Jan 29, 2013

மிக்ஸர் - 29.01.13சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

ஒரு நண்பர். பால்ய சிநேகிதர். மிகவும் நெருக்கமான நண்பர். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர் தினமும் ஃபெமிலி போட்டாவாக முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ரொம்ப நாட்களாக சொல்லலாமா? வேண்டாமா? என்று தவித்துக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு போட்டோ பகிர்ந்தார். மிகவும் யோசித்து, "குடும்ப போட்டோவை முகநூலில் பகிர்ந்து கொள்ள ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய்?" என்று கேட்டு ஒரு கமெண்ட் எழுதினேன். 

அடுத்த நிமிடமே என்னை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டார். என்ன உலகம் இது? ஒரு நல்ல விசயத்தை சொன்னால் தவறா? நண்பர் ஒருவர் தவறு செய்யும் போது அதை "தவறு" என்று உணர்த்துவதுதானே ஒரு உண்மையான நண்பனின் கடமை. 

எது எப்படியோ? அவர் என்னை நீக்கியதால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. லாபம்தான். அவர் படங்களை பகிரும்போது எல்லாம் வரும் சங்கடம் இனி வராது அல்லவா?

********************************************************

எனக்கு விபரம் ஓரளவு தெரிய ஆரம்பித்த நாட்களில் ஆனந்த விகடனில் வந்த தொடர்கதை சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை". ஓரளவு செக்ஸ் அங்கங்கே தெளிக்கப்பட்ட அந்த தொடர்கதையை பாத்ரூமில் யாருக்கும் தெரியாமல் படித்த நினைவு. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் "கனவுத் தொழிற்சாலை" நாவலை கடந்த இரண்டு நாட்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது படிக்கையில் மிகவும் சந்தோசமாகவும் கொண்டாட்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. முன்பு ரசசியமாக வாழ்வில் தெரியாமல் இருந்த பல விசயங்கள் இப்போது புரிந்தபின், தெரிந்தபின், தெளிந்த பின், தற்சமயம் நாவலை படிக்க கொண்டாட்டமாக இருக்கிறது. மொத்தத்தில் சொல்வது என்றால், சரோஜாதேவியின் "இருட்டரையில் இச் இச்" முதல் முறை பள்ளி படிக்கையில் படித்தபோது இருந்த ஆனந்தத்தைவிட பல மடங்கு ஆனந்தம் இப்போது இந்த நாவலை படிக்கையில் ஏற்படுகிறது.

********************************************************

நான் இதுவரை "சாமன்யனின் கதை, வீணையடி நீ எனக்கு மற்றும் "நான் கெட்டவன்" ஆக மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இணையம் முழுவதும் புத்தக கண்காட்சி பற்றிய செய்திதான் இருக்கிறது. யாரை பார்த்தாலும் இத்தனை புத்தகங்கள் வாங்கினேன் அத்தனை புத்தகங்கள் வாங்கினேன் என்று ஒரு லிஸ்ட் போட்டு இருக்கிறார்கள். நானும் இணையம் முழுவதும் எல்லா லிஸ்ட்டிலும் தேடி பார்த்துவிட்டேன். யாருமே என் புத்தகங்களை வாங்கியதாக தெரியவில்லை. 

இதில் நான் வருத்தப்பட ஏதும் இல்லை. தெரிந்தே நான் ஏற்படுத்தி கொண்ட தற்கொலை முயற்சி அது.  ஆனால் எனக்கு புரியாத ஒரு விசயம் இருக்கிறது. அது என்னவென்றால் நான் இணையத்தில் எழுதியபோது நிறைய நண்பர்கள் விரும்பி படித்தார்கள். ஆனால் புத்தகம் என்று வரும் போது ஏன் யாரும் வாங்க விரும்பவில்லை என்று மட்டும் தெரியவில்லை.

நானும் என் நண்பர்கள் எவரையும் வாங்க சொல்லவில்லை. வாங்கியவர்களையும் விமர்சனம் எழுத சொல்லியதில்லை. அந்த அளவிற்கு தலைக்கனம் பிடித்தவன் நான் என்பதும் எனக்கு தெரிந்தே இருக்கிறது. எனக்கு மற்ற நண்பர்கள் போல மார்கெட்டிங் செய்யும் திறமையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் லாப நோக்குடன் எந்த புத்தகங்களையும் வெளியிடவில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லாமே ஒரு ஆத்ம திருப்திக்காக செய்தவைகள்தான்.

பரபரப்பாக எல்லோரும் என் புத்தகங்களை வாங்க நான் என்ன செய்ய வேண்டும்?

"நன்றாக எழுத வேண்டும்" என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

********************************************************

நெருங்கிய நண்பர்கள் பலர். அவர்களில் இவரும் ஒருவர். எனக்காக எதையும் செய்வார். நான் முதல் முதலில் புத்தகங்கள் வெளியிட்டபோது இரண்டு புத்தகங்களிலும் 15 பிரதிகள் வாங்கினார். பணம் வேண்டாம் என்ற போது, 'இல்லை இல்லை இது வியாபாரம். பணம் கொடுத்துதான் வாங்குவேன். அதுவும் இல்லாமல் உன் எழுத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பேன்' என்றார்.

என் முதல் புத்தகத்தில் நிறைய உண்மைகளை எழுதி சில பல நண்பர்களையும், உறவினர்களையும் பகைத்துக்கொண்டேன். அதில் அவரும் ஒரு கதாபாத்திரமாகவோ அல்லது அவரை பற்றிய சம்பவமோ ஏதேனும் வந்திருக்கலாம். படித்து கடுப்பாகி இருந்திருக்கலாம். தெரியவில்லை.

சமீபத்தில் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எதேச்சையாக அலமாரியை பார்க்க நேர்ந்தது. அதில் என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் இருந்ததை பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

என்னைப் பார்த்த நண்பர், "இல்லை...வந்து..." 

"இதற்கு என்னை நீ நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்திருக்கலாம்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வந்துவிட்டேன்.

********************************************************

விஸ்வரூபம் படம் பட பார்க்க மிக ஆவலுடன் காத்திருந்தேன். காலை வேலைகளை முடித்துவிட்டு மதியம் தியேட்டர் செல்லலாம் என திட்டமிட்டிருந்தேன். சரியாக காலை 10 மணிக்கு அவசர வேலை. போக முடியாத சூழல். மதியம் ஒரு மணிக்கு நண்பர் போன் செய்தார். டிக்கெட் எடுத்துவிட்டதாகவும், எப்பொழுது நான் தியேட்டர் வருவேன் என்று கேட்டார். நான் என்னால் வர முடியாது என்று காரணங்களை சொன்னேன்.

"நாங்கள் பார்க்க போகிறோமே என்று என்னிடம் சந்தோசமாக கூறினார்"

எனக்கு செம கடுப்பு. ஆடிட்டர் ஒரு  முக்கியமான ரிப்போர்ட் தர வேண்டி இருந்தது. அவரும் ஒரு தமிழர்தான். அவரிடம் தொலைபேசினேன். அவரோ, "நான் தியேட்டரில் இருக்கிறேன்" என்று வெறுப்பேற்றினார்.

