Jun 12, 2012

சீரியஸா எழுது!


இந்த முறை ஊரில் இருந்த போது என் கல்லூரியில் என்னுடன் படித்த நண்பனை சந்தித்தேன். பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தேன். மிகப்பெரிய ஒரு கல்வி நிறுவனத்தில் பிரின்சிப்பாலாக இருக்கிறான். அவன் படிக்கும் காலத்தில் இவ்வளவு பெரிய பதவிக்கு அவன் வருவான் என நான் நினைக்கவில்லை. அவனை சந்தித்த போது மிகுந்த சந்தோசம் அடைந்தேன். அவனும் சந்தோசமாக தன் வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு என்னிடம் பேச ஆரம்பித்தான். பேச்சு பல திசைகளில் பயணித்தது. பேச்சின் நடுவில் அவன் கூறினான், "நாம் எம் காமில் படித்தது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. அதன் பிறகு நானாக முயற்சி செய்து பல விசயங்கள் படித்துதான் என்னால் இந்த நிலைக்கு வர முடிந்தது" என்றான்.

அவன் கூறியதை நான் முழுமையாக ஏற்காவிட்டாலும் அதிலும் உண்மை கொஞ்சம் இருக்கவே நான் வாதிடவில்லை. பேச்சின் நடுவில் தற்கால கல்வி முறையை பற்றியும், பள்ளிகளில் கற்றுத்தரும் முறை பற்றியும் விவாதித்தோம். இப்போது என் நண்பனின் பள்ளி தான் நிறைய டாக்டர்களையும், இன்ஜினியர்களையும் உருவாக்கி வருகிறது. இந்த வருடம் மட்டும் அவர்களின் பள்ளியில் 521 பேருக்கு மேல் 1000க்கு மேல் +2வில் வாங்கி இருக்கிறார்கள். 1150க்கு மேல் 60 பேருக்கு மேல் வாங்கி உள்ளார்கள். அப்போதுதான் அவனிடம் நான் கேட்டேன்,

"உங்கள் பள்ளியில் வெறும் மனப்பாடம்தான் செய்ய சொல்கிறார்களாமே? புரிந்து படிக்க சொல்வதில்லையாமே?"

அவனுக்கு சிறிது கோபம் வந்தாலும் அதை அடக்கிக்கொண்டு, என்னுடன் வந்த நண்பனை நோக்கி, "உலக்ஸ் மிக சிறந்த படிப்பாளி. ஆனால் அவன் எப்படி அதிக மதிப்பெண்களும், ரேங்கும் வாங்கினான் என்று கேளுங்கள். அவன் மனப்பாடம் பண்ணித்தானே வாங்கினான்"

உண்மைதான். நான் மறுக்கவில்லை. பின்பு அவனே தொடர்ந்தான், "உலக்ஸ், இது எல்லாம் எங்கள் பள்ளியின் மேல் உள்ள பொறாமையால் மற்றவர்கள் சொல்வது. நாங்கள் விதவிதமான முறைகளில் படிக்க வைக்கிறோம். நிறைய பரிட்சை வைக்கிறோம். படித்து படித்து எழுத எழுத அவர்கள் நன்றாக புரிந்தும் கொள்கிறார்கள். நன்றாக நினைவிலும் வைத்துக்கொள்கிறார்கள்.அப்படியே இரண்டு வருடங்கள் கஷ்டப்பட்டால்தான் என்ன? அதிக மார்க் வாங்க வைக்கிறோமா இல்லையா?"

ஓரளவு ஒப்புக்கொண்டேன். பின் பதிவுலகம் பற்றி பேச்சு வந்தது. அவன் பேச்சின் மூலம் அவன் மிகச்சிறந்த படிப்பாளி எனத் தெரிந்து கொண்டேன். நிறைய படிப்பதாகவும், புத்தகம் ஒன்று எழுதிக்கொண்டிருப்பதாகவும் கூறினான். தமிழ்நாட்டில் உள்ள அத்தனை எழுத்தாளர்களிடமும் அவனுக்கு நல்ல நட்பு இருக்கிறது. எல்லோருமே அவன் வீட்டிற்கும் பள்ளிக்கும் சென்றிருக்கிறார்கள். இத்தனை தூரம் இலக்கியத்தில் அவனுக்கு ஈடுபாடு இருக்கும் என்பது நான் அறியாத ஒன்று.

கிளம்புகையில் சொன்னான், "உலக்ஸ் உன்னோட ப்ளாக் படிக்கிறேன். உன் கதைகள் எல்லாம் படித்தேன். கல்கியில் வந்த கதைகளையும் படித்தேன். சந்தோசம். ஆனால் ஏன் காதலைப் பற்றியே எழுதுற? காலேஜ்ல இருந்த மாதிரியே இருக்க? ஏன் சீரியஸா எழுத மாட்டேங்கற?"

நான் பதில் சொல்லவில்லை.

"காதல் சீரியஸான விசயம் இல்லையா?"


2 comments:

யுவகிருஷ்ணா said...

//"காதல் சீரியஸான விசயம் இல்லையா?"//

சுஜாதா டச் :-)

யுவகிருஷ்ணா said...

//"காதல் சீரியஸான விசயம் இல்லையா?"//

சுஜாதா டச் :-)