Jan 28, 2013

ஏன் அதிகம் படிக்க முடிவதில்லை?எல்லோரும் போல் அதிகம் படிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால் முன்பு போல முடியவில்லை. தலைவர் சுஜாதா அவர்கள் இரவு 2 மணி வரை எல்லாம் படிப்பார் என்று கேள்விபட்டிருக்கிறேன். அவர் ஒன்றும் சாதாரண வேலையில் இருந்தவரில்லை. அவரும் பெரிய பதவியில் இருந்தவர்தான். அவரால் முடிந்தது என்னால் ஏன் முடியவில்லை. நான் ஒரு நாளை சரியாகப் பயன்படுத்துகிறேனா? என ஒரு சந்தேகம் வரவே நேற்று நான் என்னவெல்லாம் செய்தேன் என்று இங்கே எழுதலாம் என்று நினைக்கிறேன். 

என்னுடைய ஒரு நாள் எப்படிக் கழிகிறது? நேற்று காலை 5.30க்கு எழுந்தேன். முன்பெல்லாம் ஒரு மணி நேரம் நடை பயிற்சி போவேன். இப்போது இல்லை. போனால் மதியம் பட்டினிதான். அதனால் காலை எழுந்து சாதாம் வைத்து, காலி பிளவர் செய்து, பின் தக்காளி சாதம் கிளறி பின் டிபன் கேரியரை கழுவி எல்லாவற்றையும் வைத்து பேக் பண்ணி வைத்துவிட்டு, பின் ஒரு முட்டையை வேக வைத்து அந்த இடைப்பட்ட நேரத்தில் கிச்சனை சுத்தப்படுத்தி, பின் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் இன்னொரு பாக்ஸில் வைத்து, குப்பையைக் கொண்டு போய் வெளியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்த போது காலை 7.10. பின் அவசர அவசரமாக ஓடி சேவ் செய்துவிட்டு குளித்து முடித்துப் பூஜை முடித்து டிரஸ் செய்து வர மணி 8. பின் ஒரு ஆரஞ்சு ஜூஸ் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்பட மணி 8.15. 

அலுவலகம் வந்தவுடன்தான் நினைவு வந்தது. காலை சாப்பிட ஏதும் இல்லை என்று. பின் ஒரு காபியையும், முட்டையையும் மட்டும் சாப்பிட்டுவிட்டு வேலையில் கவனம் செலுத்தினேன். காலை வேலைகளை ஓரளவு முடித்துவிட்டு டீ சாப்பிட வந்த போது மணி 10. பின் அன்றைய செக்குகள், வவுச்சர்கள் கையெழுத்து இட ஒரு மணி நேரம் ஆனது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் எங்கும் விடுமுறை. எங்கள் பகுதி மட்டும் ஞாயிறு வேலை நாள். அதனால் எப்பொழுதும் இருக்கும் போன் கால் தொந்தரவுகள் இல்லை. எந்த மீட்டிங்கும் இல்லை. அதனால் மற்ற ரிப்போர்டிங் வேலைகளில் கவனம் செலுத்த முடிந்தது. 

பின் ஒரு மணிக்கு மதிய உணவு. முடித்து டிபன் கேரியரை கழுவி வைத்துக் காரில் வைத்துவிட்டு என் அறைக்கு வர மணி 1.40. பின் கதவை சாத்திக்கொண்டு 20 நிமிடம் தூக்கம். அது தூக்கமா அல்லது அரைத்தூக்கமா தெரியாது. பின் 2 மணிக்கு ஆரம்பித்த வேலை முடிய மணி 6. இதற்கு நடுவே ஒரு டீ. 6 மணிக்குக் கிளம்புகையில் சில போன் கால்கள். டிராபிக் ஜாமை கடந்து ஜிம் செல்ல மணி 6.40. கடுமையான உடற்பயிற்சி முடிய மணி 8 ஆனது. பின் அங்கிருந்தபடியே பாம்பே ஆபிஸில் நேற்று வேலை பார்த்த நண்பருடன் அலுவலக விசயமாக உரையாடல். பின் அங்கிருந்து கடைக்குச் சென்று இந்த வாரம் தேவைப்படும் காய்கறிகள், காபி பவுடர் இத்யாதி.. எல்லாம் வாங்கி வெளியே வர மணி 9.30. வீட்டிற்குச் சென்றால் நிறைய நேரம் ஆகும் என்பதால் அங்கேயே ஒரு கடையில் ஒரு சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வர மணி 10. வந்தவுடன் உடனே காய்கறிகளை எல்லாம் பிரிட்ஜில் வைத்துவிட்டு மற்றப் பொருட்களை எல்லாம் அந்தந்த இடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்த போதுதான் நினைவுக்கு வந்தது, காலையில் இட்லிக்கு அரிசி, உளுத்தம்பருப்பு ஊர வைத்தது. உடனே அவசர அவசரமாகக் கிரைண்டரை கழுவி உளுந்தை போட்ட போது மணி 10.10. 

