Mar 2, 2012

இது போதும் எனக்கு!


196X பிப்ரவரி  மாதம் 28ம் தேதி என்று நினைக்கிறேன். தாத்தா மரண படுக்கையில். தாத்தாவிற்கு அப்போது 85 வயதுக்கு மேல் என்று நினைக்கிறேன். அம்மா அப்போது நிறை மாத கர்ப்பிணி. அப்பாவிற்கு தனக்கு முதலில் பிறந்த மூன்றும் பெண்ணாக பிறந்துவிட்டதில் சிறிது வருத்தம். நான்காவதாக பிறப்பதாவது ஆண்பிள்ளையாக இருக்காதா? என்று ஆசை. அப்போது தாத்தா அம்மாவைக் கூப்பிட்டு, "கவலைபடாதம்மா. இந்த முறை உனக்கு ஆண்பிள்ளைதான்" என்று கூறி இருக்கிறார். ஆனால் அதே நாள் தாத்தா இறைவனடி சேர்ந்துவிட்டார். வீட்டில் அனைவரும் துக்கத்தில்.

ஆனால், தாத்தா சொன்னபடியே மார்ச் 2ம் தேதி அம்மா ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துவிட்டார்கள். அப்போது பிறந்த அந்த குழந்தைதான் இப்போது வளர்ந்து பெரியவனாகி இந்த கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறது.

நான் ஆறாம் வகுப்பு படிக்கும் வரையில் பிறந்த நாளை அப்பா வெகு சிறப்பாக கொண்டாடிய நினைவு இருக்கிறது. அதன் பிறகு வந்த பிறந்த நாட்கள் எல்லாம் அம்மா என்னை கோயிலுக்கு கூட்டிப்போனது, அப்பா புது சட்டை வாங்கி வரும் வரை வீட்டின் வாசலிலேயே காத்திருந்தது எல்லாம் நினைவில் இருக்கிறது. பள்ளி படிக்கையில், கல்லூரி படிக்கையில் சில நண்பர்களின் பிறந்த நாள் விழாவிற்கு செல்லும் போது எல்லாம் கொஞ்சம் பொறாமை ஏற்படும், "ஏன் நம் வீட்டில் இப்படி எல்லாம் கொண்டாடுவதில்லை?" என்று.

திருமணம் ஆன பின் வாழ்க்கையே அடியோடு மாறிவிட்டது. என் வீட்டில் என் அப்பாவின் பிறந்த நாளைத்தவிர எனக்கு யாருடைய பிறந்த நாளும் நினைவில் இருந்ததில்லை. அதுவும் அப்பா பொங்கல் அன்று பிறந்ததால், அவரின் பிறந்த நாள் நன்றாக நினைவில் இருக்கும். ஆனால் என் தோழியோ (மனைவிதான்) என் வீட்டில் உள்ளவர்களின் பிறந்த தினங்கள், கல்யாண நாட்கள், அவர்கள் வீட்டில் உள்ளவர்களின் பிறந்த நாட்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்து அனைவருக்கும் தொலை பேசியில் வாழ்த்து சொல்லி அவர்களை சந்தோசப்படுத்துவாள்.

பின் என் தோழியின் பிறந்த நாளையும், என் பிள்ளைகளின் பிறந்த நாட்களையும் நன்றாக சந்தோசமாக கொண்டாட ஆரம்பித்தேன். பழக்கம் அவ்வளவாக இல்லாததால் என் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாட எனக்குப் பிடிப்பதில்லை. ஆனால் கூடுமான வரை புது சட்டையாவது அன்று போடுவது வழக்கம்.

என் அப்பாவின் ஒரு பிறந்த தினைத்தில் ஒரு மரபுக்கவிதை எழுதி அவரின் அலுவலகத்திற்கு அனுப்பினேன். அப்பாவிற்கு ஏகப்பட்ட சந்தோசம். வெகு நாட்கள் அந்த கவிதையை தன்னுடைய பையிலேயே வைத்திருந்தார்.

அப்பாவின் மறைவிற்கு பிறகு ஒவ்வொரு மார்ச் 1 ஆம் தேதி இரவும் சன் டிவி பார்க்கும் போது சந்தோசமும் வருத்தமும் சேர்ந்து வரும். அன்று தளபதி ஸ்டாலின் பிறந்த நாளாகையால் அவர் கலைஞரிடமும், அவரின் அம்மாவிடம் வாழ்த்து பெறுவதை காண்பிப்பார்கள். கட்சி வேறுபாடின்றி அந்த காட்சியை பார்க்கும் போது சந்தோசமாக இருக்கும். உடனே என் அப்பாவை நினைத்துக்கொள்வேன். எல்லாவற்றிற்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?

சமீபத்தில் ஊரில் இருந்த போது என் நண்பர் நந்தகுமார் ஒரு அருமையான புது கூலிங் கிளாசை காண்பித்து, "எப்படி இருக்கிறது உலக்ஸ்?" என்றார்.

"அருமையாக இருக்கிறது. எப்போது வாங்கினீர்கள்?" என்றேன்.

