Feb 25, 2013

மிக்ஸர் - 25.02.13சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

தினமும் காலையில் வீட்டில் இருந்து கிளம்பினால் அலுவலகம் வந்து சேர 45 நிமிடங்கள் ஆகும். ஒரு ஓவர் பிரிட்ஜ் கட்டுவதால் தினமும் காலையிலும் மாலையிலும் இந்த டிராபிக் தொந்தரவை அனுபவிக்க வேண்டியாத உள்ளது. நேற்றும் இன்றும் சைனிஷ் நியூ இயர் விடுமுறை. அதனால் ரோட்டில் ஒரு காரும் இல்லை. இன்று வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு 9 நிமிடத்தில் வந்து சேர்ந்தேன். ஆனால் மனம் எதையோ இழந்ததை போல் உள்ளது.

பழகிப்போன மனசு! என்ன செய்யும் பாவம்!!!

*************************************************************

திருமணமான எல்லோரும் மனைவியை காதலியுங்கள்.

இதுவரை காதலித்துக்கொண்டு இருப்பவர்கள் இன்றிலிருந்து அதிகமாக மனைவியை காதலிக்க/ நேசிக்க ஆரம்பியுங்கள்.

மனைவியை இதுவரை காதலிக்காதவர்கள் இன்றிலிருந்து காதலிக்க ஆரம்பியுங்கள்.

கல்யாணமான எல்லோருக்கும் காதலர் தின வாழ்த்துகள்.

*************************************************************

அலுவலகத்தில் நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்த போது என் பையனை பற்றிய பேச்சு வந்தது. அவன் 'இந்த வயதிலேயே அதிகம் பேசுகிறான். ரொம்ப naughtyயாக' என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

நண்பர் உடனே, "அப்படி என்ன செய்கிறான்?" என்றார்.

"அதிகம் கோபப்படுகிறான். நிறைய பேசுகிறான்"

"அப்புறம்?"

"கோபம் வந்தால், கதவை வேகமாக அறைந்து சாத்துகிறான்"

"அப்புறம்?"

"கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கி வீசுகிறான். இதுவரை பல டிவி ரிமோட் வாங்கிவிட்டோம். யார் சொல்வதையும் கேட்பதில்லை" என்றேன்.

நண்பர் முகத்தில் சிரிப்பு.

"என்ன சார் சிரிக்கிறீங்க?. நானே கடுப்புல இருக்கேன்"

"பின்ன என்ன சார்? சந்தோசப்படுவதற்கு பதில் அவனை பற்றி குறை சொல்கின்றீர்கள்" என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் அவரை கேட்டேன், "சார், என்ன சொல்ல வர்றீங்க? எனக்கு புரியலை?"

"சார், உங்க பையனை பத்தி கவலையே படாதீங்க. ஏன்னா, ஒரு கம்பனியின் CEO விற்கு உள்ள அனைத்து தகுதியும் உங்கள் பையனிடம் இருக்கிறது"

எனக்கு சிரிப்பதா இல்லை சந்தோசப்படுவதா தெரியவில்லை.

*************************************************************

நானும் நண்பர் ஒருவரும் ஒரு ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். அது ஒரு பாடாவதியான ஹோட்டல். சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் நண்பர்,

"சார், வரும் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஒரு புது இந்தியன் ஹோட்டல் வருகிறது"

"சூப்பர். உண்மையாவா? எந்த இடத்தில்?"

"போஸ்ட் ஆபிஸ் இருக்குல்ல அதுல இருந்து நாலு கடை தள்ளி"

"கேட்கவே சந்தோசமா இருக்கு. இனி லன்ச் பிரச்சனை இருக்காது"

பின் சாப்பிட்டு முடித்தோம். கிளம்புகையில் நான் அவரிடம் "அந்த ஹோட்டல் இடத்தை பார்த்துவிட்டு செல்லலாமா?" என்றேன்.

"சார், நான் ஞாயிறு சாப்பிட்டுவிட்டு சொல்கிறேன்"

"பரவாயில்லை வாங்க போய் பார்க்கலாம்"

வேண்டா வெறுப்பாக என்னுடன் வந்தார். போனோம். போஸ்ட் ஆபிஸ் அருகில் உள்ள ஒரு ஹோட்டலை காண்பித்து "இதுதான்" என்றார். கடை பூட்டி இருந்தது.

