Feb 8, 2013

மிக்ஸர் - 08.02.13


சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

இது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை?

இரண்டு நாட்களுக்கு முன் ஒரு நண்பர் என்னிடம் இப்படி கூறினார்,

"எக்ஸ், உன்னைப்பற்றி மிக கேவலமாக பேசினார். அவ்வளவு கோபமாக உள்ளார். ஏன் இப்படி என்று தெரியவில்லை"

நான் உடனே, "அப்படி என்ன பேசினார், திட்டினார் சொல்லுங்கள். நானே அவரிடம் கேட்கிறேன்" என்றேன்.

"இல்லை. அதெல்லாம் சொல்லக்கூடாது. சொன்னால் மிகப் பெரிய பிரச்சனை வரும். நீ அவர் மேல் அதிக கோபப்படுவாய்"

"பரவாயில்லை சொல்லுங்கள்"

"சொல்ல மாட்டென். அவர் சொன்னவைகள் எல்லாம் மிக மிக மோசமான வார்த்தைகள்"

எனக்கு பயங்கர கடுப்பு வந்தாலும் அமைதியாகி அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டேன். அந்த நண்பர் அத்தோடு விட்டால் பரவாயில்லை. பேசும் போது எல்லாம், "அவர் உன்னை இப்படி பேசிவிட்டாரே" என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.

நேற்று மிகவும் கடுப்பு வந்து அவரிடம் இப்படி சொன்னேன்,

"அவர் என்னைப் பற்றி உங்களிடம் என்ன சொல்லி இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர் என்னிடம் நேராக சொன்னால் மட்டுமே ரியாக்ட் செய்வேன். உங்களிடம் சொன்னதற்கு எல்லாம் நான் ஏன் கோபப்பட வேண்டும். ஆனால்..."

"என்ன?" என்பது போல் பார்த்தார்.

"உங்கள் மேல்தான் கோபம்" என்றேன்.

"ஏன்?" என்றார்,

"ஒன்று என்ன பேசினார் என்று சொல்ல வேண்டும். சொல்ல விருப்பமில்லை என்றால் எதுவுமே சொல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் அவர் திட்டினார் என்பதை மட்டும் என்ன ம..த்துக்கு என்னிடம் சொல்கின்றீர்கள்" என்று கேட்டேன்.

அதன் பிறகு அவர் பேசுவதை நிறுத்திவிட்டார். அவரிடம் இருப்பது ஒரு கொடுமையான குணம் அடுத்தவனை மற்றவர்கள் திட்டுவதை கேட்டு ரசிப்பது.

இதே நிலை அவருக்கும் வரலாம் என்று ஏன் அவருக்கும் புரியவில்லை?

*****************************************************************

தோழர் மனுஷ்யபுத்திரனின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை சமீபகாலமாகத்தான் பார்த்து வருகிறேன். என் மாமா ஒரு முறை போன் செய்து, "மனுஷ்ய புத்திரனின் தொலைகாட்சி நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறாயா?" என்று கேட்டார்.

அப்பொழுது நான் அதிகம் அவர் நிகழ்ச்சிகளை பார்த்திருக்கவில்லை. பிறகு அவர், "அவசியம் பார். எல்லோரும் ஒரு விதத்தில் விவாதித்தால் இவரின் கருத்துக்கள் மட்டும் வித்தியாசமாக இருக்கும். ஆனால் நிறைய சிந்திக்க வைக்கும்" என்றார். அதிலிருந்துதான் நான் பார்க்க ஆரம்பித்தேன்.

இன்று காலை 8.15க்கு கிளம்பும்போது, சன் டிவியில், "விருந்தினர் பக்கம்" நிகழ்ச்சியில் அவரின் நேர்காணல். இரண்டு நிமிடங்கள் மட்டுமே பார்க்க முடிந்தது. முழுவதும் பார்க்க நேரம் இல்லை. பார்த்தால் அலுவலகமத்திற்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வரமுடியாது.

அலுவலகம் வந்ததும் அதே நினைவாக இருந்தது. முதல் வேலையாக இணையத்தில் அந்த இணைப்பினை தேடினேன். 23.01.2013 அன்று ஓளிபரப்பிய நிகழ்ச்சி அது.

முழுவதும் பார்த்தேன். கேட்டேன். நிறைய நேர்காணல்களில் அவரின் தீர்க்கமான, கோபமான, ஆணித்தரமான பேச்சுகளைத்தான் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக, சாந்தமான முகத்துடன், சிரித்த முகத்துடன், மிகத் தெளிவாக பேசிய அவரின் நேர்காணலை பார்த்தேன். ரசித்தேன். பிரமித்தேன். இப்பொழுது அவரின் பேச்சுக்களை மனதில் அசை போட்டுக் கொண்டிருக்கிறேன்.

அதே உணர்வுடன் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இன்றிலிருந்து அவரின் தீவிர ரசிகனாக மாறிவிட்டேன்.

ஐ லவ் யூ மனுஷ்!

*****************************************************************

ஒரு நண்பர் பிரண்ட் ரிக்வெஸ்ட் அனுப்பிக்கொண்டே இருக்கிறார். நான் இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை. என்னுடைய நண்பர்கள் வட்டாரம் 5000 தாண்டிவிட்டது அதுதான் காரணம் என்று யாரும் தவறாக நினைக்க வேண்டாம்.

காரணம் வேறு ஒன்றும் இல்லை. அவருக்கு இசைஞானி இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தலைவர் சுஜாதா மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோரை பிடிக்காதாம்!.

எனக்கு மிகவும் பிடித்த இவர்களில் யாரையாவது ஒருத்தரையாவது அவருக்கு பிடித்திருக்க வேண்டாமா? யாரையுமே பிடிக்காது என்றால் எப்படி அவருடன் எப்படி நான் நட்பு பாராட்ட முடியும்?

*****************************************************************

மூன்று வருசத்துல 8 லட்சம் வரும்னு 4 லட்சம் முதலீடு பண்ணேன். தூக்கம் இல்லாமல் பல நாள் தவித்தேன். பின் வந்தது என்னவோ 2.40 லட்சம் மட்டுமே. அந்த காயம் இன்னும் ஆறவில்லை. அவ்வளவு வேதனை பட்டேன்.

விசயத்தை கேள்விபட்டதும் வேதனையாக இருக்கிறது. 100 கோடி...!!!

*****************************************************************


2 comments:

James said...

கலக்கல் மிக்ஸர்.

Unknown said...

3 years * 2 lakhs = 8 lakhs??

Share marketting??