விதியை நொந்து கொண்டு வேலை செய்து கொண்டு இருந்தேன். சரியாக 2.40க்கு நண்பர் போன் செய்தார், படம் தடை செய்யப்பட்டுவிட்டது என்று. ஆடிட்டர் குறுஞ்செய்தி அனுப்பினார்,

"Vishvarupam banned in Malaysia at the 11th Hour"

மற்ற நேரமாக இருந்திருந்தால், "என்னை விட்டு படம் பார்க்கின்றீர்களா? நல்லா வேண்டும்?" என்று சந்தோசப்பட்டிருப்பேன். 

ஆனால், அன்று அப்படி நினைக்க முடியவில்லை.

*******************************************************


மிக்ஸர் - 29.01.13
சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

ஒரு நண்பர். பால்ய சிநேகிதர். மிகவும் நெருக்கமான நண்பர். பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டது. அவர் தினமும் ஃபெமிலி போட்டாவாக முகநூலில் பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. ரொம்ப நாட்களாக சொல்லலாமா? வேண்டாமா? என்று தவித்துக்கொண்டிருந்தேன். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு போட்டோ பகிர்ந்தார். மிகவும் யோசித்து, "குடும்ப போட்டோவை முகநூலில் பகிர்ந்து கொள்ள ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறாய்?" என்று கேட்டு ஒரு கமெண்ட் எழுதினேன்.

அடுத்த நிமிடமே என்னை நண்பர்கள் லிஸ்டில் இருந்து நீக்கிவிட்டார். என்ன உலகம் இது? ஒரு நல்ல விசயத்தை சொன்னால் தவறா? நண்பர் ஒருவர் தவறு செய்யும் போது அதை "தவறு" என்று உணர்த்துவதுதானே ஒரு உண்மையான நண்பனின் கடமை.

எது எப்படியோ? அவர் என்னை நீக்கியதால் எனக்கு ஒன்றும் நஷ்டம் இல்லை. லாபம்தான். அவர் படங்களை பகிரும்போது எல்லாம் வரும் சங்கடம் இனி வராது அல்லவா?

********************************************************

எனக்கு விபரம் ஓரளவு தெரிய ஆரம்பித்த நாட்களில் ஆனந்த விகடனில் வந்த தொடர்கதை சுஜாதாவின் "கனவுத் தொழிற்சாலை". ஓரளவு செக்ஸ் அங்கங்கே தெளிக்கப்பட்ட அந்த தொடர்கதையை பாத்ரூமில் யாருக்கும் தெரியாமல் படித்த நினைவு. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் "கனவுத் தொழிற்சாலை" நாவலை கடந்த இரண்டு நாட்களாக படித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது படிக்கையில் மிகவும் சந்தோசமாகவும் கொண்டாட்டமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது. முன்பு ரசசியமாக வாழ்வில் தெரியாமல் இருந்த பல விசயங்கள் இப்போது புரிந்தபின், தெரிந்தபின், தெளிந்த பின், தற்சமயம் நாவலை படிக்க கொண்டாட்டமாக இருக்கிறது. மொத்தத்தில் சொல்வது என்றால், சரோஜாதேவியின் "இருட்டரையில் இச் இச்" முதல் முறை பள்ளி படிக்கையில் படித்தபோது இருந்த ஆனந்தத்தைவிட பல மடங்கு ஆனந்தம் இப்போது இந்த நாவலை படிக்கையில் ஏற்படுகிறது.

********************************************************

நான் இதுவரை "சாமன்யனின் கதை, வீணையடி நீ எனக்கு மற்றும் "நான் கெட்டவன்" ஆக மூன்று புத்தகங்கள் எழுதியிருக்கிறேன். இணையம் முழுவதும் புத்தக கண்காட்சி பற்றிய செய்திதான் இருக்கிறது. யாரை பார்த்தாலும் இத்தனை புத்தகங்கள் வாங்கினேன் அத்தனை புத்தகங்கள் வாங்கினேன் என்று ஒரு லிஸ்ட் போட்டு இருக்கிறார்கள். நானும் இணையம் முழுவதும் எல்லா லிஸ்ட்டிலும் தேடி பார்த்துவிட்டேன். யாருமே என் புத்தகங்களை வாங்கியதாக தெரியவில்லை.

இதில் நான் வருத்தப்பட ஏதும் இல்லை. தெரிந்தே நான் ஏற்படுத்தி கொண்ட தற்கொலை முயற்சி அது.  ஆனால் எனக்கு புரியாத ஒரு விசயம் இருக்கிறது. அது என்னவென்றால் நான் இணையத்தில் எழுதியபோது நிறைய நண்பர்கள் விரும்பி படித்தார்கள். ஆனால் புத்தகம் என்று வரும் போது ஏன் யாரும் வாங்க விரும்பவில்லை என்று மட்டும் தெரியவில்லை.

நானும் என் நண்பர்கள் எவரையும் வாங்க சொல்லவில்லை. வாங்கியவர்களையும் விமர்சனம் எழுத சொல்லியதில்லை. அந்த அளவிற்கு தலைக்கனம் பிடித்தவன் நான் என்பதும் எனக்கு தெரிந்தே இருக்கிறது. எனக்கு மற்ற நண்பர்கள் போல மார்கெட்டிங் செய்யும் திறமையும் இல்லை என்றே நினைக்கிறேன்.

நான் லாப நோக்குடன் எந்த புத்தகங்களையும் வெளியிடவில்லை என்பதை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எல்லாமே ஒரு ஆத்ம திருப்திக்காக செய்தவைகள்தான்.

பரபரப்பாக எல்லோரும் என் புத்தகங்களை வாங்க நான் என்ன செய்ய வேண்டும்?

"நன்றாக எழுத வேண்டும்" என்று சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன்.

********************************************************

நெருங்கிய நண்பர்கள் பலர். அவர்களில் இவரும் ஒருவர். எனக்காக எதையும் செய்வார். நான் முதல் முதலில் புத்தகங்கள் வெளியிட்டபோது இரண்டு புத்தகங்களிலும் 15 பிரதிகள் வாங்கினார். பணம் வேண்டாம் என்ற போது, 'இல்லை இல்லை இது வியாபாரம். பணம் கொடுத்துதான் வாங்குவேன். அதுவும் இல்லாமல் உன் எழுத்தை எல்லோரிடமும் கொண்டு சேர்ப்பேன்' என்றார்.

என் முதல் புத்தகத்தில் நிறைய உண்மைகளை எழுதி சில பல நண்பர்களையும், உறவினர்களையும் பகைத்துக்கொண்டேன். அதில் அவரும் ஒரு கதாபாத்திரமாகவோ அல்லது அவரை பற்றிய சம்பவமோ ஏதேனும் வந்திருக்கலாம். படித்து கடுப்பாகி இருந்திருக்கலாம். தெரியவில்லை.

சமீபத்தில் அவர் வீட்டிற்கு சென்றிருந்தேன். எதேச்சையாக அலமாரியை பார்க்க நேர்ந்தது. அதில் என்னுடைய புத்தகங்கள் அனைத்தும் இருந்ததை பார்த்தேன். அதிர்ச்சி அடைந்தேன்.

