Apr 22, 2013

மிக்ஸர் - 22.04.13சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

**************************************************************

Samsung Galaxy Note II phoneல் தமிழில் டைப் செய்வதற்கு கூகிள் ப்ளே மூலமாக தமிழ் விசை என்கிற மென்பொருளை நிறுவிக் கொண்டேன். லேங்குவேஜ் & கீபோர்டுன்னு ஆப்ஷனுக்கு சென்று தமிழ்விசை பாக்ஸை
Default Keyboard ஆக மாற்றினேன். பின் கூகிள்+, ப்ளாக், ஹாட்மெயில், டிவிட்டர், ஜிமெயில் என்று எல்லா இடத்திலும் தமிழ் கீபோர்டை செலக்ட் செய்து தமிழில் டைப் செய்தேன். நன்றாக வேலை செய்கிறது.

ஆனால், போனில் தரப்பட்டுள்ள Default மெயிலில் அலுவலக மெயில் அக்கவுண்டை இணைத்துள்ளேன். அந்த மெயில்களுக்கு பதில் அனுப்பும் போது, தமிழ் கீ போர்ட் Default உள்ளதால் ஆங்கிலத்தில் பதில் அனுப்ப முடியவில்லை. தமிழிலும் டைப் அடிக்க முடியாமல் ஹேங் ஆகிறது. உடனே செட்டிங் சென்று தமிழை Default Keyboardலிருந்து நீக்கிவிட்டு, Samsung Keyboardஐ Default Keyboard ஆக மாற்றினால் ஆங்கிலத்தில் பதில் எழுத முடிகிறது. ஆனால் மற்ற மெயில்களிலோ அல்லது கூகிள்+ etc தமிழில் எழுத முடியவில்லை.

தமிழில் எழுத ஒவ்வொரு முறையும் தமிழை Default ஆகவும், அலுவலக மெயில்களுக்கு ஆங்கிலத்தில் எழுத Samsung Keyboardஐ Default Keyboard ஆகவும் மாற்ற வேண்டி உள்ளது. இது போனில் உள்ள குறை இல்லை. இது தமிழ் விசை என்கிற மென்பொருளில் உள்ள குறை என்று நினைக்கிறேன்.

யாராவது தமிழில் எழுதவும் அதே சமயத்தில் ஆங்கிலத்திலும் எழுத முடியும் வகையில் உள்ள மென்பொருளை பரிந்துரைக்க முடியுமா?

**************************************************************

ஒரு சந்தேகம், ஒரு உதவி!

இப்ப மலேசியால எல்லா சேனலும் பார்க்க முடிகிறது. விஜய் டிவியில்
ஏர்டெல் சூப்பர் சிங்கர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

தொகுத்து வழங்கும் அவரின் பெயர் என்ன? மாக்கானா? எனக்கு சரியாக காதில் விழவில்லை அதான் கேட்கிறேன்.

இப்ப ஒரு உதவி! யாராவது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் அந்த பெண்ணிடம் ஒரு ப்ளவுஸ் வாங்கி கொடுத்தால் நல்லது. ஸ்லீவ்லெஸ் சகிக்கலை!

**************************************************************


இப்படி ஒரு நூதன திருட்டை கேள்விப்பட்டதுண்டா? கடந்த மார்ச் 10ம் தேதி அன்று கோலாலம்பூர் LCCT Airport Terminalல் உள்ள கழிப்பரைக்கு ஒருவர் சென்றுள்ளார். அவருக்கு நிறைய நேரம் இருந்தததோ என்னவோ தெரியவில்லை. பேண்டை கழட்டி கதவில் மாட்டிவிட்டு தலைவர் ஹாய்யாக கழிப்பரையில் இருந்ந்ந்துள்ள்ள்ளார். வேலை முடிந்தவுடன் பார்த்தால் பேண்டை காணோம். யாரோ ஒரு திருடன் பேண்டை திருடிவிட்டு ஓடிவிட்டான். நண்பரின் கார் சாவி பேண்டில் இருந்துள்ளது. திருடன் பேண்டில் இருந்த பர்ஸ் எல்லாவற்றையும் எடுத்துவிட்டு, கார் சாவியையும் எடுத்து காரை லவட்டிக்கொண்டு ஓடிவிட்டான்.

