Apr 17, 2012

வயது ஒரு பிரச்சனையா?


சமீபகாலமாக ஒரு வித்தியாசமான பிரச்சனையை சந்தித்து வருகிறேன். பல நேரங்களில் கோபமும், சில நேரங்களில் சம்பந்தப்பட்டவர்கள் மேல் பரிதாபமும் வருகிறது. அப்படி என்ன பிரச்சனை? அதற்கு முன் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம் அல்லது நான் நினைவு படுத்த வேண்டிய விசயம் ஒன்று உள்ளது. என்னவென்றால், எல்லோராலும் எல்லாவிதத்திலும் சிறந்தவராக இருபத்தைந்து வயதிற்குள் வந்துவிட முடியாது. அதற்கு பல காரணங்கள் சொல்லலாம். உதாரணத்திற்கு கிரிக்கெட்டை எடுத்துக்கொள்வோம். நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் அடித்தாலும், உங்களால் அதிகபட்சம் மாவட்ட அளவில் லீக் மேட்ச் விளையாட முடியும் இல்லை என்றால் ரஞ்சி வரை போகலாம். அதற்கு மேல் போவது என்பது மிகவும் கஷ்டம். லீக் விளையாடுவதற்கே நீங்கள் வாழ்க்கையில் பல விசயங்களை இழக்க வேண்டியிருக்கும்.

அதே போல்தான் ஒவ்வொரு துறையும். நீங்கள் எந்த துறையில் பிரபலமாக வேண்டும் என்றாலும் திறமையுடன் கொஞ்சம் அதிஷ்டமும் வேண்டி இருக்கிறது. அதனால்தான் எல்லோராலும் சிறுவயதிலேயே சாதிப்பது கஷ்டம் என்றேன். நமது குடும்பம் சார்ந்த பிரச்சனைகளால் படிப்பைத் தவிர வேறு எந்த ஒரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் நம்மால் உயர முடியாமல் போய்விடுகிறது. காரணம் பணம். நன்றாக கிரிக்கெட் விளையாட வேண்டுமென்றால் முதலில் நல்ல பேட் வாங்க வேண்டும். பணம் வேண்டும். சாதாரண குடும்பத்து எந்த அப்பாவும் பேட் வாங்க பணம் கொடுக்க மாட்டார். நெட் பிராக்டிஸ் செய்ய வேண்டும் என்றால் அதற்குறிய இடம் நம் வீட்டின் அருகில் இருக்காது. தினமும் பல மைல்கள் போக வேண்டி இருக்கும். அதே சமயம் நன்றாக படிக்கவும் வேண்டும். ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவன் என்ன செய்வான்? அனைத்தையும் நிறுத்திவிட்டு படிக்க மட்டுமே செய்வான். அதைத்தான் நானும் செய்தேன்.

அதனால் எனக்குள் உள்ளே தகித்துக்கொண்டிருந்த மற்ற விசயங்களை அடக்கி வைத்திருந்தேன். ஓரளவு வாழ்க்கையில் ஒரு நல்ல நிலமைக்கு வந்த பிறகு தானாகவே உள்ளே தூங்கிக்கொண்டிருந்த ஒவ்வொரு ஆசைகளும் வெளிப்பட துவங்குகின்றன. அப்படித்தான் முதலில் கீ போர்ட் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். நேரமின்மையால் முடியாமல் போய்விட்டது.

பின் வலைப்பூ ஆரம்பித்து எழுத தொடங்கினேன். எழுத ஆரம்பித்தபோது இருந்த வேகம் இப்போது இல்லை. காரணம் என்ன? தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகிறது. நான் பைனான்ஸ் துறையில் இருப்பதால், எந்த காரியத்தை தொடங்கினாலும் உடனே மனம் "இதனால் நமக்கு என்ன பிரயோசனம்? என்ன லாபம்?" என கணக்கு பண்ண தொடங்கிவிடுகிறது. அதையும் மீறி எழுத தொடங்கினாலும் முன்பு போல் தினமும் எழுத முடியவில்லை. பத்திரிகைகளில் கதைகள் வரத்துவங்கியதும் உடனே மனம் அதில் லயிக்க ஆரம்பித்துவிட்டது. நிறைய எழுதி பத்திரிகைகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறேன். ஆனால் எதையும் முதலில் வலைப்பூவில் போஸ்ட் செய்வது கிடையாது.

சரி, இப்போது விசயத்துக்கு வருகிறேன். நாம் எது செய்தாலும் உடனே நண்பர்கள் "இந்த வயதிலும் எப்படி உன்னால் முடிகிறது" என்று கேட்கிறார்கள். இவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு என்ன 80 வயதா ஆகிறது? 40 வயதை தொட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்றா அர்த்தம்? இன்னும் எவ்வளவோ இருக்கிறது சாதிக்க? நாம் ஏன் நமக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வேண்டும்? ஒவ்வொரு விநாடியையும் கொண்டாட வேண்டாமா? ஐயைய்யோ நமக்கு வயதாகிவிட்டது என்று வீட்டில் முடங்கி கிடக்க வேண்டுமா என்ன? 

