2012
அவ்வளவு நல்ல வருடமா எனக்கு? என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. சில நல்ல விசயங்களும்
சில மன கஷ்டங்களும் என் வாழ்க்கையை தொட்டுவிட்டு சென்றிருக்கின்றன. நல்ல விசயங்கள்
என்றால், புதிய வீடுகள் கட்டி ஜனவரியில் கிரஹப்பிரவேசம் செய்தேன். ‘உ’ பதிப்பகம் ஆரம்பித்து
மூன்று புத்தகங்கள் வெளியிட்டேன். அதில் என்னுடைய “நான் கெட்டவன்” புத்தகமும் ஒன்று.
நிறைய கதைகள் கல்கியில் வந்தன. நிறைய பயணங்கள் மேற்கொண்டேன். எவ்வளவு யோசித்தாலும்,
இவைகளை தவிர வேறு எதுவும் எனக்கு தோன்றவில்லை.
ஆனால்
வருடம் முழுவதும் ஒருவித டென்ஷனிலேயே வாழ்ந்தது போல் இருக்கிறது. பிள்ளைகள் மேற்படிப்புக்காக
குடும்பம் திருச்சிக்கு குடி பெயர்ந்தது. வாழ்க்கையில் முதன்முறையாக தனிமையை அனுபவித்தேன்.
அந்த தனிமை பல பாடங்களை எனக்கு சொல்லிக்கொடுத்தது. ஏறக்குறைய ஜூன் மாதத்திலிருந்து
நேற்று வரை ஒரு பித்து பிடித்த மன நிலையிலேயே இருந்து வந்தேன். இன்று மிகவும் தெளிவாக
உணர்கிறேன். காரணம் என் மனைவியின் அறிவுரை. பொதுவாக நான் யார் அறிவுரைகளையும் கேட்பது
இல்லை. ஏனென்றால் எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் எனக்கு எப்பொழுதும் உண்டு. அந்த
கர்வத்தை அவ்வப்போது உடைத்து என்னை சரி செய்வது எப்பொழுதும் என் மனைவிதான்.
சென்ற
வருடத்தில் எனக்கு எல்லாமே தாமதமாகத்தான் நடந்தது. வரவேண்டிய சம்பள உயர்வு மூன்று மாதம்
தாமதமாக வந்தது. நொறுங்கிபோனேன். என்னதான் அதிக சம்பளம் வாங்கினாலும், நம் உழைப்புக்கு
கிடைக்க வேண்டிய அங்கீகாரம் சரியான நேரத்தில் கிடைக்க வேண்டும். வர வேண்டிய நேரத்தில்
சம்பள உயர்வு வரவேண்டும். நமக்கு மட்டும் தாமதமாக வந்தால் அதில் ஏதோ விசயம் இருக்கிறது
என்று அர்த்தம். நல்ல வேளை அப்படி ஏதும் தவறாக நடக்கவில்லை. வரும் போது எல்லாம் சேர்ந்தே
வந்தது. அந்த மூன்று மாதம் ஆண்டவன் எனக்கு வைத்த பரிட்சையாகவே நான் அவற்றை கருதினேன்.
நல்ல வேளை தவறான எந்த முடிவுக்கும் போகவில்லை.
ஆனால்
வேறு ஒரு முக்கியமான மாற்றத்தை எதிர்பார்த்தேன். அது மட்டும் நடக்கவே இல்லை. அதை என்னால்
இங்கே பகிர முடியவில்லை. இனி அது நடக்குமா? என்றும் தெரியவில்லை.
நன்றாக
யோசித்து பார்த்தால் சென்ற வருடம் முழுவதும் என்னைப் பற்றி மட்டுமே சிந்தித்திருக்கிறேன்.
வெட்கமாக இருக்கிறது. என்னை இந்த அளவிற்கு வைத்திருக்கும் என் நிறுவனத்திற்கோ அல்லது
இந்த சமுதாயத்திற்கு நான் என்ன செய்தேன்? ஒன்றுமே செய்யவில்லை. நான் தினமும் செய்யும்
வேலையை தவிர வேறு எந்த விதத்தில் என் நிறுவனத்தின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டேன் என்று
எனக்கு சரியாக சொல்லத் தெரியவில்லை. இந்த வருடத்தில் இந்த குறைகளை சரி செய்ய வேண்டும்.
மார்ச் 2009ல் இருந்து வலைப்பூவில் இருக்கிறேன். இது வரை 378 கட்டுரைகள்/அனுபவங்கள்/கதைகள்
எழுதியுள்ளேன். இது மிகவும் குறைந்த எண்ணிக்கைதான். நான் எழுத வந்த போது இருந்த வேகம்
பின் குறைந்துவிட்டது. சென்ற வருடத்தில் ஏறக்குறைய என்னை தொடர்ந்து படித்து வந்தவர்கள்
என்னை மறந்தே போயிருப்பார்கள். அந்த அளவிற்கு நான் இடைவெளி விட்டுவிட்டேன். இந்த வருடத்தில்
நிறைய எழுத நினைத்திருக்கிறேன். நிறைய கதைகளும் நல்ல ஒரு நாவலும் எழுத திட்டம் வைத்திருக்கிறேன்.