நான் உடனே "அவர்களிடம் பேசி பார்க்கலாமா? என்ன மாதிரி இந்திய உணவு என்று?" என்றேன்.

"போன் நம்பர்.... இதோ அந்த நேம் போர்டில் இருக்கிறதே" என்றார்.

அந்த நம்பருக்கு போன் செய்தேன். போனை எடுத்த நபர் மலாய் மொழியில் பேசினார். பின் ஒரு பெண்ணிடம் கொடுத்தார். அவரிடம் ஆங்கிலத்தில்,

"ஞாயிறு கடை உண்டா?"

"உண்டே"

"எல்லாவிதமான உணவும் கிடைக்குமா?"

"கிடைக்கும்"

"இந்திய உணவு கிடைக்குமா?"

"கேட்டால் செய்து தருகிறோம்"

"இந்திய உணவு கடை என்றார்களே?"

"இல்லையே நாங்கள் வெஸ்டர்ன் உணவு அல்லவா கொடுக்கிறோம்"

"ஞாயிறு தொடங்குவதாக சொன்னார்களே?"

"இல்லையே நாங்கள் திறந்து ஒரு வருடம் ஆகிவிட்டதே?"

அப்படியானால் நாம்தான் மிஸ் செய்துவிட்டோமோ என்று நினைத்து, "அப்போ ஞாயிறு திறக்கும் கடை?"

"அது வேறு கடை"

"அங்கே என்ன உணவு வகை?"

"அதை ஏன் என்னிடம் கேட்கின்றீர்கள்?"

"பின் யாரிடம் கேட்பது?"

"அந்த கடை ஓனரிடம் கேளுங்கள்"

"அப்போ அது உங்கள் கடை இல்லையா?"

போனை கட் செய்யும் சத்தம். பின் நண்பரிடம் கேட்க அவர் தகவல் சொன்னவரிடம் விசாரிக்க,

அவர், "நீங்க யாருட்ட கேட்டிங்க?"

"போஸ்ட் ஆபிஸ்ல இருந்து நாலுகடை தள்ளி"

"ரைட்லயா அல்லது லெப்ட்லயா?"

"ரைட்ல"

"நீங்க லெப்ட்ல கேட்டு இருக்கணும்"

போங்கையா நீங்களும் உங்கள் கடையும் என்று அசடு வழிந்ததை காட்டிக்கொள்ளாமல் உடனே அந்த இடத்தை விட்டு நகர்ந்துவிட்டோம்.

*************************************************************Feb 9, 2013

என் மகளும் நானும்! – பாகம் 1


இளம் பெண்கள் அனைவரையும் எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ஆரம்பம் முதலே பெண் குழந்தைகளை பிடிக்காமல் இருந்தது காரணம் தெரியாமலேயே. ஆனால் எனக்கு முதலில் பெண் பிறந்ததும் அந்த நாளிலிருந்து எனக்கு பெண் குழந்தைகளையும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. “அந்த நாளிலிருந்து’ என்றுதான் சொல்கிறேன். ‘அந்த நொடியிலிருந்து’ என்று சொல்லவில்லை. ஏனென்றால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பியிருந்து, பெண் குழந்தை பிறந்தவுடன் மனதில் ஒரு ஏமாற்றம் தொடங்கி அது என்னை அழைக்கழித்து மனம் சமாதானம் அடைய சில மணி நேரங்கள் ஆனது. அப்பொழுது அப்பா என்னிடம் கொடுத்த சாக்லேட்டை தூக்கி போட்டு அனைவரையும் கடுப்பேத்தினேன். பின் என் மனைவிக்கு தெரிந்து மிகவும் கடுப்பானாள்.

பின் என் செயலை நினைத்து நான் வெட்கப்பட்டு, என் மகளுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். எனக்குத் தெரியும் அவளால் அப்பொழுது படிக்க முடியாதென்று. அந்த கடிதத்தை மிகவும் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்துள்ளேன். அந்த கடிதத்தை அவள் திருமணத்திற்கு முன் கொடுப்பேன். அப்பொழுதான் என்னை இன்னும் அதிகமாக புரிந்து கொள்வாள். ஏன் என்றால், ஒரு முறை விளையாட்டாக என் மனைவி அவளிடம், அவள் பிறந்த போது நான் சாக்லேட்டை தூக்கி வீசியதை சொல்லிவிட்டாள். அவள் என்னிடம், “ஏம்பா என்னை பிடிக்கலையா?” என கேட்ட போது பதில் சொல்லத்தெரியாமல் அவதிப்பட்டேன்.

