Aug 7, 2012

நினைச்சாலே பயமா இருக்கு!


யாருக்கு எப்ப என்ன நடக்கும்? யாருக்குத்தெரியும்? ஓரளவுதான் நாம ஜாக்கிரதையாக இருக்கலாம். அதையும் மீறி நடப்பது விதியாகத்தான் இருக்கக் கூடும். ஒவ்வொரு வருடமும் ரம்ஜான் மாத முடிவில் மலேசியாவில் நிறைய விபத்துக்கள் நடக்கும். நிறைய இளைஞர்கள் உயிர் இழப்பார்கள். அரசாங்கம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் யாரும் மெதுவாகச் செல்வதில்லை. அதுவும் மோட்டார் வாகனத்தில் செல்பவர்கள் மிக வேகமாகச் செல்வார்கள். தினமும் வானொலி மற்றும் தொலைக்காட்சியில் ''இன்று விபத்தில் இறந்தவர்கள் இத்தனை பேர்" என்று அப்டேட் செய்து கொண்டே இருப்பார்கள். பார்க்க பார்க்க நம் மனம் துடிக்கும். இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

அதுவும் மழைக்காலங்களில் மலேசியாவில் கார் ஓட்டுவது என்பது மிகவும் கஷ்டமான காரியம். சில நேரங்களில் மழை மிக அதிகமாக இருக்கும். பகலிலேயே நம்மால் முன்னால் எதையும் பார்க்க முடியாது. அதுவும் எதிரில் கார் வந்தால் அந்தக் காரினால் அடிக்கும் தண்ணீர் நம் கார் கண்ணாடியில் பட்டு சில விநாடிகள் எதுவுமே தெரியாது. நேற்று அப்படித்தான். கடுமையான மழை. மிகவும் மெதுவாகத்தான் சென்றேன். மிகப்பெரிய பாலம் வேறு கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அருகில் பிளாஸ்டிக்கால் ஆன தடுப்புகள் வைத்திருப்பாரள். அடித்த மழையில் அனைத்தும் நடு ரோடில். எவ்வளவு மெதுவாகச் சென்றாலும் முன்னால் எதுவுமே தெரியவில்லை. ஹெட் லைட்டை ஆன் செய்து ஹை பீமில் வைத்தால் கூட எதுவுமே தெரியவில்லை. நாம் எவ்வளவு கவனமாகச் சென்றாலும், பின்னாடி வருபவர் கவனமாக வரவில்லை என்றால் என்ன ஆவது? வீடு போய்ச் சேருவதற்குள் படாதபாடு.

இந்தப் பிரச்சனையையாவது ஓரளவு நம்மால் கட்டுப்படுத்த முடியும். போன வாரம் மலேசியா 'மிரி' என்ற இடத்தில் நடந்த சம்பவத்தை அறிந்தால், எப்படிப் பயம் வராமல் இருக்க முடியும்?

வெள்ளி இரவு 7.30 மணி. Air Asia A320 விமானம் சரவாக், மிரியில் இருந்து கோலாலம்பூர் புறப்படத் தயாராக உள்ளது. கேப்டன் எல்லாவிதமான அறிவிப்புகளையும் முடித்து விட்டு, விமானத்தை நின்ற இடத்தில் இருந்து எடுத்து ரன்வேக்கு செல்கிறார். இன்னும் சிறிது நேரத்தில் விமானம் புறப்படத் தயாராக இருக்கிறது. அப்பொழுது ஒரு பயணி எழுந்திருக்கிறார். உடனே எல்லாப் பயணிகளும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனென்றால் விமானம் ரன்வேயில் இருக்கும் போது, அதுவும் புறப்படத் தயாராக இருக்கும் போது யாரையும் எழுந்திருக்க அனுமதிக்க மாட்டார்கள். விமானப் பணிப்பெண்களும் அவர்கள் இருக்கையில் சேஃப்டி பெல்ட்டுடன்தான் இருப்பார்கள். அப்போது ஒருவர் எழுந்தால் என்ன ஆகும்? விமானப் பணிபெண்கள் பதறி அடித்துக்கொண்டு எழுந்து வந்து அவரை இருக்கைக்குச் செல்ல சொல்லி இருக்கிறார்கள். ஆனால் அந்த நபர் கேட்காமல் வேகமாக நடந்திருக்கிறார். சில பயணிகளும் தடுத்திருக்கிறார்கள். அப்படியும் கேட்காமல் வேகமாக நடந்து சென்று, யாரும் எதிர்பாராதவிதமாக விமானத்தின் அவசர கதவை திறந்து விமானத்தில் இருந்து குதித்து விட்டார். எல்லோரும் செய்வது அறியாது திகைத்திருக்கிறார்கள். பின் விசயம் தெரிந்து விமானத்தை விமானி நிறுத்திவிட்டார். அவரை உடனடியாக ஆம்புலன்ஸில் வைத்து மிரி ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார்கள். உடம்பு எல்லாம் மல்டிபிள் ஃப்ராக்சர் ஆகி, அந்த நபர் இப்போது படுத்த படுக்கையில். பின் விமானம் ஐந்து மணி நேர தாமத்துடன் கிளம்பி இருக்கிறது.

