இளம் பெண்கள் அனைவரையும்
எனக்கு மிகவும் பிடித்திருந்தாலும், ஆரம்பம் முதலே பெண் குழந்தைகளை பிடிக்காமல் இருந்தது
காரணம் தெரியாமலேயே. ஆனால் எனக்கு முதலில் பெண் பிறந்ததும் அந்த நாளிலிருந்து எனக்கு
பெண் குழந்தைகளையும் பிடிக்க ஆரம்பித்துவிட்டது. “அந்த நாளிலிருந்து’ என்றுதான் சொல்கிறேன்.
‘அந்த நொடியிலிருந்து’ என்று சொல்லவில்லை. ஏனென்றால் ஆண் குழந்தை பிறக்கும் என்று நம்பியிருந்து,
பெண் குழந்தை பிறந்தவுடன் மனதில் ஒரு ஏமாற்றம் தொடங்கி அது என்னை அழைக்கழித்து மனம்
சமாதானம் அடைய சில மணி நேரங்கள் ஆனது. அப்பொழுது அப்பா என்னிடம் கொடுத்த சாக்லேட்டை
தூக்கி போட்டு அனைவரையும் கடுப்பேத்தினேன். பின் என் மனைவிக்கு தெரிந்து மிகவும் கடுப்பானாள்.
பின் என் செயலை
நினைத்து நான் வெட்கப்பட்டு, என் மகளுக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினேன். எனக்குத் தெரியும்
அவளால் அப்பொழுது படிக்க முடியாதென்று. அந்த கடிதத்தை மிகவும் பொக்கிஷமாக பாதுகாத்து
வைத்துள்ளேன். அந்த கடிதத்தை அவள் திருமணத்திற்கு முன் கொடுப்பேன். அப்பொழுதான் என்னை
இன்னும் அதிகமாக புரிந்து கொள்வாள். ஏன் என்றால், ஒரு முறை விளையாட்டாக என் மனைவி அவளிடம்,
அவள் பிறந்த போது நான் சாக்லேட்டை தூக்கி வீசியதை சொல்லிவிட்டாள். அவள் என்னிடம், “ஏம்பா
என்னை பிடிக்கலையா?” என கேட்ட போது பதில் சொல்லத்தெரியாமல் அவதிப்பட்டேன்.
அதன் பிறகு என்
மொத்த சந்தோசமும் அவள்தான் என்று ஆனது. பிறந்த அந்த நாளிலிருந்து அவள் வளர்ந்த ஒவ்வொரு
நொடியிலும் எனக்கு சந்தோசங்களை அள்ளி அள்ளி கொடுத்தாள். கொடுத்துக் கொண்டிருக்கிறாள்.
அவளுக்கு சாதாரண சளி பிடித்தால் கூட இரவு முழுவதும் தூங்க மாட்டேன். அவள் கூடவே இருப்பேன்.
அவள் இல்லாமல் நான் எங்கும் சென்றது கிடையாது. எனக்கும் அவளுக்கும் ஆன அந்த பாசப்பிணைப்பு
என் மனைவியே பொறாமை படும் அளவு ஆனது. என் மகளுக்கு மூன்று வயது ஆன போது என் மனைவி அவளை
பள்ளியில் சேர்க்க ஆசைப்பட்டாள். எனக்கு விருப்பம் இல்லாமலிருந்தது. அதனால் தள்ளிப்
போட்டுக்கொண்டே வந்தேன். அதில் மனைவிக்கு சிறு வருத்தம் இருந்தது. எனக்கு சிறு பிள்ளையான
அவளை உடனே பள்ளிக்கு அனுப்ப மனமில்லை.
ஒரு நாள் அலுவலகம்
கிளம்பிக்கொண்டிருந்தேன். திடீரென என் மகள் ஒரு ஸ்கூல் பையை தோளில் மாட்டிக்கொண்டு,
கதவை திறந்து, “அப்பா, நான் ஸ்கூல் போய்ட்டு வர்றேன்” என்று கதவை சாத்திவிட்டு சென்றாள்.
