சென்ற வெள்ளிகிழமை
இரவு. நன்றாகத்தான் பேசிக்கொண்டிருந்தோம். திடீரென ஏதோ ஒரு பேச்சு வரும்போது, “ஆமாம்.
உங்களைப்பற்றி தெரியாதா? நீங்கள் சின்ன வயதில் செய்தவைகள் எல்லாம் எனக்கும் தெரியும்.
ரொம்ப யோக்கியன் மாதிரி பேசாதீங்க”
இப்படி பேசிய என்
மனைவியின் முகத்தை மிகவும் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன். “என்ன சொல்லுகிறாள்
இவள்? பொத்தாம் பொதுவாக சின்ன வயதில் என்றால் என்ன அர்த்தம்? என்ன தெரியும் இவளுக்கு?
எல்லாம் தெரிந்தால் என்ன ஆகும்? யார் சொல்லி இருப்பார்கள் இவளுக்கு?’
குழப்பத்துடன்
அதே சமயம் மிகவும் ஜாக்கிரதையுடன் அவள் முகத்தை நேராக பார்க்க தைரியம் இல்லாமல் கீழே
பார்த்துக்கொண்டே கேட்டேன், “யார் சொன்னாங்க? என்ன சொன்னாங்க?”
“எல்லாம் உங்க
அக்காக்கள் பேசிட்டாங்க”
“என்ன பேசிகிட்டாங்க?”
“ஏதோ ஒரு பொண்ணுக்கு
லவ் லெட்டர் கொடுத்து பிரச்சனையாகி...ஜீப்புல ஸ்கூலுக்கு தினமும் போய்...”
அப்போழுதுதான்
எனக்கு ஓரளவு நிம்மதி வந்தது. நான் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டேன். நல்ல வேளை எல்லாம்
விசயங்களும் தெரியவில்லை. ஏதோ சின்ன ஒரு விசயம் மட்டும் அவளுக்கு தெரிந்திருக்கிறது.
இப்பொழுது நினைத்தால் இது சின்ன விசயம்தான். ஆனால் அந்த வயதில்.... நினைவு சற்று பின்னோக்கி
சென்றது.
நான் பத்தாவது
படிக்கும் போது நடந்த சம்பவம் இது. நண்பர்கள் பேசிக்கொண்டு இருந்தோம். அப்பொழுது பெண்களைப்
பற்றிய பேச்சு வந்தது. எல்லோரும் அவர்களுக்கு பிடிக்கும் பெண்களைப் பற்றி சொல்ல, நானும்
என் பங்குக்கு என் தெருவில் வசிக்கும் ஒர் பெண்ணை அதுவும் வயதில் மிகவும் சின்ன பெண்ணைப்
பற்றி சொல்ல...அனைவருக்கும் ஆச்சர்யம். தவறாக சொன்னதாக நினைவில்லை. ஆனால் அழகான பெண்.
எனக்குப் பிடித்த பெண் என்று சொன்ன நினைவிருக்கிறது.
அதன் பின் நடந்த
சம்பவங்கள் தான் என் வாழ்வில் மறக்க முடியாதவை. அப்போழுது அங்கே இருந்த நணபர்களில்
ஒருவன் அந்த பெண்ணின் அண்ணனிடம் சொல்ல, அது மிகப் பெரிய பிரச்சனை ஆகிவிட்டது. ஒரு அண்ணன்
என்றாலே பிரச்சனை. மொத்தமாக எட்டு அண்ணன்கள் (கஸின்களையும் சேர்த்து) என்றால் நினைத்துப்
பாருங்கள். பிரச்சனை பெரிய பிரச்சனையாக உருவெடுத்து, தூக்கம் இல்லாமல், குடும்பத்தில்
அனைவரிடமும் திட்டு வாங்கி, அப்பா என்னை சித்தப்பா
வீட்டில் தங்க வைத்து, என்னுடைய தரப்பு வாதத்தை யாரும் கேட்க விரும்பாமல், நான் தப்பு
பண்ணியதாக அவர்களே முடிவெடுத்து அதனால் என் படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு, பின் ஒரு
மாதம் கழித்து பெரியவர்களை எல்லாம் வைத்து பஞ்சாயத்து நடந்து, சமாதானம் ஆகி... மிகப்
பெரிய நாவல் எழுதும் அளவிற்கு விசயம் இருக்கிறது. நிச்சயம் இதை ஒரு நாவலாக எழுதுவேன்.
சிறிது நேரத்திற்கு
பிறகு பழைய நினைவுகளில் இருந்து விலகி, மேலே சொன்ன விசயங்களை மட்டும் சொல்லி “நான்
எந்த தவறும் செய்யவில்லை. இந்த மாதிரி உணர்வுகள் எல்லாம் அந்த அந்த வயதில் ஏற்படும்
சாதாரண விசயம்தான்” என்று சொல்லி என்னை மிகவும் யோக்கியனாக காட்டிக்கொண்டு ஒரு மாதிரி
சமாளித்து பேச்சை வேறு திசைக்கு திருப்ப முயன்றேன்.