விசயம் இத்தோடு முடிந்திருந்தால் இந்த விசயத்தை எழுதி இருக்க மாட்டேன். ஆனால், இப்போது என்ன சொல்கிறார்கள் என்றால், அவன் விமானத்தை விட்டு குதிக்கும் முன் கத்தினானாம், என்ன சொல்லித்தெரியுமா? "ஐய்யோ பேய் இருக்கிறது. பேய் இந்த விமானத்தில் இருக்கிறது"

என்ன கொடுமை பாருங்கள். இப்பொழுது மலேசியா ஃபேஸ்புக் முழுவதும் இந்த விசயம்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. மலேசியாவில் பேய் பிசாசை நம்புவர்கள் மிக அதிகம். அவனுக்கு வயது 24தான். தனது காதலியுடன் விடுமுறையைக் கழிக்கக் கோலாலம்பூரில் இருந்து மிரி சென்றுள்ளான். என்னத்தைப் பார்த்தோனோ தெரியவில்லை? பேய் பார்த்து பயந்து கீழே விழுந்து இப்போது ஆஸ்பத்திரியில் இருக்கிறான். போலிஸ் என்ன சொல்கிறது என்றால், அவன் 'ஒரு டிரக் அடிக்ட் ஆக இருக்கலாம், ஏனென்றால் அவன் தன்னிலையிலேயே இல்லை' என்று. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும்?

என் கவலை எல்லாம், 'ஒரு வேளை, விமானம் கிளம்பியதும் அவன் எமெர்ஜன்சி கேட்டை திறந்திருந்தால்..?' நினைக்கவே பயமாக இருக்கிறது.

இனி விமானம் டேக் ஆகும் முன் யாராவது எமெர்ஜன்சி கேட் முன் நடந்து போகிறார்களா? என்று நான் அடிக்கடி பார்க்கப்போவது நிச்சயம்.

எப்படி எல்லாம் பயப்பட வேண்டி இருக்கிறது பாருங்கள்!


Aug 5, 2012

மரங்கள்....


வீட்டைச் சுற்றி மரங்களுடன் நல்ல ஒரு தோட்டத்தில் குடி இருக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. ஆனால் அஃது ஒரு நிராசையாகவே உள்ளது. எங்கள் ஊரில் அதாவது நான் பிறந்த ஊரில் அப்படி ரம்யமான இடம் உண்டு. எங்கள் வீட்டின் பின் நிறைய மரங்கள் உள்ளது. சிறு வயதில் மாங்காய் மரங்களுக்கு நடுவில் கயிற்றுக் கட்டில் படுத்துத் தூங்கிய சுகம் இன்னும் நெஞ்சினில் பசுமையான நினைவாய் இருக்கிறது. ஆனால் அங்கே நான் போய் ஐந்து வருடங்கள் ஆகிறது. இப்போது உள்ள சூழ்நிலையில் அது போல் ஒரு வீடு அமையுமா? என்பது கேள்விக்குறிதான்.

முதன் முதல் நான் ப்ளாட் வாங்கிய போது அந்த இடத்தைப் பார்த்து அவ்வளவு சந்தோசம் அடைந்தேன். காரணம் இடம் முழுவதும் மரங்கள். தேக்கு மரங்கள் வேறு இருந்தன. அந்த இடம் மட்டுமே காலி மனையாக இருந்தது. அந்த நகரம் வயலாக இருந்து பின் வீடுகளாய் இருபது வருடங்களுக்கு முன்னே மாறிப்போய் இருந்தாலும், அந்த இடம் மட்டும் காலியாகவே இருந்தது. மிகவும் பிடித்து இருந்ததால் கேட்ட பணத்தைக் கொடுத்து அந்த இடத்தை வாங்கினேன். ஆனால் வீடு கட்டலாம் என்று முடிவு செய்தபோது, ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும் இன்னொரு பக்கம் கொஞ்சம் தயக்கமாக இருந்தது.

