Jun 24, 2012

வானவில் பாடல் திறன் போட்டி 2012


மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் உள்ள 'வானவில்' என்கிற தமிழ் அலைவரிசை வருடா வருடம் பாட்டுப்போட்டி நடத்தி வருகிறது. 2001ல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பல நல்ல பாடகர்களை கண்டு பிடித்து மலேசியாவிற்கு அளித்துள்ளது. முதல் வருடம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் தலமை நடுவராக இருந்ததாக நினைவு. அவர் அளித்த வாக்கின்படி அப்போது முதல் பரிசு வாங்கிய பாடகிக்கு அவர் இசையமைத்த ஒரு படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடகி அப்போது மருத்துவம் படிக்கப்போவதாக சொன்னார். அதன் பிறகு அவரை எந்த மேடையிலும் பார்க்க முடியவில்லை.

இந்த வருடம் நிகழ்ச்சியின் 12 வருடம். இந்த முறை வித்தியாசமாக 11 வருடங்களில் வெற்றி பெற்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் போட்டியை நடத்தினார்கள். இந்த முறை நிரந்தர நடுவராக இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இருந்தார். மலேசியாவில் ஹரியுடன் நான் இன்னும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இங்கே மிகப் பிரபலம். ஒவ்வொருவரும் பாடி முடித்தவுடன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய மனிதர்.

பல வாரங்கள் நிகழ்ச்சி நடந்தது. பல சுற்றுகள். நேற்று இரவு ஃபைனல் நிகழ்ச்சி. நேரடி ஒளிபரப்பு. சிறப்பு விருந்தினராக பாடகர் பத்மபூஷண் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் வந்திருந்தார்கள். மற்ற நடுவர்களாக விஜய் ஜேசுதாஸ், பாடகி சுஜித்ரா மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பணியாற்றினார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. மூன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. மொத்தம் ஏழு போட்டியாளர்கள். ஆறு பாடகர்கள்  நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஃபைனலில் மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்றின் முடிவில் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டாவது சுற்றின் முடிவில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

மூன்றாவது சுற்றில் அந்த இருவரும் ஜேசுதாஸுடன் பாட வேண்டும். அதில் ஒருவர் வெற்றியாளர். மூன்று பேருக்குமே கார், விதவிதமான  பரிசுகள் மற்றும் பணம் வேறு வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார்கள்.. முதல் நிலை வெற்றியாளருக்கு மிக உயர்ந்த கார், ரொக்கம் 30,000 வெள்ளி மற்றும் சில பரிசுகள். மூன்றாவது சுற்று மிக சுவாரசியமாக இருந்தது. இறுதி சுற்றில் கணேசன் என்பவரும், ஏற்கனவே, 2002 என்று நினைக்கிறேன், முதல் பரிசு வாங்கிய அலிண்டாவும் ஜேசுதாசுடன் பாடினார்கள்.

முதலில் கணேசன், "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு" ஜேசுதாசுடன் பாடினார். அதில் ஒரு வரி வரும், "போடா எல்லாம் விட்டுத்தள்ளு 
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு". 

பாடிய கணேசன் மரியாதை நிமித்தமாக "போங்க எல்லாம் விட்டுத்தள்ளு" என்று பாடியது கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. பாடி முடித்ததும், ஜேசுதாஸ் அவரிடம் கேட்டார், "உங்கள் வயது என்ன?'

"32"

"என் வயது 72"

நம்பவே முடியவில்லை. இன்னும் இளமையாகவே உள்ளார். ஆனால் அவருடைய  அந்த அருமையான குரல் நேற்று அவரிடம் இல்லை. தான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் தான் என்றவர், எப்படி பயிற்சி செய்ய வேண்டும், எப்படி சாப்பாட்டு விசயத்தில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாக விவரித்தார்.

