இந்த முறை திருச்சி செல்லும் போது எங்கள் ஊரில் இருந்து கோலாலம்பூருக்குப் பஸ்ஸில் சென்றேன். நடு இரவு கோலாலம்பூரை அடைந்தேன். அங்கிருந்து கே எல் சென்ட்ரல் சென்று பின் பஸ்ஸில் விமான நிலையம் செல்வதாக ஏற்பாடு. சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்திற்குப் பஸ்ஸில் செல்ல ஏற்கனவே பதிவு செய்து விட்டதால் வேறு வழியில்லை. நடு இரவானாலும் முதல் பஸ்ஸிற்காகக் காத்திருக்க வேண்டிய சூழல். நான் சொல்ல சொல்ல டாக்ஸி டிரைவர் கேட்காமல் ஏதோ ஒரு இடத்தில் இறக்கிவிட்டு விட்டார். கேட்டால், "இப்போது எல்லாம் மாறிவிட்டது. பஸ் இங்குதான் வரும்" என்று கூறிச் சென்றுவிட்டார். அங்கே இருந்த ஒரு ஹோட்டல் நண்பரிடம் கேட்டால், "இல்லை சார். அவர் சொன்னது தவறு. நீங்கள் கொஞ்ச தூரம் நடந்து உள்ளே செல்லுங்கள்" என்றார். ரோட்டிலோ யாரும் இல்லை. தனியாக நடந்து உள்ளே சென்றேன். அங்கு யாரும் இல்லை. பின் இன்னும் கொஞ்ச தூரம் நடந்ததில் ஒரு இடத்தில் ஒரு பெண் அமர்ந்து இருந்தார். அந்த நேரத்தில் தனியாக.... அவரிடம் கேட்டதில், "பஸ் இங்கே நிறகாது. நீங்கள் வெளியே சென்று நில்லுங்கள்" என்றார். ஒரே குழப்பத்தில் இருக்கையில், இரண்டு நபர்கள் வந்தார்கள். அவர்களிடம் பேசியதில் ஒருவர் திருச்சிக்கும் மற்றவர் சென்னைக்கும் செல்வது தெரிந்தது. அங்கே ஒரு பஸ் நின்று கொண்டிருக்க மீண்டும் அலைய விருப்பம் இல்லாததாலும், முதல் பஸ் மூன்று மணிக்கு என்பதாலும் அங்கேயே இருக்க முடிவு செய்தோம்.
அப்போது மணி நள்ளிரவு 1. இன்னும் இரண்டு மணி நேரம் இருக்கிறது. என்ன செய்ய? அப்போது மெதுவாக அவர்களிடம் பேச்சுக்கொடுத்தேன். திருச்சி செல்லும் நபர் ஒரு தனியார் சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்ததாகக் கூறினார். பின் பேச்சு மெல்ல நீண்டது.
"எத்தனை வருசமா மலேசியால இருக்கீங்க?"
"ஆறு வருசமா"
"எவ்வளவு சம்பளம்?"
"1200 வெள்ளி"
"இந்த அளவு சம்பளம் இந்தியால வாங்க முடியாது?"
"வாங்கலாம்தான். ஆனா நிறைய சம்பாதிக்கலாம் என்று நினைத்து இங்கு வந்தேன்"
"ஒரு நாளைக்கு எத்தனை மணி நேர வேலை?"
"12 மணி நேரம்"
கேட்க வேதனையாகிவிட்டது.
"திருமணம் ஆகிவிட்டதா?"
"ஆயிடுச்சு சார்"
"கல்யாணம் ஆகி எத்தனை வருடங்கள் தனியாக வசிக்கின்றீர்கள்"
"ஆறு வருடமாக"
"இது வரை எத்தனை முறை திருச்சி சென்றிருக்கின்றீர்கள்?"
"ஒரே ஒரு முறை இரண்டு வருடங்களுக்கு முன்பு"
"குழந்தை?"
"ஒரே ஒரு குழந்தை. பிறந்து ஒண்ணரை வருடமாகிறது. இன்னும் பார்க்கவில்லை"
அவர் இதை என்னிடம் சொல்லும் போதே அவர்கள் கண்கள் கலங்குவதைப் பார்த்தேன். என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்? திருமணமாகி மனைவியை ஒரே மாதத்தில் தனியே விட்டு விட்டு வந்து..பின் போய், கர்ப்பமாக்கிவிட்டு வந்து, பிள்ளையைக்கூடப் போய் பார்க்காத வாழ்க்கை. இது தேவையா? பின் அவருக்குப் பலவிதமான அறிவுரைகள் சொல்ல ஆரம்பித்தேன். அவர் அப்போது தலையாட்டினாலும், பின் என் அறிவுரைப்படி நடப்பாரா? என்பது சந்தேகமே!