என்னைப் பார்த்த நண்பர், "இல்லை...வந்து..."

"இதற்கு என்னை நீ நடு ரோட்டில் நிற்க வைத்து செருப்பால் அடித்திருக்கலாம்" என்று சொல்லிவிட்டு விறுவிறுவென்று வந்துவிட்டேன்.

********************************************************

Jan 28, 2013

ஏன் அதிகம் படிக்க முடிவதில்லை?எல்லோரும் போல் அதிகம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் முன்பு போல முடியவில்லை. தலைவர் சுஜாதா அவர்கள் இரவு 2 மணி வரை எல்லாம் படிப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன். அவர் ஒன்றும் சாதாரண வேலையில் இருந்தவரில்லை. அவரும் பெரிய பதவியில் இருந்தவர்தான். அவரால் முடிந்தது என்னால் ஏன் முடியவில்லை. நான் ஒரு நாளை சரியாகப் பயன்படுத்துகிறேனா? என ஒரு சந்தேகம் வரவே நேற்று நான் என்னவெல்லாம் செய்தேன் என்று இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன். 

என்னுடைய ஒரு நாள் எப்படிக் கழிகிறது? நேற்று காலை 5.30க்கு எழுந்தேன். முன்பெல்லாம் ஒரு மணி நேரம் நடை பயிற்சி போவேன். இப்போது இல்லை. போனால் மதியம் பட்டினிதான். அதனால் காலை எழுந்து சாதாம் வைத்து, காலி பிளவர் செய்து, பின் தக்காளி சாதம் கிளறி பின் டிபன் கேரியரை கழுவி எல்லாவற்றையும் வைத்து பேக் பண்ணி வைத்துவிட்டு, பின் ஒரு முட்டையை வேக வைத்து அந்த இடைப்பட்ட நேரத்தில் கிச்சனை சுத்தப்படுத்தி, பின் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் இன்னொரு பாக்ஸில் வைத்து, குப்பையைக் கொண்டு போய் வெளியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்த போது காலை 7.10. பின் அவசர அவசரமாக ஓடி சேவ் செய்துவிட்டு குளித்து முடித்துப் பூஜை முடித்து டிரஸ் செய்து வர மணி 8. பின் ஒரு ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்பட மணி 8.15. 

அலுவலகம் வந்தவுடன்தான் நினைவு வந்தது. காலை சாப்பிட ஏதும் இல்லை என்று. பின் ஒரு காபியையும், முட்டையையும் மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்தினேன். காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு டீ சாப்பிட வந்த போது மணி 10. பின் அன்றைய செக்குகள், வவுச்சர்கள் கையெழுத்து இட ஒரு மணி நேரம் ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கும் விடுமுறை. எங்கள் பகுதி மட்டும் ஞாயிறு வேலை நாள். அதனால் எப்பொழுதும் இருக்கும் போன் கால் தொந்தரவுகள் இல்லை. எந்த மீட்டிங்கும் இல்லை. அதனால் மற்ற ரிப்போர்டிங் வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது. 

பின் ஒரு மணிக்கு மதிய உணவு. முடித்து டிபன் கேரியரை கழுவி வைத்துக் காரில் வைத்துவிட்டு என் அறைக்கு வர மணி 1.40. பின் கதவை சாத்திக்கொண்டு 20 நிமிடம் தூக்கம். அது தூக்கமா அல்லது அரைத்தூக்கமா தெரியாது. பின் 2 மணிக்கு ஆரம்பித்த வேலை முடிய மணி 6. இதற்கு நடுவே ஒரு டீ. 6 மணிக்குக் கிளம்புகையில் சில போன் கால்கள். டிராபிக் ஜாமை கடந்து ஜிம் செல்ல மணி 6.40. கடுமையான உடற்பயிற்சி முடிய மணி 8 ஆனது. பின் அங்கிருந்தபடியே பாம்பே ஆபிஸில் நேற்று வேலை பார்த்த நண்பருடன் அலுவலக விசயமாக உரையாடல். பின் அங்கிருந்து கடைக்குச் சென்று இந்த வாரம் தேவைப்படும் காய்கறிகள், காபி பவுடர் இத்யாதி.. எல்லாம் வாங்கி வெளியே வர மணி 9.30. வீட்டிற்குச் சென்றால் நிறைய நேரம் ஆகும் என்பதால் அங்கேயே ஒரு கடையில் ஒரு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வர மணி 10. வந்தவுடன் உடனே காய்கறிகளை எல்லாம் பிரிட்ஜில் வைத்துவிட்டு மற்றப் பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்த போதுதான் நினைவுக்கு வந்தது, காலையில் இட்லிக்கு அரிசி, உளுத்தம்பருப்பு ஊர வைத்தது. உடனே அவசர அவசரமாகக் கிரைண்டரை கழுவி உளுந்தை போட்ட போது மணி 10.10. 

உளுந்து அறையும் அந்த நேரத்தில் பழைய மாவு இருந்த பாத்திரத்தை கழுவி, கிச்சனை ஒர் அளவு ஒழுங்கு படுத்த 10.30 ஆனது. இடையில் மனைவியுடன் டெலிபோன் உரையாடல். பின் 10.35க்கு உளுந்து மாவை எடுத்து வைத்துவிட்டு அரிசி மாவை கிரண்டரில் போட்டுவிட்டு அந்த இடப்பட்ட நேரத்தில் மீண்டும் மனைவிடம் போன். மாவெல்லாம் அரைத்து முடித்து, கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு, கிச்சனை கிளீன் செய்துவிட்டு மணி பார்த்த போது மணி 11.40. அப்போதுதான் நினைவுக்கு வந்தது. இரண்டாவது அக்காவின் திருமணநாள் என்று. அதுவும் 26 ஆவது மணநாள். உடனே அக்காவை தொடர்பு கொண்டு வாழ்த்திவிட்டு, மாமாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வீட்டு, கதவை எல்லாம் பூட்டிவிட்டு மணி பார்த்த போது மணி இரவு 12. பின் தூங்க ஆரம்பித்தால் உடனே தூக்கம் வரவில்லை. ஒரு அரை மணி நேரம் ஆனது. தூங்கும் போது மணி 12.30 இருக்கலாம். 

இன்று காலை எழுந்த போது மணி 5.30. எழுந்தவுடன் கெட்டிலில் இருந்த தண்ணீரை பாட்டிலில் ஊற்றிவிட்டு, புதிதாகத் தண்ணீர் சுட வைத்துவிட்டு, அரிசி களைந்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விட்டு இன்னொரு குக்கரில் கழுவிய உருளைக்கிழங்கை வேகவைத்துவிட்டு, எலும்பிச்சை பழம் கழுவி, வெங்காயம் நறுக்கி, தக்காளி..... இப்படி எல்லா வேலைகளும் செய்து எலும்பிச்சை சாதம் உருளைக்கிழங்கு வறுவல் செய்து.. பின் டிபன் கேரியரை கழுவி எல்லாவற்றையும் வைத்து பேக் பண்ணி வைத்துவிட்டு, பின் ஒரு முட்ட்டையை வேக வைத்து அந்த இடைப்பட்ட நேரத்தில் கிச்சனை சுத்தப்படுத்தி, பின் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் இன்னொரு பாக்ஸில் வைத்து, குப்பையைக் கொண்டு போய் வெளியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்த போது காலை 7.10. பின் அவசர அவசரமாக ஓடி சேவ் செய்துவிட்டு குளித்து முடித்துப் பூஜை முடித்து டிரஸ் செய்து வர மணி 8. பின் ஒரு ஆரன்சு ஜூஸ் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்பட மணி 8.15. 