அடுத்து பாட வந்தவர் அலிண்டா. மிகச்சிறந்த பாடகி. நல்ல அழகி. மலேசியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இன்னேரம் அவர் இந்திய அளவில் மிகச்சிறந்த பாடகி ஆகியிருப்பார். அவர் நேற்று ஜேசுதாசுடன் இணைந்து ப்ரியா படத்தில் வரும் "என்னுயிர் நீதானே" என்ற பாடலை பாடினார். ஜேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் போதே "அதில் வரும் மலாய் மொழி வார்த்தைகள் அவ்வளவு நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் பாடியது. ஏதாவது தவறு இருந்தால் மன்னிச்சுக்கோமா?" என்று சொன்னது அவரின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டியது. சில இடத்தில் சரியாக எடுத்து பாட விட்டுவிட்டார். அலிண்டா வழக்கம் போல பின்னி எடுத்துவிட்டார்.பாடி முடித்ததும், ஜேசுதாஸ், ஜேம்ஸ் வசந்தனை பார்த்து, "ஜேம்ஸ் என் மார்க் என்ன?" என்று ஜோவியலாக கேட்டார். அதற்கு ஜேம்ஸ்,

"அந்த பாடகி அடுத்த ரவுண்ட் போறாங்க" என்று சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.

முடிவில் எல்லோரும் எதிர் பார்த்த படி மிக அதிக மதிப்பெண்கள் பெற்று அலிண்டா முதல் பரிசை வென்றார். இரவு 12 மணி வரை அனுபவித்து பார்த்தேன். அந்த மூன்றரை மணி நேர நிகழ்ச்சி அதற்குள் யுடியூபில் வந்து விட்டது. அதனுடைய லிங்கை கீழே தருகிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள். தமிழ்நாட்டில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கும் இந்த சிறிய நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள். இங்கு யாருமே பாட்டை நோட்டை வைத்துக்கொண்டு பார்த்து பாடுவதில்லை.


இந்த வீடியோவில் 50 நிமிசத்திலிருந்து ஒரு 5 நிமிடத்தை தவறாமல் பாருங்கள். முதல் சுற்றில் அலிண்டா பாடிய "நின்னைச் சரணடைந்தேன்" பாடலை கேளுங்கள். கண்கள் கலங்க நீங்கள் சொர்க்கத்தை நோக்கி செல்வது உறுதி.Jun 20, 2012

நிழலின் அருமை..."இதுக்கு பேர் சாம்பாரா?"

"என்ன இட்லி கல்லு மாதிரி இருக்கு"

"உருளைக்கிழங்கு பொறியல்ல உப்பு அதிகம்". 

"எண்ணைய் அதிகமா ஊத்தாம சமைக்கத் தெரியாதா?''

'இதெல்லாம் மனுசன் சாப்பிடுவானா?''

மேல உள்ள டயலாக் எல்லாம் கடந்த 13 வருடங்களில் தினமும் என் மனைவியிடம் நான் சொன்னவை. இது போல இன்னும் நிறைய சொல்லி இருக்கிறேன். நான் சாப்பாட்டு விசயத்தில் மிகவும் மோசம் என்பது தெரிந்தே வாழ்ந்து வருகிறேன். எல்லாம் மிகச் சரியாக இருக்க வேண்டும். நிறைய நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பதுண்டு, "சாப்பாட்டுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறாய்?" என்று.

உண்மைதான். ஆரம்ப காலத்தில் இருந்தே இப்படித்தான் இருந்திருக்கிறேன். ஆனால் எத்தனை குறை சொன்னாலும் ஒரு நாளும் நான் சாப்பாட்டை வீணாக்கியதில்லை. ஒரு பருக்கை விடாமல் சாப்பிட்டுவிடுவேன். உணவை வீணாக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பவன்.

எல்லோரும் போல ஆரம்ப காலத்திலிருந்து அம்மாவின் சமையலையே அமிர்தமாக எண்ணி வாழ்ந்தவன். திருமணமான புதிதில் வேறுவகையான சமையலுக்கு மாற மிகவும் சிரமப் பட்டேன். பின் படிப்படியாக மனைவியின் சமையலுக்கு அடிமையாகிவிட்டேன். ஆனால் ஒரு நாள் கூட சமையல் நன்றாக இருந்தது என்று பாராட்டியதே இல்லை. இதற்கு காரணம் ஆண் என்கிற திமிரைத்தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?

