Apr 30, 2012

மிக்ஸர் 30.04.2012


மிக்ஸர் எழுதி அதிக நாட்கள் ஆகிவிட்டது. பலவிதமான பிரச்சனைகள் நிறைய நேரத்தை விழுங்கிவிடுகிறது. அப்படியே நேரம் கிடைத்தாலும் எழுதும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது. விரைவில் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் விடுபடுவேன் என்று நினைக்கிறேன். இனி நிறைய எழுதி பழக வேண்டும். அப்படி எழுதி பழகினால்தான் நிறைய கதைகள் பத்திரிகைகளில் எழுதும் அளவிற்கு திறமையை வளர்த்துக்கொள்ள முடியும்.

******************************************************************************

01. பணத்திற்கு அடிமையாகக் கூடாது. 02. எக்காரணத்தைக் கொண்டும் குடும்பத்தை விட்டு பிரிந்து வாழக்கூடாது (வேலை நிமித்தமாக) என்ற இந்த இரண்டு கொள்கைகளிலும் மிகவும் தீவிரமாக இருப்பவன் நான்.  பணம் என்ற போதையை விட்டு வெளியே வந்துவிட்டால் நிச்சயம் எல்லா பிரச்சனைகளிலிருந்தும் சுலபமாக வெளிவந்துவிடலாம். ஆனால் அப்படி வெளியே வருவது மிகவும் கஷ்டம். அதற்கு மனதை பக்குவப்படுத்துவது என்பது கடினமான விசயம். இந்த விசயத்தை நான் இங்கே குறிப்பிடுவதற்கான காரணம், நான் எவ்வளவோ முயன்றும் தடுக்க முடியாமல் குடும்பத்தை விட்டு தனியே வாழும் நிலை வந்துவிட்டது. தவறாக நினைக்க வேண்டாம். பிள்ளைகள் படிப்பிற்காக அவர்கள் தமிழ்நாடு செல்ல வேண்டி இருக்கிறது. நானும் போகலாம்தான். ஆனால் பல காரணங்களால் முடியவில்லை.  அப்படியானால் நான் இன்னும் முதல் கொள்கையை சரியாக கடைபிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்?

******************************************************************************

மலேசிய செல்போன் நிறுவனங்களின் சேவை ஒருவிதத்தில் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முக்கியமான தகவல்கள் என்றால் வாடிக்கையாளர்களுக்கு உடனே குறுஞ்செய்தியில் தெரிவிக்கின்றார்கள், உதாரணத்திற்கு நேற்று முன்தினம் யாரோ ஒருவர் ஒரு காரில் சிறு குழந்தையை கடத்திக்கொண்டு காரில் பறந்து விட்டார். உடனே, குறுஞ்செய்தி மூலமாக கடத்தல்காரனின் கார் என்ன கலர், என்ன வகையான கார், காரின் நம்பர் என்ன என்பது முதற்கொண்டு அனைத்து விசயங்களையும் உடனே நாடு முழுவதும் அனுப்பினார்கள். நிச்சயம் யாராவது ஒருவர் மூலம் அந்த கடத்தல்காரன் பிடிப்பட்டிருக்கக் கூடும். இதே போல் இந்தியாவில் செய்கிறார்களா? எனத் தெரியவில்லை.

******************************************************************************

சென்ற புத்தக கண்காட்சியின் போது வாங்கிய புத்தகங்களை எல்லாம் அடுத்த புத்தக கண்காட்சி வருவதற்குள் படித்து முடிக்க முடியுமா? தெரியவில்லை. கிடைக்கும் நேரத்தில் படிக்கிறேன். ஆனால் சில சமயம் நாம் தேர்ந்தெடுக்கும் புத்தகம் நமக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வத்தையே போக்கிவிடுகிறது. அப்படி ஒரு மோசமான அனுபத்தை தந்த புத்தகம் "வண்ணநிலவன் கதைகள்" . ஏண்டா வாங்கினோம் என்று ஆகிவிட்டது.

******************************************************************************

மெயிலில் வந்த ஜோக். பழசுதான் இருந்தாலும் உங்களுக்காக இதோ தமிழில்:

ஜார்ஸ் புஷ் இந்தியா வந்த போது அப்துல் கலாம் அவரை டீ பார்ட்டிக்கு அழைத்தாராம். புஷ் கலாமை கேட்டாராம், "உங்களுடைய ஆளுமை தத்துவம் என்ன?"

"என்னைச் சுற்றி எப்போதும் அறிவாளிகளை வைத்துக்கொள்வேன்" என்று பதில் அளித்தாராம் கலாம்.