இப்படிப் போகும் என் வாழ்க்கை சக்கரத்தில் நான் எங்கே படிப்பது? எங்கே எழுதுவது? 

நான் மேலே குறிப்பிட்ட அனைத்து வேலைகளில் சமையல் வேலைகளைத்தவிர மற்ற எல்லா வேலைகளும் சுஜாதா அவர்களுக்கும் இருந்திருக்கும்தானே? அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி அவரால் மட்டும் அவ்வளவு படிக்கவும் எழுதவும் முடிந்தது? ஏன் என்னால் மட்டும் முடியவில்லை? 

இதில் நேரம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், கிடைக்கும் அந்த நேரத்தில் படிக்கும் மனநிலை வரவேண்டும். எழுதும் கற்பனைத்திறன் தடைபடாமல் வர வேண்டும். 

உண்மையில் அதிகம் படித்தவர்கள், படிப்பவர்கள் மற்றும் எழுதுபவர்கள் எல்லாம் புத்திசாலிகள் மட்டும் இல்லை. கடவுளைப்போல நினைத்து போற்றப் பட வேண்டியவர்கள்! 


Jan 24, 2013

என்றோ எழுதியது...


"மோகன்! எவ்வளவு நேரம் சாப்பிடாமா வேலை பார்ப்பீங்க? உடம்பக் கெடுத்துக்காதீங்க. போங்க, போய்ச் சாப்பிட்டு வாங்க" குரல் கேட்டு நிமிர்ந்தான். அவனின் டீம் மேனஜர் குமார் சாப்பிடச் சொல்லிவிட்டு வேகமாகக் கிளம்பி போவதை பார்த்தான். ஆம். பசிக்கத்தான் செய்தது. ஆனால் ஏனோ சாப்பிட மனம் வரவில்லை. காரணம் நேற்று வந்த ஒரு தொலை பேசி அலைப்பு. அக்காதான் இந்தியாவிலிருந்து பேசினாள். அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும், முடிந்தால் வரமுடியுமா? என்றும் கேட்டதிலிருந்து அவனால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. அப்பாவின் வற்புறுத்தலில்தான் அமெரிக்காவே வந்தான். இல்லை என்றால் இதே ப்ராஜக்டை வேறு ஒருவருக்குக் கொடுத்திருப்பார்கள். அவன் அமெரிக்கா கிளம்புகையிலே அவருக்கு உடல்நிலை அவ்வளவு சரியாக இல்லை. மோகனுக்கு அப்பாவை பக்கத்தில் வைத்து தாங்க ஆசை. ஆனால், அப்பாவோ, "மோகன் நம் குடும்ப நிலமை நான் சொல்லி உனக்குத் தெரிய வேண்டியதில்லை. உன் ஒருவனால்தான் இந்தக் குடும்பம் நிமிர்ந்து நிற்க முடியும்" என்று பலவாறு அறிவுரைகளைச் சொல்லி அனுப்பி வைத்தார். 

அப்பா! நினைக்கவே அவன் மனம் சந்தோசத்தில் துள்ளுகிறது. மிகவும் கஷ்டப்பட்ட குடும்பம் மோகனுடையது. இரண்டு அக்கா மற்றும் ஒரு தம்பி தங்கையுடன் பிறந்தவன். மோகனின் அப்பா ரெங்கநாதன் தாலுக்கா ஆபிஸில் ஒரு சாதாரணக் கிளார்க். அவர் நினைத்திருந்தால் எப்படி எல்லாமோ சம்பாதித்து இருந்திருக்கலாம். ஆனால், ஒரு பைசா யாரிடமும் வாங்க மாட்டார். அப்படித்தான் ஒரு முறை, ஒரு சாராய வியாபாரி, ஒரு பைலை தாசில்தாரிடம் சொல்லி கையெழுத்து அவசரமாக வாங்கித் தர சொல்லி, ரெங்கநாதனின் வீட்டிற்கு வந்து பழங்கள், சில சமையல் பொருட்கள், ஆயிரம் ரூபாய் பணம் வைத்துத் தட்டில் வைத்து கொடுத்தார். இவர் என்ன செய்திருக்க வேண்டும். ஒன்று வாங்கி இருக்க வேண்டும். இல்லையென்றால், எனக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை என்று அவரை அனுப்பி இருக்க வேண்டும். ஆனால், இவரோ அவர் கொண்டு வந்த தட்டை தூக்கி எறிந்து அவரைக் கண்டபடி திட்டி வெளியே துரத்திவிட்டார். அதோடு விட்டாரா? தாசில்தாரிடம் சொல்லி அந்தப் பைலை கையெழுத்து போட்டுக்கொடுக்காதபடி செய்துவிட்டார். கோபப்பட்ட அந்தச் சாராயவியாபாரி மோகன் குடும்பத்திற்குக் கொடுத்த தொல்லைகள் கொஞ்ச நஞ்சம் இல்லை. பின் தாசில்தாரே தலையிட்டு பிரச்சனையைத் தீர்க்கும்படி ஆகிவிட்டது. 

மோகன் அவரிடம் ஒரு நாள், "ஏம்பா இப்படி இருக்கீங்க? எல்லோரும் போல இருக்கலாம் இல்லை?" என்று கேட்க, 

"நமக்கு அடுத்தவங்க பணம் எதுக்குடா? நாம உழைச்சுச் சம்பாதிக்கிற பணம்தான் உடம்பில் ஒட்டும். தெரிஞ்சுக்க. பணம் வேணுமா? கடுமையா உழை. அதைவிட்டு விட்டு அடுத்தவங்க பணத்துக்கு ஆசைப்படக்கூடாது" என்று அறிவுரை சொல்ல ஆரம்பித்தார். 

அன்று அப்பாவின் அந்த அறிவுரைதான் மோகனை இன்று வரை கடும் உழைப்பாளியாக மாற்றி இருக்கிறது. 

கடுமையாகப் பசிக்கவே சாப்பிடுவதற்காகக் கேண்டின் சென்றான். தனியாக ஒரு டேபிளில் அமர்ந்தான். மீண்டும் அப்பாவே அவன் மனதை ஆக்கரமித்தார். சீக்கிரம் இந்த ப்ராஜக்ட்டை முடித்துவிட்டால் இந்தியா செல்லலாம். பின் கம்பனியின் டைரக்டரிடம் சொல்லி அமெரிக்கா வேண்டாம் என்று சொல்லிவிடலாம். பின் அப்பாவை பக்கத்துலேயே வைத்துக் கவனிக்கலாம். அப்பாவுக்கு ஓரளவு சரியானவுடன், இரண்டாவது அக்காவிற்கு மாப்பிள்ளை பார்க்க வேண்டும். பின் தங்கைக்கு.. தனக்கு..! நமக்கு என்ன இப்ப அவசரம்? அப்புறம் பார்க்கலாம் என்று மனதை கட்டுப்படுத்தினான். 