உளுந்து அறையும் அந்த நேரத்தில் பழைய மாவு இருந்த பாத்திரத்தை கழுவி, கிச்சனை ஒர் அளவு ஒழுங்கு படுத்த 10.30 ஆனது. இடையில் மனைவியுடன் டெலிபோன் உரையாடல். பின் 10.35க்கு உளுந்து மாவை எடுத்து வைத்துவிட்டு அரிசி மாவை கிரண்டரில் போட்டுவிட்டு அந்த இடப்பட்ட நேரத்தில் மீண்டும் மனைவிடம் போன். மாவெல்லாம் அரைத்து முடித்து, கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்துவிட்டு, கிச்சனை கிளீன் செய்துவிட்டு மணி பார்த்த போது மணி 11.40. அப்போதுதான் நினைவுக்கு வந்தது. இரண்டாவது அக்காவின் திருமணநாள் என்று. அதுவும் 26 ஆவது மணநாள். உடனே அக்காவை தொடர்பு கொண்டு வாழ்த்திவிட்டு, மாமாவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு வீட்டு, கதவை எல்லாம் பூட்டிவிட்டு மணி பார்த்த போது மணி இரவு 12. பின் தூங்க ஆரம்பித்தால் உடனே தூக்கம் வரவில்லை. ஒரு அரை மணி நேரம் ஆனது. தூங்கும் போது மணி 12.30 இருக்கலாம். 

இன்று காலை எழுந்த போது மணி 5.30. எழுந்தவுடன் கெட்டிலில் இருந்த தண்ணீரை பாட்டிலில் ஊற்றிவிட்டு, புதிதாகத் தண்ணீர் சுட வைத்துவிட்டு, அரிசி களைந்து எலக்ட்ரிக் குக்கரில் வைத்து விட்டு இன்னொரு குக்கரில் கழுவிய உருளைக்கிழங்கை வேகவைத்துவிட்டு, எலும்பிச்சை பழம் கழுவி, வெங்காயம் நறுக்கி, தக்காளி..... இப்படி எல்லா வேலைகளும் செய்து எலும்பிச்சை சாதம் உருளைக்கிழங்கு வறுவல் செய்து.. பின் டிபன் கேரியரை கழுவி எல்லாவற்றையும் வைத்து பேக் பண்ணி வைத்துவிட்டு, பின் ஒரு முட்ட்டையை வேக வைத்து அந்த இடைப்பட்ட நேரத்தில் கிச்சனை சுத்தப்படுத்தி, பின் முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் இன்னொரு பாக்ஸில் வைத்து, குப்பையைக் கொண்டு போய் வெளியில் உள்ள குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு நிமிர்ந்த போது காலை 7.10. பின் அவசர அவசரமாக ஓடி சேவ் செய்துவிட்டு குளித்து முடித்துப் பூஜை முடித்து டிரஸ் செய்து வர மணி 8. பின் ஒரு ஆரன்சு ஜூஸ் சாப்பிட்டுவிட்டு அலுவலகம் புறப்பட மணி 8.15. 

இப்படிப் போகும் என் வாழ்க்கை சக்கரத்தில் நான் எங்கே படிப்பது? எங்கே எழுதுவது? 

நான் மேலே குறிப்பிட்ட அனைத்து வேலைகளில் சமையல் வேலைகளைத்தவிர மற்ற எல்லா வேலைகளும் சுஜாதா அவர்களுக்கும் இருந்திருக்கும்தானே? அப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி அவரால் மட்டும் அவ்வளவு படிக்கவும் எழுதவும் முடிந்தது? ஏன் என்னால் மட்டும் முடியவில்லை? 

இதில் நேரம் கிடைப்பது ஒருபுறம் இருந்தாலும், கிடைக்கும் அந்த நேரத்தில் படிக்கும் மனநிலை வரவேண்டும். எழுதும் கற்பனைத்திறன் தடைபடாமல் வர வேண்டும். 

உண்மையில் அதிகம் படித்தவர்கள், படிப்பவர்கள் மற்றும் எழுதுபவர்கள் எல்லாம் புத்திசாலிகள் மட்டும் இல்லை. கடவுளைப்போல நினைத்து போற்றப் பட வேண்டியவர்கள்! 


3 comments:

வரதராஜலு .பூ said...

உங்க ரைட்டிங் ஸ்டைல் ரொம்பவே இம்ரசிவ்வா இருக்குங்க.

korangupaiyan said...

அண்ணே, உங்களால முடியும்னா இதை முயற்சி செய்து பாருங்கள். தினமும் சமையல் செய்வது, சமையல் செய்த பாத்திரங்களை கழுவுவது, சமையல் அறையை சுத்தம் செய்வது என்பது, அதன் பிறகு வேலைக்கு செல்வது என்று இருப்பது மிகவும் கடினம். வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமாவது மதியம் உணவாக வெறும் பழம் மட்டும் சாப்பிட்டு பாருங்கள். கொஞ்சம் கடினம்தான், ஆனால் பழகி விடும். உடம்பிற்கும் நல்லது. எப்படியாவது மாவு ஆட்டுவதை வார இறுதியில் செய்ய பாருங்கள். மாவு ஆட்டுவதை விட கழுவுவது மிகவும் தொல்லை பிடித்த வேலை :) இந்த இரண்டை மட்டும் கடை பிடித்தாலே நேரம் கொஞ்சம் கிடைக்கும். நீங்கள் பதிவில் சொன்ன அனைத்தையும் நானும் ஒரு காலத்தில் செய்து பார்த்தேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழங்கள் பக்கம் தாவி சென்ற பிறகு மூச்சு விட முடிந்ததது :)

அமர பாரதி said...

பதிவு நன்றாக உள்ளது. சுஜாதா பகல் முழுதும் அலுவலகத்தில் வேலை செய்திருப்பார் என்று தோன்றவில்லை. உங்களுடய நாளில் சமையல் மட்டும் பெரும் நேரத்தை எடுத்துக் கொண்டிருக்கிறது, அதுவும் அவர் செய்திருக்க மாட்டார்.