Apr 12, 2013

"ஏன் டைவர்ஸ் பண்ணீங்க?"


இந்த முறை திருச்சியிலிருந்து நான் பயணம் செய்த ஏர் ஏசியா விமானம் சரியான நேரத்திற்குக் கோலாலம்பூரை வந்து அடைந்தது. இதை ஏன் சொல்கிறேன் என்றால் பல சமயங்களில் விமானம் தாமதமாகக் கிளம்பும். இரண்டு மூன்று மணி நேரம் எல்லாம் விமான நிலையத்திலேயே அடைந்து கிடக்க வேண்டும். இந்த முறை அப்படி அல்ல. அதனால் சந்தோசம். 

விமானத்தில் இருந்தே வீட்டிற்கும் நண்பர்களுக்கும் போன் செய்து வந்து சேர்ந்துவிட்ட விசயத்தைச் சொல்லிவிட்டு, விறுவிறு என்று விமானத்தில் இருந்து இறங்கி விமான நிலையத்தை அடைந்து எல்லாப் பார்மாலிட்டிகளையும் முடித்துவிட்டுப் பஸ் நிலையம் வந்து சேர்ந்தேன். விமான நிலையத்தில் இருந்து KL Central அடைய ஒரு மணி நேரம் ஆகும். அந்த நேரத்தில் சற்று தூங்குவேன். 

ஆனால் இந்த முறை அப்படித் தூங்க முடியாமல் போனது. காரணம் என் இருக்கைக்கு அடுத்து வந்து அமர்ந்த ஒரு மிக அழகிய பெண். ஏறக்குறைய ஏர் ஹோஸ்டல் போல் இருந்தாள். நல்ல சிகப்பு. முடிகளை நேர்த்தியாகக் கட் செய்து பின்னாமல் விட்டிருந்தாள். அளவான லிப்ஸ்டிக். திருத்தியமைக்கப் பட்ட புருவம். நல்ல பெர்ஃப்யூம் வாசம். அவள் உடம்பில் எல்லாப் பாகங்களுமே சரியான அளவில் இருந்தது. அத்தனை நேரம் டய்ர்டாக உணர்ந்தவன் அவள் வந்து அமர்ந்ததும் உற்சாகமானேன். அதிலும் அவள் உட்கார்ந்திருந்த கோலம். மிகச்சிறிய ஸ்கர்ட். தொடைக்கு மேலே ஏறி இருந்தது. ஆனால் தொடையில் இருந்து தொடங்கிக் கால் வரை சாக்ஸ் அணிந்திருந்தாள். கோட்டின் உள்ளே அணிந்திருந்த டி சர்ட் டைட்டாகவும் அதன் மேல் பட்டன்கள் திறந்தும் இருந்தது. நான் உடனே என் ரேபான் கூலிங் கிளாஸை அணிந்து கொண்டேன். 

என் அருகே அவள் அமர்ந்து இருந்ததைப் பார்த்தால் தமிழநாட்டின் ஒரு கட்சியின் கொடி போல் இருந்தது. பொதுவாக நானாக யாரிடமும் பேசுவதில்லை. அவர்களாகப் பேசினால் நான் பேசுவதுண்டு. என்னைப் பார்த்தவள் சிரித்தாள். பின் அழகான ஆங்கிலத்தில், 

"எங்கே செல்கிறீர்கள்?" என்றாள். சொன்னேன். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச ஆரம்பித்தோம். 

நான் "நீங்கள் எங்கே இருந்து வருகின்றீர்கள்?" என்று கேட்டேன். 

கஸகிஸ்தானில் இருந்து வருவதாகக் கூறினாள். பின் அவளைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தாள். அவள் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த மூத்த பெண். வயது 26. கல்யாணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறதாகவும், அவள் தங்கைகள் அவர்களைப் பார்த்து கொள்வதாகவும் கூறினாள். 

"உன் கணவர் என்ன செய்கிறார்?" என்று கேட்டேன். 

அதற்குப் பதில் சொல்லாமல் என்னை நேர பார்த்தவள், 

"நீங்கள் குடிப்பீர்களா?'' என்றாள். 

"இல்லை" 

"வெரி குட்" 

"தேங்க்ஸ்" 

"ஓ இந்தியர்கள் எல்லாம் குடிக்கமாட்டார்களா?" என்று அப்பாவியாகக் கேட்டாள். 