இவ்வளவையும் நான் ஏன் இங்கே சொல்கிறேன். காரணம், பிள்ளைகளின் மேல் படிப்பிற்காக அனைவரும் இப்போது தமிழ் நாட்டில். இன்னும் சிறிது காலத்திற்கு இங்கே தனியாக இருக்க வேண்டிய சூழல். வெளியே சாப்பிடலாம் என்றால் எங்கும் நான் வெஜ் மயம். நான் எப்போதாவது சிக்கன் சாப்பிடுவதுண்டு. தினமும் சாப்பிட பிடிக்காது. அதனால் இப்போது நானே சமைக்க வேண்டிய நிலை.

நண்பர்கள் கூறிய அறிவுரையை கேளுங்கள்:

"அதெல்லாம் ரொம்ப ஈசி. அரை மணி நேரத்தில் சமைத்து விடலாம்"

"அப்துல் கலாம் மற்றும் வாஜ்பாய் எல்லாம் அவர்களாகத்தான் சமைத்து சாப்பிடுகிறார்கள்"

"ஆரம்பத்துல கஷ்டமாத்தான் இருக்கும். போகப் போக பழகிவிடும்"

"ஒரே வாரத்துல பாரு, நீ நல்ல குக் ஆயிடுவ"

நானும் இதெல்லாம் நம்பி சமைக்க ஆரம்பித்தேன். முதல் நாள் நான் வைத்த சாம்பாரை நானே சாப்பிட முடியவில்லை. ஒரே காரம். இட்லி வித்தியாசமான டிஸைனில் வந்தது. அது கூட பரவாயில்லை. ஒரே உப்பு. பின் மீண்டும் மாவு அரைத்து சேர்க்க வேண்டியதாகிவிட்டது.

இப்படித்தான் இப்போது சமைத்து சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். உப்பு, காரம், புளிப்பு எந்த சுவையும் இப்போது எனக்குத் தெரிவதில்லை. எல்லா சுவையும் ஒரே சுவை போல் தெரிய பழகிக் கொண்டேன். வெந்தாலும் வேகாவிட்டாலும், வேறு வழியில்லை, சாப்பிட்டுத்தான் ஆக வேண்டும். எந்த குறையும் சொல்ல முடியாது. ஏனென்றால் சமைப்பது நான் அல்லவா?

இத்தனை வருடங்கள் என்னவெல்லாம் குறை சொல்லி இருப்பேன். ஒரு வார்த்தை என்னை மனைவி திருப்பி பேசியது கிடையாது. ஒரு முறையேனும் பாராட்டி இருந்தால் இந்த கஷ்டம் நான் அனுபவிக்க நேர்ந்து இருக்காது.

யாருமே அருகில் இருக்கும் போது அவர்களின் அருமை தெரிவதில்லை. அருகில் இல்லாத போதுதான் தெரிகிறது. அலுவலகத்தில் 10 மணி நேரம் வேலையும் பார்த்துக்கொண்டு, பின் மூன்று வேலையும் சமைத்து சாப்பிட வேண்டும் என்கிற கொடுமை போல் வேறு ஒன்றும் இருக்க முடியாது. சமைப்பது கூட பரவாயில்லை போல் இருக்கிறது. பின் பாத்திரங்களை கழுவது இருக்கின்றது பாருங்கள், அது போல ஒரு கஷ்டம் வேறு எதிலும் இல்லை.

எவ்வளவு கஷ்டப்பட்டு எனக்காக என் மனைவி இத்தனை வருடங்கள் சமைத்துப்போட்டிருப்பாள். பாராட்டாமல் விட்ட பாவி நான். அதற்காக இப்போது பாராட்ட வேண்டும் போல் உள்ளது.

"தேங்க்ஸ்டா செல்லம்"Jun 13, 2012

அண்ணா ப்ளீஸ்!


"காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ
 கண்களே பாவம் என்றால் பெண்களே பாவம் அன்றோ..."