பின் போலிஸில் புகார் செய்து ஒரு வாரம் கழித்து அந்த திருட்டுக்கும்பலை பிடித்துவிட்டார்கள்.

எனக்கு ஒரே ஒரு சந்தேகம்தான்! நண்பர் பேண்ட் இல்லாமல் எப்படி பாத்ரூமை விட்டு வெளியே வந்திருப்பார்???????????

**********************************************************

10வது தேர்விலும் மற்றும் 12ம் வகுப்பு தேர்விலும் தமிழில் அதிக மதிப்பெண்கள் எடுத்தேன். மாணவர்கள் அனைவரும் தமிழ் பாடத்திற்கு கோனார் தமிழ் உரை படிப்பார்கள், நான் அப்போது கூட நானாகவே படித்தேன். ஆனால் இன்று, ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" புத்தகத்துடன் இரண்டு மாதங்களாக போராடிக்கொண்டிருக்கிறேன். சில சமயம் நான் படிப்பது தமிழ் நாவல்தானா? என்ற சந்தேகம் வருகிறது. சுற்றி சுற்றி என்ன சொல்ல வருகிறார் என்று சரியாக தெரியவில்லை. சில சமயம் பாலாவின், செல்வராகவனின் படங்கள் பார்ப்பது போல் உள்ளது. மனோதத்துவ புத்தகம் போலும் உள்ளது. இப்படிப்பட்ட தமிழை நான் இதுவரை படித்ததில்லை. நல்ல வேளை ஆதவனின் மற்ற புத்தகங்களை நான் வாங்கவில்லை. வாங்கப் போவதும் இல்லை. அவர் இப்போது எங்கே இருக்கிறார். தெரிந்தால் சொல்லுங்கள். அவரிடம் பேச வேண்டும்.

இந்த புத்தகத்தை வாங்கி கொடுத்த கேபிள் சங்கரை என்ன செய்யலாம்?


**********************************************************

நேற்று "மனதோடு மனோ" ஜெயா டிவியில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. நேற்றைய நிகழ்ச்சி இசை அமைப்பாளர் தேவாவுடன். சில அற்புதமான பாடல்களை மனோ பாடி கேட்க நேர்ந்தது.

எனக்கு ஒரு சந்தேகம். இசையமைப்பாளர் பற்றி நாம் பேசும் போதெல்லாம் இளையராஜாவை பற்றியும், ரகுமானை பற்றியும் தானே பேசுகிறோம். ஏன் தேவாவை பற்றி பேசுவதில்லை. அவரும் பல அற்புதமான பாடல்களை கொடுத்து இருக்கிறாரே?

நான் இளையராஜாவின் பக்தனாக இருந்தாலும், தேவாவின் சில பாடல்கள் என்னை மெய்சிலிர்க்க வைக்கின்றன.

**********************************************************

நான் ஓரளவு புத்திசாலி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். இல்லை போலிருக்கிறது. நேற்று விஜய் டிவியில் "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி" நிகழ்ச்சி பார்த்தேன். பாதி கேள்விகளுக்கு எனக்கு விடைகள் தெரியவில்லை அல்லது குழப்பம். பொது அறிவு கேள்விகளுக்கு விடை சொல்வதில் முதல் மாணவனாக இருந்த நான் எப்போது மாறிப்போனேன் என்று தெரியவில்லை. பணம் பணம் என்று வேலையில் மட்டும் கவனம் செலுத்துவதினால் சில திறமைகள் நம்மை விட்டு செல்வது போல் தெரிகிறது.

இதை சரி பண்ண ஒரே வழி இது போன்ற நிகழ்ச்சிகளை இனி பார்க்காமல் இருப்பதுதான்.