ஒரு பர்கரை எடுத்துக்கொண்டு தனியாக ஒரு டேபிளில் அமர்ந்தான். கேண்டினில் அவ்வளவு கும்பல் இல்லை. ஏனென்றால், இது சாப்பாட்டு நேரம் இல்லை. மோகன் தினமும் கண்ட நேரத்தில் வந்து சாப்பிடுவதால், கூட்டத்தை அவன் பார்த்ததில்லை. இந்த அமைதிதான் அவனுக்குப் பிடித்திருக்கிறது. அமெரிக்கர்கள் கூட்டமாக ஆண்களும் பெண்களுமாக அமர்ந்து சாப்பிடுவதை ஏனோ இவன் ரசிப்பதில்லை. சில சமயம் இவன் நினைப்பதுண்டு, "ஒரு வேளை அவர்கள் சந்தோசமாக இருப்பதை நினைத்து நான் பொறாமைப்படுகிறேனோ?'' அதுதான் உண்மை என்றும் இவன் அடிமனது அடிக்கடி சொல்லும். 

பர்கரை எடுத்து வாயில் வைத்தான். ஆனால் சாப்பிடத்தான் முடியவில்லை. மீண்டும் அப்பா... காலம் முழுவதும் பிள்ளைகளுக்காகவே உழைத்திருக்கிறார். தினமும் ஐந்து கிலோ மீட்டர் நடந்தே பஸ் ஸ்டாண்டு செல்வார். அதுவும் கிழிந்த செருப்புடன். ஒரு சைக்கிள் வாங்க கூட அவரிடம் காசு இருந்ததில்லை. பல நாட்கள் கிழிந்த பனியனுடன் அவரைப் பார்த்திருக்கிறான். ஒரு நல்ல பேண்ட் சட்டை அவரிடம் இருந்ததில்லை. ஆனால் மோகனுக்கு ப்ளஸ் ஒன் படிக்கையிலேயே கடன் வாங்கி டிவிஎஸ் 50 வாங்கிக் கொடுத்தார். அப்போது அவன் உணரவில்லை என்றாலும் பின்னாளில் அவரின் அன்பை நினைத்து உருகி இருக்கிறான். அப்பா ரிடையர்ட் ஆகியும் ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலை பார்த்தார். முடியாத வயதிலும் தினமும் காலையில் சென்றால் இரவில்தான் வருவார். இருப்பதைச் சாப்பிடுவார். ஒரு நாள் கூட இது வேண்டும் அது வேண்டும் என்று அம்மாவிடம் சண்டையிட்டதில்லை. 

"ஏம்பா இந்த வயதிலயும் வேலைக்குப் போய்க் கஷ்டப்படுறீங்க?" என்று கேட்கும் நிலையில் மோகன் இல்லை. காரணம், படித்து முடித்துச் சரியான வேலை கிடைக்காமல் இருந்தான். முதலில் அப்பா அவரின் நண்பரின் மூலம் ஒரு வேலை வாங்கிக் கொடுத்திருந்தார். அந்தக் கம்பனியில் 23 நாட்களுக்கு மேல் மோகன் வேலையில் இல்லை. பின் மாமா பாண்டிச்சேரியில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். அங்கும் அதே நிலமை. காரணம் தன் படிப்புக்கேற்ற வேலை வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தான். பின் இரண்டு வருடங்களுக்கு அப்புறம் பெங்களுர் IBMல் வேலை கிடைக்கவே அதில் சேர்ந்தான். அதன் பின் படிப்படியாக முன்னேறி ஓரளவு நல்ல நிலமைக்கு வந்தான். இனி அப்பாவை உட்கார வைத்து சோறு போட வேண்டும் என்று நினைக்கையில் அமெரிக்கா வந்துவிட்டான். இப்போது அப்பாவை உடனடியாகப் பார்க்க வேண்டும் போலிருந்தது மோகனுக்கு. 

சிறு வயதில் அம்மா ஒரு முறை சொன்னது மோகனுக்கு ஏனோ இப்போது நினைவுக்கு வந்தது. ஒரு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஒரு முறை அப்பா சிறு குழந்தையான மோகனையும் அழைத்துக்கொண்டு அம்மாவுடன் திருச்சிக்கு அருகே இருக்கும் வயலூர் முருகன் கோவிலுக்கு அழைத்துச் சென்றாராம். வேண்டுதல் முடிந்தவுடன் ஊருக்குக் கிளம்புகையில் குழந்தை பயங்கரமாக அழுதிருக்கிறது. என்ன காரணம் என்று பார்த்த போது வயிறு சாப்பாடு செரிக்காததால் உப்பி இருந்திருக்கிறது. இப்போது போல் முன்பெல்லாம் பஸ் வசதி இல்லை. அப்பா அம்மாவை கோவிலில் உட்கார வைத்துவிட்டு மோகனை தோளில் தூக்கி வைத்துக்கொண்டு திருச்சி வரை ஓடியே டாக்டரிடம் சென்றாராம். மோகனுக்குச் சரியாகி நன்றாகச் சாப்பிடும் வரை அவரும் சாப்பாடு தண்ணியில்லாமல் இருந்திருக்கிறார். 

நினைவுகளிலிருந்து மீண்டு தன் இடத்திற்குச் சென்றான். கடுமையாக உழைக்க ஆரம்பித்தான். நேரம் காலம் பார்க்காமல், சாப்பாட்டுக்கு கூட முக்கியத்துவம் கொடுக்காமல் வேலையில் ஆழ்ந்தான். அப்போதுதான் சீக்கிரம் ப்ராஜக்ட்டை முடிக்க முடியும். முடித்தால்தான் உடனே இந்தியா செல்ல முடியும் என்று நினைத்துக் கடுமையாக வேலை செய்தான். நல்ல வேலை அப்பாவுக்கு அவ்வளவு சீரியஸ் இல்லையாம். முதுமை பிரச்சனைதானாம். அக்கா போன் செய்து சொன்னாள். கொஞ்சம் நிம்மதியாக வேலை செய்து, அவர்கள் கொடுத்த நாட்களுக்கு முன்னதாகவே வேலையை முடித்தான். 

கம்பனியில் அவன் பாஸ் அசந்து போய் அவனைப்பாராட்டி பார்ட்டி வைத்து அவனைப் புகழ்ந்து தள்ளினார். அடுத்த இரண்டு நாட்களில் இந்தியா செல்ல டிக்கட் புக் செய்து கொடுத்தார்கள். இருந்த ஒரு நாள் ஓய்வில அப்பாவுக்கு ஒரு பேண்ட் சர்ட் வாங்கினான். ஒரு மூக்கு கண்ணாடி வாங்கினான். 