அதன் பிறகு என் மொத்த சந்தோசமும் அவள்தான் என்று ஆனது. பிறந்த அந்த நாளிலிருந்து அவள் வளர்ந்த ஒவ்வொரு நொடியிலும் எனக்கு சந்தோசங்களை அள்ளி அள்ளி கொடுத்தாள். கொடுத்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு சாதாரண சளி பிடித்தால் கூட இரவு முழுவதும் தூங்க மாட்டேன். அவள் கூடவே இருப்பேன். அவள் இல்லாமல் நான் எங்கும் சென்றது கிடையாது. எனக்கும் அவளுக்கும் ஆன அந்த பாசப்பிணைப்பு என் மனைவியே பொறாமை படும் அளவு ஆனது. என் மகளுக்கு மூன்று வயது ஆன போது என் மனைவி அவளை பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டாள். எனக்கு விருப்பம் இல்லாமலிருந்தது. அதனால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன். அதில் மனைவிக்கு சிறு வருத்தம் இருந்தது. எனக்கு சிறு பிள்ளையான அவளை உடனே பள்ளிக்கு அனுப்ப மனமில்லை.

ஒரு நாள் அலுவலகம் கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென என் மகள் ஒரு ஸ்கூல் பையை தோளில் மாட்டிக்கொண்டு, கதவை திறந்து, “அப்பா, நான் ஸ்கூல் போய்ட்டு வர்றேன்” என்று கதவை சாத்திவிட்டு சென்றாள். எங்களுக்கு ஒரே ஆச்சர்யம். உடனே ஒரு நிமிடம் வெளியே இருந்துவிட்டு, கதவைத் திறந்து, “அப்பா, ஸ்கூலிருந்து வந்துட்டேன். டீச்சர் என்ன சொல்லி கொடுத்தாங்க? நல்லா படிச்சியா அப்படின்னு கேளுங்க?” என்றாள். எங்களுக்கு ஒரே ஆச்சர்யமும், சந்தோசமும். உடனே அவளை எல் கேஜியில் சேர்த்தேன். ஸ்கூலில் சேர்த்த பின் அவள் அழுவாள் என்று நினைத்து வெளியே காத்திருந்தோம். ஆனால் அவள் கொஞ்சம் கூட அழவே இல்லை மாறாக, “நீங்க போய்ட்டு சாயந்தரம் வாங்க” என்றாள்.

மாலை எப்பொழுது வரும் என்று நினைத்து புலம்பிக்கொண்டே வீட்டில் இருந்தேன். அலுவலகத்திற்கும் செல்லவில்லை. மாலை பள்ளி சென்றோம். அவளை காரில் ஏறும் படி கூறினேன். அவள் மறுத்து பள்ளி வேனில்தான் வருவேன் என அடம்பிடித்து, வேனில்தான் வந்தாள். முதல் நாள் எப்படி இருந்தாளோ இன்னும் அப்படியேதான் இருக்கிறாள்.

‘என் பிள்ளை எந்த பள்ளியில் படித்தாலும் நன்றாகத்தான் படிப்பாள்’ என்று எல்லோரிடமும் கூறினாலும் எனக்கு உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. பின் பின் போகப் போக புரிந்து கொண்டேன். அவள் மிகப் பெரிய புத்திசாலி என்று. நன்றாக படித்தாள். படிக்கிறாள். மலேசியாவில் ஏழாவது படிக்கும்வரை தொடர்ந்து முதல் ரேங்க்தான் வாங்கினாள். ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கேன் என்று நினைக்கிறேன். ஒரு முறை ஒரு பெரிய பதவியில் இருந்த நண்பர் வீட்டிற்கு வந்தபோது அவளிடம், “நீ எந்த ரேங்க் எடுப்பாய்?” என்றார். அவள், “பர்ஸ்ட் ரேங்க்” என்றதும், “வகுப்பில் எத்தனை பேர்?” என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. எத்தனை பேர் இருந்தால் என்ன? அவள் முதல் ரேங்க் என்பது உண்மைதானே?