இன்னொரு நண்பர் மெட்ராஸை சேர்ந்தவர். அவரும் இவரின் ரகமே. ஒன்பது வருடங்களாக ஒரு சீனரிடம் ஆட்டோமொபைல் வொர்க்ஷாப்பில் வேலை செய்கிறார். இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை சென்னை செல்கிறாராம். அவரிடமும் அதே கேள்விகளைக் கேட்டேன். அவரோ ஒரே வரியில்...
"நம்ம நாட்டுல எவண்ணே நல்ல வேலை தரான்"
பின் எனக்குப் பேச பிடிக்கவில்லை. பின் அவரே ஆரம்பித்தார், "அப்பா படி படின்னு அடிச்சுக்கிட்டார். அப்போ அவர் சொன்னதைக் கேட்டிருந்தால் இந்த நிலமை எனக்கு வந்திருக்காது"
கண்கெட்ட பின் சூர்ய நமஸ்காரம்.
மிகவும் பரிதாபம். இவர்கள் போல் நிறைய நண்பர்களை இங்கே சந்திக்கிறேன். யாரும் அதிகம் யோசிக்காமல் மலேசியா என்றால் நிறையப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைத்துக் கடனை வாங்கி இங்கே வந்துவிடுகிறார்கள். இங்கே இருக்கும் முதலாளிகளோ அவர்கள் வந்தவுடனே பாஸ்போர்ட்டை வாங்கி வைத்துக்கொள்கிறார்கள். பின் அவர்கள் எங்கும் செல்ல முடியாது. ஏறக்குறைய கொத்தடிமை நிலைதான். முதலாளியுடன் எந்த வம்பும் செய்யச் செய்ய முடியாது. ஏனென்றால் பாஸ்போர்ட் அவர் கையில். அவ்வாறு தவித்த பலரை நாங்கள் கைக்காசு செலவு செய்து இந்தியா அனுப்பி வைத்திருக்கிறோம். வொர்க் பர்மிட் முடிந்து வேலை செய்து மாட்டினால் ஜெயில்தான். வொர்க் பர்மிட் புதுப்பிக்கக் கூட முதலாளிகள் இவர்களிடமே பணத்தை வசூலிக்கிறார்கள். ஆனால் இத்தனை பிரச்சனைகள் இருந்தும் இன்னும் தமிழ் நாட்டில் இருந்து மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
நண்பர்கள் இருவரும் அதிகம் படித்தவர்கள் இல்லை. அதனால் பஸ் ஸ்டாண்டில் ஆரம்பித்து விமானத்தில் ஏறும் வரை அனைத்து உதவிகளையும் செய்தேன். எத்தனை கிலோ லக்கேஜ் புக் செய்திருந்தாலும், அனைத்துலக விமான நிறுவனங்களின் விதிப்படி ஒரு சூட் கேஸில் 32 கிலோவுக்கு மேல் எடுத்துச் செல்லக்கூடாது. மெட்ராஸ் செல்லும் நண்பரின் சூட்கேஸில் 36 கிலோ. பின் அனைத்தையும் பிரித்து, வெவ்வேறு பைகளில் வைத்து, வெயிட் சரிபார்த்து, அவர் லக்கேஜ் செல்லும்வரை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தேன். நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார். அந்த நேரத்தில் திருச்சி செல்லும் நண்பருக்கு இமிகிரேஷனில் பிரச்சனை. அந்த ஆபிஸருக்கு விளக்கி சொல்லிவிட்டு, கீழ் தளத்திற்கு வந்தோம். மெட்ராஸ் விமானம் காலை 6.30க்கு. அதனால் அவரும் நானும் கீழ் தளத்திற்கு சென்றோம். பின் அவருக்கு வேண்டிய மற்ற உதவிகளைச் செய்தேன்.
என்னுடைய விசிட்டிங் கார்ட் கேட்டார். கொடுத்தேன். பார்க்க பாவமாக இருந்ததால், அவரை அழைத்துச் சென்று காலை டிபன் காபி வாங்கிக் கொடுத்தேன். மீண்டும் சில அறிவுரைகள் கூறினேன். மிகுந்த மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தார். பின் அவருக்குச் செல்ல வேண்டிய கேட் நம்பரை சொல்லி நானே அவரை அழைத்துச் சென்று இடத்தைக் காண்பித்தேன். மீண்டும் நன்றி சொன்னவர்,
"மெட்ராஸ் வந்தா வீட்டுக்கு வாங்கண்ணே" என்று சொல்லிவிட்டு உள்ளே விறுவிறுவென்று சென்றுவிட்டார்.
கடைசிவரை அவர் வீட்டு முகவரியோ அல்லது போன் நம்பரோ கொடுக்கவே இல்லை!