"இன்று என் பிறந்த நாள். அதற்காக என் மனைவி எனக்கு வாங்கிக்கொடுத்த கிஃப்ட்" என்றார். 

வீட்டிற்கு வந்தவுடன் என் தோழியிடம் விசயத்தை சொல்லி, "என்றாவது நீ எனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி கொடுத்திருக்கின்றாயா?" என்று வேண்டுமென்றே கிண்டல் செய்தேன்.

அவரின் முகத்தில் சிரிப்பு மறைந்து சோகம் அப்பிக்கொண்டது. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சொன்னார்,

"உங்கள் நண்பரின் மனைவி ஆசிரியராக வேலை பார்க்கிறார். கையில் அவருக்கென்று பணம் வைத்திருக்கிறார். அதனால் அவரால் அவரின் கணவருக்கு கிஃப்ட் வாங்கித் தர முடிகிறது. ஆனால் நான் என்ன செய்வது? எல்லாவற்றிற்கும் உங்களையே நாட வேண்டியுள்ளது. என் கையில் எங்கே காசு இருக்கிறது? உங்களிடமே பணம் வாங்கி உங்களுக்கெ கிஃப் வாங்கித்தர முடியுமா என்ன?"

எனக்கு சுளீர் என்று உண்மை உரைத்தது. அவர் சொல்வது உண்மைதான். அப்பா சம்பளம் வாங்கி வந்தவுடன் சம்பளக் கவரை அப்படியே அம்மாவிடம் கொடுப்பார். பின் அம்மாவிடமிருந்து தினமும் செலவுக்கு பணம் வாங்கிச்செல்வார்.

ஆனால் இப்போது அப்படி இல்லையே? சம்பளம் பேங்க் அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகிறது. எல்லா செலவுகளுக்குமே கிரெடிட் கார்ட்தான் உபயோகிக்கிறோம். பர்சில் பணம் இருப்பதே அரிதாக உள்ளது. இதில் எப்படி அவர்களிடம் நான் பணம் கொடுப்பது? வாழ்க்கை முறை எப்படி மாறிவிட்டது பாருங்கள்? நான் லட்சம் லட்சமாக சம்பாதிக்கிறேன் என்று சொன்னால் கூட அவர்களால் அந்த சந்தோசத்தை உணரமுடியவில்லையே? ஏனென்றால் அவர்கள்தான் பணத்தையே கண்களில் பார்ப்பதில்லையே?

இதை என்னவென்று சொல்வது? நம் பழக்க வழக்கம் மாறிப்போனதை சொல்வதா? இல்லை ஆணாதிக்கம் என்பதா? என்னதான் அவர்களுக்கு தேவையான அனைத்தையும் நாம் வாங்கி கொடுத்தாலும், அவர்களுக்கென்று  தனியாக பணம் இல்லை என்றால் எப்படி..? 

எது எப்படியோ! இன்று காலை எழுந்து வாக்கிங் போய்விட்டு வந்து, குளித்து விட்டு, பூஜை அறையில் இருந்து வெளியே வந்த என்னை அழைத்து தோழியும், என் மகளும் மற்றும் மகனும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லி ஒரு மிகப்பெரிய கிஃப்டை கொடுத்து என்னை திக்குமுக்காட செய்துவிட்டார்கள்.

தோழிக்கோ கார் ஓட்டத் தெரியாது, தனியாக கடைக்குச் சென்றதில்லை. எப்படியோ பணம் புரட்டி, யார் மூலமோ கிஃப்ட் வாங்கி எனக்கு கொடுத்த அந்த அன்பினை என்ன சொல்வது?

இதைவிட என்ன வேண்டும் எனக்கு?

நன்றிடா என் செல்லங்களா?7 comments:

கோவை நேரம் said...

வாழ்த்துக்கள்

துளசி கோபால் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.


அந்த லட்சலட்சமா சம்பாரிச்சுக் காசையே கண்ணில் படாம வச்சுருக்கோம் பாருங்க அதை நானும் நினைச்சுக்குவேன்.

எல்லாம் இருந்தும் ஏழை போல் உணரும் தருணம் அது!

Unknown said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்!

அப்புறம், நீங்கள் சிங்கப்பூரில் இருந்தீர்களா?
சுஜாதாவைச் சந்தித்திருக்கிறீர்களா?

iniyavan said...

//கோவை நேரம் said...
வாழ்த்துக்கள்//

நன்றி நண்பா!

iniyavan said...

//துளசி கோபால் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.//

வாழ்த்திற்கு நன்றி மேடம்.

iniyavan said...

//ஜீ... said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஸ்!//

நன்றி ஜீ!

//அப்புறம், நீங்கள் சிங்கப்பூரில் இருந்தீர்களா?//

15 வருடங்களாக மலேசியாவில் இருக்கிறேன்.

//சுஜாதாவைச் சந்தித்திருக்கிறீர்களா?//

அந்த பாக்கியம் எனக்கு கிடைக்காமல் போய்விட்டது நண்பா!

sriram said...

Belated Birthday wishes Ulags.
Enjoy your B'day weekend with your family.
Regards
Boston Sriram