Jun 20, 2013

400வது இடுகை...தூக்கமின்மை!!!

இது என்னுடைய 400வது இடுகை. நான் எழுத வந்த வேகத்தில் இந்த எண்ணிக்கையை 2010 அல்லது 2011 ஆண்டிலேயே கடந்திருக்க வேண்டும். இன்று 1000 இடுகைகள் தாண்டி இருக்க வேண்டும். தினமும் எழுதுவதால் தரமான எழுத்துக்கள் தர முடியாது என்று சிலர் சொன்னதை நான் தவறாக புரிந்து கொண்டேன் போல. எப்படி என்றால் 'எழுதாமல் இருந்தால்தான் எழுத்தின் தரம் கூடும்' என்று. எது எப்படியோ 400 வந்துவிட்டேன். இன்னும் நிறைய எழுத ஆசை. பார்ப்போம்.

தூக்கம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியம். என்னதான் உடம்பை கட்டு கோப்பாக வைத்திருந்தாலும் ஆழ்ந்த தூக்கம் இல்லை என்றால், உடல் நலம் கெட்டுவிடும். ஆறு மணி நேரம் தூங்கினாலும் ஆழ்ந்து உறங்க வேண்டும். அது போல இவ்வளவு நாட்கள் உறங்கினேனா என்று தெரியவில்லை. ஆனால் எப்பொழுது தூங்கினாலும் அதிகாலையில் எழுந்துவிடுவேன். இந்த பழக்கம் நான் எட்டாவது படிக்கையில் அரம்பித்தது. திருச்சியில் 9ஆம் வகுப்பு பிஷப் ஹீபர் பள்ளியில் சேர்ந்தேன். காலையில் 8.20க்கு டிரெயின். அதே போல மாலையில் வீட்டிற்கு வந்து சேர ஆறு மணிக்கு மேல் ஆகிவிடும். அதனால் பாடங்களை படிக்க அதிக நேரம் இரவில் கிடைக்காது. அதனால் அதிகாலை 4.30 மணிக்கு அப்பா எழுப்பிவிடுவார். அதே பழக்கமாகி போய் இன்றும் காலையில் 5.30 எழுந்துவிடுகிறேன். இரவு மணி 1 மணிக்கு படுத்தாலும் 5.30க்கு எழுந்துவிடுவேன். 

சிறுவயதிலேயே இந்த பாட்டை அடிக்கடி கேட்பேன், "நல்ல பொழுதை எல்லாம் தூங்கி கெடுப்பவர்கள் நாட்டை கெடுத்ததுடன் தானும் கெட்டார்" எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள் இவை. இன்று தூக்கத்தை பற்றி எழுதுவதற்கு காரணம் இருக்கிறது. குறைந்தது ஆறு மணி நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். சமீபகாலமாக சரியாக தூங்க முடியவில்லை. காரணங்கள் பல இருந்தாலும், உண்மையான காரணம் தனிமைதான். இதனால் முன்பைவிட மிகவும் கடுமையாக ஜிம்மில் வொர்க் அவுட் செய்கிறேன், அசந்து தூங்கிவிடலாம் என்ற நம்பிக்கையில். சிறு வயதில் பாட்டு கேட்டால் தூங்கிவிடுவேன். இப்போது பாட்டு கேட்க ஆரம்பித்தால் அதிலேயே ஒன்றிவிடுகிறேன். பாடவும் செய்கிறேன். ராகத்தில் ஒன்றிவிடுவதோடு மட்டும் இல்லாமல், அந்த பாட்டிற்கு ஆடும் நடிகைகளின் முகமும், அவர்களின் உடைகளும், அவயங்களும் நினைவிற்கு வந்து, என் தூக்கத்தை மேலும் சிக்கலாக்கிவிடுகின்றன. 

சில சமயம் எப்படி தூக்கம் வருகிறது என்று யோசித்து கண்டு பிடிக்க முயற்சி செய்வேன். பலன் அதானாலேயே தூக்கம் வராமல் அவதிப்படுவேன்.

என்னுடன் வேலை செய்யும் நண்பர் தினமும் 8 மணி நேரம் தூங்குகிறார். காலையில் வாக்கிங் முடிந்து நான் வரும்போது 6.45 ஆகும். அப்பொழுதும் அவர் வீட்டில் விளக்கு எரியாது. தூங்கிக்கொண்டு இருப்பார். மாலையில் நான் ஜிம் முடிந்து வர மணி 8 ஆகும். பார்த்தால் அதற்குள் அவர் வீட்டு விளக்குகள் அணைந்திருக்கும். அவர் என்னை பார்த்து அடிக்கடி கேட்பதுண்டு, "ஏன் இப்படி அதிகாலையில் ராக்கோழி போல் வாக்கிங் செல்கின்றீர்கள்? நான் அதெல்லாம் இல்லாமலேயே நன்றாகத்தானே இருக்கிறேன்?"