சரியாகக் கிளம்பும் தினத்தன்று அக்கா மீண்டும் போன் செய்தாள், "அப்பாவுக்கு மூச்சு திணறல் அதிகமா இருக்கு" 

படபடப்புடன் விமான நிலையத்தை அடைந்தான். அன்று பார்த்து அவன் செல்ல வேண்டிய விமானம் தாமதமாகக் கிளம்பும் என்ற செய்தியினை அறிந்து துடித்துப் போனான். ஒரு மணி அல்லது இரண்டு மணி நேரம் தாமதம் என்றால் பரவாயில்லை. 

எட்டு மணி நேரம் தாமதம்.வேண்டாத தெய்வம் இல்லை, "ஆண்டவா, விமானம் இன்னும் தாமதமாகப் புறப்படக்கூடாது. சீக்கிரம் கிளம்ப வேண்டும். நான் அப்பாவை உடனே பார்க்க வேண்டும். எப்படியாவது என் அப்பாவை காப்பாற்று. அவரை நான் கொஞ்ச நாள் வைத்திருந்து அழகு பார்க்க வேண்டும். எங்களுக்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டவர் அவர். இனி சந்தோசத்தை மட்டுமே அவர் அனுபவிக்க வேண்டும்" என்று வேண்டிக்கொண்டே இருந்தான். நல்ல வேளை. எட்டு மணி நேர தாமதத்திற்குப் பிறகு மீண்டும் தாமதிக்காமல் விமானம் புறப்பட ஆரம்பித்தது. 24 மணி நேர பயணத்தில் எதுவுமே சாப்பிட தோன்றவில்லை. அப்பா மட்டுமே நினைவில் இருந்தார். 

ஏர் ஹோஸ்டல் வந்து அடிக்கடி பார்த்துவிட்டு, "ஆர் யு ஓக்கே சார்? ஏன் சாப்பாடு வேண்டாமா?" என்று ஆங்கிலத்தில் அடிக்கடி கேட்டாள். இவன் வேண்டாம் என்று கண்ணசைத்துவிட்டு சற்று தூங்க முயற்சித்தான். 

பல விதமான சிந்தனைகள். எல்லாமே அப்பாவைப் பற்றியதுதான். அவனால் அப்பாவைத் தவிர வேறும் எதுவும் சிந்திக்க முடியவில்லை. ஒரு வழியாகச் சென்னை வந்தடைந்தான். உடனே கனக்டிங் விமானம் இல்லாததால் ஒரு வாடகை காரை எடுத்துக்கொண்டு திருச்சி நோக்கி பயணித்தான். இதே அப்பா நல்ல நிலமையில் இருந்தால், இரவில் இவனை மெட்ராஸில் இருந்து திருச்சிக்குக் காரில் வர அனுமதிக்க மாட்டார். இந்த விசயத்தில் கூட அப்பா நினைவுதான். அவனின் ஒவ்வொரு செயலிலும், ஒவ்வொரு அசைவிலும் அப்பா கலந்திருந்தார். டிரைவரிடம் கொஞ்சம் வேகமாகப் போகச் சொன்னான். இவனின் வேதனையை உணர்ந்த டிரைவர் வேகமாக ஓட்ட ஆரம்பித்தார். 

இடையில் ஒரு முறை அக்காவிற்குப் போன் செய்தான். "அப்பாவை வீட்டிற்குக் கூட்டி வந்து விட்டோம். கவலைப்படாத வா. இனி ஒன்றும் பயப்படத்தேவை இல்லை" என்றாள். கொஞ்சம் மனம் நிம்மதி அடைந்தான். ஆனால், அவன் அக்கா அந்தச் சேதியை சாதாரணமாகச் சொல்லாமல் அழுது கொண்டே சொன்னது இவனைக் கலவரப்படுத்தியது. மீண்டும் ஒரு வழியாகச் சாமியை வேண்டிக்கொண்டே சென்றான். மனம் பதபதப்பாய் இருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் திருச்சி சென்றடைந்தான். 

ஒரு வழியாகக் கார் இவன் தெருவை அடைந்து வீட்டை நெருங்குகையில் பக்கத்து வீட்டு கிட்டு மாமா காரை நிறுத்தி, 

"வாடா அம்பி. வந்துட்டியா? இனி உன் தோப்பனார் சரியாயிடுவார். உன்னைத்தான் பார்க்கணும்னு ஓயாம சொல்லிட்டிருந்தார். வந்துட்டியோல்லியோ. இனி பிரச்சனை இல்லை" 

என்று சொன்னவருக்குப் பதில் கூடச் சொல்லாமல் காரை விட்டு வேகமாக அப்பாவை பார்க்க வீட்டிற்குள் ஓடினான் மோகன். 

சிறிது நேரத்தில் "ஐய்யோ" என்று பெண்ணின் பெரிய அழுகுரல் கேட்கவே, வீட்டிற்குள் செல்ல இருந்த கிட்டு மாமா மோகனின் வீட்டிற்கு ஓடி உள்ளே சென்றார். 
அங்கே, மோகன் அவனின் அப்பாவின் காலடியில் விழுந்து கிடந்தான். அவனின் ஒரு கை அப்பாவின் கால்களையும், மற்றொரு கை அவனின் மார்பையும் பிடித்திருந்தது. கண்கள் அப்படியே மேல் நோக்கி ஒரே இடத்தில் இருந்தது. 

அறையின் ஓரத்தில் மோகன் வாங்கி வந்த மூக்கு கண்ணாடி கிடந்தது. 

Jan 11, 2013

மிக்ஸர் - 11.01.13


இனி கூகிள் +ல் பகிர்ந்ததை வார ஒரு முறை இங்கே என் வலைப்பூ வாசகர்களுக்காக பகிர முடிவு செய்துள்ளேன்.

******************************************************************************

சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

நண்பர்களின் பிரிவு என்னை மீளாத்துயரில் ஆழ்த்துகிறது. பிரிவு நட்பு வட்டத்திலிருந்து என்றால் பரவாயில்லை. உலகத்தை விட்டே என்றால்? இன்றும் என் நண்பர்களில் ஒருவர் எங்களை விட்டு சென்றுவிட்டார். மூன்று வருடங்களில் மூன்று பேர். காலையிலிருந்து அந்த மூன்று பேருடன் நான் இருந்த நாட்கள் நினைவில் வந்து வந்து போகின்றது.

******************************************************************************

இன்று காலை "கும்கி" படத்திற்கு மேட்னி ஷோ பார்ப்பதற்காக ரிசர்வ் செய்ய சென்றிருந்தோம். ரிசர்வ் செய்ய முடியாது என்று சொன்னார்கள். காரணம் கேட்டதற்கு, இது வரை யாரும் புக் செய்யவில்லை. குறைந்தது நான்கு பேராவது வர வேண்டும் என்றார்கள். நாங்கள் நான்கு பேர் இருக்கிறோம் என்றேன். இருந்தாலும் 2.45க்கு வாருங்கள். முடியுமா? பார்க்கிறோம். யாரும் வரவில்லை என்றால் ஷோ கேன்சல் என்றார்கள். பின் 2.45க்கு போனோம். யாரும் வரவில்லை. பின் என்ன நினைத்தார்களோ 3.15 க்கு எங்களுக்கு மட்டும் டிக்கட் கொடுத்து, எங்கள் நான்கு பேருக்காக முழு காட்சியும் திரையிட்டார்கள். ஆனால் படம் எனக்கு பிடிக்கவில்லை