"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" என்று கோபமாக ரேடியோவை அணைத்த சீதாவைப் பார்த்தேன். மிகவும் ஆக்ரோஷமாக என்னை முறைத்துக்கொண்டு நின்றாள். அப்படியே அம்மா ஜாடை. அம்மாவை போல அதே தெளிவான முகம். அம்மாவைப் போலவே நடை. எனக்கு அம்மா நினைவு வரும்போது எல்லாம் அவளைப் பார்த்துதான் ஆறுதல் அடைவேன். அப்போதுதான் குளித்து விட்டு வந்திருப்பாள் போல. தலையை சுற்றி டவலால் கட்டியிருந்தாள். முகம் நிறைய மஞ்சள். நெற்றியில் அம்மா வைப்பது போலவே குங்கும பொட்டு. கல்லூரியில் முதல் வகுப்பு படிக்கும் எந்த பெண்ணையும் குங்கும பொட்டு வைத்து பார்த்ததில்லை. ஆனால் சீதா... அப்படியே அம்மாவின் குணம்.

"ஏண்ணா, சொல்றது காதுல விழலை?" என்று கோபமாக கத்தியவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.

"என்னடா?"

"என்ன என்னடா! இன்னைக்காவது இந்த லெட்டரை கொண்டு போய் குடுனு சொல்றேன். கேக்க மாட்டேங்கற?"

"அதெல்லாம் தப்பும்மா!"

"என்ன தப்பு? எனக்கு வேற வழி தெரியலைண்ணா"

"அப்பாவை ஒரு நிமிசம் நினைச்சு பார்த்தியா?"

"எதுக்குண்ணா இதுல அப்பாவை இழுக்குற?"

"அப்பா எவ்வளவு பாவம். நாம பள்ளிக்கூடம் படிக்கையிலேயே அம்மா இறந்து போயிட்டாங்க. அப்பாவுக்கு அப்போ அப்படி ஒண்ணும் வயசு ஆகலை. அவர் நினைச்சு இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா அவர் நம்ம வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாதுன்னு, அவர் மறு கல்யாணமே பண்ணிக்கலை"

"அதுக்காக?"

"அப்படி நமக்காகவே வாழற நம்ம அப்பாவை எதிர்த்து நாம அப்படி என்ன சாதிக்கப்போறோம்?"

"இல்லன்னு சொல்லலைண்ணா. ஆனா அதுக்காக நம்ம வாழ்க்கைனு ஒண்ணு இருக்குல்ல. அதை கெடுத்துக்கச் சொல்றியா?"

"நான் கெடுத்துக்க சொல்லலை?"

"அப்புறம்?"

"அப்பாட்ட பேசுவோம். எடுத்து சொல்வோம். அவர் சம்மதத்தோட நடக்கட்டுமேன்னு பார்க்கறேன்"

"என்ன அண்ணா! நான் உன்னைத்தான் நம்பி இருந்தேன். நீயும் இப்படி காலை வார்ர?"

"இல்லைம்மா அப்பாட்ட பேசுவோம்"

"அப்போ அப்பாட்ட பேசுண்ணா?"

"என்னால பேச முடியும்னு நினைக்கறியா நீ?"

"ஏன் முடியாது?"

"பயமா இருக்கும்மா?"

"என்ன அண்ணா! பெண் நானே தைரியமா இருக்கேன். நீங்க போய்?"

"இருந்தாலும்"

"அப்ப ஒண்ணு செய்யுங்க"

"என்ன?"

"ப்ளீஸ் இந்த லெட்டரை இன்னைக்காவது போய் கொடுத்துடுங்க. ப்ளீஸ்ண்ணா! பின் விளைவுகளை அப்புறம் பார்த்துக்கலாம்ணா"

கொஞ்சம் கோபத்துடன் அவளை பார்த்தேன். மீண்டும் அம்மா நினைவு வரவே தலை குனிந்து கொண்டேன். அவள்தான் மீண்டும் என் கவனத்தை ஈர்த்தாள்.