அப்பொழுது மகனும்
மகளும் நாங்கள் இருந்த அறைக்கு வந்தார்கள்.
“அப்பா, நாளைக்கு
சினிமா போகிறோம் தானே”
“போலாம்ண்டா”
“என்ன படம்?”
“ரெண்டு படங்கள்தான்
ஓடுது. ஒண்ணு கும்கி இன்னொன்று நீதானே என் பொன் வசந்தம்”
“அப்பா கும்கி
போலாம்” பையன்
“இல்லப்பா நீ தானே
என் பொன் வசந்தம் போலாம்” பெண்
“அப்பா கும்கிலதான்
பாட்டு எல்லாம் நல்லா இருக்கு”
இங்கே ஒரு இடைச்செறுகல்:
நான் கல்லூரி முடிக்கும் வரை அப்பாவுக்கு தெரிந்து தனியாக சினிமா போனதில்லை. கல்லூரி
காலத்தில் அப்பாவுக்கு தெரியாமல் கல்லூரிக்கு கட் அடித்துவிட்டு சினிமா போன அனுபவம்
நிறைய உண்டு. பள்ளி கல்லூரி காலங்களில் நான் சினிமா போக வேண்டும் என்று சொன்னால் அப்பா
அவர் ஆபிஸிலிருந்து ஒரு ஹெட் கிளர்க்கை லீவு கொடுத்து ஜீப்புடன் வீட்டிற்கு அனுப்புவார்.
நான் அவருடன் தான் படம் செல்ல வேண்டும். படம் முடிந்து இரவு சாப்பாடு வாங்கி கொடுத்து
பின் என்னை வீட்டிற்கு வந்து விட்டுவிட்டு அவர் வீட்டிற்கு திருச்சி செல்வார். அதும்
நல்ல படங்களாக பார்த்துதான் கூட்டி செல்வார்.
பையன் கும்கியைப்
பற்றி சொன்னவுடன் உடனே பெண்,
“அப்பா நீ தா எ
பொ வ போலாம்பா”
“ஏண்டா?”
“அருமையான லவ்
ஸ்டோரிப்பா. மிஸ் பண்ணாதிங்கப்பா”
எனக்கு என்ன சொல்வதென்று
தெரியவில்லை. சந்தோசப்படுவதா? இல்லை வருத்தப்படுவதா? 13 வயதில் இருக்கும் என் பெண்
‘அருமையான லவ் ஸ்டோரிப்பா’ என்கிறாள். மனைவி கோபப்பட்டாலும் நான் கோபப்படவில்லை. ஒரு
வழியாக பேச்சை மாற்ற விரும்பினேன்.
பின் பிள்ளைகள்
இருவரும் சீட்டு குலுக்கி போட்டார்கள். கும்கி என்று வந்தது. பையன் அடைந்த சந்தோசத்திற்கு
அளவே இல்லை. என் பெண் முகம் மிகவும் வாடிவிட்டது. என்ன செய்ய யாருக்கு சப்போர்ட் செய்ய?
புரியவில்லை.
சனிக்கிழமை காலை
வந்ததும் பெண் மெதுவாக என்னிடம் வந்தாள், “அப்பா ப்ளீஸ்ப்பா. நீ தா எ பொ வ போலாம்பா”
“நோப்பா. என்னால
ஒண்ணும் செய்ய முடியாது. இது நீங்கள் இருவரும் சேர்ந்து எடுத்த முடிவு. வேணும்னா நீ
தம்பிட்ட பேசிப்பாரு”
தியேட்டருக்கு
சென்றோம். பையன் என்ன நினைத்தானோ தெரியவில்லை.
“அப்பா, அக்கா
ரொம்ப ஆசைப்படறா. பேசாம அவ சொன்ன படத்துக்கே போகலாம்”
நான் எந்த எதிர்ப்பார்ப்பும்
இல்லாமல்தான் படத்திற்கு போனேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை.
ஏற்கனவே முதல் நாள் இரவு என் மனைவி கேட்ட கேள்வி, அதனால் ஏற்பட்ட பழைய நினைவுகள்..மூன்று
மணி நேரம் நான் இந்த உலகத்திலேயே இல்லை. மொத்தத்தில் சொல்வெதென்றால்,
“நீ தானே என் பொன் வசந்தம். அட்டகாசம். 2012ன் உச்சக்கட்ட கொண்டாட்டம்”
படம் பார்க்கும்
போது கண்களில் வழிந்த கண்ணீரை யாருக்கும் தெரியாமல் துடைத்துக்கொண்டேன். மனைவி பார்த்திருக்க
வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். மூன்று மணி நேர என் அமைதி அவர்களுக்கு எதையோ உணர்த்தி
இருக்கிறது.
மகள் கேட்டாள்,
“நான் சொன்னேன்ல டாடி அருமையான காதல் கதைனு”
சிரித்தேன்.
மனைவி அருகில்
வந்து மெதுவாக மிக மெதுவாக கேட்டாள்,
“என்ன பழைய நினைவுகள்
எல்லாம் வந்துடுச்சா”
“இல்லை” என்று
பொய் சொன்னேன்.