எங்களுக்கு ஒரே ஆச்சர்யம். உடனே ஒரு நிமிடம் வெளியே இருந்துவிட்டு, கதவைத் திறந்து,
“அப்பா, ஸ்கூலிருந்து வந்துட்டேன். டீச்சர் என்ன சொல்லி கொடுத்தாங்க? நல்லா படிச்சியா
அப்படின்னு கேளுங்க?” என்றாள். எங்களுக்கு ஒரே ஆச்சர்யமும், சந்தோசமும். உடனே அவளை
எல் கேஜியில் சேர்த்தேன். ஸ்கூலில் சேர்த்த பின் அவள் அழுவாள் என்று நினைத்து வெளியே
காத்திருந்தோம். ஆனால் அவள் கொஞ்சம் கூட அழவே இல்லை மாறாக, “நீங்க போய்ட்டு சாயந்தரம்
வாங்க” என்றாள்.
மாலை எப்பொழுது
வரும் என்று நினைத்து புலம்பிக்கொண்டே வீட்டில் இருந்தேன். அலுவலகத்திற்கும் செல்லவில்லை.
மாலை பள்ளி சென்றோம். அவளை காரில் ஏறும் படி கூறினேன். அவள் மறுத்து பள்ளி வேனில்தான்
வருவேன் என அடம்பிடித்து, வேனில்தான் வந்தாள். முதல் நாள் எப்படி இருந்தாளோ இன்னும்
அப்படியேதான் இருக்கிறாள்.
‘என் பிள்ளை எந்த
பள்ளியில் படித்தாலும் நன்றாகத்தான் படிப்பாள்’ என்று எல்லோரிடமும் கூறினாலும் எனக்கு
உள்ளூர ஒரு பயம் இருந்து கொண்டே இருந்தது. பின் பின் போகப் போக புரிந்து கொண்டேன்.
அவள் மிகப் பெரிய புத்திசாலி என்று. நன்றாக படித்தாள். படிக்கிறாள். மலேசியாவில் ஏழாவது
படிக்கும்வரை தொடர்ந்து முதல் ரேங்க்தான் வாங்கினாள். ஏற்கனவே ஒரு முறை எழுதியிருக்கேன்
என்று நினைக்கிறேன். ஒரு முறை ஒரு பெரிய பதவியில் இருந்த நண்பர் வீட்டிற்கு வந்தபோது
அவளிடம், “நீ எந்த ரேங்க் எடுப்பாய்?” என்றார். அவள், “பர்ஸ்ட் ரேங்க்” என்றதும், “வகுப்பில்
எத்தனை பேர்?” என்றார். எனக்கு கோபம் வந்துவிட்டது. எத்தனை பேர் இருந்தால் என்ன? அவள்
முதல் ரேங்க் என்பது உண்மைதானே?
ஆனால் அவர் கேட்ட
அந்த சந்தேகம், என் மகளை எட்டாம் வகுப்பில் திருச்சியில் புதிய ஸ்கூலில் சேர்க்கும்
போது வந்தது. ஏனென்றால், மலேசியாவில் அவள் வகுப்பில் மொத்தம் 7 பேர். திருச்சி ஸ்கூலில்
மொத்தம் இரண்டு அல்லது மூன்று செக்ஷன். அதுவும் இல்லாமல் அவள் புது பள்ளியில் சேரும்
போது அவளுக்கு தமிழும் தெரியாது. ஹிந்தியும் தெரியாது. பள்ளி சேர்ந்ததும் பள்ளி ஆரம்பித்து
இரண்டு மாதம் கழித்து. ஆனால் ஆச்சர்யமாக முதல் எக்சாமிலே அனைவரும் வியக்கும் வண்ணம்
அதிக மார்க் வாங்கி பள்ளியிலேயே இரண்டாவதாக வந்தாள். அடுத்தடுத்த பரிட்சைகளில் மூன்று
பாடங்களில் செண்டம் வாங்கி அசத்திவிட்டாள். இப்பொழுது என்னவென்றால், நாங்கள் பயந்து
போய் தமிழில் அவள் எப்படி மார்க் எடுப்பாள் என்று யோசித்துக்கொண்டிருக்கும் வேளையில்
தமிழிலிலும் போன மாதம் நடந்த தேர்வில் செண்டம் வாங்கி இருக்கிறாள்.
இப்படியாக அவளால்
நான் அடையும் சந்தோசங்களுக்கு கணக்கே இல்லை. ஒரே குறை என்னவென்றால் அவளுக்கு கஷ்டம்
என்றால் என்னவென்றே தெரியாது. அவளுக்கு எது வேண்டும் என்றாலும் உடனே வாங்கித் தரவேண்டும்.