ஆனால் அவர் கேட்ட அந்த சந்தேகம், என் மகளை எட்டாம் வகுப்பில் திருச்சியில் புதிய ஸ்கூலில் சேர்க்கும் போது வந்தது. ஏனென்றால், மலேசியாவில் அவள் வகுப்பில் மொத்தம் 7 பேர். திருச்சி ஸ்கூலில் மொத்தம் இரண்டு அல்லது மூன்று செக்ஷன். அதுவும் இல்லாமல் அவள் புது பள்ளியில் சேரும் போது அவளுக்கு தமிழும் தெரியாது. ஹிந்தியும் தெரியாது. பள்ளி சேர்ந்ததும் பள்ளி ஆரம்பித்து இரண்டு மாதம் கழித்து. ஆனால் ஆச்சர்யமாக முதல் எக்சாமிலே அனைவரும் வியக்கும் வண்ணம் அதிக மார்க் வாங்கி பள்ளியிலேயே இரண்டாவதாக வந்தாள். அடுத்தடுத்த பரிட்சைகளில் மூன்று பாடங்களில் செண்டம் வாங்கி அசத்திவிட்டாள். இப்பொழுது என்னவென்றால், நாங்கள் பயந்து போய் தமிழில் அவள் எப்படி மார்க் எடுப்பாள் என்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில் தமிழிலிலும் போன மாதம் நடந்த தேர்வில் செண்டம் வாங்கி இருக்கிறாள்.

இப்படியாக அவளால் நான் அடையும் சந்தோசங்களுக்கு கணக்கே இல்லை. ஒரே குறை என்னவென்றால் அவளுக்கு கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாது. அவளுக்கு எது வேண்டும் என்றாலும் உடனே வாங்கித் தரவேண்டும். இது வரை அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பெண்ணாகிக்  கொண்டிருக்கிறாள். 13 வயது முடிந்து இந்த வருடம் ஜீன் மாதம் 14ல் அடியடுத்து வைக்க இருக்கிறாள். அவளுக்கு எல்லாம் தெரிகிறது. மிகுந்த புத்திசாலியாக இருப்பதால் எனக்கு பயமாகவும் இருக்கிறது.

மூன்று வருடங்களுக்கு முன்பு “அபியும் நானும்” பார்த்துக் கொண்டிருந்தேன். படம் பாதி பார்த்துக்கொண்டிருக்கையில் என்னால் முடியாமல் கண்களில் தண்ணீர் வர அழ ஆரம்பித்துவிட்டேன். நான் ஒரு ‘எமோஷனல் இடியட்’  என்று என் மனைவிக்கு தெரிந்து இருந்தாலும் என் பெண்ணிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் உடனே என் மனைவியிடம், “ஏம்மா அப்பா...?” என கேட்க அவள் பதில் சொல்லத்தெரியாமல் விழிக்க, “கவலை படாதீங்கப்பா?” என்று பொத்தாம் பொதுவாக சொன்னாள். அவளுக்கு அப்போதே ஏதோ புரிந்திருக்கிறது. அதுவரை திரிஷாவை வேறு மாறி பார்த்த என் பார்வை அன்றிலிருந்து மாறிவிட்டது என்பதுதான் உண்மை.

2004ல் என் மகன் பிறந்த போது எனக்கு இருந்த ஒரே கவலை, ‘என் பெண் எப்படி அவனை எடுத்துகொள்வாளோ?” என்றதுதான். ஆச்சர்யமாக அவனை பார்த்து பொறாமை கொள்ளாமல் தம்பியாக அன்போடு விளையாட ஆரம்பித்தாள். நான் கட்டிய என் முதல் வீடு மிகப்பெரியது. என் பையன் பிறக்கும் முன்னரே கட்டியதால், அந்த வீடு அவளுக்கு என்று சொல்லி வைத்திருந்தேன். இருந்தாலும் வீட்டிற்கு அம்மா பெயரை சூட்டினேன். ஒரு முறை நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டேன். அப்போது அவள் நான்காவது படித்துக்கொண்டிருந்தாள். கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், “நீங்க என் கிளினிக் வந்தால் உங்களுக்கு ஊசி போட்டால் நான் காசு வாங்க மாட்டேன் அப்பா” என்றாள். புரிந்துகொண்டேன்.