காரணம் இன்ஜினியர் அனைத்து மரங்களையும் வெட்ட சொல்லிவிட்டார். மரங்களை வெட்டாமல் விட்டால் வீடு கட்ட முடியாது. என்ன செய்வது? ஓரத்தில் உள்ள மரங்களையெல்லாம் விட்டுவிட்டு மற்ற மரங்களை வெட்டச் சொன்னேன். அப்படியே வீடும் கட்டி முடித்தாகிவிட்டது. ஆனால், காம்பவுண்ட் கட்டும் போது மீண்டும் அதே பிரச்சனை. மரங்களை வெட்டியே ஆக வேண்டும். வேறு வழியே இல்லை. நான் சங்கடப்படுவதைப் பார்த்து என் இன்ஜினியர் நண்பர் சொன்னார், "உலக்ஸ், ஏன் கவலை படறீங்க! எத்தனை மரங்கள் வெட்டுகிறோமோ அத்தனை மரங்கள் நட்டுவிடுங்கள்" என்றார். நானும் சரி என்று ஒத்துக்கொண்டேன்.

வீடு கட்டி 9 வருடங்கள் முடிந்துவிட்டது. ஆனாலும் என்னால் என்ன காரணத்தினாலோ மரங்களை நடமுடியாமல் போய்விட்டது. ஆனால் மனதில் ஒர் ஓரத்தில் அந்தக் கவலை இருந்து கொண்டே இருந்தது. அந்தக் கவலை இப்போது ஓரளவு குறைந்து விட்டது. சென்ற மாதம் எங்கள் கம்பனியின் வளாகத்தில் மரங்கள் நடக்கூடிய ஒரு பொன்னான வாய்ப்புக் கிடைத்தது. மனம் நிறைவாக இருக்கிறது. ஆனால், என்ன ஒன்று தமிழ் நாட்டில் எங்கள் பகுதியில் நடாமல் மலேசியாவில் மரங்களை நட்டிருக்கிறேன்.


எங்கு நட்டால் என்ன? மலேசியாவும் பூமியில்தானே இருக்கிறது?


Aug 4, 2012

பொண்ணு எப்படி இருக்கா?


சென்ற மாதம் முழுவதும் என்னைச் சுற்றி உள்ள நிறையப் பேருக்கு குழந்தை பிறந்திருக்கிறது. மிகவும் சந்தோசமான விசயம். ஒவ்வொரு வீட்டிலும் குழந்தை பிறந்த பிறகு ஏற்படும் சந்தோசம் அளவிட முடியாதது. ஆனால் சென்ற மாதம் என்னுடைய நண்பர்கள், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீட்டில் பிறந்ததெல்லாம் பெண் குழந்தைகள்தான். முதலில் பெண் குழந்தை பிறந்தால் அதிஷ்டமாம். உண்மைதான். அனுபவத்தில் சொல்கிறேன். 

குழந்தை பிறந்த பிறகு எல்லோரும் சென்று வாழ்த்திவிட்டு வருகிறோம், அதோடு நம் வேலை முடிந்துவிட்டது. ஆனால் பெற்றோர்களுக்கு ஒரு பக்கம் சந்தோசம் இருந்தாலும், இப்பொது உள்ள சூழ்நிலையில் குழந்தைக்கு ஆறு மாதம் ஆகும் வரை குழந்தையைப் பாதுகாப்பாக வளர்ப்பது என்பது மிகவும் கஷ்டமான விசயமாகத்தான் எனக்குத் தெரிகிறது. வாயில் வராத பல நோய்களை மருத்துவர்கள் சொல்கிறார்கள். அவைகள் எல்லாம் சாதாரணமாக எல்லோருக்கும் வருவதில்லை என்றாலும் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 

இப்போது எல்லாம் குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகளுக்கு உடனே மஞ்சள் காமாலை வருகிறது. பயப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றாலும், உடனே கவனிக்க வேண்டிய விசயம் இஃது. ஏற்கனவே இந்த விசயத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் பயப்பட மாட்டார்கள். ஆனால் முதலில் கேள்விப்படும் பெற்றோர்கள் மிகவும் கவலைப்படுவார்கள். இங்கே பிறக்கும் ஏறக்குறைய எல்லாக் குழந்தைகளுக்கும் மஞ்சள் காமாலை வருகிறது. இங்கு எல்லாம் நம் ஊர் போல் ஒரு குழந்தை அல்லது இரண்டு குழந்தைகளோடு யாரும் நிறுத்துவது இல்லை. குறைந்தது எல்லோருக்குமே நான்கு அல்லது ஐந்து குழந்தைகள் இருக்கிறது. என் டிரைவருக்கு மொத்தம் பத்துக் குழந்தைகள். இத்தனை குழந்தைகள் இருந்தாலும், நம்மைப் போல இவர்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. நாம் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அப்படிக் கவனிப்போம். பயப்படுவோம். இவர்கள் எதைப்பற்றியும் அதிகம் கவலைப்படுவதில்லை. குழந்தையும் எந்தப் பிரச்சனை இல்லாமல் வளர்கிறது. அதிகம் கவனித்தோமானால் அதிகம் பிரச்சனை வருகிறது. 

