Jun 13, 2013

"இனி எல்லாம் நலமே"

வலைப்பூ ஆரம்பித்த சமயத்தில் நிறைய எழுத வேண்டும் என்ற ஆசையில்தான் வந்தேன். அதன்படியே எழுதவும் ஆரம்பித்தேன். பின் பத்திரிகைகளில் கதை வர வேண்டும் என்பதற்காக அதில் முழு மூச்சாக இறங்கின. பல கதைகள் வந்தாலும், தொடர்ச்சியாக கதைகள் வருவதில்லை. அதற்காக அதிகம் உழைக்க வேண்டி இருக்கிறது. அப்படியே உழைத்து எழுதி அனுப்பினாலும் அதன் ரிசல்ட் தெரிய பல மாதங்கள் ஆகிறது. எதற்காக எழுதுகிறோம்? பலரும் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே? அப்பொழுதுதான் எனக்கே உறைத்தது. பத்திரிகைகளில் வர வேண்டும் என்பதற்காக பல கதைகளை நான் ப்ளாக்கில் வெளியிடவே இல்லை. இனி அப்படி இல்லை. ப்ளாக்கில்தான் உடனேயே ரிசல்ட் தெரிந்துவிடுகிறது. அதனால் எழுதும் கதைகளை இனி இங்கேதான் வெளியிட போகிறேன். ஒரு வேளை என் எழுத்துக்கள் பிடித்து இருந்தால் அவர்களாகவே தேடி வரட்டுமே?

பல நண்பர்கள் ஏன் நிறைய எழுதுவதில்லை என்று கேட்கிறார்கள். எனக்கும் நிறைய ஆசைதான். ஆனால் ஏன் முடியவில்லை? நான் முன்பு எழுதிய அனைத்தையும் படித்து பார்த்தேன். படிக்கும் போது ஒரு உண்மை தெரிந்தது. என்னவென்றால், ஒவ்வொன்றுமே என்னுடைய அந்தந்த நாட்களின் சோகத்தை, சந்தோசத்தை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது. சென்ற ஜீன் மாதத்தில் இருந்து நான் அதிகம் எழுதவில்லை. காரணம் நான் என் குடும்பத்தை விட்டு தனியே மலேசியாவில் இருப்பதுதான். தனிமை இந்த அளவிற்கு கொடுமையாக இருக்கும் என்று ஒரு நாள் கூட நினைத்ததில்லை. இத்தனைக்கும் நாப்பது நாட்களுக்கு ஒரு முறை நான் திருச்சி செல்கிறேன். வீட்டிலும் இரண்டு முறை வந்து சென்று விட்டார்கள். இருந்தும் ஒரு விதமான சோக நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தேன். 


                                                      (நானும் என் தம்பியும்)

நான் எப்பொழுதும் போல வாக்கிங், ஜிம் சென்று என் நேரத்தை கடத்தினாலும் அவ்வப்போது அந்த தனிமை எண்ணம் மனதில் குடிகொண்டு  ஆட்டிப்படைக்கிறது. அந்த சமயத்தில்தான் நண்பர் "பா ராஜாரம்" கூகிள் ப்ளஸில் எழுதியிருந்த ஒரு தகவலைப்பார்த்தேன். இன்னும் 75 நாட்களுக்கு பிறகு செல்லப்போகும் இந்தியா பயணத்தை பற்றி எழுதி இருந்தார். அதுவும் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு! நான் 75 நாட்களுக்குள் இன்னும் இரு முறை ஊருக்கு சென்றுவிட்டு வந்துவிடுவேன். அப்பொழுதுதான் எனக்கு விளங்கியது. பல வருடங்கள் கழித்து ஊருக்கு செல்லும் நண்பர்கள் மத்தியில் என்னால் அடிக்கடி செல்ல முடிகிறதே? நான் எவ்வளவு கொடுத்து வைத்தவன்? ஆனா நான் சந்தோசத்தை விட்டுவிட்டு புலம்பிக்கொண்டிருப்பதில் என்ன நியாயம்? எனக்கே என்னை பிடிக்காமல் போனது அந்த ப்ளஸை படித்த பின்தான்.

குடும்பத்தை பிரிந்து பல வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறையோ அல்லது மூன்று ஆண்டுக்கு ஒருமுறையோ செல்லும் நண்பர்களை நினைத்தால், வருத்தமாக இருந்தாலும் அவர்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. அவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க வேண்டும் போல் உள்ளது. 

