Apr 8, 2013

மிக்ஸர் - 08.04.13

சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

சென்ற மாதம் இரண்டு முறை இந்தியா சென்று வந்துவிட்டேன். நிறைய இடத்திற்கு பயணம் செய்தேன். நிறைய மீட்டிங். அதனால் அதிகம் எழுத முடியவில்லை. 

**************************************************************

மதுமிதா நேற்று இரவு இறந்துவிட்டாள். 

ஆம் 10 மணி அளவில். மிகவும் வேதனையுடன் நான். ரகுபதி அவள் மறைவை எப்படி எடுத்துக்கொண்டான் என்று தெரியவில்லை. ஆனால் என்னால் மறக்க முடியவில்லை. ஒரு வாரம் என்னுடன் பயனித்தவள். ரகுபதிக்கு ரத்னா? எனக்கு?

அவள் நினைவிலிருந்து என்னை வெளிக்கொணர இப்பொழுது மாலாவுடனும் அவள் அம்மாவுடனும் பயணிக்க ஆரம்பித்திருக்கிறேன்!

சுஜாதாவின் 'பிரிவோம் சந்திப்போம்' பாதிப்பிலிருந்து சற்று முன்னர்தான் வெளியேறி ஆதவனின் "என் பெயர் ராமசேஷன்" படித்துக்கொண்டிருக்கிறேன்.

சமீபகாலமாக நான் படிக்கும் புத்தகங்களே என் வாழ்வின் சந்தோசங்களையும், துக்கங்களையும் நிர்ணயிக்கின்றன.

**************************************************************

கடுமையான வேலை. நிறைய அலைச்சல். இதற்கு இடையில் ஒரு நாள் சென்னையில் தங்கும் வாய்ப்பு கிடைத்தது. தி நகர் Quality in Sabari ஹோட்டலில் தங்கி இருந்தேன். வந்தவுடன் நண்பர்கள் அனைவருடனும் தொலைபேசியில் பேசினேன். கேபிளுக்கு தொடர்பு கொண்டேன். அவர் கும்பகோணத்தில் "தில்லு முல்லு" படப்பிடிப்பு முடிந்து வந்து கொண்டிருப்பதாக சொன்னார். அதற்குள் உறவினர்கள் நண்பர்கள் சிலர் வரவே டின்னருக்கு சென்றேன். ஜ்யோவ்ரோம் அவர்களின் போன் நம்பர் என்னிடம் இல்லாததாலும், நேரம் இல்லாததாலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரிடம் நான் வாங்கி வைக்க சொன்ன புத்தகம் உள்ளது. இன்னும் 15 நாட்களில் மீண்டும் செல்வேன். அப்போது வாங்க வேண்டும்.

கேபிள் இரவு 10 மணி போல் வந்தார். டின்னர் சாப்பிட்டவுடன் "கரோக்கி போகலமா?" என்றேன். கூட்டிச் சென்றார். பாட நிறைய ஆசை. ஆனால் தொடர்ந்து 15 நாட்கள் அதிகம் பேசியதால் தொண்டை சரியில்லை. அதனால் ஆசை இருந்தும் நான் பாடவில்லை. கேபிள் பாடினார். எந்த வித தயக்கமும் இன்றி, எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் "செண்பகமே செண்பகமே" பாடினார். நல்ல குரல் வளம். நிறைய திறமைகள் இருந்தும் இன்னும்.......

ஒரு உண்மை எனக்கு புரிந்தது. இந்த மாதிரி கரொக்கிக்கு போக இரண்டுவிதமான திறமைகள் வேண்டும். ஒன்று, நன்றாக அல்லது ஒரளவு பாட தெரிந்திருக்க வேண்டும். இரண்டாவது.. அது நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன?

**************************************************************

காரில் வந்து கொண்டிருந்த போது, நண்பரின் மனைவி திடீரென என்னிடம் ஒரு கேள்வி கேட்டார், "முகநூலில் ஒரு விவாதம் நடை பெற்றுக்கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தின் கேள்வியை நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன்" என்றார்.

"கேளுங்களேன்" என்றேன்.

"கிருஷ்ண பகவான் உங்கள் முன் தோன்றி நாளை முதல் நீங்கள் தான் கடவுள். நீங்கள்தான் உலகை காப்பற்ற வேண்டும் என்று சொன்னால் உடனே நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்றார்.

நான் சிறிதும் யோசிக்கவே இல்லை. உடனே இப்படி பதில் கூறினேன்,

"Authority can be deligated but Responsibility cannot be delegated. உலகை காப்பது அவர் வேலை அதை ஏன் நான் செய்ய வேண்டும்" என்றேன்.