யாருக்கெல்லாம் அதிகம் நார்மலாகப் பிறக்காமல் சிசேரியன் மூலம் குழந்தை பிறக்கிறது என்று ஒரு சர்வே எடுத்தோமானால், அதிகம் சிசேரியனில் குழந்தை பெற்றுக்கொள்வது பணக்காரார்கள்தான். காரணம் அதிகம் கவனிக்கிறேன் பேர்வழி என்று மனைவியை அதிகச் சத்துள்ளவைகளைச் சாப்பிட வைப்பதால் குழந்தை மிக அதிக வெயிட்டுடன் வளர்கிறது. அதுவே சிசேரியனுக்குக் காரணமாகிறது. 

குழந்தை பிறந்த சில நாட்களில் நிறைய அழும். பயப்படக்கூடாது. பால் சேராமல் இருக்கலாம். சில குறிப்பிட்ட பால் பவுடரும் சேராமல் இருக்கலாம். நம் மக்கள் உடனே பயந்து கொண்டு டாக்டரிடம் ஓடுவார்கள். இங்கே அப்படி இல்லை. பயப்படுவதில்லை. இந்தக் காலத்தில் இவ்வளவு பயப்படுகிறோம். நான் பிறந்தது ஆஸ்பத்திரியில் அல்ல. எங்கள் கிராமத்தில் உள்ள என் வீட்டில்தான் பிறந்தேனாம். அப்போது எந்தத் தடுப்பூசியும் போட்டதாகத் தெரியவில்லை. இப்போது என்னவென்றால் பத்து வயது வரை என்னென்ன தடுப்பூசி போட வேண்டும் என்று ஒரு பெரிய நோட்டே தருகிறார்கள். பார்க்கவே பயமாக இருக்கிறது. அந்த அளவிற்கு நாம் நோய்க் கிருமிகளை உண்டாக்கி வைத்திருக்கிறோம். 

இயற்கைக்கு எதிராகப் போய் இப்படி அவதி பட்டுக்கொண்டிருக்கிறோம். பிறந்த நேரத்தை வைத்து நட்சத்திரம் பார்த்து ஜாதகம் எழுதிய காலம் போய் எந்த நாளில் எந்த நட்சத்திரத்தில் குழந்தை வேண்டும் என்று முடிவு செய்து பின் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். அவர்களின் ஜாதகம் எப்படி இருக்கும்? 

சமீபத்தில் ஒரு நண்பரின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். குடும்பமே குதுகூலமாகச் சந்தோசமாக இருந்தது. காரணம் அவர்கள் வீட்டில் குழந்தை பிறந்திருந்தது. எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் 'குழந்தை யார் போல் இருக்கிறாள்' என்று பேசிக்கொண்டிருந்தார்கள். வந்திருந்த ஒருவர் சொன்னார், 

"குழந்தை அவர் அம்மா போல இருக்கிறார்" 

இன்னொருவர் சொன்னார், 

"இல்லை இல்லை பெண் குழந்தையாக இருந்தாலும் அவர் அப்பா ஜாடை இருக்கிறது" 

இன்னொருவர், 

"இல்லை அவள் பாட்டி போல இருக்கிறாள்" 

கடைசியில் என்னைப்பார்த்துக் கேட்டார்கள், 

"குழந்தை யார் போல இருக்கா? நீங்க சொல்லுங்க சார்?" 

நான் உடனே தயங்காமல் சொன்னேன், 

"குழந்தை குழந்தை போல் இருக்கிறாள்" 


Aug 3, 2012

மோசமான அனுபவம்!


சமீபத்தில் அலுவலக விசயமாகச் சிங்கப்பூர் சென்றிருந்தேன். நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். நான் வழக்கமாக ஒரே ஹோட்டலில் தான் தங்குவேன். வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் முஸ்பா ஷாப்பிங் மால் சென்று விட்டு அங்கேயே உள்ள ஏதாவது ஒர் இந்திய ஹோட்டலில் இரவு உணவு முடித்து விட்டு அங்கே சிறிது நேரம் நடப்பது வழக்கம். முஸ்தாவை ஒட்டித்தான் செராங்கூன் ரோடு உள்ளது. அந்தப் பகுதியில்தான் அனுமதிக்கப்பட்ட சிகப்பு விளக்குப் பகுதியில் உள்ளது. அந்தப் பகுதியிலும் நடந்து செல்வது வழக்கம். பெண்களிடம் செல்வதற்காக அல்ல. அங்கே பலதரப்பட்ட மக்களைப் பார்க்கலாம். யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நெருங்கி அருகில் சென்றால் அங்கே இருக்கும் தமிழ் பெண்கள் சிலர், "அண்ணே வரீங்களா?" என்பார்கள். நாம் புன்னகையுடன் ஒதுங்கி சென்றாலும் நம்மை வற்புறுத்த மாட்டார்கள்.