நிறைய படிக்கவும் முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய ஓய்வு நேரங்களை நல்லவிதமாக செலவழிக்க
முடிவெடுத்திருக்கிறேன்.
இது
வரை ஆங்கில நாவல்கள் அதிகம் படித்ததில்லை. இதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் படித்த ஒரே ஆங்கில நாவல் “Goodbye, Janette by Harold
Robbins”. என்னுடைய ஆங்கில அறிவை வளர்த்துக்கொள்ள இனி ஆங்கில
நாவலும் படிக்க முடிவு செய்திருக்கிறேன். நான் இந்த விசயத்தில் ஆரம்ப நிலையில் இருப்பதால்
நண்பர்கள் யாருடைய புத்தகத்திலிருந்து தொடங்குவது என்று கூறினால் நன்றி உடையவனாக இருப்பேன்.
இதுவரை
குடி, சிகரெட் மற்றும் வேறு எந்த பழக்கத்திற்கும் அடிமையாகவில்லை. இந்த வருடமும் அப்படியே
கடக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். மற்றபடி உடல் நலத்தில் எப்பொழுதும் போல ஜிம்,
நடைப்பயிற்சி என்று தொடர்ந்து செயல்பட உறுதி கொண்டிருக்கிறேன். எப்படியாவது இந்த வருடம்
வயிற்றை 31 இன்ச்சுக்கு குறைக்க முடிவெடுத்திருக்கிறேன்.
பொதுவாக
நான் புது வருட தீர்மானம் எதுவும் போடுவதில்லை. இந்த வருடம் அதையும் முறியடித்து இந்த
பதிவினை எழுதிக்கொண்டிருக்கிறேன். இதை படிப்பவர்களுக்கு கடுப்பாக இருக்கும். இது எனக்காக
நான் எழுதிக்கொள்கிறேன். அவ்வப்போது இந்த இடுகையை படித்து பார்த்து ரிவியூ கொண்டே இருக்க
உத்தேசித்துள்ளேன். தினமும் அலுவலகம் வந்ததும் அன்றைய வேலையை ஒரு நோட்டில் எழுதி வைத்துக்கொள்வேன்.
வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது எல்லா வேலைகளும் முடித்துவிட்டோமா? என்று பார்ப்பேன்.
முடிக்கவில்லை என்றால் என்ன காரணம் என்று சரி பார்ப்பேன். இந்த இடுகையும் அது போலத்தான்.
இப்பொழுது எழுதி வைத்துக்கொண்டு அவ்வப்போது சரி பார்ப்பேன்.
மொத்தத்தில்
2013ல் நான் செய்ய வேண்டியவைகள்:
- குடும்பத்தோடு வசிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாக செய்ய முயற்சிக்க வேண்டும்.
- இன்னும் பெரிய பெரிய பதவிக்கு செல்ல வேண்டும். நிறைய நிறைய சம்பாதிக்க முயற்சிக்க வேண்டும்.
- என் நிறுவனத்தை இன்னும் நல்ல நிலமைக்கு கொண்டுவர கடுமையாக உழைக்க வேண்டும்
- சமுதாயத்திற்கு, ஏழைகளுக்கு, ஆதரவற்றோருக்கு நிறைய உதவ வேண்டும்
- நிறைய படிக்க வேண்டும்
- நிறைய எழுத வேண்டும்
- ஜிம், நடை பயிற்சி வாரத்தில் குறைந்தது ஐந்து நாட்கள் செல்ல வேண்டும்.
- ஆங்கில நாவல்கள் படிக்க ஆரம்பிக்க வேண்டும்
- ஏதாவது ஒன்றை சாதிக்க வேண்டும்
- நிறைய பாடல்கள் பாட பயிற்சி எடுக்க வேண்டும்
- எப்பொழுதும் போல் மனம் முழுவதும் சந்தோசமாக கொண்டாட்டத்துடன் வாழ்க்கையை வாழ வேண்டும்.
- சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, பிள்ளைகளுக்கு நல்ல தகப்பனாக வாழ வேண்டும்.
இவைகள்தான்
என் இந்த வருடத்திற்கான தீர்மானங்கள். பார்ப்போம்! எந்த அளவிற்கு என்னால் அனைத்தையும்
கடைபிடிக்க முடியும் என்று! தீர்மானம் போடுவது நாம். அதற்குரிய முயறசியில் இறங்குவது
நாம். ஆனால் செயல்படுத்துவது “அவன்” அல்லவா?
“என்
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்”
1 comment:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்துக்கும்
வருடத்தின் முதல் பதிவு :)
Post a Comment