அவள் டாக்டர் ஆக வேண்டும் என்ற அவள் ஆசையை அவள் வெளிப்படுத்திய விதம் என்னை ஆச்சர்யபடுத்திவிட்டது. உடனே அந்த வீட்டை இன்னும் மாடி கட்டி ஏழு ரூம்களுடன், மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கிளினிக் போல் இப்போதே கட்டி வைத்துவிட்டேன். இனி அவள் டாக்டர் ஆக வேண்டியதுதான் பாக்கி!.

மகன் விவரம் தெரிந்து ‘‘இந்த வீடு அக்காவுக்குன்னா எனக்கு?” என்றான். இன்னொரு வீடு கட்டும் ஐடியா அப்போது இல்லை என்றாலும் பின் கட்ட முடிவெடுத்து கட்டி அவர்கள் இருவர் பெயரையும் அந்த புது வீட்டிற்கு வைத்தேன். உடனே பையன், “அதான் அக்காவுக்கு ஒரு வீடு இருக்குல்ல. ஏன் அவ பெயரையும் என் வீட்டுக்கு வைச்சீங்க” என்றான். பின் விளக்கினேன். மனம் முழுவதும் சந்தோசமான நாள் அது.

நான் ஆரம்ப காலங்களில் எழுத ஆரம்பித்த போது என் மகளுக்கு தமிழ் தெரியாது. இப்பொழுது அவள் தமிழ் படிக்க கற்றுக்கொண்டாள். என் புத்தகங்களை படித்துவிட்டு என்னையே கேள்வி கேட்கிறாள். சந்தோசமாக இருந்தாலும் ஒரு முறை அவமானமாக உணர்ந்தேன். ஏதோ ஒரு கட்டுரையில் “தாவணியில் தமன்னா கொள்ளை அழகு” என்று எழுதிருந்தேன். அதை அவள் படித்திருக்கிறாள். சமீபத்தில் அவள் இங்கே இருந்த போது அனைவரும் டிவி பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த படம் வந்தது. எனக்கு வேலை இருக்கவே எழுந்தேன்.

“என்னப்பா பார்க்கலையா?” என்றாள்.

“இல்லைப்பா வேலை இருக்கு?” என்றேன்.

“என்னப்பா அடுத்த சீன்ல தமன்னா வரா? அதுவும் தாவணியில?” என்றாள்.
அதிர்ந்துவிட்டேன் நான். உடனே என் பையன், “என்னப்பா அக்கா கேட்டதும் ஒரு சவுண்டையும் காணோம்?” உடனே என் மனைவி என்னை சுடும் பார்வையில் பார்க்க நானும் அவளை பார்க்க....

இன்னும் அதிக பொறுப்பு உணர்வை கொடுக்கிறார்கள் என் பிள்ளைகள். இப்பொழுது எதை எழுதினாலும் என் பெண் படிப்பாளே என்ற கவலை வருகிறது.

இத்தனை விசயங்கள் என் பெண்ணைப் பற்றி எழுதுவதற்கு என்ன காரணம் நேற்று நடந்த அந்த சம்பவம்தான்.....

Feb 8, 2013

மிக்ஸர் - 08.02.13


சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

இது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை?

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நண்பர் என்னிடம் இப்படி கூறினார்,

"எக்ஸ், உன்னைப்பற்றி மிக கேவலமாக பேசினார். அவ்வளவு கோபமாக உள்ளார். ஏன் இப்படி என்று தெரியவில்லை"

நான் உடனே, "அப்படி என்ன பேசினார், திட்டினார் சொல்லுங்கள். நானே அவரிடம் கேட்கிறேன்" என்றேன்.

"இல்லை. அதெல்லாம் சொல்லக்கூடாது. சொன்னால் மிகப் பெரிய பிரச்சனை வரும். நீ அவர் மேல் அதிக கோபப்படுவாய்"

"பரவாயில்லை சொல்லுங்கள்"

"சொல்ல மாட்டென். அவர் சொன்னவைகள் எல்லாம் மிக மிக மோசமான வார்த்தைகள்"

எனக்கு பயங்கர கடுப்பு வந்தாலும் அமைதியாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். அந்த நண்பர் அத்தோடு விட்டால் பரவாயில்லை. பேசும் போது எல்லாம், "அவர் உன்னை இப்படி பேசிவிட்டாரே" என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

நேற்று மிகவும் கடுப்பு வந்து அவரிடம் இப்படி சொன்னேன்,

"அவர் என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர் என்னிடம் நேராக சொன்னால் மட்டுமே ரியாக்ட் செய்வேன். உங்களிடம் சொன்னதற்கு எல்லாம் நான் ஏன் கோபப்பட வேண்டும். ஆனால்..."