கதைகள் எழுத ஆரம்பித்த சமயங்களில் சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்களிடம் பேசியதுண்டு. ஆனால் ஒன்றிரண்டு அனுபவங்களைத் தவிர எதையுமே கதைகளாக நான் எழுதியதில்லை. அவ்வளவும் கண்ணீர்க்கதைகள். எந்தப் பெண்ணும் விருப்பப்ப்ட்டு அந்தத் தொழிலுக்குச் செல்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. யாரோ சொந்தக்காரர்களோ, புரோக்கரோ சில சமயம் கட்டிய கணவனே கூட அந்தப் புதைக்குழியில் அவர்களைத் தள்ளிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிங்கப்பூரில் மட்டும் என்று அல்ல. சிங்கப்பூரிலாவது அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் அவர்கள் தொழில் செய்கிறார்கள். கோலாலம்பூரில் ஜலான் மஜித் இந்தியா அருகில் நிறையத் தமிழ் பெண்களை இப்படிப் பார்க்கலாம். என்ன செய்வது ஒரு சான் வயிற்றுக்காக அவர்கள் இந்தத் தொழிலை செய்கிறார்கள்.

எதையாவது மிதித்துவிட்டாலோ அல்லது கையில் பட்டுவிட்டாலோ அருவெறுப்பு பட்டு எத்தனை முறை கைகளையும் கால்களையும் கழுவுகிறோம். ஆனால் அந்தப் பெண்களை நினைத்துப் பாருங்கள். எப்படித்தான் தினமும் இத்தனை ஆண்களை.... சரி, விசயத்து வருகிறேன். ஒரு நாள் வேலை முடிந்து வழக்கம் போல முருகன் இட்லி கடையில் சாப்பிட்டு விட்டு செராங்கூன் ரோட்டிற்குச் சென்றேன். அங்கே எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கலாம். ஆனால் நான் அன்று செய்த ஒரே தவறு, மெயின் ரோட்டில் செல்லாமல் இரண்டு தெருக்களுக்கும் நடுவில் இருக்கும் தெருவில் சென்றதுதான். அஃதாவது இரண்டு மெயின் ரோட்டின் பின் பகுதி அஃது. அங்கேயும் நிறையப் பெண்கள், ஆண்கள் உலாவுவார்கள். அங்கே சில விதமான டாய்ஸையும் நீங்கள் கடைகள் போல் உள்ள அந்த வீட்டின் பின் பகுதியில் பார்க்கலாம். அந்தப் பகுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு வீட்டின் பின் பகுதியில் இரண்டு சைனீஷ் பெண்கள் நின்று ஒர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கைகளிலும் சிகரெட். பேசிக்கொண்டிருந்த ஆண் ஒர் வெளிநாட்டு ஆண். ஈரோப்போ அல்லது அமெரிக்க ஆணோ தெரியவில்லை. அவன் அவர்களுடன் ஏதோ பேரம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இடம் நன்றாக இருட்டாக இருந்தது. அவனின் பேரத்துக்கு அவர்கள் எதிர்ப்பு காட்டுவதும் தெரிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் சென்றேன். தெருவில் வேறு யாரும் இல்லை.

அப்போது வேறு ஆண் யாரோ எங்கிருந்தோ எதோ சொல்வது கேட்டது. யாரென்று தெரியவில்லை. இருட்டு என்பதாலும், எனக்கு அது சம்பந்தம் இல்லாத விசயம் என்பதாலும் நான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் கிட்டே நெருங்கியவுடன் அந்த ஆண் என்னை நோக்கி வந்து ஏதோ சொல்வது போல் இருந்தது. நான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடக்க நினைத்தேன். ஆனால் அவன் என் வழியை மறித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண்களோ அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றார்கள். நான் மீண்டு கடக்க நினைக்க அவன் என்னைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே என் பின்னாலே வந்தான். அவன் பேசிய ஆங்கிலத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால்,

"நீ எங்குப் போனாலும் உன்னை விட மாட்டேன். நீ தங்கி இருக்கும் இடத்துக்கும் வருவேன்"

ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஹோமோ செக்ஸ்வலாக இருப்பானோ என்ற பயம் வந்துவிட்டது. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நம் ஒழுக்கத்தை இவன் கெடுத்துவிடுவானோ என்ற பயம் கலந்த அதிர்ச்சி வந்து விட்டது. பின்னாலே வேகமாக நடந்து சென்றேன். அவனும் வேகமாக வந்தான். அதற்குள் மெயின் தெரு வந்தது. எதிரில் நிறையக் கடைகள் உள்ளன. அதில் ஒரு தமிழ் கடை வேகமாக அந்தக் கடைக்குள் நுழைந்தேன். அங்கே உள்ள தமிழ் நண்பரிடம்,

"என்னன்னு தெரியலைங்க. என் பின்னாலே வரான். எதுக்குன்னு தெரியலை. கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன். அவன் சென்றதும் சென்றுவிடுகிறேன்" என்றேன்.