"உங்களை சுற்றி இருப்பவர்கள் அறிவாளிகள் என்று உங்களுக்கு எப்படித் தெரியும்?"

"நான் அவர்களிடம் சரியான கேள்விகளை கேட்பேன். அதன் மூலம் அவர்கள் அறிவாளிகள் என்று தீர்மானிப்பேன்"

"எனக்கு அதை ஒரு முறை நிரூபித்து காண்பிக்க முடியுமா?"

உடனே புஷ் கவனித்துக்கொண்டிருக்கையில், கலாம் மன்மோகன் சிங்கிற்கு போன் செய்து, "மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர் என்னுடைய இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். உங்கள் அம்மாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. உங்கள் அப்பாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை உங்கள் அக்கா தங்கையோ அல்லது அண்ணன் தம்பியோ இல்லை. அப்படி என்றால் யார் அது?"

உடனே சிங் தாமதிக்காமல், "அது நான்தான்" என்றாராம்.

"சரியான பதில். நன்றி" என்று சொல்லிவிட்டு புஷ்யை பார்த்து "உங்களுக்கு இப்போது புரிந்ததா?" என்றார் கலாம்.

"யெஸ் மிஸ்டர் பிரசிடண்ட். மிகவும் நன்றி. நிச்சயம் நானும் இதை உபயோகித்துப் பார்ப்பேன்" 

வாசிங்டன் திரும்பியதும் உடனே புஷ்க்கு அதே போல் நாமும் யாரையாவது கேள்வி கேட்டுப் பார்க்க நினைத்து கண்டலிஸா ராயிடம்,

" நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" என்றாராம்.

"யெஸ். நிச்சயம் பதில் சொல்கிறேன். உங்கள் மனதில் தோன்றும் கேள்வி என்ன?"

" உங்கள் அம்மாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. உங்கள் அப்பாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை உங்கள் அக்கா தங்கையோ அல்லது அண்ணன் தம்பியோ இல்லை. அப்படி என்றால் யார் அது?"

உடனே குழம்பிப் போன ராய் கொஞ்ச நேரம் கழித்து, "நான் கொஞ்சம் யோசித்துவிட்டு பதில் சொல்லட்டுமா?"

புஷும் சரி என்றார். 

ராய் உடனே சீனியர் அமைச்சர்கள் அனைவரையும் மீட்டிங்கிற்கு அழைத்து அனைவரிடமும் அதே கேள்வியை கேட்கிறார். யாருக்கும் பதில் தெரியவில்லை. கடுப்பும் விரக்தியும் அதிகமாக உடனே, காலின் பவலை கூப்பிட்டு அவரிடமும், 

" உங்கள் அம்மாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. உங்கள் அப்பாவிற்கு ஒரு குழந்தை இருக்கிறது. ஆனால் அந்த குழந்தை உங்கள் அக்கா தங்கையோ அல்லது அண்ணன் தம்பியோ இல்லை. அப்படி என்றால் யார் அது?"

என்ற அதே கேள்வியை கேட்டாராம்.

ஒரு நொடி கூட தாமதிக்காத காலின் பவல், "அந்த குழந்தை நான்தான்" என்றாராம்.

சந்தோசமான ராய், டென்ஷனில் இருந்து விடுபட்டு உடனே வெள்ளை மாளிகைக்கு சென்று புஷ்யை பார்த்து, "எனக்கு விடை தெரிந்து விட்டது. அது யாருமல்ல. அந்த குழந்தை நம் காலின் பவல்" என்றாராம்.

உடனே புஷ், "இல்லை. நீங்கள் சொல்வது தவறு. அது மன்மோகன் சிங்" என்றாராம்.

(இந்த ஜோக் படித்து சிரிக்க மட்டுமே. யார் மனதையும் புண்படுத்துவதற்கு அல்ல)

******************************************************************************

என்னுடைய இந்த வார பாடல்:
Apr 18, 2012

அதோ மேக ஊர்வலம்...