"என்ன?" என்பது போல் பார்த்தார்.

"உங்கள் மேல்தான் கோபம்" என்றேன்.

"ஏன்?" என்றார்,

"ஒன்று என்ன பேசினார் என்று சொல்ல வேண்டும். சொல்ல விருப்பமில்லை என்றால் எதுவுமே சொல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் திட்டினார் என்பதை மட்டும் என்ன ம..த்துக்கு என்னிடம் சொல்கின்றீர்கள்" என்று கேட்டேன்.

அதன் பிறகு அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். அவரிடம் இருப்பது ஒரு கொடுமையான குணம் அடுத்தவனை மற்றவர்கள் திட்டுவதை கேட்டு ரசிப்பது.

இதே நிலை அவருக்கும் வரலாம் என்று ஏன் அவருக்கும் புரியவில்லை?

*****************************************************************

தோழர் மனுஷ்யபுத்திரனின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை சமீபகாலமாகத்தான் பார்த்து வருகிறேன். என் மாமா ஒரு முறை போன் செய்து, "மனுஷ்ய புத்திரனின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

அப்பொழுது நான் அதிகம் அவர் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கவில்லை. பிறகு அவர், "அவசியம் பார். எல்லோரும் ஒரு விதத்தில் விவாதித்தால் இவரின் கருத்துக்கள் மட்டும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் நிறைய சிந்திக்க வைக்கும்" என்றார். அதிலிருந்துதான் நான் பார்க்க ஆரம்பித்தேன்.

இன்று காலை 8.15க்கு கிளம்பும்போது, சன் டிவியில், "விருந்தினர் பக்கம்" நிகழ்ச்சியில் அவரின் நேர்காணல். இரண்டு நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. முழுவதும் பார்க்க நேரம் இல்லை. பார்த்தால் அலுவலகமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாது.

அலுவலகம் வந்ததும் அதே நினைவாக இருந்தது. முதல் வேலையாக இணையத்தில் அந்த இணைப்பினை தேடினேன். 23.01.2013 அன்று ஓளிபரப்பிய நிகழ்ச்சி அது.

முழுவதும் பார்த்தேன். கேட்டேன். நிறைய நேர்காணல்களில் அவரின் தீர்க்கமான, கோபமான, ஆணித்தரமான பேச்சுகளைத்தான் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக, சாந்தமான முகத்துடன், சிரித்த முகத்துடன், மிகத் தெளிவாக பேசிய அவரின் நேர்காணலை பார்த்தேன். ரசித்தேன். பிரமித்தேன். இப்பொழுது அவரின் பேச்சுக்களை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதே உணர்வுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இன்றிலிருந்து அவரின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன்.

ஐ லவ் யூ மனுஷ்!

*****************************************************************

ஒரு நண்பர் பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். நான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. என்னுடைய நண்பர்கள் வட்டாரம் 5000 தாண்டிவிட்டது அதுதான் காரணம் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. அவருக்கு இசைஞானி இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தலைவர் சுஜாதா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பிடிக்காதாம்!.

எனக்கு மிகவும் பிடித்த இவர்களில் யாரையாவது ஒருத்தரையாவது அவருக்கு பிடித்திருக்க வேண்டாமா? யாரையுமே பிடிக்காது என்றால் எப்படி அவருடன் எப்படி நான் நட்பு பாராட்ட முடியும்?

*****************************************************************

மூன்று வருசத்துல 8 லட்சம் வரும்னு 4 லட்சம் முதலீடு பண்ணேன். தூக்கம் இல்லாமல் பல நாள் தவித்தேன். பின் வந்தது என்னவோ 2.40 லட்சம் மட்டுமே. அந்த காயம் இன்னும் ஆறவில்லை. அவ்வளவு வேதனை பட்டேன்.

