Apr 6, 2012

பவர் கட்...அம்மா ரொம்ப நாளா ஊருக்கு போகும் போது எல்லாம் 'ஒரு இன்வெர்ட்டர் வாங்கி போடுடானு' சொல்லிட்டே இருப்பாங்க. நான் அதை பெரிதாக கண்டு கொண்டதில்லை. 

"இவ்வளவு பெரிய வீட்டுக்கு எத்தனை இன்வெர்ட்டர்மா போடறது?" என்று சொல்லிட்டே இருப்பேன்.

நான் வாங்காமல் இருந்ததற்கு இது மட்டும் காரணமில்லை. அப்போது எல்லாம் தினமும் இரண்டு மணி நேரம்தான் பவர் கட் இருந்தது. ஒரு இரண்டு மணி நேரம் பவர் இல்லாமல் நம்மால் இருக்க முடியாதா? அதற்கு போய் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்று நினைத்து வாங்காமல் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தேன்.

சென்ற ஜனவரியில் ஊரில் இருந்த போது இன்வெர்ட்டர் போடலாம் என நினைத்து நண்பர்களிடம் விசாரித்தேன். அவர்களோ,  "இப்போது அதிக நேரம் பவர் கட் ஆகிறது. அதனால் நிறைய நேரம் இன்வெர்ட்டர் பயன்படுத்த வேண்டி இருக்கும். அதுவும் இல்லாமல் உங்கள் வீட்டிற்கு நிறைய வாங்கவேண்டுமே" என்று என்னை கலவரபடுத்தினார்கள்.

நான், "பரவாயில்லை. வாங்கிவிடலாம்" என்றேன்.

"அதிக நேரம் பயன்படுத்தினால் பேட்டரி விரைவில் கெட்டு போய்விடும். அதனால் பேட்டரி அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும்" என்றார்கள்,

"மாற்றிக்கொள்ளலாம். அதனால் என்ன?" என்றேன்.

"பேட்டரியின் விலை மிக மிக அதிகம்" என்று சொன்னதால் சென்ற முறையும் வாங்கி வைக்காமல் வந்துவிட்டேன்.

நேற்று இரவு. அதிக நேரம் ஜிம்மில் வொர்க் அவுட் செய்து விட்டு வந்ததால் மிகுந்த அசதியில் என்னையறியாமல் இரவு 10 மணிக்கு எல்லாம் தூங்கிவிட்டேன். திடீரேன முழிப்பு வந்தது. வீட்டிற்கு வெளியே சத்தங்கள் கேட்டது. விடிந்து விட்டது போல என்று நினைத்து பாதி தூக்க கலக்கத்தில் எழுந்தேன். இன்று ஏன் அலாரம் அடிக்கவில்லை? இனி எப்படி வாக்கிங் போக முடியும் என்று நினைத்துக்கொண்டே அருகில் இருந்த செல்போனை பார்த்தால் இரவு மணி 1.30. ஏன் இப்போது முழிப்பு வந்தது? என்று யோசித்தால் ஒன்றும் புரியவில்லை பின் தான் என்னால் உணர முடிந்தது. பேன் ஓடவில்லை. ஏஸி ஓடவில்லை. தூக்க கலக்கத்தில் பவர் கட் என்பதை உணரவே பல நிமிடங்கள் பிடித்தது. 

மலேசியாவில் பவர்கட் என்பதே கிடையாது. பல வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக பவர் கட்டை நினைத்து ஆச்சர்யமாக இருந்தது. அதனால்தான் தெருவில் மக்கள் நடமாட்டம் அந்த நேரத்திலும் இருந்தது. மலேசியாவில் உள்ள வீடுகள் நமது ஊரில் உள்ள வீடுகள் போல் இருக்காது. இங்கு வீடுகளின் அமைப்பு முறையே வேறு. நிறைய ஜன்னல்கள் இருக்கும். வீட்டின் நிலைக்கதவுக்கு அருகில் மிகப்பெரிய ஸ்லைடிங் டோர் இருக்கும். முழுவதும் கண்ணாடியில்தான் இருக்கும். பொதுவாக இரவில் அனைத்து ஜன்னல்களும் மூடி இருக்கும். அதுவும் இல்லாமல் மிகப்பெரிய கர்ட்டன் துணிகளால் கண்ணாடிகள் மூடி இருக்கும்.

