Jun 24, 2012

வானவில் பாடல் திறன் போட்டி 2012


மலேசியாவின் ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் உள்ள 'வானவில்' என்கிற தமிழ் அலைவரிசை வருடா வருடம் பாட்டுப்போட்டி நடத்தி வருகிறது. 2001ல் ஆரம்பித்த இந்த நிகழ்ச்சி பல நல்ல பாடகர்களை கண்டு பிடித்து மலேசியாவிற்கு அளித்துள்ளது. முதல் வருடம் இசை அமைப்பாளர் பரத்வாஜ் தலமை நடுவராக இருந்ததாக நினைவு. அவர் அளித்த வாக்கின்படி அப்போது முதல் பரிசு வாங்கிய பாடகிக்கு அவர் இசையமைத்த ஒரு படத்தில் பாடும் வாய்ப்பு கொடுத்தார். அந்த பாடகி அப்போது மருத்துவம் படிக்கப்போவதாக சொன்னார். அதன் பிறகு அவரை எந்த மேடையிலும் பார்க்க முடியவில்லை.

இந்த வருடம் நிகழ்ச்சியின் 12 வருடம். இந்த முறை வித்தியாசமாக 11 வருடங்களில் வெற்றி பெற்ற சிலரை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் போட்டியை நடத்தினார்கள். இந்த முறை நிரந்தர நடுவராக இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இருந்தார். மலேசியாவில் ஹரியுடன் நான் இன்னும் ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சியின் மூலம் ஜேம்ஸ் வசந்தன் இங்கே மிகப் பிரபலம். ஒவ்வொருவரும் பாடி முடித்தவுடன் கொஞ்சம் கூட யோசிக்காமல் மனதில் பட்டதை பட்டென்று சொல்லக்கூடிய மனிதர்.

பல வாரங்கள் நிகழ்ச்சி நடந்தது. பல சுற்றுகள். நேற்று இரவு ஃபைனல் நிகழ்ச்சி. நேரடி ஒளிபரப்பு. சிறப்பு விருந்தினராக பாடகர் பத்மபூஷண் கே ஜே ஜேசுதாஸ் அவர்கள் வந்திருந்தார்கள். மற்ற நடுவர்களாக விஜய் ஜேசுதாஸ், பாடகி சுஜித்ரா மற்றும் உள்ளூர் கலைஞர்கள் பணியாற்றினார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சி மிகவும் அற்புதமாக இருந்தது. மூன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை. மொத்தம் ஏழு போட்டியாளர்கள். ஆறு பாடகர்கள்  நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஒருவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஃபைனலில் மொத்தம் மூன்று சுற்றுகள். முதல் சுற்றின் முடிவில் நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இரண்டாவது சுற்றின் முடிவில் இரண்டு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். 

மூன்றாவது சுற்றில் அந்த இருவரும் ஜேசுதாஸுடன் பாட வேண்டும். அதில் ஒருவர் வெற்றியாளர். மூன்று பேருக்குமே கார், விதவிதமான  பரிசுகள் மற்றும் பணம் வேறு வழங்கப்படுவதாக அறிவித்திருந்தார்கள்.. முதல் நிலை வெற்றியாளருக்கு மிக உயர்ந்த கார், ரொக்கம் 30,000 வெள்ளி மற்றும் சில பரிசுகள். மூன்றாவது சுற்று மிக சுவாரசியமாக இருந்தது. இறுதி சுற்றில் கணேசன் என்பவரும், ஏற்கனவே, 2002 என்று நினைக்கிறேன், முதல் பரிசு வாங்கிய அலிண்டாவும் ஜேசுதாசுடன் பாடினார்கள்.

முதலில் கணேசன், "காட்டுக்குயிலு மனசுக்குள்ளே பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான் தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு" ஜேசுதாசுடன் பாடினார். அதில் ஒரு வரி வரும், "போடா எல்லாம் விட்டுத்தள்ளு 
பழச எல்லாம் சுட்டுத் தள்ளு". 

பாடிய கணேசன் மரியாதை நிமித்தமாக "போங்க எல்லாம் விட்டுத்தள்ளு" என்று பாடியது கேட்க சுவாரஸ்யமாக இருந்தது. பாடி முடித்ததும், ஜேசுதாஸ் அவரிடம் கேட்டார், "உங்கள் வயது என்ன?'

