிரச்சனை இல்லை. இருக்கும் வரை ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா?

இப்போது என் பிரச்சனை என்னவென்றால், சில நண்பர்கள், "நீ யோகாவை விட்டது தவறு. இந்த வயதிற்கு அப்புறம், நீ யோகாவும், தியானமும்தான் அதிகம் செய்ய வேண்டும். ஜிம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை" என்கிறார்கள்.

ஆனால் எனக்கோ ஜிம்மை விட மனசில்லை. காலையில் வாக்கிங் மட்டும்தான் என்ற முடிவில் இருக்கிறேன். ஏனென்றால் இரவில் நிறைய படிப்பதால் என்னால் அதிகாலை 5.30 மணிக்கு முன் எழ முடியவில்லை.

அதனால், மாலையில் ஜிம் செய்வதா இல்லை யோகாவும், தியானமும் செய்வதா? என்று ஒரே குழப்பமாக இருக்கிறது. 

யாரேனும் எனக்கு நல்ல ஆலோசனைகள் தர முடியுமா?

ப்ளீஸ்!


Mar 2, 2012

இது போதும் எனக்கு!


196X பிப்ரவரி  மாதம் 28ம் தேதி என்று நினைக்கிறேன். தாத்தா மரண படுக்கையில். தாத்தாவிற்கு அப்போது 85 வயதுக்கு மேல் என்று நினைக்கிறேன். அம்மா அப்போது நிறை மாத கர்ப்பிணி. அப்பாவிற்கு தனக்கு முதலில் பிறந்த மூன்றும் பெண்ணாக பிறந்துவிட்டதில் சிறிது வருத்தம். நான்காவதாக பிறப்பதாவது ஆண்பிள்ளையாக இருக்காதா? என்று ஆசை. அப்போது தாத்தா அம்மாவைக் கூப்பிட்டு, "கவலைபடாதம்மா. இந்த முறை உனக்கு ஆண்பிள்ளைதான்" என்று கூறி இருக்கிறார். ஆனால் அதே நாள் தாத்தா இறைவனடி சேர்ந்துவிட்டார். வீட்டில் அனைவரும் துக்கத்தில்.

ஆனால், தாத்தா சொன்னபடியே மார்ச் 2ம் தேதி அம்மா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்கள். அப்போது பிறந்த அந்த குழந்தைதான் இப்போது வளர்ந்து பெரியவனாகி இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் வரையில் பிறந்த நாளை அப்பா வெகு சிறப்பாக கொண்டாடிய நினைவு இருக்கிறது. அதன் பிறகு வந்த பிறந்த நாட்கள் எல்லாம் அம்மா என்னை கோயிலுக்கு கூட்டிப்போனது, அப்பா புது சட்டை வாங்கி வரும் வரை வீட்டின் வாசலிலேயே காத்திருந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. பள்ளி படிக்கையில், கல்லூரி படிக்கையில் சில நண்பர்களின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் போது எல்லாம் கொஞ்சம் பொறாமை ஏற்படும், "ஏன் நம் வீட்டில் இப்படி எல்லாம் கொண்டாடுவதில்லை?" என்று.

திருமணம் ஆன பின் வாழ்க்கையே அடியோடு மாறிவிட்டது. என் வீட்டில் என் அப்பாவின் பிறந்த நாளைத்தவிர எனக்கு யாருடைய பிறந்த நாளும் நினைவில் இருந்ததில்லை. அதுவும் அப்பா பொங்கல் அன்று பிறந்ததால், அவரின் பிறந்த நாள் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால் என் தோழியோ (மனைவிதான்) என் வீட்டில் உள்ளவர்களின் பிறந்த தினங்கள், கல்யாண நாட்கள், அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் பிறந்த நாட்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்து அனைவருக்கும் தொலை பேசியில் வாழ்த்து சொல்லி அவர்களை சந்தோசப்படுத்துவாள்.

பின் என் தோழியின் பிறந்த நாளையும், என் பிள்ளைகளின் பிறந்த நாட்களையும் நன்றாக சந்தோசமாக கொண்டாட ஆரம்பித்தேன். பழக்கம் அவ்வளவாக இல்லாததால் என் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் கூடுமான வரை புது சட்டையாவது அன்று போடுவது வழக்கம்.

என் அப்பாவின் ஒரு பிறந்த தினைத்தில் ஒரு மரபுக்கவிதை எழுதி அவரின் அலுவலகத்திற்கு அனுப்பினேன். அப்பாவிற்கு ஏகப்பட்ட சந்தோசம். வெகு நாட்கள் அந்த கவிதையை தன்னுடைய பையிலேயே வைத்திருந்தார்.