**********************************************************

சிறுகதைகள் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டதே என்று காலையில் வாக்கிங் செல்லும் போது தனியாக யோசித்துக்கொண்டிருந்தேன். மிக குதர்க்கமான ஒரு கதை கரு தோன்றி இம்சை செய்கிறது. எழுத வேண்டாம் என்று நானும் கடந்த 5 மணி நேரமாக தள்ளிப்போடுகிறேன். ஆனால் முடியவில்லை. எழுதி பார்க்காவிட்டால் மன பாரம் குறையாது போல. என்ன செய்வது? 

**********************************************************

"நீ வெ கோ" நிகழ்ச்சியில கமல்ஹாசன் உண்மையாகவே அனைத்து கேள்விகளுக்கும் பதில் தெரிந்திருந்து சொன்னாரா? இல்லை ஏற்கனவே கேள்வி பதிகள் அவருக்கு கொடுக்கப்பட்டுருக்குமா? ஏனென்றால் கஷ்டமான கேள்விக்கு ஈஸியா பதில் சொன்னார். ஈஸியான கேள்விக்கு லைப் லைன் கேட்டார்.

என்னதான் ஒரு நடிகர் மேல் ஆசையோ அல்லது பாசமோ இருந்தாலும், பார்த்தவுடன் அல்லது அருகில் செல்லும் வாய்ப்பு கிடைத்தவுடன் "என்னை கட்டி பிடியுங்கள். எனக்கு முத்தம் கொடுங்கள் என்றா சொல்வார்கள்?"

கொடுமைடா சாமி!

**********************************************************Apr 12, 2013

"ஏன் டைவர்ஸ் பண்ணீங்க?"


இந்த முறை திருச்சியிலிருந்து நான் பயணம் செய்த ஏர் ஏசியா விமானம் சரியான நேரத்திற்குக் கோலாலம்பூரை வந்து அடைந்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் பல சமயங்களில் விமானம் தாமதமாகக் கிளம்பும். இரண்டு மூன்று மணி நேரம் எல்லாம் விமான நிலையத்திலேயே அடைந்து கிடக்க வேண்டும். இந்த முறை அப்படி அல்ல. அதனால் சந்தோசம். 

விமானத்தில் இருந்தே வீட்டிற்கும் நண்பர்களுக்கும் போன் செய்து வந்து சேர்ந்துவிட்ட விசயத்தைச் சொல்லிவிட்டு, விறுவிறு என்று விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்தை அடைந்து எல்லாப் பார்மாலிட்டிகளையும் முடித்துவிட்டுப் பஸ் நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்தில் இருந்து KL Central அடைய ஒரு மணி நேரம் ஆகும். அந்த நேரத்தில் சற்று தூங்குவேன். 

ஆனால் இந்த முறை அப்படித் தூங்க முடியாமல் போனது. காரணம் என் இருக்கைக்கு அடுத்து வந்து அமர்ந்த ஒரு மிக அழகிய பெண். ஏறக்குறைய ஏர் ஹோஸ்டல் போல் இருந்தாள். நல்ல சிகப்பு. முடிகளை நேர்த்தியாகக் கட் செய்து பின்னாமல் விட்டிருந்தாள். அளவான லிப்ஸ்டிக். திருத்தியமைக்கப் பட்ட புருவம். நல்ல பெர்ஃப்யூம் வாசம். அவள் உடம்பில் எல்லாப் பாகங்களுமே சரியான அளவில் இருந்தது. அத்தனை நேரம் டய்ர்டாக உணர்ந்தவன் அவள் வந்து அமர்ந்ததும் உற்சாகமானேன். அதிலும் அவள் உட்கார்ந்திருந்த கோலம். மிகச்சிறிய ஸ்கர்ட். தொடைக்கு மேலே ஏறி இருந்தது. ஆனால் தொடையில் இருந்து தொடங்கிக் கால் வரை சாக்ஸ் அணிந்திருந்தாள். கோட்டின் உள்ளே அணிந்திருந்த டி சர்ட் டைட்டாகவும் அதன் மேல் பட்டன்கள் திறந்தும் இருந்தது. நான் உடனே என் ரேபான் கூலிங் கிளாஸை அணிந்து கொண்டேன். 