"ப்ளீஸ்ண்ணா உன் செல்ல தங்கைக்காக இது கூட செய்ய மாட்டியா?" என்று கெஞ்சியவள் அந்த லெட்டரை என் கையில் கொடுத்துவிட்டு சமையல் அறையை நோக்கி சென்றாள்.லெட்டரை வாங்கியவன் பலத்த யோசனைக்கு ஆளானேன். சீதா ஏன் இப்படி இருக்கிறாள்? அப்பாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்? நம் வீட்டில் காதல் கல்யாணம் ... நினைக்கவே ஒரு மாதிரி இருக்கிறதே? ஆனால் சீதா இதைப்பற்றி எல்லாம் கவலைபட்டதாக தெரியவில்லையே? என்ன ஒரு தைரியம் அவளுக்கு? நானும் இதே குடும்பத்தில்தானே பிறந்தேன். எனக்கு இல்லாத தைரியம் அவளுக்கு மட்டும் எப்படி வந்தது? குழப்பமாக இருந்தது.

சரி, கோவிலுக்காவது போய்விட்டு வரலாம் என்று வெளியே கிளம்பினேன். கிளம்பியவனை நிறுத்திய சீதா,

"நல்லா வேண்டிக்கண்ணா. யோசிச்சு ஒரு நல்ல முடிவா எடு. இது வாழ்க்கை பிரச்சனை" என்று சொன்னவளின் கண்களை சந்தித்தேன். கலங்கி இருந்தது. எனக்கு உடனே மனசு சங்கட பட ஆரம்பித்தது.

கோவில் உள்ளே நுழைந்தேன். அன்று வெள்ளிக்கிழமை. நல்ல கூட்டம். ஆண்களும் பெண்களுமாய் நிறைய பேர் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற அல்லது புதிய வேண்டுதலுக்காக கோவிலில் வரிசையில் காத்திருந்தார்கள். நானும் வரிசையில் ஓர் ஓரமாக நின்றேன். என்னதான் சொன்னாலும், கோவில் என்பதே ஒரு சொர்க்கம்தான். நாம் வேண்டுவது நடக்கிறதோ இல்லையோ, கோவிலுக்கு வந்து இறைவனிடம் நம் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு செல்லும் போது ஏற்படும் சந்தோசமே தனிதான். எனக்கு எப்பவுமே ஒரு பழக்கம் உண்டு. மனம் குழப்பம் அடையும் சமையங்களில், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை முடித்துவிட்டு அங்கேயே ஒரு இடத்தில் கண்களை மூடி உட்கார்ந்துவிடுவேன். அதை தியானம் என்று சொல்ல முடியாது. ஆனால் அப்படி அமர்ந்து இருக்கையில் மனதில் ஒரு அமைதி ஏற்படும் பாருங்கள். அதற்கு ஈடு இணையே கிடையாது. அந்த அமைதிக்கு பின் மனம் லேசாகிவிடும்.

வரிசையை உற்று நோக்கினேன். கல்யாணமாகாத நிறைய பெண்களும் வரிசையில் நின்றார்கள். அப்போது என் தங்கையை நினைத்துக்கொண்டேன். பாவமாகத்தான் இருந்தது. அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல் தெரிந்தது. அவளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும். அவளுக்கு ஒரு குறையும் வரக்கூடாது. அவள் மகராசியாக வாழ வேண்டும். மனதில் பிரார்தித்தேன்.

"பேசாமல் லெட்டரை கொடுத்துவிடலாமா?" என்று கொஞ்சம் மனதளவில் தடுமாறத்தொடங்கினேன். குருக்கள் தீப ஆராதனை செய்ய ஆரம்பிக்கவே மனம் உருக அம்மனை பிரார்தித்தேன். நல்ல ஒரு முடிவு எடுக்கும் வல்லமையை எனக்கு கொடுக்குமாறு அம்மனை பிரார்த்தித்தேன். பின் பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஒரு மூலையில் அமர்ந்து கண்களை மூடினேன். நீண்ட நேரம் அப்படி இருக்க முடியவில்லை. மனம் ஓரளவு தெளிவானது போல இருந்தது. கோவிலில் வாங்கிய பிரசாதத்தை கையில்  எடுத்துக்கொண்டு விறுவிறுவென வீட்டிற்கு கிளம்பினேன்.