என்னை ஒரு மாதிரி பார்த்தவர், ஊர் வந்து சேரும் வரை என்னிடம் ஒரு வார்த்தை பேசவில்லை.

நான் அப்படி என்ன தவறாக சொல்லிவிட்டேன்!

**************************************************************

இதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. சிலர் விரும்பலாம். சிலர் என் மேல் வெறுப்படையலாம். ஆனால் இதை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன்.

மது அருந்துவது மற்றும் சிகரெட் பிடிப்பது அவரவர்களின் சொந்த விருப்பம். நான் குடிப்பதில்லை. சிகரெட் பிடிப்பதில்லை. அதற்காக நான் அவ்வளவு உத்தமன் என்று சொல்ல வரவில்லை. பழகிப் பார்த்து விட்டு இது வேண்டாம் என்று விட்டவன் நான். ஆனால் கடந்த 20 வருடங்களாக எல்லா பார்ட்டிகளிலும் கலந்து கொள்கிறேன். கோக் அல்லது பெப்ஸி மட்டுமே குடிப்பேன். பின் ஏன் பாருக்கு செல்கிறேன்? நண்பர்களுடன் சந்தோசமாக பேசிக்கொண்டிருப்பதற்க்காக மட்டுமே. செட்டில் நான் மட்டும் குடிக்காமல் இருப்பது ஆரம்பத்தில் நண்பர்களுக்கு ஒரு மாதிரி இருந்தாலும், போக போக அவர்கள் பழகிவிட்டார்கள். 

நான் குடிக்கவில்லையே தவிர நான் நண்பர்களுக்கு வாங்கி கொடுப்பதுண்டு. நிறைய பார்ட்டி வைத்ததும் உண்டு. இந்த முறையும் தமிழகம் சென்ற போது பல இடங்களில் பார்ட்டிகளில் கலந்து கொண்டேன். சில இடங்களில் அனைத்து செலவையும் நானே ஏற்றேன். சமீபித்திய பார்ட்டி ஒன்றில், ஆரம்பத்திலிருந்து பார்ட்டி முடியும் வரை பக்கத்து டேபிளில் ஒருவர் என்னையே கவனித்துக்கொண்டிருந்தார். நண்பர்கள் சாப்பிடுவதற்காக பாரில் இருந்து ஹோட்டல் உள்ளே நுழைந்தார்கள். பணத்தை நான் செட்டில் செய்துவிட்டு வரும் வரை காத்திருந்த அந்த நபர், என்னிடம்,

"நான் ஆரம்பத்திலிருந்து உங்களை கவனித்து வருகிறேன். நீங்கள் குடிக்கவே இல்லையே?" என்றார்.

"ஆம். நான் குடிப்பதில்லை"

"ஏன்?"

"ஏனோ எனக்கு பிடிக்கவில்லை. எதற்கு உடம்பை கெடுத்துக்கொண்டு?" என்றேன்.

"உங்கள் உடம்பு உங்களுக்கு முக்கியம். அதனால் நீங்கள் குடிப்பதில்லை. ஆனால் ஏன் மற்றவர்களுக்கு வாங்கி தருகின்றீர்கள்? குடிக்காத நீங்கள் ஏன் இந்த இடத்திற்கு வருகின்றீர்கள்? உங்களை உத்தமன் என்று காட்டிக்கொள்ளவா?"

அவர் என்ன நினைத்து என்னை கேட்டார், ஏன் கேட்டார் என்று தெரியவில்லை. ஆனால் அவர் கேட்ட கேள்வி என்னை சுற்றி சுற்றி வந்து இம்சை செய்கிறது. அதனால் யோசித்து ஒரு முடிவு எடுத்துவிட்டேன். 

"இனி எந்த பார்ட்டிகளிலும் கலந்து கொள்வதில்லை. இனி யாருக்கும் மதுவோ, சிகரட்டோ வாங்கித்தருவதில்லை"

இந்த முடிவால் நான் சில நண்பர்களை இழக்கக் கூடும். பரவாயில்லை!

**************************************************************4 comments:

Ponchandar said...

நீங்கள் எடுத்த முடிவு சரியானதே என்று சொல்ல எனக்கு தகுதியில்லை. எக்ஸர்வீஸ்மேனான எனக்கு கிடைக்கும் பாட்டில்களை ம்ற்றவர்களுக்கு விற்று விடுகிறேன்..

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லவாற்றையும் விட நல்லதொரு முடிவை எடுத்துள்ளீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...

Anonymous said...

இதே முடிவையும் நானும் எடுத்துள்ளேன்.. நீங்கள் எடுத்த முடிவு மிக. சரியானதே.!!.

Anonymous said...

Sir, I really appreciate you for one thing. You are writing whenever you find time and not worrying about number of comments and responses you are getting for your posts. This is really good attitude and habit.