******************************************************************************

ஏன் அபிமன்யுவுக்கு சக்கர வியூகத்தில் உள்ளே நுழைய மட்டும் தெரியும் வெளியே வர தெரியாது? எல்லோருக்கும் தெரிந்ததுதான் இருந்தாலும் நானும் சொல்லி வைக்கிறேன். அபிமன்யு அவங்க அம்மா வைத்துல இருக்கும் போது, அவன் அம்மாவா? (அல்லது அர்ச்சுனனா?) கருவிலிருக்கும் குழந்தைக்கு கதை சொல்கிறார். குழந்தை உள்ளே இருந்து கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர் சக்கர வியூகத்தை உடைத்து எப்படி உள்ளே நுழைவது என்று சொல்லி முடித்து எப்படி வெளியேறுவது என்று சொல்ல ஆரம்பிக்கும் போது, அதை திருஷ்டியால் உணர்ந்த கிருஷ்ணன், உடனே வந்து பேச்சை மாற்றி கதையை தொடர முடியாமல் செய்துவிடுகிறான். ஏனென்றால் அபிமன்யு எப்படி சாவான் என்பதை உணர்ந்தவன் கிருஷ்ணன் மட்டுமே. 

இந்த கதையை என் அம்மா என்னிடம் சொல்லி, குழந்தை கருவில் இருக்கும் போது நல்ல விசயங்களை சொல்ல வேண்டும், நல்ல விசயங்களை மட்டுமே தாய் காதில் வாங்க வேண்டும் என்று சொல்வார். அதனால் என் மனைவி முதல் முறை கருத்தரித்த போது தினமும் அதிகாலையில் சாமி பாடல்களை வைத்து மனைவியை கேட்க சொல்வேன். அதனால்தானோ என்னவோ என் பெண் இன்று அருமையாக பாடுகிறாள். மிகுந்த பயபக்தியுடன் இருக்கிறாள்.

******************************************************************************

எனக்கு விவரம் தெரிந்த போது எனக்கு தெரிந்த ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். எனக்கு விவரம் சரியாக தெரிந்து முடிப்பதற்குள் அவர் சென்றுவிட்டார்.என்னை சுற்றி இருந்த அனைத்து நண்பர்களும் திமுக வெறியர்கள். சில நண்பர்களைத் தவிர அனைத்து நண்பர்களும் திமுகதான். இன்றும். எங்கள் ஊர் முழுவதும் திமுக ஆட்கள்தான் அதிகம். அப்பா திக வழியில் வந்ததாலும் அன்பில் நண்பர் என்பதாலும் அவரும் திமுக அனுதாபிதான். நான் இதுவரை எந்த கட்சியிலும் இல்லை. ஆனால் ஸ்டாலின் தலைவரானால், நான் என்னை திமுகவில் இணைத்துக்கொள்ளலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன்.

******************************************************************************

சற்று முன் பார்த்த நாட்டாமை ஷோவில்:

"யாரு பேசறது?"

அவர் பெயர் சொன்னார்.

"என்ன கண்ணு உன் வாழ்க்கைல பிரச்சனை?"

"நான் போன வாரம் ஒரு பொண்ணு பார்க்க போனேன். அந்த பொண்ணுக்கு என்ன புடிச்சிருக்கா? இல்லையானு தெரியணும்"

"அதுக்கு நாங்க என்ன கண்ணு பண்ணனும்"

"அந்த பொண்ணுக்கிட்ட பேசி என்னை பிடிச்ச்சிருக்கான்னு கேட்டு சொல்லுங்க"

"அந்த பொண்ணு பேரு என்னா கண்ணு?"

சொன்னார். அந்த பெண்ணின் எண்ணுக்கு டயல் செய்து,

"கண்ணு ...ங்களா?''

"ஆமா. நீங்க யாரு?"

"நாங்க சன் மியூஸ்க்ல நாட்டாமை ஷோல இருந்து பேசறோம் கண்ணு"

"யாரு நீங்க?''

மீண்டும் சொன்னார்கள்.

"உங்களை xxxx அவர் பொண்ணு பார்த்துட்டு போனாரா?"

"ம்ம்ம்"

"உங்களுக்கு அவரை பிடிச்சிருக்கான்னு கேட்டு சொல்ல சொன்னாரு"

"அவரு கேட்க சொன்ன உடனே நீங்க கேட்டுடுவீங்களா? அந்த ஆளுதான் தினமும் போன் செய்து டார்ச்சர் பண்ணறாருன்னா, நீங்க வேறயா?"

டொக்.

சரி பாட்டுக்கு போலாமா?

உடனே ஒரு பாடல்.

*******************************************************

2009ல்: 

"ஏங்க, என்ன பண்ணறீங்க கம்ப்யூட்டர்ல?

"ப்ளாக் எழுதறேன்"

"பொழுது விடிஞ்சா இதே வேலை"

2010ல்:

"ஏங்கே வேற வேலையே கிடையாதா?"

"இல்ல நிறைய எழுத ஆசை"

"என்னவோ போங்க"

2011ல்:

"ஏற்கனவே பொழு முழுவதும் கம்ப்யூட்டர்ல. இப்ப புத்தகம் வேற போட போறீங்களா?"

"ஆமாம். ஆசையா இருக்கு"

"யாரு படிப்பா?"

"படிக்கறவங்க படிப்பாங்க"

2012ல்:

"ஏற்கனவே புத்தகம் போட்டது பத்தாதுனு இப்ப பதிப்பகம் வேறயா?"

"ஆமாம்"

"விக்கலைனா?"

"பார்ப்போம். நல்லதையே நினைப்போம்"

"பொழுதன்னைக்கும் கம்ப்யூட்டர்லேயே இருப்பதை கொஞ்சம் குறைங்க"

2013 ஜனவரியில்:

"ஏங்க எப்பவும் தனியா இருக்கேன் சொல்லி பொலம்பி கிட்டே இருப்பதற்கு, முன்னாடி மாதிரி ஏதாவது எழுதலாம் இல்லையா?


*******************************************************


Jan 1, 2013

2012ஐ பின்னோக்கியும் 2013ஐ நேராகவும் பார்க்கிறேன்!2012 அவ்வளவு நல்ல வருடமா எனக்கு? என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. சில நல்ல விசயங்களும் சில மன கஷ்டங்களும் என் வாழ்க்கையை தொட்டுவிட்டு சென்றிருக்கின்றன. நல்ல விசயங்கள் என்றால், புதிய வீடுகள் கட்டி ஜனவரியில் கிரஹப்பிரவேசம் செய்தேன். ‘உ’ பதிப்பகம் ஆரம்பித்து மூன்று புத்தகங்கள் வெளியிட்டேன். அதில் என்னுடைய “நான் கெட்டவன்” புத்தகமும் ஒன்று. நிறைய கதைகள் கல்கியில் வந்தன. நிறைய பயணங்கள் மேற்கொண்டேன். எவ்வளவு யோசித்தாலும், இவைகளை தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை.