வீட்டுக்கு உள்ளே நிழைய போனவனை சீதா தடுத்து நிறுத்தி,

"என்ன அண்ணா முடிவு பண்ணீட்டியா?" என்றாள்.

"ம்" என்றேன்.

"தெளிவா சொல்லுண்ணா"

"ம் லெட்டரை கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்" என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தேன். அப்படியொரு சந்தோசம் அவள் முகத்தில்.

"இப்பத்தான் நீ என் செல்ல அண்ணா" என்றவள், "இப்பவே போய் கொடுத்துடுண்ணா. அப்புறம் மனசு மாறிடுவ. என்னால தாங்க முடியாது" என்றாள்.

"ம்ம்" என்றவன் அவளை ஒருவித புன்முறுவலுடன் பார்த்தேன்.


"சீக்கிரம் போ!  எவ்வளவு நாள்தான் அவளும் உனக்காக காத்திருப்பாள்" என்று சொல்லி அவளின் உயிர் தோழி வீணாவிற்கு 'அவளை நானும் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ள சம்மதிப்பதாகவும் சீதாவே என் பெயரில் ஒரு கடிதம் எழுதி என்னை அவளிடம் கொடுக்க சொல்லி ஒரு வாரமாக நச்சரிக்க,

இதோ அந்த கடிதத்துடன் வீணாவை பார்க்க கிளம்பிக்கொண்டு இருக்கிறேன்.


கல்கி 13.5.2012

Jun 12, 2012

சீரியஸா எழுது!


இந்த முறை ஊரில் இருந்த போது என் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனை சந்தித்தேன். பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். மிகப்பெரிய ஒரு கல்வி நிறுவனத்தில் பிரின்சிப்பாலாக இருக்கிறான். அவன் படிக்கும் காலத்தில் இவ்வளவு பெரிய பதவிக்கு அவன் வருவான் என நான் நினைக்கவில்லை. அவனை சந்தித்த போது மிகுந்த சந்தோசம் அடைந்தேன். அவனும் சந்தோசமாக தன் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தான். பேச்சு பல திசைகளில் பயணித்தது. பேச்சின் நடுவில் அவன் கூறினான், "நாம் எம் காமில் படித்தது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. அதன் பிறகு நானாக முயற்சி செய்து பல விசயங்கள் படித்துதான் என்னால் இந்த நிலைக்கு வர முடிந்தது" என்றான்.

அவன் கூறியதை நான் முழுமையாக ஏற்காவிட்டாலும் அதிலும் உண்மை கொஞ்சம் இருக்கவே நான் வாதிடவில்லை. பேச்சின் நடுவில் தற்கால கல்வி முறையை பற்றியும், பள்ளிகளில் கற்றுத்தரும் முறை பற்றியும் விவாதித்தோம். இப்போது என் நண்பனின் பள்ளி தான் நிறைய டாக்டர்களையும், இன்ஜினியர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த வருடம் மட்டும் அவர்களின் பள்ளியில் 521 பேருக்கு மேல் 1000க்கு மேல் +2வில் வாங்கி இருக்கிறார்கள். 1150க்கு மேல் 60 பேருக்கு மேல் வாங்கி உள்ளார்கள். அப்போதுதான் அவனிடம் நான் கேட்டேன்,

"உங்கள் பள்ளியில் வெறும் மனப்பாடம்தான் செய்ய சொல்கிறார்களாமே? புரிந்து படிக்க சொல்வதில்லையாமே?"