விசயத்தை கேள்விபட்டதும் வேதனையாக இருக்கிறது. 100 கோடி...!!!

*****************************************************************


Feb 7, 2013

டோண்டு ராகவன் சார்!

இன்று காலை முழுவதும் அவசரமான, முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங் இடைவெளியில் யுவாவின் முகநூல் மூலம் டோண்டு சாரின் மறைவு பற்றி தெரிந்ததும் மிகவும் மனம் சஞ்சலம் அடைந்தது. அவருக்கு கேன்சர் என்று தெரியும். கேன்சர் வந்தால் மூன்று வருடம்தான் வாழ்க்கை என்றும் தெரியும். ஆனால் கேன்சரில் இருந்து விடுபட்டு, ஹார்ட் அட்டாக்கில் போவார் என்று நான் நினைக்கவே இல்லை.

ஒரு முறை இந்தியா செல்லும் போது நண்பர்களை சந்திக்க செல்வதை ப்ளாக்கில் அறிவித்த போது ஏன் என்னை கூப்பிடவில்லை? என்று மெயில் அனுப்பினார். பின் தான் அவரின் தளத்தை வாசித்தேன். ஆனால் அவரின் எழுத்துக்கள் என்னை அதிகம் ஈர்த்ததில்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். 

நான் 2009 ப்ளாக்கில் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னை தொடர்ந்து வாசிப்பவர் என்று பின்னால் தெரிந்துகொண்டேன். இன்றும் அவர் வலைப்பூவில், நீங்கள் பார்க்கலாம், விரும்பி வாசிக்கும் ப்ளாக் லிஸ்ட்டில் என்னுடைய ப்ளாக்கும் இருக்கும். அவர் தளம் மூலம் என் வலைப்பூவிற்கு வருகை தந்து எனக்கு நண்பர்கள் ஆனவர்கள் நிறைய பேர். அவர் அவ்வப்போது எனக்கு பின்னூட்டம் இடுவதுண்டு. அவைகள் எல்லாமே அறிவுரைகள் போலத்தான் இருக்கும். என்னை அவர் வாசிக்கும் அளவுக்கு அவரின் தளத்தை நான் வாசிப்பதில்லையே என்ற குற்ற உணர்வு எப்பொழும் எனக்கு உண்டு. 

ஒரு முறை அவரை சந்திக்கலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது ஏனோ அமையவில்லை. ஒருவரை சந்திக்க நினைக்கிறோம். முடியாமல் போனால் அடுத்த முறை சந்திக்கலாம் என்று நினைப்போம்தானே? அடுத்த தடவை வருவதற்குள் அவர் இறந்துவிடுவார் என்று நாம் நினைப்பதில்லை. அது போல அடுத்த முறை அடுத்த முறை என்று நினைத்து அவரை சந்திக்க முடியாமலே போய்விட்டது.

டோண்டுசாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை.

***************************************************************

நேற்று இரவு டோண்டு சாரைப் பற்றி கூகிள்+ல் எழுதிவிட்டு, தூங்க சென்றேன். நெடுநேரம் தூக்கம் இல்லாமல் தவித்தேன். அவரால் ஏற்பட்ட மன சஞ்சலம் என்றாலும், மனம் அப்படியே மரணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து திடீரென ஒருவதமான 'பயம்' என்று சொல்ல மாட்டேன், ஒருவிதமான உணர்வு வந்துவிட்டது. உடனே என் அலுவலக நண்பருக்கு போன் செய்தேன். 'காலை 8.30க்குள் நான் அலுவலகம் வராவிட்டால் எதற்கும் என் நம்பருக்கு போன் செய்துவிடுங்கள். நான் போனை எடுக்காவிட்டால் என் வீட்டிற்கு வந்துவிடுங்கள்' என்றேன்.

அவர் ஆச்சர்யமாக, "ஏன்?" என்றார்.

நான் காரணம் சொல்லவில்லை. ஆனால் காலை எழுந்து அலுவலகம் வந்துவிட்டேன். 

இப்பொழுது எல்லாம் யாராவது நண்பர்கள் இறந்து போனால் இது போல நினைவுகள் வந்து அலைகழிக்கிறது.

ஒருவேளை சாவை பற்றி நானும் பயப்பட ஆரம்பித்துவிட்டேனோ?

***************************************************************