இது வரை அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக பெரிய பெண்ணாகிக்
கொண்டிருக்கிறாள். 13 வயது முடிந்து இந்த வருடம்
ஜீன் மாதம் 14ல் அடியடுத்து வைக்க இருக்கிறாள். அவளுக்கு எல்லாம் தெரிகிறது. மிகுந்த
புத்திசாலியாக இருப்பதால் எனக்கு பயமாகவும் இருக்கிறது.
மூன்று வருடங்களுக்கு
முன்பு “அபியும் நானும்” பார்த்துக் கொண்டிருந்தேன். படம் பாதி பார்த்துக்கொண்டிருக்கையில்
என்னால் முடியாமல் கண்களில் தண்ணீர் வர அழ ஆரம்பித்துவிட்டேன். நான் ஒரு ‘எமோஷனல் இடியட்’
என்று என் மனைவிக்கு தெரிந்து இருந்தாலும்
என் பெண்ணிற்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் உடனே என் மனைவியிடம், “ஏம்மா அப்பா...?”
என கேட்க அவள் பதில் சொல்லத்தெரியாமல் விழிக்க, “கவலை படாதீங்கப்பா?” என்று பொத்தாம்
பொதுவாக சொன்னாள். அவளுக்கு அப்போதே ஏதோ புரிந்திருக்கிறது. அதுவரை திரிஷாவை வேறு மாறி
பார்த்த என் பார்வை அன்றிலிருந்து மாறிவிட்டது என்பதுதான் உண்மை.
2004ல் என் மகன்
பிறந்த போது எனக்கு இருந்த ஒரே கவலை, ‘என் பெண் எப்படி அவனை எடுத்துகொள்வாளோ?” என்றதுதான்.
ஆச்சர்யமாக அவனை பார்த்து பொறாமை கொள்ளாமல் தம்பியாக அன்போடு விளையாட ஆரம்பித்தாள்.
நான் கட்டிய என் முதல் வீடு மிகப்பெரியது. என் பையன் பிறக்கும் முன்னரே கட்டியதால்,
அந்த வீடு அவளுக்கு என்று சொல்லி வைத்திருந்தேன். இருந்தாலும் வீட்டிற்கு அம்மா பெயரை
சூட்டினேன். ஒரு முறை நீ என்னவாக ஆக விரும்புகிறாய் என்று கேட்டேன். அப்போது அவள் நான்காவது
படித்துக்கொண்டிருந்தாள். கேள்விக்கு நேரடியாக பதில் சொல்லாமல், “நீங்க என் கிளினிக்
வந்தால் உங்களுக்கு ஊசி போட்டால் நான் காசு வாங்க மாட்டேன் அப்பா” என்றாள். புரிந்துகொண்டேன்.
அவள் டாக்டர் ஆக
வேண்டும் என்ற அவள் ஆசையை அவள் வெளிப்படுத்திய விதம் என்னை ஆச்சர்யபடுத்திவிட்டது.
உடனே அந்த வீட்டை இன்னும் மாடி கட்டி ஏழு ரூம்களுடன், மிகப்பெரிய ஹாலுடன் ஒரு கிளினிக்
போல் இப்போதே கட்டி வைத்துவிட்டேன். இனி அவள் டாக்டர் ஆக வேண்டியதுதான் பாக்கி!.
மகன் விவரம் தெரிந்து
‘‘இந்த வீடு அக்காவுக்குன்னா எனக்கு?” என்றான். இன்னொரு வீடு கட்டும் ஐடியா அப்போது
இல்லை என்றாலும் பின் கட்ட முடிவெடுத்து கட்டி அவர்கள் இருவர் பெயரையும் அந்த புது
வீட்டிற்கு வைத்தேன். உடனே பையன், “அதான் அக்காவுக்கு ஒரு வீடு இருக்குல்ல. ஏன் அவ
பெயரையும் என் வீட்டுக்கு வைச்சீங்க” என்றான். பின் விளக்கினேன். மனம் முழுவதும் சந்தோசமான
நாள் அது.
நான் ஆரம்ப காலங்களில்
எழுத ஆரம்பித்த போது என் மகளுக்கு தமிழ் தெரியாது. இப்பொழுது அவள் தமிழ் படிக்க கற்றுக்கொண்டாள்.