எனக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாது. அவர் வாக்கிங் செல்வதில்லை. ஜிம் செல்வதில்லை. படிப்பதில்லை. எழுதுவதில்லை. டிவி பார்ப்பதில்லை. பாட்டு கேட்பதில்லை. பாடுவதில்லை. அதிகம் விரும்பி எதையும் சாப்பிடுவதில்லை. சமைப்பதில்லை.

அவர் செய்யாத அனைத்து வேலைகளையும் நான் செய்கிறேன். நான் அவர் போல் 8 மணி நேரம் தூங்கினால் என்னால் எந்த ஒரு வேலையையும் செய்ய முடியாது. இங்கே பிரச்சனை என்னவென்றால், நான் செய்யும் எந்த வேலைகளையும் அவர் செய்யாமல், நன்றாக தூங்கி அவர் என்னைவிட சந்தோசமாக உள்ளார். என்னால் அந்த வேலைகள் எல்லாம் செய்வதால் மட்டுமே என்னால சந்தோசமாக இருக்க முடிகிறது? ஏன் இப்படி என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

ஆனால் யார் என்ன சொன்னாலும் அதிகாலையில் வாக்கிங் செல்லும் சுகம் இருக்கிறது பாருங்கள், அதை அனுபவித்து பார்த்தால் மட்டுமே உணர்ந்து கொள்ள முடியும். அதுவும் இல்லாமல், ஊரே உறங்கி கொண்டிருக்கும் போது நாம் மட்டும் நடந்து செல்கையில் நமக்கு ஒரு கர்வம் வரும் பாருங்கள், அதுதான் நம் ஹெல்த்திற்கான டானிக். முன்பு தினமும் எழுதிகொண்டிருந்த சமயத்தில், 45 நிமிட வாக்கிங் முடிவதற்குள், அலுவலகத்தில் அன்று என்ன வேலைகள் இருக்கிறது என்பதையும், அன்று என்ன எழுத வேண்டும் என்பதையும் மனதிற்குள்ளே முடிவு செய்துவிடுவேன். ஏறக்குறைய கட்டுரைகளை மனதிற்குள்ளே எழுதி முடித்துவிடுவேன்.

தூக்கத்தை பற்றி இங்கே எழுதுவற்கு காரணம் இருக்கிறது என்று சொன்னேன் இல்லையா? என்னவென்றால், சென்ற வெள்ளியன்று இரவு கொஞ்சம் படிக்கலாமே என்று முதலில் கம்ப்யூட்டரில் படித்துக்கொண்டிருந்தேன். என்ன படித்தேன் என்று தயவு செய்து கேட்காதீர்கள். கம்ப்யூட்டர் போர் அடிக்கவே, பின் சுஜாதாவின் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன். காரணம், சனிக்கிழமை வார விடுமுறை. ஆர்வமாக படித்துக்கொண்டிருந்தவன் மணியை பார்த்தால் அதிகாலை 2. உடனே படுக்க முடிவு செய்து படுத்தால் தூக்கம் வரவில்லை. மனம் மிகவும் தெளிவாக இருந்தது. பின் 2.30 மணி அளவில் முடியாமல், இருமல் மருந்தை எடுத்து குடித்தேன். பின் மெல்ல தூங்கிப் போனேன்.

காலையில் எழுந்தால் மருந்தின் விளைவு ஒரே டிரவ்சினஸ். மதியம் வரையே அப்படியே ஓட்டிவிட்டு, படுத்தேன். நன்றாக தூங்கிவிட்டேன். அதனால் சனி இரவும் தூக்கமில்லை. அதன் தொடர்ச்சியாக ஞாயிறு, திங்கள், செவ்வாயும் தூக்கமில்லை. பயம் வந்துவிட்டது. ஏதாவது எனக்கு பிரச்சனையா? என்ன காரணம்? சரி இன்றாவது நன்றாக தூங்கி பார்க்கலாம் என்று, இரவு சூப்பர் சிங்கர்ஸ் பார்த்து விட்டு லைட் எல்லாவற்றையும் அணைத்துவிட்டு படுத்தேன். போன் அலறியது. பார்த்தால் என் நீண்ட நாள் மலேசிய நண்பர். பேசி நாட்கள் ஆகிவிட்டதே என்று எடுத்தேன்.

"உலக்ஸ், நல்லா இருக்கீங்களா?"

"ம்ம். நீங்க எப்படி இருக்கீங்க?"

"நலம். போன் பண்ணதுக்கு காரணம்"

"சொல்லுங்க"

"கே எல்ல பத்து கேவ்ஸ் பக்கத்துல ஒரு இடம் இருக்கு. 30 வெள்ளிதான். அருமையான மசாஜ். கூட 20 வெள்ளி கொடுத்தீங்கன்னா...எல்லாம் உண்டு. தமிழ்தான்"

அதன் பிறகு நான் தூங்கி இருப்பேன் என்றா நினைக்கிறீர்கள்????


5 comments:

indrayavanam.blogspot.com said...

வாழ்த்துக்கள்....

திண்டுக்கல் தனபாலன் said...

மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

எம்.ஞானசேகரன் said...

வாழ்த்துக்கள்!

Anonymous said...

sir, I come to your blog daily ... pls keep writing

Avargal Unmaigal said...

வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!