அவனுக்கு சிறிது கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, என்னுடன் வந்த நண்பனை நோக்கி, "உலக்ஸ் மிக சிறந்த படிப்பாளி. ஆனால் அவன் எப்படி அதிக மதிப்பெண்களும், ரேங்கும் வாங்கினான் என்று கேளுங்கள். அவன் மனப்பாடம் பண்ணித்தானே வாங்கினான்"

உண்மைதான். நான் மறுக்கவில்லை. பின்பு அவனே தொடர்ந்தான், "உலக்ஸ், இது எல்லாம் எங்கள் பள்ளியின் மேல் உள்ள பொறாமையால் மற்றவர்கள் சொல்வது. நாங்கள் விதவிதமான முறைகளில் படிக்க வைக்கிறோம். நிறைய பரிட்சை வைக்கிறோம். படித்து படித்து எழுத எழுத அவர்கள் நன்றாக புரிந்தும் கொள்கிறார்கள். நன்றாக நினைவிலும் வைத்துக்கொள்கிறார்கள்.அப்படியே இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டால்தான் என்ன? அதிக மார்க் வாங்க வைக்கிறோமா இல்லையா?"

ஓரளவு ஒப்புக்கொண்டேன். பின் பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. அவன் பேச்சின் மூலம் அவன் மிகச்சிறந்த படிப்பாளி எனத் தெரிந்து கொண்டேன். நிறைய படிப்பதாகவும், புத்தகம் ஒன்று எழுதிக்கொண்டிருப்பதாகவும் கூறினான். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எழுத்தாளர்களிடமும் அவனுக்கு நல்ல நட்பு இருக்கிறது. எல்லோருமே அவன் வீட்டிற்கும் பள்ளிக்கும் சென்றிருக்கிறார்கள். இத்தனை தூரம் இலக்கியத்தில் அவனுக்கு ஈடுபாடு இருக்கும் என்பது நான் அறியாத ஒன்று.

கிளம்புகையில் சொன்னான், "உலக்ஸ் உன்னோட ப்ளாக் படிக்கிறேன். உன் கதைகள் எல்லாம் படித்தேன். கல்கியில் வந்த கதைகளையும் படித்தேன். சந்தோசம். ஆனால் ஏன் காதலைப் பற்றியே எழுதுற? காலேஜ்ல இருந்த மாதிரியே இருக்க? ஏன் சீரியஸா எழுத மாட்டேங்கற?"

நான் பதில் சொல்லவில்லை.

"காதல் சீரியஸான விசயம் இல்லையா?"


Jun 11, 2012

சமச்சீர் கல்வி!நான் நன்றாக படிக்க வேண்டும் என்று அப்பா எட்டாம் வகுப்பிற்கு பிறகு என்னை லால்குடி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து திருச்சி பிஷப் ஹீபர் பள்ளியில் சேர்த்துவிட்டார். ஆங்கில மீடியம் என்பதால் மிகவும் கஷ்டப்பட்டு படித்தேன். அப்போது இருந்த ஒரே குறிக்கோள் எப்படியாவது 400 மதிப்பெண்களுக்கு மேல் வாங்க வேண்டும் என்பதுதான். அப்போது எல்லாம் 400 மார்க் பெறுவது என்பது மிகவும் கடினமான இலக்கு. ஊரில் 400க்கு மேல் வாங்கிய மாணவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மிகவும் கடுமையாக முயற்சி செய்து, நிறைய ரிவிசன் செய்து, ஒரு வழியாக 400க்கு மேல் மார்க் வாங்கினேன். அப்போது எங்கள் பள்ளியில் மொத்தம் 5 பேரோ அல்லது 7 பேரோ தான் 400க்கு மேல் வாங்கினோம். எங்கள் ஊரில் மொத்தம் 5 மாணவர்கள்தான் 400க்கு மேல் வாங்கினோம்.

கடந்த 20 நாட்களாக லால்குடியிலும், திருச்சியிலும் இருந்தேன். என் நண்பர்களின் பிள்ளைகள் 10வது பரிட்சை எழுதிருந்தார்கள். ஒரு நண்பனிடம் ரிசல்ட்டின் முதல் நாள் கேட்டேன்,

"மாப்பிள, உன் பெண் எவ்வளவு மார்க் வாங்கும்?"