அப்பாவின் மறைவிற்கு பிறகு ஒவ்வொரு மார்ச் 1 ஆம் தேதி இரவும் சன் டிவி பார்க்கும் போது சந்தோசமும் வருத்தமும் சேர்ந்து வரும். அன்று தளபதி ஸ்டாலின் பிறந்த நாளாகையால் அவர் கலைஞரிடமும், அவரின் அம்மாவிடம் வாழ்த்து பெறுவதை காண்பிப்பார்கள். கட்சி வேறுபாடின்றி அந்த காட்சியை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும். உடனே என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?

சமீபத்தில் ஊரில் இருந்த போது என் நண்பர் நந்தகுமார் ஒரு அருமையான புது கூலிங் கிளாசை காண்பித்து, "எப்படி இருக்கிறது உலக்ஸ்?" என்றார்.

"அருமையாக இருக்கிறது. எப்போது வாங்கினீர்கள்?" என்றேன்.

"இன்று என் பிறந்த நாள். அதற்காக என் மனைவி எனக்கு வாங்கிக்கொடுத்த கிஃப்ட்" என்றார். 

வீட்டிற்கு வந்தவுடன் என் தோழியிடம் விசயத்தை சொல்லி, "என்றாவது நீ எனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி கொடுத்திருக்கின்றாயா?" என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தேன்.

அவரின் முகத்தில் சிரிப்பு மறைந்து சோகம் அப்பிக்கொண்டது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சொன்னார்,

"உங்கள் நண்பரின் மனைவி ஆசிரியராக வேலை பார்க்கிறார். கையில் அவருக்கென்று பணம் வைத்திருக்கிறார். அதனால் அவரால் அவரின் கணவருக்கு கிஃப்ட் வாங்கித் தர முடிகிறது. ஆனால் நான் என்ன செய்வது? எல்லாவற்றிற்கும் உங்களையே நாட வேண்டியுள்ளது. என் கையில் எங்கே காசு இருக்கிறது? உங்களிடமே பணம் வாங்கி உங்களுக்கெ கிஃப் வாங்கித்தர முடியுமா என்ன?"

எனக்கு சுளீர் என்று உண்மை உரைத்தது. அவர் சொல்வது உண்மைதான். அப்பா சம்பளம் வாங்கி வந்தவுடன் சம்பளக் கவரை அப்படியே அம்மாவிடம் கொடுப்பார். பின் அம்மாவிடமிருந்து தினமும் செலவுக்கு பணம் வாங்கிச்செல்வார்.

ஆனால் இப்போது அப்படி இல்லையே? சம்பளம் பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகிறது. எல்லா செலவுகளுக்குமே கிரெடிட் கார்ட்தான் உபயோகிக்கிறோம். பர்சில் பணம் இருப்பதே அரிதாக உள்ளது. இதில் எப்படி அவர்களிடம் நான் பணம் கொடுப்பது? வாழ்க்கை முறை எப்படி மாறிவிட்டது பாருங்கள்? நான் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் கூட அவர்களால் அந்த சந்தோசத்தை உணரமுடியவில்லையே? ஏனென்றால் அவர்கள்தான் பணத்தையே கண்களில் பார்ப்பதில்லையே?

இதை என்னவென்று சொல்வது? நம் பழக்க வழக்கம் மாறிப்போனதை சொல்வதா? இல்லை ஆணாதிக்கம் என்பதா? என்னதான் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாம் வாங்கி கொடுத்தாலும், அவர்களுக்கென்று  தனியாக பணம் இல்லை என்றால் எப்படி..? 

எது எப்படியோ! இன்று காலை எழுந்து வாக்கிங் போய்விட்டு வந்து, குளித்து விட்டு, பூஜை அறையில் இருந்து வெளியே வந்த என்னை அழைத்து தோழியும், என் மகளும் மற்றும் மகனும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒரு மிகப்பெரிய கிஃப்டை கொடுத்து என்னை திக்குமுக்காட செய்துவிட்டார்கள்.

தோழிக்கோ கார் ஓட்டத் தெரியாது, தனியாக கடைக்குச் சென்றதில்லை. எப்படியோ பணம் புரட்டி, யார் மூலமோ கிஃப்ட் வாங்கி எனக்கு கொடுத்த அந்த அன்பினை என்ன சொல்வது?

இதைவிட என்ன வேண்டும் எனக்கு?

நன்றிடா என் செல்லங்களா?