நான் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்த போது வந்த படம் 'ஈரமான ரோஜாவே'. இளம் வயதிலேயே நாசர் அப்பா வேடத்தில் நடித்திருப்பார். சிவா மற்றும் மோகினி நடித்த படம். எனக்கு மிகவும் பிடித்த படம். காதல் மயக்கத்தில் வாழ்ந்து கொண்டிருந்த போது பார்த்த படம். அந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் "அதோ மேக ஊர்வலம்". பாடல் எந்த அளவிற்கு கேட்க இனிமையாக இருக்கிறதோ அதே அளவிற்கு பாடலை படம்பிடித்த விதம் இருக்கும் என நினைத்து ஏமாந்து போன பாடல் உள்ள படம் அது. எஸ் பி பாலசுப்ரமணியம் கேட்கவே வேணாம், அந்த அளவிற்கு இனிமையாக பாடி இருப்பார். மோகினிக்கு நடிக்கவும் வரவில்லை, நடனமும் வரவில்லை. இப்பொழுது சொல்லி என்ன பயன்?

இதோ அந்த பாடலின் வீடியோ உங்களுக்காக:


திடிரென இந்த பாடலை நேற்று கேட்டவுடன் பாடிப் பார்க்கும் ஆசை வந்து தொலைத்துவிட்டது. கொஞ்சம் வேறு மாதிரி பாட முயற்சித்து பார்த்தேன். ஓரளவிற்கு நன்றாக வந்துள்ளது. சில ஹையர் நோட்ஸ் சரியாக ரீச் ஆகவில்லை. ஒரு இடத்தில் லோயர் நோட்ஸில் சரியாக லேண்டாகவில்லை போலிருக்கிறது. நீங்கள் இந்த பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் குரலில் என்னிடம் எதிர்பார்க்க கூடாது. இந்த பாடலை என் குரலில் கேட்டு பாருங்கள்.

மீண்டும் சொல்கிறேன். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் ஜாலியாக என் இந்த பாடலை கேளுங்கள்:
Apr 17, 2012

வயது ஒரு பிரச்சனையா?


சமீபகாலமாக ஒரு வித்தியாசமான பிரச்சனையை சந்தித்து வருகிறேன். பல நேரங்களில் கோபமும், சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மேல் பரிதாபமும் வருகிறது. அப்படி என்ன பிரச்சனை? அதற்கு முன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லது நான் நினைவு படுத்த வேண்டிய விசயம் ஒன்று உள்ளது. என்னவென்றால், எல்லோராலும் எல்லாவிதத்திலும் சிறந்தவராக இருபத்தைந்து வயதிற்குள் வந்துவிட முடியாது. அதற்கு பல காரணங்கள் சொல்லலாம். உதாரணத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துக்கொள்வோம். நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும், உங்களால் அதிகபட்சம் மாவட்ட அளவில் லீக் மேட்ச் விளையாட முடியும் இல்லை என்றால் ரஞ்சி வரை போகலாம். அதற்கு மேல் போவது என்பது மிகவும் கஷ்டம். லீக் விளையாடுவதற்கே நீங்கள் வாழ்க்கையில் பல விசயங்களை இழக்க வேண்டியிருக்கும்.

அதே போல்தான் ஒவ்வொரு துறையும். நீங்கள் எந்த துறையில் பிரபலமாக வேண்டும் என்றாலும் திறமையுடன் கொஞ்சம் அதிஷ்டமும் வேண்டி இருக்கிறது. அதனால்தான் எல்லோராலும் சிறுவயதிலேயே சாதிப்பது கஷ்டம் என்றேன். நமது குடும்பம் சார்ந்த பிரச்சனைகளால் படிப்பைத் தவிர வேறு எந்த ஒரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நம்மால் உயர முடியாமல் போய்விடுகிறது. காரணம் பணம். நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால் முதலில் நல்ல பேட் வாங்க வேண்டும். பணம் வேண்டும். சாதாரண குடும்பத்து எந்த அப்பாவும் பேட் வாங்க பணம் கொடுக்க மாட்டார். நெட் பிராக்டிஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்குறிய இடம் நம் வீட்டின் அருகில் இருக்காது. தினமும் பல மைல்கள் போக வேண்டி இருக்கும். அதே சமயம் நன்றாக படிக்கவும் வேண்டும். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்ன செய்வான்? அனைத்தையும் நிறுத்திவிட்டு படிக்க மட்டுமே செய்வான். அதைத்தான் நானும் செய்தேன்.

அதனால் எனக்குள் உள்ளே தகித்துக்கொண்டிருந்த மற்ற விசயங்களை அடக்கி வைத்திருந்தேன். ஓரளவு வாழ்க்கையில் ஒரு நல்ல நிலமைக்கு வந்த பிறகு தானாகவே உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஆசைகளும் வெளிப்பட துவங்குகின்றன. அப்படித்தான் முதலில் கீ போர்ட் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நேரமின்மையால் முடியாமல் போய்விட்டது.