எங்கள் தமிழ்நாட்டின் வருமானமே குடியில் இருந்துதான் வருகிறது என்று சொல்ல விரும்பாமல், "அப்படி இல்லை. சிலர் குடிப்பார்கள்" என்றேன். 

"ஏன் இந்தக் கேள்வியைக் கேட்கிறாய்?" என்றேன். 

"இல்லை. என் கணவரைப் பற்றிக் கேட்டாய் அல்லவா? அதான்" 

"என் கேள்விக்கும் உன் கேள்விக்கும் என்ன சம்மந்தம்?" 

"என் கணவர் சரியான குடிகாரர். எனக்குக் குடிப்பவர்களைப் பிடிப்பதில்லை" 

"ஓ" 

"அதனால் அவரை டைவர்ஸ் செய்துவிட்டேன்" என்றாள். 

"அதற்காக ஏன் டைவர்ஸ் செய்தாய்? அவரைத் திருத்தி இருக்கலாமே?" 

"திருத்திப் பார்த்தேன். ஆனால் முடியவில்லை. ஆனால் அது மட்டும் காரணமில்லை. மேலும் ஒரு காரணமும் இருக்கிறது" என்று பீடிகை போட்டாள். 

நான் என்ன காரணம் என்று கேட்டிருக்கக் கூடாது. அவளும் அந்தப் பதிலை சொல்லி இருக்கக்கூடாது. நம் நாட்டில் எந்தப் பெண்ணுமே சொல்ல விரும்பாத ஒரு காரணம். 

"அப்படி என்ன காரணம்?" 

"ம்ம்ம். அவர் தினமும் குடிக்கிறார். அதுவும் இல்லாமல் அவர் படுக்கை விசயத்தில் அவ்வளவு சரியில்லை" 

"அப்படி என்றால்?" என்றேன் அப்பாவியாக. 

"எனக்குத் திருப்தி ஏற்படுவதில்லை" 

எனக்கு அதற்கு மேல் அவளிடம் பேச பிடிக்கவில்லை. அது வரை அவள் மேல் நான் வைத்திருந்த பிம்பம் உடைந்து போனது. இவ்வளவு நேரம் வாசனையாக இருந்த பெர்ஃப்யூம் இப்போது... அப்படித் தோணவில்லை. என் மவுனத்தைப் பிடிக்காமல் அவளே மீண்டும் பேச ஆரம்பித்தாள். ஏதேதோ பேசிக்கொண்டே வந்தாள். நான் ஒரு ஆர்வம் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருந்தேன். 

பின் மனதை தேற்றிக்கொண்டேன். அவள் உண்மையைச் சொல்கிறாள். இதில் என்ன தவறு இருக்கிறது. இது ஒன்றும் தமிழ்நாடு இல்லையே? அதனால் நாம் வருத்தப்பட என்ன இருக்கிறது. ஒரு வேளை ஒரு நல்ல வேலை மலேசியாவில் கிடைத்து வந்து இருக்கலாம். இனி அவள் நல் வாழ்வை தொடங்கலாம். இப்படி நினைத்துக்கொண்டே அவளிடம் கேட்டேன், 

"இங்கே என்ன வேலையாக வந்திருக்கிறாய்?" 

"பீச் கிளப்பில் இரவு வேலை" 

நான் அவளைச் சந்தித்தே இருக்கக்கூடாது. 


5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மறக்க முடியாத 'அனுபவம்'...

தப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்...

BADRINATH said...

படித்தவுடன் திக் என்றது .....நேரில் உங்களுக்கு எப்படி இருந்திருக்கும்

G Senthil Iyappan said...

Hi Sir,

This is 21st Century. Anything and everything can happen. May GOD Bless. G Senthil Iyappan.

சேக்காளி said...

சரி சரி மொதல்ல அந்த போன் நம்பர செல்பேசி ல இருந்து அழிச்சு தொலைங்க. இல்லேன்னா இதே தலைப்பு ல இன்னொரு பதிவு எழுத வேண்டியதிருக்கும்.என்ன நாஞ் சொல்றது வெளங்கிச்சா?

யுவகிருஷ்ணா said...

கதையாக முழுமை அடையலை உலக்ஸ். கடைசிலைன் பஞ்ச் வெச்சியெல்லாம் இன்னும் கதை அடிச்சோம்னா, படிக்கிறவங்க பாவமில்லையா? :-(