Jun 3, 2013

மிக்ஸர் - 03.06.13

சென்ற வாரம் கூகிள் + பகிர்ந்தவை:

**************************************************************
வயது ஆகிக்கொண்டே இருக்கிறது. நான் அதை பொருட்படுத்துவதே இல்லை. எப்பொழுதும் இளமையாகவே மனதை வைத்துக்கொள்கிறேன். ஆனால் அவ்வப்போது யாராவது 'நமக்கும் வயது ஏறிக்கொண்டு இருக்கிறது' என்று புரியவைத்துவிடுகிறார்கள். சிறு குழந்தைகளை எனக்கு பிடிக்காமல் இருந்தது எனக்கு குழந்தைகள் பிறக்கும் வரை. இப்போது அப்படி அல்ல. இந்த முறை விடுமுறையில் ஊரில் இருந்த போது நடந்த சம்பவம் இது. நான் கட்டிலில் படுத்திருந்தேன். அதிக அலைச்சலால் கொஞ்சம் தூங்கலாம் என்று நினைத்து யாரையும் அறைக்குள் அனுப்ப வேண்டாம் என்று சொல்லி இருந்தேன்.

ஒரு பத்து நிமிடம் ஆகி இருக்கும். கதவை திறந்து கொண்டு ஒரு குழந்தைகள் பட்டாளமே உள்ளே வந்தது. என் பிள்ளைகள், தம்பி பிள்ளைகள், அக்கா குழந்தைகள் என ஒரே சிறுவர் பட்டாளம். எல்லோரும் ஓடி குதித்துக்கொண்டு, என் மேல் விழுந்து, புரண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனக்கு கோபமே வரவில்லை. நானும் குழந்தை ஆனேன். அதுவரை எல்லோரும் ஒற்றுமையாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். என் தம்பி பெண் அதிக சுட்டி. அவள் குதிக்கும் போது ஜன்னலின் உள்ளே கொசுக்காக போட்டிருந்த நெட் உள்ள கதவை சிறிது பிடித்து ஆட்டிவிட்டாள். 

உடனே என் மகன், "யேய் ஆட்டாதடி. அது உடைந்து விடும்" என்றான். அவள் உடனே, "நன்றாக உடையட்டும். எல்லாம் சுக்கு நூறாக ஆகட்டும். உங்கள் வீடுதானே?" என்றாள்.

உடனே என் மகன், "அப்படியா, அப்ப உங்க அப்பா காரை நான் உடைக்கவா?" என்று கோபமாக கேட்டான். இப்படியாக அவர்கள் உரையாடல் சென்றது.

எனக்கு புரியாத ஒரு விசயம் என்னவென்றால், அது வரை நன்றாக விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள், ஒரே ஒரு தருணத்தில், "இது உன் வீடு, இது என் கார்" என்று மாறும்படியான சூழ்நிலை எப்படி ஏற்பட்டது? யாரும் சொல்லித்தராமல் எப்படி இந்த மாதிரி எண்ணங்கள் குழந்தைகளின் மனதில் ஏற்படுகிறது?

*****************************************************

நேற்று வீட்டில் நடந்த ஒரு உரையாடல்:

"அப்பா"

"என்னடா?"

"எனக்கு ஒரு பேஸ்புக் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி குடுங்க"

"ஏன்? உனக்கு எதுக்கு?"

"அக்காவுக்கு மட்டும் இருக்கு"

"அக்காவுக்கு ஸ்கூல்ல ஓப்பன் பண்ணி குடுத்துருக்காங்கடா?"

"எனக்கு நீங்க பண்ணி குடுங்க"

"முடியாது"

"ஏம்பா?"

"உனக்கு என்ன இப்பத்தானே ஒன்பது வயசு ஆகுது"

"ப்ளீஸ்ப்பா. எனக்கு ஒண்ணு, அம்மாவுக்கு ஒண்ணு பண்ணிக்குடுங்கப்பா"

"அப்புறம்?"

"எல்லோரும் தினமும் பேஸ்புக் மூலமா பேசிக்கலாம். சேட் பண்ணலாம். கமெண்ட் பண்ணலாம்"

உள்ளே இருந்து ஒரு குரல்,

"அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். எல்லோரும் வீட்லயே நேருக்கு நேராவே பேசிக்கலாம். ஒரே வீட்லதானே இருக்கோம்" 

*****************************************************

அம்மாவுக்கு 84 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன். இரும்பு மனிஷி. இந்த 'அன்னையர் தினம்" என்றெல்லாம் இப்பொழுதுதான் கொண்டாடுகிறோம். நான் தினமுமே அம்மாவை தொழுபவன். இருந்தாலும் கடந்த சில வருடங்களாக அன்னையர் தினம் அன்று ஸ்பெஷலாக போன் செய்து வாழ்த்து தெரிவிப்பதுண்டு. நேற்று பிள்ளைகள் என்னுடன் அலுவகத்தில் இருந்தார்கள், அதனால் அம்மாவிற்கு வாழ்த்து சொல்ல மறந்து போனேன்.  மதியம் 3 மணி இருக்கும். என் மகன் அன்னையர் தினத்தை பற்றி நினைவூட்டினான். பின் அம்மாவுக்கு தொலை பேசினேன்.

"என்னப்பா காலையில் இருந்து உன் போனுக்காகத்தான் காத்திருந்தேன். இப்போத்தான் சாப்பிட போகிறேன். ரொம்ப சந்தோசம். நல்லா இருக்கியா?"

என்னதான் அவ்வப்போது பேசினாலும், நேற்றைய தினம் பேசிய போது இருந்த சந்தோசம் தனிதான். 

*****************************************************


3 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நிறைய இடங்களில் இப்படித்தாய்க நடக்குது.... சாட் பண்றது போன்ல பேசிக்கிறது... ஒரே வீட்ல.... அது வீட்டில் இருந்த படியே.....

திண்டுக்கல் தனபாலன் said...

/// இந்த மாதிரி எண்ணங்கள்... ///

யாரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை... திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், மற்றவை எல்லாம் குழந்தைகளின் மனதில் உடனே பதிந்து விடும்...

முடிவில் அந்த சந்தோசம் தனி தான்...

எம்.ஞானசேகரன் said...

மறக்க முடியத அனுபங்கள்.