ஆனால் அந்தக் கடைக்கார நண்பரோ, "தயவு செய்து கடையை விட்டு வெளியே சென்றுவிடுங்கள்" என்று என்னைத் துரத்தாத குறையாகக் கடையை விட்டு வெளியே தள்ளிவிட்டார். உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை. நானே கிட்டத்தட்ட ஆறு அடி இருப்பேன். அவன் என்னை விட உயரம். சில்வர்ஸடர் ஸ்டோலன் போன்ற உடலமைப்பை கொண்டவன் போல இருந்தான். எனக்காக வெளியே நின்று கொண்டு இருக்கிறான். கடைக்காரனோ என்னை வெளியே துரத்திவிட்டுவிட்டான். ஏதாவது ஒன்று ஆகி போலிஸ் கேஸ் ஆனால் என்ன செய்வது? அதுவும் சிங்கப்பூரில்? வருவது வரட்டும் என்று கடையை விட்டு வெளியே வந்தேன்.

திரும்பவும் என்னை நோக்கி ஆங்கிலத்தில் ஏதோ என்னைக் கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை நோக்கி,

"ஏன் என் பின்னால் வருகிறாய்? என்ன பிரச்சனை? நான் உன்னை என்ன செய்தேன்?" என்றேன்.

கோபம் அதிகமாகி என் சட்டையைப் பிடிக்க வந்தான். முக்கியமான ஆபத்துச் சமயங்களில் என் குல தெய்வத்தையும், திருப்பதி ஏழுமலையானையும் நினைத்துக்கொள்வது என் வழக்கம். அப்படி மனதில் நினைத்துக்கொண்டு மெதுவாக நானும் அவன் கையைப் பிடித்து இருக்கினேன்.

உடனே அவன், "நீ ஏன் அப்படிச் சொன்னாய்?" என்றான்.

"என்ன சொன்னேன்?" என்றேன்.

"யூ ப்ளடி ஃபக்கிங் வொயிட் ஸ்கின். யூ ...... அப்படினு சொல்லலை" என்றான்.

அந்த விநாடியில் தெய்வத்தை நினைத்துக்கொண்டு, "நான் அப்படிச் சொல்லவே இல்லையே. நான் எதற்காக உங்களை அப்படிச் சொல்ல வேண்டும்?" என்று ஆங்கிலத்தில் கூறினேன்.

உடனே என்ன நினைத்தானோ தெரியவில்லை. விறுவிறு என அங்கு இருந்த சந்து போன்ற ஒர் இடத்தை நோக்கி சென்றான். உடனே அந்தக் கடைக்கார தமிழ் நண்பர் ஓடி வந்து, "அண்ணே இங்க நிக்காதீங்க. முதல்ல வேற தெரு வழியா ஹோட்டலுக்குப் போற வழிய பாருங்க" என்று அவசரப்படுத்தினான். உடனே வேறு தெரு வழியாக ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். சென்று கொண்டிருந்த போதுதான் யோசித்துப் பார்த்தேன், "ஏன் அப்படி அவன் என்னைப் பின் தொடர்ந்தான்?" என்று.

அந்தப் பெண்களிடம் அவன் பேரம் பேசியபோது, ஏதோ வாக்குவாதம் ஆகி இருக்கிறது. அப்போது அந்த வீட்டிலோ அருகிலோ இருந்த அந்தப் பெண்களுக்கு வேண்டப்பட்ட நபர் யாரோ இவனைக் கெட்ட வார்த்தையால் ஆங்கிலத்தில் திட்டி இருக்கிறார்கள். காதில் வாங்கிய அவன் மிக அருகில் என்னைப் பார்த்ததும் நான்தான் அவனைத் திட்டினேன் என்று நினைத்து துரத்தி இருக்கிறான். என் நேரம் நன்றாக இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது சண்டையாகி இருந்தால், அதுவும், சிங்கப்பூரில். நினைக்கவே பயமாக் இருக்கிறது. ஹோட்டல் அறைக்கு வந்தும் கொஞ்ச நேரம் அந்தப் படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.

யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்ததால் மனைவியை அழைத்து நடந்ததைச் சொன்னேன். மிகவும் கோபமாகி,

"உங்களை யார் அங்கு எல்லாம் போகச்சொன்னது?"