என் அருகே அவள் அமர்ந்து இருந்ததைப் பார்த்தால் தமிழநாட்டின் ஒரு கட்சியின் கொடி போல் இருந்தது. பொதுவாக நானாக யாரிடமும் பேசுவதில்லை. அவர்களாகப் பேசினால் நான் பேசுவதுண்டு. என்னைப் பார்த்தவள் சிரித்தாள். பின் அழகான ஆங்கிலத்தில், 

"எங்கே செல்கிறீர்கள்?" என்றாள். சொன்னேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தோம். 

நான் "நீங்கள் எங்கே இருந்து வருகின்றீர்கள்?" என்று கேட்டேன். 

கஸகிஸ்தானில் இருந்து வருவதாகக் கூறினாள். பின் அவளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மூத்த பெண். வயது 26. கல்யாணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறதாகவும், அவள் தங்கைகள் அவர்களைப் பார்த்து கொள்வதாகவும் கூறினாள். 

"உன் கணவர் என்ன செய்கிறார்?" என்று கேட்டேன். 

அதற்குப் பதில் சொல்லாமல் என்னை நேர பார்த்தவள், 

"நீங்கள் குடிப்பீர்களா?'' என்றாள். 

"இல்லை" 

"வெரி குட்" 

"தேங்க்ஸ்" 

"ஓ இந்தியர்கள் எல்லாம் குடிக்கமாட்டார்களா?" என்று அப்பாவியாகக் கேட்டாள். 

எங்கள் தமிழ்நாட்டின் வருமானமே குடியில் இருந்துதான் வருகிறது என்று சொல்ல விரும்பாமல், "அப்படி இல்லை. சிலர் குடிப்பார்கள்" என்றேன். 

"ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?" என்றேன். 

"இல்லை. என் கணவரைப் பற்றிக் கேட்டாய் அல்லவா? அதான்" 

"என் கேள்விக்கும் உன் கேள்விக்கும் என்ன சம்மந்தம்?" 

"என் கணவர் சரியான குடிகாரர். எனக்குக் குடிப்பவர்களைப் பிடிப்பதில்லை" 

"ஓ" 

"அதனால் அவரை டைவர்ஸ் செய்துவிட்டேன்" என்றாள். 

"அதற்காக ஏன் டைவர்ஸ் செய்தாய்? அவரைத் திருத்தி இருக்கலாமே?" 

"திருத்திப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அது மட்டும் காரணமில்லை. மேலும் ஒரு காரணமும் இருக்கிறது" என்று பீடிகை போட்டாள். 

நான் என்ன காரணம் என்று கேட்டிருக்கக் கூடாது. அவளும் அந்தப் பதிலை சொல்லி இருக்கக்கூடாது. நம் நாட்டில் எந்தப் பெண்ணுமே சொல்ல விரும்பாத ஒரு காரணம். 

"அப்படி என்ன காரணம்?" 

"ம்ம்ம். அவர் தினமும் குடிக்கிறார். அதுவும் இல்லாமல் அவர் படுக்கை விசயத்தில் அவ்வளவு சரியில்லை" 

"அப்படி என்றால்?" என்றேன் அப்பாவியாக. 

"எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை" 

எனக்கு அதற்கு மேல் அவளிடம் பேச பிடிக்கவில்லை. அது வரை அவள் மேல் நான் வைத்திருந்த பிம்பம் உடைந்து போனது. இவ்வளவு நேரம் வாசனையாக இருந்த பெர்ஃப்யூம் இப்போது... அப்படித் தோணவில்லை. என் மவுனத்தைப் பிடிக்காமல் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். நான் ஒரு ஆர்வம் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன். 

பின் மனதை தேற்றிக்கொண்டேன். அவள் உண்மையைச் சொல்கிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது. இது ஒன்றும் தமிழ்நாடு இல்லையே? அதனால் நாம் வருத்தப்பட என்ன இருக்கிறது. ஒரு வேளை ஒரு நல்ல வேலை மலேசியாவில் கிடைத்து வந்து இருக்கலாம். இனி அவள் நல் வாழ்வை தொடங்கலாம். இப்படி நினைத்துக்கொண்டே அவளிடம் கேட்டேன், 

"இங்கே என்ன வேலையாக வந்திருக்கிறாய்?" 