பின் வலைப்பூ ஆரம்பித்து எழுத தொடங்கினேன். எழுத ஆரம்பித்தபோது இருந்த வேகம் இப்போது இல்லை. காரணம் என்ன? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. நான் பைனான்ஸ் துறையில் இருப்பதால், எந்த காரியத்தை தொடங்கினாலும் உடனே மனம் "இதனால் நமக்கு என்ன பிரயோசனம்? என்ன லாபம்?" என கணக்கு பண்ண தொடங்கிவிடுகிறது. அதையும் மீறி எழுத தொடங்கினாலும் முன்பு போல் தினமும் எழுத முடியவில்லை. பத்திரிகைகளில் கதைகள் வரத்துவங்கியதும் உடனே மனம் அதில் லயிக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் எதையும் முதலில் வலைப்பூவில் போஸ்ட் செய்வது கிடையாது.

சரி, இப்போது விசயத்துக்கு வருகிறேன். நாம் எது செய்தாலும் உடனே நண்பர்கள் "இந்த வயதிலும் எப்படி உன்னால் முடிகிறது" என்று கேட்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு என்ன 80 வயதா ஆகிறது? 40 வயதை தொட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்றா அர்த்தம்? இன்னும் எவ்வளவோ இருக்கிறது சாதிக்க? நாம் ஏன் நமக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வேண்டும்? ஒவ்வொரு விநாடியையும் கொண்டாட வேண்டாமா? ஐயைய்யோ நமக்கு வயதாகிவிட்டது என்று வீட்டில் முடங்கி கிடக்க வேண்டுமா என்ன? 

என்னால் சும்மா இருக்க முடியாது? எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடிப்பார்த்தேன். முறையான பயிற்சி இல்லாததால் அந்த அளவிற்கு பர்பக்ஷன் இல்லை என்றாலும், நன்றாக இருந்ததாகவே நிறைய நண்பர்கள் பாராட்டினார்கள். ஆனால் சிலர் இந்த வயதிலும் எப்படி.....? ஒரு நண்பரின் மெயிலை இங்கே கொடுக்கிறேன் பாருங்களேன்:

Dear Ulags,
Happy to hear the lovely voice. But I wonder, at this age you are still in search of a moon. Are you o.k.?

இவருக்கு நான் என்ன பதில் சொல்வது? சிலரோ வெறுப்பின் உச்சத்திற்கு நம்மை ஆளாக்குகிறார்கள் எப்படி?

"நீங்க அனுப்பிச்சீங்களே MP3 பைல். ஆமாம் நான் கூட நீங்க எழுதி இசையமைத்த பாடல்னு நினைச்சேன். இளையராஜாவோட பாடல்னு தெரிஞ்சோன உடனே அணைச்சுட்டேன். கேட்கலை"

இன்னொரு நெருங்கிய நண்பரின் உரையாடல்:

"இந்த வயதில் உங்களுக்கு இதெல்லாம் தேவையா?"

"நான் என்ன சினிமால போயா பாடப் போறேன்?. அப்படி என்ன வயசு ஆயிடுச்சு. மன்மோகன் சிங் 86 வயசுலயும் ப்ரைம் மினிஸ்டரா இல்லையா?"

"அவர் என்ன உங்களை மாதிரி எழுதிட்டும் பாடிட்டுமா இருக்கார்?"

"பாடகர் மாணிக்க விநாயகம் சினிமால பாடும்போது 50 வயசை தாண்டிட்டார் தெரியுமா?"

"அவர் சின்ன வயசுல இருந்து பாட்டு கத்துட்டு வாய்ப்பு கிடைக்காம இருந்தார். வாய்ப்பு கிடைச்சோன பாடறார். உங்கள மாதிரி இல்ல? இந்த வயசுல இது தேவையா"

வயசுக்கும் நான் பாடிப் பார்ப்பதற்கும் என்னங்க சம்பந்தம்? எனக்கு புரியலை? இருந்தாலும் நான் பாடுவேன். என் வலைப்பூல லிங்க் குடுப்பேன். பிடிச்சவங்க கேட்கட்டும். பிடிக்காதவங்க ஒதுங்கி போகட்டும்.

சரிதானே?Apr 11, 2012

எனக்கும் ஒரு ஆசை!!!

