"காதலித்தல் பாவம் என்றால் கண்களும் பாவம் அன்றோ
கண்களே பாவம்
என்றால் பெண்களே பாவம் அன்றோ..."
"ஆமா இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை" என்று
கோபமாக ரேடியோவை அணைத்த சீதாவைப் பார்த்தேன். மிகவும் ஆக்ரோஷமாக என்னை
முறைத்துக்கொண்டு நின்றாள். அப்படியே அம்மா ஜாடை. அம்மாவை போல அதே தெளிவான முகம்.
அம்மாவைப் போலவே நடை. எனக்கு அம்மா நினைவு வரும்போது எல்லாம் அவளைப் பார்த்துதான்
ஆறுதல் அடைவேன். அப்போதுதான் குளித்து விட்டு வந்திருப்பாள் போல. தலையை சுற்றி
டவலால் கட்டியிருந்தாள். முகம் நிறைய மஞ்சள். நெற்றியில் அம்மா வைப்பது போலவே
குங்கும பொட்டு. கல்லூரியில் முதல் வகுப்பு படிக்கும் எந்த பெண்ணையும் குங்கும
பொட்டு வைத்து பார்த்ததில்லை. ஆனால் சீதா... அப்படியே அம்மாவின் குணம்.
"ஏண்ணா, சொல்றது காதுல விழலை?" என்று கோபமாக
கத்தியவளின் முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.
"என்னடா?"
"என்ன என்னடா! இன்னைக்காவது இந்த லெட்டரை கொண்டு
போய் குடுனு சொல்றேன். கேக்க மாட்டேங்கற?"
"அதெல்லாம் தப்பும்மா!"
"என்ன தப்பு? எனக்கு வேற வழி தெரியலைண்ணா"
"அப்பாவை ஒரு நிமிசம் நினைச்சு பார்த்தியா?"
"எதுக்குண்ணா இதுல அப்பாவை இழுக்குற?"
"அப்பா எவ்வளவு பாவம். நாம பள்ளிக்கூடம்
படிக்கையிலேயே அம்மா இறந்து போயிட்டாங்க. அப்பாவுக்கு அப்போ அப்படி ஒண்ணும் வயசு
ஆகலை. அவர் நினைச்சு இருந்தா இன்னொரு கல்யாணம் பண்ணி இருக்கலாம். ஆனா அவர் நம்ம
வாழ்க்கை பாதிக்கப்படக்கூடாதுன்னு, அவர் மறு கல்யாணமே பண்ணிக்கலை"
"அதுக்காக?"
"அப்படி நமக்காகவே வாழற நம்ம அப்பாவை எதிர்த்து நாம
அப்படி என்ன சாதிக்கப்போறோம்?"
"இல்லன்னு சொல்லலைண்ணா. ஆனா அதுக்காக நம்ம
வாழ்க்கைனு ஒண்ணு இருக்குல்ல. அதை கெடுத்துக்கச் சொல்றியா?"
"நான் கெடுத்துக்க சொல்லலை?"
"அப்புறம்?"
"அப்பாட்ட பேசுவோம். எடுத்து சொல்வோம். அவர் சம்மதத்தோட
நடக்கட்டுமேன்னு பார்க்கறேன்"
"என்ன அண்ணா! நான் உன்னைத்தான் நம்பி இருந்தேன்.
நீயும் இப்படி காலை வார்ர?"
"இல்லைம்மா அப்பாட்ட பேசுவோம்"
"அப்போ அப்பாட்ட பேசுண்ணா?"
"என்னால பேச முடியும்னு நினைக்கறியா நீ?"
"ஏன் முடியாது?"
"பயமா இருக்கும்மா?"
"என்ன அண்ணா! பெண் நானே தைரியமா இருக்கேன். நீங்க
போய்?"
"இருந்தாலும்"
"அப்ப ஒண்ணு செய்யுங்க"
"என்ன?"
"ப்ளீஸ் இந்த லெட்டரை இன்னைக்காவது போய்
கொடுத்துடுங்க. ப்ளீஸ்ண்ணா! பின் விளைவுகளை அப்புறம் பார்த்துக்கலாம்ணா"
கொஞ்சம் கோபத்துடன் அவளை பார்த்தேன். மீண்டும் அம்மா
நினைவு வரவே தலை குனிந்து கொண்டேன். அவள்தான் மீண்டும் என் கவனத்தை ஈர்த்தாள்.
"ப்ளீஸ்ண்ணா உன் செல்ல தங்கைக்காக இது கூட செய்ய
மாட்டியா?" என்று கெஞ்சியவள் அந்த லெட்டரை என் கையில் கொடுத்துவிட்டு சமையல்
அறையை நோக்கி சென்றாள்.
லெட்டரை வாங்கியவன் பலத்த யோசனைக்கு ஆளானேன். சீதா ஏன்
இப்படி இருக்கிறாள்? அப்பாவுக்கு தெரிந்தால் எவ்வளவு வருத்தப்படுவார்? நம்
வீட்டில் காதல் கல்யாணம் ... நினைக்கவே ஒரு மாதிரி இருக்கிறதே? ஆனால் சீதா
இதைப்பற்றி எல்லாம் கவலைபட்டதாக தெரியவில்லையே? என்ன ஒரு தைரியம் அவளுக்கு? நானும்
இதே குடும்பத்தில்தானே பிறந்தேன். எனக்கு இல்லாத தைரியம் அவளுக்கு மட்டும் எப்படி
வந்தது? குழப்பமாக இருந்தது.