"32"

"என் வயது 72"

நம்பவே முடியவில்லை. இன்னும் இளமையாகவே உள்ளார். ஆனால் அவருடைய  அந்த அருமையான குரல் நேற்று அவரிடம் இல்லை. தான் இன்னும் கற்றுக்கொண்டிருக்கும் மாணவன் தான் என்றவர், எப்படி பயிற்சி செய்ய வேண்டும், எப்படி சாப்பாட்டு விசயத்தில் கண்ட்ரோலாக இருக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாக விவரித்தார்.

அடுத்து பாட வந்தவர் அலிண்டா. மிகச்சிறந்த பாடகி. நல்ல அழகி. மலேசியாவில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். அவர் தமிழ் நாட்டில் இருந்திருந்தால் இன்னேரம் அவர் இந்திய அளவில் மிகச்சிறந்த பாடகி ஆகியிருப்பார். அவர் நேற்று ஜேசுதாசுடன் இணைந்து ப்ரியா படத்தில் வரும் "என்னுயிர் நீதானே" என்ற பாடலை பாடினார். ஜேசுதாஸ் பாட ஆரம்பிக்கும் போதே "அதில் வரும் மலாய் மொழி வார்த்தைகள் அவ்வளவு நினைவில் இல்லை. பல வருடங்களுக்கு முன் பாடியது. ஏதாவது தவறு இருந்தால் மன்னிச்சுக்கோமா?" என்று சொன்னது அவரின் பெருந்தன்மையையும், தன்னடக்கத்தையும் காட்டியது. சில இடத்தில் சரியாக எடுத்து பாட விட்டுவிட்டார். அலிண்டா வழக்கம் போல பின்னி எடுத்துவிட்டார்.பாடி முடித்ததும், ஜேசுதாஸ், ஜேம்ஸ் வசந்தனை பார்த்து, "ஜேம்ஸ் என் மார்க் என்ன?" என்று ஜோவியலாக கேட்டார். அதற்கு ஜேம்ஸ்,

"அந்த பாடகி அடுத்த ரவுண்ட் போறாங்க" என்று சொன்னது ரசிக்கும் படியாக இருந்தது.

முடிவில் எல்லோரும் எதிர் பார்த்த படி மிக அதிக மதிப்பெண்கள் பெற்று அலிண்டா முதல் பரிசை வென்றார். இரவு 12 மணி வரை அனுபவித்து பார்த்தேன். அந்த மூன்றரை மணி நேர நிகழ்ச்சி அதற்குள் யுடியூபில் வந்து விட்டது. அதனுடைய லிங்கை கீழே தருகிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள். தமிழ்நாட்டில் நடக்கும் இசை நிகழ்ச்சிக்கும் இந்த சிறிய நாட்டில் நடக்கும் நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வீர்கள். இங்கு யாருமே பாட்டை நோட்டை வைத்துக்கொண்டு பார்த்து பாடுவதில்லை.


இந்த வீடியோவில் 50 நிமிசத்திலிருந்து ஒரு 5 நிமிடத்தை தவறாமல் பாருங்கள். முதல் சுற்றில் அலிண்டா பாடிய "நின்னைச் சரணடைந்தேன்" பாடலை கேளுங்கள். கண்கள் கலங்க நீங்கள் சொர்க்கத்தை நோக்கி செல்வது உறுதி.5 comments:

Ganpat said...

மிகவும் நன்றி திரு.உலகநாதன்.
நிகழ்ச்சியை மிக சிறப்பாக விவரித்துள்ளீர்கள்.

Ganpat said...

மிகவும் நன்றி திரு.உலகநாதன்.
நிகழ்ச்சியை மிக சிறப்பாக விவரித்துள்ளீர்கள்.

வேகநரி said...

35 நிமிடங்கள் மலேசியாவின் வானவில் பாடல் திறன் போட்டி 2012 பார்த்தேன். மிக சிறப்பாக இருந்தது. நேரம் கிடைக்கும் போது முழுவதும் பார்ப்பேன். தகவலுக்கு நன்றி.
எனக்கு மிகவும் பிடித்தது மலேசியா நிகழ்ச்சியில் எல்லோரும் தமிழ் கதைத்தது,தமிழ்நாட்டில் நடக்கும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் ஆங்கிலம் கலந்து பேசுவது பெருமை என்று ஆங்கிலம் கலந்து பேசுவது போல்லல்லாம.

Anonymous said...

இந்த நிகழ்ச்சியை யூட்யுப்பில் காணக் கிடைக்குமா ?

iniyavan said...

//இந்த நிகழ்ச்சியை யூட்யுப்பில் காணக் கிடைக்குமா ?//

நண்பா, நானே லிங்க் கொடுத்து இருக்கேனே! அதை கிளிக் பண்ணுங்க.