என் புத்தகங்களை படித்துவிட்டு என்னையே கேள்வி கேட்கிறாள். சந்தோசமாக இருந்தாலும் ஒரு
முறை அவமானமாக உணர்ந்தேன். ஏதோ ஒரு கட்டுரையில் “தாவணியில் தமன்னா கொள்ளை அழகு” என்று
எழுதிருந்தேன். அதை அவள் படித்திருக்கிறாள். சமீபத்தில் அவள் இங்கே இருந்த போது அனைவரும்
டிவி பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த படம் வந்தது. எனக்கு வேலை இருக்கவே எழுந்தேன்.
“என்னப்பா பார்க்கலையா?”
என்றாள்.
“இல்லைப்பா வேலை
இருக்கு?” என்றேன்.
“என்னப்பா அடுத்த
சீன்ல தமன்னா வரா? அதுவும் தாவணியில?” என்றாள்.
அதிர்ந்துவிட்டேன்
நான். உடனே என் பையன், “என்னப்பா அக்கா கேட்டதும் ஒரு சவுண்டையும் காணோம்?” உடனே என்
மனைவி என்னை சுடும் பார்வையில் பார்க்க நானும் அவளை பார்க்க....
இன்னும் அதிக பொறுப்பு
உணர்வை கொடுக்கிறார்கள் என் பிள்ளைகள். இப்பொழுது எதை எழுதினாலும் என் பெண் படிப்பாளே
என்ற கவலை வருகிறது.
இத்தனை விசயங்கள்
என் பெண்ணைப் பற்றி எழுதுவதற்கு என்ன காரணம் நேற்று நடந்த அந்த சம்பவம்தான்.....
7 comments:
அருமையாக எழுதி இருக்கிறீர்கள்...படிக்க படிக்க உணருகிறேன் பாசத்தை...அபியும் நானும் படத்தின் கேரக்டர் போல தாங்கள் ...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்க்கும் வாழ்த்துக்கள்...முக்கியமாய் தங்கள் பெண்ணிற்கு...நல்ல தகப்பன் தாங்களாய் கிடைத்தமைக்கு...
அருமை.
ஒரு நிமிடம் கலங்கி விட்டேன்... உணர்வுப்பூர்ணமான எழுத்துக்களுக்கு பாராட்டுக்கள்...
எனது வீட்டிலும், என் ஒவ்வொரு பதிவுகளுக்கும் அவங்க தான் டீச்சர்... முதல் வாசகர்கள் என் குடும்பத்தினர்... சரி அதை விடுங்க... ஒரு பெரிய பதிவே போட வேண்டும்...
'அபியும் நானும்' படத்தில் வசனம் எவ்வளவு உண்மை...
'ஒவ்வொரு குழந்தை பிறக்கும் போதும் ஒரு அப்பாவும் பிறக்கிறான்...'
இந்த பதிவை படிக்கின்ற இந்நேரம், மடியில் என் இரண்டு வயது மகள், இடையூறு செய்து கொண்டும், லேப்டாப்பில் சேட்டை செய்வதுமாக இருக்கிறாள், ஏனோ திட்டவோ, அதட்டவோ மனசு வரவில்லை :)
இந்த பதிவை படிக்கின்ற இந்நேரம், மடியில் என் இரண்டு வயது மகள், இடையூறு செய்து கொண்டும், லேப்டாப்பில் சேட்டை செய்வதுமாக இருக்கிறாள், ஏனோ திட்டவோ, அதட்டவோ மனசு வரவில்லை :)
இந்த பதிவை படிக்கின்ற இந்நேரம், மடியில் என் இரண்டு வயது மகள், இடையூறு செய்து கொண்டும், லேப்டாப்பில் சேட்டை செய்வதுமாக இருக்கிறாள், ஏனோ திட்டவோ, அதட்டவோ மனசு வரவில்லை :)
ஸ்கூலில் சேர்த்த பின் அவள் அழுவாள் என்று நினைத்து வெளியே காத்திருந்தோம். ஆனால் அவள் கொஞ்சம் கூட அழவே இல்லை மாறாக, “நீங்க போய்ட்டு சாயந்தரம் வாங்க” என்றாள்.
மாலை எப்பொழுது வரும் என்று நினைத்து புலம்பிக்கொண்டே வீட்டில் இருந்தேன்.
காட்சி சிரிப்பை வரவழைக்கிறது ..
Post a Comment