"இல்லை கதை ஏதாவது கிடைக்கும்னு"

"அப்படி ஒண்ணும் நீங்க கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களை யாரு தனியா அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகச் சொன்னது?"

போனை வைத்துவிட்டேன்.

உண்மைதான்.

அப்படிப்பட்ட இடத்துக்கு இனி தனியாகப் போகக்கூடாது???


Aug 2, 2012

தனிமை....


"தனிமையிலே இனிமை காண முடியுமா?" என்ற பாடலை கேட்கும் போது எல்லாம் ஆசையாக இருக்கும். நான் எப்பொழுதும் நண்பர்கள் கூடவே இருப்பவன். கூட்டுக்குடும்பத்தில் பிறந்து அதிலே வாழ்ந்தவன். அப்படிப்பட்ட எனக்குச் சில வேளைகளில் தனிமையாக இருக்க ஆசை வரும். அப்போது கற்றுக்கொண்டதுதான் தியானம் எல்லாம். பள்ளி கல்லூரி காலங்களில் எதையாவது படிக்க வேண்டும் என்றால் கூடப் பயமாக இருக்கும். அப்பா பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ என்று பயப்படுவேன். ஆனால் அந்தத் தனிமை கிடைக்காமலே இருந்தது. பின் வேலையில் சேர்ந்து அலுவலக விசயமாக ஹோட்டல்களில் தங்கும் போது கூட முதலில் தனியாக ஆசையாக இருக்கும். பின் வேலை முடிந்து ரூமுக்கு செல்ல நேரம் ஆகும். வீட்டில் பேசிவிட்டுப் படுத்தால் தூக்கம் வரும். எங்கும் செல்ல முடியாது. கோலாலம்பூர், சிங்கப்பூர் இரவு வாழ்க்கையைச் சொல்லவே வேண்டியது இல்லை. 

ஆனால் இன்றோ தனிமையில் இருக்கிறேன். இந்தத் தனிமை என்ற விசயம் எவ்வளவு கொடுமையானது என்று இப்போதுதான் தெரிகிறது. வீடு முழுவதும் ஆட்கள் இருந்து விட்டு இன்று அதே வீட்டில் தனியாக இருப்பது போல் உள்ள கொடுமை உலகத்தில் எதுவுமே இல்லை. வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றால் நம் டென்ஷனை குறைக்கக் குழந்தைகளோ அல்லது பகிர்ந்து கொள்ள மனைவியோ இல்லை. சில நேரங்களில் அழுகை அழுகையாக வருகிறது. அப்படியும் மூன்று வேளையும் சமைத்துக் கொண்டு, அலுவலக வேலையும் பார்த்துக்கொண்டு, ஜிம்முக்கு சென்று கொண்டு இருப்பதால் கிடைக்கும் ஓய்வு நேரம் மிக மிகக் குறைவு. அந்த ஓய்வு நேரத்திலும் இப்படிப்பட்ட உணர்வுகள் வருவதைத் தவிர்க்க முடியவில்லை. 

மிகப் பெரிய வீட்டில் கார் பார்க்கில் ஆரம்பித்து ஐந்து கதவுகளைப் பூட்டியும் கூட ஏன் மாடியில் ஏதோ மூலையில் இருக்கும் பெட் ரூம் கதவையும் பூட்டுகிறேன் என்று தெரியவில்லை. முன்பெல்லாம் படுத்தால் தூங்கி விடுவேன். இப்போதோ இரவு தூக்கம் என்பது மிகக் கொடுமையான விசயம் என்று ஆகிப்போனது. தனிமையாக வாழ்பவர்கள் கம்ப்யூட்டர் நெட் கனக்ஷன் வத்திருப்பது மிகப் பெரிய தவறு என்று இப்போது அனுபவப்பூர்வமாகத் தெரிகிறது. தினமும் அதிக நேரம் கண்விழித்துக் கம்ப்யூட்டரில் மூழ்க கூடாது என்று காலையில் போடும் தீர்மானம் இரவில் மறந்து விடுகிறது. சரி அப்படி எதையாவது எழுதுகிறோமா? என்றால் அதுவும். இல்லை. கண்டதையும் படித்துக்கொண்டு, பார்த்துக்கொண்டு!! எனக்கே இது அசிங்கமாகவும், வெட்கமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் வாங்கிய ஏராளமான புத்தகங்கள் அட்டையுடன் என்னைப் பார்த்து அலமாரியில் சிரிக்கின்றன. ஏன் என்னால் முழுக் கவனத்துடன் படிக்கவோ எழுதவோ முடியவில்லை? யோசித்துப் பார்த்தால் ஒன்று தெளிவாகப் புரிகிறது. தனியாக இருக்கிறோம் என்ற உணர்வை மறைக்க, ஏதாவது ஒன்றில் ஈடுபடவேண்டும் என்ற நினைப்பில் மனம் குப்பையை நோக்கி செல்கிறது. இது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் விசயம் என்பதும் மிகத் தெளிவாகத் தெரிகிறது. 