அதனால் துளி காத்து உள்ளே வராது. பேன் மற்றும் ஏஸி இல்லாமல் தூங்கவே முடியாது. நேற்று அந்த கொடுமையைத்தான் அனுபவித்தோம். பிள்ளைகளும் அவர்கள் ரூமில் எழுந்துவிட்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் பவர் இல்லை. பட்ட பாடு கொஞ்ச நஞ்சமல்ல. பிறகு ஒரு வழியாக அதிகாலை 3.30க்கு பவர் வந்தது. பின் தூங்க ஆரம்பித்தோம். காலை 5.30க்கு எழ வேண்டிய நான் 7.30க்கு எழுந்தேன். தினசரி வாழ்க்கையே இன்று மாறிவிட்டது. காலையிலிருந்து தூக்க கலக்கமாகவும், ஒரே டயர்டாகவும் உள்ளது.

ஒரு மூன்று மணி நேர பவர்கட்டுக்கே இந்த நிலமை என்றால், தமிழ் நாட்டில் பல மணி நேர பவர்கட்டில் எப்படி எல்லாம் மக்கள் கஷ்டப்படுவார்கள் என்று இப்போது உணர்கிறேன். நம் நாட்டு மக்களுக்காக மிகவும் வருத்தப்படுகிறேன்.

அடுத்த மாதம் ஊருக்கு செல்வேன். சென்றவுடன், முதல் வேலையாக எவ்வளவு செலவானாலும் வீட்டிற்கு இன்வெர்ட்டர் போட்டு விட வேண்டியதுதான்.


3 comments:

வவ்வால் said...

மின்வெட்டு இப்போ உச்சம், சென்னை நீங்கலாக பிறப்பகுதிகளில் 8-10 மணி நேரம் மின்வெட்டு.நிறைய ஆம்பியர்/ஹவர் உள்ள பேட்டரி போட்டால் நீண்ட நேரம் வரும். மேலும் விவரங்களூக்கு என்பதிவை காணவும்.


மின்வெட்டுக்காலத்தில் ஆபத்பாந்தவன் என்றே சொல்லலாம்.நிறைய விலைகளில் இருக்கு, நாம் வாங்கும் திறனைப்பொறுத்து ஏ.சி கூட இயக்கும் வகையில் இன்வெர்டெர் இருக்கு. 30 ஆயிரம் வரும்.மைக்ரோ டெக் விட தொழில்நுட்ப ரீதியாக அமரான், மகிந்திரா ஆகியவை மேம்பட்டவை.மைக்ரோ டெக், அமரன் ஆகிய இரண்டு இன்வெர்டர்களும் பயன்படுத்தி வருகிறேன்.எப்பொழுதும் அருகாமையில் உள்ள டீலர்களிடம் வாங்குவது நல்லது.

மேலும் இன்வெர்டர் வாங்கும் போது கவனிக்க வேண்டிய காரணிகளை விளக்கி நான் முன்னர் போட்ட பதிவின் சுட்டி கீழே,

மின்வெட்டில் மின்னல் வெட்டும் தலைகீழ் மின்மாற்றி

கோவை நேரம் said...

பார்த்தீங்களா...நாங்களாம் எவ்ளோ கஷ்ட படறோம்...

sriram said...

உலக்ஸ், பதிவர் பலா பட்டறை ஷங்கரை தொடர்பு கொள்ளவும், அவர் இன்வெர்ட்டர் விற்பனை செய்கிறார்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்