இப்பொழுது இதை எல்லாம் இங்கே நான் எழுத காரணம், எனக்கு அதிகம் சந்தோசம் கொடுப்பது எழுதுவதும் படிப்பதும்தான் என்ற உண்மையை நான் புரிந்து கொண்டதை பதிவு செய்வதற்காகவே! அதனால் நான் இனி நிறைய எழுத போகிறேன். அது என்னவாக வேண்டுமானலும் இருக்கலாம். அனுபவம், என்னை பாதித்த சம்பவங்கள், நான் அன்றாட வாழ்வில் சந்திக்கும், பார்க்கும் விசயங்கள்/ நிகழ்ச்சிகள், சிறுகதைகள், தொடர்கதைகள்...இப்படி. முழுக்க முழுக்க என் மன சந்தோசத்திற்க்காகவே எழுத போகிறேன். படிக்கும் படிக்க போகும் நண்பர்கள் நிறை குறை இருப்பின் தாராளமாக சொல்லலாம், குட்டலாம்.

******************************************************************

போன வருடம் மே மாதம் நடந்த ஒரு சம்பவம். எங்கள் நிறுவனத்திற்கு புதிதாக ஒரு CEO சேர்ந்தார். மலேசியா வந்த அவர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும் போது,

"உலக்ஸ், கல்யாணம் ஆனதிலிருந்து மலேசியாவில் குடும்பத்துடன் இருக்கின்றீர்கள். இப்போது ஏன் அவர்களை இந்தியா அனுப்புகின்றீர்கள்?"

"சார், பிள்ளைகள் படிப்பிற்காகத்தான்"

"இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து அனுப்பலாமே?"

"இல்லை சார். நான் ஏற்கனவே நிறைய தாமதித்துவிட்டேன்"

"பிள்ளைகளை விட்டு எப்படி தனியா இருக்க போறீங்க?"

"கொஞ்சம் கஷ்டம்தான். ஆனால் மாதம் ஒரு முறை போய் வரலாம் என்று இருக்கிறேன்"

"என்னதான் மாதம் ஒரு முறை போய் வந்தாலும் Distance is the Distance" தானே?'' என்றார்.

மனது வலித்தது. ஏற்கனவே நான் புலம்பிக்கொண்டிருந்தேன். இவர் வேற?

பின் அன்று மாலை மெதுவாக அவரை/ அவர் குடும்பத்தைப் பற்றி விசாரித்தேன்.

"சார் உங்கள் பிள்ளைகள் என்ன பண்றாங்க. எங்க வேலை பாக்கறாங்க"

"எல்லோரும் அமெரிக்கால இருக்காங்க"

அவர் சொன்னதையே அவருக்கு சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

So I am Back!!!!


11 comments:

கோவை நேரம் said...

வாங்க...வரவேற்கிறோம்

மாதவன் said...

நல்ல முடிவு "come back"

இராஜராஜேஸ்வரி said...

அவர் சொன்னதையே அவருக்கு சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

உபதேசம்
ஊருக்கு மட்டுமே...!

திண்டுக்கல் தனபாலன் said...

தனிமை கொடுமை தான்... பகிர்ந்து கொள்வதால் கண்டிப்பாக மாறும்... (எனது அனுபவத்தில்)

தொடர்க... வாழ்த்துக்கள்...

Unknown said...

Nice be back. At least 1 post a day

Unknown said...

Todarndu eluda valtukkal

iniyavan said...

//கோவை நேரம் said...
வாங்க...வரவேற்கிறோம்//

வருகைக்கு நன்றி நண்பா!

iniyavan said...

//மாதவன் said...
நல்ல முடிவு "come back"//

வருகைக்கு நன்றி மாதவன்

iniyavan said...

//இராஜராஜேஸ்வரி said...
அவர் சொன்னதையே அவருக்கு சொல்ல நினைத்து பின் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.

உபதேசம்
ஊருக்கு மட்டுமே...!//

ஆம் மேடம். வருகைக்கு நன்றி

iniyavan said...

//திண்டுக்கல் தனபாலன் said...
தனிமை கொடுமை தான்... பகிர்ந்து கொள்வதால் கண்டிப்பாக மாறும்... (எனது அனுபவத்தில்)

தொடர்க... வாழ்த்துக்கள்...//

நன்றி தனபாலன்

iniyavan said...

//Razeen Nizam said...
Todarndu eluda valtukkal//

நன்றி ரஸின் நிசாம்.