"உன் தொல்லைக்காகவே அது 400க்கு மேல் வாங்க வேண்டும் போல இருக்கே? நானே கவலையில் இருக்கிறேன்"

இப்படி நிறைய பேர் புலம்பிக்கொண்டு இருந்தார்கள். "சமச்சீர் கல்வி புத்தகங்கள் வர லேட் ஆனது. காலாண்டு தேர்வுக்கு முன் தான் புத்தகம் வந்தது. கணக்கு பரிட்சை மிகவும் கஷ்டமாக இருந்தது" இப்படி...

ரிசல் வந்தது. சந்தோசப்படுவதா அல்லது வருத்தப்படுவதா தெரியவில்லை. லால்குடி ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் 75 பேருக்கு மேல் 400க்கு மேல். பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 70 பேருக்கு மேல் 400க்கு மேல். லால்குடியில் மட்டும் 450க்கு மேல் மார்க வாங்கியவர்கள் 50 பேருக்கு மேல். லயன்ஸ் ஸ்கூலில் 14 மாணவிகள் பரிட்சை எழுதினார்கள். அதில் 5 பேர் 460க்கு மேல்.

முதலில் சந்தோசப்பட்டாலும், பின்பு வருத்தமாகிவிட்டது. காரணத்தை கூறுகிறேன் கேளுங்கள்.

திருச்சியில் ஒரு பெரிய பள்ளியில் 448க்கு கீழ் மார்க் வாங்கியவர்களுக்கு +1 படிக்க அட்மிஷன் பார்ம் வழங்கப்படவில்லை. திருச்சியில் உள்ள மிகப்பெரிய பெண்கள் ஸ்கூலில் 460க்கு கீழ் அட்மிஷன் பார்ம் வழங்கப் படவில்லை. என் இன்னொரு நண்பனின் பெண் 466 வாங்கி, ஸ்கூல் அட்மிஷன் அந்த பெரிய ஸ்கூலில் கிடைக்குமா? என்று தவித்துக்கொண்டு இருக்கிறான்.

முதல் நண்பனின் பெண் 440 மார்க். அவனைப் பாராட்டிவிட்டு அவனிடம் கேட்டேன், "அன்னைக்கு கேட்ட போது கோபப்பட்டியே?"

அவன் இப்படி பதில் கூறினான், "போடா நானே 460க்கு மேல எதிர்பார்த்தேன்" அதன் பிறகு நான் எந்த கேள்விம் அவனிடம் கேட்கவில்லை.

நான் மேலே சொல்லியிருப்பது எல்லாம் லால்குடியில் மட்டுமே. இன்னும் தமிழ் நாடு முழுவது எத்தனை மாணவர்கள் 400க்கு மேல் என தெரியவில்லை.

ரிசல்ட்டை நன்றாக கவனித்தால் யார் சமச்சீர் கல்விக்கு எதிராக போராடினார்களோ, அந்த மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவர்கள்தான் அதிகம் மார்க் எடுத்து உள்ளார்கள்.

என் கேள்வி இதுதான்:

01. இப்போது படிக்கும் மாணவர்கள் எல்லோரும் அதி புத்திசாலிகளாகி விட்டார்களா?

02. இல்லை சமச்சீர் கல்வி அவ்வளவு ஈசியா?

03. 448க்கு கீழ் வாங்கிய மாணவர்களுக்கு மேலே படிக்க நல்ல பள்ளியில் சீட் கிடைக்கவில்லை எனும் போது. 448வரை மார்க் வாங்கி என்ன பிரயோசனம்?

அடுத்த தேர்விற்குள் அரசாங்கம் ஏதாவது செய்தாக வேண்டும். ஒன்று பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் அல்லது கேள்வித்தாள்களை தரமாக கேட்க வேண்டும்.

தமிழ் நாட்டில் மருத்துவ கல்லூரி சீட் 4000 என்று வைத்துக்கொள்வோம். மொத்தம் 2 லட்சம் பேர் +2 எழுதுவதாக வைத்துக்கொள்வோம். 10,000 மாணவர்கள் மெடிக்கல் கட் ஆஃபில் 200க்கு 200 வாங்கினால் என்ன ஆகும்?

அது போல் இருக்கிறது இந்த வருட 10வது வகுப்பு முடிவுகள்.