ஆனால் வருடம் முழுவதும் ஒருவித டென்ஷனிலேயே வாழ்ந்தது போல் இருக்கிறது. பிள்ளைகள் மேற்படிப்புக்காக குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது. வாழ்க்கையில் முதன்முறையாக தனிமையை அனுபவித்தேன். அந்த தனிமை பல பாடங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தது. ஏறக்குறைய ஜூன் மாதத்திலிருந்து நேற்று வரை ஒரு பித்து பிடித்த மன நிலையிலேயே இருந்து வந்தேன். இன்று மிகவும் தெளிவாக உணர்கிறேன். காரணம் என் மனைவியின் அறிவுரை. பொதுவாக நான் யார் அறிவுரைகளையும் கேட்பது இல்லை. ஏனென்றால் எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அந்த கர்வத்தை அவ்வப்போது உடைத்து என்னை சரி செய்வது எப்பொழுதும் என் மனைவிதான்.

சென்ற வருடத்தில் எனக்கு எல்லாமே தாமதமாகத்தான் நடந்தது. வரவேண்டிய சம்பள உயர்வு மூன்று மாதம் தாமதமாக வந்தது. நொறுங்கிபோனேன். என்னதான் அதிக சம்பளம் வாங்கினாலும், நம் உழைப்புக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். வர வேண்டிய நேரத்தில் சம்பள உயர்வு வரவேண்டும். நமக்கு மட்டும் தாமதமாக வந்தால் அதில் ஏதோ விசயம் இருக்கிறது என்று அர்த்தம். நல்ல வேளை அப்படி ஏதும் தவறாக நடக்கவில்லை. வரும் போது எல்லாம் சேர்ந்தே வந்தது. அந்த மூன்று மாதம் ஆண்டவன் எனக்கு வைத்த பரிட்சையாகவே நான் அவற்றை கருதினேன். நல்ல வேளை தவறான எந்த முடிவுக்கும் போகவில்லை.

ஆனால் வேறு ஒரு முக்கியமான மாற்றத்தை எதிர்பார்த்தேன். அது மட்டும் நடக்கவே இல்லை. அதை என்னால் இங்கே பகிர முடியவில்லை. இனி அது நடக்குமா? என்றும் தெரியவில்லை.

நன்றாக யோசித்து பார்த்தால் சென்ற வருடம் முழுவதும் என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்திருக்கிறேன். வெட்கமாக இருக்கிறது. என்னை இந்த அளவிற்கு வைத்திருக்கும் என் நிறுவனத்திற்கோ அல்லது இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்தேன்? ஒன்றுமே செய்யவில்லை. நான் தினமும் செய்யும் வேலையை தவிர வேறு எந்த விதத்தில் என் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டேன் என்று எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. இந்த வருடத்தில் இந்த குறைகளை சரி செய்ய வேண்டும்.

மார்ச் 2009ல் இருந்து வலைப்பூவில் இருக்கிறேன். இது வரை 378 கட்டுரைகள்/அனுபவங்கள்/கதைகள் எழுதியுள்ளேன். இது மிகவும் குறைந்த எண்ணிக்கைதான். நான் எழுத வந்த போது இருந்த வேகம் பின் குறைந்துவிட்டது. சென்ற வருடத்தில் ஏறக்குறைய என்னை தொடர்ந்து படித்து வந்தவர்கள் என்னை மறந்தே போயிருப்பார்கள். அந்த அளவிற்கு நான் இடைவெளி விட்டுவிட்டேன். இந்த வருடத்தில் நிறைய எழுத நினைத்திருக்கிறேன். நிறைய கதைகளும் நல்ல ஒரு நாவலும் எழுத திட்டம் வைத்திருக்கிறேன். நிறைய படிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய ஓய்வு நேரங்களை நல்லவிதமாக செலவழிக்க முடிவெடுத்திருக்கிறேன்.

இது வரை ஆங்கில நாவல்கள் அதிகம் படித்ததில்லை. இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் படித்த ஒரே ஆங்கில நாவல் “Goodbye, Janette by Harold Robbins”.  என்னுடைய ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள இனி ஆங்கில நாவலும் படிக்க முடிவு செய்திருக்கிறேன். நான் இந்த விசயத்தில் ஆரம்ப நிலையில் இருப்பதால் நண்பர்கள் யாருடைய புத்தகத்திலிருந்து தொடங்குவது என்று கூறினால் நன்றி உடையவனாக இருப்பேன்.

இதுவரை குடி, சிகரெட் மற்றும் வேறு எந்த பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை. இந்த வருடமும் அப்படியே கடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மற்றபடி உடல் நலத்தில் எப்பொழுதும் போல ஜிம், நடைப்பயிற்சி என்று தொடர்ந்து செயல்பட உறுதி கொண்டிருக்கிறேன். எப்படியாவது இந்த வருடம் வயிற்றை 31 இன்ச்சுக்கு குறைக்க முடிவெடுத்திருக்கிறேன்.

பொதுவாக நான் புது வருட தீர்மானம் எதுவும் போடுவதில்லை. இந்த வருடம் அதையும் முறியடித்து இந்த பதிவினை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை படிப்பவர்களுக்கு கடுப்பாக இருக்கும். இது எனக்காக நான் எழுதிக்கொள்கிறேன். அவ்வப்போது இந்த இடுகையை படித்து பார்த்து ரிவியூ கொண்டே இருக்க உத்தேசித்துள்ளேன். தினமும் அலுவலகம் வந்ததும் அன்றைய வேலையை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வேன். வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது எல்லா வேலைகளும் முடித்துவிட்டோமா? என்று பார்ப்பேன். முடிக்கவில்லை என்றால் என்ன காரணம் என்று சரி பார்ப்பேன். இந்த இடுகையும் அது போலத்தான். இப்பொழுது எழுதி வைத்துக்கொண்டு அவ்வப்போது சரி பார்ப்பேன்.

மொத்தத்தில் 2013ல் நான் செய்ய வேண்டியவைகள்:
 1. குடும்பத்தோடு வசிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
 2. இன்னும் பெரிய பெரிய பதவிக்கு செல்ல வேண்டும். நிறைய நிறைய சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும்.
 3. என் நிறுவனத்தை இன்னும் நல்ல நிலமைக்கு கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும்
 4. சமுதாயத்திற்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றோருக்கு நிறைய உதவ வேண்டும்
 5. நிறைய படிக்க வேண்டும்
 6. நிறைய எழுத வேண்டும்
 7. ஜிம், நடை பயிற்சி வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் செல்ல வேண்டும்.
 8. ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பிக்க வேண்டும்
 9. ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும்
 10. நிறைய பாடல்கள் பாட பயிற்சி எடுக்க வேண்டும்
 11. எப்பொழுதும் போல் மனம் முழுவதும் சந்தோசமாக கொண்டாட்டத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டும்.
 12. சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக வாழ வேண்டும்.

இவைகள்தான் என் இந்த வருடத்திற்கான தீர்மானங்கள். பார்ப்போம்! எந்த அளவிற்கு என்னால் அனைத்தையும் கடைபிடிக்க முடியும் என்று! தீர்மானம் போடுவது நாம். அதற்குரிய முயறசியில் இறங்குவது நாம். ஆனால் செயல்படுத்துவது “அவன்” அல்லவா?

“என் நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்”