Feb 7, 2013

டோண்டு ராகவன் சார்!

இன்று காலை முழுவதும் அவசரமான, முக்கியமான மீட்டிங்கில் இருந்தேன். மீட்டிங் இடைவெளியில் யுவாவின் முகநூல் மூலம் டோண்டு சாரின் மறைவு பற்றி தெரிந்ததும் மிகவும் மனம் சஞ்சலம் அடைந்தது. அவருக்கு கேன்சர் என்று தெரியும். கேன்சர் வந்தால் மூன்று வருடம்தான் வாழ்க்கை என்றும் தெரியும். ஆனால் கேன்சரில் இருந்து விடுபட்டு, ஹார்ட் அட்டாக்கில் போவார் என்று நான் நினைக்கவே இல்லை.

ஒரு முறை இந்தியா செல்லும் போது நண்பர்களை சந்திக்க செல்வதை ப்ளாக்கில் அறிவித்த போது ஏன் என்னை கூப்பிடவில்லை? என்று மெயில் அனுப்பினார். பின் தான் அவரின் தளத்தை வாசித்தேன். ஆனால் அவரின் எழுத்துக்கள் என்னை அதிகம் ஈர்த்ததில்லை. காரணம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். 

நான் 2009 ப்ளாக்கில் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னை தொடர்ந்து வாசிப்பவர் என்று பின்னால் தெரிந்துகொண்டேன். இன்றும் அவர் வலைப்பூவில், நீங்கள் பார்க்கலாம், விரும்பி வாசிக்கும் ப்ளாக் லிஸ்ட்டில் என்னுடைய ப்ளாக்கும் இருக்கும். அவர் தளம் மூலம் என் வலைப்பூவிற்கு வருகை தந்து எனக்கு நண்பர்கள் ஆனவர்கள் நிறைய பேர். அவர் அவ்வப்போது எனக்கு பின்னூட்டம் இடுவதுண்டு. அவைகள் எல்லாமே அறிவுரைகள் போலத்தான் இருக்கும். என்னை அவர் வாசிக்கும் அளவுக்கு அவரின் தளத்தை நான் வாசிப்பதில்லையே என்ற குற்ற உணர்வு எப்பொழும் எனக்கு உண்டு. 

ஒரு முறை அவரை சந்திக்கலாம் என்று நினைத்ததுண்டு. ஆனால் அது ஏனோ அமையவில்லை. ஒருவரை சந்திக்க நினைக்கிறோம். முடியாமல் போனால் அடுத்த முறை சந்திக்கலாம் என்று நினைப்போம்தானே? அடுத்த தடவை வருவதற்குள் அவர் இறந்துவிடுவார் என்று நாம் நினைப்பதில்லை. அது போல அடுத்த முறை அடுத்த முறை என்று நினைத்து அவரை சந்திக்க முடியாமலே போய்விட்டது.

டோண்டுசாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதை தவிர வேறு எனக்கு ஒரு வழியும் தெரியவில்லை.

***************************************************************

நேற்று இரவு டோண்டு சாரைப் பற்றி கூகிள்+ல் எழுதிவிட்டு, தூங்க சென்றேன். நெடுநேரம் தூக்கம் இல்லாமல் தவித்தேன். அவரால் ஏற்பட்ட மன சஞ்சலம் என்றாலும், மனம் அப்படியே மரணத்தை பற்றி யோசிக்க ஆரம்பித்து திடீரென ஒருவதமான 'பயம்' என்று சொல்ல மாட்டேன், ஒருவிதமான உணர்வு வந்துவிட்டது. உடனே என் அலுவலக நண்பருக்கு போன் செய்தேன். 'காலை 8.30க்குள் நான் அலுவலகம் வராவிட்டால் எதற்கும் என் நம்பருக்கு போன் செய்துவிடுங்கள். நான் போனை எடுக்காவிட்டால் என் வீட்டிற்கு வந்துவிடுங்கள்' என்றேன்.

அவர் ஆச்சர்யமாக, "ஏன்?" என்றார்.

நான் காரணம் சொல்லவில்லை. ஆனால் காலை எழுந்து அலுவலகம் வந்துவிட்டேன். 

இப்பொழுது எல்லாம் யாராவது நண்பர்கள் இறந்து போனால் இது போல நினைவுகள் வந்து அலைகழிக்கிறது.

ஒருவேளை சாவை பற்றி நானும் பயப்பட ஆரம்பித்துவிட்டேனோ?

***************************************************************


8 comments:

வடுவூர் குமார் said...

இந்த சாவு பற்றிய பயம் எல்லாம் 60 வயதில் தான் அவ்ரும் என்று பெரியவர்கள் சொல்லி கேள்வி,உங்களுக்கு அதற்குள்ளா?
Be happy and enjoy the life.

Cinema Virumbi said...

திரு டோண்டு ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

சினிமா விரும்பி

http://cinemavirumbi.blogspot.in

”தளிர் சுரேஷ்” said...

ஆழ்ந்த அஞ்சலிகள்!

திண்டுக்கல் தனபாலன் said...

அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...

அவரின் மீதுள்ள அதீத ஈடுபாடு தான்... மாற்றும் சக்தி காலத்திற்கு உண்டு...

D. Chandramouli said...

Very true. I had the same fear of death, after hearing Raghavan's passing away. How life is uncertain!

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//இப்பொழுது எல்லாம் யாராவது நண்பர்கள் இறந்து போனால் இது போல நினைவுகள் வந்து அலைகழிக்கிறது.//


உண்மை!
எதிர்காலத்தில் தேவை வருமெனப் பாதுகாத்த பலபொருட்களை எறிவதோ, யாருக்காவது கொடுப்பதோ என சமீபகாலங்களில் மனம் நாடுகிறது.
புதிய உடுப்புகள் வாங்கும் போதும் , இதைப் அணிவேனா? என எண்ணுகிறது.
ஆனந்த விகடனுக்கு ஆயுள் சந்தா கட்ட அறிவித்தல் வரும் போதெல்லாம், தேவையா? எனச் சிந்திப்பது.
முன்பு நன்கு தர்க்கம் செய்வேன். இப்போ போய் தொலைகிறது என மனமும், உடலும் அமைதியை
நாடுகிறது.
விஸ்வரூபத்துக்குக் கூட பின்னூட்டிக் கொண்டிருந்த டோண்டு அண்ணா மறைவு , சற்று உலுக்கித் தான் பார்த்துவிட்டது.

துளசி கோபால் said...

எனக்கு(ம்) சாவு பற்றிய எண்ணம் கடந்த சில ஆண்டுகளாகவே வந்துவிட்டது.

பயம்.... சாவைப் பற்றி அல்ல. எப்படி சாகப்போகிறோம் என்பதே:(

அப்பா போல் வேணும், தூக்கத்தில்.

அம்மா போல் வேணாம்.., நோய்வாய்ப்பட்டு:(

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பயம்.... சாவைப் பற்றி அல்ல. எப்படி சாகப்போகிறோம் என்பதே:(//

அதே அதே!

அக்கா!
"ஜனனம் ஒரு வழி-மரணம் பல வழி"- எந்த வழியோ?