சரி, கோவிலுக்காவது போய்விட்டு வரலாம் என்று வெளியே
கிளம்பினேன். கிளம்பியவனை நிறுத்திய சீதா,
"நல்லா வேண்டிக்கண்ணா. யோசிச்சு ஒரு நல்ல முடிவா
எடு. இது வாழ்க்கை பிரச்சனை" என்று சொன்னவளின் கண்களை சந்தித்தேன். கலங்கி
இருந்தது. எனக்கு உடனே மனசு சங்கட பட ஆரம்பித்தது.
கோவில் உள்ளே நுழைந்தேன். அன்று வெள்ளிக்கிழமை. நல்ல
கூட்டம். ஆண்களும் பெண்களுமாய் நிறைய பேர் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற அல்லது
புதிய வேண்டுதலுக்காக கோவிலில் வரிசையில் காத்திருந்தார்கள். நானும் வரிசையில் ஓர்
ஓரமாக நின்றேன். என்னதான் சொன்னாலும், கோவில் என்பதே ஒரு சொர்க்கம்தான். நாம்
வேண்டுவது நடக்கிறதோ இல்லையோ, கோவிலுக்கு வந்து இறைவனிடம் நம் சுமைகளை இறக்கி
வைத்துவிட்டு செல்லும் போது ஏற்படும் சந்தோசமே தனிதான். எனக்கு எப்பவுமே ஒரு
பழக்கம் உண்டு. மனம் குழப்பம் அடையும் சமையங்களில், கோவிலுக்கு வந்து பிரார்த்தனை
முடித்துவிட்டு அங்கேயே ஒரு இடத்தில் கண்களை மூடி உட்கார்ந்துவிடுவேன். அதை
தியானம் என்று சொல்ல முடியாது. ஆனால் அப்படி அமர்ந்து இருக்கையில் மனதில் ஒரு
அமைதி ஏற்படும் பாருங்கள். அதற்கு ஈடு இணையே கிடையாது. அந்த அமைதிக்கு பின் மனம்
லேசாகிவிடும்.
வரிசையை உற்று நோக்கினேன். கல்யாணமாகாத நிறைய பெண்களும்
வரிசையில் நின்றார்கள். அப்போது என் தங்கையை நினைத்துக்கொண்டேன். பாவமாகத்தான்
இருந்தது. அவள் சொல்வதிலும் நியாயம் இருப்பது போல் தெரிந்தது. அவளின் வாழ்க்கை
நன்றாக அமைய வேண்டும். அவளுக்கு ஒரு குறையும் வரக்கூடாது. அவள் மகராசியாக வாழ
வேண்டும். மனதில் பிரார்தித்தேன்.
"பேசாமல் லெட்டரை கொடுத்துவிடலாமா?" என்று
கொஞ்சம் மனதளவில் தடுமாறத்தொடங்கினேன். குருக்கள் தீப ஆராதனை செய்ய ஆரம்பிக்கவே
மனம் உருக அம்மனை பிரார்தித்தேன். நல்ல ஒரு முடிவு எடுக்கும் வல்லமையை எனக்கு
கொடுக்குமாறு அம்மனை பிரார்த்தித்தேன். பின் பிரகாரத்தை ஒரு சுற்று சுற்றி
வந்தேன். ஒரு மூலையில் அமர்ந்து கண்களை மூடினேன். நீண்ட நேரம் அப்படி இருக்க
முடியவில்லை. மனம் ஓரளவு தெளிவானது போல இருந்தது. கோவிலில் வாங்கிய பிரசாதத்தை
கையில் எடுத்துக்கொண்டு விறுவிறுவென
வீட்டிற்கு கிளம்பினேன்.
வீட்டுக்கு உள்ளே நிழைய போனவனை சீதா தடுத்து நிறுத்தி,
"என்ன அண்ணா முடிவு பண்ணீட்டியா?" என்றாள்.
"ம்" என்றேன்.
"தெளிவா சொல்லுண்ணா"
"ம் லெட்டரை கொடுக்கறதா முடிவு பண்ணிட்டேன்"
என்று சொல்லி அவள் முகத்தை பார்த்தேன். அப்படியொரு சந்தோசம் அவள் முகத்தில்.
"இப்பத்தான் நீ என் செல்ல அண்ணா" என்றவள்,
"இப்பவே போய் கொடுத்துடுண்ணா. அப்புறம் மனசு மாறிடுவ. என்னால தாங்க
முடியாது" என்றாள்.
"ம்ம்" என்றவன் அவளை ஒருவித புன்முறுவலுடன்
பார்த்தேன்.
"சீக்கிரம் போ!
எவ்வளவு நாள்தான் அவளும் உனக்காக காத்திருப்பாள்" என்று சொல்லி அவளின்
உயிர் தோழி வீணாவிற்கு 'அவளை நானும் காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொள்ள
சம்மதிப்பதாகவும் சீதாவே என் பெயரில் ஒரு கடிதம் எழுதி என்னை அவளிடம் கொடுக்க
சொல்லி ஒரு வாரமாக நச்சரிக்க,
இதோ அந்த கடிதத்துடன் வீணாவை பார்க்க கிளம்பிக்கொண்டு
இருக்கிறேன்.
கல்கி 13.5.2012
கல்கி 13.5.2012
No comments:
Post a Comment