அந்த நேரத்தில் நிறைய நல்ல விசயங்களைப் படிக்கலாம். நிறையக் கதைகள் எழுதலாம். பாட்டுப் பாடலாம், கேட்கலாம். நன்கு யோசித்து ஆராய்ந்து பார்த்தால்தான் மனம் ஒரு இடத்தில் நிற்காமல் கண்டபடி அலைபாய்வது தெரிகிறது. "நாம் யார்? சமுதாயத்தில் நம் நிலை என்ன? நமக்குப் பிள்ளைகள், மனைவி, குடும்பம் இருக்கிறது. இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது" என்று சுய பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமாகிறது. 

நேற்று வெட்டித்தனமாக நேரத்தை செலவு செய்து இரவு அதிக நேரம் முழித்து இருந்ததால் என்னைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரை எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. அதுவும் இல்லாமல் என்னைப் போல் இப்போது தனிமையில் இருப்பவர்கள் தன்னைச் சுயபரிசோதனை செய்து கொள்ளவும் இது உதவும் என்று நம்புகிறேன். 

சென்ற சனிக்கிழமை நடந்த இன்னொரு விசயத்தையும் இங்கே பகிர்வது அவசியமாகிறது. எனக்கு அதிக நண்பர்கள் இருப்பதால் ஆரம்பக் காலங்களில் இருந்தே நிறையப் பேசுவேன். எத்தனை நண்பர்கள் இருந்தாலும் என் பேச்சுத்தான் அதிகமாக இருக்கும். என் பேச்சைத்தான் மற்றவர்கள் கேட்பார்கள். அப்படித்தான் இருந்திருக்கிறேன். இருக்கிறேன். இதில் நன்மையும் உண்டு தீமையும் உண்டு. அலுவகத்தில் மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் பேசக்கூடாது. என்ன தேவையோ அதைத்தான் பேச வேண்டும். நான் அதிகம் பேசுவதால் பல பிரச்சனைகளைச் சந்தித்திருக்கிறேன். என்னால் பேசாமால் இருக்க முடியாது. என்ன செய்வது? 

மிகவும் ஆராய்ந்து பார்த்து ஒரு முடிவு எடுத்தேன். "கொஞ்ம் கொஞ்சமாக அதிகம் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது" செயல்படுத்துவது மிகவும் கடினம் என்றாலும், முயற்சித்துப் பார்க்க முடிவு செய்து செயலில் இறங்கினேன். இந்த நிலையில்தான் என்னையே அறியாமல் ஒரு விசயம் சென்ற சனியன்று நடந்தது. வெள்ளி இரவு மனைவியுடன் பேசிவிட்டு படுக்கும் போது இரவு மணி 10. காலை எழுந்த போது மணி 8.30. அன்று எனக்கு விடுமுறை. முதல் வாரம்தான் நண்பர்கள் வந்து சென்றார்கள். அதனால் எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்தேன். மூன்று வேளையும் புதிதாகச்(?) சமைத்துச் சாப்பிட்டேன். இரவு வந்தது. 10 மணிக்கு மனைவிடமிருந்து போன். அப்பொழுதுதான் அந்த விசயமே எனக்குத் தெரிந்தது. என்னவென்றால் ஏறக்குறைய 24 மணி நேரம் யாரிடமும் நான் பேசாமல் இருந்திருக்கிறேன். என்னையறியாமலேயே நடந்திருக்கிறது. நானும் யாரிடமும் பேசவில்லை. நினைத்து பார்த்தால் சந்தோசமே மிஞ்சியது. பேசினால்தான் பிரச்சனையே வருகிறது. பேசாவிட்டால் எந்தப் பிரச்சனையும் வருவதில்லை. எனர்ஜியும் அநாவசியமாகச் செலவாவதில்லை. 

என்னிடமும்."பிடிக்காததனாலோ இல்லை விசயம் எதுவும் இல்லை என்ற காரணத்தினாலோ அன்று யாரும் என்னிடம் பேசவில்லை" என்ற விசயத்தையும் இங்கே சொல்ல விரும்புகிறேன். 

இந்தக் கட்டுரையை எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ முடித்திருக்கிறேன். இதிலிருந்தே மனம் ஒரு நிலையில் இல்லை என்று தெரிகிறது. அதற்கு ஒரே மருந்து தினமும் எழுதுவதுதான். என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே?