Aug 3, 2012

மோசமான அனுபவம்!


சமீபத்தில் அலுவலக விசயமாகச் சிங்கப்பூர் சென்றிருந்தேன். நான்கு நாட்கள் தங்கி இருந்தேன். நான் வழக்கமாக ஒரே ஹோட்டலில் தான் தங்குவேன். வேலை சீக்கிரம் முடிந்து விட்டால் முஸ்பா ஷாப்பிங் மால் சென்று விட்டு அங்கேயே உள்ள ஏதாவது ஒர் இந்திய ஹோட்டலில் இரவு உணவு முடித்து விட்டு அங்கே சிறிது நேரம் நடப்பது வழக்கம். முஸ்தாவை ஒட்டித்தான் செராங்கூன் ரோடு உள்ளது. அந்தப் பகுதியில்தான் அனுமதிக்கப்பட்ட சிகப்பு விளக்குப் பகுதியில் உள்ளது. அந்தப் பகுதியிலும் நடந்து செல்வது வழக்கம். பெண்களிடம் செல்வதற்காக அல்ல. அங்கே பலதரப்பட்ட மக்களைப் பார்க்கலாம். யாரும் நம்மைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். நெருங்கி அருகில் சென்றால் அங்கே இருக்கும் தமிழ் பெண்கள் சிலர், "அண்ணே வரீங்களா?" என்பார்கள். நாம் புன்னகையுடன் ஒதுங்கி சென்றாலும் நம்மை வற்புறுத்த மாட்டார்கள்.

கதைகள் எழுத ஆரம்பித்த சமயங்களில் சிங்கப்பூர் செல்லும் போதெல்லாம் அந்தப் பெண்களிடம் பேசியதுண்டு. ஆனால் ஒன்றிரண்டு அனுபவங்களைத் தவிர எதையுமே கதைகளாக நான் எழுதியதில்லை. அவ்வளவும் கண்ணீர்க்கதைகள். எந்தப் பெண்ணும் விருப்பப்ப்ட்டு அந்தத் தொழிலுக்குச் செல்வதில்லை என்பது உலகறிந்த உண்மை. யாரோ சொந்தக்காரர்களோ, புரோக்கரோ சில சமயம் கட்டிய கணவனே கூட அந்தப் புதைக்குழியில் அவர்களைத் தள்ளிய சம்பவங்கள் எல்லாம் உண்டு. சிங்கப்பூரில் மட்டும் என்று அல்ல. சிங்கப்பூரிலாவது அனுமதிக்கப்பட்ட பகுதியில்தான் அவர்கள் தொழில் செய்கிறார்கள். கோலாலம்பூரில் ஜலான் மஜித் இந்தியா அருகில் நிறையத் தமிழ் பெண்களை இப்படிப் பார்க்கலாம். என்ன செய்வது ஒரு சான் வயிற்றுக்காக அவர்கள் இந்தத் தொழிலை செய்கிறார்கள்.

எதையாவது மிதித்துவிட்டாலோ அல்லது கையில் பட்டுவிட்டாலோ அருவெறுப்பு பட்டு எத்தனை முறை கைகளையும் கால்களையும் கழுவுகிறோம். ஆனால் அந்தப் பெண்களை நினைத்துப் பாருங்கள். எப்படித்தான் தினமும் இத்தனை ஆண்களை.... சரி, விசயத்து வருகிறேன். ஒரு நாள் வேலை முடிந்து வழக்கம் போல முருகன் இட்லி கடையில் சாப்பிட்டு விட்டு செராங்கூன் ரோட்டிற்குச் சென்றேன். அங்கே எல்லா இடங்களிலும் அப்படிப்பட்ட பெண்களைப் பார்க்கலாம். ஆனால் நான் அன்று செய்த ஒரே தவறு, மெயின் ரோட்டில் செல்லாமல் இரண்டு தெருக்களுக்கும் நடுவில் இருக்கும் தெருவில் சென்றதுதான். அஃதாவது இரண்டு மெயின் ரோட்டின் பின் பகுதி அஃது. அங்கேயும் நிறையப் பெண்கள், ஆண்கள் உலாவுவார்கள். அங்கே சில விதமான டாய்ஸையும் நீங்கள் கடைகள் போல் உள்ள அந்த வீட்டின் பின் பகுதியில் பார்க்கலாம். அந்தப் பகுதிக்குள் நான் நுழைந்த போது ஒரு வீட்டின் பின் பகுதியில் இரண்டு சைனீஷ் பெண்கள் நின்று ஒர் ஆணுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரின் கைகளிலும் சிகரெட். பேசிக்கொண்டிருந்த ஆண் ஒர் வெளிநாட்டு ஆண். ஈரோப்போ அல்லது அமெரிக்க ஆணோ தெரியவில்லை. அவன் அவர்களுடன் ஏதோ பேரம் பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. அந்த இடம் நன்றாக இருட்டாக இருந்தது. அவனின் பேரத்துக்கு அவர்கள் எதிர்ப்பு காட்டுவதும் தெரிந்தது. அந்த நேரத்தில் அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்துக்கு மிக அருகில் சென்றேன். தெருவில் வேறு யாரும் இல்லை.

அப்போது வேறு ஆண் யாரோ எங்கிருந்தோ எதோ சொல்வது கேட்டது. யாரென்று தெரியவில்லை. இருட்டு என்பதாலும், எனக்கு அது சம்பந்தம் இல்லாத விசயம் என்பதாலும் நான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. நான் கிட்டே நெருங்கியவுடன் அந்த ஆண் என்னை நோக்கி வந்து ஏதோ சொல்வது போல் இருந்தது. நான் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவனைக் கடக்க நினைத்தேன். ஆனால் அவன் என் வழியை மறித்தான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அந்தப் பெண்களோ அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றார்கள். நான் மீண்டு கடக்க நினைக்க அவன் என்னைப் பார்த்து ஏதோ சொல்லிக்கொண்டே என் பின்னாலே வந்தான். அவன் பேசிய ஆங்கிலத்தில் இருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால்,

"நீ எங்குப் போனாலும் உன்னை விட மாட்டேன். நீ தங்கி இருக்கும் இடத்துக்கும் வருவேன்"

ஏன் அவ்வாறு சொல்கிறான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை ஹோமோ செக்ஸ்வலாக இருப்பானோ என்ற பயம் வந்துவிட்டது. இவ்வளவு நாள் கட்டிக்காத்த நம் ஒழுக்கத்தை இவன் கெடுத்துவிடுவானோ என்ற பயம் கலந்த அதிர்ச்சி வந்து விட்டது. பின்னாலே வேகமாக நடந்து சென்றேன். அவனும் வேகமாக வந்தான். அதற்குள் மெயின் தெரு வந்தது. எதிரில் நிறையக் கடைகள் உள்ளன. அதில் ஒரு தமிழ் கடை வேகமாக அந்தக் கடைக்குள் நுழைந்தேன். அங்கே உள்ள தமிழ் நண்பரிடம்,

"என்னன்னு தெரியலைங்க. என் பின்னாலே வரான். எதுக்குன்னு தெரியலை. கொஞ்ச நேரம் இங்கே இருக்கேன். அவன் சென்றதும் சென்றுவிடுகிறேன்" என்றேன்.

ஆனால் அந்தக் கடைக்கார நண்பரோ, "தயவு செய்து கடையை விட்டு வெளியே சென்றுவிடுங்கள்" என்று என்னைத் துரத்தாத குறையாகக் கடையை விட்டு வெளியே தள்ளிவிட்டார். உடனே என்ன செய்வது என்று தெரியவில்லை. நானே கிட்டத்தட்ட ஆறு அடி இருப்பேன். அவன் என்னை விட உயரம். சில்வர்ஸடர் ஸ்டோலன் போன்ற உடலமைப்பை கொண்டவன் போல இருந்தான். எனக்காக வெளியே நின்று கொண்டு இருக்கிறான். கடைக்காரனோ என்னை வெளியே துரத்திவிட்டுவிட்டான். ஏதாவது ஒன்று ஆகி போலிஸ் கேஸ் ஆனால் என்ன செய்வது? அதுவும் சிங்கப்பூரில்? வருவது வரட்டும் என்று கடையை விட்டு வெளியே வந்தேன்.

திரும்பவும் என்னை நோக்கி ஆங்கிலத்தில் ஏதோ என்னைக் கெட்டக் கெட்ட வார்த்தையில் திட்ட ஆரம்பித்தான். தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அவனை நோக்கி,

"ஏன் என் பின்னால் வருகிறாய்? என்ன பிரச்சனை? நான் உன்னை என்ன செய்தேன்?" என்றேன்.

கோபம் அதிகமாகி என் சட்டையைப் பிடிக்க வந்தான். முக்கியமான ஆபத்துச் சமயங்களில் என் குல தெய்வத்தையும், திருப்பதி ஏழுமலையானையும் நினைத்துக்கொள்வது என் வழக்கம். அப்படி மனதில் நினைத்துக்கொண்டு மெதுவாக நானும் அவன் கையைப் பிடித்து இருக்கினேன்.

உடனே அவன், "நீ ஏன் அப்படிச் சொன்னாய்?" என்றான்.

"என்ன சொன்னேன்?" என்றேன்.

"யூ ப்ளடி ஃபக்கிங் வொயிட் ஸ்கின். யூ ...... அப்படினு சொல்லலை" என்றான்.

அந்த விநாடியில் தெய்வத்தை நினைத்துக்கொண்டு, "நான் அப்படிச் சொல்லவே இல்லையே. நான் எதற்காக உங்களை அப்படிச் சொல்ல வேண்டும்?" என்று ஆங்கிலத்தில் கூறினேன்.

உடனே என்ன நினைத்தானோ தெரியவில்லை. விறுவிறு என அங்கு இருந்த சந்து போன்ற ஒர் இடத்தை நோக்கி சென்றான். உடனே அந்தக் கடைக்கார தமிழ் நண்பர் ஓடி வந்து, "அண்ணே இங்க நிக்காதீங்க. முதல்ல வேற தெரு வழியா ஹோட்டலுக்குப் போற வழிய பாருங்க" என்று அவசரப்படுத்தினான். உடனே வேறு தெரு வழியாக ஹோட்டலுக்கு விரைந்து சென்றேன். சென்று கொண்டிருந்த போதுதான் யோசித்துப் பார்த்தேன், "ஏன் அப்படி அவன் என்னைப் பின் தொடர்ந்தான்?" என்று.

அந்தப் பெண்களிடம் அவன் பேரம் பேசியபோது, ஏதோ வாக்குவாதம் ஆகி இருக்கிறது. அப்போது அந்த வீட்டிலோ அருகிலோ இருந்த அந்தப் பெண்களுக்கு வேண்டப்பட்ட நபர் யாரோ இவனைக் கெட்ட வார்த்தையால் ஆங்கிலத்தில் திட்டி இருக்கிறார்கள். காதில் வாங்கிய அவன் மிக அருகில் என்னைப் பார்த்ததும் நான்தான் அவனைத் திட்டினேன் என்று நினைத்து துரத்தி இருக்கிறான். என் நேரம் நன்றாக இருந்ததால் ஒன்றும் நடக்கவில்லை. ஏதாவது சண்டையாகி இருந்தால், அதுவும், சிங்கப்பூரில். நினைக்கவே பயமாக் இருக்கிறது. ஹோட்டல் அறைக்கு வந்தும் கொஞ்ச நேரம் அந்தப் படபடப்பு இருந்து கொண்டே இருந்தது.

யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்ததால் மனைவியை அழைத்து நடந்ததைச் சொன்னேன். மிகவும் கோபமாகி,

"உங்களை யார் அங்கு எல்லாம் போகச்சொன்னது?"

"இல்லை கதை ஏதாவது கிடைக்கும்னு"

"அப்படி ஒண்ணும் நீங்க கதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. உங்களை யாரு தனியா அந்த மாதிரி இடத்துக்கு எல்லாம் போகச் சொன்னது?"

போனை வைத்துவிட்டேன்.

உண்மைதான்.

அப்படிப்பட்ட இடத்துக்கு இனி தனியாகப் போகக்கூடாது???


23 comments:

shortfilmindia.com said...

பாஸு. இதோ ஒருகதை கிடைத்திருக்கு அதை ஆக்காம விட்டுட்டீங்களே.. :((

shortfilmindia.com said...

பாஸு. இதோ ஒருகதை கிடைத்திருக்கு அதை ஆக்காம விட்டுட்டீங்களே.. :((

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... தேவையா இது...?

கோவை நேரம் said...

இதையே ஒரு கதையா எழுதினா என்ன...?

துளசி கோபால் said...

அட ராமா !!!!!!

இருளில் சந்துக்குள் நுழையாதே என்பது பாடம்!

BADRINATH said...

அய்யா... கதை கிடக்கட்டும... கடைசியில் உங்கள் மனைவி சொன்னார்கள் பாருங்கள்... அதுதான் மிகச் சிறந்த சூப்பர் கவிதை..

ஜோதிஜி said...

கதை தேடிப்போய் கண்ணீர் விட்ட நேரம் அப்படின்னு ஒரு தலைப்பு வச்சுடுடலாம் போலிருக்கே

kamalakkannan said...

அலசுனர்ட் mrt இறங்கி gaylong லோரங் 24 ஒருதடவை போய் பாருங்க நிறைய கதை கிடைக்கும் :)

உழவன் said...

சார் வணக்கம் ...இதையே ஒரு கதையாய் எழுதிடிங்க...சார்..

Anonymous said...

உங்கள் மனைவி சொல்வது சரியே... நீங்கள் செய்தது வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான்...

மருதநாயகம் said...

"அண்ணே வரீங்களா?"//

அவர்களின் இந்த அழைப்புக்குள்ளே தான் எத்தனை சோகங்கள் புதைந்து இருக்கின்றன

iniyavan said...

// shortfilmindia.com said...
பாஸு. இதோ ஒருகதை கிடைத்திருக்கு அதை ஆக்காம விட்டுட்டீங்களே.. :((//

எழுதிடலாம் தலைவரே!

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
ஹா... ஹா... தேவையா இது...?//

என்ன பண்ணறது? தேவை இல்லைதான். பட்டோனதானே தெரியுது.

iniyavan said...

//கோவை நேரம் said...
இதையே ஒரு கதையா எழுதினா என்ன...?//

எழுதிடலாம் நண்பா!

iniyavan said...

//துளசி கோபால் said...
அட ராமா !!!!!!

இருளில் சந்துக்குள் நுழையாதே என்பது பாடம்!//

புரிஞ்சுகிட்டேன் மேடம். இனி போகமாட்டேன்

iniyavan said...

//BADRINATH said...
அய்யா... கதை கிடக்கட்டும... கடைசியில் உங்கள் மனைவி சொன்னார்கள் பாருங்கள்... அதுதான் மிகச் சிறந்த சூப்பர் கவிதை..//

வருகைக்கு நன்றி பத்ரிநாத்.

iniyavan said...

//ஜோதிஜி திருப்பூர் said...
கதை தேடிப்போய் கண்ணீர் விட்ட நேரம் அப்படின்னு ஒரு தலைப்பு வச்சுடுடலாம் போலிருக்கே//

ஆமால்ல. நல்லா இருக்கீங்களா பாஸு?

iniyavan said...

//kamalakkannan said...
அலசுனர்ட் mrt இறங்கி gaylong லோரங் 24 ஒருதடவை போய் பாருங்க நிறைய கதை கிடைக்கும் :)//

அப்படியா? வருகைக்கு நன்றி நண்பா!

iniyavan said...

//Uzhavan Raja said...
சார் வணக்கம் ...இதையே ஒரு கதையாய் எழுதிடிங்க...சார்..//

முயற்சிக்கிறேன் ராஜா.

iniyavan said...

//balhanuman said...
உங்கள் மனைவி சொல்வது சரியே... நீங்கள் செய்தது வேலியில் போன ஓணானை வேட்டியில் விட்டுக் கொண்ட கதைதான்...//

உண்மதான் சார். இனி ஜாக்கிரதையாக இருப்பேன்.

iniyavan said...

//மருதநாயகம் said...
"அண்ணே வரீங்களா?"//

அவர்களின் இந்த அழைப்புக்குள்ளே தான் எத்தனை சோகங்கள் புதைந்து இருக்கின்ற//

வருகைக்கு நன்றி நண்பா!

முத்துகாளை said...

நினைக்கவே பயமா இருக்கு . எனக்கும் இது போல ஒரு அனுபவம் கோவா பீச்சில் நடந்து இருக்கிறது . கொங்கனி புரியாமல் ஒரு பெண்ணிடம் மாட்டி கொண்டு இருகிறேன் ..இப்போ நினச்சாலும் பயமா இருக்கு

முத்துகாளை said...

கோவா பீச்சில் இது போல ஒரு ஆர்வகோளாறால் மாட்டிகொண்ட அனுபவம் எனக்கும் உண்டு நண்பா ..கொங்கனி ஹிந்தி தெரியாது தப்பிப்பதற்குள் அப்பாடா என்று ஆகிவிட்டது