அம்மா மிகவும் நன்றாக பாடுவார். பாட பாட கேட்டுக்கொண்டே இருக்கலாம். சிறு வயதில் அம்மாவின் தாலாட்டு பாடல்களை கேட்டுத்தான் வளர்ந்தேன். பள்ளியில் படிக்கும் போது நிறைய பாடல்கள் பாடியிருக்கிறேன். ஒருதலை ராகம் படத்தில் வரும் 'இது குழந்தை பாடும் தாலாட்டு' பாடலை பாடி ஆறுதல் பரிசு வாங்கியுள்ளேன். பல வருடங்கள் லால்குடியில் இருந்து திருச்சியில் உள்ள பள்ளிக்கும் சரி, கல்லூரிக்கும் சரி டிரெயினில்தான் சென்றேன். அப்போது எல்லாம் நண்பர்களின் விருப்பத்திற்கு இணங்க தினமும் பல பாடல்கள் டிரெயினில் பாடுவேன். 

கல்லூரியில் படிக்கும் போதும் சில போட்டிகளில் பாடி உள்ளேன். ஆனால் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லையாதலால் எந்த ஒரு பரிசும் வாங்கியதாக நினைவில்லை. எப்படி கிரிக்கெட் என் பெரும்பாலான இளமை வாழ்க்கையை அபகரித்துக்கொண்டதோ அதே போல சங்கீதமும் என்னை அரவணைத்துக்கொண்டது. ஆனால் படிப்பு என்ற ஒரு விசயத்தால் நான் ஆசைப்பட்ட எதிலும் கவனம் செலுத்தி பெரிய அளவில் வளர முடியவில்லை.

இருந்தாலும் என்னளவில் தினமும் பாடிக்கொண்டுதான் இருக்கிறேன். இரு வருடங்களுக்கு முன் எங்கள் அலுவலகத்தில் நடந்த ஒரு ஆண்டுவிழாவில் திடீரென பாடச் சொன்னார்கள். ஒரு பாடல் எந்தவித பயிற்சியும் இல்லாமல் பாடினேன். நண்பர்கள் நன்றாக இருந்ததாக சொன்னார்கள். இப்படி போய்க் கொண்டிருந்த என் வாழ்வில் திடீரென ஒரு ஆசை நேற்று இரவு தோன்றியது. ஒரு பாடலை கரோக்கி இசையுடன் பாடிப் பார்த்தால் என்ன? உடனே முயற்சி செய்து எந்தவித பயிற்சியும் இல்லாமல் இந்த பாடலை பாடினேன். நான் முதலில் பதிவு செய்த பாடலை கேட்ட என் பெண்ணும், பையனும்,

"டாடி, ரொம்ப ஹை லெவல்ல பாடறீங்க. இன்னும் கொஞ்சம் லோவா பாடணும். கொஞ்சம் எட்ட நின்னு பாடுங்கன்னு" பாடகர் ஹரிஹரன் (ஹரியுடன் நான்) போலவும், சூப்பர் சிங்கர் ஜட்ஜ்கள் போலவும் எனக்கு அட்வைஸ் செய்தார்கள். பிறகு மீண்டும் பாடி பதிவு செய்தேன். நன்றாக இருப்பதாக சொன்னார்கள், உடனே குறிப்பிட்ட சில நண்பர்களுக்கு அனுப்பி அவர்களின் அபிப்ராயத்தை கேட்டேன். அவர்களோ, "ஓரளவு நன்றாக இருப்பதாக" கூறினார்கள்.

அதனால் அந்த பாடலை உங்களிடமும் இப்போது பகிர்ந்து கொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், 'நான் முறைப்படி சங்கீதம் கற்றுக்கொள்ளவில்லை. முறையான பயிற்சி கிடையாது'. 

அதனால் யாரும் இதை சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டாம். ஜாலியாக எடுத்துக்கொள்ளுங்கள். இது நன்றாக இருக்கும் பட்டத்தில் இன்னும் சில பாடல்கள் பாடி பார்க்க ஆசை.

இதோ அந்த பாடல் உங்களுக்காக! ஆரம்பம் மெதுவாக ஆரம்பிக்கும். அதனால உடனே பாடலை நிறுத்திவிட வேண்டாம். முழுவதையும் கேட்டுவிட்டு என்னை திட்டலாம்.

Apr 6, 2012

பவர் கட்...அம்மா ரொம்ப நாளா ஊருக்கு போகும் போது எல்லாம் 'ஒரு இன்வெர்ட்டர் வாங்கி போடுடானு' சொல்லிட்டே இருப்பாங்க. நான் அதை பெரிதாக கண்டு கொண்டதில்லை. 

"இவ்வளவு பெரிய வீட்டுக்கு எத்தனை இன்வெர்ட்டர்மா போடறது?" என்று சொல்லிட்டே இருப்பேன்.