என்னால் சும்மா இருக்க முடியாது? எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும். அதனால்தான் எனக்கு மிகவும் பிடித்த பாடலை பாடிப்பார்த்தேன். முறையான பயிற்சி இல்லாததால் அந்த அளவிற்கு பர்பக்ஷன் இல்லை என்றாலும், நன்றாக இருந்ததாகவே நிறைய நண்பர்கள் பாராட்டினார்கள். ஆனால் சிலர் இந்த வயதிலும் எப்படி.....? ஒரு நண்பரின் மெயிலை இங்கே கொடுக்கிறேன் பாருங்களேன்:

Dear Ulags,
Happy to hear the lovely voice. But I wonder, at this age you are still in search of a moon. Are you o.k.?

இவருக்கு நான் என்ன பதில் சொல்வது? சிலரோ வெறுப்பின் உச்சத்திற்கு நம்மை ஆளாக்குகிறார்கள் எப்படி?

"நீங்க அனுப்பிச்சீங்களே MP3 பைல். ஆமாம் நான் கூட நீங்க எழுதி இசையமைத்த பாடல்னு நினைச்சேன். இளையராஜாவோட பாடல்னு தெரிஞ்சோன உடனே அணைச்சுட்டேன். கேட்கலை"

இன்னொரு நெருங்கிய நண்பரின் உரையாடல்:

"இந்த வயதில் உங்களுக்கு இதெல்லாம் தேவையா?"

"நான் என்ன சினிமால போயா பாடப் போறேன்?. அப்படி என்ன வயசு ஆயிடுச்சு. மன்மோகன் சிங் 86 வயசுலயும் ப்ரைம் மினிஸ்டரா இல்லையா?"

"அவர் என்ன உங்களை மாதிரி எழுதிட்டும் பாடிட்டுமா இருக்கார்?"

"பாடகர் மாணிக்க விநாயகம் சினிமால பாடும்போது 50 வயசை தாண்டிட்டார் தெரியுமா?"

"அவர் சின்ன வயசுல இருந்து பாட்டு கத்துட்டு வாய்ப்பு கிடைக்காம இருந்தார். வாய்ப்பு கிடைச்சோன பாடறார். உங்கள மாதிரி இல்ல? இந்த வயசுல இது தேவையா"

வயசுக்கும் நான் பாடிப் பார்ப்பதற்கும் என்னங்க சம்பந்தம்? எனக்கு புரியலை? இருந்தாலும் நான் பாடுவேன். என் வலைப்பூல லிங்க் குடுப்பேன். பிடிச்சவங்க கேட்கட்டும். பிடிக்காதவங்க ஒதுங்கி போகட்டும்.

சரிதானே?7 comments:

Cable சங்கர் said...

கீப் கோயிங்...

ரிஷபன் said...

40 வயதை தொட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்றா அர்த்தம்? இன்னும் எவ்வளவோ இருக்கிறது சாதிக்க? நாம் ஏன் நமக்கு வயதாகிவிட்டது என்று நினைக்க வேண்டும்? ஒவ்வொரு விநாடியையும் கொண்டாட வேண்டாமா? ஐயைய்யோ நமக்கு வயதாகிவிட்டது என்று வீட்டில் முடங்கி கிடக்க வேண்டுமா என்ன?


என்னால் சும்மா இருக்க முடியாது? எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

All the best Sir.

ARUNA said...

correct. Age is only a number. Keep going. All the best. I am 59 but young at heart.

சசிகலா said...

வயது ஒரு தடையே அல்ல . வயதில் மூத்தவர்களிடமே அனுபவமும் , பக்குவமும் அதிகம் இருக்கும் .

எம்.ஞானசேகரன் said...

உண்மைதான் வயுது ஒரு தடையே இல்லை. கற்றுக்கொள்ளும் ஆர்வம்தான் முக்கியம். நானும் கூட நாற்பதுக்கு மேல்தான் கம்ப்யூட்டரயே கற்றுக்கொண்தேன்.

Vee said...

Pl check this

http://in.news.yahoo.com/photos/101-yr-old-s-last-marathon-slideshow/;_ylt=Avka_0BoJhreU6c1wxvRGk3PfNx_;_ylu=X3oDMTM3Z2Y3cmxyBG1pdAMEcGtnAzE0NWNkZDg0LWExZDEtMzhhZi05YTgyLTBlZTgyMjQzYjRmZQRwb3MDMwRzZWMDZW5kX3NzBHZlcgNhM2U0NWRkMi04ZDJlLTExZTEtYjdmZS01ZDFiZWZiYTNhYWY-;_ylv=3

கொங்கு நாடோடி said...

உலக்ஸ்,
வாழ்கை வாழ்வதற்கே, சொல்லரவன் சொல்லிவிட்டு போறான், அவனால் இந்த வயதில் முடியவில்லையே என்ற ஆதங்கம். நானும் உங்கள் வயதுதான்(கொஞ்சம் கம்மி), இந்த Scuba Diving, para-sailing ஆசைப்பட்டதை செய்கிறேன், அடுத்தவனால் இந்தவயதில் முடியவில்லையா.. உடனே இந்த வயதில் இது தேவையா? என்ற கேள்விதான் வரும்... அடுத்தது mid life crisis ஸ் நு அடுச்சு விடுவானுக....தள்ளிவிட்டுட்டு என்ஜாய் பண்ணுங்க .....