"பீச் கிளப்பில் இரவு வேலை" 

நான் அவளைச் சந்தித்தே இருக்கக்கூடாது. 


Apr 8, 2013

மிக்ஸர் - 08.04.13

சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

சென்ற மாதம் இரண்டு முறை இந்தியா சென்று வந்துவிட்டேன். நிறைய இடத்திற்கு பயணம் செய்தேன். நிறைய மீட்டிங். அதனால் அதிகம் எழுத முடியவில்லை. 

**************************************************************

மதுமிதா நேற்று இரவு இறந்துவிட்டாள். 

ஆம் 10 மணி அளவில். மிகவும் வேதனையுடன் நான். ரகுபதி அவள் மறைவை எப்படி எடுத்துக்கொண்டான் என்று தெரியவில்லை. ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. ஒரு வாரம் என்னுடன் பயனித்தவள். ரகுபதிக்கு ரத்னா? எனக்கு?

அவள் நினைவிலிருந்து என்னை வெளிக்கொணர இப்பொழுது மாலாவுடனும் அவள் அம்மாவுடனும் பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன்!

சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' பாதிப்பிலிருந்து சற்று முன்னர்தான் வெளியேறி ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" படித்துக்கொண்டிருக்கிறேன்.

சமீபகாலமாக நான் படிக்கும் புத்தகங்களே என் வாழ்வின் சந்தோசங்களையும், துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன.

**************************************************************

கடுமையான வேலை. நிறைய அலைச்சல். இதற்கு இடையில் ஒரு நாள் சென்னையில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. தி நகர் Quality in Sabari ஹோட்டலில் தங்கி இருந்தேன். வந்தவுடன் நண்பர்கள் அனைவருடனும் தொலைபேசியில் பேசினேன். கேபிளுக்கு தொடர்பு கொண்டேன். அவர் கும்பகோணத்தில் "தில்லு முல்லு" படப்பிடிப்பு முடிந்து வந்து கொண்டிருப்பதாக சொன்னார். அதற்குள் உறவினர்கள் நண்பர்கள் சிலர் வரவே டின்னருக்கு சென்றேன். ஜ்யோவ்ரோம் அவர்களின் போன் நம்பர் என்னிடம் இல்லாததாலும், நேரம் இல்லாததாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் நான் வாங்கி வைக்க சொன்ன புத்தகம் உள்ளது. இன்னும் 15 நாட்களில் மீண்டும் செல்வேன். அப்போது வாங்க வேண்டும்.

கேபிள் இரவு 10 மணி போல் வந்தார். டின்னர் சாப்பிட்டவுடன் "கரோக்கி போகலமா?" என்றேன். கூட்டிச் சென்றார். பாட நிறைய ஆசை. ஆனால் தொடர்ந்து 15 நாட்கள் அதிகம் பேசியதால் தொண்டை சரியில்லை. அதனால் ஆசை இருந்தும் நான் பாடவில்லை. கேபிள் பாடினார். எந்த வித தயக்கமும் இன்றி, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் "செண்பகமே செண்பகமே" பாடினார். நல்ல குரல் வளம். நிறைய திறமைகள் இருந்தும் இன்னும்.......

ஒரு உண்மை எனக்கு புரிந்தது. இந்த மாதிரி கரொக்கிக்கு போக இரண்டுவிதமான திறமைகள் வேண்டும். ஒன்று, நன்றாக அல்லது ஒரளவு பாட தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது.. அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

**************************************************************

காரில் வந்து கொண்டிருந்த போது, நண்பரின் மனைவி திடீரென என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், "முகநூலில் ஒரு விவாதம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் கேள்வியை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்" என்றார்.

"கேளுங்களேன்" என்றேன்.