நான் வாங்காமல் இருந்ததற்கு இது மட்டும் காரணமில்லை. அப்போது எல்லாம் தினமும் இரண்டு மணி நேரம்தான் பவர் கட் இருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா? அதற்கு போய் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று நினைத்து வாங்காமல் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன்.

சென்ற ஜனவரியில் ஊரில் இருந்த போது இன்வெர்ட்டர் போடலாம் என நினைத்து நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்களோ,  "இப்போது அதிக நேரம் பவர் கட் ஆகிறது. அதனால் நிறைய நேரம் இன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதுவும் இல்லாமல் உங்கள் வீட்டிற்கு நிறைய வாங்கவேண்டுமே" என்று என்னை கலவரபடுத்தினார்கள்.

நான், "பரவாயில்லை. வாங்கிவிடலாம்" என்றேன்.

"அதிக நேரம் பயன்படுத்தினால் பேட்டரி விரைவில் கெட்டு போய்விடும். அதனால் பேட்டரி அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும்" என்றார்கள்,

"மாற்றிக்கொள்ளலாம். அதனால் என்ன?" என்றேன்.

"பேட்டரியின் விலை மிக மிக அதிகம்" என்று சொன்னதால் சென்ற முறையும் வாங்கி வைக்காமல் வந்துவிட்டேன்.

நேற்று இரவு. அதிக நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு வந்ததால் மிகுந்த அசதியில் என்னையறியாமல் இரவு 10 மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டேன். திடீரேன முழிப்பு வந்தது. வீட்டிற்கு வெளியே சத்தங்கள் கேட்டது. விடிந்து விட்டது போல என்று நினைத்து பாதி தூக்க கலக்கத்தில் எழுந்தேன். இன்று ஏன் அலாரம் அடிக்கவில்லை? இனி எப்படி வாக்கிங் போக முடியும் என்று நினைத்துக்கொண்டே அருகில் இருந்த செல்போனை பார்த்தால் இரவு மணி 1.30. ஏன் இப்போது முழிப்பு வந்தது? என்று யோசித்தால் ஒன்றும் புரியவில்லை பின் தான் என்னால் உணர முடிந்தது. பேன் ஓடவில்லை. ஏஸி ஓடவில்லை. தூக்க கலக்கத்தில் பவர் கட் என்பதை உணரவே பல நிமிடங்கள் பிடித்தது. 

மலேசியாவில் பவர்கட் என்பதே கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பவர் கட்டை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. அதனால்தான் தெருவில் மக்கள் நடமாட்டம் அந்த நேரத்திலும் இருந்தது. மலேசியாவில் உள்ள வீடுகள் நமது ஊரில் உள்ள வீடுகள் போல் இருக்காது. இங்கு வீடுகளின் அமைப்பு முறையே வேறு. நிறைய ஜன்னல்கள் இருக்கும். வீட்டின் நிலைக்கதவுக்கு அருகில் மிகப்பெரிய ஸ்லைடிங் டோர் இருக்கும். முழுவதும் கண்ணாடியில்தான் இருக்கும். பொதுவாக இரவில் அனைத்து ஜன்னல்களும் மூடி இருக்கும். அதுவும் இல்லாமல் மிகப்பெரிய கர்ட்டன் துணிகளால் கண்ணாடிகள் மூடி இருக்கும்.

அதனால் துளி காத்து உள்ளே வராது. பேன் மற்றும் ஏஸி இல்லாமல் தூங்கவே முடியாது. நேற்று அந்த கொடுமையைத்தான் அனுபவித்தோம். பிள்ளைகளும் அவர்கள் ரூமில் எழுந்துவிட்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பவர் இல்லை. பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு ஒரு வழியாக அதிகாலை 3.30க்கு பவர் வந்தது. பின் தூங்க ஆரம்பித்தோம். காலை 5.30க்கு எழ வேண்டிய நான் 7.30க்கு எழுந்தேன். தினசரி வாழ்க்கையே இன்று மாறிவிட்டது. காலையிலிருந்து தூக்க கலக்கமாகவும், ஒரே டயர்டாகவும் உள்ளது.

ஒரு மூன்று மணி நேர பவர்கட்டுக்கே இந்த நிலமை என்றால், தமிழ் நாட்டில் பல மணி நேர பவர்கட்டில் எப்படி எல்லாம் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று இப்போது உணர்கிறேன். நம் நாட்டு மக்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.

அடுத்த மாதம் ஊருக்கு செல்வேன். சென்றவுடன், முதல் வேலையாக எவ்வளவு செலவானாலும் வீட்டிற்கு இன்வெர்ட்டர் போட்டு விட வேண்டியதுதான்.


Apr 1, 2012

மூன்று...
வெள்ளிக்கிழமை மாலை வரை சனிக்கிழமையை எப்படி சந்தோசமாக கழிப்பது என்பதில் எங்களிடம் மூன்றுவிதமான திட்டங்கள் இருந்தது. பக்கத்தில் உள்ள பீச் ரிசார்ட்டில் ஒரு நாள் தங்குவது அல்லது போர்ட்டுக்கு சென்று கப்பலில் மூன்று மணி நேரம் கழிப்பது அல்லது 'மூன்று' படத்திற்கு செல்வது. வழக்கம் போல பிள்ளைகள் 'மூன்று' படம் செல்லலாம் என்றார்கள். நெட்டில் முன்பதிவு செய்யலாம் என்று முடிவெடுத்து பார்த்தபோது மொத்தமே மூன்று காட்சிகள்தான் இருந்தது. சரி படம் அவ்வளவுதான் என நினைத்து பீச் ரிசார்ட் செல்லலாம் என நினைத்து தூங்கிவிட்டோம்.

காலையில் லேட்டாக எழுந்து வந்தால் வீட்டில், "ஏங்க படம் இன்று உண்டு போல. இப்போதுதான் நெட்டில் பார்த்தேன். போலாமா?"

பின் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து அடுத்த ஒரு மணிநேரத்தில் கிளம்பினோம். போகும் வழியில் போலிஸ் செக்கிங். அதனால அரை மணி நேர தாமதம். அப்போதே ஏதோ மனதில் பட்டது. இருந்தாலும் ஒரு தைரியத்தில் படத்திற்கு சென்றுவிட்டோம். என் 15 வருட மலேசிய வாழ்க்கையில் தலைவர் சூப்பர் ஸ்டார் படத்திற்கு பிறகு நேற்றுத்தான் அத்தனை கூட்டத்தைப் பார்த்தேன். ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், டிக்கெட்டை கவுண்டரில் பெற அரை மணி நேரம் நிற்க வேண்டியிருந்தது.

படம் ஆரம்பித்தது. தனுஷ் எனக்கு ஓரளவு பிடிக்கும். ஸ்ருதி அவ்வ்வ்வ்வ்வ். அதிலும் மக்கள் எல்லாம் அவரின் நடிப்பை பற்றி ஓரளவு நன்றாக எழுதியிருந்ததால் நானும் நிறைய எதிர்பார்த்தேன். ஆனால் எனக்கு துளி கூட பிடிக்கவில்லை. ம்ம்ம்ம். அரத பழைய கதை. முதல் பார்வையில் காதல் ஏற்பட்டு, பள்ளியில் காதலித்து, பின் கல்லூரியிலும் காதலித்து பெற்றோர்கள் சம்மதிக்காததால், பாரில்(?) திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் தனுஷ்க்கு ஏதோ ஒரு வீணாப்போன நோய் வந்து ஸ்ருதியிடம் சொல்ல விரும்பாமல், முடிவில் தற்கொலை செய்துகொள்கிறார்.

இடைவேளை வரை படத்தை தாங்கி பிடிப்பது சிவ கார்த்திகேயன்தான். அவர் எங்கே பேர் வாங்கி விடுவாரோ என்று பயந்து அவரை இடைவேளைக்குப் பின் சிங்கப்பூருக்கு அனுப்பிவிட்டார்கள். சிவ கார்த்திகேயன் மிக முக்கியமான முடிவு எடுக்க வேண்டிய தருணம் இது. காமடி நடிகரா அல்லது ஹீரோவா??

பள்ளிக்காதல் வரை ஓக்கே. அதன் பின் வரும் கல்லூரிக்காதல் எல்லாம் ஏதோ அவசரகதியில் இருக்கிறது. ஒரு சாதாரண குடியிருப்பில் வாழும் ஸ்ருதியின் உடைகள் அவ்வளவு பணக்காரத்தனமாகவா இருக்கும்? எந்த நடுத்தரவர்க்கத்துப் பெண் பாருக்கு சென்று தண்ணி அடிக்கிறாள். இவர்கள் பாரில் கல்யாணம் செய்து கொள்வார்களாம்? பின் பெற்றோர்கள் அவர்களை ஏற்றுக்கொள்வார்களாம்?

ஸ்ருதி வாயை தொறந்தாலே கோபம் கோபமாக வருகிறது. அவர் அழுவதை பார்க்க சகிக்க முடியவில்லை. ஸ்ருதி என்னதான் கவர்ச்சியாக உடை உடுத்தி வந்தாலும் பார்க்க கொடுமையாக இருக்கிறது. ஒரு ஹீரோயினுக்கு உரிய எந்த தகுதியும் இல்லாத ஒரு நடிகை. அதை உணர்ந்துதான் ஐஸ்வர்யாவே சிவ கார்த்திகேயன் மூலமாக இப்படி ஒரு வசனம் வைத்திருக்கிறார் போல-

"ஒண்னும் பெரிசா இல்லைடா?"

தனுஷ் பிரபுவிடம் பேசுவது ரசிக்கும்படியாக இருந்தாலும், ஒரே மாதிரி மூன்று சந்தர்ப்பங்களில் பேசுவது எரிச்சலாகிறது. அதில் ஒரு வசனம் வரும்,

"மொக்கைப் போடாதப்பா!"

இதை தனுஷ் ஐஸ்வர்யாவை பார்த்து சொல்லி இருக்க வேண்டும்.

இன்னொரு வசனம், "அப்புறம் எப்படி சினிமா மாதிரி ஒரே பாட்டுல நான் கோடிஸ்வரனாக முடியுமா?"

அப்படி நினைச்சுத்தானே கொலை வெறிப்பாட்டை அந்த அளவிற்கு பிரபலபடுத்துனீங்க!

கொலைவெறி பாட்டுக்கு ஏகப்பட்ட டான்ஸ் வெர்ஷன் யூடியூப்ல இருக்கு. அதுல ஏதாவது ஒரு டான்ஸை போட்டு இருக்கலாம். படத்துல இருக்க டான்ஸை பார்க்க சகிக்கல.

இடைவேளைக்கு அப்புறம் உட்கார முடியவில்லை. அவ்வளவு மோசமான திரைக்கதை. இப்படியே பைத்தியக்காரத்தனமா இன்னும் மூன்று படம் நடித்தால் தனுஷ் அவ்வளவுதான். நல்ல நடிகர். அருமையா நடிச்சிருக்கார்னு இந்த முறை நான் சொல்ல விருமபலை. ஏன்னா ஏற்கனவே கண்டு கொண்டேன், புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படங்களிலேயே சொல்லியாகிவிட்டது.

படத்தின் ஆரம்ப சீனிலேயே தனுஷின் இறப்பை காண்பிப்பதால், படத்தின் கிளைமாக்ஸ் காமடி ஆகிவிட்டது. சோகத்தை வர வழைக்க கூடிய அந்த மரணம், தனுஷ் கத்தியை எடுத்து மீண்டும் வைக்கையில் ஜோக்காகிப் போய் மொத்த தியேட்டரும் சிரிக்கும்படி ஆகிவிட்டது.

தியேட்டரில் உள்ள அனைவருமே, "சீக்கிரம் செத்து தொலைடா" என்று சொல்வதை என் காதார கேட்டேன். டெக்னிக்கலாக பார்த்தோமானால், ஒளிப்பதிவு சுமார் என்றுதான் சொல்வேன். பின்னனி இசையும் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.

செல்வராகவன் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரும் பைத்தியக்கார மன நிலையிலிருந்து தப்பி வந்து ஒரு நல்ல ஆரோக்கியமான படம் எடுக்க வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். 

இப்படிப்பட்ட படத்தை கொடுத்துவிட்டு எப்படித்தான் வெள்ளி இரவு சன் மியூசிக்கில் படம் வெற்றி என்று வாய் கூசாமல் பொய் சொன்னார்கள் என்று தெரியவில்லை.

படம் முடிந்து வீட்டிற்கு கிளம்பினால் கடுமையான டிராபிக். கார் இஞ்ச் இஞ்சாக நகர்ந்து வீட்டிற்கு வந்து சேர மூன்றரை மணி நேரம் ஆனது. கடுமையான் டிராபிக். இங்கே அங்கே நகர முடியவில்லை. கோபத்தில் ஸ்டிரியங்கை ஓங்கி அடித்தேன். வீட்டில் எல்லோரும் என்னை ஒரு மாதிரி பார்த்தார்கள். பின் தான் படத்தின் பாதிப்பு என்று தெரிந்தது.

என் வாழ்நாளின் ஒரு நாள் நேற்று மிக மோசமாக கழிந்தது.