"கிருஷ்ண பகவான் உங்கள் முன் தோன்றி நாளை முதல் நீங்கள் தான் கடவுள். நீங்கள்தான் உலகை காப்பற்ற வேண்டும் என்று சொன்னால் உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்றார்.

நான் சிறிதும் யோசிக்கவே இல்லை. உடனே இப்படி பதில் கூறினேன்,

"Authority can be deligated but Responsibility cannot be delegated. உலகை காப்பது அவர் வேலை அதை ஏன் நான் செய்ய வேண்டும்" என்றேன்.

என்னை ஒரு மாதிரி பார்த்தவர், ஊர் வந்து சேரும் வரை என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

நான் அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டேன்!

**************************************************************

இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சிலர் விரும்பலாம். சிலர் என் மேல் வெறுப்படையலாம். ஆனால் இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

மது அருந்துவது மற்றும் சிகரெட் பிடிப்பது அவரவர்களின் சொந்த விருப்பம். நான் குடிப்பதில்லை. சிகரெட் பிடிப்பதில்லை. அதற்காக நான் அவ்வளவு உத்தமன் என்று சொல்ல வரவில்லை. பழகிப் பார்த்து விட்டு இது வேண்டாம் என்று விட்டவன் நான். ஆனால் கடந்த 20 வருடங்களாக எல்லா பார்ட்டிகளிலும் கலந்து கொள்கிறேன். கோக் அல்லது பெப்ஸி மட்டுமே குடிப்பேன். பின் ஏன் பாருக்கு செல்கிறேன்? நண்பர்களுடன் சந்தோசமாக பேசிக்கொண்டிருப்பதற்க்காக மட்டுமே. செட்டில் நான் மட்டும் குடிக்காமல் இருப்பது ஆரம்பத்தில் நண்பர்களுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், போக போக அவர்கள் பழகிவிட்டார்கள். 

நான் குடிக்கவில்லையே தவிர நான் நண்பர்களுக்கு வாங்கி கொடுப்பதுண்டு. நிறைய பார்ட்டி வைத்ததும் உண்டு. இந்த முறையும் தமிழகம் சென்ற போது பல இடங்களில் பார்ட்டிகளில் கலந்து கொண்டேன். சில இடங்களில் அனைத்து செலவையும் நானே ஏற்றேன். சமீபித்திய பார்ட்டி ஒன்றில், ஆரம்பத்திலிருந்து பார்ட்டி முடியும் வரை பக்கத்து டேபிளில் ஒருவர் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் சாப்பிடுவதற்காக பாரில் இருந்து ஹோட்டல் உள்ளே நுழைந்தார்கள். பணத்தை நான் செட்டில் செய்துவிட்டு வரும் வரை காத்திருந்த அந்த நபர், என்னிடம்,

"நான் ஆரம்பத்திலிருந்து உங்களை கவனித்து வருகிறேன். நீங்கள் குடிக்கவே இல்லையே?" என்றார்.

"ஆம். நான் குடிப்பதில்லை"

"ஏன்?"

"ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. எதற்கு உடம்பை கெடுத்துக்கொண்டு?" என்றேன்.

"உங்கள் உடம்பு உங்களுக்கு முக்கியம். அதனால் நீங்கள் குடிப்பதில்லை. ஆனால் ஏன் மற்றவர்களுக்கு வாங்கி தருகின்றீர்கள்? குடிக்காத நீங்கள் ஏன் இந்த இடத்திற்கு வருகின்றீர்கள்? உங்களை உத்தமன் என்று காட்டிக்கொள்ளவா?"

அவர் என்ன நினைத்து என்னை கேட்டார், ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் கேட்ட கேள்வி என்னை சுற்றி சுற்றி வந்து இம்சை செய்கிறது. அதனால் யோசித்து ஒரு முடிவு எடுத்துவிட்டேன். 

"இனி எந்த பார்ட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை. இனி யாருக்கும் மதுவோ, சிகரட்டோ வாங்கித்தருவதில்லை"

இந்த முடிவால் நான் சில நண்பர்களை இழக்கக் கூடும். பரவாயில்லை!

**************************************************************